ஒற்றையாய் விடப்படுகையில்
விசாலப்பட்டுப் போகிறது வீடு
பள்ளிக்கூட விடுமுறையைவிட
பணியிடை விடுமுறையை நாட்கள்
குறைந்து கிடைப்பது
சாபம்
உந்தித் தள்ளி
உட்புறம் திறந்த
கதவுக்குப் பின்னே
காயப்பட்டுக் கிடக்கிறது காற்று
பாத்திரங்களாலும் வளையோசைகளாலும்
பேசிக்கொண்டிருந்த சமையலறை
சலனமின்றியும் சப்தமின்றியும்
குளிர்ப்பதனப் பெட்டியைக் கொண்டு
முனகிக் கொண்டிருக்கிறது
நெடுந்தொடர்களின் கதாபாத்திரங்கள்
தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால்
மனைவியைத் தேடுகின்றனர்
சயன அறைக்குச் செல்ல
வீட்டுக்குள்ளேயே
வெகு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது
மகள்...
ஊட்டி வளர்த்த பொம்மைகள்
இறந்து கிடக்கின்றன.
மகன்...
ஓட்டி யுடைத்த வாகனங்கள்
இரைந்து கிடக்கின்றன.
மனைவி...
மடித்து வைத்த உடுப்புகள்
கலைந்து கிடக்கின்றன
எல்லாம் இட்டு
கலந்தெடுத்தாலும்
காஃபியின் ருசியில்
கைப்பதம் குறையிருக்கிறது
வீட்டுப் பாடம் சொல்லித்தரும்
நேரங்களில்
செய்வதறியாது ஸ்தம்பித்துப் போகின்றன
என் இயக்கங்கள்.
நோட்டுப் புத்தகத்தில்
பிழையான கணக்குகள்
தண்டனை நிமித்தம்
பலமுறை எழுதப்பட்டு
பையனின் “கை வலிக்குதுப்பா”
நினைவுக்க்கு வர...
பாடங்களைப்
புரிய வைக்காமல்
படிய வைக்க முனைந்த
பகுத்தறிவு
என்னைப் பரிகசிக்கிறது.
இந்த அமைதியை
ஏதாவ தொரு
நொறுங்கும் கண்ணாடிக் குவளையோ
கார்ட்டூன் ச்சேனலோ
ஊரிலிருந்தொரு அலைபேசிச் சிணுங்களோ
கதவின் அழைப்பு மணியோசையோ
கலைத்துப் போட்டுவிடாதா
என
ஏக்கம் வதைக்கிறது
நீள அகல அளவைகளாலோ
நிலக் குறியீடுகளாலோ
வீட்டின்
அளவை தீர்மானிக்க முடிவதில்லை
நிஜங்களின் இருப்பில்
குறுகளாய்த் தெரியும் வீடு
நினைவுகளோடு
ஒற்றையாய் விடப்படுகையில்
விசாலப்பட்டுப் போகிறது!
Sabeer abuShahruk
41 Responses So Far:
சலாம் காக்கா,
உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கிறது. முதன் முதலாக பார்த்தேன்.வாழ்த்துக்கள்
எல்லா வரிகளிலும் ஏக்கத்தினை
சொல்லாமல் சொல்லிக்கொண்டே
நில்லாமல் தடையிலா நீருற்றாய்
வெல்லும் உங்கள் வெல்லக் கவிவரிகளில் .
//நிஜங்களின் இருப்பில்
குறுகளாய்த் தெரியும் வீடு
நினைவுகளோடு
ஒற்றையாய் விடப்படுகையில்
விசாலப்பட்டுப் போகிறது!//
என்ற வரிகளில் உங்கள் உற்ற நண்பர் கூறும் "உளவியல்" தத்துவம் பளிச்சிடுவதைக் காண்கின்றேன்
கருணையாளன் கருணையால்
கருவில் திருவானதால்
உருவாக்கும் கவிதையாக அல்லாமல்
உருகவைக்கும் உணர்வின் ஓசைகளை
பெருகவைக்கும் பேரின்பமாக
தருவதில் நீங்கள் தவப் புதல்வன்
அருகில் அமரும் பெரு பெற்றோம்
அருளாளன் அருளாலே!!
அம்மாவின் பாசத்தின் வாசத்தை
எம்மாம் பெரிய அத்தரை விடவும்
ஈடில்லை என்று ஈர்த்த வரிகளால்
தேடினேன் உங்களை முத்தமிட..
பிள்ளைகளின் கிறுக்கல்களை
"பிள்ளைத் தமிழாய்க் கண்டீர்
"பிஞ்சுத் தூரிகையின்"
கொஞ்சும் ஓவியக்காவியாத்தில்
நெஞ்சின் உணர்வுக் கற்றைகளை
பிஞ்சுத் தூரிகையின் பிடியில்
முன்பும்
இன்றும்
மனைவியின் மகத்துவம்
நினைவிலாடும் நிஜங்களும்
காற்றிலாடும் உங்கள் வீட்டு
"கர்டைன்" போலவே...
ஆடிக் கொண்டிருப்பதைப்
பாடிக் கொண்டிருப்பதைப்
படித்தேன்;.................
.
//பெரு பெற்றோம்//
பேறு பெற்றோம்
பாவம் என்றாலும் கவியால் சூப்பரு!
//பாத்திரங்களாலும் வளையோசைகளாலும்
பேசிக்கொண்டிருந்த சமையலறை
சலனமின்றியும் சப்தமின்றியும்
குளிர்ப்பதனப் பெட்டியைக் கொண்டு
முனகிக் கொண்டிருக்கிறது//
ஆளுமையின்றி அமைதியாய் வெறிச்சோடி இருக்கும் இல்லத்துக்கு அழகான சரியான எடுத்துக்காட்டு.
விசாலம் உங்களின்
விலா எலும்பின்
விலாசம்!
உயிரணுக்களின்
உயிரணுக்கள்!!
உங்கள் வாழக்கை “பாஸ்போர்ட்”டில்
வசீகரமாய் ஒட்டிக் கொண்ட
”விசா”வாக
விவாக விலாசம்!
நித்திரையைக் கலைத்த
முத்திரைக் கலவை
உங்களின் கவிதையில்
எங்களின் ஏக்கம்
“கல்யாணமாகியும் பிரம்மச்சாரிகள்”ஆன
கட்டைகளான எங்களின்
தூக்கம் களைத்தத் தாக்கம்!
அதனாற்றான்,
உங்களின் கவிதைகளில்
எங்களை மிக மிக
உருக வைத்தது இக்கவிதையே
கவிதையை நீங்கள் வடித்தீர்கள்;
கண்ணீரை நாங்கள் வடித்தோம்!
உங்களை விட எனக்குத்
தங்க பேரனின் மழலையும்
நினைவலைகளை
என் மனக்கரையில் விட்டு விட்டுச் சென்றது..
சஹர் நேரத்திலும் இம்மடல் அனுப்பாவிடில்
லுஹர் நேரமானாலும் என் மனம் தூங்காது
உங்கள் கவிதையின் தாக்கம் தாங்காது
மீண்டும் சொல்கின்றேன்;
அதிசிறந்த கவிதை இதுதான்
அதெப்படி வாய்த்தது?
“தனிமை”தவம் ஈன்ற
இனிமை நினைவுகளால்
வரமென கிடைத்த
தரமான கவிதையாக...!!
அன்புத் தம்பி சபீர்!
எண்ணத்தில் இருக்கிறது.
இந்த பாதிப்பு இத்தனை வருடங்கள் கழித்து எனக்கும் இருக்கிறது. எப்படி சொல்வது? தெரியாமல் தத்தளித்தேன்.
எனது அல்லது என் போன்றோரின் எண்ணங்கள் உங்கள் வார்த்தைகளால் வடிவம் பெற்று இருக்கின்றன.
ஒரு வித்தியாசம் நீங்கள் இளையவர் என்பதே.
ஆனால் கருப்பொருளின் " காய்ச்சப்பாடு" அனைவருக்கும் பொதுவே.
உங்களின் பொருள்கள் இருந்த இடத்தில் இருக்கின்றன. ஆட்சியாளர் கொஞ்ச நாள் "கொடநாடு" போயிருக்கிறார். இது விடுமுறை கால பிரிவு. அவ்வளவே.
எனக்கோ
இன்னும் ஒரு வித்தியாசம்- பதினைந்து வருடங்களாக - மஸ்கட் முதலிய ஊர்களில் வைத்தெல்லாம் எங்களுடன் பழகிக்கொண்டிருந்த " பொரிக்கஞ்ச்சட்டி " உட்பட்ட பொருள்கள் எல்லாம் எஸ் டி கார்கோவில் ஏற்றப்பட்டுவிட்டன. எதிரே இருந்தது சூன்யமே.
பணி இடமாற்றம் இல்லற இட மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது.
தன்னந்தனிமையிலே- உடல்
தள்ளாடும் வயதினிலே -உன்
புன்னகையைப் பார்த்திருந்தால் -அது
போதாதோ எந்தனுக்கு? என்று திருப்தி அடையலாம்தான்.
ஆனாலும் தொட்டால் தொடரும் கடைமைகள்- ஆப்ரிக்காவில் தனிமையாக வாழ்ந்தேனும் நிறைவேற்ற துரத்துகின்றன.
கல்லூரிப் படிப்புகள்
இன்னும் கொடுக்கவேண்டிய ஏழு பவுன்
அடுத்து தயாராக இருக்கும் குமர்
முடியாமல் நிற்கும் கட்டிடம்
கையை இன்னும் எதிர்பார்க்கும் சுற்றத்தார்
முதுமையில் தேவைப்படும் மருத்துவம்
இவை அனைத்தும் தனிமை எனும் தியாகத்தீயில் தள்ளியே விட்டன.
உங்களின் இந்த கவிதை யாரைப் பாதித்ததோ எனக்கு தெரியாது. ஆனால் என்னை இன்றுள்ள சூழ்நிலையில் மிகவும் பாதித்துள்ளது. இப்படி உயிரின் ஓசைகளை கவிதை ஸ்டெதாஸ்கோப் வைத்துப் பார்க்கும் உங்களை வெறும் ஒரு வார்த்தையில் கவிஞர் என்று மட்டும் சொல்லமுடியாது. அதையும் தாண்டி புனிதமான ஒரு வார்த்தை வேண்டும் . கவியன்பன் தருவாரா?
ஈனா ஆனா காக்கா அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எனக்குத் தெரியும், தங்களின் உணர்வுகளை இது தீண்டும் என்று.
அதனால்தான் இங்கு வெளியிடும் முன்பு உங்களுக்கு மட்டும் அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி நாடி பிடித்தேன்.
இதுபோன்ற உணர்வுகள்
நான்
எழுதுபவை அல்ல.
என்னை வைத்துத்
தன்னை எழுதிக்கொள்கின்றன.
கவிஞர்கள்
உணர்ச்சி வசப்படுபவர்கள் மட்டுமல்லர்
உணர்வை நிசப்படுத்தி
நம்மை வசப்படுத்துபவர்!
பொறிக்கும்சட்டி
பழசானாலும்
பழக்கிய சட்டி என்பதால்
பிரிவதில்லை பெண்டிர்!
"நல்லாயிருக்கிங்களா?"
"தெரியல"
"சாப்பிட்டீங்களா?"
"பசிக்கல"
"ஏன் இப்படி பேசுறீங்க?"
"பதில் தெரிந்த கேள்விகளாய்க் கேட்பது சரியா?"
பேசிவிட்டு வைத்தபின் யோசிப்பின்றி எழுதி முடித்தது இது.
நீங்கள் கடமைகள் என்று சுமக்கும் சுமைகளைவிட அளவிடமுடியாத கனம் கொண்டு அழுத்துவது "விசாலமாகிப்போன வீடு". இல்லையா காக்கா.
தலைச் சுமையல்ல
மாற்றிக்கொள்ள
இருப்பினும்
வழிநெடுக
நிழலாகவாவது வருவோம்
உங்கள் அன்பினால் கட்டுண்ட நாங்கள்!
(உங்கள் பின்னூட்டம் கலைத்துப்போட்ட தூக்கத்தால் இந்த நீண்ட மடல்)
கவியன்பன், அஸ்ஸலாமு அலைக்கும்
//உருவாக்கும் கவிதையாக அல்லாமல்
உருகவைக்கும் உணர்வின் ஓசைகளை//
மொழியை
உளி யெனக்கொண்டால்
செதுக்குவது சிரமமில்லை
உணர்வுகளைச்
சொல்லிச் செல்லுகையில்
இலக்கை அடைய
மொழியை
வழியாகக் கொள்கிறேன்.
வாய்க்கும்
இறகுகள் பொறுக்கி
வீடு சமைக்கும் எனக்கு...
உக்கிர வார்த்தைகள்கொண்டு
நீங்கள் புனையும்
மரபுக் கவிதைகள்
அரபுக் குதிரைகளென
கம்பீரமாய்த் தெரிகின்றன!
தங்களின் மொழிப்புலமையால்
இயற்றும்
செய்யுள்களில் ஒன்றைக்கூட என்னால்
செய்ய முடியாது!
வாழ்த்துகளுக்கு நன்றி!
அன்புள்ள தம்பி சபீர்! அருமை கவியன்பன்!
சற்று முன் பேராசிரியர் ஜனாப். அப்துல் காதர் அவர்களுடன் வாராந்திர தொலைபேசி உரையாடலில் உங்களின் விசாலமும், கவியன்பனின் பின்னூட்டக் கவிதையும் வரிக்கு வரி படிக்கப்பட்டு பத்து தடவை ஆஹா ஓஹோ என்றும் பதினைந்து தடவை சிரித்தும் ரசிக்கப்பட்டன. தனது பாராட்டுக்களை உங்கள் இருவருக்கும் வழங்கும்படி என்னைப் பணித்தார்கள்.
அத்துடன் இந்தப் பிரிவுகள் வாழ்வின் ஒரு அம்சம் என்றும்- ஒரு காட்சி என்றும் கூறினார்கள்.
பாறாங்கற்கள் செதுக்கப்படும்போது கதறினால் சிற்பமாக முடியாது; துளையிடப்ப்படும்போது மூங்கில்கள் கண்ணீர் வடித்தால் புல்லாங்குழல் கிடைக்காது. அதுபோல் வாழ்வில் பிரிவுகள் - துன்ப்ங்கள் நம்மை வடிவமைப்பதற்காகவே என்ற கருத்தை பதியச்சொன்னார்கள்.
//நீங்கள் கடமைகள் என்று சுமக்கும் சுமைகளைவிட அளவிடமுடியாத கனம் கொண்டு அழுத்துவது "விசாலமாகிப்போன வீடு". இல்லையா காக்கா.//
ஆமாம். உண்மையே.
//தலைச் சுமையல்ல
மாற்றிக்கொள்ள
இருப்பினும்
வழிநெடுக
நிழலாகவாவது வருவோம்
உங்கள் அன்பினால் கட்டுண்ட நாங்கள்!//
உங்கள் நெஞ்சின் ஈரம் என் கண்களின் ஓரம். நன்றி. வஸ்ஸலாம்.
பொரிக்கன் சட்டி மட்டுமா காக்கா !?
வாஷிங் மெஷினும்.. !!? - அதுமட்டுமாவது நம்மோடு இருக்கட்டுமே என்று வைத்திருந்தா "இந்த முரடன் ஏன் நமக்கு தொந்தரவு கொடுக்கிறான்" என்பதுபோல் அசரீரி வேறல்லவா வெளங்குது காக்கா... !! :(
கவிதையின் உயிராக கரு இருப்பின், அதற்கு தொடரும் கருத்துக்கள் சுவாசிக்கும் மூச்சாக நீவி விடுகிறது...
உருக்கமே உறவுகளை பலப்படுத்துகிறது !
கவிவேந்தர் சபீர், "வ அலைக்கும் சலாம்",
எது கவிதை?
இது கவிதை என்பேன்
என்னுயிர் நண்பா!
"க"ருத்தை "விதை"ப்பதால்
"கவிதை"
"செய்"வதால்
"செய்யுள்"
"பா"டுவதால்
"பாடல்"
என் மீது வைத்துள்ள பேரன்பைப் போல
என் செய்யுள் மீதும் வைத்திருப்பதே
எனக்குக் கிடைத்த அங்கீகாரம்!
இன்னமும் சொல்வேன்
என்றும் சொல்வேன்
உங்கள் அருகில் சுவாசம்
எங்கள் சிந்தைக்குள் கவிநேசம்!
//இதுபோன்ற உணர்வுகள்
நான்
எழுதுபவை அல்ல.
என்னை வைத்துத்
தன்னை எழுதிக்கொள்கின்றன.//
ஆஹா..!!!
அற்புதம் இங்கே
சொற்பதம் கொண்டு
கைவிரல்களின் கவித்துவமாய்
மெய்ப்பொருளைத் தத்துவமாய்...!
மூத்த சகோதரரும் என் தமிழ் ஆசான் அவரகளின் உற்ற நண்பருமான இ.அ. காக்கா:
ஜசாக்கல்லாஹ் கைரன்
உங்களின் அலைபேசியில் எங்களின் நிலைபேசியதும் அதற்காக எங்கள் எழுத்துக்களை உங்கள் குரல் வழியாக வாசித்ததும் என் ஆசான் அவர்கள் அவைகளை நேசித்ததும் (அதுவும் //பத்து தடவை ஆஹா ஓஹோ என்றும் பதினைந்து தடவை சிரித்தும் ரசிக்கப்பட்டன//) எங்களை அவர்கட்கும் உங்கட்கும் நன்றி கூற கடன் பட வைத்துவிட்டது. எங்களின் "ஜசாக்கல்லாஹ் கைரன்" எனும் து ஆவுடன் எங்களின் நன்றியைத் தெரிவிக்க வேண்டுகின்றோம்.எனக்கு புகுமுக வகுப்பில் (1974 )என் தமிழ் ஆசானாக எனக்குக் கற்பித்த உங்களின் உற்ற நண்பர் பேராசிரியர் அப்துல் காதிர் அவர்கள் என்னை அழைக்கும்பொழுது ,"தம்பி, தங்கக் கம்பி" என்றழைத்ததும் , சென்ற வருடம் aamf துபை விழாவில் ,"கலாம் காதிர் எழுதுகின்றார்; எழுதிக்கொண்டே போகின்றார்; தமிழ் ஆசான் ஆகிய நான் கூட எழுதவில்லை " என்று உளத்தூய்மையுடன் உளப்பூர்வமாக வாழ்த்தியதும் இன்று அலைபேசியில் எங்களின் நிலைபேசியதும் நினைத்துப் பார்த்தால், இப்படிப்பட்ட நல்லாசான் எனக்கு உறவினராகவும் உங்கட்கு உற்ற நண்பராகவும் அமையப் பெற்றதும் பெரும் பேறென எண்ணி மகிழ்வேன். அல்ஹம்துலில்லாஹ். (இன்ஷா அல்லாஹ் எங்களின் இவ்வுணர்வுகளையும் அவர்களிடம் இன்று அல்லது அடுத்த வாரந்திர உரையாடலில் தெரிவிப்பீர்கள் என்று நம்புகின்றேன்)
ஒற்றையாய் விடப்படுகையில்
விசாலப்பட்டுப் போகிறது வீடு
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் மேலும் விரிசல் விடுகிறது மனது!அந்த விரிசல் பிரிவின் துயரம்!அன்பு நூலின் தற்காலிய அருப்பு!இப்படி மனம் விரிசல் விடுவதால் ஓட்டை விழுந்திடும் அபாயம் அவ்வப்பொழுது அலைபேசியின் வாயிலாக அந்த விரிசல் எனும் பிளவு அடைக்கப்படுகிறது விரிசல் இல்லாத இல்லாளின் அன்பு கசியும் பேச்சு பூச்சுமூலம்.
பள்ளிக்கூட விடுமுறையைவிட
பணியிடை விடுமுறையை நாட்கள்
குறைந்து கிடைப்பது
சாபம்.
--------------------------------------------------------------
விடுமுறைக்கு மணி அடிக்கும் விசித்திர அ(வல)லுவல் பணிக்கூடம், சொல்லும் பாடம் சோகம்!
தம்பி சபீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
கவிதையை விரும்பி வாசித்தமைக்கு மிக்க நன்றி.
//முதன் முதலாக பார்த்தேன்.//
இம்மாதிரி ‘நெஞ்ச நக்குற’ கவிதைகள் நிறையவே எழுதியிருக்கிறேன். இங்கும் திண்ணை டாட் காமிலும் சத்யமார்க்கம் டாட் காமிலும் வாசிக்கக் கிடைக்கும்.
எம் ஹெச் ஜே:
//ஆளுமையின்றி அமைதியாய் வெறிச்சோடி இருக்கும் இல்லத்துக்கு அழகான சரியான எடுத்துக்காட்டு.//
ஜஸாகல்லாஹ் கஹைர்.
அபு இபுறாகீம்:
//கவிதையின் உயிராக கரு இருப்பின், அதற்கு தொடரும் கருத்துக்கள் சுவாசிக்கும் மூச்சாக நீவி விடுகிறது... //
சரியாகச் சொன்னீர்கள். உணர்த்த விரும்பிய உணர்வு, உணரப்பட்டதன் அடையாளம்தான் இ.அ.காக்கா மற்றும் கவியன்பன் ஆகியோரின் பின்னூட்டங்களில் தெரிகிறது.
இபுறாகிம் அன்சாரி காக்கா:
//துன்ப்ங்கள் நம்மை வடிவமைப்பதற்காகவே// அழகாகச் சொல்லியுள்ளார்கள். வாரம் ஒருமுறை சாரோடு பேசும் தங்களுக்கு அவர்களின் ஆறுதல் நிச்சயம் பயனளிக்கும். எழுத்தை ரசித்த சாருக்கு என் நன்றியைச் சொல்லிவிடுங்கள்.
கவியன்பன்:
//"க"ருத்தை "விதை"ப்பதால்
"கவிதை"
"செய்"வதால்
"செய்யுள்"//
எதார்த்தமாகச் சொல்லி வைத்ததையெல்லாம்கூட கவனித்துயுள்ளீர்கள். ஜஸாகல்லாஹ் கஹைர்.
நானும் அபு இபுறாகீமும் வரும் 16ந்தேதி வியாழக்கிழமை அலாவுதீனைச் சந்திக்க அபுதபி வருகிறோம். தங்களையும் சந்திக்க எங்கள் இருவருக்குமே ஆர்வமுண்டு. சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
கிரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆளைக்காணோமே என்று ரொம்பவே அப்செட். வந்துட்டீங்க. சொல்ல வந்ததைச் சொல்லி முடியுங்கள்.
பிறகு ஏற்கிறேன்.
உந்தித் தள்ளி
உட்புறம் திறந்த
கதவுக்குப் பின்னே
காயப்பட்டுக் கிடக்கிறது காற்று!
------------------------------------------------------------
அதனால்தான் அறைமுழுதும் காற்றின் வெப்பம் கலந்த பெருமூச்சு நிரம்பிக்கிடக்கிறதோ?(கவிஞரே கிட்ட இல்லாம போய்டியல!கைகுலுக்க! மாசா அல்லாஹ் இப்படியெல்லாம் சோகத்தை சொல்ல முடியம்(மா)?
பாத்திரங்களாலும் வளையோசைகளாலும்
பேசிக்கொண்டிருந்த சமையலறை
சலனமின்றியும் சப்தமின்றியும்
குளிர்ப்பதனப் பெட்டியைக் கொண்டு
முனகிக் கொண்டிருக்கிறது.
----------------------------------------------------------------------
அந்த முனங்களின் ஈனஸ்வரம், ஜுரத்தில் அந்த குளிர்சாதனபெட்டி முனங்குவதும் அந்த சோக நிமிடம் நாம் உடைந்து கரைவதும் நம் வீட்டின் நிசப்தத்தை சிறிதாகவேனும் கலைத்து போடும் காரணிகள்.
இங்கே விசாலம் என்று சொன்னது மலேஷியா காரங்களுக்கும் சேர்த்துதான்...
எங்கே... நோன்பென்றால் இப்படியா விம்பாக இருப்பதுபோல் இருப்பது !?
தலைய காட்டுங்க காக்கா ! :)
நெடுந்தொடர்களின் கதாபாத்திரங்கள்
தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால்
மனைவியைத் தேடுகின்றனர்
சயன அறைக்குச் செல்ல
வீட்டுக்குள்ளேயே
வெகு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது
----------------------------------------------
இது மேற்கில் தோன்றும் உதயம்! வீட்டிற்குள்ளேயே அன்னிய தேச பயணம்!மனதுக்குள்ளேயே மனப்போராட்டம்! நதியில்லாத ஓட(டூ)ம்????
மகள்...
ஊட்டி வளர்த்த பொம்மைகள்
இறந்து கிடக்கின்றன.
மகன்...
ஓட்டி யுடைத்த வாகனங்கள்
இரைந்து கிடக்கின்றன.
மனைவி...
மடித்து வைத்த உடுப்புகள்
கலைந்து கிடக்கின்றன.
---------------------------------------------------
குடும்பம் என்பது குழந்தைகளும், மனைவியும் கலந்த உறவின் அமைப்பு!அது தற்காலிகமாக பிரிந்து இருந்தாலும் இப்படியெல்லாம் ஏற்படும் தவிப்பும், வீட்டின் சீரான ஒழுங்கில் கலைதளும் ஒரு போர்காட்சியைபோல ""கவிஞர் சபீர்(காக்கா)கலிங்கத்து பரணி பாடியது போல இருக்கு!
எல்லாம் இட்டு
கலந்தெடுத்தாலும்
காஃபியின் ருசியில்
கைப்பதம் குறையிருக்கிறது
-------------------------------------------
எல்லாம் இட்டு? அங்கே சினுங்களும், செல்லமும் கூடிய அன்பு விட்டு போயிருக்கே! காபி கசக்குமே?
வீட்டுப் பாடம் சொல்லித்தரும்
நேரங்களில்
செய்வதறியாது ஸ்தம்பித்துப் போகின்றன
என் இயக்கங்கள்.
நோட்டுப் புத்தகத்தில்
பிழையான கணக்குகள்
தண்டனை நிமித்தம்
பலமுறை எழுதப்பட்டு
பையனின் “கை வலிக்குதுப்பா”
நினைவுக்க்கு வர...
பாடங்களைப்
புரிய வைக்காமல்
படிய வைக்க முனைந்த
பகுத்தறிவு
என்னைப் பரிகசிக்கிறது.
---------------------------------------------------------
எந்த கணக்கிலும் அடங்காத சோகம் இருந்தாலும் சுய விமர்சமனாய் நம்மையே நாம் நையாண்டி அடித்தாவது அந்த கணத்த சோக நிமிடங்களையும் பூச்சாண்டி காட்டும் தனிமையும் விரட்ட பார்க்கும் நிலமை!(அருமை காக்கா! கண்ணுக்கு எதிரே காற்றில் சுருள்,சுருளாக ஏதோ பறப்பது போல இருக்குமே????அந்த நிமிடமும் , வாந்திவரும் ஆனால் வராது ! எங்கே ஊறுகா(ய்)? போனில் ஊருக்கு போன் போட்டு எங்கே ஊருகா டப்பா விசாரிப்புகளும் சகஜம்.
இந்த அமைதியை
ஏதாவ தொரு
நொறுங்கும் கண்ணாடிக் குவளையோ
கார்ட்டூன் ச்சேனலோ
ஊரிலிருந்தொரு அலைபேசிச் சிணுங்களோ
கதவின் அழைப்பு மணியோசையோ
கலைத்துப் போட்டுவிடாதா
என
ஏக்கம் வதைக்கிறது
-----------------------------------------------------
என் வீட்டுக்குள் சின்ன யுத்த சத்தமாவது கேட்காதா? அடுத்த வீட்டில் உள்ள துபாய் காரன் சம்மந்தமே இல்லாமல் முட்டாள் இந்தியன் என்று திட்டினாலும் பரவாயில்லையே இந்த தனிமை துயரை வெட்டிவிடலாமே?இது உள்ளத்தோடு ஒட்டிய வாலாக நீண்டு கொண்டிருக்கிறதே!!!( ஐயா! கவிஞரே அடிக்கடி புகழ வைக்கிறீங்க!அல்ஹம்துலில்லாஹ்!)
நீள அகல அளவைகளாலோ
நிலக் குறியீடுகளாலோ
வீட்டின்
அளவை தீர்மானிக்க முடிவதில்லை
நிஜங்களின் இருப்பில்
குறுகளாய்த் தெரியும் வீடு
நினைவுகளோடு
ஒற்றையாய் விடப்படுகையில்
விசாலப்பட்டுப் போகிறது!
-----------------------------------------------------------
அன்புக்கு குறியீடு அன்பே! அது வசிக்கும் வீட்டிற்கு அளவுகளை தீர்மானிப்பதும் கூடிவாழ் நிலையே!
தனித்து விடப்படும் பொழுதில் நான் வெறுமையாய் சிறுபுள்ளியாகவும் ,சிறிய இல்லம் கூட விசாலமாய் தோன்றும் இது தனிமையின் இடமாற்று பிழை!இதில் அரவனைப்பின் கயிரு தற்காலிகமாவேனும் விடுபட்டதால் வந்த வினை!( நல்ல ம(னைவி)னவியலை சொல்லும் அருமை கவிதை இது நீண்ட நாளுக்குப்பின் வந்த விசேசம்! வாழ்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு மிகவும் திருப்தி தந்த கவிதையும், நீண்ட நாட்களுக்குப்பின் உளவியல் சம்பந்தமாகவும், இல்லவியல் சம்பந்தமானதாகவும் என் கருத்தை நானே காதலிக்க வைத்த கவிதை சரம் இது.காரணம் இதன் சாரம் சம்சாரம்!!!உள்வாங்கி எழுதியிருக்கிறேன் உணர்ந்து எழுதுயிருக்கிறேன் இதை எழுத தூண்டிய மின் தூண்டில் போட்டு எங்கள் இதய மீண்களை பிடிக்கும் கவிஞருக்கு கோடி வாழ்த்துக்கள். அல்லாஹ் மிகப்பெரியவன்.அல்லஹுக்கே எல்லாபுகழும்.
கிரவுன்,
நீங்கள் முடிக்கும்வரை காத்திருந்தது வீண்போகவில்லை. புன்சிரிப்போடு பொறுக்கிக்கொண்ட உங்கள் முத்துகள்:
//அன்பு நூலின் தற்காலிய அருப்பு!//
இதன் காரணி
பள்ளியின் கோடை விடுப்பு!
நினைவுகளுக்கு
லக்கேஜ் ச்சார்ஜ் பண்றாங்களா என்ன?
அதையும் தூக்கிச்செல்ல வேண்டியதுதானே?!
அல்லது
மொத்தமாகக் கட்டி
ஒரு மூலையிலாவது போட்டுவிட்டுப் போயிருக்கலாம்
இப்படியா
வீடுமுழுக்க பரப்பி வைத்துச் செல்வது?
*********************************************************************
//குளிர்சாதனபெட்டி முனங்குவதும் அந்த சோக நிமிடம் நாம் உடைந்து கரைவதும் நம் வீட்டின் நிசப்தத்தை சிறிதாகவேனும் கலைத்து போடும் காரணிகள்.//
மட்டுமல்ல
இந்த விர்ர்ர்ர்
ஏற்ற இறக்கம் இல்லாததால்
மனம் லயிப்பதில்லை
மாறாக
ஒரே ஸ்தாயியில் சப்திப்பதால்
லேசா பயமாகக்கூட இருக்கிறது.
*********************************************************************
//வீட்டிற்குள்ளேயே அன்னிய தேச பயணம்!//
இருக்கும்போது
சிற்சில
சில்லரைச் சண்டை சச்சரவுகளில்
வீட்டிற்குள்ளேயே உள்நாட்டுப் பயணம்போல்…
இல்லாதிருப்பதோ
வீட்டிற்குள்ளேயே அந்நிய தேசப் பயணம்தான்.
********************************************************************
//அங்கே சினுங்களும், செல்லமும் கூடிய அன்பு விட்டு போயிருக்கே! காபி கசக்குமே?//
கசக்காதே பின்னே!
சர்க்கரையைவிட
இக்கரையில் விட்டுவிட்டு
அக்கரையில் இருக்கும்
மனைவியின்
அக்கறைதானே தித்திப்பு?
************************************************************
//?இது உள்ளத்தோடு ஒட்டிய வாலாக நீண்டு கொண்டிருக்கிறதே!!!//
இந்த நீட்ச்சி
நிலையில்லாதது
என்னும் ஆறுதல் மட்டுமே பிடிப்பு.
எதிர்வரும் ஏதாவது ஒரு நாளில்
சட்டென முடிந்துவிடும் இந்த நீட்ச்சி!
*********************************************************************
// நீண்ட நாளுக்குப்பின் வந்த விசேசம்! வாழ்துக்கள்.//
நன்றி கிரவுன்.
ஏதோ கவியரங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்து கவனித்ததுபோன்றதொரு உணர்வைத் தந்தீர்கள்.
ஜஸாகல்லாஹ் க்ஹைர்.
//இங்கே விசாலம் என்று சொன்னது மலேஷியா காரங்களுக்கும் சேர்த்துதான்...//
அவன் வரட்டும், கொரில்லா செல்லுல புடிச்சுப் போட்டுடலாம்.
// எங்கள் எழுத்துக்களை உங்கள் குரல் வழியாக வாசித்ததும்// இல்லை கவியன்பன் நான் வாசிக்கவில்லை. இணைய தளம் திறந்து அவரது வெண்கலக்குரலில் அவரே வாசித்தது.
தம்பி சபீர். அலைக்குமுஸ்ஸலாம்.//எழுத்தை ரசித்த சாருக்கு என் நன்றியைச் சொல்லிவிடுங்கள்.//
சொல்லிவிடுகிறேன்.
//இணைய தளம் திறந்து//
என் தமிழாசான் அவர்களின் இதயதளம் திறந்திட வைக்கும் இந்த இணைய தள நிர்வாகிக்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்”
//அவரது வெண்கலக்குரலில் அவரே வாசித்தது. // ஆம். உண்மையில் குரல்வளம் மிக்கவர்- குணத்தில் மிக்கவர் தங்களின் தங்க நண்பர் அவர்கள்.
காதர் சார் பேச்சைக்
கேட்காத
காதும்
இருக்காது
தமிழ் கூறும் நல்லுலகில்
அமிழ்தெனச் சொட்டும் அவர்களின் சொல்லுலகில் சொக்க்கியவர்கள் பலர் உளர் பாரினில். அவர் புகழ்பரவும் பார் இனி என்றும் சொல்லும் என் மனம்.
கவிக்காக்கா முன்பே படித்து உங்கள் வேதனையை தெரிந்துகொண்டேன்..சில டெக்னிக்கல் காரணங்கள்..கருத்து இப்பதான் இட முடிந்தது
பிரிவு கொடுமையானது காக்கா
//மகள்...
ஊட்டி வளர்த்த பொம்மைகள்
இறந்து கிடக்கின்றன.
மகன்...
ஓட்டி யுடைத்த வாகனங்கள்
இரைந்து கிடக்கின்றன.
மனைவி...
மடித்து வைத்த உடுப்புகள்
கலைந்து கிடக்கின்றன/// இப்பிரிவை அனுபவித்தவன் என்பதால் இதனை படிக்கும்போது கண்ணீர் வந்துவிட்டது..கொஞ்சநாள் என்றாலும் பொறுக்கமுடியாதது இது
விசாலம் என்னை விடுவதாயில்லை:
கூளமாய்க் கலைந்த
.. குரல்மனம் உதிரத்தின்
நாளமாய்த் தொடுத்த
.. நயத்தகு புதினத்தில்
உன்னையே உருக்கி
.. உணர்ச்சியில் கிடந்தாய்
பொன்னையே பெருக்கும்
.. புதுக்கவி படைத்தாய்
வாகனக் கற்பனை
.. வசந்த விழாக்களில்
மோகனச் சொற்கொளும்
.. மகிழ்ந்தே உலாவரும்
நாக்கில் வாய்மை
.. நற்கவியில் புதுமை
வாக்கில் தூய்மை
...வாய்த்தவுன்றன் வளமை
நெஞ்சில் உறையுமென்
...நீங்கா உணர்வெலாம்
வஞ்சித் துறையினில்
...வாழ்த்தி அமர்ந்தனன்
சுட்டெறிக்கும் வெயிலின் நடுவே
சுகம் தரும் தென்றல்
சபீர்
இட்ட கவிதை இமயமென்றால்-பின்னுட்டம்
இட்ட கவிதை அதன் சிகரம்
படிப்பவர்களையும் கவிதை
படைக்கத்தூண்டும் பக்குவம்
இந்த வலைதளத்தில்
இரு கவிப்பேரரசுகளிடம் நாங்கள் சிக்கினோம்.
கவியன்பன்,
கேரள மழைக்குத் தமிழக அருவிகள் தண்ணீரைக்கொட்டுவதைப்போல தங்களின் விசாலமாகிப்போன கவிமனத்திலிருந்து கொட்டும் அருவியில் குளியல் சுகமாயிருக்கிறது!
இந்த உணர்வுகள்
நான் எழுதுபவை யல்ல
என்னை வைத்துத்
தன்னை எழுதிக் கொள்கின்றன
இவை
விண்ணிலிருந்து வீழும்
மழைத்துளி போல
என்னிலிருந்து
நீளுகின்றன
நான்
வார்த்தைகளை
வாங்கி விற்பவனல்லன்
வாழ்க்கையை உள்வாங்கி
நல்
வழிகளைச் சொல்பவன்
தாட்டியான கருத்தோ
பாட்டி சுட்ட வடையோ
எழுத்தில் சொல்வதில்
எனக்கொரு பாணியுண்டு.
எழுத்துகளைக் கொண்டு
ஏட்டினை நிறைக்காமல்
எண்ணங்கள் கொண்டு
இதயங்களை நனைப்பவன்
வழிநெடுக வாய்க்கும்
பூக்களை ரசிப்பவன்
வழி இலகுவாக சில
வாய்ப்புகள் சொல்பவன்
நிலவொளி இரவில்
நனையப் பிடிக்கும்
நனைந்ததை மறுநாள்
நினைக்கப் பிடிக்கும்
நினைத்ததை எழுத்தில்
வடிக்கப் பிடிக்கும்
புள்ளி வைத்தாலும்
அதில்
ஒல்லியாகவாவதொரு செய்தி
சொல்லி வைப்பவன்.
கயிற்றை யறுத்த
கன்றுக்குட்டியாக
லாயம் துறந்த
குதிரை யெனவும்
துள்ளித் தெரியும்
என் எழுத்து.
வாழ்க்கையையும் வார்த்தையையும்
வட்டத்துக்குள் முடக்கும்
சட்டம் பிடிக்காது
சட்டியில் உள்ளதே அகப்பையில் வரும்
என்
எண்ணங்களின் தூய்மையே
எழுத்தும் தரும்
இறைவன் வகுத்த
வரம்புக ளன்றி
ஏனைய மரபுக்குள்
முடங்காது
என் எழுத்து
நான் கவிஞ னல்லன்...
கருவி!
புலவனு மல்லன்...
புரவி!
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர் ஈனா ஆனா காக்கா!
மூத்த சகோ.அ.இ.காக்கா:
படிப்பவர்களைக் கவிதை படைக்கத் தூண்டும் என்பதிலிருந்தே கவிதையின் தாக்கம் உணரலாம்; குறிப்பாக, இத்தளத்தில் “கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை” எனும் ஆக்கம் தரும் ஆசான் மற்றும் அவர்களி பேராசான் இறையருட்கவிமணி ஆகியோரின் படைப்புகள் எனக்குத் தூண்டுகோல்;அவற்றைப் படித்து தான் என்னால் ஏதோ கிறுக்க முடிகின்றது.மேலும், இத்தளத்தில் கவிஞர்கட்கு வாய்ப்பளிப்பதும் காரணமாகும்; நெறியாளர் அவர்கட்கு நெஞ்சம் கனிவுடன் “ஜஸாக்கல்லாஹ் கைரன்”
கவிவேந்தே!
பிள்ளையுள்ளம் கொண்டு பிழிதேன் கவிபடைத்துக்
கொள்ளையடித் தாயெனைநீ கொட்டும் குளிர்ச்சொல்லால்
தாகமதைத் தீர்த்துத் தனிசுகம் கண்டேனே
வேகமாய் முத்தமிட வா
அஸ்ஸலாமுஅலைக்கும். அதிகாலையில் நான் கருத்திட வந்தேன் ஆனால் கருத்திடமுடியாமல் இங்கே கருத்துபெட்டகம் கோளாறு செய்ததால் கொஞ்சம் பொருத்திருந்தேன் ஆனாலும் அதேபோல் தொடர்ந்ததால் வெறுத்து போய் படுத்துறங்கினேன். இங்கே கோளாறு சரிசெய்யபட்டதால் மனம் இறங்கினேன். இப்ப எழுத இயங்கினேன்.
நான்
வார்த்தைகளை
வாங்கி விற்பவனல்லன்
வாழ்க்கையை உள்வாங்கி
நல்
வழிகளைச் சொல்பவன்
-------------------------------------------------
ஆமாம் தெரிந்ததுதான் நீங்கள் வார்தையை வாங்கி விற்பவரல்ல ஆனால் வார்தையை கைப்பற்றி வகைபடுத்தி நெறிபடுத்தும் "விற்பனர்" என்பதை மறுக்க முடியாது!.
இறைவன் வகுத்த
வரம்புக ளன்றி
ஏனைய மரபுக்குள்
முடங்காது
என் எழுத்து.
-----------------------------------
பிரம்பெடுத்து சரிபன்னவேண்டிய எழுத்தல்ல உங்களுடையது! இறைவழிபற்றி சிந்தையில் உதிக்கும் சுடர்! என்றும் பொழிவும் , இருளகற்றும் கதிர்கற்றை!கற்பனைகுதிரையை கடிவாளம் பற்றிய உறுதி மிக்கது. அல்ஹம்துலில்லாஹ். நீங்கள் எழுத்து வரம் பெற்றவர்.
நான் கவிஞ னல்லன்...
கருவி!
புலவனு மல்லன்...
புரவி!
---------------------------------------
நல்ல கவிஞன் அடிக்கடி சொல்லும் அடக்கமான சொல் நான் கவிஞனல்ல! சரிதான் ஒத்துக்கொள்கிறோம் . ஆனாலு புரவியல்ல(குதிரை) கவிதைதான் புரவி அதில் ஏறி பறக்கும் கவிவீரன் நீங்கள்.அதிரையில் புரவி என்று புரளியை கிளப்பாதிய கவிதை சக்கரவர்தியே!
Post a Comment