வழிதவறிய மக்களைக் கண்டால் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) விவாதம் செய்வார். அதில் அவருக்கு அசாத்திய திறமை இருந்தது. எந்த ஒரு விவாதத்திலும் அவர் தோற்றதில்லை. அவரது அறிவுக்கூர்மை அத்தகையது. ஆய்வு செய்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு
வந்துவிட்டால், அந்தக் கருத்தை அவர் வாதிடும்போது ஆதாரப்பூர்வமாக எடுத்து வைப்பார்.
இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், இறைவனுக்காகவும் இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்ய உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவும்தான் அவர் விவாதத்தில் ஈடுபட்டாரே தவிர, பிறரை மட்டம் தட்டுவதற்காகவோ, இழிவு படுத்துவதற்காகவோ அவர் இறங்கியதே இல்லை. அவரது வாதங்களில் இறையச்சமே அடிநாதமாய் இருந்தது. எதிர்தரப்பினரை ஆபாசமாகவோ, அவதூறாகவோ, கண்ணியக்குறைவாகவோ அவர் விமர்சித்ததில்லை. அவர் மட்டுமன்று, பொதுவாகவே, மெய்ஞானம் பெற்ற அறிஞர்கள் தங்களது நாவைப் பேணுவதில் பெரும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
ஏறத்தாழ இருபத்திரண்டு பிரிவினரிடம் இஸ்லாத்தின் சார்பாக அவர் விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்காகவே கூஃபாவிலிருந்து பஸ்ராவிற்குச் சென்று, அந்தப் பிரிவினர்களின் தலைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருமுறை தாஹிரிய்யாக்கள் எனப்படும் நாத்திகர்களிடமும் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கின்றது. இந்தப் பிரபஞ்சம் தற்செயலாக உருவானது என்பதுதானே நாத்திகத்தின் அடிப்படை. இது எந்த அளவுக்குத் தவறான கருத்து என்பதை எளிய தர்க்க வாதத்துடன் முன்வைத்தார் அபூஹனீஃபா.
“சரக்கு நிறைந்த கப்பலொன்றை நான் பார்த்தேன் என்கிறான் ஒருவன். கடலின் பெரும் அலைகள், திசை திருப்பும் காற்று ஆகியவற்றைத் துளைத்துக்கொண்டு அது தானே சுயமாய் நேராகச் சென்றது என்கிறான். அக்கப்பலில் கப்பலோட்டி யாருமே இல்லை என்று கூறுகிறான். இது சாத்தியமா?” என அந்த நாத்திகர்களிடம் கேட்டார்.
“ஹஹ்! அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. தர்க்கரீதியாக அவ்விதம் நடக்க வாய்ப்பில்லை,” என பதில் வந்தது.
“அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். கப்பலோட்டியோ, மாலுமியோ இன்றி கப்பலொன்றை அப்படி, இப்படி அசையாமல் கட்டுப்படுத்துவதே கற்பனைக்கு அப்பாற்பட்டது எனும்போது பலதரப்பட்ட கால நிலைகள், சூழ்நிலைகள், மாறுதலுக்கு உள்ளாகும் பொருள்கள், செயல்கள், பரந்து விரிந்த இந்த அண்டம் ஆகியனவற்றைப் படைத்து, பரிபாலிக்கும் ஒருவன் இல்லை என்பது மட்டும் எப்படி?” என்ற எளிய தர்க்கத்தை அவர்கள் முன் வைத்தார்.
அவருக்கு அபாரமான நுண்ணறிவு அமைந்திருந்தது. ஏதொன்றையும் ஆராயும்போது அவரது எண்ணங்கள் தடைபட்டதில்லை. தம்மிடம் உண்மையும் அதற்கான ஆதாரமும் இருக்கும்போது என்ன அச்சம்? அவருக்கு வார்த்தைகள் தடுமாறியதே இல்லை. பல சந்தர்ப்பங்களில் தம்முடன் வாதிடுபவரை வாயடைக்கச் செய்திருக்கிறார்.
கப்பலோட்டியோ, மாலுமியோ இன்றி கப்பலொன்றை அப்படி, இப்படி அசையாமல் கட்டுப்படுத்துவதே கற்பனைக்கு அப்பாற்பட்டது எனும்போது ...
ஒருவர் தம்முடைய உயிலில், இதை நிறைவேற்றும் பொறுப்பை நான் இமாம் அபூஹனீஃபாவுக்கு அளிக்கிறேன் என்று எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். அந்த உயில் எழுதப்படும்போது நேரடி சாட்சியாக அபூஹனீஃபா அவருடன் இல்லை. பிறகுதான் அவருக்கே அவ்விஷயம் தெரிய வருகிறது. சரி, நம் பொறுப்பை நிறைவேற்றுவோம் என்று உயிலை நிறைவேற்றும் பணியை அபூஹனீஃபா தொடங்கினால், ‘நீ யார், சம்பந்தமில்லாமல் பாகப் பிரிவினை செய்வதற்கு?’ என்று இறந்தவரின் பங்காளி, பகையாளி என யார் யாரோ தொந்தரவு செய்யத் தொடங்கினர். இதனால் வழக்கு இப்னு ஷிப்ரிமாஹ் எனும் நீதிபதியிடம் சென்றது. தம்முடைய சார்பாக அபூஹனீஃபா ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்.
“இறந்தவர் உங்களுக்குத்தான் பொறுப்பு அளித்தார் எனத் தாங்கள் இறைவன்மீது ஆணையிடுவீர்களா?” என்று கேட்டார் நீதிபதி.
“அச்சமயம் நான் அங்கில்லை; அதைக் கண்ணுறவில்லை. ஆகவே இஸ்லாமியச் சட்டப்படி நான் ஆணையிடத் தேவையில்லை” என்று பதில் அளித்தார் அபூஹனீஃபா.
“எனில் தாங்கள் வழக்கை இழக்க வேண்டியிருக்கும்” என்றார் நீதிபதி
“பார்வையற்ற ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு, தலையில் காயமடைந்து, அதற்காக அவர் வழக்குத் தொடுக்கிறார். இரண்டு சாட்சிகள் அவருக்காகப் பிரமாண வாக்குமூலம் அளித்துச் சான்று பகர்கிறார்கள். தம் சாட்சிகள் உண்மையைத்தான் உரைத்தார்கள் என்று அவர் தம் கண்ணால் காணாத நிகழ்விற்காக ஆணையிடுவது அவசியமா?” என்று கேட்டார் அபூஹனீஃபா.
அபூஹனீஃபாவின் வாதத்தை ஏற்றுக்கொண்டார் நீதிபதி. அபூஹனீஃபாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மக்களின் இயல்பை நன்கு அறிந்திருந்தார் அவர். அதனால் அவர்களுக்கு ஏற்ப, புரியும் வகையில் பேசி, உண்மையை ஏற்கச் செய்யும் சாதுர்யம் அவரிடம் இருந்தது.
கூஃபா நகரின் பள்ளிவாசலில் அபூஹனீஃபா அமர்ந்திருக்கும்போது, அங்கு அத்-தஹ்ஹக் என்பவன் வந்தான். பொத்தாம் பொதுவாய் “பாவ மன்னிப்புக் கேளும்” என்றான். அத்-தஹ்ஹக் இப்னு ஃகைஸ் கவாரிஜ் கூட்டத்தைச் சார்ந்தவன். குழப்பவாதிகளான கவாரிஜ்களின் முக்கியமான கோட்பாடு, ஒரு விஷயத்தில் தீர்ப்பும் தீர்மானமும் அளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உண்டானது; நடுவராகச் செயல்படும் அதிகாரமெல்லாம் எந்த மனிதருக்கும் கிடையாது என்பதாகும்.
பெரும் பிழையான அந்த அவர்களது எண்ணத்தை, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) முறையான இறைவசனங்களின் அடிப்படையில் அவர்களுடன் உரையாடி தம்முடைய காலத்திலேயே உடைத்தெறிந்தும்கூட, வழிகெட்டுத்தான் கிடப்போம் என அந்த கவாரிஜ் கூட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.
“எதற்கு?” என்று கேட்டார் இமாம் அபூஹனீஃபா.
“நடுவர்கள் தீர்ப்பு வழங்கலாம் என்று நீங்கள் அனுமதியளிக்கிறீர்கள். அது பாவம். மன்னிப்புக் கேளுங்கள்.”
“நீ என்னைக் கொல்லப் போகிறாயா அல்லது என்னுடன் வாதம் புரியப் போகிறாயா?”
“கொல்ல மாட்டேன். நான் உங்களுடன் வாதம் புரிவேன்.”
“வாதத்தின் முடிவில் நமக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுமானால் நம் இருவரில் யார் சரி என்று தீர்ப்பளிப்பது யார்?” என்று கேட்டார் அபூஹனீஃபா.
“நீங்கள் யாரைச் சொல்கிறீர்களோ அவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.“
அத்-தஹ்ஹக்கின் கூட்டாளிகளுள் ஒருவனிடம், “இங்கு அமரவும். எங்களுக்குள் ஒத்த கருத்து ஏற்படவில்லையெனில் நீ தீர்ப்புச் சொல்” என்று கூறிவிட்டு, அத்-தஹ்ஹக்கிடம், “இவர் நமக்குத் தீர்ப்புச் சொல்வதில் உமக்கு உடன்பாடு தானே?” என்று கேட்டார் இமாம் அபூஹனீஃபா.
“ஆம்.”
“எனில் நீயே இப்பொழுது நடுவரின் தீர்ப்புக்கு ஒப்புக்கொண்டாய். உன் விதண்டாவாதத்தை விட்டுவிடு” என்று அப்படியே அவனது வாயை அடைத்து அனுப்பிவைத்தார்.
கூஃபா நகரில் ஒருவர், உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் ஓர் யூதர் என்று அவதூறு சுமத்தி வந்தார். இது தவறான கருத்து என அன்பாகச் சொல்லிப் பார்த்தார்கள்; அதட்டிச் சொல்லிப் பார்த்தார்கள். அவர் எதற்கும் இணங்குவதாக இல்லை. தமது கருத்தே சரி என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தார்.
ஒருநாள் அவரது வீட்டிற்குச் சென்றார் இமாம் அபூஹனீஃபா. “உன்னுடைய மகளை மணமுடிக்க ஒரு வரன் வந்துள்ளார். மணமகன் செல்வந்தர். மேன்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். வள்ளல். குர்ஆனை மனனம் புரிந்தவர். அவருக்கு ஆழ்ந்த இறைபக்தி. இரவுகளின் பெரும் பகுதியை உபரித் தொழுகைகளில் கழிப்பவர்“ என்று மணமகனின் அருமை பெருமைகளைத் தெரிவித்தார் அபூஹனீஃபா.
இத்தகைய ஒருவருக்குத் தம் மகளை மணமுடிக்க யாருக்குக் கசக்கும்? ‘அற்புதமான வரன். இதைவிடக் குறைவான தகுதிகள் உடைய மணமகனுக்கே மக்கள் திருப்தியடைபவர்கள்’ என்று குதூகலித்தார் அந்த மனிதர்.
“ஆனால் ஒரே ஒரு பிரச்சினை.”
“என்ன அது?”
“அவர் ஓர் யூதர்!”
‘என்ன? யூதர் ஒருவருக்கு என் மகளை மணமுடிக்கச் சொல்கிறாயா?’ என்று அந்த மனிதருக்குக் கடும் கோபம் ஏற்பட்டது.
அக்கறை மிகுந்த பாவத்துடன், “எனில் அந்த வரனுக்கு உன் மகளை மணமுடிக்க விருப்பமில்லையா?“ எனக் கேட்டார் அபூஹனீஃபா.
அழுத்தந் திருத்தமாய், “ஒருக்காலும் இல்லை” என்றார் அவர்.
“ஆனால் உமது கருத்துப்படி நபியவர்கள் அப்படியொரு யூதருக்குத் தம் இரு மகள்களை மணமுடித்துத் தந்துள்ளார்களே” என்றதும் அந்த மனிதருக்குப் பொட்டில் அறைந்தது போல் இருந்தது.
“என்னை மன்னிக்கும்படி இறைவனை வேண்டுகிறேன். இனி அப்படிச் சொல்லவே மாட்டேன்.”
அவ்விஷயத்தை அவ்விதம் முடித்து வைத்தார் இமாம் அபூஹனீஃபா (ரஹ்).
(தொடரும்)
நூருத்தீன்
0 Responses So Far:
Post a Comment