அடுத்து என் நேர்த்திக்கடன் பயணம் மேற்கு நோக்கி! மேற்கு நோக்கிய பயணத்தில் கோட்டைப்பட்டினம். கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்ஹா! அது 30 ஆண்டுகளுக்கு முன்பு அழகான கடற்கரை. பறந்த வெளியில் அந்த தர்ஹா தனியே நின்றது. வெண் நுரை கக்கும் கடல் அலைகள் கரை நோக்கி வந்து வந்து அதை முத்தமிடும் காட்சி கவிரசனை கொண்ட கண்ணிலும் மனதிலும் கற்பனை ஊற்றுக்களைத் தோண்டும். கரை ஓரம் டீ கடை, அடுத்து சர்க்கரை பத்தி, சாம்புராணி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்கும் கடை. நாகூரைப் போல ரெடிமேட் சர்க்கரை அங்கே இல்லை. வாடிக்கையாளர் கேட்கும் அளவு தராசில் ஒரு தட்டில் படிக்கல்லும் மறு தட்டில் சர்க்கரையும் போட்டு நிறுத்துத் தருவார்கள். எப்பொழுதும் நிறுவையில் தராசின் சர்க்கரைத் தட்டு சற்றுத் தாழ்ந்தே இருக்கும். அதாவது கேட்ட அளவை விட சர்க்கரை கூடுதலாக இருக்கும். நாகூர் சிஸ்டம் அங்கே இல்லை. நாணயமான கடைக்காரர். நேர்வழியில் பொருள் தேடும் நெஞ்சு. என்றைக்கும் ஏழயாய்தான் இருப்பாரோ!?
நான் 10-12 வயது பையனாக இருக்கும்போது அங்கொரு கல்யாணத்திற்கு என் மாமாவுடன் போயிருந்தேன். (அவர் மூத்த மகளை நிக்காஹ் செய்து தந்தவரும் அவரே). இரவு கல்யாணம். இரவு எட்டு மணிக்கு சகன் விருந்து. இரவு 11 மணிக்கு நிக்காஹ் முடிந்தது. வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கெல்லாம் படுக்கை பள்ளியில்தான். அப்போதெல்லாம் பஸ் கிடையாது. போனால் கூண்டு வண்டி, பெட்டி வண்டி கட்டித்தான் போக வேண்டும். ராஜாமடம் பாலம் அப்போ கிடையாது. தண்ணீர் முழங்கால் அளவு ஓடும்போது வேட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுபோக வேண்டும். நுங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து ஓடினால் படகு வரும். அதில் ஏறிக் கடக்கலாம். அதற்கு ஒரு நபருக்கு கால் ரூபாயோ அரை ருபாயோ கட்டணம் செலுத்த வேண்டும்.
காலை பசியாற மாப்பிள்ளை வீட்டிலேயே. நாங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கெஸ்ட்ஸ். காலை பசியாறல் சகனில் வந்தது. மொத்தம் அஞ்சாறு சகன். சகனில் இடியப்பம், எறச்சாணம், வட்டிலப்பம், கடப்பாசி, சவ்வரிசி, ரவ்வா போன்ர அதிராம்பட்டிண அய்ட்டங்கள் இல்லை. சகனில் இருந்தது தேங்காய்ப்பால் கஞ்சி! சகனில் கூடி இருந்த எல்லோரும் ‘திருதிரு’வென்று விழித்தார்கள். விழித்தவர்கள் விழிகளை விழிகளால் கண்ட ஒருவர் வாய் திறந்து சொன்னார்,
“இது இந்த ஊர் பழக்கம். குடியுங்கள்” என்றார். ‘பாம்பு திண்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கே!’ என்னும் முதுமொழி when you are in Rome do as Romans’s do என்பதுபோல.
கஞ்சியின் கூடவே தொட்டுக்கிட ஒரு பெரிய உருண்டை தேங்காய்த் தொட்டுக்கறியும் ஒரு தட்டையில் வந்தது. எங்கள் சகனில் எதைக் கொடுத்தாலும் சேடை சொல்லுமொரு நபரும் இருந்தார். அவர் சகன் பரத்தியவரைக் கூப்பிட்டு,
“ஒரு கிண்ணியில் நல்லெண்ணெய் தருகிறீர்களா?” என்று கேட்டார். இதைக் கேட்ட அவர் கொஞ்ச நேரம் விழித்தார். பின்பு,
“ஏன் நல்லெண்ணெய் கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். சகனில் இருந்த விகடர் தேங்காய்த் தொட்டுக்கறியைக் காட்டி,
“அரப்பு உருண்டை கொடுத்திருக்கிறீர்கள். நல்லெண்ணெய் கொடுத்தால் தேய்த்து குளிக்கத்தான்!” என்றார்.
இதைக் கேட்ட பலர் சிரித்து விட்டார்கள். ஆனால், அந்த வீட்டுக்காரரின் முகம் அவமானத்தால் சுருங்கி விட்டது. இது ஒரு அநாகரீகமான கிண்டல். பிறர் நிலை, பழக்க வழக்கம் அறியாமல் கிண்டல் செய்து பிறர் மனதை நோகடிப்பதை நம் மார்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் தோன்றிய மக்கள் எல்லாம் ஒரே பொருளாதார நிலையிலும் பழக்க வழக்கங்களிலும் இல்லை. நாகரீகமற்ற அந்த மனிதரின் கிண்டலை இன்று நினைத்தால்கூட அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அவர்கள் எப்பொழுதும் பிறரை மட்டம் தட்டியும் தாழ்த்தியும் பேசிக் கொண்டிருப்பதையே பொழுது போக்காக்க் கொண்டிருப்பாரகள். அவர்கள் வீட்டுக் குப்பையைக் கிண்டினால் கப்பல் கப்பலா ஏற்ற நிறைய சரக்கு உண்டு.
நாம் நம்ம பேசுபொருளுக்குள் வருவோம்.
சர்க்கரை பத்தி தட்டோடு தர்ஹா வாசலில் உட்கார்ந்திருக்கும் லபையிடம் கொடுத்து ஃபாத்திஹா அல்லது மவுலுது என்று சொன்னால் முறையாக ஓதுவார். அங்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லபைதான். வருஷா வருஷம் லபை மாறிமாறி வருவார்கள். 10 ½ ரூபாய் கொடுத்தாலும் 101 ரூபாய் கொடுத்தாலும் முகம் மலர வாங்கிக் கொண்டு வாழ்த்தி அனுப்புவார்கள். முத்துப்பேட்டை தர்ஹா பிரச்னை, நாகூர் தர்ஹா பிரச்னை அங்கு கிடையாது. ஆங்காங்கே நேர்த்திக் கடனுக்கு இருப்பவர்கள் தூங்கிக்கொண்டும் விழித்திருப்போர் காசு கொடுப்பவர்களைப் பார்த்துக் கொண்டும் இருப்பாரகள்.
“உங்கள் ஹக்கில் ஏதாவது அவர்களுக்கு பிரியமிருந்தால் கொடுங்கள்!” என்று அந்த லபை மென்மையாகச் சொல்வார். அவரவர்கள் முகம பார்த்து பிரியமிருந்தால் கொடுத்துவிட்டு வரலாம். இது சுமார் 15 வருடங்களுக்கு முந்திய நிலைமையைச் சொல்கிறேன். இன்றைய நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது. ஷிர்க்கை அடயாளம் கண்டுகொண்ட பின்பு அங்கு செல்வதில் விருப்பம் இல்லை.
அடுத்தப் பயணம், ஏர்வாடி! பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தால் இருபக்கமும் கடைகள். பனை ஓலைப் பெட்டியில் கருப்பட்டி மற்றும் சில பொருள்கள். என்கூட வந்த என் நண்பர் ஊரை விட்டு கிளம்பியதும் “தன் பிள்ளை எங்கேயோ கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டானோ? தொட்டியில் தூங்கிய பிள்ளை தொட்டில் கயிறு அருந்து கீழே விழுந்து காயப்பட்டு விட்டானோ? என்ற வீட்டுக் கவலையுடனேயே இருப்பார். பிள்ளையின் வய்து என்ன தெரியுமா? ஒன்றும் அவ்வளவு அதிகமில்லை. பசித்தப்பின் கைசூப்பும் பழக்கம் உள்ள குழந்தை! குழந்தை பிறந்து பிறக்கிற எடையெட்டு பிறையோட பதினெட்டு வருஷமாகிரது. பதினெட்டு மாதமல்ல, பதினெட்டு வயது! ஒரு வருஷத்திற்குப் பணிரெண்டு மாதம். மலேசியாவில் அவர் இருக்கும்போது பிள்ளையை கவனிக்க வேண்டுமென்று அந்தப் பிழைப்பை விட்டுவிட்டு பிள்ளையைக் காப்பாற்ற ஊரிலேயே தங்கி பிள்ளையை நல்லாத்தான் வளர்த்தார்.
ஏர்வாடி பள்ளிவாசல் கேட்டிலேயே ஒரு ‘ட்டோல் கேட்!’. செருப்பையெல்லாம் கழட்டி அங்கே போட்டுவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு உள்ளே போக வேண்டும். பள்ளிவாசல் தூரம். ஒரே மணல், கால் வைக்க முடியவில்லை. சூடு தாங்காத பாதம் ஓடு ஓடு என்றது. ஓடிப்போய் தர்ஹாவில் ஏறினோம். பலமுறை அந்த தர்ஹா போயிருக்கிறேன். இந்த முறை ஒரு புதிய் சிஸ்டம் அங்கே உண்டாக்கி இருந்தார்கள். ஒரு லபை முன் உட்கார்ந்து,
“மவுலுது ஓதுங்கள்< என்றேன். பத்தியைக் கொளுத்தினார். ஒரு இளைஞர் வந்தார்.
“உங்களுக்கு ஏற்பட்ட தங்கடம், சீக்கு, பிணி, சூனியம் நீங்க இந்த ஃபார்மில் எல்லா விபரங்களையும் எழுதி ரூ101/- சேர்த்து உண்டியலில் போடுங்கள். உங்கள் பெயர், ஊர், வாப்பா பெயர், அட்ரஸ், டெலிபோன் நம்பர் எல்லாம் சரியாக எழுதி அந்த உண்டியலில் போடுங்கள்” என்றார்.
“இது என்ன புதிய சிஸ்டமாக இருக்கிறதே?” என்றேன்.
“உங்கள் மனுவை, வேண்டுதல் உள்ளவர்களின் மனுவை அவுலியாக்களே ஒவ்வொன்றாக பரிசீலித்து உங்கள் முசீபத்தை போக்குவார்கள்” என்றார்.
“எவ்வளவு நாளில் பதில் வரும்?” என்றேன்.
“உங்கள் கேஸினுடையத் தன்மையைப் பொருத்து பதில் வரும். சிக்கலான கேஸா இருந்தால் இரண்டு வருஷம்கூட ஆகும். நீங்கள் அடிக்கடி வந்து மீண்டும் ஒரு மனு (ரிமைண்டர்) போட வேண்டும்” என்றார்.
‘விஞ்ஞான முறையில் ஊழல்’ என்ற வார்த்தை தெரியும். இதுவும் ‘விஞ்ஞான முறையில் ஏமாற்றுதல்’ என்று புரிந்து கொண்டேன். ஒரு ஃபார்ம் வாங்கி அதில் என்னைப் பற்றிய தகவல், பெயரைத்தவிர எல்லாம் தவறாகக் கொடுத்தேன். ஊர் என்று எதையோ போட்டு ரூ 30/- கொடுத்தேன்.
“என்ன முப்பது ரூபாய் கொடுக்கிறீர்கள்? ரூ 101/-“ என்றார்.
“திரும்பிப் போகவும் சாப்பிடவும் காசு இல்லை. வேண்டாமென்றால் திரும்பக் கொடுங்கள். யாராவது வந்தால் அவரிடம் கொடுத்து அனுப்புகிறேன்.” என்றேன்.
“சரி சரி” என்று அந்த ரூபாய் முப்பதையும் வாங்கிக்கொண்டார்.. ஃபார்மையும் முப்பது ரூபாயையும் கொண்டு சென்றவர், ஒரு தூணில் மறைந்துகொண்டு ரூ முப்பதை தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு அப்ளிகேஷன் ஃபார்மை மட்டும் உண்டியலில் போட்டார். இதை அறியாமல் என் கூட வந்த நண்பர்,
“எனக்கும் ஒரு ஃபார்ம் கொடுங்கள்” என்றார். கண்ஜாடை செய்து வேண்டாம் என்றேன். அது அவருக்குப் புரியவில்லை. நாகூர் லபை சொல்லிய காணிக்கை என்ற சொல்லைக் கேட்டு மாட்டிக் கொண்ட புத்திசாலிதான் அந்த நண்பர். அவருடைய மனவியலை எந்த மனோதத்துவ நிபுனராலும் நிர்ணயிக்க முடியாது. குரங்குப்பிடி! குரங்கை பிடித்து அதை முதலை என்று தவறாகச் சொல்லிவிட்டாலும் மாற்றவே மாட்டார். முதலை முதலையே. தனக்கே எல்லாம் தெரியும் என்பார். மற்றவர்களை ஸீரோ என்பர். அந்த ஃபாரத்தில் அவருடைய உண்மை பெயர், அட்ரஸ், டெலிபோன் நம்பர் எல்லாம் சரியாக எழுதி ரூ 101/- கட்டினார். அந்த ரூ 101/- அந்த லபையின் பாக்கெட் உண்டியலில் சரணடைந்தது. ஃபார்ம் மட்டும் அவுலியாக்களின் உண்டியலில் போனது.
ஒரு வருஷமானது. அவருக்குக் கடிதம் வந்தது. உள்ளே சந்தனம், நார்சா வந்தது. அவுலியா, “ மீண்டும் அவனை என் தளத்திற்கு வரச்சொல், அவன் கேஸ் ரொம்ப சிக்கலானது. கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று லபையின் கனவில் அவுலியா வந்து சொன்னதாகவும் வியாழன் பிற்பகல் வந்து வெள்ளி இரவு என் தளத்தில் ‘தலைபோட்டு’ படுக்கச் சொன்னதாகவும் லபை கடிதம் எழுதி இருப்பதாக என்னிடம் சொன்னார்.
“உங்களுக்குக் கடிதம் வ்ந்ததா?” என்று கேட்டார்.
“வரவில்லையே!” என்றேன்.
இப்படியெல்லாம் தொல்லைகள் தொடரும் என்று எனக்குத் தெரியும். அதனால் உண்மையான என் அட்ரஸை ஃபார்மில் எழுத வில்லை. சமயங்களில் வலுத்த கை என்று தெரிந்தால் கலெக்ஷனுக்கு நேரிலேயே வந்து விடுவார்களாம்.
மலேசியாவிலிருந்து அஜ்மீர் சென்ற அரு நபரிடம் அங்குள்ள ஒரு லபை நன்றாக பைண்ட் செய்யப்பட்ட ஒரு பெரிய் லெட்ஜரை எடுத்து கொடுத்து உங்கள் காணிக்கையை எழுதுங்கள் என்றாராம். திறந்து பார்த்தால், பெரும் பெரும் பாம்பே புள்ளிகளின் பெயர்கள், அரசியல்வாதிகள், மந்திரிகள் என்று பெரும்புள்ளிகளின் பெயர்கள். ஒவ்வொருவரும் லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கை செலுத்தியதாய் இருக்க ஆக குறைந்த காணிக்கை அப்பவே 10 லட்சம். இது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலைமை. உழல்கள் 98 லட்சம் கோடியை ரொம்ப சுலபமாகத் தாண்டும் இந்த காலகட்ட்த்தில் எவ்வளவு எழுதுவார்கள் என்று நமக்குத் தெரியாது.. 98 ஆயிரம் லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று படித்தவர்களுக்கே இன்னும் தெரியாத இந்த கல கட்ட்த்தில் எவ்வளவு எழுதுவார்களோ? அவுலியாக்கள்தான் அந்த ஹராமானப் பணத்தை ஒப்புக் கொள்வார்களா?
இவ்வளவு காணிக்கை நம்மால் முடியாது என்றதும் வேறு லெட்ஜர். இப்படி ஆளுக்கு ஏற்ற லெட்ஜர். ஒரு லெட்ஜரின் மொத்தத் தொகையையும் கூட்டினால் வரி போடாமல் அந்தத் தொகையைப் பயன்படுத்தி இந்தியாவின் பட்ஜெட்டை போட்டுவிடலாம். ஐந்து ஆண்டுகாலம் வரி இல்லாமல் இந்தியாவை ஓட்டலாம் என்றார். ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைய வைத்து சவாரி செய்யும் ஆசாமிகள் அவர்கள்
ஒருநாள் ஒருவர் மலேசியாவில் என்னுடைய கடைக்கு வந்தார். முகத்தில் வறுமையின் கோடுகள் இல்லை. நல்ல உடை, தொப்பி, தோளில் வெண்ணிர ஹஜ் சால்வை சமூசா வடிவில் அல்லது பிரமிட் மாதிரி மடித்து முதுகிலிருந்து நெஞ்சு வரை போட்டிருந்தார். சால்வையில் ஓரங்களில் குஞ்சமும் நல்ல வேலைப்பாடும் கலைநயமும் கொண்டிருந்தது. மற்றவர்களைப் போல் முகத்தில் ஏழ்மை தாண்டவமாடவில்லை. கூடுதலான வருவாய் உள்ளவர் போல் தெரிந்த்து. அதனால அவரை யார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. மலேசியாவை சுற்றிப்பார்க்க வந்தவர் போலும் தெரிந்தது. யாரோ எனக்கு தெரிந்தவர்கள் என் அட்ரசை கொடுத்து முக்கிய்மாகப் பார்க்க வேண்டிய இடங்களைச் சுற்றிக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள் போல் என்று நான் நினைத்தேன்.
“அஸ்ஸ்லாமு அலைக்கும், ஃபாரூக் ஹாஜியாரே” என்றார்.
“வ அலைக்குமுஸ்ஸலாம். நான் ஹாஜியார் அல்ல; நான் இன்னும் ஹஜ் செய்யவில்லை. ஆனால் நான் ஃபாரூக் தான்” என்றேன்.”. “நீங்கள் தேடி வந்த ஃபாரூக் ஹஜியார் இந்த வரிசையில் ஏழாவது கடை அவருடைய்து” என்றேன். நான் ஏதும் கிண்டலாகக் கதை சொல்லவில்லை. தவறான அட்ரசுக்கு வந்திருக்கலாம் என்றே இதைச் சொன்னேன்.
“நான் அங்கே போய் அவரைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். அவர்தான் உங்களின் இடத்தைச் சொல்லி உங்களின் பெயரையும் சொல்லி என்னை இங்கு அனுப்பினார்” என்றார்.
“அப்படியா?” டீ குடிக்கிறீர்களா? வந்த விஷயம் என்ன?” என்று கேட்டேன்.
“டீ இப்போதான் அங்கே குடித்தேன். “ என்றார்.
ஒரு கவரை எடுத்து என்னிடம் தந்தார். திறந்து பார்த்தேன். அதில் ஒரு கலர் ஃபோட்டோ இருந்தது. ஃபோட்டோ வேறு ஒன்றுமில்லை ஒரு கச்சிதமான் வீடு. வீடு மாடி வீடு. ஆனால் மாடி இல்லை. அதற்கான பில்லர்கள் எழுப்பப் பட்டிருந்தது. தள வீடு வெளிப்பூச்சு இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் முகத்தைப் பார்த்தேன். திருநெல்வேலிப் பகுதியில் ஒரு ஊரில் மதர்ஸாவில் ஓதிக் கொடுப்பதாகச் சொன்னார். இரண்டு குமர்களாம். ஆண் பிள்ளை இல்லையாம். கீழ் வீடு மூத்த பிள்ளைக்காம். மேல் வீடு இளைய பெண்ணுக்காம். இரண்டுக்கும் மாப்பிள்ளை பார்த்தாச்சு. விரைவில் கல்யாணம். மாப்பிள்ளை இருவரும் வேறு வேறு ஊர் மதறஸாக்களில் ஓதிக் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். குறைந்த சம்பளம்.” என்றார். ஊரில் உள்ளவர்கள் உதவியால் கீழ் வீட்டைக் கட்டி விட்டேன். தளம் போட்டாச்சு. மேல் வீடு எழுப்பனும், இன்னும் ஜன்னல்,கதவு, பூச்சு எல்லாமே பாக்கி இருக்கு. ரூ 7க்குமேல் (லட்சம்) எஸ்டிமேட் என்றார்.
“எனக்கு உங்களால் ஆனதைச் செய்யுங்கள்” என்றார்.
மறைவாகச் சென்று மலேசிய நாணயம் 50 டாலர் கரன்ஸியில் இரண்டை வைத்து ஆக வெள்ளி 100 கொண்ட என்வலோப்பை அவரிடம் கொடுத்தேன். மறைவாகச் சென்று பணத்தை என்வலோப்பில் வைப்பதை எட்டிப் பார்த்தார். என்வலோப்பை அவர் கையில் கொடுத்தேன். அதை வாங்கிய அவர் உடனே திறந்து பார்த்தார். அவர் முகம் மாறியது.
“என்ன இது? நூறு வெள்ளி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கே நல்லா இருக்கிறதா? என்று கோபமும் அதட்டலுமாக்க் கேட்டார். அதட்டலைக் கேட்ட எனக்குக் கோபம் வந்தது. ஆனால், அடக்கிக் கொண்டேன்.
“நம்மால் முடிந்தது அதுதான். எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மென்மையாகச் சொன்னேன்.
“நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் நூறு வெள்ளியைத் தருகிறீர்கள். இதை வைத்து ஒரு லோடு செங்கல் வாங்க முடியுமா?” என்று கேட்டவர்,
“இந்தா பாருங்கள். உங்கள் பேருடைய ஃபாரூக் ஆயிரம் வெள்ளி தந்திருக்கிறார்” என்று வசூல் நோட்டைக் காட்டினார்.
அங்கே பெரும்புள்ளிகள் பெயர்கள், பெரிய பெரிய நோட்டு. அவர்களோடு என்னால் போட்டி போட முடியாது. என் வியாபாரம் ஆரம்பித்தே இரண்டரை வருடங்கள்தான் ஆகிறது. உழைப்பையும் உதிரத்தையும் காலத்தையும் வேறு ஒருவருக்கு அற்பணித்து விட்டு உடுத்திய கைலியோடும் உலர்ந்த வயிற்றோடும் அல்லாஹ்வின் நம்பிக்கையோடும் வெளியேறியவன் நான். அந்த முயல்களோடு போட்டிப் போட்டு ஓட இந்த ஆமையால் முடியாது. கதையில்தான் ஆமை வெல்லும். நிஜ வாழ்வில் முடியாது.
“என்னால் முடிந்தது இதுதான். செங்கல் விலையெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தியாவில் பால் விலை அரிசி விலையெல்லாம் எனக்குத் தெரியாது.” என்றேன்.
“இந்தாங்கள் இதை நீங்களே வைத்துக் கொண்டு நல்லா இருங்கள்” என்று என்வலோப்பை மேசைமேல் போட்டார். பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கிறேன் என்று சொன்னார். இவர் ஓதிக்கொடுக்கும் லட்சணம் தெரிந்து விட்டது. கதவைத் திறந்து படார் என்று அடித்து விட்டுக் கடையை விட்டுக் கோபமாக வெளியேறினார். ஒரு மதர்சாவின் பிரின்சிபால் இப்படி நடந்தார். இயல்பில் சிறு விஷயத்திற்குக் கோபப்படும் எனக்கு பல ஆண்டுகள் ஒருவரிடம் பட்ட அடியால் என் மனது உணர்ச்சியை மறந்து மரத்துப்போய் விட்டது. இதுவே பத்து வருஷத்துக்கு முந்திய ஃபாரூக்கா நான் இருந்திருந்தால் நடப்பது வேறாக இருக்கும். காலம் எனக்கு பாடம் போதித்து மாங்காயாக இருந்த என்னை ஊறுகாயாகப் பாடம் பண்ணிவிட்டிருந்தது. அமைதியாக அந்த நூறு வெள்ளியைத் தனியே எடுத்து வைத்திருந்தேன். அதிலிருந்து பிறகு வந்தவர்களுக்கு 20-10-30தாகக் கொடுத்து எம்ப்டி என்வலோப்பை கிழித்துப் போட ஆறுமாதம் ஆனது.
ஏனோ எனக்குத் தெரியவில்லை. யார்யாருக்கு நல்லெண்ணத்துடன் உதவி செய்ய வேண்டுமென்று உதவி செய்தேனோ அவர்கள் எல்லாம் எனக்கு புரூட்டஸாக மாறி என் முதுகில் குத்தினார்கள். பலரால் பல் முறை குத்தப்பட்டுச் செத்தவன் நான். புரூட்டஸ் ஒரு தடவை குத்தினான். ஜூலியஸ் சீஸர் ஒரு தடவை செத்தான். நானோ பல தடவை பலரால் குத்தப்பட்டு பல தடவை செத்தேன். மறக்க முடியாத இரண்டு நெருங்கிய நண்பர்கள் குத்திய கடைசி குத்துகள் என் கண்ணிரெண்டைத் திறந்து வாழ்க்கையில் ஒளி பிறந்தது. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இரண்டு நண்பர்களின் பெயரும் என் பெயரும் ஒன்றே. கடைசி இரு நண்பர்களின் குத்துகள் என் வாழ்வின் உதய சூரியன். எனக்கு விடிந்தது. மறக்கவே முடியாத ‘மா பெரும் நண்பர்கள்” அவர்கள். ஒருவர் போய் விட்டார். ஒருவர் பள்ளியில் பயான் செய்கிறார். ஷெய்த்தான் வேதம் ஓதுகிறது.
இறுதியாக, “இலவசம் விலையானது” என்ற இந்தக் கட்டுரையில் தலைப்பை பிரதிபலிக்கப்போவது இனி வரும் நிகழ்வுகளேயாகும். முன் சொன்னதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் இனி சொல்ல இருப்பவை.
take break ! :)
ஒரு நாள் காலை 10:30 மனி அளவுக்கு ஒருவர் என் கடைக்குள் நுழைந்தார். நுழைந்தவர்
“அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார்.
“அலைக்கு முஸ்ஸலாம்” என்று அவரை நோட்டமிட்டேன். இதுவரை நான் அவரைப் பார்த்ததில்லை. நல்ல நீட்டான உடை, கவர்ச்சியான நல்ல அகன்ற கருத்த முகம். முகத்துக்குத் தாடையில் கொஞ்சம்போல் தாடி. நம் ஊர் ஜாடை. ஆனால், அவரை நம் ஊரில் பார்த்ததில்லை.
“நீங்கள்தானே ஃபாரூக்?” என்றார்.
“ஆமாம்” என்றேன்.
“இந்த வரிசையில் இன்னொரு ஃபாரூக் இருக்கிறார். அவரை ‘கீலா கீலா’ என்பார்கள்.” என்றேன்.
பெரும்பாலும் என்னைத் தேடி ஊரிலிருந்து யாரும் வர மாட்டார்கள். காரணம் பசை இல்லை. ஊரில் மண்டபம், வணிக வளாகங்கள், தோப்பு, வயல்கள், வாடகை வீடுகள் என்று விளம்பர அய்ட்டங்கள் ஏதும் எனக்கு இல்லை. நான் ஆமைபோல் அமைதியாக வந்து விட்டு அமைதியாக போகிற ஆள். எனக்கு இங்கே விளம்பரம் இல்லை. நான் ஊர் வந்திருக்கும்போதுகூட என்னை பார்ப்பவரகளில் பெரும்பாலோர் என் பள்ளித் தோழர்கள் “ எப்போ வந்தா” என்று கேட்பதில்லை. புகழ்பெற்ற பார்ட்டி பேரைச் சொல்லி அவன் சுகமாக இருக்கிறானா? என்று மிகுந்த ஆதங்கத்தோடும் அக்கரையோடும் கேட்பார்கள். “ நீ சுகமாய் இருக்கிறாயா?” என்று கேட்பதில்லை.
என் மூடு நல்லா இருந்தால், “ நல்லா இருக்கிறான்!” என்பேன். அதோடு விடுவதில்லை.
.
“எப்போ ஊருக்கு வருரான்?’ என்பார்கள்.
“நான் ஜோசியன் அல்ல! அது எனக்குத் தெரியாது. யாராவது குடுகுடுப்பைக் காரனிடம் போய் கேள்” என்பேன்.
“என்னப்பா இப்படி பதில் சொல்றா? அவனே உன்னைப்ப்த்தி இப்படித்தான் சொன்னான். ‘சிடுசிடு’ என்று பேசிவிடுவாயாம்.” என்பார்கள்.
“நான் சொலவதைக் கேள். நானும் நீயும் பள்ளிக்காலம் தொட்டு நண்பர்கள். என்னைப் பார்த்து நீ, ‘ நீ சுகமாக இருக்கிராயா?’ என்று கேட்கவில்லை. முதலில் மனித உறவுகளையும் நட்புகளையும் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உளவியலை நன்கு தெரிந்துந்துகொள்” என்பேன்.
ஒருமுறை நான் KLல் என் பெயருடைய நண்பர் கடையில் பங்காளியாக இருக்கும்போடு இரவு 7:30 மணிக்கு டெலிபோன் மணி அடித்த்து. 7:30 க்கு பிசினஸ் சம்பந்தமான டெலிபோன் வருவது அரிது. எல்லாம் வெட்டிப்பேச்சு ஊர் வமு போந்தான் வரும். டெலிபோனை எடுத்து,
“ஹலோ” என்றேன்.
“யார் பேசுறது?” எதிர்முனைக் குரல். இந்தக் குரலுக்குரியவர் ‘எல்லாமே தனக்குத்தான் தெரியும் மற்றவர் யாருக்கும் ஏதும் தெரியாது,. தன் சட்டைத்தான் விலை உயர்ந்த சட்டை, தன் கடிகாரம்தான் விலை உயர்ந்த கடிகாரம், மற்றவரக்ளுடைய எல்லாமே மட்டம் என்று தம்பட்டம் அடிக்கும் பேர்வழி! இவருக்கு ஒரு நாளைக்கு சரியா கொடுக்கனும் என்று ரொம்ப நாள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். என் மாமா, அதிரை நிருபரின் இபுறாகீம் அன்சாரியுடைய வாப்பாவுக்கு நெருங்கிய நண்பரும்கூட.
“நான் சுருட்டு ஃபாரூக் பேசுறேன்” என்று அடக்க ஒடுக்கமாய்ச் சொன்னேன்.
“ஏன்…….அவர் இல்லையா?” என்று ரொம்ப அதட்டலான குரலில் கேட்டார்.
“நீங்கள் யார்?” என்றேன் மிகப் பணிவுடன்.
“ஏன் என்னைத் தெரியலையா? நான் தான் …… பேசுறேன்” என்றார். இதுவும் அதட்டலே.
“எங்கள் டெலிபோனில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் தெரியாது. அதனால் கேட்டேன்.” என்றேன். கிண்டல்தான்.” இப்போ நீங்கள் ….நபருடன் பேச வேண்டும். உங்கள் காலை அவர்தான் அட்டெண்ட் செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம். நான் போனைக் கட் செய்கிறேன். இன்னொரு கால் போடுங்கள் அவர் எடுப்பார்” என்று டெலிபோனைக் கட் செய்தேன்.
மறு கால் வந்த்து. அவர் எடுத்தார். நான் வெளியே போய் விட்டேன். ஒவ்வொன்றும் ஒரு விதம். எல்லாவற்றிற்கும் அடீப்ப்படை காரணம் பணம். மனிதாபிமானம் பணத்திற்கு பலியாகிக் கொண்டே இருக்கிறது. இப்போழுது நாம் முன்பு விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.
“நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்” என்றார்.
“உட்காருங்கள்” என்று நாற்காலியைக் காட்டினேன். எதற்காக அவர் என்னைப் பார்க்க் வந்தார் என்று தெரியாமல் அவரையே பார்த்தேன்.
“நானும் அதிராம்பட்டிணம்தான். நாங்கள் முன்பு கடல்கரைத் தெருவில்தான் இருந்தோம் எங்கள் குடும்ப்ப் பட்டப்பேர் இத்” என்று ஒரு பட்டப்ப்யெரைச் சொன்னார். எனக்குப் புரிந்த்து. நான் சிறு பிள்ளையா இருந்தபோது என் தாயார் அவர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அந்த வீட்டு திறந்த வெளி வேலியடைத்த முற்றத்தில் நான் பலமுறை விளையாடி இருக்கிறேன். அந்த வீட்டுப் பெண்கள் என் மீது பிரியமாக இருப்பார்கள் அவர்கள் போன பின் அத இடம் காலியாக இருந்த்து. இப்போது எப்படி இருக்கிரதுஎன்று தெரியவில்லை. கை மாறி கல்வீடாக மாற் இருக்கலாம். தனக்கு நம்ம ஊர் ஆள் என் இட்த்தை அடையாளம் சொல்லி அனுப்பியதாகச் சொன்னார்.
“இரண்டு டீ வரவழைத்துக் குடித்தோம்.
“என்ன விஷயம்?” என்றேன்.
“குர்ஆன் 300 பிரதிகள் தர்ஜமா கொண்டு வந்தேன். உங்களுக்குத் தெரிந்த பெரிய புத்தக வியாபாரி இருப்பதாகவும் நீங்கள் சொன்னால் எல்லாவற்றையும் அவரிடமே கொடுத்த் விடலாம் என்று கேள்விப்பட்டேன். அதனால் உங்களைத்தேடி வந்தேன்:” என்று சொன்னார்.
“குர் ஆன் எங்கே இருக்கிறது?” என்று கேட்டேன்.
“எல்லாமே கப்பலில் வந்து பினாங்கில் இருக்கிரது. மாதிரிக்கு மூனு கொண்டு வந்தேன்” என்று கையில் கொண்டுவந்திருந்த ஒரு பிரதியைக் காட்டினார். ஏற்கனவே வந்த்துதான். வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும். பலமுறை reprint செய்யப்பட்ட்து.
“இப்போது காலை நேரம். அவர் பிசியாக இருப்பார்கள். குர் ஆன் மாதிரியோடு மாலை 41/2 அல்லது 5 மணிக்கு வாருங்கள் போகலாம்” என்று சொல்லி அனுப்பினேன்.
சொன்னதுபோல் 4 1/2 மணிக்கு வந்தார்.. டீ குடித்துவிட்டு வேனில் அங்கே 5 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அந்த இடம் எந்த நேரமும் ட்ராஃபிக் நெருக்கடி மிகுந்த இடம். பார்க்கிங் கிடைப்பது அரிது. “லிட்டில் இந்தியா” என்று சொல்லப்படும் தமிழ் முஸ்லீம்களின் தேன்கூடு! மொச்சுமொச்சு என்று தஞ்சை மற்றும் ராம்நாடு முச்லீம்கள் நிறைந்த பகுதி. தமிழ் முச்லீம்கள் பள்ளியும் உண்டு. ஜாலன் மஸ்ஜித் இந்தியா – இந்திய பள்ளிவசல் வீதி – அல்லது தெரு என்பதே இதன் பொருள். “பத்து ரோடு (கல் சாலை) கோலாலம்பூரின் (அண்ணாசாலைக்கு சம்ம்) முக்கிய வீதி.
அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை. சற்று தூரமுள்ள ஐந்து மாடிக்கட்டிடத்தில் மேலே நாலாவது மாடிக்குப் போய் பார்க்கிங் செய்து விட்டு நாங்கள் போக வேண்டிய புத்தகக் கடைக்கு முதல் மாடிக்கு இருவரும் போனோம்.
S.முஹம்மது ஃபாருக்