புலர்காலைப் பொழுதினிலே கிழக்கு நோக்கிப்
புறப்பட்டேன் நடைபயில வீட்டை விட்டு
மலர்மாலை கோத்ததுபோல் மக்கள் கூட்டம்
மருங்கினிலே நடந்துசெலும் காட்சி கண்டேன்
சிலர்வருவார் சிலர்போவார் எல்லா ருக்கும்
சிந்தனையோ நடைபயிலல் ஒன்றே யாகும்
பலர்வாழும் நம்நாட்டின் பெருமை எல்லாம்
பதிவாக நான்எண்ணி நடந்து சென்றேன்.
பக்கத்து நெல்வயலில் நாற்றின் காட்சி
பசுமையுடன் தோன்றியதை மகிழ்ந்து கண்டேன்
கொக்கொன்று எங்கிருந்தோ பறந்து வந்து
குறியாக வயல்நடுவில் அமர்ந்த பின்னர்
பொக்கென்று பின்பற்றிக் கொக்கின் கூட்டம்
புதிதாக அணியணியாய் அமர்ந்த தன்றே
இக்காட்சி இதயத்தில் பதிந்த போதில்
இன்னொன்றும் நடந்ததங்கு வியக்கும் வண்ணம்!
சிந்தனையின் வயப்பட்டேன் கிழக்கு வானில்
செங்கதிரால் இவ்வுலகை வண்ணம் தீட்டச்
செந்தழலின் உந்திவரும் இனிய தோற்றம்
செழுமையுடன் தோன்றிடவே உவகை கொண்டேன்
உந்தியெழும் உணர்வாலே பெருமை கொண்டேன்
உலகெங்கும் புகழ்பரப்பி உயர்ந்து நிற்கும்
இந்தியாவின் மூவண்ணக் கொடியைப் போன்றே
இக்காட்சி இருந்ததனை உளத்தில் கொண்டேன்.
கொடிநடுவில் சக்கரத்தைக் காணோம் என்று
கூர்ந்தேயான் வெண்ணிறத்தைப் பார்த்த போது
துடிப்பான பையனொரு கல்லைத் தூக்கித்
தொலைவிருந்து கொக்குகளை நோக்கி வீச
நடுப்பகுதிக் கொக்கெல்லாம் பறந்த போது
நன்றாக வட்டமொன்று சக்க ரம்போல்
வடிவாகக் கண்டதனை வியந்து நின்றேன்
வயல்நடுவில் மூவண்ணக் கொடியைக் கண்டேன்!
அதிரை அஹ்மது
30 Responses So Far:
கவிதைக்கு (படத்திற்கு)
கவிதை (கருத்து)எழுதிய
கவிதை (காக்கா நீங்களும் கவிதை தான் ..)
இறைவன் படைத்த இவ்வுலகில்
இயற்கை வண்ணங்களை அரவணைத்து
இந்திய சுதந்திரத்தின் கொடியாய் உங்கள்
இதயம் வர்ணிப்பதை இன்று மகிழ்வாய் கண்டேன்.(காண்கிறேன்)
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை நிருபர் எனும் இணைய இதழ்தன்னில்
அருமையான பல ஆக்கங்கள் நித்தம் நித்தம் வந்து மகிழ்வுதரும்.
இன்று சக்கரையெல்லாம் ஆறாக திரண்டே வீதிதனில்
வந்ததுபோல் அறிஞர் அஹமது(சாச்சா) வின் கவிதை தோரணம் வண்ணமாக வந்தது அகம்மகிழ!
கற்பனையாய் நம் நாட்டின் வண்ண கொடியை
சொன்னவிதம் பசும் புல் வயல் காட்டில்
விசும்பு தேனாய் சொரிந்ததுபோல்
மனதில் எங்கும் பரவச காற்று வீசிகொண்டே இருக்கிறது.
கவிதையோடு படங்களும் ஒர் புதுக்கவிதை.
இஸ்லாமிய கவிதைகள் மட்டுமல்ல, - இன்னும்
இந்திய தேசப் பற்றுக் கவிதைகளையும் வார்ப்பதில் நாங்கள் (முஸ்லீம்கள்)தான் முன்னிலை !
என்று பரைசாற்ற ஒது ஒரு சொட்டு !
இன்னும் மறுத்தால் தொடர்ந்து விழும் கொட்டு / குட்டு !
சிந்தனையின் வயப்பட்டேன் கிழக்கு வானில்
செங்கதிரால் இவ்வுலகை வண்ணம் தீட்டச்
செந்தழலின் உந்திவரும் இனிய தோற்றம்
செழுமையுடன் தொன்றிடவே உவகை கொண்டேன்
உந்தியெழும் உணர்வாலே பெருமை கொண்டேன்
உலகெங்கும் புகழ்பரப்பி உயர்ந்து நிற்கும்
இந்தியாவின் மூவண்ணக் கொடியைப் போன்றே
இக்காட்சி இருந்ததனை உளத்தில் கொண்டேன்.
-------------------------------------------------------------------------------------
அருமையோ அருமை !!!!!!!!!!!..........நம் எண்ணங்களில் இந்திய தேசத்தின் மீது கொண்டுள்ள பற்றையும் பறை சாற்றும் படைப்பு
ரம்மியமான கவிதை,நாட்டுப்பற்றில் நம்மவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை பறைசாற்றும் கவிதை
எண்சீரின் ஆசிரிய விருத்தம் யாத்து
....எழிலார்ந்த காட்சிகளை எல்லாம் சேர்த்து
விண்சார்ந்த காட்சிகளும் துணையாய்க் கூட்டி
....விந்தையான உவமைகளும் அழகாய்க் காட்டி
மண்சார்ந்த எம்நாட்டின் மதிப்பைப் பேண
....மாண்புமிக்க மூவண்ணக் கொடியைக் காண
நுண்சார்ந்த மொழிப்புலமை குழைத்த ஆசான்
நும்புலமை எண்ணியிங்கு வியந்தேன் நானே
வில்லியம் வோர்ட்ஸ்வித்
இந்தியச் சமவெளியில் நடந்தால்
இப்படியாகத்தான் எழுதிச் செல்வார்.
இந்த
மரபுக் கவிதை
பாட்டி சுட்ட வடை கதைபோல்
இலகுவாகப் புரிகிறதே
எப்படி?
ஐயா,
“தோன்றுத”லில்
“தொன்றுத”லென
சற்று சப்தம் குறைகிறதே…
ஏதும்
யாப்பு விதியின் விகாரமா
இல்லை
எழுத்துப் பிழையா?
கொடியேற்றுவதைவிட
அழகாயிருக்கிறது
நீங்கள்
கொடியியற்றிய விதம்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
//சிந்தனையின் வயப்பட்டேன் கிழக்கு வானில்
செங்கதிரால் இவ்வுலகை வண்ணம் தீட்டச்
செந்தழலின் உந்திவரும் இனிய தோற்றம்
செழுமையுடன் தொன்றிடவே உவகை கொண்டேன்//
செவ்வானம் மாலையில் சூரியன் மறையும்போதுதான் தோன்றும் என்று சொல்கிறார்களே சரியா? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
அது போகட்டும். அழகிய கற்பனை. அருமையான கவிதை . அதை கவிதையாக ரசித்தோம்.
மொட்டவிழ்ந்து மணம் பறப்பும்
மலரைப் போல
கட்டவிழ்ந்து இதழ் பொழிந்தது
மணிக் கொடி
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்
கொடியேற்றியதால்
இலகுவாகவே
முடிச்சவிழ்ந்தது
இனிய சூழல்
மொள்ளமாரியது.
நிகழ்ச்சி முடிந்து
வீட்டுக்குப் போகையில்
அள்ளக்கையிடம் அங்கலாய்த்தார் அமைச்சர்
நமது ஆட்சியில்
காங்கிரஸ் கொடியை
ஏன் ஏற்ற வேண்டும்?
போராடத் தயாரானார்.
கொடியேற்றுகையில்
கொடிதான்
சுலபமாக அவிழ்கிறது
சுதந்திரமோ
சிக்கித் தவிக்கிறது
கொடியேறி
கட்டவிழ்ந்ததும்
மலர் இதழ்களுக்குப் பதில்
கொட்டும்
ஜிகினாத் தாள்கள்
சொல்லவில்லையா
சுதந்திர இந்தியாவின்
தரத்தை?
செய்திகளைக்
கவனியுங்கள்
ஏதாவது ஒரு ச்சேனலில்
யாராவது
ஒரு அரசியல்வியாதி
கொடிக்கு பத்து
விகிதமென
கமிஷன் கேட்டிருக்கக் கூடும்.
பட்டொளி வீசிப் பறக்கும் கொடியே
பாட்டாளிக்கு விடிவதெப்போ?
கைதட்டியாச்சா
மிட்டாய் சாப்ட்டாச்சா
கலஞ்சி போ இந்தியனே
மச்சி
சொதந்திரம் கெட்ச்சாச்சி
வா
தலீவன்ட பட்த்துக்குப் போலாம்
கட மூடிட்வான்னு தெரியும் மாப்பு
நேத்தா
வாங்கி வச்ட்டேன்
சைட் டிஷ்
வாங்கிக்கோ
கெளம்பு
சொதந்தரத்த
கொண்டாடி கலாய்க்கலாம்.
(கொடி பறக்கிறதா...பதைபதைக்கிறதா?)
//“தோன்றுத”லில்
“தொன்றுத”லென
சற்று சப்தம் குறைகிறதே…
ஏதும்
யாப்பு விதியின் விகாரமா
இல்லை
எழுத்துப் பிழையா?//
எழுத்துப் பிழைதான்.
திருத்திவிடுங்கள் பதிவாளர்களே.
சுட்டலுக்கு மிக்க நன்றி கவிஞரே.
பலரின் சுதந்திர தினம் வளையப்பட்டியின் தவிலில் ஆரம்பிக்கிறது.எட்டு மணிக்கு இசை சங்கமம், பத்துமணிக்கு பட்டிமன்றம் , பதினோருமணிக்கு சூபர்ஹிட் திரைப்படம், இரண்டுமணிக்கு இன்பமாய் சிரிப்பது எப்படி அறிமுக நடிகை அல்பாயுசாவின் பேட்டி, நாலுமணிக்கு நகைச்சுவை அரசின் கலக்கல் காமெடி, ஆறுமணிக்கு மீண்டும் ஒரு சூபர்ஹிட் அறுவை, ஒன்பதுமணிக்கு நாதஸ்வரம் குழுவினருடன் நச் என்று ஒரு ஆட்டம், சுதந்திர தனத்தைப் போற்றுங்கள். அடுத்தநாள் ஆபீஸ் போகவேண்டும். ம்ம.. படு சீக்கிரம்...
ஐயா,
“தோன்றுத”லில்
“தொன்றுத”லென
சற்று சப்தம் குறைகிறதே…
ஏதும்
யாப்பு விதியின் விகாரமா
இல்லை
எழுத்துப் பிழையா?
--------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவிசக்கரவர்தி அவர்களின் சந்தேகம் சரி ஆனாலும் இங்கே "தொன்றிட"என்பது சரியனெவே நான் அறிந்தவரை சரி.இதற்கு காரணம் சாச்சா சொல்வார்கள்.
To Sabeer,
//கைதட்டியாச்சா
மிட்டாய் சாப்ட்டாச்சா
கலஞ்சி போ இந்தியனே........//
இந்த கவிதை காந்திஜெயந்தியிலும் குடிக்கும் குடிமகன் களின் லட்சனத்தை சொல்கிறது...கமென்ட்ஸில் எழுதினாலும் கணையாழிதரம்.
மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆனயிட்டோம்
"தொன்றிட"
ஏதும் தடை இருந்தால்
உன்னை தோன்டி எடுக்கவே துணிந்து விட்டோம்"
--------------------------------------------------------
இப்படி வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருந்தார் அதனால் இது சரியென நான் எண்ணினேன்.
//நடிகை அல்பாயுசாவின் பேட்டி//
//அல்பாயுசா//
ஈனா ஆனா காக்கா,
குசும்பு?
பெயரில் கவர்ச்சி ததும்பும் அதே வேளை...அல்பாயுசு...? யு மீன் இட்!
:-)
என்னாமாதிரி பொடி வைச்சு எழுதுறாங்க. அ.நி.காரர்களே...கத்துக்கோங்கப்பா.
இப்படிக்கு,
சபீர்
லாஸ்ட் பெஞ்ச்.
//இப்படி வைரமுத்து ஒரு பாடல் எழுதியிருந்தார் அதனால் இது சரியென நான் எண்ணினேன்.//
கிரவுன்,
அது அதைப் பாடியவன் படுத்திய பாடு. எழுதியவனின் ஏடு அல்ல.
காந்தியின் வரலாறை போற்றுகிறோம். மறைக்கப்பட்ட மற்றவர்களின் வரலாறு அதுவும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறுகளையும் வெளியே கொண்டுவந்தால்தான் அது சமத்துவத்தின் முதல் படியாகும்.'
உண்மயிலும் உண்மை!! அரபு நாட்டில்(மக்கா நகரில்) பிறந்து கல்கத்தாவில் குடியேறிய முஐய்னுதீன் எனும் இயற்பெயர் இருப்பினும் சுதந்திதத்திற்காக படிப்பைத் துறந்து பாழ்சிறையில் வாடியவர்; “சுதந்திரத்திற்கான பேச்சின் தந்தை’’(அபுல் கலாம் ஆசாத்) என்றே பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்;இறுதி வரை இயற்பெயர் மறக்கப்பட்டு மக்களால் ”அபுல்கலாம் ஆசாத்” என்ற பட்டப்பெயரிலேயே மதிக்கப்பட்டவர். அவரை இன்று மறந்து விட்டார்கள்; அவர்களைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்:
நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.
ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர்.
தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்என்று ஆசாத் வலியுறுத்தினார்.
அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில்ஆசாத் உறுதி காட்டினார்.
10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார்.
இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.
நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.
1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார்.
17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார்.
கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.
1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார்.
நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.
இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.
முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார்.
35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.
அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.
தொடரும் 1 of 2
தொடர்கிறது... 2 of 2
1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.
ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்
சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.
14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.
வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.
உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.
தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.
1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.
1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.
இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.
அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார்.
1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.
குறிப்பு: அன்னாரின் பட்டப்பெயர் எனக்கு இயற்பெயராய் இடப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்கின்றேன்!
--------------------------------------------
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
மூவண்ணக் கொடியில், எந்த வண்ணம் எங்கிருக்கும் என்னும் வரிசையை நினைவில் நிறுத்துதல் முன்பெல்லாம் மிகவும் கடினமாக இருக்கும். பச்சை கீழே இருக்குமா? அல்லது மேலே இருக்குமா? என்றெல்லாம் ஐயம் எழுந்த காலங்கள் உண்டு. இதை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்பது குறித்த ஒரு பத்திரிக்கையின் துணுக்குச் செய்தியைப் படிக்க நேர்ந்தது.
"உணவு பரிமாறுவதற்காக அம்மா வாழை இலை விரிக்கிறாள், பின் அதன் மீது சோறு இடுகிறாள், பின் அதன் மீது ஆணம் இடுகிறாள். இப்படி பச்சை இலை மீது, வெள்ளை சோறிட்டு, அதன் மீது ஆணம் இடும் வரிசையை மாற்றவோ மறக்கவோ முடியாதென்பதால் தேசியக் கொடியின் வண்ணத்தின் வரிசையை இப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்" -எனப் படித்த ஞாபகம்.
ஆனால், மேற்சொன்ன வரிசையை விட மிகவும் நேர்த்தியான வரிசை அஹ்மது அப்பா சொன்ன இந்த கவித்துவ வரிசை.
பச்சை பசேல் வயல்வெளியில், கொக்குகளின் அமர்வதினில் , கதிரவனின் செங்கதிரில், பாலகனின் கல்வீச்சில் தேசத்தின் கொடிகண்ட கவிஞரின் தற்குறிப்பேற்ற விதம்..... ஆஹா..ஆஹா.. உலகத்தரம் வாய்ந்த கற்பனையும் கவிதையும், மொழியறிவும் !!
குறிப்பு:
குழம்பு என்பதற்கு ஆணம் என்பது தான் தமிழ்ச் சொல். 'வெஞ்சனம்' என்னும் இன்னொரு சொல்லும் இருக்கின்றது.
http://ta.wiktionary.org/wiki/ஆணம்
//நிகழ்ச்சி முடிந்து
வீட்டுக்குப் போகையில்
அள்ளக்கையிடம் அங்கலாய்த்தார் அமைச்சர்
நமது ஆட்சியில்
காங்கிரஸ் கொடியை
ஏன் ஏற்ற வேண்டும்?
போராடத் தயாரானார்.//
படிக்கும்போது முன்பு கேட்ட ஒரு துணுக்கு நினைவுக்கு வந்தது.
அமைச்சர் உதவியாளரை அழைத்து ஒரு சிறிய பிலிப்ஸ் ரேடியோ வாங்கிவரச்சொன்னாராம். உதவியாளர் வாங்கிவந்தார். உடனே அதை இணைப்பில் பொருத்தி இயங்கச்செய்தபோது செய்திகளின் நேரம். ஆரம்பித்தது ரேடியோ .
" இது ஆல் இந்தியா ரேடியோ" உடனே அதை அமர்த்திவிட்டு அமைச்சர் கோபமாக உதவியாளரைக்கூப்பிட்டு கத்தினார்.
" உன்னை பிலிப்ஸ் ரேடியோ வாங்கச்சொன்னால் யாரைக்கேட்டு ஆல் இந்தியா ரேடியோ வாங்கினாய்?"
" இல்லை ஐயா அது பிலிப்ஸ் ரேடியோதான்"
" யோவ் அதுவே தன்னோட பெயர் சொல்லுது இது ஆல் இந்தியா ரேடியோன்னு போய் குடுத்துட்டு பிலிப்ஸ் ரேடியோ வாங்கி வாய்யா"
(அஸ்ஸலாமு அலைக்கும். நான் முன்பு எழுதியதை மறுபடியும் இங்கே பதிகிறேன்).
சுதந்திர தேசமா இந்தியா?
நேற்று என் பிள்ளையின் பள்ளியில்,
சுதந்திர கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!
கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்,
வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்...
நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகளை கண்ட பின்,
என் மனம் சிந்தித்தது....
கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய் ஒரு சிறுவன்னுக்கேனும் தந்தால்?
இந்தியா மானம் காப்பாற்றப்படுமே?
இப்படி நாட்டில் உள்ள கொடிகளை கழற்ற என் மனம் விரும்பினாலும்...
எனக்குச் சுதந்திரம் இல்லை-
நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!
(ஒரு காள் வெள்ளையன் ஆழ்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)
-----தபால்காரன்.
crown.
// கணையாழிதரம்.//
கணையாழி நகல் எடுக்கப்பட்டு கவியின் பெயர் தாங்கி முகநூலுக்கு கஸ்டம்ஸ் வரி கட்டாமல் ஏற்றுமதியாகி விட்டது.
இப்போது அங்கே இது TALK OF THE TOWN.
சுதந்திர மென்ன சந்தையி லேபோய்ச்
சுகமுடன் வாங்கியதா? --இங்கே
இதந்தருங் காற்று நம்மிடம் வந்த
இலவச இணைப்பதுவா?
நாயடி பேயடி நலியும் இடுப்படி
எத்தனை அடிகளடி! --நல்லோர்
போயடி தாங்கிய பலனடி இன்றுநாம்
பார்க்கிற படிகளடி!
வீர சுதந்திரம் விளம்பிய வீரரின்
வாய்கள் கிழிந்ததடி! --அந்த
வீர சுதந்திரம் இன்றுள தோற்றம்
மிகவும் இழிந்ததடி!
எவரின் சுதந்திரம் எவர்பறிப் பாரென
எவர்க்கும் தெரியலடி! --இங்கே
எவரின் உரிமையை எவருடைப் பாரென
யாரும் அறியலடி!
வீர சுதந்திர மென்பதெலா மிங்கே
வாய்ச்சொல் வீரமடி1--நெஞ்சில்
ஈர மிலாதவர் வீர சுதந்திரம்
எண்ணுதல் கோரமடி!
அன்பிற்கினிய சகோதரர் மணிக்கவி அதிரை அஹமது அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
வருடமெலாம் வளமோடு வாழ்க - (குல்லாமிந்தபிஹைர்) ஈகைப்பெருநாள் வாழ்த்துக்கள்
உங்களின் மூவண்ணக் கவிதையைக் கண்டேன். யாப்புக்குள் சொற்களை அடுக்குகிறேன் பார் என்று ஒவ்வொரு சொல்லையும் உடைத்து உடைத்து சிதைத்து எடுப்பார்கள் சிலர். அது போதாதென்று எதுகையும் மோனையும் கைகூடவில்லையென்று யாருக்குமே தெரியாத பொருளாலும் சரிப்பட்டுவராத ஒரு சொல்லைக் கொண்டுவந்து இடையில் திணிப்பார்கள். அது மலங்க மலங்க விழித்துக்கொண்டு அங்கே அனாதையாய் நிற்கும்.
எளிமையான சொற்களுக்குள் வலிமையான உயிரைத் தருவதான் அழகான கவிதை. ஜீவனுள்ள கவிதை. அப்படியான எளிமை + வலிமையை பாரதி படைத்தான். கண்ணதாசன் அப்படியே கொட்டிக்கொடுத்தார்.
உங்கள் கவிதையை முதலில் வாசித்தபோது எனக்குள் சட்டென்று நுழைந்து மகிழ்வினைத் தந்தது இந்த எளிய சொற்கள்தாம். எளிய சொற்களும் யாப்பும் இணைவது சாதாரணமான விடயமல்ல. கவிதை தன் நாசிக்குள் சுவாசமாய் இருந்தால்தான் அது இயலக்கூடியதாய் இருக்கும்.
இந்த மூவண்ணங்களையும் கொண்டுவர உருவாக்கிய காட்சிகள், கவிதையின் நேரடிப் பொருளாகச் சொல்லாமல் உட்பொருளாக ஓர் உண்மையைச் சொல்கிறது. அது அற்புதமாய் இருக்கிறது. இந்தியாவின் உயிர் கிராமங்களில்தான் வாழ்கிறது என்பதுதான் அது. பசுமையே தேசத்தின் அடையாளமாக மேன்மையாக இருக்கமுடியும். இயற்கையை அழிக்காமல் மேலும் ஆக்குவதற்குப் பாடுபடுவதே தேசத்தின் கடமையாக இருக்கமுடியும். இப்படியெல்லாம் சொல்கிறது இந்தக் கவிதை.
இக்கவிதையில் கொண்டுவந்த காட்சிகள் மறைந்துபோகின்ற காலம் ஒன்று வந்தால் அது இந்தியாவின் மூச்சு அடங்கிப் போகும் முற்றுப் புள்ளிக்காலம்தான்.
அதை உட்பொருளாகக் கொண்ட இக் கவிதையை அடடா..... என்று பாராட்டி ரசித்தேன்.
அன்புடன் புகாரி
/எளிய சொற்களும் யாப்பும் இணைவது சாதாரணமான விடயமல்ல. கவிதை தன் நாசிக்குள் சுவாசமாய் இருந்தால்தான் அது இயலக்கூடியதாய் இருக்கும்./
"கவிதையே மூச்சு” என்று கருதுகின்ற கவிநண்பர் அன்புடன் புகாரி மீண்டும் வருகை புரிந்து நல்வாழ்த்துகள் கூறியது கண்டு பேருவகைக் கொண்டேன்.
எளிய சொற்களாலும் யாப்பின் விதிக்குட்படுத்தி எழுத முடியும் எளிய நடையை விரும்புவோர்க்காக; கடினமாக- சீர்களைப் பிரித்தும் யாத்திட முடியும் அவ்வண்ணம் இருக்க வேண்டும் என்று விரும்புவர்கட்காக. இவ்விரண்டும் தன்னால் இயலும் என்று நிரூபித்த வண்ணம் தொடர்ந்து யாத்து வரும் இத்தமிழறிஞரான என் ஆசான் அவர்களின் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்தும் உங்களின் பண்பட்ட குணத்திற்கும், ஆழமான அறிவுக்கும் என் வாழ்த்துகள்.
அன்புடன் புகாரி அவர்கட்கு,
//யாப்புக்குள் சொற்களை அடுக்குகிறேன் பார் என்று ஒவ்வொரு சொல்லையும் உடைத்து உடைத்து சிதைத்து எடுப்பார்கள் சிலர்.//
இஃது இலக்கணத்தின் விதி என்பதை என் ஆசான் அவர்கள் கூட கீழ்க்காணும் அடியில்
//நன்றாக வட்டமொன்று சக்க ரம்போல்//
என்று சீர் பிரித்து யாத்திருப்பது (காய், காய், மா, தேமா எனும் வாய்பாட்டின் அமைப்பில் ஓர் எண்சீர் விருத்தம் இருந்தாக வேண்டும் என்றால் இப்படித்தான் // சக்க ரம்போல்// என்று உடைத்தெழுத வேண்டும்.
என்பதை கற்றவர்கள்; எனக்குக் கற்பிப்பவர்கள்.
வெண்பாவில் தளைதட்டல் வராமலிருக்க இப்படிச் சீர்பிரிக்க வேண்டிய அவசியம் உண்டாவதும் “திணிப்பு” என்பதாக ஏற்க முடியாது. அப்படி சீர்பிரிக்கப்பட்ட எளிய சொற்களும் உள; கடினமானவைகளும் உள. இங்கு ஆசான் அவர்கள் எடுத்துக் கொண்ட கருவில் “தான் நடைபயிலும் தருணம் கண்டவைகள்” என்பதிலிருந்தே “நடை” எளிமையாக இருக்க வேண்டும் தீர்மானித்து விட்டுத் தான் சொற்களையும் எளிமையாக்குகின்றார்கள். ஆனால், சீறாப்புராணம்” யாத்த உமறுப்புலவர் மற்றும் யாப்புக் கடலில் நீந்திய புலவர் பெருமக்கள், இவ்வாசான் அவர்களின் பேராசான் இறையருட்கவிமணி அவர்களும் மரபுப்பாவில் கடினமாக உள்ளதாக நீங்கள் கருதும் சொற்களைச் சீர்பிரித்து பாவிலக்கணம் கூறும் விதிக்குக் கட்டுப்பட்டே யாத்தும் அப்பாக்கள் தமிழறிஞர்களால் புகழப்பெற்றும் தமிழ்ப்பாடப் புத்தகங்களில் அச்சேற்றப்பட்டும் இருப்பதும் கடினமானவைகளும் சீர்பிரிக்கப்பட்டவைகளும் ஏற்கப்படும்; பாடப்படும் என்பதையே சுட்டிக்காடுகின்றன.
Post a Comment