நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - 2 22

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், ஜூன் 19, 2014 | , ,

அறிவிப்பு : அரேபியர்களுக்கு ஜாஹிலியா என்னும் அறியாமைக் காலத்தைப்போல அநேக இஸ்லாமியர்க்கு அல்லாஹ் மற்றும் ரசூல் (ஸல்) என்று அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் பொழப்புக்கு அவுலியாக்களை ஹீரோக்களாக வைத்து காசு பார்த்த கால கட்டம் அது. அற்றை பொழுதுகளில் தர்ஹாக்குச் செல்வது ஒரு மார்க்க கிரியையாகவே கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆகவே, என் கீழ்க்காணும் தர்ஹா பயணங்கள் அங்கு நடக்கும் உட்டாலக்கடி விஷயங்களை வெளிச்சம் போடவே அன்றி, ஷிர்க்கை ஊக்குவிக்க அல்ல, இனி அதன் பக்கம் எவரும் நெருங்கக் கூடாது என்று எச்சரிப்பதே இதன் நோக்கம்.

கு.தொ.: 2

ஒவ்வொரு தடவையும் மலேஷியா புறப்படும் போது முத்துப்பேட்டை தர்ஹா, நாகூர் தர்ஹா, கோட்டைப்பட்டணம் தர்ஹா, ஏர்வாடி ஆகிய அவுலியாக்கள் அடங்கிய தளங்களுக்குச் சென்று ஃபாத்திஹா அல்லது மவுலுது ஓதிவிட்டுப் புறப்படும் பழக்கம் இருந்தது.

ஒரு தடவை முத்துப்பேட்டை போனபோது எங்களுக்கு வாடிக்கையான ஒரு லபை வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வந்து ஃபாத்திஹா ஒதுவது பழக்கம். எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது நேர்த்திக்கடனுக்காகத் தங்கி இருந்ததால் ஏகப்பட்ட பழக்கம். எனக்கு இப்போது வயது 75 முடிஞ்சு 76 நடக்கிறது. அந்த உறவு தொடர்கிறது. நோன்புக்கு நோன்பு புதுப்பிக்கப்படுகிறது; இன்ஷா அல்லாஹ் அது தொடரும். இப்போது அந்த லபையின் பேரன் வருகிறார். அன்று நான் நேர்த்திக்கடனுக்குத் தங்கி இருந்தபோது இந்தப் பையனின் தாயார் வயதுக்கு வராத சிறு பிள்ளை! அந்த மூத்த லபை காலமானபின் அவர் வாரிசு அவர் மகன் தொடர்ந்தார் நல்லவர், பாசமும் உள்ளவர். ஒரு முறை மலேசியாவுக்குக்கூட வந்தார். 

நிற்க, ஒருமுறை அங்கு சென்றபோது மண்ணில் கட்டிய குச்சுகளில் நேர்த்திக்கடன் 40 நாள் 60 நாள் அல்லது அவுலியாக்கள் தங்குபவர்களின் பிணிகளையெல்லாம் நீக்கி ‘உத்தரவு’ கொடுக்கும்வரை தங்கி இருப்பார்கள். நானும் என் தாயாரும் அங்கே 2 மாதங்களுக்கு மேல் தங்கி இருந்தோம். இந்த இடத்தில் ஒரு உண்மையை நான் சொல்லித்தானாக வேண்டும். மனசாட்சிக்கு மாறு செய்வதில் எனக்கு விருப்பமில்லை. எந்த மருந்து தின்றும் பல டாக்டரிடம் காட்டியும் குணமடையாமல் கை விடப்பட்ட கேஸாக நான் இருந்தபோது பலர் முத்துப்பேட்டை அக்கரைப்ப்பள்ளி போங்கள் குணமாகும் என்றார்கள். அதன்படி அங்கே என்னைத் தூக்கிப் போனார்கள். நடக்கக்கூட முடியா நிலை மட்டுமல்ல. எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்தேன். யாருக்கும் நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. அனால், நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது!

அங்கே போனதும் கொஞ்சம் கொஞ்சம் கம்பை ஊன்றி நடந்தேன். மருந்து ஏதும் நான் சாப்பிடவில்லை. போகப்போக உடல் தேறியது. வியாதியின் உக்கிரம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்தது. நடக்கக்கூட முடியாத நான் ‘கிளித்தட்டு விளையாடும்’ அளவுக்குத் தெம்பு பெற்றேன். அந்த miracle என்ன என்று சொல்ல எனக்குத் தெரியாது. கடைசியாக பல மாதங்கள் கடந்து பூரண சுகத்துடன் ஊர் வந்த அடுத்த நாளே ஃபுட்பால் விளையாடப் போனேன். பார்த்த ஜனமெல்லாம் மூக்கின்மேல் விரல் வைத்தது. 

ஒருமுறை முத்துப்பேட்டை தர்ஹா சென்றபோது நேர்த்திக்கடனுக்குத் தங்கி இருப்போர்களின் குச்சுகள் இடித்து 9 ரூம்கள் எடுக்க அஸ்திவாரம் போட்டு சுவரும் இடுப்பளவு எழுப்பி இருந்தது. என்னை அங்கே அழைத்துப்போய் என்னிடம் காட்டினார். அதன் புளு பிரிண்ட்டையும் கான்பித்தார். மொத்த எஸ்டிமேட் எழு லட்ச ரூபாய் என்றார். அதற்கு மேலும் ஒன்பதுக்கும் நெருங்கும் என்றார். உங்களில் ஒருவர் பத்து மூடை சிமெண்ட் கொடுங்கள் என்றார். அப்பொழுது சிமெண்ட் மூடை ரூ 70-75 ஆக இருந்தது. நீங்களும் உங்கள் ஹக்கில் நல்லபடியாக செய்யுங்கள் என்றார். மலேசியா போய் ரெண்டொரு மாதங்களுக்குப்பின் ஊருக்கு கடிதம் எழுதுகிறேன் தருவார்கள் என்றேன். பின்பு தர்ஹாவுக்குப் போய் ஃபாத்திஹா ஓதிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்தேன். தர்ஹா வாசலில் நின்ற ஒரு வாலிபர், “ விளக்குக்கு எண்ணெய் போட பணம் கொடுங்கள்” என்றார். பக்கத்துக் கடையில் ஒரு பாட்டில் எண்ணெய் வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். 

“எண்ணெய் போட பணம் கொடுங்கள்” என்றார்.

“ இப்பத்தான் எண்ணெய் வாங்கி கொடுத்து விட்டேனே” என்றேன். மீண்டும், 

“எண்ணெய் போட பணம் கொடுக்கனும்” என்றார். 

“எண்ணெய்தான் வாங்கிக் கொடுத்துவிட்டேனே” என்றேன். 

“என்ன, நீங்கள் ஒன்னுமே புரியாமல் பேசுகிறீர்கள்? சொல்றது விளங்குதா இல்லையா?” என்று கொஞ்சம் அதட்டலுடன் கேட்டார். ஃபாத்திஹா ஓதிய என் வாடிக்கை லபை, 

“ அவர் சொல்வது உங்களூக்குப் புரிய வில்லை. நீங்கள் வாங்கிக்கொடுத்த எண்ணெயை விளக்கில் போட ஒருவர் இருக்கிறார். அது அவருக்கு ஒதுக்கப்பட்டது. அந்த எண்ணெயை ஊற்றி விளக்கு கொளுத்த அவருக்குப் பணம் கொடுக்க வேண்டும். அந்தப் பணத்தைத்தான் அவர் கேட்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு லபைக்கு இந்த காரியம் பிரித்துக் கொடுக்கப்படும்” என்றார்.

முன்பு நான் பலமுறை போனபோது இந்த சிஸ்டம் கிடையாது. இதுவும் அவுலியாக்களின் பேரைச் சொல்லி பக்தர்களை விஞ்ஞான முறையில் கொள்ளையடிக்கும் முறை!

எனக்கு ஆத்திரம் வந்தது.

“அப்படியெல்லாம் காசு கொடுக்க என்னிடம் பணம் காய்க்கும் மரமில்லை. எண்ணெய் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் வேண்டாம் என்றால் தந்து விடுங்கள்” என்றேன். 

“அவுலியாக்கள் தளத்துக்கு வந்து விட்டு நீங்கள் இப்படியெல்லாம் நடப்பது நல்லதல்ல” என்றார்.

“நல்லதோ கெட்டதோ அது என்னோடு இருக்கட்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு 

“எண்ணெய் வேண்டுமா வேண்டாமா?” என்று அதட்டினேன்.

இதற்கிடையில் மற்றொரு வளமான பக்தர் குடும்ப சகிதம் வந்ததால் கம்யூனிகேஷன் தொடர்பு அறுபட்டது. நானும் என் நண்பரும் புறப்பட்டு நாகூர் போனோம்.

போகும் வழியில் பாப்பா ஊர்! அங்கு போய் ஃபாத்திஹா ஓதினோம். பணம் கொடுத்தோம். வாங்கிக் கொண்டு எங்களை துவா செய்து அனுப்பி வைத்தார் ஒரே ஒரு லபை. நேராக நானும் நண்பரும் நாகூர் சென்றோம். நாங்களாகவே ஃபாத்திஹா ஓதினோம். உண்டியலில் காசு போட்டோம். வாங்கிக் கொண்டுபோன சாம்புராணியை சட்டியில் போடப் போனோம். சாம்புராணி சட்டி அருகில் விசிறியுடன் நின்றவர் சட்டியில் சாம்புராணியைப் போட கட்டணம் கேட்டார். ரூ 10/-தான், கட்டினோம். போட்ட சாம்புராணி புகைந்து மணம் பறப்பியது. 

“நாகூரில் மவுலூது ஓதி ரூ 10/- கொடு. நான் வேண்டிக்கொணடேன்” என்று என் தாயார் என்னிடம் சொல்லி அனுப்பியது. ஒரு தூணில் சாய்ந்து கொண்டிருந்த ஓரு நடுத்தர வயதுக்காரர் எங்களைப் பார்த்து, 

“மவுலுது ஓதுனுமா?” என்றார். என் நண்பர் ஆமாம் என்றார். என் நண்பருக்கும் அப்படி ஒரு வேண்டுதல் இருந்தது. ஓதுபவர் இடது புறத்தில் ஒரு கல்லாப்பெட்டி. அவருக்கு முன்னால் ஒரு ஓலைப் பெட்டி உண்டியல்போல் நடுவில் காசு போடும் அளவுக்கு துவாரம் இருந்தது. அந்த ஓலைப்பெட்டி மல்லிகைப் பூ சரத்தால் கல்யாண பெண்போல் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

நானும் என் நண்பரும் எதிரே உட்கார்ந்தோம். 

“யார் பேருக்கு மவுலுது ஓத வேண்டும்? “ என்றார் லபை. என் நண்பர் என்னை விட மூத்தவர். அவரைக்காட்டி,

“ஷ பெயர் ஷாகுல் ஹமீது. அவர் பெயரில் ஓதுங்கள்” என்றேன். 

“உங்களுக்கு?” என்றார். 

“பிறகு” என்றேன். 

“மவுலுது ஓத எவ்வள்வு?” என்றேன்.

“பெரிய மவுலுது ரூ 50/-; சின்ன மவுலுது ரூ 30/-“ என்றார். 

“எங்களுடைய நிய்யத்து ரூ 10/- தான், அதற்கு உள்ள மவுலுது ஏதாவது இருக்கா?’ என்றேன். (அந்தக் காலகட்ட்த்தில் ரூ 10/- என்பதும் பெரிய காசே!) என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு,

“ ஓதலாம்” என்றார். என் நண்பரைப் பார்த்து,

“ஓதலாமா?” என்றார். இப்படி ஒரு மரியாதை நிலவி வந்தது. நண்பர்,

“ஓதுங்கள்” என்றார். 

“காணிக்கையை இந்தப் பெட்டியில் போடுங்கள்” என்றார். இந்த லபை காணிக்கை என்று சொன்னதில் எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது. வார்த்தையின் சூசகம் என்னை உஷார் படுத்தியது. ஆனால், என் நண்பரோ ஒரு முந்திரிக் கொட்டை. எல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவர் பிடித்த முயலுக்கு மட்டும் கால் மூனு என்பார். மற்றவர்களும் நான் மூனு கால் முயல் பிடித்தேன் என்றால் இவர் நான் பிடித்த முயலுக்குக் கால் ரெண்டு என்பார். இன்னும் கொஞ்சம் போனால் முயலுக்கு காலே இல்லை என்று அடம் பிடிக்கும் ஆசாமி. பிறர் சொல்வதை எற்றுக் கொள்ளவே மாட்டார். நான் எவ்வளவோ கண் ஜாடை காட்டியும் புரிந்து கொள்ளாமல் பாக்கெட்டிலிருந்து ரூ 10/- எடுத்து ஓலைப்பெட்டி உண்டியலில் போட்டு விட்டார்.

அடுத்து லபை என்னைப் பார்த்து, 

“உங்கள் காணிக்கையையும் பெட்டியில் போடுங்களேன்” என்றார்.

“நீங்கள் அவர் பெயருக்கு மவுலுது ஓதுங்கள்” என்றேன். 10 நிமிஷத்தில் மவுலுது முடிந்தது. சின்ன மவுலுதுக்கு சின்ன மினிட்ஸ்தானே!. ரெண்டு மணி நேரமா ஓடும்? மவுலுது முடிந்து நண்பர் பேரால் துஆ கேட்டு சக்கரை சுருளை எடுத்து எங்களுக்குக் கொஞ்சம் தந்து,

"நல்லா நேர்ந்துக்கிட்டு வாயில் போடுங்கள்” என்றார்.

“அடுத்த தடவை வந்து அல்லாஹ்வும் அவுலியாக்களும் உங்களுக்கு நிறைந்த பரக்கத் தருவார்கள்” என்று நன்றாக கனியக் கனிய வாழ்த்தினார். சர்க்கரை சுருளில் பாக்கியை அவர் கையில் கொடுத்து,

“மவுலுது காசு கொடுங்கள்!” என்று நிதானமாகவும் மென்மையாகவும் கேட்டார். நான் நினைத்தது நடந்தே விட்டது! என்று எண்ணினேன். என் நண்பர் பதறி, 

“அதைத்தான் பெட்டியில் போட்டு விட்டேனே?” என்றார்.

“நீங்கள் பெட்டியில் போட்டது காணிக்கை. அது மவுலுது காசு அல்ல” என்று லபை வாதிட்டார்.

“நான் போட்டது மவுலுது காசுதான்” என்று நண்பரும் வாதிட்டார்.

“நான் யார் தெரியுமா? என் பேரும் இங்கு அடங்கப்பட்டிருக்கும் அவுலியாவும் ஷாகுல் ஹமீது ஆண்டவர்கள் பேர்தான்” என்று வாதம் ஒரு பத்து நிமிஷம் ஓடியது. லபையை வெல்ல முடியவில்லை. பிரச்னையைத் தீர்க்க என் நண்பர் கையில் காசு இல்லை. நண்பர் என்னைப் பார்த்தார். விட்டோ பவர் என் கையில் இருந்தது. நன்றாகப் பாடம் படிக்க வேண்டுமென்று விட்டுப் பிடித்தேன். கடைசியாக என்னுடைய ரூ 10/- லபை கையில்,

“இந்தாருங்கள், இது நீங்கள் அவருக்காக மவுலுது ஓதிய காசு” என்று கொடுத்தேன். லபை வாங்கிக்கொண்டார்.

“உங்கள் பெயரில் மவுலுது ஓதவா? உங்கள் பெயர் என்ன்?” என்று கேட்டார். 

“எனக்கு மவுலுது ஓத வேண்டாம்” என்று சொன்னேன். 

“ஏன்? மவுலுது ஓத வேண்டுமென்று சொன்னீர்களே?” என்றார்.

“ஆமாம், இப்போ நீங்கள் ஓதிய மவுலூதில் நான் பாதியை அவரிடமிருந்து வாங்கிக்கொள்கிறேன். காசு இல்லை. மவுலுது ஓதினால் ஊர் போய்ச் சேர கையில் காசு இருக்காது. கையில் பாக்கி இருப்பது ரூ 100/-தான். இருவருக்கும் சாப்பாடு, ரயில் டிக்கெட்டுக்கு காசு போதாது. ஊருக்கு கால் நடையாக போகவேண்டி வரும். நாங்கள் எல்லாம் வாணியம்பாடி, ஈரோடில் இருந்து வரும் தோல் வியாபாரிகள் அல்ல. ஆயிரம் இரண்டாயிரம் என்று அவர்கள் அள்ளிக் கொடுப்பார்கள். நாங்கள் நாகூர் ஏழை லபையை விட ஏழைகள்” என்று குத்தலாகச் சொல்லிவிட்டு எழுந்து வந்தோம். என் தோழரின் மூஞ்சி விடியலே. செருப்புக் காவலாளிக்கு காசு கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.

“அட பாவிகளா, நீங்க நல்லா இருப்பியலா? இந்த அவுலியாக்கள் தளத்தில் இப்படி அநியாயம் செய்யிறியலே! இந்த சாமியும் அந்த சாமியும் கேக்காதா? நீங்க நாசமாப் போக” என்று ஒரு இந்துக் கிழவி சர்க்கரை சுருளை பிரித்து வைத்துக்கொண்டு ஒரு கடையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. என் கூட வந்த என் நண்பர் முந்திரிக்கொட்டை. வேகமாக அந்தக் கிழவி நோக்கிப் போனார். யாராவது சண்டை சச்சரவு செய்து கொண்டிருந்தால் பஞ்சாயத்துப் பண்ண முந்திக் கொண்டு அந்த வம்பை இவர் தூக்கிச் சுமப்பார். இங்கேயும் பஞ்சாயத்துச் செய்யப்போய் ‘ நாகூரான் கையில் அடிவாங்க’ எனக்கு சக்தி இல்லை. நான் போட்டிருந்த சட்டையும் புதுச் சட்டை. சட்டையும் கிழிந்து கன்னமும் வீங்கி ஊர்போய்ச்சேர விருப்பமில்லை. 

என் முந்திரிக்கொட்டை நண்பர் பாய்ந்துகொண்டு முந்திப் போனதும் கையை பிடித்து நிறுத்தி “இதில் போய் மாட்டாதீர்கள்” என்று சொல்லி நாலாம் பேரோடு அஞ்சாம் பேராக வேடிக்கை பார்த்தோம்.

“இந்த பயலுவோட அட்டகாசத்துக்கு கேட்க, அள்ளித்தூத்த மண்ணுகூட இங்கே இல்லையே” என்று அந்தக் கிழவி அங்கலாய்த்தவள் எங்களைப் பார்த்த்தும் அருகில் வந்து, 

“இத பாருங்கையா,முப்பது ரூபாய் சர்க்கரை சுருளை இந்தே நீட்டம் நீட்டி சுருட்டி மூனு ரூபா கூட பொறாத சக்கரையை உள்ளே திணிச்சிருக்கான். எஞ்சாமியை கும்புடாமே ஒஞ்சாமியை கும்புட வந்தேன். சாமிக்கு அஞ்சாமே சக்கரை சுருளை இப்படி செஞ்சிருக்கானே, உங்க அல்லாஹ் அவனை கேக்க மாட்டாரா. ஒங்க அல்லாக்கு பயந்து சொல்லுங்கய்யா” என்று அந்தக் கிழவி எங்களிடம் வந்தாள். முந்திரிக்கொட்டை,

“ சக்கரை எங்கே வாங்குனா?” என்று அவர் பஞ்சாயத்தை ஓப்பன் செய்தார்.

“நீங்கள் சும்மா இருங்கள். நான் சொல்கிறேன் “ என்று சொல்லி சக்கரை சுருளை கையில் வாங்கிப் பார்த்தேன். ‘சக்கரை மதிப்பு ரூ 5க்கும் மேல் போகாது. கிழவியிடம் சொன்னேன், 

“ கிழவி தப்பு உன்னுடைய்து” என்றேன். 

“என்ன சாமி நீ இப்படி சொல்றே? “ என்றாள்.

“சொல்றதை கேளு. நீ செஞ்ச முதல் தப்பு ஒஞ்சாமியை உட்டுட்டு எஞ்சாமியைக் கும்புட வந்தது ஒன் முதல் தப்பு. என்றேன். 

“அப்புடி சொல்லு சாமி. எம் புத்திக்கி என்னை காலுல கிடக்கிற செருப்பை கெளட்டி எங்கன்னத்துல நாலு அடி போடு” என்றாள்.

“ரெண்டாவது சக்கரை. முப்பது ரூபாய் சக்கரை சுருளில் 5 ரூபாய் சக்கரைதான் இருக்குது என்று சொன்னியா” என்றேன். 

“ஆமாஞ்சாமி” என்று ஒத்துக் கொண்டாள் 

“நானும் ஒத்துக்கிறேன். அஞ்சு ரூபாய் சக்கரைதான் இருக்கு. பாக்கி 25 எதுக்கு தெரியுமா?” என்றேன். என்னையே பார்த்தாள். பார்வையில்கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் நின்று விளையாடியது.

“அஞ்சு ரூபாய் சக்கரையை உள்ளே வச்சு பாக்குறவங்களுக்கு முப்பது ரூபாய் சக்கரையா தெரியும்படி சுருள் மடிச்சான் பாத்தியா, அந்த திறமைக்குக் கூலிதான் நீ கொடுத்த பாக்கி ரூஉ25/- “ என்றேன். அதோடு, 

“நல்லபடியா ஊர் போய் சேர்ந்து உஞ்சாமியை கும்பிடு போ” என்றேன். 

“எம்புத்தியை செருப்பாலே அடிக்கனும்” என்று சொல்லி கிழவி சக்கரை சுருளோடு நாகூரை விட்டு நகர்ந்தாள். அவள் ஃபாத்தியா ஓத போக வில்லை. நாங்களும் நகர்ந்தோம். அத்தோடு நாகூர் ஸ்டாப்பில் எங்கள் பஸ் நிற்கவில்லை. 

விஞ்ஞான ரீதியிலான செய்தி பரிமாற்ற வளர்ச்சியைப் பயன்படுத்தும் நாகூர் தந்திரம் பற்றி ஆகக் கடைசியாக ஒரு தகவல் கிடைத்தது. நாகப்பட்டிணம் ரயில்வே ஸ்டேஷனில் நாகூர் லபைகள் தங்கள் தங்கள் பிரதிநிதி ஒருவரை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். மலையாளம், சேலம், ஈரோடு, ஆந்திரா, கர்நாடகா பகுதியிலிருந்து வரும் ரிஸர்வ்ட் வண்டியில் நாகூர் போறவர்களின் பெயர் பட்டியல் ஒட்டபட்டிருக்கும். அதில் உள்ள பெயர்களையும் கோச் நம்பரையும் தனக்கு வேண்டிய லபைமார்களுக்கு தகவல் சொல்ல வேண்டியது. அந்த ரயில் நாகூர் சென்றதும் அந்தலபை அவரிடம்,

”அஸ்ஸலாமு அலைக்கும் குத்தூஸ் பாய். வாங்கோ வாங்கோ” என்று அவருக்கு சலாம் சொல்லி குத்தூஸ் பாயை ரயில்வேஸ்டேஷனுக்குப் போய் அழைப்பாராம். 

“வ அலைக்குமுஸ்ஸலாம்” சொன்ன குத்தூஸ் பாய் ஆச்சர்யப்பட்டு 

“ என்ன பாய் என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் இங்கே வருவதை உங்களுக்கு யார் சொன்னது? “ என்று ஆச்சரியத்துடன் கேட்பாராம்.

“என்ன பாய் இப்படி கேட்டு விட்டீர்கள்? ராத்திரி என் கனவில் நாதாக்கள் வந்து என்னுடைய் அடியான் குத்தூஸ் பாய் நாளை காலை வண்டியில் என்னை நாடி வருகிறான். அவனை நீ போய் அழைத்து வந்து என் தளத்திற்கு கூட்டி வா. அவனை நன்றாக கவனித்து அனுப்பு” என்றும்

“நாதாக்கள் ராத்திர் கனவில் வந்து எனக்கு உத்தரவு போட்டார்கள். அதான், சுபுஹு தொழுகையை முடித்ததும் ஓட்டமும் நடையுமாக ஸ்டேஷனுக்கு வந்தேன்” என்பாராம்.

“ஆமாம் உங்கள் மரியம் பீவியும் பாத்திமா பீவியும் எங்கே என்பாராம். ( மரியம் பீவி குத்தூஸ் பாய் மனைவி, பாத்திமா பீவி குத்துஸ் பாய் மகள் என்பதை நாம் நமது யூகத்தில் அறிந்து கொள்ள வேண்டும்)

அதைக் கேட்ட குத்தூஸ் பாய்க்கு உச்சி மூதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து போய்விடும். லபைக்கு அன்று நரி முகத்தில் முழித்த மாதிரி அதிர்ஷ்டம் அடிக்கும். ஈரோட்டு தோல் வியாபாரியின் எலும்புகூட குளிர்ந்துபோய் புறப்படும்போது லபைக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பர். பெரிய லபையின் குடும்பத்தார் பேரன் முதல் பெரியம்மா வரை முன்னே வந்து தலை காட்டும். பின்பு? பின்பு என்ன, குத்தூஸ் பாய் அட்ரஸ், தொழில், டெலிபோன் நம்பர் கைமாறும். அடிக்கடி கடிதத்தில் சந்தனம் வரும் 

“நாதாக்கள் என் கனவில் வந்து என் நார்சாவை குத்தூஸ் பாய்க்கு அனுப்பி என்னை அவனுக்கு நினைவு படுத்து என்று சொன்னார்கள். இத்துடன் நார்சா வருகிறது பெற்றுக் கொள்ளவும். அடுத்த கிழமைக்கு வந்து ஒரு ராத்திரி தலையைப் போடச் சொல்லு. அவன் முஸிபத் எல்லாம் பறந்து போய் விடும் என்றார்கள்” என்று கடிதம் வரும்.. ஒரு மாசத்திற்குள் குத்தூஸ் பாய் வருவார். அல்லது அவர் மகன் வருவார். குத்தூஸ் பாய் எங்கே என்று கேட்டால் பாபா மவுத்தா போய் மூனு மாசமாச்சே என்று மகன் சொல்வான். 

“நான் நெனச்சது சரிதான். நான் தான் தப்புப் பண்ணிட்டேன். நான் நாலு மாதத்துக்கு முன்னேதான் அந்த மினாவ் கண்டேன். கடிதம் போட மறந்து விட்டேன். அப்பவே கடிதம் போட்டிருக்கனும் மறந்து விட்டேன். மவுத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்”. என்பார். ( எப்படி இருக்கு பல்ட்டி?)

இந்த மாதரி டெக்னிக்கெல்லாம் அதிராம்பட்டினம் கடல்கரைத்தெரு லபைமார்களுக்குத் தெரியவில்லை. தர்ஹாவை யே நம்பி நம்பி தர்ஹா சொத்தையெல்லாம் புத்திசாலிகளிடம் பரிகொடுத்துவிட்டு கடைசியாக எல்லாம் போன பின் தூங்கி எழுந்து தெம்மா கெம்மா என்று விழிக்கிறார்கள். எங்கள் உரிமை எங்கள் சொத்து என்கிறார்கள். உரிமை இருக்கிறது. எங்கே இருக்கிறது சொத்து? நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தார்கள்; விழித்தவன் பறித்துக்கொண்டான். கொடுத்தவன் தெருவில் நின்றான். 

இப்பொழுது புதிய கபுர்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். பச்சை போர்வை போர்த்திய புதிய கபுரில் எண்ணெய் போட்டு குத்து விளக்கு கொழுந்து விட்டு எரிகிறது.

அடுத்து என் நேர்த்திக்கடன் பயணம் மேற்கு நோக்கி....
தொடரும்...
S.முஹம்மது ஃபாருக்

22 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

உண்மைதான்.

நான் சிறுவனாக இருக்கும்போது அல்லாஹ் சுப்ஹானஹுத் ஆலா, நபி முஹம்மத் ஸ்ல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் என்ற வரிசையில் ஒலி ஹாஜா ஒலியுல்லா என்றும் சொல்லித்தரப் பட்டேன்.

தர்ஹாக்களுக்குச் சென்று உண்டியலில் காசு போட்டு நார்சா (ப்ரசாதம்) வாங்கி வந்தேன். ஆரியாமலேயே ஷிர்க்கில் மூழ்கிக் கிடந்தோரில் ஒன்றி இருந்தேன். ஜாகிருடன் முத்துப்பேட்டை ஹந்தூரிக்குப் போனபோது அந்த ஊர் தியேட்டரில் ஹிந்திப்படம் ஸ்பெஷல் ஷோ பார்த்தேன்.

சைக்கிள்களில் குரூப்பாகக் கிளம்பி முக்குடிச்சாலையில் முதல் ஷோவும் பட்டுக்கோட்டையில் செகெண்ட் ஷோவும் பள்ளத்தூரில் ஹந்தூரியை முன்னிட்ட ஸ்பெஷல் ஷொவும் மல்லிப்பட்டினம் ஹந்தூரி திடலில் வள்ளித்திருமணம் நாடகமும் தொடர்ந்து சந்தனக்கூடும் வாண வேடிக்கையும் பார்த்துவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டு வூடு வந்து அசதியில் மையத்து மாதிரி தூங்கிய காலம் அது.

ஷிர்க்கை உணர்ந்து வெளியான பின்பு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு தவ்ஹீது சிந்தனையில் வாழும் அநேகம்பேருக்கு இந்தக் கட்டுரையில் நிகழ்ந்தது நடந்திருக்கும்.

பிரமாதமாக, சுவாரஸ்யமாகச் செல்கிறது நேர்த்திகடப் பயணம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஃபாருக் மாமா.

Ebrahim Ansari சொன்னது…

அருமையாகப் போகிறது இந்தத் தொடர்.

நான் என்னுடைய ஐந்து வயதில் நாகூருக்கு முடி இறக்கக் கொண்டு போகப் பட்டது இன்னும் நினைவு இருக்கிறது. என்னை கொண்டு போனவர் யார் தெரியுமா? இந்தப் பதிவின் ஆசிரியர் அவர்களுடைய உம்மா எனது மாமி அவர்கள்தான்.

நாகூரில் முடி இறக்கியதும் பிள்ளைக்குத் தலையில் வைத்து ஒரு புறாவைப் பறக்கவிட்டால் பிள்ளை நன்றாக ஆரோக்கியமாக வருவான் என்று சொன்னார்களாம். அதற்காக ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு புறாவை எனது மொட்டைத் தலையில் வைத்துப் பறக்க விடுவது போல் விட்டு அதை படக் என்று பிடித்து மீண்டும் கூட்டுக்குள் போட்டுக் கொண்டார் கொண்டார் லெபை . இந்தக் காட்சி அன்றே எனது மனதில் சலனத்தை ஏற்படுத்தியது. இந்த ஆள் ஒரு பிராடு என்று நினைக்கும் விதை அன்றே ஒரு ஓரத்தில் ஊன்றபப்ட்டது.

கொஞ்சம் வளர்ந்ததும் , முத்துப் பேட்டை , நாகூர் கந்தூரிக்குப் போவதற்காக காசு சேர்த்து வைத்து ஜாலியாக ரயிலில் போவோம். நாகூர் போகிற வழியில் இருக்கும் எல்லா ரயில்வே ஸ்டேஷன்களின் பெயரும் அன்று எனக்கு மனப்பாடம்.

கோட்டைபட்டினம் ராவுத்தர் அப்பா குதிரையில் வருவார் என்றெல்லாம் கதை சொல்லி கேட்டு இருக்கிறேன்.

அதே போல் பேராவூரணிக்குப் பக்கத்தில் மரியம் பீவி அம்மாள் என்று ஒரு தர்கா இருக்கிறது. அங்கும் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு போய் சாப்பிட்ட நினைவுகள் இருக்கின்றன.

அன்றைக்கு பெரிய அற்புதங்கள் என்று நம்பி நினைத்தவை எல்லாம் இன்று வெறும் செல்லாக்காசுகள் என்கிற அளவுக்கு நமது அறிவிலும் இன்றைய சமுதாய இளைஞர்களின் அறிவிலும் ஏற்பட்டுள்ள புரட்சிகர மாற்றங்கள் மலைக்கத் தக்கவை.

அதற்காக பணியாற்றிய பணியாற்றுகின்ற அனைத்து தவ்ஹீத் சகோதரர்களுக்கும் அல்லாஹ் நற்கருணை செய்வானாக!

sheikdawood mohamedfarook சொன்னது…

./ஒருபுறாவைஎன்மொட்டைதலையில்வைத்துபறக்கவிடுவதுபோல்பறக்கவிட்டு/..மைத்துனர்இனா.ஆனா.சொன்னது .A Bird in theகை is better than ten in the sky.
என்ற இங்லீஷ்பழமொழி நாகூர் நானாவுக்கு அப்பவே மனப்பாடமா தெரிஞ்சு இருக்குன்னாபாத்துக்கிடுங்களேன்.பொழைக்கதெரிஞ்சஆசாமிங்க!

Aboobakkar, Can. சொன்னது…

பதிவில் பாருக் காக்கா அவர்களின் கடல்கரை தெரு குசும்பு அப்படியே தெரிகிறது .....அதற்கு மெருகூடுட்டும் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களின் கருத்து என்னை 1970 களில் கொஞ்சம் முத்துபேட்டை ,நாகூர் பக்கம் இழுத்து சென்றுவிட்டன ......

எங்க மாமார்கள் அல்வாகார வீட்டு நூவண்ண ,சாவான்னா ஆகியோர்கள் கொழும்பில் இருந்து வந்த சமயம் திருவாரூரில் இறங்கி நாகூர் போனோம் (அப்போது தில்லானா மோகனாம்பாள் நலதானா என்ற பாட்டு ரயில் பயணியின் அப்போதைய ரேடியோவில் பாடிய ஞாபகம் )

அப்ப நாகூரில் தலைமாட்டு தெரு லெப்பை வீட்டில்தான் தங்குவோம் ........தர்காவில் எண்ணையில் விளக்குகள் எறியும் அதிலே தண்ணீரை ஊற்றி
'தண்ணியிலே விளக்கெரியும் தர்மதுரை '
என்பார்கள் .எண்ணையில் தண்ணியை ஊற்றினால் அந்த எண்ணெய் மேலேதானே வரும் .........

அல்லாஹ் நம்மவர்களின் அறியாமையில் செய்த பிழைகளை பண்ணிபானாகவும் ..ஆமீன் ...

sabeer.abushahruk சொன்னது…

//தர்காவில் எண்ணையில் விளக்குகள் எறியும் அதிலே தண்ணீரை ஊற்றி
'தண்ணியிலே விளக்கெரியும் தர்மதுரை '
என்பார்கள் .எண்ணையில் தண்ணியை ஊற்றினால் அந்த எண்ணெய் மேலேதானே வரும் //

ஹாஹ்ஹ்ஹா ஹா

என்னா டெக்னிக்கு!!!!

Aboobakkar, Can. சொன்னது…

//தர்ஹாக்களுக்குச் சென்று உண்டியலில் காசு போட்டு நார்சா (ப்ரசாதம்) வாங்கி வந்தேன். ஆரியாமலேயே ஷிர்க்கில் மூழ்கிக் கிடந்தோரில் ஒன்றி இருந்தேன். ஜாகிருடன் முத்துப்பேட்டை ஹந்தூரிக்குப் போனபோது அந்த ஊர் தியேட்டரில் ஹிந்திப்படம் ஸ்பெஷல் ஷோ பார்த்தேன்.//

சபீரு.............பழசுகளை ரொம்ப கிளருகிறமாதிரி தெரியுது .......வைட் ஹவுஸ் கேப்டன் ஜாகிர் அப்போது மேல்வரிசை பல்லில் கம்பி போட்டு இருந்தார் ....முத்துபேட்டை வேதனாயகியில் என் காக்கா அல்வாகட்டி செய்து கூட நாம் இரண்டாவது ஷோ பார்த்த படம் 'ஷோலே ' டிக்கெட் எடுக்கும்போது காலாகா தாஜுதீன் சட்டையை கழட்டிவிட்டு சண்டை போட்டது ..... ஹ ஹ ஹா ......

sabeer.abushahruk சொன்னது…

அபூ,

அந்த மேல் வரிசைப் பற்கள், அடிமைப்பெண் எம் ஜி ஆர் அளவுக்கு வலிமையானவை. அந்தக் கட்டுக்கம்பியையெல்லாம் வளைத்து விட்டு வெளி வந்த செய்தி உங்களை வந்தடைந்ததா?

அல்வாகட்டி தம்பியா நீங்கள்? அட, உங்கள் அண்ணன் என் வகுப்புத்தோழனாச்சே!!!!

small world!

ZAKIR HUSSAIN சொன்னது…

//சபீரு.............பழசுகளை ரொம்ப கிளருகிறமாதிரி தெரியுது .......வைட் ஹவுஸ் கேப்டன் ஜாகிர் அப்போது மேல்வரிசை பல்லில் கம்பி போட்டு இருந்தார் ....முத்துபேட்டை வேதனாயகியில் என் காக்கா அல்வாகட்டி செய்து கூட நாம் இரண்டாவது ஷோ பார்த்த படம் 'ஷோலே ' டிக்கெட் எடுக்கும்போது காலாகா தாஜுதீன் சட்டையை கழட்டிவிட்டு சண்டை போட்டது ..... ஹ ஹ ஹா ...... //

To Brother Abubakkar.Can


கொஞ்ச நேரம் படித்ததில் அப்படியே மழைமழையா கோடு விழுந்த பிளாக் & ஒயிட் அல்லது கேவாகலர் படத்தில் அத்தனை விசயத்தையும் ஓட வைத்து விட்டீர்கள். இவ்வளவு பெரிய ஞாபக சக்தி உள்ளவங்க ரொம்ப குறைவு.
sheikdawood mohamedfarook சொன்னது…

தம்பி!அபூபக்கர்!அஸ்ஸலாமுஅலைக்கும்[வராஹ்]கடல்கரைதெருவில் உங்கள்வீடுஎந்தஇடத்திலஇருந்தது?உங்கள்வீட்டுபட்டப்பெயர்என்ன? சுடுதண்ணிமரைக்கார்வீட்டுக்குஎதிரே அறுவாட்டிவீடுஎன்றுஒன்றுஇருந்தது.

ZAKIR HUSSAIN சொன்னது…

//சபீரு.............பழசுகளை ரொம்ப கிளருகிறமாதிரி தெரியுது .......வைட் ஹவுஸ் கேப்டன் ஜாகிர் அப்போது மேல்வரிசை பல்லில் கம்பி போட்டு இருந்தார் ....முத்துபேட்டை வேதனாயகியில் என் காக்கா அல்வாகட்டி செய்து கூட நாம் இரண்டாவது ஷோ பார்த்த படம் 'ஷோலே ' டிக்கெட் எடுக்கும்போது காலாகா தாஜுதீன் சட்டையை கழட்டிவிட்டு சண்டை போட்டது ..... ஹ ஹ ஹா ...... //

To Brother Abubakkar.Can


கொஞ்ச நேரம் படித்ததில் அப்படியே மழைமழையா கோடு விழுந்த பிளாக் & ஒயிட் அல்லது கேவாகலர் படத்தில் அத்தனை விசயத்தையும் ஓட வைத்து விட்டீர்கள். இவ்வளவு பெரிய ஞாபக சக்தி உள்ளவங்க ரொம்ப குறைவு.
ZAKIR HUSSAIN சொன்னது…

//பின்பு என்ன, குத்தூஸ் பாய் அட்ரஸ், தொழில், டெலிபோன் நம்பர் கைமாறும். அடிக்கடி கடிதத்தில் சந்தனம் வரும் //

டைரக்ட் மெயில் மார்க்கெட்டிங்கை கண்டு பிடித்தவர்கள்.....லெபைமார்கள்.

Aboobakkar, Can. சொன்னது…

sheikdawood mohamedfarook சொன்னது..
//தம்பி!அபூபக்கர்!
அஸ்ஸலாமுஅலைக்கும்[வராஹ்]கடல்கரைதெருவில் உங்கள்வீடுஎந்தஇடத்திலஇருந்தது?உங்கள்வீட்டுபட்டப்பெயர்என்ன? சுடுதண்ணிமரைக்கார்வீட்டுக்குஎதிரே அறுவாட்டிவீடுஎன்றுஒன்றுஇருந்தது.//

பாரூக் காக்கா அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கவும் ...எனது தகப்பனார் மர்கூம் ஹாபிஸ் முகமது அப்துல் காதற் அவர்கள் 1912 ல் கடல்கரை தெருவில் பிறந்தவர்கள் மலேசியா வில் ஜாலன் மஸ்ஜித் இந்தியாவில் தொழ வைத்தவர்கள் .பிறகு ஆலடி தெருவில் அப்போதே குடிபெயர்ந்தோம் .
...நான் பிறந்தது வாய்கால் தெரு .ஹல்வாகாரவீடு என்பார்கள் கொழும்பில் இருந்த சாவன்னா ,நூவன்னா எனது தாய் மாமன்கள் ...கடல்கரை தெரு வெள்ளைகுட்டிவீடு கருக்குமட்டை அப்துர்ரஹ்மான் அப்பா வீட்டின் மருமகன் .நான் ..சுடுதண்ணீர் மறைக்கா OKM ,மெய்வாப்பு வீடுகளும் எங்களின் சொந்தகளே ..

sheikdawood mohamedfarook சொன்னது…

கடல்கரைதெருவெள்ளைகுட்டிவீடமெய்வாப்புokmகறுக்குமட்டை சம்சுதீன்[கோல்கீப்பர்]பெரியதங்கச்சி[பெரியிங்கச்சிவீடு/ரெட்டபிள்ளை சுளுக்குவலித்துவிடுவார்கள்] வீட்டில்கல்யாணம்முடித்தவர். உங்கள்வீடு
மஜ்பாகபூர்காக்காகடல்கரைதெரு]வீட்டுக்குபக்கம்இருந்த ஒட்டாவீடுதானே?உங்கள்தாயார் பெயர் மரியங்கனிதானே?சரியானால்அவர்களுக்குஎன்ஸலாம்சொல்லவும். நானும்அவாகளுக்கு ஒருபிள்ளைபோல!சரியானால்மரியம்பு மகன்பாரூக்யென்றுசொல்லுங்கள்.

sheikdawood mohamedfarook சொன்னது…

இந்தபதிவுக்குகருத்திட்டஎல்லோருக்கும்நன்றியும்சலாமும்கூறிக்கொள்கிறேன்அஸ்ஸலாமுஅலைக்கும்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

நாம் பிறந்தது முதல் மரணிக்கும் வரை ஷிர்கிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்

adiraimansoor சொன்னது…

பாரூக் காக்கா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்லதொரு விழிப்புணர்வு தொடர். இந்த தொடரில்
பெரிய லெப்பை தர்பாரே நடத்திவிட்டீர்களே
இதெல்லாம்

கிபிமு என்று சொவது போன்று அந்த சம்பவங்கள் நடந்தது எல்லாம் தபிமுவில் (தவ்ஹீது பிறப்பதற்கு முன்)

அந்த தபிமுவுல
நீன்க எழுதிய சம்பவம்
///என்ன பாய் இப்படி கேட்டு விட்டீர்கள்? ராத்திரி என் கனவில் நாதாக்கள் வந்து என்னுடைய் அடியான் குத்தூஸ் பாய் நாளை காலை வண்டியில் என்னை நாடி வருகிறான். அவனை நீ போய் அழைத்து வந்து என் தளத்திற்கு கூட்டி வா. அவனை நன்றாக கவனித்து அனுப்பு” என்றும்

“நாதாக்கள் ராத்திர் கனவில் வந்து எனக்கு உத்தரவு போட்டார்கள். அதான், சுபுஹு தொழுகையை முடித்ததும் ஓட்டமும் நடையுமாக ஸ்டேஷனுக்கு வந்தேன்” என்பாராம்.///
இப்படிபாட்ட சம்பவம் எனக்கும் நடந்தது
இப்பொழுது நடப்பது தபிபி
இப்பொழுது அதுமாதிரி யாரையும் ஏமாற்ற முடியாது. இந்த தபிபியில் ஏமாற்றப்படுபவர்கள் அடி முட்டாளாகத்தான் இருக்க முடியும்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

நாம் பிறந்தது முதல் மரணிக்கும் வரை ஷிர்கிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்

Aboobakkar, Can. சொன்னது…

sheikdawood mohamedfarook சொன்னது…

/கடல்கரைதெருவெள்ளைகுட்டிவீடமெய்வாப்புokm கறுக்குமட்டை சம்சுதீன்[கோல்கீப்பர்]பெரியதங்கச்சி[பெரியிங்கச்சிவீடு/ரெட்டபிள்ளை சுளுக்குவலித்துவிடுவார்கள்] வீட்டில்கல்யாணம்முடித்தவர்//
பாரூக் காக்கா அவர்களுக்கு ...

கறுக்குமட்டை சம்சுதீன்[கோல்கீப்பர்]
இவர்கள் எனது மனைவியின் தாய் மாமன் .'

அதிரையில் பாரம்பரிய குடுபங்களின் பிறந்தோர் அனைவரும் சொந்தங்களே ...இவர்கள் தற்போது உறவுமுறைகளில் தூரத்தில் இருந்தாலும் ஆதி சொந்தங்களே.

ஒரு முஸ்லிம் மூன்று தலைமுறைகளை தெரிந்திருப்பது நலம் இதைக்கொண்டு நாம் அவர்களுக்கு கடையாக்கபட்ட உதவிகளை செய்து கொள்ள முடியும் .
தற்பொழுது நமது மக்களில் உதவிக்கும் கடமைக்கும் வித்தியாசம் தெரியாமல் அக்கா ,தங்கை ,அண்ணன் ,தம்பிகளுக்கு செய்வதைக்கூட சிலர் உதவி என்றே கூறுகின்றனர்.காரணம் அது கடமை என்பது அவர்களுக்கு தெரியாது .

எகிப்தின் ஒருபகுதியாக முன்பு திகழ்ந்த இன்றைய மேறோக்கர்கள் அப்போது வணிகம் செய்ய மூன்று கப்பல்களில் வந்ததாகவும் பின் இந்தியாவில் தங்கி விட்டதாகவும் ஆண்கள் வணிகம் செய்ய கடல் பயனம் செல்வதால் மனைவியின் முறையான பாது காப்புவேண்டி மனைவியை அவள் தாய் வீட்டில் விட்டு செல்லும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அது முறையே அதிராம்பட்டினம் ,காயல்பட்டினம் மற்றும் கர்நாடகாவில் உள்ள பத்கல் எனவும் இந்த மூன்று ஊரை சார்ந்தவர்கள் பழக்க வழக்கங்கள் ஒரே மாதிரியானது இஸ்லாத்தின் பால் அதிக பற்றும் தர்ம சிந்தனையும் உடையவர்கள் என்பதும் முந்தய வரலாறு என தெரியவருகின்றது.
தாங்கள் என்னைவிட மூத்தவர்கள் மேலும் விளக்கம் தரலாம் . .

மற்றபடி கீழ்க்கண்ட இவைகள் தவறு ....

//உங்கள்தாயார் பெயர் மரியங்கனிதானே?சரியானால்அவர்களுக்குஎன்ஸலாம்சொல்லவும். நானும்அவாகளுக்கு ஒருபிள்ளைபோல!சரியானால்மரியம்பு மகன்பாரூக்யென்றுசொல்லுங்கள்//.

Aboobakkar, Can. சொன்னது…

ZAKIR HUSSAIN சொன்னது…
//கொஞ்ச நேரம் படித்ததில் அப்படியே மழைமழையா கோடு விழுந்த பிளாக் & ஒயிட் அல்லது கேவாகலர் படத்தில் அத்தனை விசயத்தையும் ஓட வைத்து விட்டீர்கள். இவ்வளவு பெரிய ஞாபக சக்தி உள்ளவங்க ரொம்ப குறைவு. //

கடல்கரை பள்ளி கொடிமரம் ஏறும் போது அந்த புளியமரம் இலைகள் இனிக்கும் என்று கதைகட்ட அந்த மரத்தில் ஏறி அவற்றையும் பறித்து தின்ற ஞாபகம் .....

கந்தூரியில் பம்பாசாவின் கச்சேரி ............

வெட்டையில் 7 நாள் தொடர் சைக்கிள் ஓட்டம்
அந்த 'கேட்டுகோடி உருமிமேளம்'
ரெக்கார்ட் டான்ஸ் .....

பள்ளி படிப்பு முடிந்த பார்ட்டியில் பந்தா இக்பால் அவர்களின் அந்த ஒரு தலை ராகம் ரோஜாப்பு சிட்டுகுருவி கதை ...........

வெட்டை கருவமரத்தில் ஓனான் முதல் பச்சை பாம்புவரை கொன்று குவிப்பது .

இப்படி ஏராளம் .......

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அற்றைப் பொழுதுகளில்...! அறியாப் பருவத்தில் யாருக்குத்தான் இந்த அனுபவம் இல்லை, பெரும்பாலோருக்கு இருந்திருக்கிறது...

நான் மட்டும் இல்லையென்று சொல்லிவிட்டால் என்னோட வாப்பிச்சா (அல்லாஹ் ரஹ்மகும்) ஃபிரண்ட்ஸ் கோவிச்சுக்குவாங்க ! :)

ZAKIR HUSSAIN சொன்னது…

//பள்ளி படிப்பு முடிந்த பார்ட்டியில் பந்தா இக்பால் அவர்களின் அந்த ஒரு தலை ராகம் ரோஜாப்பு சிட்டுகுருவி கதை ...........//

1980 ல் நடந்த சோசியல் ப்ரேக் அப் நிகழ்ச்சியை நான் அப்போதே கேசட்டில் ரெக்கார்டிங் செய்து வைத்திருந்தேன். அதில் இக்பால் செய்த மிமிக்ரி / சிட்டுக்குருவி கதை எல்லாம் அவன் இங்கு மலேசியா வந்த போது [ 2013 ] ல் போட்டுக்காண்பித்தேன். 33 வருடமும் பாதுகாத்து வைத்த நினைவுகளை புதுப்பித்ததற்காக ஆச்சரியமடைந்தான்.


சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கிறது.

sheikdawood mohamedfarook சொன்னது…

அன்புள்ளதம்பிஅபூபக்கருக்கு/முஸ்லிமாகிய நாம்மூன்றுதலைமுறைகளைதெரிந்துவைத்திருக்கவேண்டும்/அவசரமும் பொருள்தேடும்அவசியமும் மனிதனை மனிதத்திலிருந்துவேறு திசைகளை நோக்கி மாற்றிவிடுவதால் தலைமுறைகளின்வரலாற்றைதொகுக்க’’ I’m sorry! I have no time to do that Donkey work’’
என்றுசாதாரணமாகசொல்லிவிட்டுபோவார்கள்.வெளிநாடுகளுக்கு போகபாஸ்போர்ட்எடுக்கமட்டுமே வாப்பாஅல்லது அத்தாபேருதெரிஞ்ச பிள்ளைகள் இனிமேல் பிறப்பார்கள்.சிலவெள்ளைகாரர்கள்Family-treeஎன்னும்பெயரில்தங்கள்குடும்பவரலாற்றைவழிவழியாகதொடர்ந்துகொண்டுவருகிறார்கள்.அதில்அவர்களுக்கு ஒருஆத்மசந்தோஷம்.ஆத்மதிருப்பதி. இதுஒருரசனையும்கூட .நாமோ ரசனையைதேடுவதெல்லாம்’’சுட்டகோலிவேணுமா?பொரிச்சகோலிவேணுமா?’’என்பதே!தென்ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களை
பிடித்துவந்துஅமெரிக்காவில் அடிமைகள் ஆக்கி அவரகளின்ரத்தத்தைகுடித்தகதையைஒருவன்எழுதினான். அதிராம்பட்டினத்து கதையெழுதயார்வருவார்?

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+