நான் முஸ்லிமாகிவிட்டேன்!
“எனக்கு இஸ்லாம் அறிமுகமானது இங்கிலாந்தில்! ஆனால், அதனை நான் அனுபவப் பூர்வமாகக் கண்டது எகிப்தில்! எப்படி என்கிறீர்களா? கேளுங்கள்:
“நான் மருத்துவக் கல்லூரியில் படித்துத் தேர்வு பெற்று, மருத்துவத் தொழிலையும் தொடங்கியிருந்த நேரம் அது. இஸ்லாத்தைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தது” என்று கூறும் ஆன் ராக்•பெல்லர் ( Ann Rockefeller ) என்ற ஆங்கிலேயப் பெண்ணின் புரட்சிகரமான சில மாற்றங்களைப் பற்றிப் படிக்கும்போது நமக்கு வியப்பு மேலிடுகின்றது.
அவருடன் மருத்துவக் கல்லூரியில் பயின்ற எகிப்தியர் ஒருவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். எகிப்தியக் கணவர் முஸ்லிம்தான், பெயரளவில்! அவருக்கும் இஸ்லாத்திற்கும் ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவு! திருமணத்திற்குப் பின்னர் கணவனும் மனைவியும் எகிப்துக்குக் குடிபெயர்ந்தனர்.
அங்குதான் ‘அந்த’ அற்புதம் நிகழ்ந்தது!
“என் கணவர் முஸ்லிமாக இருந்தும், இஸ்லாத்தைப் பற்றி ஒரு வரிகூட எனக்குச் சொல்லித் தரவில்லை! எகிப்திலிருந்த முஸ்லிம்களைச் சந்தித்தேன். அவர்களின் நற்குணமும் சகிப்புத் தன்மையும் என்னைக் கவர்ந்தன. இஸ்லாத்தின் கடமைகளின்பால் எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படவே, அவற்றை ஒவ்வொன்றாகச் செய்து வந்தேன். இந்நிலை ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்தது. இந்த உண்மை என் கணவருக்குத் தெரியாது! நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும்!”
“நான் முஸ்லிமாகிவிட்டேன்!” என்று இப்பெண் அறிவித்தபோது, அவருடைய கணவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை!
இந்த நிகழ்வின் பின் என்னென்ன அற்புதங்கள் நடந்தன என்பதை அவருடைய சொந்த வாழ்க்கையைப் படிப்பதன் மூலம் அறியும்போது, நம் கண்கள் வியப்பால் விரிகின்றன.
கல்லூரிப் படிப்பை முடித்து, London Institute of Clinical Blood Research என்ற இரத்த ஆய்வுப் பயிற்சியகத்தில் பணியாற்றத் தொடங்கினார் ஆன். 1970 களின் பிற்பகுதியில்தான் அவருக்கு இஸ்லாம் என்பது சகிப்புத் தன்மையுள்ள மார்க்கம்; நல்லொழுக்கங்கள் நிறைந்த வாழ்க்கை நெறி; அன்பும் அரவணைப்பும் உள்ள நேர்வழி என்ற அடிப்படைகளுடன் அறிமுகமாயிற்று. அதனால் கவரப்பெற்ற ஆன், தன் பெற்றோர் மற்றும் உறவினருக்குத் தெரியாமல் இஸ்லாத்தில் ஐக்கியமானார்.
ஆர்வத்துடன் மணந்த அன்புக் கணவர் ஒரு Ultra-modern முஸ்லிம் என்றறிந்த இந்தப் பெண், அதிர்ச்சியடைந்துவிடவில்லை. “நான் முஸ்லிமாகிவிட்டேன்” என்று அறிவித்து, தன் கணவருக்கே ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்தார்!
உண்மையில், அவருடைய கணவருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பெயரளவில் முஸ்லிமாக இருந்து, செயலளவில் முஸ்லிமாக இல்லாதவருக்கு அதிர்ச்சி தராதா இது?
“மேலை நாடுகளில் நிலவும் பொய்மையான மதிப்பு மரியாதைக்கும், அரபு நாடாகிய எகிப்தில் முஸ்லிம்களிடையே நிலவும் உண்மையான மதிப்பு மரியாதைக்கும் இடையில் இருந்த பெரும் வேறுபாட்டை நான் கண்கூடாகக் கண்டேன். அதற்குக் காரணம் என்னவென்று சிந்தித்தபோது, எனக்குச் சட்டென்று கிடைத்த பதில், ‘இந்த நாடுகளில் உள்ள இஸ்லாம்தான்’ என்பதுவே” என்கிறார் மிஸ் ராக்•பெல்லர்.
“ஆனால் என் கணவரோ? இஸ்லாமியப் பெயர் பூண்டிருந்தும், இஸ்லாத்தைவிட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டிருந்தார்! அவரை மீட்டிக் கொண்டு வருவது எனது முதற்கடமை என்று முடிவு செய்தேன். அதற்குரிய வழிகளைப்பற்றிச் சிந்தித்தபோது, ‘இதுதான் சிறந்த வழி’ என்று என் இதயத்தில் உதித்தது. அது என்ன தெரியுமா?”
அப்போதுதான் அத்தம்பதியருடைய இல்லற வாழ்வின் முல்லைப் பூவாக மகள் ‘யாஸ்மீன்’ பிறந்திருந்தாள்.
“சொல்லிக் கொடுத்தாலும் விளங்க முடியாத மழலைப் பருவத்தில், என் கணவர் அருகிலிருக்க, ‘லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற தாரக மந்திரத்தைக் கண்மணி யாஸ்மீனுக்குச் சொல்லிக்கொடுத்து, அதன் பொருளையும் சொல்லிக் கொடுத்தேன். மூல மொழி, குழந்தைக்கு; மொழிபெயர்ப்பு, அதன் தந்தைக்கு!”
யாஸ்மீன் ஓரளவு வளர்ந்து வந்தாள். அவள் தந்தை அருகிலிருந்த நேரங்களாகப் பார்த்து, இஸ்லாமியக் கடமைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார் தாய் ஆன் ராக்•பெல்லர். எப்படி! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!
ஆங்கிலேய மனைவி; அதிலும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவள். தனக்கு எப்படிக் கூறுவாள்? குழந்¨தெயைத்தான் பயிற்றுவிக்கிறாள் என்றெண்ணினார் பிறப்பிலேயே முஸ்லிமான அந்தத் தந்தை.
“நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம்..” என்ற பழம்பாடல் நினைவுக்கு வருகின்றதா? அதுதான் இங்கேயும் நடந்தது. யாஸ்மீன் அந்தப் பிஞ்சுப் பருவத்தில் தாயின் போதனையைக் கிரகித்தாளோ என்னவோ, ஆன் கொடுத்த antidote நன்றாகவே வேலை செய்தது அந்த டாக்டருக்கு!
இறையில்லமாகிய பள்ளிவாயில் தன் வீட்டுக்கு மிக அருகில் வந்துவிட்டது போல் செயலாற்றத் தொடங்கினார் அந்த முஸ்லிம் டாக்டர்!
“நான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அறிவித்தபோது, அதனை எதிர்த்து ஏற்றுக்கொள்ளாத என் கணவர், இப்போது என்னைப் பாராட்டத் தொடங்கிவிட்டார். ‘ஆனி! எனக்குக் கிடைத்த தெய்வலோக தேவதை நீ!’ என்பார். அந்த நெகிழ்ச்சியில் என் கணவரின் கண்கள் பளிச்சிட்டதை நான் பார்த்து மகிழ்ந்தேன்” என்கிறார் இந்தப் பேறு பெற்ற பெண்மணி.
நந்தா விளக்குக்கு ஒரு நல்ல தூண்டுதல் போதுமல்லவா? “என் கணவரின் மருத்துவ மனை இஸ்லாமிய ஒளியைப் பெறத் தொடங்கிற்று. இப்போது என் மகள் ‘ஹிஜாபு’டன் தனக்கு முன்னால் நிற்பதைப் பார்த்துப் பூரித்துப் போய்விடுகிறார் அவர். அவள் இஸ்லாமியக் கடமைகளை ஆர்வத்துடன் செயல்படுத்துவதைக் கண்டு பெருமைப் படுகிறார்!” என்கிறார் அற்புதப் பெண்மணி ஆன்.
“நாமே நல்ல முஸ்லிம் முன்மாதிரி(rolemodel)களாக நடந்துகொள்வதும், வளரும் தலைமுறையின் இதயங்களில் இஸ்லாத்தின் மதிப்பை விதைப்பதும்தான் இஸ்லாத்தைப் பரப்புவதற்கான சிறந்த வழிகளாகும்” என்பது முழுமையான முஸ்லிமாவான இவர் கூறும் முத்திரை வரிகள்.
இந்த உறுதிப்பாட்டுடன்தான், இங்கிலாந்தில் உள்ள தன் உறவினர்களையும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்துக்கொண்டிருக்கிறார் ஆன் ராக்•பெல்லர்.
குடும்பப் பெண்கள் இஸ்லாமியச் சேவைக்காக என்ன செய்யவேண்டும் என்பது பற்றி விளக்கும் திருமதி ஆன் ராக்•பெல்லர், “அவர்கள்தாம், தம் ஆண்-பெண் பிள்ளைகளுக்கு அருமையான முன்மாதிரிகளாக விளங்கவேண்டும்; விளங்க முடியும்” என்கிறார்.
மேற்குலகில் இஸ்லாத்தின் நிலை யாது? இது பற்றிக் கருத்துக் கூறும் திருமதி ராக்•பெல்லர், “மேலை நாட்டு மக்கள் இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணம், ஆங்காங்குள்ள மீடியாக்கள்தாம்! அந்தப் பிரச்சாரக் கருவிகளின் தவறான காட்டுகை(focus) இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள விடாமல் தடையாக இருக்கின்றனர். இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம் என்றும், பிற்போக்கானதென்றும், அறியாமை நிறைந்ததென்றும் அம்மக்கள் நம்புகின்றனர்” என்கிறார்.
முறையான, தெளிவான இஸ்லாமிய அறிவு வழங்கப்பெற்றால், அறிவார்ந்த-அழகான முறையில் இஸ்லாம் எடுத்துக் காட்டப்பெற்றால், மேலை நாட்டினர் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணையக் காத்திருக்கின்றனர் என்பது ஆனின் அசைக்க முடியாத கருத்தாகும். அதுவன்றி, வெறுமனே இஸ்லாத்தின் மீது வெறுப்பொன்றுமில்லை அவர்களுக்கு என்றும் கருத்தறிவிக்கின்றார்.
“இஸ்லாத்தைப் பற்றிய மேலை நாட்டினரின் எதிரான அணுகுமுறை(negative approach)க்குக் காரணம், அவர்களை ஆட்சி புரியும் தலைவர்களும், அவர்களுக்குக் கீழ் செயல்படும் மீடியாக்களும்தான்” என்கிறார் இப்பெண்மணி.
அதிரை அஹ்மது
10 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
மாஷா அல்லாஹ் ! அதிரைநிருபர் back to track.
தலைப்பை வாசித்ததும் என் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் ஆயிரமாயிரம் நினைவுகளை ஞாபகப்படுத்தியது எனக்கு அல்லாஹ் அருளிய அருட்கொடையும் அந்த நாட்களில் துணை நின்ற சகோதர சகோதரிகளையும் நினைத்து.
அதிரை அறிஞர் அவர்களின் அற்புதமான எழுத்தால் என்னைப் போன்ற அல்லாஹ்வின் அருட்கொடையாம் தூய மார்க்கம் தேர்ந்தெடுத்தவர்களையும் எழுதத் தூண்டுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும், அதிரைநிருபர் குழுவுக்கும், வாசகர்கள் அனைவருக்கும் உறுதிமிக்க ஈமானோடு வாழ்ந்து அதன் தூய நிலையிலேயே மறுமையில் சந்திக்க அருள்புரிவானாக.
//என்னைப் போன்ற அல்லாஹ்வின் அருட்கொடையாம் தூய மார்க்கம் தேர்ந்தெடுத்தவர்களையும் எழுதத் தூண்டுகிறது.//
வ அலைக்கும் ஸலாம், அன்புச் சகோதரி ஆமினா அவர்கள் தாங்கள் உணர்ந்த இஸ்லாம் பற்றி எழுத வேண்டுகின்றேன்.
தங்களைப் போன்று எத்தனை வாசகிகள்/ சகோதரிகள் அதிரை நிருபர் எனும் ஆற்றல் மிக்கோரின் இணை(த)ய தளத்தில் ஊற்றெடுக்கும் இஸ்லாமியக் கல்வியை ஆர்வமுடன் - உன்னிப்பாக அவதானித்துப் படிக்கின்றனர் என்பதும் அறிந்து கொண்டு, அதிரையிலும் இப்படிப்பட்ட கல்வியறிவு மிக்கப் பெண்மணிகள் இருந்தால் அவர்கள் “பேறு பெற்ற பெண்மணிகள்” தான் என்றே எண்ணத் தோன்றுகின்றது!
வேண்டும் இது போன்ற பெண்மணி
வேண்டாம் பெயர் தாங்கி முஸ்லிம்!
//“நாமே நல்ல முஸ்லிம் முன்மாதிரி(rolemodel)களாக நடந்துகொள்வதும், வளரும் தலைமுறையின் இதயங்களில் இஸ்லாத்தின் மதிப்பை விதைப்பதும்தான் இஸ்லாத்தைப் பரப்புவதற்கான சிறந்த வழிகளாகும்” //
இது ஒன்றே போதும். தாஃவா என எதுவும் அவசியப்படாது. நம்மை அறிய, நம்மோடு இணைய தேடி வருவார்கள்.
Practicing is very much needed in islam rather than being with arabic name. This article shows the beautiful side of practicing.
பெயர்தாங்கி முஸ்லிமுக்கு வாய்த்த பேறுபெற்ற பெண்மணி இஸ்லாத்தைப்பற்றிக் கேட்டும் வாசித்தும் பார்த்தும் பழகியும் உணர்ந்துகொண்டதால்தான் அதைக் கணவனுக்கும் மகளுக்கும் எத்தி வைக்க முடிந்தது.
கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைவிட புரிந்துகொள்தல்தான் ஈடேற்றம் தரும்
.
அவ்வாறே, முஸ்லிமாகப் பிறந்துவிட்டாலும் பழைய பழக்கவழக்கங்களே இஸ்லாம் என்று வாழ்ந்திருந்த "நமக்கும்" இஸ்லாத்தைக் "கற்பித்த" சான்றோர்களை நன்றியுடன் நினைவுகூருகிறேன்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
அன்புச் சகோதரி அமீனா,
அஸ்ஸலாமு அலைக்கும்.
வருக! உங்கள் வளமான கருத்துகளைத் தருக!
பாராட்டுரைக்கு மிக்க நன்றி. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
பேறு பெற்ற பெண்மணிகள் வரிசையில் சகோதரி ஆமினா அவர்களும் இருக்கிறார்கள் - அவர்களின் அனுபவமும் அதிரைநிருபரில் விரைவில் வெளிவர வேண்டும் இன்ஷா அல்லாஹ் !
நல்ல விழிப்புணர்வு பகிர்வு நன்றி
//பேறு பெற்ற பெண்மணிகள் வரிசையில் சகோதரி ஆமினா அவர்களும் இருக்கிறார்கள் - அவர்களின் அனுபவமும் அதிரைநிருபரில் விரைவில் வெளிவர வேண்டும் இன்ஷா அல்லாஹ் !//
ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஆயிரம் ஆயிரம் வாசகர்களில் அடியேனும் ஒருவன். அன்புச் சகோதரி அமினா அவர்கள் தாய்மொழியில் சொல்லப் போகும் அவர்களின் அனுபவ உண்மைகள் எத்தனை பேர்களின் கண்களை குளமாக்கி- கல்புகளை வளமாக்கி வைக்கும் என்பதை எண்ணிப் பார்க்கின்றேன்.
ஆற்றல் மிக்கோரைத் தேடிச் சென்று ஆக்கங்களைப் பெற்று இத்தளத்தில் பதியும் கண்ணியத்திற்குரிய அன்பு நெறியாளர் அபூஇப்றாஹிம் அவர்கட்கு எங்களின் உளம்கனியும் நன்றியை ஜஸாக்கல்லாஹ் கைரன் எனும் துஆ வுடன் சமர்ப்பிக்கின்றோம்.
Post a Comment