Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைமைத் தேர்வு 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2016 | , ,

:::: தொடர் - 31 ::::

இஸ்லாத்தில் தலைமைத் தேர்வு, இறைச் சட்டத்தின்படி இயங்குதல், மார்க்கக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் தன்மை, இறைச் சட்டத்தை இணைத்துச் செயல்படுதல், ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும் ஒன்றாகும்.  அத்தகையவரே ‘கலீஃபா’ (இறைப் பிரதிநிதி) என்று அழைக்கப்படுவார்.  அவர் தன் சுயவிருப்பு வெருப்புகளின்படிச் செயல்படாமல், இறைவன் விதிக்கும் ‘வஹி’யின் அடிப்படையில் செயல்படுவார்.  அவரால் வகுக்கப்படாத இறைச்சட்ட நியதிகளின்படித் தானும் நடந்து, அவருடைய தலைமையை ஏற்றுப் பணி புரியும் கடைசிப் பிரஜையையும் நடக்கச் செய்யவேண்டும்.  உண்மையில், கலீஃபாவானவர், மார்க்கப் பற்று, அறிவாற்றல், சமுதாயத்தை நேர்மையுடன்  வழிநடத்தி, பொதுமக்களுக்கு ஊழியம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் இயங்கவேண்டும். 

நபியவர்களின் நபித்துவ வரலாற்றின் ஆரம்ப காலத்தில், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த ‘குலஃபாவுர் ராஷிதீன்’ என்ற நேர்வழி நடந்த ஆட்சித் தலைவர்கள் அனைவரும், அவர்களின் தோழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவோம்’ என்ற உறுதி மொழியைக் கூறி, அவர்களின் நல்லாட்சிக்குத் துணை நின்றார்கள்.  சாதாரணப் பிரஜை ஒருவரால் கொண்டுவரப்பட்ட சட்ட மீறுதல்களையும் செவியுற்று, அவற்றுக்கான தீர்வையும் அந்த கலீஃபாக்கள் செய்துகொடுத்தார்கள்.  சிறந்த கொள்கைகளின் அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட அந்த நபித்தோழர்கள் தமக்குக் கிடைத்த தீர்ப்புகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள். 

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முறையை நடத்துவதற்கும் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் பொருளாதாரம் தேவையல்லவா? அதற்காக எல்லாப் பிரஜைகளிடமிருந்தும் பொருள் வரியாக வசூல் செய்யப்படும் 2.5% ஜக்காத், அரசின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டு, அவ்வப்போதைக்குள்ள தேவைகளுக்கும் நலத் திட்டங்களுக்கும் செலவிடப்படும்.  

இஸ்லாமிய ஆட்சியாளர், அதாவது தலைவர், ஏற்படுத்தும் நடுவண் அமைப்பில் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட ‘ஜக்காத்’ எனும் அறப்பொருள், அதைப் பெறுவதற்கு உரிமை பெற்ற எட்டுக் கூட்டத்தினருக்கும் பெரும் பயன் தந்தது.  எப்போது பொய்த் தலைமையும், தவறான பொருளீட்டும் முறைகளும் முஸ்லிம் சமுதாயத்தில் ஊடுருவி, உண்மையான தலைமையின் தனித் தன்மையை இழக்கச் செய்ததோ, அன்று முதல் வீழ்ச்சிப் பாதையைத் தமதாக்கிக் கொண்டன.  எந்த அளவுக்கென்றால், இஸ்லாத்தின் அடிப்படையான ‘தவ்ஹீத்’ எனும் ஓரிறைக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு, மாற்று மதக் கொள்கைகள் இஸ்லாத்தின் உள்ளே புகுந்து, ‘சூஃபிஸம்’, ‘அத்வைதம்’ என்றெல்லாம் தீய கொள்கைகளால் அலங்கரிக்கப்பட்டு, ‘இதுதான் இஸ்லாம்’ என்று எடுத்து வைக்கப்பட்டன.  தலைமை தடுமாறிற்று!    

உண்மையான தலைமையான ‘கிலாஃபத்’ வலுவிழந்து போய், ஆட்சித் தலைவர், அரசர் (King) என்றும், ஜனநாயக அடிப்படையில் ‘தலைவர்’ (President) என்றும் பெயர்கள் மாறிப் போயின!  ‘உம்மத்’ உடைபட்டது! தலைமைக்கான தகுதி என்றைக்கு இல்லாமல் போயிற்றோ, தலைவர்கள் தம் வாரிசுகளையும் தம்பிமார்களையும் தலைவர்களாக்கி னார்களோ, அன்றிலிருந்து நம் சமுதாயம்  வீழ்ச்சிப் பாதையை நோக்கி வீறு நடை போட்டது!  

தாரிக் பின் ஜியாத், முஹம்மத் பின் காசிம் போன்ற வீரத் தளபதிகள் எல்லாரும் எவ்வாறு அவரவருக்கு இடப்பட்ட பணிகளில் வெற்றி பெற்றார்களோ, அன்றே அவர்கள் ஆட்சியாளர்களால் திருப்பி அழைக்கப்பட்டுத் தண்டனை கொடுக்கப்பட்டார்கள்!  தலைமைப் பதவிக்குத் தகுதியில்லாத தம்பிகளும் சகோதரர்களும் இஸ்லாமிய உம்மத்தின் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்!  இது, நமது வரலாற்றின் கசப்பான உண்மை!

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பின்னர் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உமர் இப்னுல் கத்தாப் (ரலி) போன்றோர், அரசுக் கருவூலத்தின் ஒரு சல்லிக் காசைக்கூடத் தவறான முறையில் தீண்டவில்லை!  

‘சிறந்த தலைமுறைகள்’ என்று நபியவர்களால் புகழ்ந்து கூறப்பட்ட அந்த மூன்று தலைமுறைக்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்கள், மக்களிடமிருந்து வரி வசூலித்தார்கள்.  எதற்காக?  பொதுமக்களின் நல்வாழ்வுக்காகவா? இல்லை.  தமக்காகவும் தம் வாரிசுகளுக்காகவும் அழகழகான அரண்மனைகளைக் கட்டியெழுப்புவதற்காக!  போர்கள் புரிந்தார்கள்! எதற்காக?  இஸ்லாமிய போதனைகளை உலகெங்கும் பரப்புவதற்காகவா? இல்லை. அவை உலகில் தமது ஆட்சிப் பகுதிகள் என்று காட்டிக்கொள்வதற்காக!  அந்த ‘முஸ்லிம்’ ஆட்சியாளர்கள் தாமே முன்மாதிரி முஸ்லிம்களாக இருந்திருந்தால், அவர்களின் ஆட்சிக்குக் கீழிருந்த மாற்று மதத்தினர் இஸ்லாத்தில் இணைந்திருப்பார்கள் அல்லவா?

இந்நிலையில், புதிதாகச் சிலர் இஸ்லாத்தைத் தழுவினர்.  அவர்கள் முஸ்லிம்களாக மாறியதால், ஜக்காத்தும் அதனுடன் ‘ஜிஸ்யா’ வரியும் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர்.  இஸ்லாமியக் கொள்கைகளின் உயர்வைப் பலர் நன்றாக  அறிந்திருந்தாலும், ஆட்சியாளர்களின் இஸ்லாத்திற்கு முரணான வாழ்க்கையைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்காமல் போயினர்!

பெயரளவில் முஸ்லிம்களாகவும், செயலளவில் போலி வாழ்க்கையும் வாழ்ந்த இவர்களால்தான், ‘கிலாஃபத்’ ஆட்சிக்குச் சாவுமணி அடிக்கப்பட்டது!  நிரந்தரமாக!  இதனைத் தொடர்ந்து, கமால் அத்தா துர்க் முதலான பிரிட்டனின் அடிவருடிகள் தம் மனம் போன போக்கில் ஆட்சியில் அமர்ந்து இஸ்லாத்திற்குப் புறம்பான சட்டங்களை இயற்றினார்கள்.  

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின்னர், இஸ்லாமிய ஆட்சியின் ‘கலீஃபா’வாக  ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அபூபக்ருஸ் ஸித்தீக் (ரலி) அவர்கள், இஸ்லாத்தின் கடமைகளுள் ஒன்றான ‘ஜக்காத்’ கொடுப்பதற்கு மறுத்தவர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து, அவர்களுக்கு எதிராகப் போர் செய்யப் படைகளை அனுப்பினார்கள்!  “ஜக்காத் கொடுக்க மறுத்தவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்” என்றும் அறிவிப்புச் செய்தார்கள்!  ஜக்காத் என்பது, அவரவர் பெற்றிருக்கும் ‘செல்வத்தைத் தூய்மைப் படுத்தும்’ என்றும் இறை வசனத்தை அறிவித்தார்கள்.

“(ஜக்காத் என்னும் கட்டாய) தர்மங்கள் எல்லாம், வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அதற்காக உழைப்பவர்களுக்கும் எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின்பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் கடனாளிகளுக்கும் அல்லாஹ்வின் பாதையில் போராளிகளாக இருப்பவர்களுக்கும் வழிப்போக்கர்களாக இருப்போருக்கும் உரியவையாகும். (இது) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும்.  அல்லாஹ் அனைத்தையும் அறிந்தோனும் பேரறிவு உள்ளவனுமாவான்.”  (9:60)

“(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தானமாக எடுத்துக்கொண்டு, அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்தி, அவர்களுடைய அகங்களையும் தூய்மையாக்கி வைப்பீராக!  இன்னும் அவர்களுக்காக துஆவும் செய்வீராக!  திண்ணமாக, உம்முடைய பிரார்த்தனை, அவர்களுக்கு நிம்மதி அளிப்பதாகும்.  அல்லாஹ் அனைத்தையும் செவியுறுகின்றவன்; நன்கு அறிந்தவனாவான்.” (9:103)

ஜக்காத்துக்கு இத்துணை முக்கியத்துவம் ஏன்? முஸ்லிம்களிடமிருந்து ஜக்காத்தை வசூலித்து, அதனை ‘பைத்துல்மால்’ போன்ற பொது நிறுவனங்களில் சேமித்து வைக்கவேண்டும். ஜக்காத்தைப் பலர் கூடித் திரட்டி விநியோகம் செய்யும் முறை, இன்று இல்லாமல் போய்விட்டது.  ஜக்காத்தை வசூல் செய்து, பொதுவான அமைப்பு ஒன்றில் சேர்த்து வைத்து, உலகளாவிய அடிப்படையில் அதன் திட்டத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அதனால் ஆர்வம் கொள்ளச் செய்து, இந்தக் கடமையை அனைவரும் விரும்பும்படிச் செய்யவேண்டும்.  ஆனால், அத்தகைய நடுநிலை அமைப்பு நம் நாட்டில் இல்லவே இல்லை!  இதற்காகத் தலைமை தாங்கிச் செயல்படும் தகுதி பெற்றவர்களும் குறைவே.

அதிரை அஹ்மது

1 Responses So Far:

aa said...

//தலைமைக்கான தகுதி என்றைக்கு இல்லாமல் போயிற்றோ, தலைவர்கள் தம் வாரிசுகளையும் தம்பிமார்களையும் தலைவர்களாக்கி னார்களோ, அன்றிலிருந்து நம் சமுதாயம் வீழ்ச்சிப் பாதையை நோக்கி வீறு நடை போட்டது//

தவறான இஹ்வானிய சிந்தனை புரிதல் இது. நேரம் இருந்தால், இது பற்றி இங்கு விவரமாக எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு