Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரோமாபுரியின் ரோஜா மலர்! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 18

அவர் ஓடினார். தலை தெறிக்க ஓடினார். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடினார். வெஞ்சினமும் வீராவேசமுமாகத் தன்னைக்  குதிரைகளில் துரத்தி வருபவர்களிடம் சிக்கினால், உயிர் தம்முடையதில்லை என்பதை முற்றிலும் உணர்ந்தே, அவர் காற்றைக் கிழித்துப் பறந்தோடினார்!

இதற்கு மேல் ஓட முடியாது என்ற நிலையில் ஒரு மலைக் குன்றின் மீது சடாரெனப் பாய்ந்து ஏறி நின்றுகொண்டு தன்னைத் துரத்தி வந்த மக்கத்து மடையர்களைப் பார்த்துக் கத்தினார்.

“எவனாவது இதற்கு மேல் என்னை நெருங்கினால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் அம்புகளால் அவனைக் கொன்று போடுவேன். அதையும் மீறி வேறு யாரும் நெருங்கினால், இருக்கவே இருக்கிறது என் போர்வாள்!” என்று  உயர்த்திக் காட்டி நின்றார் உருக்கு மனமும் உடையாத உறுதியுமாய்!

அவரைத் துரத்தி வந்தவர்கள், ஓரிறையை மறுத்து வந்தவர்கள்  அங்கே மலைத்து நின்றார்கள்!

ஒருவன் கூவினான். "எங்கள் ஊரில் நீ திரட்டிய பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு, யத்ரிபுக்கு நீ ஓடிவிட நாங்கள் அனுமதிக்க முடியாது"

"ப்பூ! இவ்வளவுதானா? நான் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் தந்துவிட்டால்,  தடையில்லைதானே?"

"தடையில்லை!"

"அப்படியானால், இன்னின்ன இடத்தில், இவ்வளவு இவ்வளவு வைத்திருக்கிறேன். அத்தனையும் எடுத்துக் கொள்ளுங்கள். என்னை என் வழியில் விட்டு விடுங்கள்." உடன்படிக்கை உடனே முடிந்தது!

ரோமாபுரியிலிருந்து மக்கா வந்து சேர்ந்ததிலிருந்து அயராது உழைத்துத் திரட்டிய அத்தனைச்  செல்வங்களையும் ஒரு நொடியில் உதறித் தள்ளிவிட்டு, அல்லாஹ்வின் பாதையில் மதீனாவை நோக்கி நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் வீறு நடை போட்டவரைப் பற்றி, அங்கே மதீனாவில் அல்லாஹ்வின் தூதருக்கு அழகிய வேத வசனம்  அருளப்பட்டுக் கொண்டிருந்தது!


அவர்தான் பாரசீகத்தில் ராஜகுமாரனாகப் பிறந்து, ரோமாபுரியில் அடிமையாக வளர்ந்து, மக்காவில் மிகப்பெரும் வணிகராகி, தற்போது தம் செல்வத்தையெல்லாம் அல்லாஹ்வுக்காகத்  துச்சமெனத் தூக்கி எறிந்து விட்டு, மதீனா முனவ்வராவை நோக்கி வீசிய கையும் வெறுங் கையுமாக, ஆனால், இதயமெல்லாம் இறைநேசத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி).

"அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி, தம்மையே விற்று விடுவோரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ் (அத்தகைய) அடியார்களிடம் மிகப் பெரும் கருணை கொண்டவன்!"(1)

இதுதான் எல்லைகளை எல்லாம் கடந்த பாக்கியம்!
தன்னுயிர் பிரியும் 'சகராத்' உடைய பெரும் வேதனையிலிருந்து விலக்கப்படுவதை விட, மண்ணறையின் கடுமையான நெருக்குதலிலிருந்து காக்கப்படுவதை விட, எரிதழல் நரகின் கொடிய தண்டனையில் இருந்து விடுதலை பெறுவதை விட, சுகந்தரும் சொர்ண பூமியாம் சுவர்க்கத்தின் சோலைகளில் மாளிகைகள் கிடைப்பதை விட,

ஆங்கே, கற்பனைக் கெட்டாத அத்தனை இன்பங்களையும் அனுபவித்து மகிழ்வதை விட,

மேலும் இவை அல்லாத எல்லாவற்றையும் விட,  தன்னை அணுவணுவாகப் படைத்தவனின் தன் நேசர்கள் மீது கொண்ட "திருப்தி" எனும் திருப் பொருத்தம் அருளப்படுவதே பாக்கியங்களில் எல்லாம் மிகப்பெரும் பாக்கியமாகும்!

அதுதான் அல்லாஹ்வின் 'ரிள்வான்!' அதுதான் பேறுகளில் எல்லாம் மிகப்பெரும் பேறாகும்!

அந்தப் பெறுதற்கரிய பெரும் பாக்கியத்தை, தம் தோழர்களுக்குப் பெற்றுத் தந்தவர் யார்?

எவர் வரவால் இந்த உலகம் எல்லாம் சிறந்ததோ,

எவர் வரவால் அந்த உள்ளம் எல்லாம் மகிழ்ந்ததோ, அவர்தாம்!

அவருக்கு எழுதவும் தெரியாது! படிக்கவும் தெரியாது!

எனினும், சூழலைச்  சுவர்க்கமாக்க, ஏற்றமிகு நபி எழுந்து வந்தார்!

அவர் நின்று பேசினார். எல்லா இலக்கியங்களையும் அது விஞ்சி நின்றது!

அவருக்கு அருளப்பட்டதை ஓதிக் காட்டினார். அதுபோன்ற ஒரு வரியை

எவராலும் இதுவரை எழுத முடியவில்லை!

அவர் பேசிய மொழியெல்லாம் வழியாகவும்

அவர் காட்டிய வழியெல்லாம் வாழ்வாகவும் ஆகிப்போனது!

மொத்தத்தில்,

எவ்வழி எல்லாம் நல்வழியோ இவ்வுலகில்,

அவ்வழி எல்லாம் நபிவழியாய் நிலைத்து நின்றது!

இனிய தோழர்கள் கடந்து சென்ற பாதையெல்லாம் இறைவழியாய் எழுந்து நின்றது!

அதன் பெயர்  அறவழி! அதுதான் அல்லாஹ்வின் வழி!

அண்ணலாரின் பயிற்சிப் பாசறை ஒரு சாதாரணமான பள்ளிக்கூடமல்ல; அது ஒரு பல்கலைக்கழகம் என்று பார்த்தோம். அந்த இறையருள் மிகுந்த இனிய தூதரின் தூதுத்துவப் பயிற்சிக்கூடம், சாதாரணப்  பல்கலைக் கழகமல்ல!

கண்ணியத்தூதர் போதிப்பதற்காக கம்பீரமாக நின்ற அது ஒரு "பன்னாட்டுப் பல்கலைக் கழகம்!"

அங்கே, அபூபக்ரு, உமர், உதுமான், அலீய், தல்ஹா, ஜுபைர் போன்ற மக்காவின் மைந்தர்களும்

அபூதர், அனஸ் ஆகிய கிஃபாரி கோத்திரத்தாரும்

அபூஹுரைரா, அபூதுஃபைல் போன்ற அவ்ஸ் குலத்தவரும்

அபூமூஸா அஷ்அரீ, முஆத் பின் ஜபல் போன்ற யமன் நாட்டினரும்

தம்மாத் இப்னு தஃலபா போன்ற அஸ்துக் குலத்தவரும்

கப்பாப் இப்னு அல்அரத் போன்ற பனூ தமீம் கோத்திரத்தாரும்

முன்கித் பின் ஹப்பான், முன்திர் இப்னு ஆயித் போன்ற பஹ்ரைன் தேசத்தவரும்

உபைத் மற்றும் ஜஃபர் போன்ற ஓமன் நாட்டவரும்

ஸல்மான் அல்ஃபார்ஸி போன்ற பாரசீக தேசத்தவரும்

பிலால் பின் ரபாஹ் போன்ற அபிசீனிய நாட்டினரும்

ஃபைரூஜ் போன்ற தைலமா பகுதியினரும்

சன்ஜித் போன்ற ஈரானியரும்

ஃபர்வா இப்னு அம்ர் போன்ற சிரியா தேசத்தவரும்

மேலும், சுஹைப் பின் ஸினான் என்ற  ரோம் தேசத்தவரும்

இப்படிப் பலதரப்பட்ட குலத்தவரும் பலதரப்பட்ட இனத்தவரும் பலதரப்பட்ட நாட்டினரும் அல்லாஹ்வின் தூதரின் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்து பயிற்சி பெற்றார்கள். பாடம் கற்றார்கள்! இவர்களே, மார்க்கத்தை எத்திவைக்கும் மகிமையாளர்களாக, அநீதிகளை எதிர்த்துப் போராடும் அறப்போர் வீரர்களாக, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் அறிஞர் பெருமக்களாக, சென்றவிடமெல்லாம் வாகை சூடும் வெற்றிப் படைத் தளபதிகளாக, அமைதிப் பணிபுரியும் அருங்குணம் கொண்டவர்களாக உருவெடுத்தார்கள். தங்கள் செயலின் அழகால் சிறந்து  மிளிர்ந்தார்கள்!

இப்படி அறிவும் ஆற்றலும் அமைந்தவர்கள் மட்டுமல்ல! உண்மையும் விசுவாசமும் உடையவர்கள் மட்டுமல்ல! ஏற்றுகொண்ட கொள்கைக்காக தங்கள் இன்னுயிரையும் தயங்காது எடுத்து வீசிய தியாக சீலர்கள் அவர்கள்! இந்த உத்தம சீலர்களின் உன்னத வரிசையில் ஒருவர்தாம் நம் சுஹைப் பின் ஸினான் அர்-ரூமி (ரலி) அவர்கள்.

சுஹைப் பின் ஸினான் (ரலி) மெசபடோமியாவில் பிறந்தவர். பாரசீகப் பேரரசின் ஆளுநரான ஸினானின் செல்லப் பிள்ளை!

தந்தை ஸினான் 'நுமைர்' எனும் அரபுக் கோத்திரத்தைச் சேர்ந்தவர். சுஹைப் (ரலி) அரபித் தந்தைக்கு பாரசீகத்தில் பிறந்த ராஜகுமாரன்!

எனினும், ரோமர்களின் ஒரு படையெடுப்பில் கைது செய்யப்பட்டு விதிவசத்தால்  ரோமாபுரியில் அடிமையாக வளர்ந்தவர்!

கிரேக்க மொழி பேசியதாலும் சிவந்த தலைமுடியும் வெளிர் நிறமும் அந்நியமான அரபி உச்சரிப்பும் அசல் வெள்ளைக்காரராகவே, மக்காவின் மக்களுக்கு அவரை அடையாளம் காட்டியதால் "சுஹைப் அர்-ரூமி (ரோமாபுரிக்காரன்)" என்றே அந்த மக்களால் அவர் அழைக்கப்பட்டார்!

கிரேக்கர்களிலேயே முதன்முதலாக, இஸ்லாத்தை வாழ்வு நெறியாக வலிந்து ஏற்றுக் கொண்டதால், 'கிரேக்க நாட்டின் முதற்கனி' என்று இவரை வர்ணித்தார்கள் எல்லோரும் போற்றுகின்ற இனிய நபியவர்கள்!

ஒரு வழியாகக் கொடுமையாளர்களிடமிருந்து தப்பித்து வந்து, புனித மதீனா நகருக்கு வெளியே குபா பள்ளியில் தங்கி இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஆரத்தழுவி, அவர் பேச வாய் திறக்குமுன் பெருமானார் (ஸல்) அவர்கள், 'நீர் நல்ல வெகுமதியான வாணிபம் செய்து வந்துள்ளீர் அபுயஹ்யாவே' என்று மூன்றுமுறை அழுத்தமாகச் சொல்லி பிறகு, அவர் குறித்து அருளப்பட்ட அல்லாஹ்வின் பாக்கியமிகு வசனங்களை அவருக்கு ஓதிக் காட்டினார்கள். அவர் பொருட்டு அருள்மறையில் ஒரு வசனமே அருளப்பட்டது குறித்து அவர் மெய்சிலிர்த்து நின்றார்! அல்லாஹ்வுக்கு இனிது நன்றி கூறினார்!

தன்னந்தனியாகப் பாலைவெளியை நடந்தே கடந்து வந்ததில் மிகவும் களைத்துப் போயிருந்தார் சுஹைப் பின் ஸினான் (ரலி). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைப் பின் ஸினான் (ரலி) யை உணவுண்டு ஓய்வெடுக்கச் சொன்னதால், அவர் ரொட்டியும் பேரீத்தையும் வைத்து உணவுண்ணத் தொடங்கினார்.

வாழ்வின் சோதனைகள் கவலை எனும் இருளை அள்ளி வீசும்போது நமக்கு ‘நகைச்சுவை’தானே சற்றே ஒளியேற்றி வைக்கிறது!

அதுவும், முத்திரைத் தூதர் முஹம்மது நபிக்கு முகத்தில் புன்னகையும் அகத்தில் நகைச்சுவை உணர்வும் மெல்லிய கீற்றாக எப்போதுமல்லவா இலங்கிக் கொண்டே இருக்கும்!

நண்பரைக் கண்ட மகிழ்ச்சியில் அவரிடம் நகைச்சுவையாக உரையாடத் தொடங்கினார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். சுஹைப் பின் ஸினான் (ரலி) யின் ஒரு கண் வெப்பத்தால் வீங்கி இருப்பதைக் கண்ட பெருமானார் (ஸல்), அவரிடம் சிரித்துக்கொண்டே "கண் வீங்கியிருக்கிறதே! எப்படி நீ சாப்பிடுகின்றாய் சுஹைப்?" என்றார்கள் வேடிக்கையாக!

நகைமுகம் கொண்ட நாயகம் அவர்கள், தன்னிடம் வேடிக்கையாகப் பேசுகிறார்கள் என்பதை விளங்கிக் கொண்ட சுஹைப் பின் ஸினான் (ரலி)யும் "அதனால் என்ன! நன்றாக இருக்கும் மற்றொரு கண்ணின் உதவி கொண்டு, நான் வாயால்தானே உண்ணுகிறேன் அல்லாஹ்வின் தூதரே!" என்றார் அவரும் வேடிக்கையாக!

சுஹைபின் இந்த சாமர்த்தியமான பதில் கேட்டு மனமகிழ்ந்து சிரித்தார்கள் சிரிப்பழகர் நம் செம்மல் நபி நாயகம் அவர்கள். (2)

அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து, மஸ்ஜித் தக்வா (இறை அச்சத்தால் உருவாக்கப்பட்ட பள்ளி) என்று குர்ஆன் கூறும் குபா பள்ளியை நிர்மாணிப்பதில் அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து சுஹைப் (ரலி) யும் பெரும் பங்கு எடுத்துகொண்டார்.(3)

அரபிகளில் முதல் முஸ்லிம் நான்!

அபிசீனியர்களில் முதல் முஸ்லிம் பிலால் பின் ரபாஹ்!

பாரசீகர்களில் முதல் முஸ்லிம் ஸல்மான் அல்ஃபார்ஸி!

ரோமர்களில் முதல் முஸ்லிம் சுஹைப் பின் ஸினான்! என்று அருளினார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

சுஹைப் பின் ஸினான் (ரலி) அவர்கள், வள்ளலாகி தமது செல்வமெல்லாம் வறியோர்க்கு வாரித் தருகிறார் என உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிந்து, சுஹைப் (ரலி) உடைய தாராளத் தன்மையை மிகவும் பாராட்டுபவராக இருந்தார்கள்.

அதுமட்டுமின்றி, இறக்கும் தருவாயில், அடுத்த கலீஃபா தேர்ந்தெடுக்கப்படும்வரை மஸ்ஜித் நபவீயின் இமாமாக சுஹைப் பின் ஸினான் (ரலி) தான் பணியாற்ற வேண்டும் என்றும் தம்  ஜனாஸா தொழுகையையும் சுஹைப் பின் ஸினான் (ரலி) தான் முன்னின்று தொழவைக்க வேண்டும் என்றும் தம்  இறுதி நேரமதில் உறுதியுடன் நியமித்தார்கள்!
எத்தகைய  உன்னதமான உயர்ந்த தகுதி அது!

மரணம் தன் கொடுமையை இழந்து, மகிமை மிகும் நபித் தோழர்களின் மறுமை வெற்றிக்கான மகத்தான பாதையாக அதனை மாற்றிக் கொடுத்தது!

o o o 0 o o o
ஆதாரங்கள்:

  1. அல்குர்ஆன் 2:207
  2. இப்னு மாஜா 3569 : சுஹைப் பின் ஸினான்  அர்ரூமி
  3. அல்குர்ஆன் 09 :108
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

5 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//அவர் பேசிய மொழிஎல்லாம்வழியாகவும்அவர்காட்டியவழிஎல்லாம் வாழ்வாகவும்ஆகிப்போனது//ஆஹா!அற்ப்புதமானவரிகள்!தேனில்ஊறிய பலாப்போல்நாவில்இனித்தது.

Ibrahim said...

உண்மையை மறைக்க நினைக்கும் நபர்கள் பட்டியலில் அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு முதலிடமும் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளுக்கு இரண்டாமிடமும் கொடுக்க வேண்டும். உண்மையை உறக்க சொல்ல வேண்டிய நீங்கள் இதுகுறித்து பேசாமல் இருப்பது வெட்ககேடு....

அதிரைநிருபர் said...

சகோதரர் இப்ராஹிம் !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களின் கருத்து இந்தப் பதிவுக்கு எவ்வகையிலும் சார்புடையதல்ல, அதிரைநிருபர் தளத்தில் சமீபத்திய பதிவுகளில் இதே போன்ற கருத்தினை பதிந்து வருகிறீர்கள், தாங்களே நேரில் தொடர்புடையோரிடம் கண்டனத்தை பதிந்ததகவும் ஒரு பதிவில் கருத்திட்டிருந்தீர்கள்.

நீங்கள் குறிப்பிடும் சம்பந்தட்ட தளத்திடமிருந்து உண்மை நிலவரம் என்ன என்பது பொதுவில் பதில்வராத நிலையில் மற்ற தளங்களிடம் பதில் எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு வேலை சம்பந்தபட்ட தளம் நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டை ஏற்று அல்லாஹ்விடம் தவ்பா செய்து, நடந்தைவை தவறு, இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க இனி எச்சரிக்கையாக இருப்போம் என்று எண்ணி அமைதியாக இருக்கிறார்கள் என்று நல்லெண்ணம் வைக்கலாமே.

மார்க்கத்துக்கு விரோதமான தவறை சுட்டிக்காட்டுவதும், அதனை கண்டிப்பதும், தடுப்பதும் நம் கடமை, தவறுக்கான தன்டனையை கொடுப்பது அல்லாஹ்வுடைய வேலை என்பதை சிந்திக்க வேண்டும்.

உங்களால் இயன்றதை செய்துவிட்டீர்கள், மீண்டும் மீண்டும் ஒரே கருத்தை பதிவதால், நீங்கள் உள்நோக்கத்தோடு செயல்படுகிறீர்களோ என்ற சந்தேகம் எழ நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இங்கே ஒரே கருத்தை பதிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக.

Ibrahim said...

வ அலைக்கும் முஸ்ஸலாம்
நீங்கள் கூறும் சிலவற்றை நான் ஏற்கிறேன் ஆனால் அவர்கள் இன்றுவரையில் இது பற்றி வாய்திறக்காமல் சற்றும் குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கின்றனர் என்பதற்கு என்னுடைய கருத்துகளை நீக்கியதில் இருந்து தெரிகிறது

Ibrahim said...
This comment has been removed by a blog administrator.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு