Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புகை(யில்லாத அதிரைப்)படங்கள் ! - MSM Clicks... 60

அதிரைநிருபர் பதிப்பகம் | May 03, 2016 | , , ,


நம் சுற்றுவட்டாரத்தை சுற்றிப்பார்ப்போம் (புகையில்லாப்படங்களுடன்)

ஊரில் கண்ட காட்சிகளும், அத்துடன் சேர்ந்து வந்த எண்ண வெளிப்பாடும் ஒன்றிணைந்து இங்கே ஒரு சிறு ஆக்கம் உங்களின் ஏக்கம் தீர:

அஃதொரு மழைக்கால காலை நேரம் புதுமனைத்தெருவின் யாரும் நடக்காத வேளை.


தனியே தன்னந்தனியே ஒரு பாக்கு மரம் மழைத்துளியை முத்தமிட எத்தனிக்கும் நேரம்.


பசுந்தரையும், குடை பிடிக்கும் புளியமரமும், மரத்தில் விளையாடப்பட்ட சதுரங்க கருப்பு வெள்ளைக்கட்டமும் காண்போருக்கு குதூகலமளிக்கும் (அதிரை, பட்டுக்கோட்டை வழியில்.)


வீட்டுக்கு முன்னே வேப்பமரம் அது கண்ணுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி தரும்.


அமைதியாய் காட்சி தரும் செக்கடிப்பள்ளியும் அதை அரவணைக்கும் இயற்கை சூழலும்.


தூய்மையான செக்கடிப்பள்ளி கீழ்த்தளம் படுக்க பாயின்றி உறங்கினாலும் நல்ல தூக்கம் வரும்.


பள்ளிக்கு வருவோரை பரவசமூட்டி வரவேற்கும் இளம்பச்சை செடிகள்.


நண்பனின் கையில் இருக்கும் முறுக்கும், ராஜாமட சாய்ங்காலத்தென்றலும் சந்திக்கும் ஒரு அந்தி மாலைப்பொழுது.


வான் மழை வந்திறங்கினால் மண் மட்டுமல்ல நம் மனமும் புன்முறுவல் பூத்து பூரித்து போகும். (மளவேனிற்காடு)


இரு பக்கம் மரங்கள் நட்டு நடுவிலே தார் சாலை இட்டு குளிர்க்காற்றை ஓட விட்டு கொண்டாடும் இயற்கையே இறைவனின் அத்தாட்சிகள். (மளவேனிற்காடு)


சாய்ங்கால தென்றல் காற்று சாமரம் வீசிச்செல்லும் செக்கடிக்குளக்கரை


அமைதியான இயற்கைச்சூழல் அமர்ந்திருக்கும் செக்கடிக்குளமும், அதில் தப்படித்த நினைவுகளும், இக்கரையிலிருந்து அக்கரைப்போய்ச்சேர்ந்த உள்ளமும் இனி திரும்ப வாய்ப்பேதும் உண்டோ?


கம்பீர ஒற்றைக்கோபுரமும், ஒலி எழுப்பும் ஒலி பெருக்கியும் ஒரு போதும் ஓரிறையை போதிக்காமல் இருந்ததில்லை. (இடம் முஹைதீன் ஜும்மாப்பள்ளி)


வான் மழையை வாஞ்சையுடன் வரவேற்கும் செக்கடிக்குளமும், அதன் சுற்றுவட்டார சொந்தபந்தங்களும்.


வானில் ஒன்று சேரும் கார் மேகக்கூட்டமும், நேர்த்தியாய் உருவாக்கப்பட்ட தரைச்சாலையும் ஒன்றோடொன்று மொளனமாய் பேசிக்கொள்ளும் வேளை. (இடம் திருச்சி, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை)


பனைமரமும், தென்னைக்கூட்டமும், படுத்துறங்கும் பசும் நெல்கதிரும் காண்போருக்கு பரவசமூட்டும். அதில் வெள்ளைக்கொக்குகளும் வரிசையில் நின்று வரவேற்று காட்சிக்கு மெருகூட்டும்.


கரடுமுரடான காட்சிகளும் கண்கொள்ளாக்காட்சிகளாகும் கார் காலம் வந்து விட்டால் சுவிட்சர்லாந்தைக்கூட பார்வையில் பின்னுக்கு தள்ளும். (இடம் பட்டுக்கோட்டை, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை)


தண்ணீர், தண்ணீர் என பரிதவிக்கும் மனிதர்களே! சலசலப்பின்றி மொளனமாய் கடந்து சொன்று கடலில் சங்கமிக்கும் முன் இந்த ஆற்று நீரை வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டீரோ?


ஆத்தங்கரை ஓரம் ஒரு திண்ணை இருக்கும். அங்கு தான் இவ்விருவரின் சொத்து,சுகம் இருக்கும். (இடம் கலியாண ஓடை சப்தமின்றி நகர்ந்தாலும் சமீபத்தில் நமதூர் இளைஞனை பலிகொண்டு விட்டது.)


பச்சைக்கிளிகள் கூட இக்காட்சி கண்டு பொறாமை கொள்ளும் அப்படியொரு பசுமை போர்வையின்றி படுத்துறங்கும் இடம். (இடம் பட்டுக்கோடை, தஞ்சைக்கு நடுவே)


இன்னும் நன்கு வளர்ந்து மனிதர்களுக்கு பல பலன்களை அளிக்க போட்டியின்று வளர்ந்து வரும் சகோதர பனைமரங்கள்.


ரம்மியமான பசுமை கண்டு எல்லைக்கல் கூட எழில் பெரும். பசுமைக்கு பாடம் நடத்த கால் வலிக்காமல் காட்சி தரும் மின்கம்பம்.


உயர உயரவே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது; உயர உயரவே பறக்கும் பருந்தானாலும் வயிற்று பசிக்கு தரை வந்திறங்கியே தீர வேண்டும். தனியே தன்னந்தனியே தன் ரிஜ்க்கைத்தேடி ஒரு பருந்து பறந்து செல்கிறது.


காண்பதற்கு ஏதோ ஐரோப்பாவில் எடுத்த புகைப்படம் போல் காணப்பட்டாலும் காலார நடந்தே இக்காட்சிகளை நம் கண்ணுக்கு விருந்தாக்கலாம். (இடம்: ரயில்வே கேட் தாண்டி ராஜாமடம் நோக்கி செல்லும் சாலையோரம்)


முட்டுக்கால்களை முத்தமிட்டு ஓட வேண்டிய நீர் வெறும் தரையில் தவழ்ந்து பாதங்களை முத்தமிட்டு ஓடுகிறதே என பேசிக்கொள்ளும் நமதூர் சிறுவர்கள்.


பள்ளிக்கு தொழ வருவோரை வரவேற்று நிற்கும் இருபக்க மாமரங்களும், நடுவே தொழுகை முடிந்து வெளியேறும் எத்தீம்கானா மாணவர்களும். (இடம் மரைக்காப்பள்ளி)


உலக உருண்டையில் என்ன தான் உருண்டு திரிந்தாலும் இறுதியில் பாஸ்ப்போர்ட்டின்றி வந்திறங்க வேண்டிய இடம் மையவாடியல்லவா? (இடம் மரைக்காப்பள்ளி மையவாடியின் நுழைவு)


சில்லென்ற காற்றுடன் சொட்டென சொட்டும் மழைத்தூரல். அதில் தலை மூழ்கிக்கொள்ளும் தரைப்புற்கள்.  (இடம் எங்கூட்டு வாச)


கை கழுவிய மின்சாரமும், கை கொடுக்கும் அரிக்களாம்பும். ஓட்டு கேட்டு நிற்கவில்லை. ஒளி கொடுத்து ஓரமாய் நிற்கிறது. பழமைக்குத்திரும்பும் புதுமை.


அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளை அமைதிபடுத்த காட்டப்படும் கிளுகிளுப்பை போல் எல்லாக்காட்சிகளையும் கண்டு ஆனந்தமடைந்த எனக்கு இறுதியில் நாட்கள் முடிந்து ஒரு இயந்திரப்பறவையினுள் சிறைப்பிடிக்கப்பட்டேன் (சீறீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள்) வேதனையில் என் தாய் மண்ணை ஒரு சன்னலோரம் கண்டு நின்றேன். கிளுகிளுப்பைப்போல் வேடிக்கை காட்டி நின்றது மேனியில் பல வண்ணம் பூசிய அந்தவிமானம்.


அடுத்த முறை ஊர் வந்து காட்சிகள் பல காண மூலப்பொருள் மண்ணும், மண்ணுக்கு மேல் இந்த கண்ணும் இருத்தல் வேண்டும்.

இறைவன் அதற்கு நமக்கெல்லாம் வாய்ப்பளிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.....

பயணங்கள் முடியவில்லை.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

60 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படமும் பக்குவத்தனமான வர்ணனையும் மனசார ரொம்ப நல்லாருக்கு நெய்னா! ஜஜாக்கல்லாஹ் ஹைர்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வீடுகள் முதல் விமானங்கள் வரை காட்டிய படங்களும்,அதனை விவரித்த விதமும் அருமை எம்.எஸ்.எம்.
// நண்பனின் கையில் இருக்கும் முறுக்கும், ராஜாமட சாய்ங்காலத்தென்றலும் சந்திக்கும் ஒருஅந்தி மாலைப்பொழுது.//

முறுக்கு பையையும்,மற்றுமொரு தின்பண்டத்தையும் வெளியில் காட்டிக்கொண்டு தான் மட்டும் முகத்தை காட்டாமல் செடிக்குள் ஒளிந்து செல்வது சரியா?

// இரு பக்கம் மரங்கள் நட்டு நடுவிலே தார் சாலை இட்டு குளிர்க்காற்றை ஓட விட்டு கொண்டாடும்இயற்கையே இறைவனின் அத்தாட்சிகள். (மளவேனிற்காடு) //

இக்காற்றை உன் நுனி விரல் தடுப்பது போல் காட்ச்சியளிக்கிறதே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கை கழுவிய மின்சாரமும், கை கொடுக்கும் அரிக்களாம்பும். ஓட்டு கேட்டு நிற்கவில்லை. ஒளி கொடுத்து ஓரமாய் நிற்கிறது. பழமைக்குத்திரும்பும் புதுமை.//

ஆஹா !

கைவிட்ட மின்சாரம்
ஷாக் அடிக்காது(தான்)..

தலைக்குமேலிருக்கும் அரிக்கனோ
அந்தகால ஷேக் வீட்டு லுக்கு(தான்)...

படங்கள் அனைத்தும் அழகோ அழகு
அரிக்கனி கம்பீரமோ...
ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற வேட்பாளரின் சிரிப்பு !

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நெய்னா அவர்கள் மிக அழகாவும்,அருமையாகவும் படங்களை சுட்டி காட்டியுள்ளார். நெய்னா மறக்காமல் முறுக்கையும்,
தின்பண்டங்களையும் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.இன்னும் பல நமதுதூர் படங்களை அடுத்தடுத்து வெளியிடுவர். LMS (அ) முகத்தை காட்டாமல் செடிக்குள் ஒளிந்து செல்வது சரியா? கேட்டு இருக்கிறார் அப்படி தெரிந்தால் நிச்சயம் கண்டு பிடித்துவிவீர்கள்.

Yasir said...

சகோ.நெய்னா...இவ்வாக்கம் ஏக்கத்தை தீர்க்கவில்லை அதிகரித்துவிட்டது....அருமையான புகைப்படங்கள்....

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

தலைப்பே மெரு-கேற்றுவதுபோல் இருந்தது....ஆம் நம்மூர் புகையில்லாத அதிரை தான்....

படத்திற்கு ஏற்ப மிக அருமையாக கோர்க்கப்பட்ட வரிகள்... இன்னும் நிறைய படங்களையும் அதற்க்கூரிய அழகு தமிழ் வரிகோர்வையையும் எதிர்பார்கிறோம்(ன்) ...இன்ஷா அலலாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//படத்திற்கு ஏற்ப மிக அருமையாக கோர்க்கப்பட்ட வரிகள்... இன்னும் நிறைய படங்களையும் அதற்க்கூரிய அழகு தமிழ் வரிகோர்வையையும் எதிர்பார்கிறோம்(ன்) ...இன்ஷா அலலாஹ்//

அதனால் என்ன... கவிக் காக்காவும், அதற்கு கிரீடம் வைக்கவும் வரத்தானே போறாங்க...

விழி கண்ட மொழி பேசத்தான் போகிறது !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இலவசமாய் அன்றாடம் காணும் காட்சிகளே நமக்கு பெரும் பாடம் நடத்தும். அந்த இயற்கை காட்சிகளே இறைவனின் அத்தாட்சிகள்.

வறண்டு போன மணற்குன்றுகளை அன்றாடம் காணும் நமக்கு விடுமுறையில் கண்டதெல்லாம் கண்கொள்ளாக்காட்சிகளாக்கப்படுவதில் ஆச்சர்யம் தான் என்னவோ?

ப‌ள்ளியில் தொழ‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் ஹ‌வுதில் ஒழுச்செய்யும் ச‌ம‌ய‌ம் ஏற்ப‌டும் த‌ண்ணீரின் ச‌ல‌ச‌ல‌ப்பும்

க‌லியாண‌ வீடு செல்ல‌ உடுத்திய‌ உடைக‌ளின் மினுமினுப்பும்

சில‌ மாத‌ங்க‌ளுக்குப்பின் வீடு வ‌ந்திற‌ங்கி பெற்றோர்க‌ளை காணும் ச‌ம‌ய‌ம் ஏற்ப‌டும் ஆன‌ந்த‌ ப‌ட‌ப‌ட‌ப்பும்

இல்லாளை இன்முக‌த்துட‌ன் காணும் உள்ள‌க்குளுகுளுப்பும்

ப‌க‌ல் உண‌வு உட்கொண்டு வ‌ரும் ம‌ய‌க்க‌த்தில் தெரு வியாபாரிக‌ளின் ஒலிபெருக்கி ச‌ப்த‌ம் கேட்டு வ‌ரும் க‌டுக‌டுப்பும்

அடிக்கடி வரும் மின்வெட்டில் ஏற்படும் முனுமுனுப்பும்

அதிகாலை சுப்ஹ் தொழுகையில் ப‌டைத்த‌ இறைவ‌னை த‌லைவ‌ண‌ங்கி வ‌ந்த‌ பின் வ‌ரும் செழிசெழிப்பும்

ஈன்றெடுத்த‌ குழ‌ந்தைக‌ளுட‌ன் வ‌ய‌தை ம‌ற‌ந்து தானும் ஒரு குழ‌ந்தையாய் விளையாடி ம‌கிழ்வ‌தில் வ‌ரும் க‌ல‌க‌ல‌ப்பும்

ப‌ழைய‌தை பேசித்திரியும் காதோர‌ம் த‌லை ந‌ரை க‌ண்ட‌ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் க‌ழியும் பொழுதில் வ‌ரும் கிளுகிளுப்பும்

இன்னும் ப‌ல‌ சொல்லிக்கொண்டே செல்ல‌.....

ம‌றைய‌ ம‌றுக்கிற‌து எம் உள்ள‌த்தை உறைய‌ வைக்கிற‌து.

நினைவுக‌ளும் நின்ற‌பாடில்லை; எம் ப‌ய‌ண‌ங்க‌ளும் முடிந்த‌பாடில்லை......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

ZAKIR HUSSAIN said...

//சகோ.நெய்னா...இவ்வாக்கம் ஏக்கத்தை தீர்க்கவில்லை அதிகரித்துவிட்டது....அருமையான புகைப்படங்கள்.... BY YASIR"

சகோ. யாசிர் சொன்னதை நானும் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம்.
சகோ. - மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து. எடுத்த போட்டோ அனைத்தும் அருமை. [ இன்னும் நல்ல பிக்ஸல் / லென்ஸ் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்]
நீங்கள் சொன்ன கலர் விமானம் மலேசியாவின் பட்ஜெட் ஏர்லைன் ...அதாங்க ஆக்ஸிஜன் மாஸ்க்குக்கு கூட டிக்கட்டோடு சேர்த்து காசு கட்டணும்...இல்லாங்காட்டி தேவைப்படும்போது அதிக காசு கரக்கற ஏர்லைன்.

பட்ஜெட் ஏர்லைன்....ஒரு நவீன மாட்டுவண்டி. ஆஸ்பத்திரிக்கு அடுத்து அதிகம் காசு புடுங்கும் இடம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பட்ஜெட் ஏர்லைன்....ஒரு நவீன மாட்டுவண்டி. ஆஸ்பத்திரிக்கு அடுத்து அதிகம் காசு புடுங்கும் இடம்.//

ஹா...ஹா... ரசித்தேன் !

எங்கள் கம்பெனிக்கு வர இருக்கும் இன்ஜினியரிங் கெஸ்டை தங்க வைக்க ஒரு பட்ஜெட் ஹோட்டல் புக்கிங் செய்தேன்...

ஜஸ்ட் Dh 90/= மட்டுமே ஒரு இரவுக்கு (மொத்தம் நான்கு இரவுகளுக்கு 360/=)... (இதுதான் விளம்பரம் starting from Dh 99 to 250/=)..

இவ்வளவு சீப்பா என்று எல்லோருக்கும் ஆச்சர்யம்...

நில்லுங்க பாஸ்...

சரி அதன் பின்னர் அந்த ஹோட்டலின் வசதிகளைப் பார்க்க சென்றோம் ரூமில் எல்லா வசதிகளும் இருந்தது.

அதன் பின்னர் ரிஷப்ஷனில் விசாரிக்க ஆரம்பித்த வகையில்...

டி.வி ரிமோட்டுக்கு ஒரு நாளைக்கு Dh 30/- (யூரோப் சேனலாம் எல்லாமே தொறந்து இருக்குமாம் ???)
தினமும் ரும் சர்வீஸ் (சுத்த பத்தம்) Dh 60/- (நாள் ஒன்றுக்கு)
காலைச் சாப்பட்டு இல்லையாம் தேவையென்றால் அவர்கள் தருவார்களாம் அதற்கு Dh 45/= (நாள் ஒன்றுக்கு)
இணைய இணைப்புக்கு Dh 60/- (நாள் ஒன்றுக்கு)

மெய்யாலுமே சரியான பட்ஜெட்டுதான்... :)

sabeer.abushahruk said...

நெய்னா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போய் வந்தால் பொட்டி பிரித்து நினைவுகளைப் பங்கு வைத்துத் தரும் நீங்கள் இம்முறை நிழல்களை!

நன்றி.

இவற்றில் மனம் கவர்ந்தவைப்பற்றி எனக்குத் தோன்றும் குறிப்புகளை பிறகு தருகிறேன்.

sabeer.abushahruk said...

யாருமில்லாத
புதுமனைத் தெருவின்
புகைப்படத்துள்
புத்தி நடந்து போனது

புதுமழை ஓய்ந்த
பொழுதில்
தோழனின் வீட்டை
தேடி நடந்தது.

sabeer.abushahruk said...

கிளைகள் கைநீட்டி
இலைகள் விரல் கொண்டு
பரஸ்பரம்
கைகுழுக்கிக் கொள்கின்றன
தோரணம் என
தொட்டு நிற்கும்
சாலையோர மரங்கள்

sabeer.abushahruk said...

அரிக்கேன் விளக்கு
அழுது வடிந்தால்தான்
அழகாய் இருக்கும்...
யாரது
திரியைத்
தூண்டி வைத்தது?

sabeer.abushahruk said...

எப்படி எப்படியோ
இழுத்து வளைத்து வரைந்தாலும்
நாடிய வடிவம்
வராத வரையில்
விடுவாதாயில்லை
மேகங்களை
பறவை

sabeer.abushahruk said...

எல் எம் எஸ்:
நடையிலும் கூட டிஸைனா?

sabeer.abushahruk said...

மழைக்குமுன்
சுருட்டிவைத்தால் என்ன
பச்சைக் கம்ப்ளங்களை...
திட்டுத் திட்டாக
ஈரம்

navabar said...

பலமைக்கு திரும்பும் புதுமை. நல்ல வரிகல்.ஆனால் பக்கத்திலய் ஒரு ஹெட்/ஷொல்டெர் ஹாஹஹஹஹ

KALAM SHAICK ABDUL KADER said...

1) அதிகாலை நேரம்
அதிரைசாலை ஓரம்
அமைதி தவழும் பொழுது
அல்லாஹ்வின் “திக்ரின்”பொழுது
நடைப்பயிற்சியும் கிட்டும்
எடையினளவும் வெட்டும்!

2)பாக்குமரம்
கேட்கும் கேள்வி
”தனிமரம் தோப்பாகுமா?”

3)கிளகளை குடையாக்குவதோ
மரம்; தன் உறவென்னும்
கிளைகளை உடைப்பவன் மனிதனா?

4)பட்டுக்கோட்டையாரின்
பாடல் வரிகளைத் தூண்டும்
பட்டுக்கோட்டைக்குப் பக்கத்து
ஊரில் காணும் தோற்றம்

5)அடிக்கடிக் காணும்
செக்கடிப்பள்ளியின் உதயம்
அடிக்கடி ஊரை நினக்க
துடிக்குமே இதயம்

6)சிறுவயதில் குட்டிக்கரணம்
இக்குளத்தின் நீரோட்டத்தில்
சிறு ஞாபகம் இப்பொழுது
இவ்வுள்ளத்தின் ஓட்டத்தில்

7)இச்செடிகள் கூறும் பாடம்:
“நான் தரும் குளிர்ச்சியைவிடக்
கண்ணுக்குக் குளிர்ச்சியானது
தொழுகை”

8)முறுக்கை யார்கண் பட்டாலும்
பொறுக்க முடியாதென
ஒளிந்து செல்லும்
நளினன நடை..

9)பழவேனிற்காட்டிலிருந்து
பட்டினத்துக்கு இஸ்லாம் அரபுகளால்
பரவியது போல, அதிரைப்
பட்டினத்திலிருந்துப் பக்கமுள்ள
மளவேனிற்காட்டை அடைவது எப்போது?

10)சோழ மன்னர்கள்
வழங்கியத் தோப்புகளே
மழவேனிற்காடுகளாமே?

11
& 12)
)தண்ணீரைத் தாலாட்டும்
தண்டமிழ்ப் பாடலாய்த் தென்றலும்
தாமரைப்பூக்களின் தள்ளாட்டமும் கொண்ட
நீச்சல் பயிற்சிக் கூடமான இக்குளம்
நீங்காத நினைவுகளில் என்னுளம்

13)ஒற்றை மினாராவின்
ஒலிபெருக்கி வழியே
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்
ஒலிப்பது நேரிய வழியே

14)நீரில் குளிர்ச்சியா?
நீருக்குள்ளிருந்த
வேருக்குள்ளே வந்த குளிர்ச்சியால்
தென்றலில் குளிச்சியா?

15)இம்முறை விடுமுறையில்
சென்னை- அதிரைச் சென்ற வேளை
என்னை அதிசயிக்க வைத்த சாலை
தமிழ்நாட்டிலும் இப்படியோர்
தரைவழிச் சாலையா?

16)நீண்ட பயணத்தில்
வேண்டும் இப்படிப்பட்ட
கண்கொள்ளாக் காட்சி

17)நெஞ்சை கொள்ளை கொள்ளும்
தஞ்சை சாலை

18)சிலரின் எழுத்து நடை
சிந்திக்க வைக்கும்
இப்படிப்பட ஆற்றின்
சலனமற்ற சீரான வேகம்

19)ஆற்றின் சீரான அலைபோல
ஆறுதல் பெறட்டும் இவர்களின் கவலை

20) இசைபாடும் காற்றுக்கு
அசைந்தாடும் இக்கதிர்கள்

21)உச்சிமுதல் அடிவரை
மெச்சிடும் பலன்கள் பனையில்
உச்சிமுதல் கால்வரை
மெச்சிபுகழ்ந்தால் கூடுதல்
முத்தம் உண்டு மனைவியில்

22)பசுமை இருக்கின்ற வரை
வளமையும் இளமையும் உண்டு
என்ற பாடம் தானே?

23)காலையில் பட்டினியாய்ச் செல்லும்
மாலையில் வயிறு நிரம்பி வரும்
பறவைகளின் மூலம்
படைத்தவனின் ஆற்றலை நம்புவோமாக

24)இங்கு பக்கத்தில் கல்லூரி வருவதால்
மனையின் விலை ஏறிவிட்டதாமே?

25)நீச்சல் கற்றுக் கொள்ளாமலிருக்கும்
நிலைமைக்கு தண்ணீரின் நிலைமை

26)தொழுதால் மட்டும் போதாது
அனாதைகளை ஆதரிப்பதால்
சுவனம் கிடைக்கும் என்பதை
வலியுறுத்தும்

27)”ஜனாஸா ஏர்வேய்ஸ்”
தரையிறங்கும் தளம்

28)மழைநீர் சேமிப்புத்தொட்டி எங்கே?

29)”ஓல்டு இஸ் கோல்டு”

30)நாம் கவலைகளைச் சுமக்க;
நம்மை இப்பறவைச் சுமக்கத்
தயாராக உள்ளது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பச்சைக்கிளிகள் கூட பொறாமை கொள்ளும் பசுமை//
சூப்பர் உவமை!

முறுக்கு தின்னவும் குறுக்கு வழியா? இல்லெ 'அமேஜான் வாட்டரை'யும் மிஞ்சும் எதுவும் ஓடுதா என நோட்டமிடவா?
அவர்கள் நம்மூரு சிறுவர்களா? இல்லெ நம்ம சிறுவர்களா?

sabeer.abushahruk said...

கவியன்பன்,

தனிமரம் தோப்பாகாது
தனித்தாள் கோப்பாகாது
தாமின்றி யாப்பாகாது
தமீமின்றி...? நட்பாகாது!

மழைநீரில்
முகம் பார்க்கும் மரங்கள்
செக்கடிக் குளமா
தேக்கடித் தடாகமா?

படம் பிடித்த நெய்னாவுக்கு
பட்டம் பிடிக்குமா
பதக்கம் பிடிக்குமா?

sabeer.abushahruk said...

பெட்டைகளே
மொட்டை மாடிக்குப்
போகவேண்டாம்
ஒற்றைப் பனையொன்று
உற்றுப் பார்க்கிறது!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் மழையில் அடித்துசெல்லப்படாமல் என் காலடி பட்ட மண் இடுக்குகளில் ஒளிந்திருக்கு. மீண்டும், என் காலோடு குசலம் விசாரிக்க. நான் நடந்த வீதி இப்ப நாதி அற்று இருப்பதாய் தோன்றலாம். அது எனக்காக மற்றவர்களை உறங்க அனுப்பிவிட்டு காத்திருக்கு.

crown said...
This comment has been removed by the author.
crown said...

தன்னந்தனி மரமாய் பாக்குமரம் நாம் அன்னாந்து 'பாக்கு'ம் மரமாக ஒய்யாரமாய் உயர்ந்து தூவானம் துவர்பாக்கு தூவிய மழையில் நனைந்ததால் தலை சிலிர்ப்பி சின்னச்சிரு குருவி போல மாய பிம்பமாய் காட்சி தருகிறது.

crown said...

கணினி காலம் என்பதால் தான் புளிய மரமும் ஒப்பனை பூசி பாதச்சாரிகளை எதிர்கொள்கிறதோ?சரியான கட்டை என ஆண்கள் ஆழைக்கனும் எனும் ஆசையா? கட்டையாய் போய் பின் நெருப்பில் கருக இருக்கும் இந்த மரம் மனிதனுக்கு மரத்து போன புத்திக்கு பாடம்! உடலை பிறர் பார்க நவ நாகரீகம் என நடந்தால் இந்த பாலாய்போன உடல் சாகும் பின் கட்டையாய் நரகத்தில் வேகும்.

crown said...

வெப்பம் தணிக்கும் வேப்ப மரம் வீட்டிற்கு முன்னோ, பின்னோ அமைந்திருப்பதும் ஒரு வரம்!அதில் வரும் காற்று நச்சை திண்ணும் , அதன் குச்சியில் பல் துலக்கினால் பளிச்சென மின்னும்.

crown said...

நான் துள்ளி விளையாடிய வீதியில் அமைந்திருக்கும் அழகு பள்ளி! எப்பொழுது பார்த்தாலும் மனதை அள்ளி செல்லும் அற்புதம்.

crown said...

என்றும் களைப்புற நிழல் தரும் சாலை! இதமாய் காற்று வீசும் சோலை! காலை, மாலை என்னேரமும் எம்மை ஈர்க்கும் இடம் , இது எல்லாருக்கும் சிறு மடம்!

crown said...

பள்ளி வாசலின் வாசல் , சுவர்கத்தின் நுழைவாசலின் வாசல்!(சாவி=தொழுகை)!வாசலின் வழியெல்லாம் வசந்தத்தின் வாசல் சிறு தோட்டம்!இதில் நுழைவதே கொண்டாட்டம்.பார்க்க ஈர்க்கும் இதுவும் சின்ன park!

crown said...

இன்னும் முறுக்கு குறையாத ராஜ மடம் ! மனத்துக்கு மகிழ்வு தரும் நல்ல இடம்! இதை கடந்து போகும் போது சிறிதேனும் இறங்கி உலாத்தினால் அன்றைய போழுது இமயமலை ஏறியதுபோல் ஒரு பிரமை மனதில் ஏறிக்கொள்ளும்.

crown said...

மழவேனிற்காடு என்றும் இளவேனிற்காலமாய் இதமாய் இருக்கும். சுவைக்கும் இளனீராய் இனிக்கும்! நிழல் நிரந்திரமாய் குடி இருக்கும்!

crown said...

செக்கடிக்குளக்கரை! ஆஹா நினைப்பதே சக்கரை! இக்கரை என்னை அக்கரையாய் சுமந்த கரை! திரையிட்டு மறைத்தாலும் மறையா திரை வந்து மோதும் தண்ணீர்துறை! இந்த படிதரையில் நித்திரை கொண்ட நாள் ஆனதத்தின் உச்சம்.இந்த குளக்கரையில் என் குலம் இருப்பது மச்சம்!புழுக்கம் கூட இதமாய்தான் தோன்றும் இக்கரையின் அருகில், புழுதிகூட மணக்கும் மணல் சக்கரை இது!

crown said...

இந்த தடாகத்தை பார்க்கும் போதேல்லாம் நினைவு தாகம் என்னை வாட்டி எடுக்கிறது!தமரை பூ பறித்து விளையாடியதை மறக்க முடியுமா?தாமரை மொட்டு தோட்டு தடவி அதன் விதை தின்றதை மறக்க முடியுமா? ஓடி வந்து இந்த குளத்தை அணைத்ததை மறக்க முடியுமா?ஆடியதும், விளையாடியதும், விபரம் முழுதாய் தெரியும் காலமுன்னே முழ்கி குளித்ததும், மறக்குமா? நினைக்கையிலே கண்ணீர் குட்டையாகி இன்றைய செக்கடி குட்டைபோல் நீளுகிறது என் மொவுன அழுகை!(எழுதி கொண்டே இருக்கலாம்)

crown said...

சாலையின் உடலின் இருபக்கமும் வரிக்குதிரைபோல் காட்சி தருவது சாலையின் விலா எலும்பா? எங்கு முடியும் இந்த சாலையின் நெடுந்தூர பயணம் ! அமையதியாய் சலனமும், சனங்களும் இல்லாமல் இப்படி சாலை தனியாக எங்கேதான் செல்கிறது?

crown said...

இடம் பட்டுக்கோட்டை, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை) அழகுக்குயென வார்க்கபட்டதா? இல்லை இயற்கையால் வளர்க்கபட்டதா? குழியாய் பார்த்த சாலை! எழிலாய் இன்று கண்ணை பறிக்குது!தார்ச்சாலை மனதில் பச்சென வந்து ஒட்டி கொண்டு இறங்க மறுக்குது!

crown said...

ஆறுக்கு மனித உயிர்களை கூறு போடும் ஆறறிவு???? மனிதர்களே ! சகோ. நைனாவைப்போல் எனக்கும் ஆற்றாமை! அறியாமையில் இப்படி அழிந்து போகும் நீங்கள் இந்த தண்ணிருக்குள் எல்லை போட்டு, தண்ணி போட்டவனைப்போல் தடுமாறி போவதேன்?

crown said...

கல்யான ஓடை சகோதரனின் உயிர் திண்ற வாடைதான் இன்னும் அடிக்கிறது. அதிகம் எழுத முடியாத படி துன்பம் தந்த ஆறு! இதை படித்து நம் சகோதரர்கள் கவனமாய் இருக்கனும்.இந்த உயிர் இறைவனின் அருட்கொடை!!

crown said...

( நேரம் இல்லை இனி சுருக்கமாக)!
ஒரு ஹைக்கூ முயற்சி( கவிச்சக்கரவர்திகள் மன்னிக்கவும்). வட்டமடித்து, வட்டமடித்து வந்தும்
இன்னும் கையில் கிட்டவில்லை அந்த பறவையின் நிழல்.( நிழலையும் நிச உணவென தேடும் பறவையாய் பலரின் நிலை)

crown said...

இனை துணை இல்லாமல் வாடும் பனையே! நீ செய்த வினையா இப்படி நாதியற்று நடு(வீதி)தோப்பில் நிற்கிறாய் இப்படி நீ தவறாய் வினை செய்தால் இப்படித்தான் தோப்பாய்!

crown said...

இளம் நாற்றுக்களின்(சிறுவர்கள்)பாதம் கழுவி பரவசபடுகிறது ஆறு!அதனால் தான் சந்தோச நுரை பொங்க ஓடி மகிழ்கிறதோ?

crown said...

தன் தந்தையை இனி கான முடியாது என்பது தானா? எத்திம் கானா? அவர்கள் வாழ்வில் ஏற்றம் கான நாமும் உதவனும்.

crown said...

தேடாமலே கிடைக்கும் இடம் ! இங்கே பாகப்பிரிவினை இல்லை!இம்மையின் முடிவு! மறுமையின் நுழைவு இந்த இடம்!

crown said...

விசும்பின்(புல்) மேல் மெல்ல வீழ்ந்து குசும்பு செய்யும் தூறலும், சாரலும் அதில் நனைந்தது தாவாரமும், தாவரமும்.

crown said...

குன்றின் மேல் விளக்கல்ல இது ! மாடாவின் மேல் சிறுவர் நாட திருக்க இட்ட விளக்கு!

crown said...

நம் பிழைப்புக்கு உறுதி செய்யும் வான ஊர்தி! இதில் பறப்பதால் பல வீடுகளில் வாழ்வு சிறக்குது!ஆகாயவழி சென்று ஆதாயம் நமக்கு கிடைக்குது!மானம் கப்பல் ஏறும்??? விமானத்தால் பல ஏழை, நடுத்தர மக்களின் மானம் காக்கப்படும்.அவர்கள் படும் துன்பம் தீர்க்க படும்.

crown said...

என்ன நைனா போதுமா? தம்பி காக்கா கேட்டதுக்கு இணங்க இன்று முடிந்தவரை எழுதிவிட்டேன். தவறுகள் கண்டால் பிழை பொறுக்கவும்>( நான் எழுத நினைக்கிறதே மிகத்தவறு தானே?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//>( நான் எழுத நினைக்கிறதே மிகத்தவறு தானே?)//

அட ! கிரவ்ன்(னு): நான் என்று மட்டும்தான் எழுத நினைப்பது தவறு...

நீ எழுதுவதே பவரு(டா)ப்பா !!! :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சும்மா லைட்டா.....நம் ஊர் மற்றும் சுற்று வட்டார புகைப்பட காட்சிகளை இங்கு வழங்கியமைக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றளுத்தத்தாழ்வு மண்டலம் சற்று தீவிரமடைந்து திசைமாரி கருத்துமழையாக நம் அதிரை நிருபரில் கொட்டித்தீர்த்து விட்டது.

அதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கும், கருத்துக்களை முல்லைப்பெரியாறு பிரச்சினையின்றி ஸ்திரமான அணையிட்டு தேக்கித்தந்த நமது அதிரை நிருபருக்கும், கருத்துமழை பொழிந்த கவியன்பன் காக்கா, கவிக்காக்கா, நெறியாளராக்கா, மருத்துவராக்கா, சகோ. கிரீடம், நண்பர்கள் இரு அபூபக்கர்கள், மச்சான் ஜஹபர் மற்றும் கருத்திட இருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், இறைப்பிரார்த்தனையும் சென்றடையட்டுமாக !!!

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அபூபக்கர்-அமேஜான் said...

//பச்சைக்கிளிகள் கூட பொறாமை கொள்ளும் பசுமை//
சூப்பர் உவமை!

ஜகபர் சாதிக் சொன்னது : அமேஜான் வாட்டரை எதுவும் மிஞ்ச முடியாது அப்படி நோட்ட மிடுவதாக இருந்தால் அமெரிக்காவுக்கு அல்லது அதிரைக்கு வாருங்கள்.இது இரண்டு இடத்திற்கு மட்டும் போனால் மட்டும் தான் பார்க்க முடியும். இரண்டு சிறுவர்களும் நம்ம பிள்ளைகள் தான் உங்களுக்கு தெரிந்தால் கண்டுபிடிங்கள்.

Shameed said...

என்ன நெய்னா இப்புடி ஊரின் எல்லா இடங்களையும் புகை படம் எடுத்து போட்டு அரை சதம் போட்டு அசத்திவிட்டீர்களே இனி ஊரில் எந்த இடத்தை நாங்கள் புகைப்படம் எடுப்பதாம்!

அபூபக்கர்-அமேஜான் said...

ஊரில் உள்ள எத்தனை போடோக்கள் போட்டாலும் அரை சதம் என்ன முழு சதம் கூட அடிப்பிங்க சமீத். நீங்களும் அதிரையில் உள்ள படங்களை போட்டு தான் பாருங்கலேன் எத்தனை சதம் அடிக்கிறிங்க என்று.

Shameed said...

அபூபக்கர்-அமேஜான் சொன்னது…
//ஊரில் உள்ள எத்தனை போடோக்கள் போட்டாலும் அரை சதம் என்ன முழு சதம் கூட அடிப்பிங்க சமீத். நீங்களும் அதிரையில் உள்ள படங்களை போட்டு தான் பாருங்கலேன் எத்தனை சதம் அடிக்கிறிங்க என்று.//


போட்டுருவோம் கூடிய சீக்கிரம் இன்ஷா அல்லாஹ்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்கா சொன்னது:
// எல் எம் எஸ்:
நடையிலும் கூட டிஸைனா? //

முறுக்கை கொண்டு செல்ல குறுக்கு வழி எமக்கு தெரியாது.
தாங்கள் கேட்க்கும் நடை டிசைன் எழுத்து நடையா?கால் நடையா?

புகைப் படத்தில் செல்வதோ M.S.M.அபூபக்கர் (அமெஜான்) காக்கா

KALAM SHAICK ABDUL KADER said...

//தாமின்றி யாப்பாகாது
தமீமின்றி...? நட்பாகாது!//

யாப்பின் இலக்கணத்தில்
யான் கட்டுப்பட்டேன்
நட்பின் இலக்கணத்தில்
நணபன் தமீம் கட்டுண்டான்
எங்கள் இருவரின் நட்பையும்
ஊரறியும் இரகசியமென
உணர்வுகளைப் படம்பிடித்தீர்
உண்மையில் நீங்கள்
உள்ளத்தில் உள்ளதையும்
படம்பிடிக்கும் கலைஞர்;
பாடல் படிக்கும் கவிஞர்

M.Ilmudeen said...

வார்த்தைகளால் சொல்ல முடியாததை....! வரிகளால் சொல்ல முடியும் என்பதை நிருபித்து இருகிறார்கள் - மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து காக்கா
அவர்கள்...இயற்கைக் காட்சிகள் யாவும் இறைவனின் அத்தாசிகள்... நன்றி adirainirubar.in

Unknown said...

இது ஒரு மீள்பதிவு...? Yes...?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இது ஒரு மீள்பதிவு...?//

ஆமாம்... !

Unknown said...

சின்னச்சின்னதாய் ஹைக்கூ:

ஒவ்வொரு புல்லுக்கும்
வைரத்தில் மூக்குத்தி
இளங்காலை பனித்துளி:

நட்டவனுக்கும்
கெட்டவனுக்கும்
நிழல் தந்தது
மரம்;

Unknown said...

சின்னச்சின்னதாய் ஹைக்கூ:

ஒவ்வொரு புல்லுக்கும்
வைரத்தில் மூக்குத்தி
இளங்காலை பனித்துளி:

நட்டவனுக்கும்
கெட்டவனுக்கும்
நிழல் தந்தது
மரம்;

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு