Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உள்ளாட்சி தேர்தல் தரும் படிப்பினையும் பாடமும்..! 9

அதிரைநிருபர் | July 13, 2016 | , ,

இந்த பதிவு 01-11-20111 தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்ட பின்னர் பதிக்கப்பட பதிவு... இன்றைய சூழலுக்கும் பொருந்தக் கூடியதை பொருத்திப் பார்க்கலாம்....

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல்கள் முடிவடைந்து புதிய உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ள தருவாயில், என் சமுதாயம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் என்ன சாதித்துள்ளது…? அதுதான் இந்த கட்டுரையின் கேள்வி. கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிட்டது அதில் முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும் அடக்கம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் வெற்றிகண்ட மமக, திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு படுதோல்வியடைந்த முஸ்லிம்லீக், முதல் தேர்தல் என்றாலும் தனித்தே களமிறங்கிய எஸ்.டி.பி.ஐ. ஆகிய அனைத்து கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை இருக்கின்ற அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அனைத்துமே தாங்கள்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகள் என பிரகடனப் படுத்திகொண்டு சமுதாயத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறார்கள் என்பதற்கு இந்த நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சாட்சி.

மமக 600 இடங்களில் போட்டியிட்டு சுமார் 140 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. அந்த வெற்றியை அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளமும் பத்திரிக்கையும் தொடர்ந்து எழுதி வருகிறது. அதேபோல முஸ்லிம்களின் அரசியல் தாய்ச்சபை என வர்ணிக்கப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுமார் 390 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றுள்ளது. எஸ்.டி.பி.ஐ எனப்படும் சோசியல் டெமோக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கிருத்துவ இயக்கங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டியிட்டு சுமார் 62 இடங்களில் வென்றி பெற்றுள்ளது. மாநகர மேயர் தேர்தலில் சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ இன் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார்கள்.

இதுதவிர கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளராக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தலித் இயக்கங்களின் ஆதவுடன் போட்டியிட்ட சகோ.அமீர் அல்தாப் முப்பதாயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.

மேலே குறிப்பிடபட்டிருப்பவைகள் கடந்த உள்ளாட்சித்தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை சொல்லிகொள்ளும் இஸ்லாமிய கட்சிகள் வாங்கி இருக்கும் வாக்கு விகிதம். ஒவ்வொருவரும் தாங்கள் அளப்பரிய வெற்றி கண்டுள்ளதாக பெருமைபட்டு கொண்டிருக்கும் இந்த தருவாயில் இவைகள் எவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவு என்பதை நாம் கவனிக்கவேண்டும். அதேபோல பலம்பெரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி கோவை மாநகர மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளர் சகோ.அமீர் அல்தாப் அவர்களால் எப்படி மூன்றாம் இடத்தை பிடிக்க முடிந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கோவையை போல ஏன் மற்ற இடங்களில் நமது சமூக வேட்பாளர்களால் கவுரவமான வாக்குகள் வாங்க முடியவில்லை இந்த தோல்விகளுக்கு யார் காரணம்…? வேறு யாருமல்ல!. வேறு எந்த அரசியல் கட்சியும் அல்ல!. நாம்தான் இத்தகைய பின்னடைவிற்கு காரணம். பல இடங்களில் முஸ்லிம்களின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணமாக இருப்பதை ஆய்வு செய்வது அவசியம்.

உதாரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலை குறிபிடலாம். முத்துப்பேட்டை முஸ்லிம்கள் கணிசமாக வாழக்கூடிய பேரூர் முத்துப்பேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி இன்றைக்கும் சங்பரிவார்களின் தூக்கத்தை கெடுத்துவருகிறது என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு ஆண்டும் முத்துப்பேட்டையில் கலவரங்களை களமிறக்க, சில கறுப்பாடுகள் அலைவதையும் முத்துப்பேட்டை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்தே உள்ளார்கள்.

இப்படியாக எதிர்வினைகள் மிக்க முத்துபேட்டை பேரூராட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றி இருக்க வேண்டும்!. ஆனால் கைக்கூடிவந்த வெற்றியை முஸ்லிம்களே கோட்டைவிட்டுள்ளார்கள்.

18 வார்டுகளை உள்ளடக்கிய முத்துப்பேட்டை பேரூராட்சியில் சுமார் 9 வார்டுகளில் முஸ்லிம்களும், எஞ்சியுள்ள 9 வார்டுகளில் மற்ற சமூக மக்களும் நிரம்பி வாழ்கிறார்கள். இப்படி சமமாக மற்றவர்களும் வாழக்கூடிய முத்துப்பேட்டை பேரூராட்சித் தேர்தலில், மற்ற சமூக வேட்பாளர்கள் நால்வர் மட்டுமே களமிறங்கினார்கள் ஆனால் முஸ்லிம்கள் ஒன்பது வேட்பாளர்கள் களம்கண்டார்கள்.

பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தாலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட சகோ.அபூபக்கர் சித்தீக் சுமார் 1926 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார். வெற்றிகண்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்திற்கும், இரண்டாம் இடம் பெற்று, தோல்வி கண்ட சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்களுக்குமான வாக்குவித்தியாசம் வெறும் 402 வாக்குகள்தான்.

ஆம்!. வெற்றிபெறவேண்டிய அபூபக்கர் சித்தீக் மற்ற முஸ்லிம் வேட்பாளர்களால் தோல்வியடைந்துள்ளார்!. முஸ்லிம்களுக்கான அதிகாரத்தை பெறவேண்டி போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் இந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம் இல்லையா…?. மற்ற முஸ்லிம் வேட்பாளர்களைவிடவும், அதிகமான வாக்குகள் வாங்கியுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளரை இவர்கள் விரும்பி இருந்தால், பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற செய்திருக்கலாமே…! ஏன் அப்படி செய்யவில்லை.

காரணம், இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் புரையோடியுள்ள ஈகோ தான். முத்துப்பேட்டை தோல்வி ஒரு உதாரணம்தான். இதேபோல பல இடங்களில் முஸ்லிம்கள் வெற்றி வாய்ப்பை சொந்த சமூகத்தினாலேயே இழந்துள்ளார்கள் என்பது கவனிக்கவேண்டிய கவலை.

இன்றைக்கு மூன்றாம் தரக்குடிமக்களாக முஸ்லிம்கள் அரசுகளால், அதிகாரிகளால் தரம் தாழ்த்தபட்டு வருகிறோம். எத்தனை வலிமை இருந்தும் நம்மால் ஏன் பெரும் அதிகார பதவிகளை பெறமுடியவில்லை…? இந்த கேள்வி ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளிலும் அங்கம் வகிக்கும் கடைநிலை முதல் உயர்நிலை வரை உள்ள உறுப்பினர்களும் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது. முஸ்லிம்களின் வாக்குகளை இஸ்லாமிய கட்சிகளே பிரிப்பதால் யாருக்கு என்ன நன்மை விளைய போகிறது என்பதை உணரவேண்டுமில்லையா?.

நம்மைவிட வலிமை குறைந்தவர்கள் அதிகாரங்களை கைப்பற்ற முடிகிறது என்றால், நம்மிடமில்லாத ஒருங்கிணைப்பு அவர்களிடம் உள்ளதுதான் காரணம். இந்த உண்மையை அறிந்தும் அறியாததுபோல செயல்பாடுகள் தொடருமேயானால், நாம் இன்னும் பின்னுக்கு தள்ளபடுவதை தடுக்கமுடியாது.

அரசியல் என்பது மிக சமயோசிதமாக கையாளப்படவேண்டிய துறை!. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய துறை!. உரிமைகளை மீட்க்க போகிறோம் என்று மேடைதோறும் முழங்குவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது!. இஸ்லாமிய இயக்கங்கள் வீறுகொண்டு எழுவதற்கு முன்பாக, அதாவது 1995 முன்பாக இருந்த முஸ்லிம்களின் அரசியல் நிலை என்பது, இன்று இஸ்லாமிய இயக்கங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பிறகு பின்தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

தமிழக சட்டப்பேரவையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கவேண்டியது முஸ்லிம்களின் விகிதாச்சாரம். ஆனால் இப்போதைய உறுப்பினர்கள் வெறும் ஐவர் மட்டும் என்பது பின்னடைவில்லையா…?

ஆரம்ப காலத்தில் கண்ணியதலைவர் காயிதேமில்லத் போன்றவர்களால் அரசியல் கற்பிக்கப்பட்டது. இப்போது நாம் அரசியலை கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் வாழக்கூடிய நாடு பல்வேறு சமூக மக்களையும் உள்ளடக்கிய கூட்டமைப்பு. அதற்க்கேற்றவாருதான் முஸ்லிம்களின் அரசியல் நிலையும் அமையவேண்டும். அப்போதுதான் வெற்றிகள் நமக்காணதாகும்.

கண்ணியமான அரசியல்வாதிகளை அடையாளம்கண்டு கூட்டணிகள் உருவாக வேண்டும் அதற்கும் முன்னதாக வீதிகொன்றாக பிரிந்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இவைகள் யாரால் சாத்தியமாகும்?. நிச்சயமாக அனைத்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

கடந்த உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர்.தொல்.திருமாவளவன் அவர்களின் முயற்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு உருவானது. அது வெற்றிகண்டதா இல்லையா என்பது தேவையற்றது. ஆனால் அதுபோன்ற கூட்டமைப்பு அவசரமான அவசியம் என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டியது கட்டாயம். விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலான உறுப்பினர்களை வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, மூன்று நகர் மன்றங்களை கைப்பற்றியுள்ளது

ஆனால் லட்சோபலட்ச தொண்டர்களை கொண்ட இஸ்லாமிய கட்சிகள், ஒரு நகர்மன்றத்தையோ, குறிப்பிடும்படியான பேரூராட்சிகளையோ கைப்பற்ற முடியவில்லை ஏன்? சிந்திக்கவேண்டியது கட்டாயம் மட்டுமல்ல கடமையும்கூட.

தோழர்.திருமா உருவாக்கிய கூட்டமைப்பு சிறப்பானது வெற்றிக்கான காரணி. அத்தகைய கூட்டமைப்பை முன்னெடுக்க வேண்டியது தமிழக முஸ்லிம்களின் முக்கிய அமைப்புகளான, தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவர்களின் கடமை.

சமூகத்தின் மேம்பாட்டிற்காக மேற்கண்டவர்கள் செயலாற்றுவது உண்மையானால், தங்களுக்கான சுய விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு ஒருங்கிணைய வேண்டும். அத்தகைய ஒருங்கிணைப்பின் மூலமாவே நமது பலம் பிரியாமல் வளமான வெற்றிகளை தரும்.

முஸ்லிம்களை பொறுத்தவரை வலிமையான கட்டமைப்பு முஹல்லாஹ் ஜமாத்துக்கள். ஆக, முஹல்லாஹ் ஜமாத்துக்களும், இயக்கங்களும் ஒருங்கிணைத்து செயல்கண்டாலே கோவையில் சாதிக்க முடிந்ததை தமிழகம் முழுமையும் சாதிக்க முடியும். ஆம், அந்த சாதனை நகர்மன்றங்களை மட்டுமல்ல நாடாளுமன்றத்தையுமே நம் வசமாக்கும்… இன்ஷாஅல்லாஹ்.

வேங்கை சு.செ.இப்ராஹீம் (நார்வே)

9 Responses So Far:

U.ABOOBACKER (MK) said...

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் இயக்கங்களின் செயல்பாட்டினால் ஏற்பட்ட விளைவுகளை போஸ்மார்டம் செய்து சகோ.சு.செ.இப்ராஹீம் அவர்கள் அருமையாக எழுதியுள்ளார்.பாராட்டுகள்.
நம் சமுதாயத்தின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு இயக்கங்கள் ஈகோவை விட்டு ஒன்றுபட்டு,ஒடுக்கப்பட்ட சகோதர சமுதாய இயக்கங்களுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி பெறலாம், இன்ஷா அல்லாஹ். செய்வார்களா? தேர்தல் முடிவின் மூலம் படிப்பினை பெற்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு, சமுதாய இயக்கத்தினர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டு வேட்பாளர்கள் உட்பட பலர் சிறை கம்பி எண்ணிக்கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. அல்லாஹ்தான் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

ஆரம்ப கால, ஒன்றிணைந்த, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைப்போல உத்வேகத்துடன் முஸ்லிம் இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்தால் ஒழிய, ஆட்சி அதிகாரத்தை நாம் ஒருக்காலும் பிடிக்க முடியாது!

-வாவன்னா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆங்காங்கே குழுமியிருக்கும் அண்ணன் மார்களும், காக்கா மார்களும் மேடையருகில் வருமாறும், ஸாரி ஸாரி அல்லது மேடை ஏறி அமர்வார்ந்திடவும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் !

வேற என்னத்த சொல்றது !?

இப்படி குழு குழுவாக இருந்தால்தான் பெருந்த் தலைகள் உருளாது என்ற தொலைநோக்கு(!!) பார்வையாக இருக்குமோ !?

Canada. Maan. A. Shaikh said...

Salaam,

Masha Allah. Good article and this is the time to think about to make union, we need a leader to lead our communities, so please be requested our brother sisters throughout your personal motivations and try to understand each other’s then only we can reach to our goal success.
Wassalaam.

Thanks

Maan. A. Shaik

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//பல இடங்களில் முஸ்லிம்கள் வெற்றி வாய்ப்பை சொந்த சமூகத்தினாலேயே இழந்துள்ளார்கள் என்பது கவனிக்கவேண்டிய கவலை.

நம்மைவிட வலிமை குறைந்தவர்கள் அதிகாரங்களை கைப்பற்ற முடிகிறது என்றால், நம்மிடமில்லாத ஒருங்கிணைப்பு அவர்களிடம் உள்ளதுதான் காரணம். இந்த உண்மையை அறிந்தும் அறியாததுபோல செயல்பாடுகள் தொடருமேயானால், நாம் இன்னும் பின்னுக்கு தள்ளபடுவதை தடுக்கமுடியாது.//

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம்மிடையே இருக்கும் ஈகோவால் பல தோல்விகளை சந்திக்கிறோம் என்பதை காலம் காலமாக பாடம் கற்றும், விடை தெரியாத சங்கதிப்போனது தான் சமுதாய ஒற்றுமை.

சமுதாய இயக்கதவர்களிடம் உள்ள வரட்டு கவுரம் ஒழியவேண்டும்.

அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வேங்கை, மிகச் சிறப்பாக, எளிதாகப் புரியும் வகையில் எழுதியுள்ளார்; பாராட்டுகள்.

இனிமேலாவது நாம் பாடம் படிப்போமா?

இந்தப் பதிவுக்குத் தொடர்புடைய ஒரு தலையங்கம்:
http://www.satyamargam.com/1787

அதன் பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள். அவற்றுள் சில தமாஷா இருக்கும்.

Muhammad abubacker ( LMS ) said...

சகோ;வேங்கை சு.செ.இபுராஹிம்(நார்வே) அவர்கள் நம்மவர்களுக்கு கற்று தரும் உயர்தரமான பாடத்தை அனைத்து இயக்கம்,கட்சிகளில் உள்ள நம்மவர்கள் அவசியமாக கற்று ஒருங்கிணைய கடமைப்பட்டுள்ளோம்.
படத்தில் உள்ள இரு கைகள்.இணைய போகிறதா? இணைந்தது பிரிந்து செல்கிறதா? என குழம்புவது போல்.
எல்லா இயக்கங்களும்.ஒற்றுமை வேண்டும் ,ஒற்றுமை வேண்டும்.என்று சொல்லிக்கொண்டே செயல்களால் மேலும் மேலும் பிரிந்து கொண்டே போவது புரியாத புதிராகத்தான் இருக்கின்றது.

Aboobakkar, Can. said...

We all are from Muslim candidates only spent more money for this election but we need to learn more and more with our Hindu brothers regarding this subject???

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு