வெள்ளெழுத்து
வெள்ளெழுத்து என்பது என்ன? அது எதனால் ஏற்படுகின்றது?என்ற கேள்விகள் நிறைய பேரின் மனதில் எழுந்து மறைவதுண்டு அவற்றைபற்றி இந்த தொடரில் பார்ப்போம். இந்த தொடரை அடுத்து 40வது தொடருடன் கண்கள் இரண்டும் தொடர் நிறைவு பெறுவதால் இந்த தொடரிலும் இதை அடுத்த தொடரிலும் அதிகமாக எழுதப்பட்டிருப்பதால் இதை படிக்கும் சிறமத்திற்கு மன்னிக்கவும்
நமது கண்களுக்கு கிட்டத்தில் இருக்கும் எழுத்துக்களைப் பார்க்கும் திறன் குறைவது தான் வெள்ளெழுத்து. சிலபேருக்கு ஓரடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை இரண்டடி தூரத்தில் வைத்துப் பார்த்தால் தான் தெரியும் இதில் பல பேருக்கு தூரம் மாறுடும் இது அவர்வர்களின் வயதைப் பொருத்து. கறுப்பாக இருக்கிற எழுத்துகள் பளிச்சென்று தெரியாமல் வெள்ளைப் பேப்பரோடு சேர்ந்து வெள்ளையாக தெரியும். இதைத்தான் வெள்ளெழுத்து என்கிறோம். `தலைமுடி நரைப்பதைப்போல, வயதான காலத்தில் தோலில் சுருக்கம் விழுவதைப் போல, வெள்ளெழுத்துப் பிரச்சினையும் வயதாவதால் வருவது தான். இது ஒரு வியாதி கிடையாது. கண்பார்வை கோளாறு கிடையாது
முன்பெல்லாம் நாற்பது, நாற்பத்தி ஒன்று, நாற்பத்தி இரண்டு இப்படி மெதுமெதுவாகத்தான் இந்த வெள்ளெழுத்துப் பிரச்சினை வர ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் கண்ணுக்கு அதிக வேலை கொடுப்பதனாலும் கண்கள் அதிக களைப்படைவதாலும் சில பேருக்கு 38, 39 வயதிலேயே வெள்ளெழுத்துப் பிரச்சினை வர ஆரம்பித்து விடுகிறது.
40 வயதை தண்டியவுடன் இந்தக் குறைபாடு பெரும்பாலோருக்கு ஆரம்பமாகிவிடும் இதில் சிலபேருக்கு மட்டும் இந்த வெள்ளெழுத்து ஏற்படுவதில்லை. இது ரொம்ப ரேர் குறிப்பாக 1945க்கு முன் பிறந்த சிலபேருக்கு மட்டும் அதில் என் தாயாரும் ஒன்று, என் தாயார் மாஷா அல்லாஹ் 85 வருடத்தை கடந்து விட்டார்கள். என் தாயார் இறைவன் உதவி கொண்டு மாஷா அல்லாஹ் இன்றும் கண்ணாடி அணியாமல்தான் குரான் ஓதுகின்றார்கள். நானோ 15 வருடங்களுக்கு முன்னாடியே ரீடிங் கண்ணாடி போட்டுவிட்டேன். என் தாயார் சிறுவயதில் நிறைய முருங்கக்கீரை ஆக்கி சாப்பிடும்போது நான் அதை சாப்பிடாமல் ஒதிக்கிவிடுவேன் முருங்கக்கீரை மட்டுமல்ல கீரை வகைகள் அணைத்தும் கண் பார்வைக்கு மிக அற்புதமான உணவு என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை
வயசால் ஏற்படும் பிரச்சினை 40 வயது ஆகும்போது அந்த லென்ஸ் முன்னுக்கும் பின்னுக்கும் அசைவு ஏற்படுவது ஸ்லோ ஆகும் போது இந்தப் பிரச்சினை ஏற்படும். ப்ளஸ் கண்ணாடி போடும்போது சுத்தமாகப் படிக்க முடியும். ஒரு நோயல்ல இதனை சாளேஸ்வரம் என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Presbyopia என்கிறார்கள். இதற்கும் கிட்டப்பார்வைக்கும் சம்மந்தம் இல்லை. நம் கண்களில் இருக்கும் லென்ஸ்-இன் நெகிழ்வுத்தன்மை குறையும்போது நமக்கு இந்த வெள்ளெழுத்து உண்டாகிறது.
வெள்ளெழுத்து உள்ளவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும் 2010-ம் ஆண்டு கணக்குப்படி, உலகம் முழுவதும் சுமார் 110 கோடி பேர் வெள்ளெழுத்துப் பிரச்சினை உள்ளவர்களாக இருக்கிறார்களாம்.
நாற்பது வயது நடுத்தர வயது தானே. அப்போதே பார்வையில் பிரச்சினை வந்து விடுமா?' என்ற எண்ணம் பலருக்கும் வரும்.வெள்ளெழுத்துப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இதில் சுமார் 51.7 கோடி மக்கள், கண்ணாடியை உபயோகித்து, பார்வைக் குறைபாட்டை சரி பண்ணாமல் இருக்கிறார்களாம். அதாவது "வயதான கண்கள்'' என்று நாற்பது வயதை தாண்டியவர்களின் கண்களைச் சொல்வார்களாம். நாற்பது வயதுக்கு மேல் சுமார் நாற்பது செ.மீ தூரத்தில் நியூஸ் பேப்பரை வைத்து படிக்க முடியவில்லை என்றால் இதை வெள்ளெழுத்துப் பிரச்சினை அதாவது `சாளேஸ்வரம்' என்று அழைப்பார்கள்
புத்தகம் படிப்பதற்கு கஷ்டம், புத்தகத்திலுள்ள சின்ன எழுத்துக்களைப் படிப்பதற்குக் கஷ்டம், சற்று குறைவான வெளிச்சத்தில் படிப்பதற்கு கஷ்டம், கம்ப்யூட்டரில் எழுத்துக்களைப் பார்ப்பதற்கு கஷ்டம், செல்போனில் நம்பரை பார்ப்பதற்கு கஷ்டம், கொஞ்ச நேரம் படித்தாலே நிறைய நேரம் படித்தது போன்ற ஒரு நினைப்பு. கண்களில் ஓர் அசதி, களைப்பு, எரிச்சல்...
இந்த சமயத்தில் கிட்டத்தில் இருக்கும் சிறிய பொருளின் உருவம் ஊசியில் நூலைக் கோர்ப்பது, கம்ப்யூட்டரில் சின்ன எழுத்துக்களைப் படிப்பது, அரிசியில் கல் பொறுக்குவது போன்றவை தடுமாறும்.
உலகம் முழுவதும் உள்ளவர்கள் நாற்பது வயது ஆகும்போது அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இந்த வெள்ளெழுத்துப் பிரச்சினையை கண்டிப்பாக சந்தித்துத்தான் தீர வேண்டும். வெள்ளெழுத்துப் பிரச்சினை அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறதாம். அமெரிக்க ஜனத்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கையின்படி சுமார் 131/2 கோடி அமெரிக்கர்கள் 2008-ம் ஆண்டில் நாற்பது வயதை நிரம்பியவர்களாக இருக்கிறார்களாம்.
வளர்ந்து வரும் நாகரிகத்தின் பாதிப்புதான் முக்கிய காரணமாகும். வெள்ளெழுத்துப் பிரச்சினை, வயது சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதற்கும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற மற்ற பார்வைக் குறைபாடுகளுக்கும் சம்பந்தம் கிடையாது.
கண்ணில் கருவிழிக்கு உள்ளே இயற்கையாக உள்ள லென்ஸ், கொஞ்சம் கொஞ்சமாக கடினமாவதாலும், வீங்கி விடுவதாலும் லென்சின் மடங்கி விரியும் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடுவதாலும் தான், இந்த வெள்ளெழுத்துப் பிரச்சினை உண்டாகிறது. லென்சுக்குள் இருக்கும் புரோட்டீனில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் புரோட்டின் சிதைந்து லென்ஸ் கடினமாகி விடுகிறது.
லென்ஸைச் சுற்றியுள்ள மிக மெல்லிய மிக நுண்ணிய தசைநார்களில் இறுக்கம் ஏற்பட்டு எலாஸ்டிக் தன்மை குறைந்து கிட்டத்தில் இருக்கும் பொருளை, சரியாக போக்கஸ் பண்ண முடியாமல் போய்விடுகிறது. வயது கூடக்கூட கண்களிலுள்ள லென்சின் போக்கஸ் செய்யும் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும்.
நாற்பது வயதைத் தாண்டியவர்கள், படிப்பதற்காக கண்ணாடி போட்டாச்சு என்று நினைத்துக் கொண்டு ஆயுள் முழுக்க அதே கண்ணாடியை போட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. வருடா வருடம் பவர் மாறுபடும் அதனால் முதலில் போட்ட கண்ணாடியை தொடர்ந்து அணிந்து வந்தால் பவர் சீக்கிரமாக கூடிவிடும் அப்புரம் என்ன சோடா புட்டிதான். ஒவ்வொரு வயதிலும் நமது கண்களின் குவியத் தூரம் மாறுபடுகிறது. சின்ன வயதில் இருக்கும் கூரிய பார்வை நாற்பது வயதில் இருக்காது. அதனால் கண்பார்வையில் வித்தியாசம் தென்பட்டவுடனே கண் மருத்தவரை அணுகுவது நல்லது. அடுத்த தடுமாற்றம் ஏற்படும்போது கண்டாக்டரை கண்டிப்பாக சந்தித்து கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். கிட்டப்பார்வை, குறைபாட்டையும் வெள்ளெழுத்துப் பிரச்சினையும் சரிபண்ண வேண்டியதை மிக மிக முக்கியமான ஒரு காரியமாக நினைத்து செயல்பட வேண்டும்.
தடையின்றி வேலைகள் செய்ய பார்வைக் குறைபாடு உடனே சரி பண்ணப்பட வேண்டும். அதே மாதிரி நுட்பமான வேலை செய்வதற்கும் கண்டிப்பாக கண் டெஸ்ட் பண்ணி கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டும்.
கண்ணாடி போட்டுக் கொண்டால் வயதாகி விட்டதோ என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என்றும் என்ன டீச்சரம்மா என்று கூப்பிடுவார்கள் என்றும் கவலைப்படாதீர்கள். மருத்துவ உலகமே இப்பொழுது நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்களுக்கான கண்பார்வை பிரச்சினையை பற்றியும், கண்ணாடி தேவையைப் பற்றியும் அதிகமாக கவனிக்க ஆம்பித்து விட்டது.
முன்புபோல இல்லாமல் இப்பொது தெருவுக்குத் தெரு கண்ணாடிக் கடைகள் நிறைய திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களிலும் ஒரு கண்ணாடிக்கடை கண்டிப்பாக இருக்கிறது. புத்தகக் கடையில் கூட கண்ணாடி விற்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கண்ணாடியின் விலை அதிகமாக இருப்பதால் வாங்கி உபயோகிக்க தயங்குகிறார்கள்.
மேலும் சிலபேர் சரியான முறையில் கண்களை சோதித்து பார்த்து கண்ணாடி வாங்காமல் 50 ரூபாய்க்கும் 75 ருபாய்க்கும் சிரிய சைனா கண்ணாடியை அவ்ர்களாக போட்டுப் பார்த்து அணிகின்றனர். இது மிகவும் தப்பான விசயம் கண்ணே இழக்க வேண்டி வரும் அல்லது சீக்கியரமாக சோடா புட்டிக்கு மாறும் நிலமை வந்துவிடும் மிகவும் கவணமாக நம் கண்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆபரேஷன் மூலமும் வெள்ளெழுத்துப் பிரச்சினையை சரி செய்ய வசதி இருக்கிறது. ஆனால் அனேகம் பேர் இதை விரும்புவதில்லை. கண்பார்வை கூர்மை கொஞ்சம் குறைவதென்பது நாற்பது வயதைத் தாண்டும்போது சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படுவது தான்.
இந்த நேரத்தில் கண் டாக்டரை சந்தித்து கண்களை டெஸ்ட் பண்ணி, கண்ணாடி போட்டுக் கொள்வதற்குப் பதிலாக அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல. நாற்பது வயதைத் தாண்டும்போது கண் பார்வையில் வித்தியாசம் அல்லது தடுமாற்றம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் கண்களை டெஸ்ட் பண்ணி உடனே கண்ணாடி போட்டுக்கொள்வது நல்லது. அதாவது கண்களுக்கு நல்லது.
அறிகுறிகள்:
மிகச்சிறிய எழுத்துக்களை மங்கலான ஒளியில் படிப்பதில் சிரமம்.
கண் களைப்பு, தலைவலி.
வாசிக்கும் புத்தகத்தை கண் பார்வையிலிருந்து தூர வைத்துக் கொள்ளுதல்
என்ன சிகிச்சை?
இந்தக் குறைபாட்டை நீக்க முடியாது. அதற்கு பதில் கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். படிப்பதற்கு மட்டும் அல்லது பை போகல் (Bifocals) கண்ணாடிகளை அணியலாம். பை போகல் கண்ணாடிகள் என்பது ஒரே கண்ணாடியை இரண்டாகப் பிரித்து மேலே பார்ப்பதற்கும், கீழே படிப்பதற்கும் என்று செய்திருப்பார்கள். சிலர் படிப்பதற்கு மட்டும் கண்ணாடி அணிந்திருப்பார்கள். அதனால் இவர்கள் கண்ணாடியை மூக்கில் தள்ளிவிட்டு நம்மைப் பார்ப்பார்கள். அதேபோல கணணியைப் பார்க்கும்போது ரொம்பவும் தலையை நிமிர்ந்து கொண்டு பார்ப்பார்கள். அப்போதுதான் பார்வைக்கான கண்ணாடியை உபயோகப்படுத்த முடியும்.
முன்பெல்லாம் கண்ணாடியில் இரண்டு பிரிவு இருப்பது நன்றாகத் தெரியும். இப்போது அப்படியில்லாமல் ‘D’ வடிவத்தில் படிக்க உதவும் பகுதியை அமைக்கிறார்கள். இதையும்விட முன்னேறி இப்போது progressive லென்ஸ்கள் வந்துவிட்டன. கண்ணாடியில் எந்தவிதமான பிரிவும் இருக்காது. படிப்பதற்கும், பார்ப்பதற்கும் ஏற்றபடி சீரான முறையில் இந்தக் கண்ணாடிகளில் ‘பவர்’ அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கண்ணாடிகள் விலை அதிகம் என்றாலும் எந்த உயரத்தில் எழுத்துக்கள் இருந்தாலும் தலையை ரொம்ப உயர்த்தாமல் நம் கண்களின் உயரத்திலேயே படிக்க முடிகிறது.
கண்களுக்குப் பயிற்சி:
1. கண் சிமிட்டுதல்: (Blinking)
கண் சிமிட்டுதல் ஒரு பயிற்சியா என்று வியக்க வேண்டாம். ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும்போதும் நமது கண்கள் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறது. இது நம் கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. கண் மூடுவதற்கு முன் பார்த்த காட்சிகள் மறைந்து புதிய காட்சியைப் பார்க்க கண்கள் தயாராகின்றன.
கண் சிமிட்டுதல் நமக்கு இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது. ஒருவருடன் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கண் கொட்டாமல் உங்களையே பார்த்தால் (உங்கள் காதலன், காதலி பார்த்தால் அதற்கு அர்த்தம் வேறு!) அவர் வன்முறைக்குத் தயாராகிறார் என்று பொருள். அப்படியில்லாமல் வழக்கம்போல கண் சிமிட்டிக் கொண்டிருந்தால் நட்புடன் பேசுகிறார் என்று பொருள்.
2. உள்ளங்கையை கண் மேல் வைத்தல் (Palming)
இதைச் செய்யும் முன் நாற்காலியில், அல்லது சோபாவில் வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கைகள் இரண்டும் தொடை மேல் இருக்கட்டும்.
கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
உள்ளங்கைகளை குழித்து வைத்து கண்களின் மேல் வையுங்கள்.
உங்கள் விரல்கள் உங்கள் நெற்றியின் மேல் இருக்கட்டும்.
கண்களின் மேல் அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். கண்களை சிமிட்ட முடிய வேண்டும்.
இது என்ன பயிற்சி என்று தோன்றும். அதிக வேலை செய்து களைப்புறும் கண்களுக்கு இந்த பயிற்சி நிச்சயம் புத்துணர்ச்சி தரும்.
3. கண்களால் 8 போடுங்கள்: (Figure of 8)
வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கண் முன்னே ஒரு மிகப்பெரிய 8 என்ற எண் எழுதப்பட்டிருக்கிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நிதானமாக கண்களால் அந்த 8 ஐ சுற்றி சுற்றி வாருங்கள். அதாவது கண்களால் எட்டு போடுங்கள்!
இப்போது அதே எட்டை படுக்க வையுங்கள். மறுபடி கண்களால் எட்டு போடுங்கள். இந்தமுறை பக்கவாட்டில் உங்கள் கண்கள் இயங்கும். கண்கள் மட்டுமே அசைய வேண்டும். உங்கள் தலை மற்றும் உடல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
4. அருகே-தூர அருகே-தூர (near and far focussing)
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கட்டை விரலை உங்கள் கண்களுக்கு முன்னால் 10 அங்குல தூரத்தில் நீட்டுங்கள். சிறிது நேரம் கட்டைவிரலைப் பார்த்த பின் 10 அல்லது 20 அடி தூரத்தில் இருக்கும பொருளைப் பாருங்கள்.
ஒவ்வொருமுறை ஆழ்ந்து மூச்சு விடும்போதும் அருகே – தூர என்று பார்வையை மாற்றி மாற்றிப் பாருங்கள்.
இந்தப் பயிற்சியை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.
5. உருப்பெருக்குதல் (Zooming)
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கட்டைவிரலை உயர்த்தியவாறே கையை நீட்டுங்கள்.
கை முன்னால் நீளும்போது உங்கள் பார்வையும் கட்டைவிரலை தொடர்ந்து செல்லட்டும்.
இப்போது கட்டைவிரலை உங்கள் முகத்தருகே கொண்டுவாருங்கள் – உங்கள் பார்வை கட்டைவிரலின் மேலேயே இருக்கட்டும்.
இதைபோல நான்கு அல்லது ஐந்து முறை செய்யுங்கள்.
இந்தப் பயிற்சிகள் எல்லாம் உங்கள் கண் தசைகளை வலுப்பெறச் செய்யும். பார்வையை கூர்மை படுத்தும்.
அடுத்த தொடரில் இன்னும் சில குறிப்புகளுடன் நிறைவு பெறும்
(வளரும்)
அதிரை மன்சூர்
4 Responses So Far:
இப்போது கட்டைவிரலை உங்கள் முகத்தருகே கொண்டுவாருங்கள் – உங்கள் பார்வை கட்டைவிரலின் மேலேயே இருக்கட்டும்.
மச்சான் குததிட போகுது.
சூப்பர் தகவல்கள்
வெள்ளெழுத்து பற்றி ஒரு வெள்ளை அறிக்கை அருமை வாழ்த்துக்கள்
இந்தத் தொடர் கிட்டப் பார்வை தூரப் பார்வை வெள்ளெழுத்து என்று எதையும் விட்டு வைக்காமல் முழுமையாக அமைந்துள்ளது.
உண்மையிலேயே துவக்கத்தில், இப்படியொரு அற்புதமான தொடர் அமையப் போகிறது என்று எதிர்பார்க்கவே இல்லை.
அருமை!
Post a Comment