Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"உம்மா"ன்டா சும்மாவா? 19

அதிரைநிருபர் பதிப்பகம் | May 18, 2016 | , , , , ,


"தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது" என்ற நபிமொழி இம்மானுடத்திற்கு ரத்தினச்சுருக்கமாக  சொல்வது என்னவெனில் சிரமங்கள் ஆயிரம் கடந்து தன்னை ஈன்ற தாயிக்கு முறையான பணி விடை செய்து மறுமையில் நிரந்தர சந்தோசத்தைத்தரும் சுவர்க்கத்தை அடைந்து கொள் என்பதே.

இன்றைய அவசர கால, நவீன தொழில்நுட்ப உலகில் பல இடங்களில் தாய்மை பரிதவிப்பதையும், பந்துவிளையாடப்படுவதையும், அனாதையாய் கை விடப்படுவதையும், முதியோர் இல்லங்களில் முடங்கிக்கிடப்பதையும், சொத்தின் பங்கிற்காக பெத்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுவதையும், எதேனும் காரணத்திற்காக சித்ரவதை செய்யப்படுவதையும் நாம் அன்றாடம் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வாயிலாகவும், சில சமயம் நேரடியாகவும் வேதனையோடு பார்த்து வருகிறோம்.

தாய்மையை போற்றி ப‌ணிவிடைக‌ள் செய்ய‌ வேண்டும் என்ற நோக்கில் அத‌ற்கான‌ விழிப்புண‌ர்வு மின்ன‌ஞ்ச‌ல்கள் அணுதினமும் ஆயிர‌க்க‌ண‌க்கில் முக‌நூலிலும்(ஃபேஸ் புக்)  இன்ன‌ பிற ச‌மூக த‌ள‌ங்க‌ளிலும் அன்றாட‌ம் வ‌ல‌ம் வ‌ருவ‌தை நாம் பார்த்தும், ப‌டித்தும் வ‌ருகிறோம். அப்ப‌டி என‌க்கு வ‌ந்த ஒரு மின்ன‌ஞ்ச‌லை ந‌ம் ஊர் வ‌ழ‌க்கு மொழி சேர்த்து கொஞ்சம் விரிவாக்கி இங்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஊர்லெ ஒரு நடுத்தரமான குடும்ப‌ம். அரசுப்பணியிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று மாச செலவுக்கு யாரிடமும் கடன் கேட்டு நின்றுவிடாமல் பென்சன் வாங்கி அதில் தன் வாழ்வாதாரத்தை வீட்டிலிருந்து கழிக்கும் வ‌ய‌சான‌ வாப்பாவும், உட‌ல் உறுப்புக‌ள் அனைத்தும் ஒரு காலத்தில் ஓடியாடி இன்று அது ஒவ்வொன்றும் அடிக்க‌டி வருந்தாமல் த‌ட‌ங்கலுக்கு ஆளாகும் உம்மாவும், உள்ளூரிலேயே சிறிய ம‌ளிகைக்க‌டை வைத்து ந‌டத்தி வரும் மூத்த‌ காக்காவும், ம‌ன‌தில் ம‌ட்டும் அம்பானி வெளியில் நாலு காசு ச‌ம்பாதிக்க‌ திரானி இல்லாத‌ ம‌ச்சானுட‌ன் எல்லாக்கஷ்டங்களையும் மூடி மறைத்து வெளியில் பொய்ப்புன்முறுவல் பூத்து வாழ்ந்து வ‌ரும் ஒரு ராத்தா ம‌ற்றும் அவ‌ளின் பிள்ளைக‌ள், பிற‌கு ச‌மீப‌த்தில் க‌ல்லூரியில் அங்குமிங்கும் கடனுடன் வாங்கி ல‌ட்ச‌ங்க‌ள் சில செல‌வு செய்து எம்.பி.ஏ.வில் சேர்ந்து ப‌டித்து வ‌ரும் த‌ம்பியும், தங்கச்சி பெரிம்சாகி (பெரிய‌வ‌ளாகி) சில‌ மாத‌ங்க‌ளே ஆகி மதரஸாவிற்கு சென்று வரும் அவ‌ளுக்கு எவ‌ன் மாப்பிள்ளையாக‌ அமைய‌ப்போகிறானோ? அவன் வீட்டிலுள்ளவர்கள் என்னஎன்ன‌வெ‌ல்லாம் கேட்க‌ப்போகிறார்களோ? வீடு வாச‌ல் க‌ட்ட‌ என்ன‌ செய்வ‌து? என‌ அவ‌ளுக்காக‌ க‌திக‌ல‌ங்கி நிற்கும் ஒட்டு மொத்த‌க்குடும்ப‌மும்,‌ முதுக‌லை ந‌ன்கு ப‌டித்து முத‌ல் ம‌திப்பெண்க‌ளில் தேறி ந‌ல்ல‌ கை நிறைய‌ ச‌ம்பாத்திய‌த்திற்காக எதேனும் ஒரு எம்.என்.சி. (ம‌ல்டி நேஷ‌ன‌ல் க‌ம்பெனி) நிறுவ‌ன‌த்தில்  ப‌ணிக்கிடைக்காதா? என‌ த‌ன‌க்கொரு வேலை தேடி அலைந்து திரியும் ந‌ம்மூர் ஒரு இளைஞ‌னும் அவன் நேர்முகத்தேர்விற்கு சென்று வந்த பின் அவன் தாயின் பாச‌மும் ஒன்றுக்கொன்று பிண்ணிப்பிணைந்திருக்கும் உள்ளம் நெகிழும் அந்த பாச‌ப்போராட்ட‌த்தை வெளிச்ச‌த்திற்கு கொண்டு வ‌ரும் ச‌ம்ப‌வ‌மே இது.

அவ‌னுக்கும் எதிர்பார்த்த‌ ப‌டி ப‌ன்னாட்டு தொட‌ர்புட‌ன் செய‌ல்ப‌ட‌க்கூடிய‌ ஒரு ந‌ல்ல‌ நிறுவ‌ன‌த்தில் நேர்முக‌த்தேர்வுக்கு அழைப்பு வ‌ந்திருந்த‌து அருகிலுள்ள‌ திருச்சியிலிருந்து. அவ‌னும் அதிகாலையே எழுந்து இறைவ‌னைத்தொழுது வணங்கி நேர்முக‌த்தேர்வுக்குச்செல்ல‌ கொஞ்ச‌ம் உண‌வு மட்டுமே உட்கொண்டு விட்டு க‌ட‌மையில் க‌ண்ணாக‌ இருந்தான். வீட்டினர் எல்லோரிடமும் இறைவ‌னைப்பிரார்த்தித்து நேர்முகத்தேர்வில் வெற்றி பெற து'ஆச்செய்யும் படி கேட்டுக்கொண்டு செல்ல‌ வேண்டிய‌ பேருந்தைப்பிடிக்க‌ வீட்டை விட்டு சீக்கிர‌மே வெளியேறினான் அல்லாவுன்த‌வ‌க்க‌ல்த்து என்ற‌ தாயின் து'ஆவுட‌ன்.

செல்ல‌ வேண்டிய‌ ப‌ஸ்ஸில் ஏறி அம‌ர்ந்து ப‌ல‌ க‌ன‌வுக‌ளுடனும் கொஞ்ச‌ம் ப‌ய‌த்துட‌னும் அவ‌ன் ப‌ய‌ண‌ப்ப‌ட்ட‌ அந்த‌ இர‌ண்டு, மூன்று ம‌ணி நேர‌ங்க‌ள் ஓடிய‌தே தெரியாம‌ல் போன‌து அவ‌னுக்கு. திருச்சியும் வந்தடைந்தது. பேருந்து நிலைய‌த்திலிருந்து அவ‌ன் செல்ல‌ வேண்டிய‌ நிறுவ‌ன‌த்திற்கு ஒரு ஆட்டோவில் ஏறி அம‌ர்ந்தான். அந்த நிறுவ‌ன‌மும் வ‌ந்து விட்ட‌து. உய‌ர்ந்த‌ க‌ட்டிட‌ம். அங்கு இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லாமே கோர்ட்டும், சூட்டும் போட்டிருந்த‌ன‌ர். வெளிநாட்டுக்கார்கள் வாசலில் அணிவகுத்து நின்றன.

வாயிற்காவ‌லாளியிட‌ம் நேர்முக‌ அழைப்புக்கு வ‌ந்த‌ க‌டித‌த்தை காட்டி மின் தூக்கி (லிஃப்ட்) மூல‌ம் செல்ல‌ வேண்டிய‌ ஐந்தாவ‌து மாடி சென்ற‌டைந்தான். அவ‌னுக்காக‌ காத்திருந்து உள்ளே அழைத்துச்செல்ல‌ ஒருவ‌னும் வெளியே காத்திருந்தான். உள்ளே சென்ற‌தும் நிறுவ‌ன‌த்தின் மேலாள‌ருக்கு இவ‌னுடைய கல்விச்சான்றிதழ்கள், விளையாட்டுச்சான்றிதழ்கள், போட்டிகளில் பரிசு பெற்றச்சான்றிதழ்கள், இன்னும் பிற நற்சான்றிதழ்கள் எல்லாவற்றையும் நன்கு நோட்டமிட்டபின் அட‌க்க‌மும், அமைதியுடன் கூடிய உறுதியான‌ ப‌திலும், அவன் க‌ண்ணில் தென்ப‌ட்ட‌ தெளிவும் ரொம்ப‌வே பிடித்துப்போய் அதிக‌ குடைச்ச‌ல் கேள்விக‌ள் இல்லாம‌ல் ச‌ட்டென்று சென்னைக்கு அப்பாய்ண்ட்மென்ட் ல‌ட்ட‌ரும் அருகிலிருந்த காரிய‌த‌ரிசிக்கு உடனே அடிக்க‌ச்சொல்லி க‌ட்ட‌ளையிட்டார். அவ‌னுக்கோ ச‌ந்தோச‌ம் தாங்க‌ முடிய‌வில்லை. மிக்க‌ ந‌ன்றிக‌ளை மேலாள‌ருக்கு தெரிவித்து விட்டு ச‌ந்தோச‌த்துட‌ன் அப்பாய்ண்ட்மென்ட் ல‌ட்ட‌ரையும் கையோடு வாங்கிக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றான். இதர படிகள் போக ச‌ம்ப‌ள‌ம் 75,000 ரூபாய் என‌ நிர்ண‌யிக்க‌ப்ப‌டிருந்த‌து.

ஊருக்குத்திரும்ப‌ளானான். பேருந்து நிலைய‌மும் வ‌ந்திற‌ங்கினான். வ‌ழியில் ம‌ழைத்தூர‌லால் அவ‌ன் கைபேசிக்குள் ஒரு சொட்டு ம‌ழைத்தண்ணீர் புகுந்துவிட்ட‌து. பிற‌கு அலைபேசியும் செய‌லிழ‌ந்து விட்ட‌து. ஊருக்கு அவ‌ன் ச‌ந்தோச‌த்தை உட‌னே ப‌கிர்ந்து கொள்ள‌ முடியாம‌ல் போன‌து. ச‌ரி ஊருக்குப்போய் வீட்டின‌ர்க‌ளுக்குத்தெரிவித்துக்கொள்ள‌லாம் என‌ சுமார் ப‌க‌ல் 12 ம‌ணிய‌ள‌வில் ப‌ஸ்ஸில் ஏறி அம‌ர்ந்தான்.

ப‌ஸ்ஸும் புற‌ப்ப‌ட்ட‌து ச‌ந்தோச‌க்காற்று இவ‌னை ச‌ன்ன‌லோர‌ம் ந‌ன்கு தாலாட்டிக்கொண்டே வ‌ந்த‌து. பாதி ப‌சி மீதி ச‌ந்தோச‌த்தில் அவ‌ன் ந‌ன்கு உற‌ங்கிப்போனான்.

இர‌ண்டு மூன்று ப‌ஸ்க‌ள் ஏறி ஊருக்கு சுமார் 2 1/2 ம‌ணிய‌ள‌வில் வ‌ந்த‌டைந்தான். இந்த‌ ப‌க‌ல் நேர‌த்தில் உண்ட உறக்கத்தில் ஊரில் அங்கொன்று இங்கொன்றுமாக‌த்தான் இருந்த‌து ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் . என‌வே தேவையில்லாம‌ல் ஏன் ஆட்டோவிற்கு செல‌வு செய்ய‌ வேண்டும் என‌ வீட்டிற்கு ந‌ட‌க்க‌லானான். வ‌ழியில் அவ‌னைக்க‌ண்ட‌ தெரிந்த‌ முக‌ங்க‌ள் "என்ன‌ப்பா இந்த‌ நேர‌த்துலெ பேண்ட் போட்டுக்கிட்டு போறா எங்கேர்ந்து வர்ரா?" என்று கேட்காம‌ல் இல்லை. அவ‌ன் சென்று வ‌ந்த‌ விச‌ய‌த்தை ம‌றைத்தே வைத்து சில‌ சாக்குபோக்கு சொல்லி சமாளித்தான். இல்லாட்டி ஊர் க‌ண்ணு,முக்கெல்லாம் வைத்து அவ‌னுக்கு அமெரிக்க‌த்தூத‌ர‌க‌த்திலேயே வேலை கிடைத்து விட்ட‌து போலும், சுமார் ரெண்டு, மூனு லச்சர்வா சம்பளம் கிடைக்கும் என்றும் மிகைப்படுத்தி சொல்லித்திரியும்.

வீடு வ‌ந்திற‌ங்கினான். அவ‌னுக்காக‌ சிர‌ம‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றில் சிக்கித்த‌விக்கும் அவ‌ன் குடும்ப‌ம் ஆவ‌லாக‌வே காத்திருந்த‌து. சலாம் சொல்லி அவனை ஒட்டு மொத்தக்குடும்பமும் வீட்டினுள் வரவேற்றது.

முத‌லில் வாப்பா கேட்டார்க‌ள் "என்ன‌ப்பா இண்ட‌ர்வியு எப்ப‌டி இருந்திச்சி? ஈசியா இருந்துச்சா? அப்பாய்ண்ட்மென் ல‌ட்ட‌ர் த‌ந்தாங்களா? பர்மணன்ட் வேலை தானே?".

ராத்தா கேட்டாள் "வேலை எங்கேயாம்? ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு த‌ர்ரேண்டு சொன்னானுவோ?".

த‌ங்க‌ச்சி ஆசையோடு கேட்டாள் "காக்கா, என‌க்கு மொத‌ ச‌ம்ப‌ள‌த்துலெ துபாய் புர்கா ஒன்னும், காதுக்கு தோடும் வாங்கித்த‌ரனும் ஆமாம்".

தம்பி ஏக்கத்துடன் கேட்டான் "காக்கா, எனக்கு மொத சம்பளத்துலெ சாம்சங் கேலக்ஸி3 ஒன்னு வாங்கித்தா என்னா?".

இறுதியாக வேர்வையுடன் அடுப்ப‌டியிலிருந்து வெளியேறிய உம்மா வ‌ந்து கவலையோடு கேட்டிச்சி "என் கண்ணான வாப்பா, வ்ளோவ் நேர‌ம்சென்டு வ‌ர்ரியேம்மா, எதாச்சும் சாப்ட்டியாம்மா, ச‌ட்டுண்டு கையெக்கழிவிட்டு வாம்மா, சாப்பாடு ஆறுது".

இது தான், இது தாங்க‌ தாய்ப்பாச‌ம்ங்கிற‌து....

நீ நேர்முக‌த்தேர்வில் தோல்வி அடைந்து ஒன்னுமே இல்லாம‌ல் வ‌ந்தாலும் ச‌ரி, ஒரு ல‌ட்ச‌ம் ரூபாய் ச‌ம்ப‌ள‌த்தோடு வ‌ந்தாலும் ச‌ரி அது பற்றி க‌வலையும் இல்லை சந்தோசமும் இல்லை. மொத‌ல்ல‌ ந‌ம் வ‌யிற்றை நிர‌ப்ப‌ வேண்டும் என்று எண்ணும் ம‌ன‌மே, ந‌ம் துய‌ரில் என்றும் துவ‌ண்டு போகும் ம‌ன‌மே அந்த‌ பெத்த‌ ம‌ன‌சுங்க‌. இதுக்கு உல‌கில் ஈடு, இணை எதுவும் இல்லைங்க‌......

இது போன்ற‌ நிறைய உள்ளம் நெகிழும் ச‌ம்ப‌வ‌ங்கள் தாய்,தந்தையரை பெற்றிருந்த, பெற்றிருக்கும் ந‌ம் ஒவ்வொருவ‌ர் வாழ்விலும் பல சமயம் நிச்ச‌ய‌ம் நிக‌ழாம‌ல் இருந்திருக்காது. ஒரு ச‌ம்ப‌வ‌த்தை மட்டும் இங்கு விரிவாக‌ குறிப்பிட‌ப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

என‌வே கால‌ம் சென்ற நம் தாய்மார்க‌ளுக்காக‌ அவ‌ர்க‌ளின் ஆஹிர‌ ந‌ற்ப‌த‌விக்காக‌ து'ஆச்செய்வோம். வாழ்ந்து வ‌ரும் தாய், தந்தையரை போற்றி அவர்களுக்கு வேண்டிய ப‌ணிவிடைகளை நிரப்பமாக‌ செய்வோம். இறைய‌ருளை நிர‌ம்ப‌ப்பெறுவோம் இன்ஷா அல்லாஹ்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

19 Responses So Far:

Iqbal M. Salih said...


Rabbanaqfirlana vali-vaalidaina
Rabbanaa rabbir-ham humaa
kamaa rabbayaanis saqeerah.

Rabbanaqfirlee vali vaalidaethee.

-Jazaakallaahu khair Naina Mohamed.

Unknown said...

Masha Allah, Unmatching selfless soul who always shower love on children . Good article that explains the responsibilities of children towards the mother. Thanks brother for sharing.

sabeer.abushahruk said...

நல்ல ஒரு கதை சொல்லியின் சுவாரஸ்யத்தோடு சொல்லிவந்த நெய்னா அம்மாவைப்பற்றிச் சொல்லி முடித்தது உருக்கிவிட்டது மனத்தை.

"உம்மா"ன்டா சும்மாவா?

இல்லை, உம்மாதான் எல்லாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விலை கொடுத்து வாங்க முடியாத ! ஒப்பற்ற பாசம் !
ஒரு நாள் என்ன ஒரு மணித் துளிக்கும் வாடகைக்குகூட கிடைக்கும் எதுவானாலாம் இவ்வுலகில் தாய் பாசத்தை தவிர !

தாயின் அருமையை உணராத மனிதம் இருப்பது அரிது, அவ்வாறு இருப்பின் அவனிடம் மனிதம் இல்லை !

MSM(n), தாயின் நினைவுகளை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய எழுத்து...

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ நெய்னாவின் கட்டுரை என்றால் மறுமை எண்ணம் மரண சிந்தனை வரும் இந்த கட்டுரையில் தாயை பற்றி சொல்லி கண்ணீர் வரவழைத்து விட்டார் .சகோ நெய்னா உங்களுக்கு எல்லா வளமும் வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் போற்றுகிறேன்

Ebrahim Ansari said...

மறுக்க முடியாத உண்மை.மறக்க முடியாத பதிவு.தம்பி நெய்னா அவர்களின் இந்த முத்திரைப் பதிவு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தாய்ப்பாசத்துக்கு நல்ல உதாரணம்.

"உம்மா"ன்டா சும்மாவா?
இல்லை, உம்மாதான் எல்லாம்.

ZAKIR HUSSAIN said...

தாயின் எதிர்பார்ப்புகள் அற்ற அந்த அன்பு ...அதுதான் தாயின் தனிச்சிறப்பு. தாய் என்ற உறவுதான் எல்லோரையும் தனது பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்ளும்.

தாய் உயிரோடு இருக்கும்போதே அவர்களை கவனித்துக்கொள்வதுதான் கடமை. சகோதரர் MSM Naina Mohamed அவர்களின் ஆக்கம் எப்போதும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் இந்த ஆக்கத்தைபோல்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
////இறுதியாக வேர்வையுடன் அடுப்ப‌டியிலிருந்து வெளியேறிய உம்மா வ‌ந்து கவலையோடு கேட்டிச்சி "என் கண்ணான வாப்பா, வ்ளோவ் நேர‌ம்சென்டு வ‌ர்ரியேம்மா, எதாச்சும் சாப்ட்டியாம்மா, ச‌ட்டுண்டு கையெக்கழிவிட்டு வாம்மா, சாப்பாடு ஆறுது". இது தான், இது தாங்க‌ தாய்ப்பாச‌ம்ங்கிற‌து....////
*********************************************************************

மாஷா அல்லாஹ்!
இதுதான் உண்மை!

'ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். இறைத்தூதர் அவர்களே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டார். 'உன் தாய்' என்று கூறினார்கள். பின்பு யார்? என்று கேட்டார். 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார் 'உன் தாய்' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார். 'உன் தந்தை' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 316)

தாய்க்கும் அவரின் பாசத்திற்கும்
ஈடு இணை இல்லை இவ்வுலகில்!

சகோ. மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து - வாழ்த்துக்கள்!


மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்ம ஊர்லெ சில வாப்பா, உம்மா அப்புடியும், இப்புடியும் இருக்கலாம். அதற்காக அவர்களை உதறித்தள்ளி, தனிமைப்படுத்தி உதாசீனப்படுத்த பிள்ளைகளுக்கு நம் மார்க்கம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.

ஊரில் ஒரு குடும்பம் வாப்பா, உம்மா சங்கவாட்டம் வேணாம் என்று சென்னையில் குடியேறி வருடங்கள் சில ஆகி விட்டது. பரிச்சை அல்லது ஏதேனும் ஒரு பெருநாள் லீவில் ஊர் வந்து இன்னும் உசுரு போகாமல் இருந்து வரும் அந்த வாப்பா, உம்மாவை பேருக்கு பார்த்து செல்லும் அந்தக்குடும்பம்.

சென்னை சென்றதும் ஊரில் அவர்கள் எக்கேடு கெட்டுப்போனால் எமக்கென்ன? என்றிருக்கும். ஆனால் அவர்கள் தாயிடம் சென்று கேட்டால் "அவ பாவம் மதராஸ்லெ மாப்ளெ,புள்ளெகுட்டிய‌ல்வொலெ வ‌ச்சிக்கிட்டு என்னா செய்றாளோ? எப்ப‌டி க‌ஸ்ட‌ப்ப‌ட்றாளோ?" என‌ ஏக்க‌ப்பெருமூச்சி கேட்ப‌வ‌ர்க‌ளிட‌ம் விடாம‌ல் இருந்த‌தில்லை.

ஆனால் சென்னையில் இருக்கும் அந்த‌க்குடும்ப‌த்திட‌ம் ஏன் இப்ப‌டி சென்னையில் இருந்து சிர‌ம‌ப்ப‌ட‌ வேண்டும்? ஊருக்குப்போய் க‌டைசி கால‌த்தில் வாப்பா, உம்மாவை நல்லபடி கவனிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது தானே?" என்று யாராச்சும் அக்க‌றையோடு கேட்டால் அங்கிருந்து ப‌தில் வ‌ருகிற‌து இப்ப‌டி "இந்த‌ வாப்பா, உம்மாவோட‌ யாரு இருப்பா?"

இந்த‌ மாதிரி பிள்ளைக‌ளை சிரமங்கள் ஆயிரம் பட்டு பெறுவ‌த‌ற்கு ப‌தில் அந்த‌ வாப்பா, உம்மா "அம்புலிமாவை பார்த்துக்கிட்டு நிலாச்சோறு உண்டு அந்த‌ இர‌வு கால‌ங்களை சும்மா க‌ழித்திருக்க‌லாம்".

இது போன்ற‌ எண்ண‌ற்ற சங்கடமான ச‌ம்ப‌வ‌ங்க‌ளும், வேதனை தரும் நிக‌ழ்வுக‌ளும் ந‌ம்மூரில் ஆங்காங்கே அவ்வ‌ப்பொழுது ந‌ட‌க்காம‌ல் இல்லை.

பெத்த வாப்பா உம்மாவை உதாசீன‌ப்ப‌டுத்தும், கேவ‌ல‌ப்ப‌டுத்தும், துன்புறுத்தும் பிள்ளைக‌ளை த‌ண்டிக்க‌ ந‌ம் நாட்டில் எப்ப‌டி தேசிய ப‌ய‌ங்க‌ர‌வாத தடுப்புச்சட்ட‌ங்க‌ளும், குண்ட‌ர் சட்ட‌ங்க‌ளும் க‌டுமையாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து போல் இவ‌ர்க‌ளையும் த‌யவுதாட்ச்ச‌ண்ய‌ம், ஈவு இர‌க்க‌மின்றி த‌ண்டிக்க‌ ச‌ட்ட‌ங்க‌ள் க‌டுமையாக்க‌ப்பட‌ வேண்டும். இவ‌ர்க‌ளுக்காக‌ பெத்த‌ வாப்பா, உம்மாமார்க‌ள் வாழ்வில் இழ‌ந்த‌ சொத்து சுக‌ங்களை பிள்ளைகளிடமிருந்து பிடுங்கி பெத்த‌வ‌ர்க‌ளிட‌ம் ச‌ட்ட‌த்தின் இரும்புக்க‌ர‌ம் கொண்டு ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இதெல்லாம் இங்கு சாத்திய‌ப்ப‌டுமா? ஆம் நிச்ச‌ய‌ம் சாத்திய‌ப்ப‌டும் நடுநிலையாளன் இறைவ‌னின் நீதி ம‌ன்ற‌த்தின் முன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

MSM நெய்னா முஹம்மது, உண்மையில் தங்களின் பதிவு மற்றும் பின்னூட்டத்தை படித்தவுடன் கண்ணீர் வந்துவிட்டது.

தயவு செய்து நேரம் ஒதுக்கி கீழே தந்துள்ள சுட்டியை தட்டி தாய் பற்றிய பயானை கேளுங்களேன், மற்றவர்களுக்கு பகிருங்கள்..

http://thowheedtv.blogspot.in/2012/03/blog-post_351.html .

கண்ணீர் வராதவர்களுக்கு கண்ணீர் வரும்.

Anonymous said...

தாய்க்கு ஈடாக வேறு எதுவும் கிடையாது தாய்வுடைய பாசங்களை தெரியாமல் அங்கும்,இங்கும் அலைமோதி வருகின்றன. தாய் உயிருடன் இருக்கும் போது அந்த தாயை கவனிப்பதில்லை. தன் தாயை விட்டு விட்டு வெளி ஊறுகளுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்று விடுகின்றன. அங்கு போய் தாயை பற்றியும் தந்தையை பற்றியும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றன். தாயோ,தந்தையோ இரந்து போனால் அலறி அடித்து ஓடுகின்றன. அவர்கள் எங்கு இருந்தாலும் சரி சென்னையில் இருந்தாலும் சரி,அல்லது வெளி நாட்டில் இருந்தாலும் சரி. தாய் உயிருடன் இருக்கும்போது கண்டு கொள்வதில்லை சொத்து பத்து எல்லாம் வேற யாருக்காவது போய்விடுமோ என்று அச்சம் ஏற்படுகிறது.

பெற்ற தாய்,தந்தை இடமிருந்து எப்படி எப்படி எல்லாம் சொத்து பத்துக்களை பிடுங்க முடியிமோ அப்படி எல்லாம் பிடிங்கி விடுகின்றன. ஆனால் பெற்ற தாயை அனாதையாகவும்,கேவலமாகவும் பேசுகின்றன. தாய் தன்னுடைய பெற்ற பிள்ளைகளை பல விதமாக பார்க்கின்றனர் எல்லா பிள்ளைகளையும் ஒரு கண்ணாக பார்ப்தில்லை. இந்த மாதிரி எல்லாம் பிள்ளைகளை பார்ப்பதினால் தான் தன்னுடைய தாயை கூட ஒரு சில பேர் வெறுக்கின்றனர். ஒரு தாய்க்கு மூன்று அல்லது நான்கு மகள்கள் இருந்தால் எல்லோரையும் ஒரு விதமாக பார்க்க வேண்டும். தனக்கு பிடித்த மகள்களுக்கு மட்டும் வேண்டியதே கொடுக்கின்றனர் மற்ற பிள்ளைகளை எப்படியும் போய் தொழ என்று ஒதறி தள்ளுகின்றன. அல்லாஹ் குர் ஆனிலும், ஹதீஸ்களிலும் தெள்ளதெளிவாக சொல்லி விட்டான் தன்னுடைய பிள்ளைகளை ஒரே விதாமாக பார்க்கவேண்டும் என்று. இந்த செய்தியை படித்தாவது பிள்ளைகள் திருந்தட்டும். இந்த நேரத்தில் நெய்னா சரியான தகவலை தந்துள்ளார்.

عبد الرحيم بن جميل said...

சகோதரர் மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார்,மிக்க நன்றி!

பின்னூட்டம் தருவது யாராயினும் அனைவருக்கும் புரியும் மொழியில் தருவதுதான் சிறந்தது!!!

KALAM SHAICK ABDUL KADER said...

ஆயிரம் கவிஞர்கள் சொன்னாலும் தாயின் பாசத்தை இவ்வளவு அழகாக- ஆழமாகச் சொல்லி விட முடியாது, அன்பின் சகோ. நெய்நா அவர்களே! கதையா? நடந்த உண்மையா என்று உறுதியாகத் தீர்மானிக்க முடியாத அளவுக்கு உங்களின் இந்த ஆக்கத்தில் ஓர் உத்தியைக் கையாண்டிருக்கின்றீர்கள். ஆம். அதிரையின் வழக்குச் சொல்லோடு ஒட்டிய வசனங்கள் படிக்கப் படிக்க இவ்வாக்கம் கதையாக இருக்க முடியாது, உணமையில் நடந்த விடயத்தை அப்படியே நடைமுறை வழக்கில் கொண்டு வந்து எங்களின் கண்களைக் குளமாக்கி விட்டீர்கள். உங்களால் மட்டுமே இது சாத்தியம்; புகழ்ச்சியல்ல; சத்தியம்.

Shameed said...

பாசப்பினைபுடன் அழகிய கட்டுரை

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...



இதை நன்கு படித்து கருத்திட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், து'ஆவும் சென்றடையட்டுமாக....

ஃபேஸ் புக்கில் வெறும் நாலு வரியில் வந்த அந்த உள்ளத்தை உருக்கும் உரையாடலை நான் நம்மூர் பாணியில் கொஞ்சம் விரிவாக இங்கு தந்துள்ளேன். இந்த சம்பவம் எங்கோ ஒரு ஊரில் நடந்திருக்கலாம். ஆனால் இதையும் தாண்டி நம் உள்ளத்தை துளையிட்டு அங்கு குடிகொள்ளும் தாய்ப்பாசத்தைப்பொழியும் தாய்மார்கள் நம் ஊரில் இல்லாமல் இல்லை.

உம்மா திட்டுது, உம்மா சைதியெ ஒளிக்கிது, உம்மா அவ்வொலுக்கு மட்டும் ஏந்துக்கிட்டு பேசுது, உம்மா மூத்தவனை மட்டும் நல்லா கவனிக்கிது, உம்மா என்னை ஏனோதானோ என்று உட்ருச்சி, உம்மா என் புள்ளையல்வொல்டெ ஒஹப்பா ஈக்கிறது இல்லை என்று ஏதோ சின்ன‌சின்ன அற்ப‌க்கார‌ண‌ங்க‌ளை வைத்துக்கொண்டு உம்மாவிட‌ம் வ‌ருட‌க்க‌ண‌க்கில் பேசாம‌ல், திரும்பி பார்க்காம‌ல், க‌வ‌னிக்காம‌ல் இப்ப‌டி பொடுபோக்காக‌ யாரும் இருந்து வ‌ருவ‌து ந‌ம‌க்கு இன்றும் என்றும் ந‌ல்ல‌த‌ல்ல‌.

KALAM SHAICK ABDUL KADER said...

முகநூலில் என் நண்பர் Roohul Razmi-இலனகையிலிருந்து எழுதிய கவிதை:


கொஞ்சம் விஞ்சி உண்டேன்
என்னுணவைக்கூட என்னால்
சுமந்து செல்ல முடியல….
நான்குமணி நேரம் என்னுணவை
இரைப்பையே சுமக்காத போது
நாற்பது வாரங்கள் எனையுன்
கருப்பை எப்படி சுமந்ததோ?

ஒருவேளை உணவுகூட
உன் உடம்பில் ஒட்டல
வாந்தியாய் வெளித்தள்ளவே
அட்டையாய் ஒட்டிநின்றேன்

பகல் கனவாய் உன்
உறக்கம் இருக்க
இராப்பகலாய் நான்
உறங்கிக் கழித்தேன்.

உன் உயிர் குடித்தாவது
நான் பிறக்கத் துடிப்பதை
என்பிள்ளை உதைக்கிறான் என்று
என் அப்பனுக்கு நீகாட்டி
மடத்தனமாய் மகிழ்ந்திருந்தாய்!
கருச்சிறையில் விடுதலைபெற
உன்னையல்லவா நான்
பணயக் கைதியாக்கினேன்!

வேதனையின்போது காலிரண்டும்
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
விலக்களித்து நீ மட்டும் எனைப்
புறந்தள்ளும் வேதனையிலும்
விலக்கிவைத்தாய் காலிரண்டை
ஒரு நொடி உனக்குப் போதும்
சப்பையாக்கி எனைக் கொல்ல
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?


பார்க்க முடியாத குருடனாய்
கேட்க முடியாத செவிடனாய்
பேச முடியாத ஊமையாய்
நடக்க முடியாத முடவனாய்
மொத்த ஊணத்தின் குத்தகைக்
காரனாய் எனை நீ கண்டபோதும்
வாரியணைத்து முத்தமிட்டு
மாரிழந்து பாலூட்டி மகிழ
எப்படி உன்னால் முடிந்தது?
என்னிலையில் நீ இருந்திருந்தால்
எட்டியுதைக்கத் தோனாதா?
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?


மூத்திரத்தை முகத்தில் கழித்தால்
ஆத்திரம் வருவது அறிவு
என் மூத்திரத்தை மட்டும்
நேத்திரம் மூடி நீ ரசித்திருந்தாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

என்னை மிஞ்ச இன்னொருவன்
இருக்கலாமா என நினைப்பது
ஈனப்பிறவிக்கும் தன்மனதில்
இயல்பாய் உள்ள உள்ளுணர்வு
என்னை மிஞ்சி என்மகன்
படிப்பாளியாய் இருக்கனும்
என்னை விட பலபடிமேல்
என்மகன் சிறக்கனும்
என்றல்லவா எனக்கு நீ
பாலூட்டும்போது பாடினாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?

உன்னைவிட ஒருபடிமேல்
வீரனாகக் கற்றுத் தந்தாய்
செல்வம்கூட பெற்றுத் தந்தாய்
சுகாதாரம் சொல்லித் தந்தாய்
வாழ்வாதாரம் அள்ளித் தந்தாய்
இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீகாட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்

Unknown said...

ஒப்பில்லா பாசம் - அதுதான் தாயின் நேசம்
பாருக்குள்ள பலவகை உறவுகள்
பந்தயம் ஆகும் சிலவகை உறவுகள்
பெற்ற தாயை தேடும் பசிவுள்ள வயிறு
திட்டினாலும் தாயிதான் ஒப்பற்ற உசிரு
நேரமும் உண்டு நெருக்கும் தாளமும் உண்டு
வீடும் உண்டு வசிப்பாரும் உண்டு
காணவில்லை மகனே
தேடுவாள் தேம்பி திரியுவாள்
பசிவயிறும் கானது,,, பிள்ளையை கண்டதும் பிணியோது?
உறவுகளுக்குள் ஒளித்திருக்கும்
உள்ளத்தில் நிறைத்திருக்கும்
தாயின் பாசம் அது
மாசில்லா நேசம்
,,,,,,,,,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

அதிரை சித்திக் said...

உலகில் உறவின் துவக்கம் தாய்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு