நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நிஜாம்... 10

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 27, 2016 | , , , ,


நிஜாம்,

டேய்,

முத்திரைத் தோழனே
நித்திரை நிலை
நின்றன்
நிரந்தரமானதா

இத்தரைமீதினில்
இனியுன்
இன்முகம் காணாத
இதயங்களோடு
எத்துணை நாட்கள்தான்
நாங்களும்
இழுத்தடிப்பதடா

ஏனிந்த அவசரம்?

நட்பை
கற்பெனக் கண்டவனே
இன்னும் கொஞ்ச நாள்
எங்களோடு
இருந்துவிட்டுப் போனால் என்ன

வேதனையை உட்சுமந்து
எமக்கெல்லாம் பகிராமல்
புன்னகைப் போர்த்தியவனே

வலிகளோடு கணநாள்
வாழப்பழகியவனே

சக மனிதரின்
முகம் வாடினால்
அகம் கலங்கும் நண்பா
நீ
ஐந்து நிமிட உரையாடலில்
ஆறாத புண் ஆற்றுவாய்
தேனை யொத்த வார்த்தைகளால்
தீராத வலி நீக்குவாய்

வலியோடு உன்னை நாடியோருக்கு
வழி காட்டி மகிழ்வாய்

ஆண்டவன்
அருள் பெற்ற நீ...
நீட்டிய கைகளில்லாம்
பொருள் இட்டவன்
வாட்டிய வறுமையை
விலக்கிய தர்மஸ்தன்

உன்னை இழந்தது
எம்மில் எதையோ
இழந்தது போலவே இருக்கிறதேடா

இருமிக்கொண்டோ
செருமிக்கொண்டே
நீ இருந்திருந்தாலாவது
ஏக்கம் மீறுகையில்
நின்றன்
எழில்வதனம் கண்டேனும்
ஆறுதல் உய்வோம்

இனி
எங்கேடா
எப்போடா
எப்படியடா என் தோழா

என்
விழித்திரையில் இன்னும்
உயிர்த்திருக்கிறாய்
செவிகளுககுள் இன்னும்
ஒலித்திருக்கிறாய்

கண்டதும்
கைகுலுக்கும்
தற்கால நட்புலகில்
கண்டதும் கட்டியணைத்துத்
தோளில் முத்தமிடும்
கற்கால நட்பன்றோ நமது

மலேசிய மண்ணறை
மஹ்சர் வரை உனக்கு
மாளிகையென துலங்கட்டும்

உன்
இறுதி மூச்செனும்
ஈட்டி எய்து
எங்கள்
இதயம் குத்திய நண்பா
உன் பிரிவை ஏற்க
வலிமை தரட்டும்

வல்ல இறைவன்..

அவனிடமிருந்தே வந்தாய்
அவனிடமே மீண்டாய்
அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீள்வோம்

யா அல்லாஹ்
எங்கள் நிஜாமுக்கு
உயர்ந்த சொர்க்கத்தை
உரித்தாக்கு!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

10 Responses So Far:

அதிரை அண்ணாவியார் குழுமம் சொன்னது…

யா அல்லாஹ்
எங்கள் நிஜாமுக்கு
உயர்ந்த சொர்க்கத்தை
உரித்தாக்கு!
ஆமீன்
கண்ணீருடன்
அப்துல் வாஹிது

Ahamed Ameen சொன்னது…

அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீள்வோம்.

நண்பரைப் பிரிந்து வாடும் தாங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதிரை.மெய்சா சொன்னது…

மிகுந்த வலிகளோடு எழுதிய உன் வரிகளை வாசித்து எனது விழிகள் கலங்கி விட்டன. கவலைப்படாதேடா நண்பா. உன் நண்பன் சொர்கம் புக. பாவங்கள் மன்னிக்கப்பட துவாச்செய்வோம்.

Abu Haajar Ahamed Firdhous Ahamed Ashraf சொன்னது…

அல்லாஹ் உங்கள் நண்பரின் பாவங்களை மன்னித்து அவருக்கு ரஹ்மத் செய்யட்டும்.

//உன் பிரிவை ஏற்க
வலிமை தரச் சொல்
வல்ல இறைவனிடம்//
இறந்தவர்களிடம் பரிந்துரைக்காக பிரார்த்திப்பது ஒருவகையான ஷிர்க்.

sabeer.abushahruk சொன்னது…

சகோ அபு ஹாஜர்,

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. வேதனையோடு விரைவாக எழுதப்பட்டது எனினும் என் பிழையை அல்லாஹ் மன்னிப்பானாக.

அ.நி.:

//வலிமை தரச் சொல்
வல்ல இறைவனிடம்//

என்னும் வரிகளை

வலிமை தரட்டும்
வல்ல இறைவன்

என்று மாற்றிவிடவும்.

நன்றி.

நெறியாளர் - editor@adirainirubar.in சொன்னது…

//அ.நி.: //

திருத்தம் பதிக்கப்பட்டுவிட்டது !

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

யா அல்லாஹ் எங்கள் காக்காமார்களின் அருமை நண்பர் எங்கள் நிஜாம் காக்காவுக்கு
உயர்ந்த சொர்க்கத்தை
உரித்தாக்கு!

Shameed சொன்னது…

நிஜாம் என்ற பெயரை கேட்டாலே இவரின் முகம் மனக்கண் முன் தோன்றும். இவரின் அறிவுரைகளை கேட்டு நடந்ததால் நான் வாழ்க்கையில் நிறைய பயன்கள் அடைந்தேன் இவரின் மறுமை வாழ்வு சிறக்க என்றென்றும் எங்களின் துவா..

N. Fath huddeen சொன்னது…

ஜோ, உங்கள் கவியைப் பார்த்துதான் நிஜாம் காக்காவின் மரணம் அறிந்தேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து சுவன வாழ்வை வழங்கிடுவானாக. ஆமீன்!

Ebrahim Ansari சொன்னது…

நிஜாம். பேசும்போது உதடு அசைவதை வைத்தே சொல்வது என்ன புரிந்துகொள்ளமுடியும். அவ்வளவு மென்மையானவன். இளம் வயதில் இறைவன் தந்துள்ள பிரிவு. தம்பி சபீர் நீங்கள் எல்லாம் எவ்வளவு பாசத்துடன் பழகினீர்கள் என்பதை அறிந்தவன் நான். ஆறுதல் சொல்ல முயலவில்லை. ஆனால் அல்லாஹ்வின் நாட்டம். நாம் அவனது அடிமைகள். சபூர் செய்து கொள்வோம்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+