Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழைய குருடி கதவைத்திறடி ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | August 25, 2012 | , ,


புனித ரமழான் மாதம் முடிந்த கையோடு பழைய குருடி கதவைத்திறடி என்பது போல் நம் ஊரில் மின்தடை மிக மோசமாக அதிகரித்துள்ளது. கண்ட நேரங்களில் மின் அளிப்பு துண்டிக்கப்படுவதால் அனைத்து தரப்பு பொது மக்கள், வியாபாரிகள், சிறு தொழில் செய்வோர் என பல தரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவ மழை பொய்த்துள்ளதால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக எந்த குளத்திலும் தண்ணீர் தேக்கம் இல்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கப்பட்டும் பிரயோஜனம் இல்லை. இன்னும் பதினைந்து கூடங்குளங்கள் வந்தாலும் இப்படித்தான் இருக்குமென்றால் எதற்காக அவைகள் என தெரியவில்லை. 

இந்த நிலை இன்னும் நீடித்தால் மின் சாதனங்களை வைத்து தொழில் செய்வோர் உதாரணமாக ஜெராக்ஸ், ரத்தப்பரிசோதனை நிலையம், ஃபிசியோ தெரபி, ஜூஸ் பிழியும் மிக்ஸி போன்ற தொழிலில் ஈடுபடும் நபர்கள் அந்த தொழிலை விட்டு வேறு ஏதேனும் தொழிலுக்கு செல்ல வேண்டி வரும். நாட்டில் தேவையில்லாமல் பொதுமக்களுக்காக கொடுக்கப்படும் இலவசங்களும், மானியங்களும் மத்திய, மாநில அரசுகளால் ஒழிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு அதற்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் போதிய நிதி தாராளமாக ஒதுக்கப்பட வேண்டும்.

விமானத்தில் கொழும்பிலிருந்து திருச்சி வரும் வழியில் மேலிலிருந்து கண்டால் இந்தியாவின் தென்கோடியான தனுஷ் கோடியிலிருந்து ஆரம்பிக்கும் வறட்சி மாநிலம் முழுவதுமாக பரவிக்கிடக்கிறது. இப்படியே வறட்சி தொடர்ந்து பருவ மழை பொய்த்துக்கொண்டு விவசாயம் மெல்ல, மெல்ல சிரமமின்றி லாபம் ஈட்டும் வேறு தொழிலுக்கு நகருமேயானால் வங்கிகளில் பெருத்த பண இருப்பு இருக்கும். ஆனால் வாய்க்கு நல்ல சாப்பாடு கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.

காலப்போக்கில் மக்கள் தண்ணீருக்காக ஆழ்குழாய்க்கிணறுகள் தோண்டும் பொழுது இடையில் பெட்ரோல் கிடைத்தாலும் யாருக்கு பெட்ரோல் வேண்டும்? தண்ணி கிடைக்கிதாண்டு பாருங்க... என்று தான் கேட்க நேரிடும். ஒரு காலம் ஆகஸ்ட் மாதத்தில் வானம் வடகிழக்கில் மேகம் கருத்து இருட்டு கசமாகி நல்ல மழையை பொழிந்து சென்றது. அதனால் மக்களின் மனமும் குளிர்ந்திருந்தது. தெருவில் கூறிச்சென்ற கலர்க்கலரான காய்ச்சல் குருவியுடன் பருவ மழையும் கண்மாசியாக்காணாமல் போய் விட்டதோ? என்னம்மோ? தெரியவில்லை.

விமானத்தில் வானில் பறக்கும் பொழுது கருமேகங்கள் பஞ்சு மிட்டாய் போல் தாராளமாய் குவிந்திருந்தாலும் மழை பொழிய அதன் எஜமான் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வரவில்லை போலும். 

அது என்னம்மோ தெரியவில்லை. மின்சாரத்திற்கும், நமதூர் மரங்களுக்கும் எதோ தொடர்பு இருக்கும் போல் தெரிகிறது. அது நல்ல தொடர்பா? இல்லை கள்ளத்தொடர்பா? தெரியவில்லை. காரணம் மின்சாரம் இருந்தால் தான் மரங்களும் தலை விரித்தாடி காற்றை வீசச்செய்கின்றன. மின்சாரம் இல்லையேல் மரங்கள் ஏதோ 144 ஊரடங்கு உத்தரவு போட்டது போல் கப்சிப் என அமைதியாய் நின்று விடுகின்றன.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய நிர்வாக இயக்குநர் திரு. ரமணனிடம் கேட்டால் வட கிழக்குப்பருவ மழை ஆரம்பிக்க இருப்பதால் இடியுடன் கூடிய மழை இன்றோ, நாளையோ பெய்யலாம். அல்லது பெய்யாமலும் போகலாம் என்கிறார். இதை வானத்தைப்பார்த்து செக்கடிமோட்டிலிருந்து நம்ம காதராக்காவே ஈஸியாக சொல்லி விடுவார்களே? இதற்கு எதற்கு சென்னையில் வானிலை ஆய்வு மையம் என சில பேர் கேட்டு விடுகிறார்கள். என்ன செய்ய?

வீடுகளில் வைக்கப்பட்டுள்ள இண்வெர்ட்டர்களெல்லாம் வேலைப்பளு தாங்க முடியாமல் ஓவர் டைம் பார்த்து பல்லிளித்து படுத்து விடுகிறது. கொசுக்களும் மக்களின் ரத்தத்தை குடித்து தன் முதுகில் சுமந்த ரத்தத்தை தூக்க முடியாமல் மக்களின் தோல் மேலேயே தூங்கி விடுகிறது களரி சாப்பாட்டில் நல்ல் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு 7 அப்புக்காக காத்திருப்பவர்களைப்போல. 

பூமியிலிருந்து 57 கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கிரகத்திற்கு 'கியூரியாஸிட்டி ரோவர்' விண்கலம் சென்றிருக்கலாம். ஆனால் தொடர் மின்சார அளிப்பிற்கு வேறு ஏதேனும் கிரகத்திற்காவது சென்று ஒரு நல்ல காண்ட்ராக்ட் போட்டு வந்தால் நல்லது. மீன்கள் உலாவ வேண்டிய செக்கடிக்குளத்தில் இன்று மாடுகள் உலாவி வருகின்றன. 

போதிய மரங்கள் இருந்தால் மட்டுமல்ல மக்களின் மனங்களும் சுத்தமாகி மனித நேயம் தாரளமாய் எங்கும் பரவிக்கிடந்தாலே இறைவன் மழையை தாரளமாய் நமக்கு இறக்கி அருள்வான் என்பது மட்டும் திண்ணம்.

பறவை, விலங்கினங்களுக்கும் நாம் அன்றாடம் சரிவர குடிக்க நீர் புகட்ட வழி வகை செய்ய வேண்டும். பிறகு இறைவன் நமக்கு கருணை காட்டி அருள் மழை பொழியச்செய்வான்.....இன்ஷா அல்லாஹ்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது

20 Responses So Far:

அதிரை என்.ஷஃபாத் said...

தலைப்பில் இருக்கும் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?

Anonymous said...

மு.செ.மு. அவ்ர்கலெ //அது என்ன பொருள் 7 அப்புக்காக காத்திருப்பவர்களைப்போல//

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அது என்ன பொருள் 7 அப்பு//

இயற்கையாக செரிமானம் இல்லாதவர்கள் குடிக்கிற பானம். அல்லது ஸ்டையிலுக்கு குடிக்கிற குடலை அரிக்கும் பானம்.

7-up
seven up

Anonymous said...

சகோ.நெய்னா( அஜ்வா )அவர்கல் போய் இதுக்குதான் இனிப்பு கொடுத்தரா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இருட்டிலும் அருமையான நகைச்சுவை!
அ. தி. மு. க. வும், தி. மு. க. வும் மாறி மாறி நானா நீனா என்ற போக்கில் துவங்கிய திட்டங்ளை ரத்து செய்வதும் என்னால் நீ பேர் வாங்குவதா அது எத்தனை கோடியாயிருந்தா எனக்கென்ன என அதற்கு முட்டுக்கட்டை போடுவதும் வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆள்பவர்களுக்கும் அதற்கு அடுத்தவர்களுக்கும் நாட்டின் வளர்ச்சியில் அக்கரையே இல்லை. இதையெல்லாம் பார்க்கும் போது அந்த நாட்டிடமே அடிமையாயிருந்து அவனின் நவீன முன்னேற்றங்களை சுவைக்கலாம் போலிருக்கிறது.

ZAKIR HUSSAIN said...

கொசுக்கள் தோல் மீது உறங்கும்போதெல்லாம் இனிமேல் 7UP க்கு காத்திருக்கும் சாப்பாட்டு 'தாதா'க்கள் ஞாபகம் வரும்.

// மீன் கள் உலாவும் குளத்தில் மாடுகள் உலாவுகின்றன. //

தற்போதைய வரட்சியையும் , மழை பொய்த்துபோனதையும் இதை விட யாராலும் தெளிவாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே...

Aboobakkar, Can. said...

பழைய குருடி கதவை திறடி மின்வாரியத்திற்கு மட்டுமல்ல நோன்பில் தொழுதுவிட்டு பிறகு தொழுகயை விட்ட நம்ம சகோதரர்களுக்கும்தான்??????????

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தன் குருட்டுப்பொண்டாட்டியை வேதனை செய்து விட்டு வெளியே சென்ற கண்வனுக்கு அவளை விட மிக மோசமான பெண் கிடைத்தாலாம். எனவே தன் குருட்டுப்பொண்டாட்டியே தேவலாம் என்றெண்ணி 'பழைய குருடி கதவைத்திறடி' என தன் வீட்டு கதவைத்தட்டிக்கொண்டு வீட்டினுள் வந்தானாம். அது போல நோன்பு மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் நிலவிய மின் வெட்டு தேவலாம் போல் இருக்கிறது இப்பொழுது ஊரில் நிலவி வரும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின் வெட்டு. இரவில் பிள்ளைகளின் அலறலும், கொசுக்களின் கோர ரீங்காரமும், தாரை வார்க்கும் வியர்வையும் எம்மை கற்காலத்திற்கே கொண்டு சென்று விடுகின்றன. செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் வாழ முடியுமோ? இல்லையோ? மின்சாரம் அங்கு சல்லிசா கிடைக்குமா? என நாசா கண்டுபிடித்து சொன்னால் நல்லது.

அப்துல்மாலிக் said...

கொசுக்கடிக்கும், வேர்வைக்கும் பயந்து அனுபவித்து இதைவிட என்ன சொல்லிவிடமுடியும் என்றதோனியில் எழுதிருக்கே..
ஆமா “கொடநாட்டுலே” மட்டும் தொடர் மின்சாரம் இருக்கே அது எப்படி?

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் மு.செ.மு.நெய்நா அவர்கள் விடுப்பில் ஊர் வந்திருப்பதாக யூகிக்க முடிகின்றது. இனி எல்லாவற்றிற்கும் “நமக்கு நாமே” என்று வாழ வேண்டிய கட்டாயம் வரும்; அரசை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது; அரசு என்பது ஐந்தாண்டுகட்கு ஒரு முறை தேர்தலில் நின்று தன் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும்; கட்சி விசுவாசிகட்கு கொள்ளை வியாபாரம் செய்து கொள்ள வசதி வாய்ப்புகளை செய்து கொள்ளவும் மட்டும் என்றாகி விடும். இஸ்லாமிய முறையில் (காந்தி விரும்பிய வண்ணம் உமர்(ரலி)அவர்களின்) ஆட்சி முறை இல்லாத வரைக்கும் உலகம் முழுவதும் இருண்ட ஆட்சியும்; அடக்குமுறைகளும் தொடரும். எல்லாவற்றையும் விட க்யாமத் நாளின் அருகில் இருப்பதற்கான அடையாளமாக பற்பல விடயங்கள் நம் கண்முன்னே நடந்தேறி வருகின்றன:

1) மக்கட்க்கு கொடுமையான ஆட்சியாளர்கள் வருவார்கள்
2) உயர்ந்த கட்டிடம் கட்டுவதில் மக்கள் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்

இவைகள் இன்று உலகம் முழுவதும் நாம் கண்ணால் காண்பவைகள்;இன்னும் எத்தனை முன்னறிவிப்புகள் நாம் ஹயாத் ஆக இருக்கும் வரை காண்போம்; எனவே, மேற்கூறிய வண்ணம் “நமக்கு நாமே” என்ற முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இதனை மர்ஹூம் முஹம்மத் அலிய் ஆலிம் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்; அவர்கள் பல வருடங்கட்கு முன்பு சொன்னது இன்று எல்லாரும் “ஜெனரேட்டர்” வாங்கி பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதைக் கண்டு வியந்தேன்! ஆம். எவ்வளவு முன்னறிவிப்பாக அவர்கள் ‘நாம் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே என்று தான் வாழ வேண்டி வரும்’ என்று சுமார் 20 ஆண்டுகட்கு முன்பு சொன்னார்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த பதிவுக்கும், இதுவரை வந்த கருத்துக்களுக்கும்...

இப்படிக்கு
கொசுக் கடி என்பது யாது என்று ஆய்வு எழுதும் அளவுக்கு கடிவாங்கிய அப்பாவி ! :)

sabeer.abushahruk said...

எம் எஸ் எம்,

மொத்த ஊர்க்காரர்களின் ஆதங்கமும் உங்கள் மூலம் எதிரொலிக்கிறது.

//மீன் நீந்தும் குளத்தில் மாடு// நல்ல எடுத்துரைப்பு.

சென்ற முறை ஊர் சென்றிருந்தபோது கொசுவுடன் எடுத்த பேட்டிபோல ஒன்றை எதிர்பார்க்காலாமா?


KALAM SHAICK ABDUL KADER said...

அதிரையில் கொசுக்கடி
அபுதபியில் மூட்டைப்பூச்சிக்கடி
அப்பப்பா என்ன நெருக்கடி
அவ்வளவு தூரம் வாழ்கையும் கசந்ததடி!

அமெரிக்காவில் எலியும் கரப்பான் பூச்சியும் இருப்பதை நினைத்துக் கொண்டு சமாதானம் ஆகி விடலாமா?

எங்கே நிம்மதி என்று ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தானா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) ஊரில் இருக்கும் கையோடு ஓடி ஒளியும் மின்சாரத்திற்கு ஒரு வாழ்த்துச் செய்தியை மின்சார வாரியத்திடம் பதிஞ்சுட்டு வந்த நல்லா இருக்கும்.

அதில்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."

ன்னு

ஒரு குறள் கொடுத்து வாங்க !

மேலும் வேனும்னா இதுல ஏதாவது எடுத்து கொடுத்து வாங்க !

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மின்சாரத்தை கண்டு பிடித்தவர் யார் ?

"________________________"

மின்சாரத்தை 'கட்' செய்வது யார் ?

"தமிழ்நாடு மின்சார வாரியம்"

பாஸ் மார்க் 100க்கு 50 (50/100)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

///Aboobakkar, Can. சொன்னது…
பழைய குருடி கதவை திறடி மின்வாரியத்திற்கு மட்டுமல்ல நோன்பில் தொழுதுவிட்டு பிறகு தொழுகயை விட்ட நம்ம சகோதரர்களுக்கும்தான்??????????///

உண்மை காக்கா

Msm N.....

அபூபக்கர் காக்கா சொன்னவைகளும் இந்த பதிவின் தலைப்பிற்கு மிக பொருத்தமானது.

KALAM SHAICK ABDUL KADER said...

//எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.//

இக்குறள் இப்பொழுது மி.வா.க்குப் பொருந்தும்

இப்படிக்கு,

அவசரப்பட்டு நன்றி செய்தியிட்டு வருந்தும்

அன்பன்.

ரமலானில் தடையிலா மின்சாரம் வழங்கி விட்டதாக நன்றி கூறும் கடிதம் கொடுத்த செய்திக்கு அடியேனும் நன்றென்று பின்னூட்டம் இட்ட பின்னர் அறிந்தேன்; நாம் அவசரப்பட்டு விட்டோம் என்று. அதனால் நாம் நன்றி கூறி கடிதம் கொடுத்தும் ‘நன்றி மறந்த” மி.வா. க்கு மேற்கூறிய குறள் பொருத்தமாக உள்ளது.

Yasir said...

மின்சாரத்துறையில் நல்ல முதலீடு இல்லாத வரையில், செய்யப்பட்ட முதலீடுகளை முதலைகள் முழுங்கி கொண்டு இருக்குவரையிலும் இவ்வவலம் தொடரும்..இரவில் கண்ணிருந்தும் குருடர்களாகதான் இருப்போம்...நகைச்சுவை கலந்து எழுதப்பட்ட சீரியஸான ”ஷாக்”

//செக்கடிமோட்டிலிருந்து நம்ம காதராக்காவே// அதிரைக்கே உரிய குசும்பு

Adirai pasanga😎 said...


அஸ்ஸலாமு அலைக்கும்

தேர்தலுக்கு தேர்தல் புதுப்புது கட்சிகள் தோன்றுவது கூட்டனிகள் உருவாவது நல்ல கொள்கைக்காக அல்ல மாறாக அவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்வதற்காகத்தான். மக்கள் திருந்தாவிட்டால் அவதிப்படப்போவது அவர்கள் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளும் தான். ஒவ்வொரு தடவையும் அளிக்கப்படும் இலவசங்களும் வெற்று வாக்குறுதிகளும், தேர்தல் கால கையூட்டுக்களும் அற்ப சந்தோசங்களே என்பதனை உணர்வதில்லை. ஆட்சி அமைந்த பின் அங்கலாய்த்து என்ன பயன்?

மீண்டும் - ""பழைய குருடி கதவைத் திறடி"" தான்

KALAM SHAICK ABDUL KADER said...

எளிமையாக விரட்டலாம் வாங்க!!!

நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும்
ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!!
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...
தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.
ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு