கடந்த வாரம், எப்படியெல்லாம் இன்று மக்கள் ஏமாற்ற துணிந்து விட்டார்கள் என்று பார்த்தோம், இப்போது குரான் ஹதீஸ் எச்சரிக்கை குறித்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
3077. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் வியாபாரங்களின்போது ஏமாற்றப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ யாரிடம் வியாபாரம் செய்தாலும் "ஏமாற்றுதல் கூடாது" என்று கூறிவிடு" என்று சொன்னார்கள். எனவே, அவர் விற்கவோ வாங்கவோ செய்யும்போது "ஏமாற்றுதல் கூடாது" என்று கூறிவந்தார். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "எனவே, அவர் விற்கவோ வாங்கவோ செய்யும்போது "ஏமாற்றுதல் கூடாது" என்று கூறிவந்தார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
3:161. எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
5:13. அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார்.எவரிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டுவிடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
பேசினால் பொய் சொல்வதும்,ஒப்பந்தம் செய்து கொண்டால் (நம்பிக்கை) மோசடி செய்வதும்,வாக்களித்தால் மாறுசெய்வதும்,வழக்காடினால் நேர்மை தவறுவது தான் அவை (நான்கும்). இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இவற்றில் ஏதேனும் ஒரு குணம் அவரிடம் இருந்தால் நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவரிடம் இருக்கிறது“ என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
புக் :௧
227. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅகில் பின் யசார் அல்முஸனீ (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக( பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்.அப்போது மஅகில் (ரலி) அவர்கள் உபைதுல்லாஹ்விடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நான் இன்னும் (சில நாள்) உயிர்வாழ்வேன் என்று அறிந்திருந்தால் (அதை) உமக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து போனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை.
3576. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடிக்காரன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அதன் மூலம் அவன் அடையாளம் காணப்படுவான். "இது இன்ன மனிதனின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புக் :32
230. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்(துக் காத்)திருக்கிறேன்.
ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனத்தில் ("அமானத்" எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பிறகு குர்ஆன் அருளப்பெற்றபோது குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள்; (எனது வழியான) "சுன்னா"விலிருந்தும் அறிந்துகொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.)
இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்)புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து கைப்பற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு அவனில் நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் "நம்பகத்தன்மை" எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது,) காலில் தீக்கங்கை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்புளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரியதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. -பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறு கற்களை எடுத்துத் தமது காலால் அதை உருட்டிக் காட்டினார்கள்.-
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற முனையமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையாளரான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி "அவருடைய வீரம்தான் என்ன? அவருடைய விவேகம்தான் என்ன? அவருடைய அறிவுதான் என்ன?" என்று (சிலாகித்து) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவுகூட இறைநம்பிக்கை இருக்காது.
(அறிவிப்பாளர் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
என்மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடும். கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருந்தால் அவருக்கான அதிகாரி (எனது பொருளை) அவரிடமிருந்து மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
2:283. இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
3198. ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) அறிவித்தார்.
'அர்வா' என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறை வைத்துவிட்டதாகக் கருதி (மதீனாவின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின் போது) நான், 'அவரின் உரிமையில் எதையும் நான் குறைவைப்பேனா?' 'ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது (வளையமாக) மாட்டப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்" என்று சொன்னேன்.
Volume :3 Book :59
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
இப்னு அப்துல் ரஜாக்
7 Responses So Far:
அல்லாகொடுக்கும்இறுதிகூலியைபற்றிகவலைஇல்லாதவர்களேஏமாற்று கிறார்கள்.இறுதிநாள்பற்றியகவலைஅவர்களுக்குஇல்லை.''இன்றைக்குஅவர்கள்பணக்காரரர்கள்ஆகவேண்டும்''அதுதான்Target.
//மோசடிகாரன்ஒவ்வொருவனுக்கும்மறுமைநாளில்[அடையாள]ஒருகொடி இருக்கும்// ஊரார்சொத்தைஎல்லாம்தன்சொத்தாய்பட்டாபோட்ட பாவிக்குஒருகொடி/வாக்கூப் சொத்தை எல்லாம்
தன்வம்சாவளியினருக்குவகைவகையாய்பிரித்துக்கொடுத்தவனுக்குஒருகொடி!’ஏழைகொருநீதி!பணக்காரனுக்குஒருநீதி!’யென்றுநீதியை கொலைசெய்தநீசனுக்கு ஒருகொடி! பங்காளிதுரோகம்செய்துபளிங்குமண்டபம்கட்டிபவுசாகவாழ்ந்தவனுக்கு ஒருகொடி!செய்தஒப்பந்தத்தை தீபந்தம்போட்டுகொளுத்தியவனுக்குஒருகொடி!இப்படிகொடி-கொடியாய்பிடித்துஅணியணியாய்வரப்போகிற கொடியவர்கள் கோடி-கோடிபேரு!யாஅல்லா!அந்தக்கொடியவர்களுக்குகொடுத்தகொடி போல்எனக்கொன்றுகொடுக்காமல்அந்தக்கொடுமையின்நின்றும் என்னையும்என்சந்ததியினரையும்உறவினரையும்நண்பர்களையும் காப்பாயாக!ஆமீன்.
ஒரு சாண் அளவு நிலத்துக்கே மறுமை நாளில் ஏழு பூமி வளையமாக கழுத்தில் மாட்டப்பட்டால் கண்ணுக்கெட்டிய தூரத்திர்க்கெல்லாம் ஆட்டையை போட்டவர்களின் நிலையை எண்ணினால் சுபகனல்லாஹ். நம் அனைவரையும் அனைத்து பாவங்களில் இருந்தும் படைத்த இறைவன் மன்னிக்கவேண்டும்
அச்சமூட்டி எச்சரிக்கும் தொகுப்பு.
நன்றி தம்பி இப்னு அப்துர் ரஜாக்
எச்சரிக்கைகளின் தொகுப்பு. அனைவரையும் பாவம் செய்வதிலிருந்து அல்லாஹ் விலக்கிக் காப்பாற்றுவானாக!
வாசித்த கருத்திட்ட துவா செய்த எல்லா நல் உள்ளங்களுக்கும் நன்றி
Post a Comment