இன்றைய நவீன நாகரீக உலகில் நம் வாழ்வில் நடந்தேறிய சில பழைய நிகழ்வுகளை இன்று காண அல்ல, நினைத்து பார்க்க கூட நமக்கு சரிவர நேரம் இருப்பதில்லை. எல்லாம் நவீனமயம், துரிதம், காலதாமதமின்மை, அவசரம், அவசியம் என எங்கிருந்தாலும் நம் அன்றாட வாழ்க்கை அதே ஓரிறையின் கட்டளைப்படி அவரவருக்கு அவன் நாடியபடி எப்படியோ நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் சில இங்கு உங்களின் பார்வைக்கு ஞாபகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரிய பிரயோஜனம் ஏதுமில்லாமல் இருந்தாலும் அவற்றை சற்று இங்கு ஆசையாய் நினைக்க இனிக்கவே செய்யும். சும்மா லைட்டா படிச்சி பாருங்க.
1) வெயில் காலத்தில் தண்ணீர் வற்றி தன் மேனியில் கட்டம் போட்டு கடற்பாசி வெட்டும் தெரு குளத்தில் இறங்கி சேற்றில் விறாமீன் பிடித்து மகிழ்ந்ததுண்டா?
2) பால்கார வீட்டிற்கு சைக்கிள் டயரு வண்டியை ஒரு கையில் கம்பெடுத்து விரட்டி மறுகையில் டிப்பன் பாக்ஸ் பிடித்து சென்று பால் வாங்கி தந்த அனுபவம் உண்டா?
3) கலியாணகார வீட்டில் இரவெல்லாம் கலர் பேப்பரை டிசைனாய் வெட்டி அதை சனல் கயிற்றில் பசை காய்ச்சி ஒட்டி காற்றில் காய வைத்து பந்தலில் கட்டி பறக்க விட்டு உதவியதுண்டா? கலியாண வீட்டு நார்சா பூவந்தி உருண்டைக்கும் அதே வண்ணத்தாள் தான் பயன்படும்.
4) பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களுடன் ஏதோ குசும்பு செய்து அதை வாத்தியார் கண்டித்து அடுத்தநாள் பெற்றோரை கூட்டிக்கொண்டு வரச்சொல்லி அதை பெற்றோரிடம் சொல்ல பயந்து ரோட்டில் போய்க் கொண்டிருந்த தெரிஞ்ச மனுசரை தற்காலிக சாச்சா, மாமாவாக்கி வாத்தியாரிடம்அவரை கொண்டு வந்து நிறுத்தி சிலசமயம் மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
5) பம்பர விளையாட்டில் பிறரிடம் தோற்று கஸ்டப்பட்டு வீட்டில் பாடுபடுத்தி வாங்கிய அந்த பம்பரத்தை வென்றவர்கள் நன்கு மாசி பேக்க ஆக்ரோசமாய் ஊண்டு வைக்கும் பொழுது வேதனையில் கண்ணில் சில கண்ணீர் துளிகள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வந்த அனுபவம் உண்டா?
6) ஜெமிலாட்டு மூடியை (சோடா மூடி) நன்கு காசு போல் நசுக்கி அதன் நடுவே இரண்டு பொத்தல் (துளைகள்) இட்டு நூல் மூலம் அதை கோர்த்து சக்கரம் போல் சுற்றிய அனுபவம் உண்டா?
7) மழை காலங்களில் வானில் கூட்டமாய் பறந்து செல்லும் கொக்கு,மடையான்களை பார்த்து "மலையான் மலையான் பூப்போடு" என்று சொல்லி கேட்டது போல் நம் கை விரல்களில் ஏதோ வெள்ளைப்புள்ளிகள் மர்மமாய் வந்து ஆஹா அது வானில் பறந்து சென்ற அந்த கொக்கு மடையான்கள் தான் போட்டுச்சென்றுள்ளது என நம்பிய அனுபவம் உண்டா?
8) காலை, மாலை குர்'ஆன் பள்ளிக்கு ஆரம்ப கல்வியாய் அலிஃப், பே, த்தே, எழுதிப்படிக்க பலகை எடுத்து சென்ற அனுபவம் உண்டா? வாரா,வாரம் ஒஸ்தாருக்கு கொடுக்க கம்சு (கமீஸ் வியாழன்)காசு எடுத்துக்கொண்டு போய் கொடுத்த அனுபவம் உண்டா?
9) தெருவில் அம்பாசிடர் கார் (இன்று இதன் உற்பத்தியை நிறுத்தி ஹத்தம் ஓதி விட்டதாக செய்தி வருகிறது) மெதுவாய் வரும் பொழுது டிக்கி அருகே அதன் பின் மூலையில் டிரைவருக்கே தெரியாமல் செத்த நேரம் அங்கிட்டும் இங்கிட்டும் நண்பர்களுடன் தொங்கிக்கொண்டு தெரு முனைவரை சென்ற அனுபவம் உண்டா?
10) மண் பானை கடையில் களிமண்ணால் செய்த உண்டியல் வாங்கி அதில் அன்றாடம் பத்து காசு, இருபது காசு, கால்ரூவா, அரைரூவா போட்டு, போட்டு அதை நிரப்பி மகிழ்ந்ததுண்டா?
11) பள்ளி விடுமுறையிலும், மற்ற நேரங்களிலும் உடைந்த ஓடுகளை நடுவே அடுக்கி நண்பர்கள் இரு அணிகளாக எதிர், எதிரே பிரிந்து "பே பே, என்னா பே? பந்து பே? என்னா பந்து? ரப்பர் பந்து....." விளையாண்டு ஆசை தீர நண்பர்களுக்கு இறுக்கு வைத்து மகிழ்ந்ததுண்டா? விளையாட்டில் களைப்பு நேரம் கொஞ்சம் ஓய்வு எடுக்க "தும்க்கை" சொல்லி (ஸ்ட்டேடர்ஜிக் டைம் அவுட்) ஓய்வெடுத்த அனுபவம் உண்டா?
12) குர்'ஆன் பள்ளி விட்டு வீடு திரும்பும் முனையில் நண்பன்/நண்பிகளுக்கு சொல்லி அடித்த அந்த 'அந்தடி' அடித்து ஓடிய அனுபவம் உண்டா?
13) மாமாவும், மச்சானும், காக்காவும் அரபு நாடுகளிலிருந்து பல வருடங்கள் கழித்து ஊர் வந்ததும் சிறுவர்களாய் இருந்த நமக்கு ஆசையாய் தந்த கைக்கடிகாரத்தின் கண்ணாடியின் மேல் ஸ்க்ராட்ச் (கீறல்) வராமல் இருக்க கடைத்தெரு வாட்ச் கடையில் கலர், கலராய் ஸ்டிக்கர் வாங்கி அதன் மேல் ஒட்டி வாட்ச்சை புதூசா வச்சிக்கிட்டு மகிழ்ந்ததுண்டா?
14) ஆசைப்பட்டு வாங்கிய சைக்கிள் சக்கரங்களில் துரு பிடிக்காமல் இருக்க நாம் விரும்பும் கட்சி கொடிகளின் வர்ணக்கலரில் பூ வாங்கி அதில் மாட்டி ஓட்டியதுண்டா? மோட்டார் சைக்கிள் ஓட்டும் நினைப்பில் சக்கரத்தின் இரு பக்கவாட்டு இடுக்கில் பலூன்களை கட்டி சப்தமாய், ஆனந்தமாய் சைக்கிள் ஓட்டிச்சென்ற அனுபவம் உண்டா?
15) கொடலும், கல்கோனாவும், கடலைமிட்டாயும், தேன்மிட்டாயும், பால்பன்னும், மாங்காய் ஊறுகாயும் பாட்டில்களில் அடைத்து தெரு ஓரம் நணபர்களுடன் விற்று யாவாரம் செஞ்சி லாபம் பார்த்த அனுபவம் உண்டா?
16) கிழிந்து போன கால் பந்தையும், அதன் டியூப்பையும் நறுக்கி அட்டபில்லாய் செய்து அடித்த அனுபவம் உண்டா?
17) பெருநாள் (நல்லநாளு,பெரியநாளு) தினங்களில் நட்பு வட்டாரங்களுக்கு அஞ்சல் மூலம் வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்பி மகிழ்ந்ததுண்டா?
18) பற்றாக்குறையான மீசையை மெருகூட்ட கண் புருவ மை கொண்டு அதை கருமையாக்கி பாஸ்ப்போர்ட்டுக்கு போட்டோ எடுத்த அனுபவம் உண்டா?
19) வானில் வட்ட மிட்ட தும்பிகளை தம்பிகளாய் இருந்த நாம் பிடித்து அதன் வாலில் கயிறு மூலம் பேப்பர் கட்டி பறக்க விட்ட அனுபவம் உண்டா?
20) நண்பர்களுடன் சண்டை போட்டு விட்டு தவிர்க்க முடியா சூழ்நிலையில் அவர்களிடம் பெயர் சொல்லி பேசாமல் வெறும் இந்தாப்பா, வாப்பா, போப்பா, இருப்பா என்று கொஞ்ச காலம் பேசிய அனுபவம் உண்டா?
21) அடிக்கடி வெளியில் சென்று செருப்பை காணாமலாக்கி விட்டு வீட்டில் எல்லோரிடமும் திட்டு வாங்கிய அனுபவம் உண்டா?
22) வீட்டின் அன்றாட சமையலறை தேவைக்கு விறகு கடை சென்று "இரண்டு, மூனு மனுவு" விறகு வாங்கி சைக்கிள் பின்னால் கேரியரில் முறையே கட்டி வைத்து வீட்டிற்கு வாங்கி கொடுத்த அனுபவம் உண்டா?
23) தட்டச்சு பழக ஆனந்தமாய் டைப் ரைட்டர் கிளாஸுக்கு சென்று அங்கு தான் சுயமாய் அடித்த நாலஞ்சு ஆங்கில வார்த்தைகளை சிலரிடம் காட்டி மகிழ்ந்த அனுபவம் உண்டா?
24) கனவு இல்லம் போல் அழகாய் வடிவமைத்த பட்டம் வானில் வால் ஆட்டி உயர,உயரவே பறந்து அதற்கு தந்தியும் அனுப்பி பிறகு திடீர்ண்டு "யார் கண் பட்டதோ தெரியவில்லை?" செத்த நேரத்தில் வால் அறுந்து குட்டிக்கரணம் அடித்து ஏதோ ஒரு தென்னை மரத்தில் மாட்டி சிக்குண்டு மீட்க முடியாமல் போன அந்த எம்.ஹெச்.370 விமானம் போல் எம் ஆசைகளை சின்னாபின்னப்படுத்தி சோகத்தில் ஆழ்த்திய அனுபவம் உண்டா?
25) பச்சைக்கிளி வாங்கி அதன் நாக்கு உறித்தால் நன்றாக பேசும் என்று எவரோ சொல்லியதை நம்பி அதற்கும் முயற்சி செய்து பிறகு அது தர்த்திரிப்பா (ஒழுங்காக) பேசாமல் போனது கண்டு வருந்திய அனுபவம் உண்டா?
26) காலில் வீதல்ரோடு(உடைந்த கிளாஸ் துண்டு) குத்தி அதை சரிவர கவனிக்காமல் விட்டு பிறகு அது வீங்கி சலம் வைத்து வேதனையில் வீட்டிலுள்ளவர்களை சிரமத்திற்குள்ளாக்கிய அனுபவம் உண்டா?
27) இரவில் படுக்கும் பொழுது காதில் எறும்பு போய் பெரும் போராட்ட, கூக்குரலுக்குப் பின் (அலங்கமலங்கப்படுத்திய பின்) அதை வெளியே கொண்டு வந்து நிம்மதி பெருமூச்சு விட்ட அனுபவம் உண்டா?
28) நமதூர் ரயில் தண்டவாளத்தில் காந்தம் கிடக்கும் என்று நம்பி நண்பர்களுடன் அங்கு சென்று காந்தம் தேடிய அனுபவம் உண்டா?
29) "ஆரீ ராரீ ராரீ ரோஜன் கண்மணியே, ஆரீ ராரீ ராரீ ரோஜன் நபிமணியே" என்று எம் காதுகளுக்கு இனிமை தரும் அக்கால தரையில் முட்டி போட்டு சுற்றி, சுற்றி அடிக்கும் பைத்துசபா பாடலுக்கு இன்றுவரை அர்த்தம் விளங்க முடியவில்லை. சின்னத்து காரு (அலங்கார ஊர்தி) மேல் ஏறி பைத்துசபா ஊர்வலத்துடன் ஊரை சுற்றி வர ஆசை பட்ட அனுபவம் உண்டா?
30) பள்ளியில் நம்மை விட ஒரு வகுப்பு கூடுதலாக படித்து அடுத்த வகுப்பு செல்லும் அவர்களிடம் பாதி விலைக்கு புத்தகங்கள் வாங்கி படித்த அனுபவம் உண்டா?
31) குதிரை வண்டியின் சலங்கை சப்தமும் அதனுள் பயணிக்கும் நம் சொந்த,பந்தங்களும் அவர்கள் கொண்டு வரும் வெளிநாட்டு பெட்டியும் அதற்குள் என்ன இருக்கின்றது என தெரியாமல் அலைபாயும் நம் மனசும் சந்தோசம் தந்த அனுபவம் உண்டா?
32) ஒரு நேரம் வெளிநாடுகளில் வேலை செய்யும் சொந்த பந்தங்களுக்கு பெரும்பாடுபட்டு எடுத்த பாஸ்போர்ட் காப்பி ஒன்று விசாவுக்கு தோது பண்ணச்சொல்லி அனுப்பி வைத்து விட்டால் அதுவே மிகப்பெரிய காரியம் நிறைவேறியது போலும், எம்ப்ளாய்மெண்ட் ஆஃபீசில் பதிவு செய்து வைத்த சந்தோசமும் கிடைத்த அனுபவம் உண்டா?
33) வானம் வடகிழக்கே கருத்துக்கொண்டு (இருட்டுகசமா) வந்து விட்டால் இன்னெக்கி நிச்சயம் ஸ்கூல் அஞ்சு பிரியடு தான் இருக்கும் என மனக்கணக்கில் உறுதியாய் நம்பி சந்தோசமாய் பள்ளி சென்று பிறகு வானம் உச்சிஉரும நேரத்தில் சுள்ளுண்டு வெயில் அடித்து மழை பொய்த்து அஞ்சு பிரியடு இல்லாமல் போய் ஏமாற்றமடைந்த அனுபவம் உண்டா?
34)கம்பன் எக்ஸ்பிரஸில் இரவு பயணத்தில் சாப்பிட வீட்டிலிருந்து இடியப்ப சோறும், அதற்கு கறியாணமும், ஊறுகாயும் தினசரி பேப்பரில் பார்சலாய் கட்டி எடுத்து வந்து பயண வழியில் சாப்பிட்டு மகிழ்ந்த அனுபவம் உண்டா?
35) கலியாண வீடுகளில் ஒரு மாதத்திற்கு முன்பே பெயிண்ட் அடிப்பது முதல், பத்திரிக்கை அடித்து வெளிநாடு வாழ் சொந்த பந்தங்களுக்கு முறை எழுதி முறையாக அஞ்சல் அல்லது தொனா.கானா மூலம் அவர்களுக்காக (கொறை ஏதும் வராத வண்ணம்) கொடுத்தனுப்பி வைத்த அனுபவம் உண்டா?
36) கலியாண வீட்டு நார்சா பூவந்தி உருண்டை உருட்டி அதை கலர் தாளில் சுருட்டி அதற்குள் மோதிரக்கல் போல் பதிந்திருக்கும் கல்கண்டு எடுத்து சாப்பிட்ட அனுபவம் உண்டா?
37) அஞ்சி ரூவா, பத்து ரூவா சிறுசேமிப்பில் யாரிடமாவது சேர்ந்து அஞ்சோ, பத்தோ அவரிடம் செலுத்தி அதை சேமிப்பு அட்டையின் ஒவ்வொரு கட்டமாக அடித்து வரும் பொழுது அது முடிந்து நமக்கு கிடைக்க இருக்கும் மொத்த தொகையை நினைத்து மகிழ்ந்த அனுபவம் உண்டா?
38) கடைத்தெருவில் விற்கும் கலர்,கலர் கோழிக்குஞ்சுகள் வாங்கி அதை வீட்டில் பத்திரமாய் பிள்ளை போல் வளர்த்து கொஞ்சம் பெருசாகிக்கொண்டிருக்கும் பொழுது திடீர்ண்டு காக்கை வந்து அதை லபக்குண்டு தூக்கிச்செல்லும் பொழுது உடன் பிறந்த ஒருவரை அடித்துச்செல்வது போல் வேதனையடைந்த அனுபவம் உண்டா?
39) மழைக்காலங்களில் வீட்டின் கொல்லைக்கிணற்றில் வாளியின்றி கையால் குவளையில் தண்ணீர் அள்ளிய அனுபவம் உண்டா? அதற்குள் குளத்தில் பிடித்த மீன்களை இட்டு ஒவ்வொரு நாளும் அதை மேலிலிருந்து எட்டி, எட்டி பார்த்து கடைசி வரை அது வளராமல் கிணற்றுக்குள்ளேயே கண்மாசியாக்காணாமல் போன அனுபவம் உண்டா?
40) எம்மிடம் குறைந்த செல்வமே இருந்தாலும், ஏழ்மை எல்லோர் வீட்டிலும் பாய் விரித்து படுத்துறங்கிக்கொண்டிருந்தாலும் அன்று ஒவ்வொரு வீட்டிலும் பொருளாதாரம் தாண்டி கொட்டிக்கிடந்த சந்தோசக்குவியல்கள் இன்று தெருவில் சொகுசு வாகனமாய் ஆடியும், பி.எம்.டபுள்யூவும் ஓடியும் அவைகள் எல்லோர் வீட்டிலும் சந்தோசத்தை கொண்டு வந்து சேர்த்து விடுவதில்லை ஏனோ???
இன்னும் இப்படி எழுத ஏராளமுண்டு படிக்க உங்களுக்கு ஆசையும் வேண்டுமல்லவா?
விடுபட்ட நல்ல நினைவுகளை பின்னூட்டம் மூலம் தொடருங்கள்.
வல்ல ரப் நமக்கெல்லாம் நல்லருள் புரியட்டுமாக!
நீண்ட இடைவெளிக்குப்பின் நல் நினைவுகளுடன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது
19 Responses So Far:
///நீண்ட இடைவெளிக்குப்பின் நல் நினைவுகளுடன்.//
ஜஸாகல்லாஹு. .... நல்லாக்கிறீயலா....நெய்னா....எப்பொ வந்தியே.....அல்லாஹ் உங்களுக்கு நல்ல சதுர (உடல்)வாழ்வையும்,உடல் சுகத்தையும் தருவாமா.(தருவானாகவும்)..ஆமீன்... பராக்கப்பல்லெ நோம்புக்கு முன்னாடி பரப்பியலா...அல்லது நோம்பு முடிஜ்ஜா....
ஊருலெ சஹன் சோத்துலெ உங்கலெ கானெலெயெ...ஊருலெ இப்பொ மாப்புலெக்கி வெள்ளிக்கிலெமெயிலெ வெத்திலெ சாரு,மஜ்ஜெத்தன்னி வச்சு சுத்துரதுலாம் இல்லெ.பந்தக்காலு பலக்கம்லா நின்டுப் போச்சு.. அல்ஹம்துலில்லாஹ்...
ஆனா நீங்க சொன்ன நாப்பதும் நின்டு போனதுதான் மனசுக்கு கவலையா ஈக்கிது....
நீங்க வந்தது சந்தோசம்.....
No.1] மழைகாலங்களில் குளம்உடைப்பெடுத்து ஓடும்போது இன்றைய ஹாஜாநகர் போட்டல்வெளியாக இருந்தது. அதில் ஊத்தா குத்திவிறால்மீன் பிடித்த நினைவு இன்றும் பசுமை/ரெயில்வே ஸ்டேஷன்அருகில் இருக்கும்பாலத்தில் தூண்டில்போட்டபோது அதில் மீனுக்குபதில்பாம்பு வந்து மாட்டிய து. தூண்டில்கயிரைவெட்டிவிட்டு கைகால் நடுங்கி காம்போடு வீடு வந்தேன்
''.உப்பு'விக்க போனால் மழை வருது; உமிவிக்கப்போனால் காத்தடிக்குது'' என்ற ஒருசொல்லடைஉண்டு.எனக்கோ மீன் பிடிக்க தூண்டில் போட்டால் பாம்பு வந்து மாட்டுது.[இன்னும்வரும்]
இசை கேட்பது சுகமோ இல்லையோ அசை போடுவது அவ்வளவு சுகம்.
தம்பி நெய்னா அவர்களின் பட்டியல் இன்னும் நீளும் போல இருக்கிறது.
கோடைக் கேற்ற குளிர்ந்த காற்று இந்தப் பதிவு.
Assalamu Alaikkum
Dear brother MSM Naina Mohammed,
Majority(99%) of your compilation has brought the life of our childhood again in our memories now. Your memory has very strong impressions. MashaAllah!!!.
Recovering good and bad impressions in the memory can be useful ones as far as nourishing the present life. If it pains with despondency then better not to remember those memories.
The prayer five times a day we perform fetches five enough pauses and gaps to self reflect and stability in life that ensures Living Fully Here and Now.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.
தெரு பசங்க சண்டையில தோழப்புள்ளெக்காக ஏந்திக்கிட்டு போன அனுபவம் உண்டா?
பாடு படுத்தும் சிறு பிள்ளைகளை உற்சாகப்படுத்த அவர்களையும் விளையாட்டில் உப்புக்கு சப்பானியாய் விளையாட்டில் சேர்த்துக்கொண்டு விளையாடிய அனுபவம் உண்டா?
இனியவை நாற்பதுவும் மதுரம்.
இவைதான் யதார்த்தத்தில் இனியவை. இனியவை இவையிலை யெனில் இனியவை இனி எவை?
சகோ நெய்னாவின் பதிவுகள் தந்து வந்த புத்துணர்வும் ஆறுதலும் இனி தொடரட்டும்.
இனியவை நாற்பது இரண்டாம் பாகம் தொகுக்கப் படுமா?
இனியவை நாற்ப்பதிலும் ''இனி அவை ஒன்றாவது கிடைக்குமா?'' யென்று மனசு திண்டாடிதெருவில் நிக்குதையா!
அசை!
நினைவிருக்கா நண்பா?
முருகய்யா தியேட்டர்...
முடிச்சு முடிச்சாய் முருக்கு...
மதிய நேரக் காட்சி-
மகளிர் பக்கக் கதவு
மறுபடி திறக்க…
வெள்ளித் திறையில் விழுந்த
வெளிச்ச வெட்டு…?
தெருவில் ஓதித் திறிந்த
அர்ரஹ்மானும்...ஆமீனல்லாவும்...
தராவீஹும்…ஹிசுபும்
கொடிமர மைதான
கிளித்தட்டும்...
கஞ்சியில் பிய்த்துப் போட்ட
இறால் வாடாவும்...?!
உம்மா வைத்து விட்ட-
சுர்மா,
பெருநாள் கைலியில்
லேபில் கிழிக்கும் சந்தோக்ஷம்,
கைலியில் தங்கிய
லேபிலின் எச்சம்…?
தான்தோன்றிக் குளத்தில்
அம்மணக் குளியல்,
உடையைத் திரும்பப் பெற…
பெருசுகள் முன்னால் போட்ட
தோப்புக் கரணங்கள்…?
அடாத மழையும்
விடாத விளையாட்டும்,
சாயந்தர விளையாட்டுக்குப் பிறகு
கடை ஆணத்தில்
ஊறிய பரோட்டா?!
குரங்கு பெடலில் சைக்கிள்,
செடியன் குளத்தில்
பச்சை-
பச்சைத் தண்ணீர் குளியல்,
லக்ஸ் சோப்பில்
பினாங்கு வாசம்?
சவுரி
மீரா மெடிக்கலில் தரும்
லட்டர் சுகம்?
கடுதாசியின்
முனை கிழித்து-
பணம் தரும் நம்மூர் உண்டியல்?
ரயிலடிக் காற்றில்
பரீட்சை பயத்தில் படிப்பு?
கூடு பார்த்த
அடுத்தநாள் தூக்கம்?
ஈ மொய்த்த பதனி?
கலரி வேலை-
கலைப்புக்குப் பிறகு…
எறச்சானம்/புளியானம்?
வீடு திரும்பும் நள்ளிரவில்
எங்கிருந்தோ…
கிழங்கு சுடும் வாசம்?
பாம்பு முட்டையிடுதாம்!
பாதி நிலவொளியில்…
பின்னால் பேய்?
ஏழு கட்டையில்…
"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
ஓடு ராஜா..."?
கேள் நண்பா-
இப்பவும் நம்மூர்
நல்லாத்தான் இருக்கு...!
மணல் போத்திய
தார் சாலையும்...
களை சூழ்ந்த
நீரோடையும்
என...!
கைம் பெண்ணாய்
ரயில் நிலையமும்...
கற்பழிக்கப் பட்டவளாய்
பேருந்து நிலையமும்...
சவளைப் பிள்ளையாய்
தபால் நிலையமும்...
காசும் கட்டப் பஞ்சாயத்துமாய்
காவல் நிலையமும்
எனவும்...!
மேலும் சில நினைவுகள்:
அகலப் பாதை!
நல்ல பிள்ளையென
நீண்டு
பூமி துளைத்து
சிலதும்
சவலைப்பிள்ளையென
சோனியாய்த் தொங்கிக்கொண்டு
சிலதும்
விழுதுகள்....
ஆலமர நிழலில்
ஆளமர முடியாமல்
சிமென்ட் பெஞ்சில்
பறவை எச்சங்கள்...
நினைவில் மிச்சங்கள்!
மேல்திசையின் ஒளிப்பொட்டும்
மெல்லிய இறைச்சலும்
கொஞ்சம் கொஞ்சமாக
விட்டம் வளர்த்தும்
சப்தம் கூட்டியும்
நிலையம் வந்து...
பெட்டி படுக்கையோடு
வாப்பாவை ஏற்றிகொண்டு
கீழ்திசை நோக்கி
கருப்புச் சதுரம்
கடுகென குறைந்து
மறைந்த பொழுதுகள்...
மறையாது நினைவுகள்!
அதே
கீழ்திசையிலிருந்து
அடைமழை காலத்து
பிறை நிலவென
மெல்லத் தோன்றி
கருப்பு தேவதை
மூச்சிறைக்க
நிலையம் வந்து
வெளிநாட்டுப் பொருட்களோடு
வாப்பாவை இறக்கிச் சென்ற
அதிகாலை...
ஆனந்தத்தில்
அழுத பொழுதுகள்!
தனக்கான உணவு
தானிழுக்கும்
வண்டிக்கடியில்
வைத்திருப்பதறியாது
வாயசைத்துக் கொண்டிருந்த குதிரை.
மின் கம்பத்தின்
கட்டுப்பாட்டில்
உணவை அசைபோட
மனதோ நினைவுகளை...!
க்ளைடாஸ்கோப்பும்
கித்தாச் செருப்பும்
செஸ் போர்டும்
சாக்லேட்டும் அடங்கிய
பெட்டியை சுமந்த
கூலியும்
தர்காமுன் ஃபாத்திஹாவும்
பகிர்ந்தளித்த இனாமும்
நினைவுச்சின்னங்களின்
சுவர் கிறுக்கல்களாக
நினைவில் மிஞ்ச
அத்தனை இருப்புப் பாதைகளும்
தொடர்பறுந்து போய்விட
அடுத்த பட்ஜட்டின்
அகலப் பாதை
திட்டத்திற்கான
நிதி ஒதுக்கீட்டுக்காக
கைம்பெண்ணாய் காத்திருக்கிறது
எங்கள் ஊர்
ரயில் நிலையம்!
எம்.எஸ்.எம்(என்) ரிட்டர்ன்ஸ் ! :)
அம்மா சொன்னா நாற்பதுக்கு நாற்பதுன்ன்னு சொல்லிக் கொடுத்த மார்க் வாங்காட்டியும்... ஏதோ கொஞ்சமாவது கூட்டணி தயவுல ஜெயிச்ச கட்சியாட்டம் கொஞ்சனஞ்சம் இனியவைகாய இன்னும் இதயத்தில் இருக்கத்தான் செய்கிறது....
நிறைய பேருக்கு அசைபோடுவது பிடிக்கும், சிலருக்குத்தான் வசை பாடுவது மட்டுமே பிடிக்கும் !
நல்லதொரு 'அசை'வம் ! :)
கவிக் காக்காவின் அசை யும் ! யும் ! யும் !
அத்தனையும் கொட்டிக்கிடக்கும் பழைய நினைவுகளின் நிழல்கள்....
கவிதை எழுதுபவர்களுக்கு "கிரியாஊக்கி"
சில விசயங்களை மனைவியிடம் படித்துக்காண்பிக்க சேமித்து வைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் பழைய நினைவுகள்தான் ஊன்றுகோல் மாதிரி இயக்குகிறது.
MSM...well done . one of the best article as usual.
பாஸ்.....இது போல் எல்லோரும் அனுபவப்பட்டதால் ' இந்திய காப்பி & பேஸ்ட் சட்டத்துக்குள் வராதுதானே?'
மூத்த சகோதரர்களின் முத்தான, கவிநயமான கருத்துக்களுக்கு நன்றிகளும், சலாமும்.
//மணல் போத்திய
தார் சாலையும்...
களை சூழ்ந்த
நீரோடையும்
என...!
கைம் பெண்ணாய்
ரயில் நிலையமும்...
கற்பழிக்கப் பட்டவளாய்
பேருந்து நிலையமும்...
சவளைப் பிள்ளையாய்
தபால் நிலையமும்...
காசும் கட்டப் பஞ்சாயத்துமாய்
காவல் நிலையமும்
எனவும்...!//
நிஜங்கள்! நிதர்சனங்கள்!
இந்தபட்டியலில் விடுபட்டவை
ட்ரிம் பண்ணாத தாடி மீசைகளாய்
காட்டுககருவைகள்
குப்பைக் கூளங்களின்
குடவுனாக சி எம் பி வாய்க்கால்
ஷாக் அப்சர்பருக்கு வேலைதரும்
சாலைகள்
ஒரே வயிறு உள்ளோர்க்கு ஒரே நாளில்
ஒன்பது திருமணங்களுக்கு அழைப்புகள்
நெல் விளைந்த வயல்களில்
கல் விளைந்துள்ள காட்சிகள்
வட்டி வலையில் சிக்கிய
மனித மீன்கள்
டாஸ்மார்க் வாசலில்
கம்புக்கட்டுக்குள் தொப்பிகள்
அருமை
அருமை
அஸ்ஸலாமு அலைக்கும், நெய்னா, நலமா?
உங்களின் பதிவை படிக்கும் ஒவ்வொரு தருணமும், எல்லோரின் சிந்தனைகளை 20, 30 வருடத்திற்கு பின்னால் இழுத்துச்செல்கிறது.
உங்கள் பதிவுகளை வாசித்து கண்ணீர் சிந்திய வெளிநாட்டு வாழ் நம்மூர் சகோதரி ஒருவர் உங்கள் தாயாருக்காகவும்உங்களுக்காகவும் துஆ செய்ததாக என் செவியில் அந்த செய்தி விழுந்தவுடன், நான் நினைத்தேன், உங்கள் பதிவுகள் உற்சாகமாக பழைய நினைவுகளை மட்டும் தரவில்லை, உள்ளங்களையும் உறுக்கவும் செய்கிறது என்று..
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லருள் புரிவானாக... அல்லாஹ் உங்கள் தாயாரின் ஆஹிரத்து வாழ்வை சிறப்பானதாக்கி வைப்பானாக
தாஜீத்தீன், அவர்களுக்கும் என் சலாத்தினை எத்தி வைக்கவும். தரமுடைய இழப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.
இங்கு தாயுடைய என்று அடிப்பதற்கு பதில் தரமுடைய என்று பிழையாய் வந்திருந்தாலும் அவரவர்களுக்கு நிரந்தர தரமுடையவர்கள் தான் தாய்மார்கள்.
சென்ற வருட நோன்பில் உடலுக்குள் பல நோய்நொடிகளையும், தங்கடங்களையும் வைத்துக்கொண்டு அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அலைபேசியில் என் நலம் விசாரித்த எனதருமைத்தாயே! இவ்வருட புனித ரமழான் நோக்க இயலாமல் இறைவனடி சேர்ந்து விட்டாயே! உலகில் நீ பட்ட கஸ்டங்களுக்கு அல்லாஹ் ஆஹித்தில் உனக்கு நிரந்தர சுகமளிக்கும் நற்பதவியை தந்தருள இரு கையேந்தி அவனிடமே மன்றாடுகிறேன். யா ரப்! எங்க உம்மாவையும், ஆதம், ஹவ்வா அலைஹி....முதல் இந்த நொடிப்பொழுது வரை மரணித்த அத்துனை உம்மத்துக்களையும் சுவனபதியில் எவ்வித குறையுமின்றி நல்லபடி கவனித்துக்கொள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
Post a Comment