நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலவசம் விலை போனதே ! [அனுபவங்களின் விலாசம்] - குறுந்தொடர் - 1 18

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், ஜூன் 12, 2014 | , , ,

கு.தொ : 1

இந்தக் கட்டுரையின் கதைக் களம் மலேசியா என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.  பெரும்பாலும் நோன்பு காலங்களிலும் நோன்பு நெருக்கக் காலங்களிலும் இந்தியாவிலிருந்து பள்ளிகளில் தொழுகை வைக்கும் இமாம்கள் என்றும் மோதீன்கள் என்றும் லபைமார்கள் என்றும் நிறைய பேர் வசூலுக்கு வருவது வழக்கம்.  இவர்களை அழைத்து வரவும் தங்குவதற்கு இட வசதி ஏற்பாடு செய்து தரவும் சிலர் இங்கு, மலேசியாவில் ஒரு டூரிஸ்ட் கைட் போலவே செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த கைடு ஆசாமிகளுக்கு மலேசியாவில் உள்ள கடை வைத்து வியாபரம் நடத்தும் ஒவ்வொரு கடையைப் பற்றிய முழு பொருளாதார நிலையும் முதலாளிகளின் பையோ டேட்டாவும் அத்துபடி.  ஒவ்வொரு கடைக்காரரும் எவ்வளவு கொடுப்பார் எதைச் சொன்னால் அவர் மனம் ‘இறங்கும்’ என்றும் இவர்களுக்கு மனப்பாடம்.  ஒவ்வொரு வசூலிலும் 20% முதல் 25% வரை கமிஷன்.  தங்குமிடம், போக்குவரத்துச் செலவு எல்லாம் வசூலுக்கு வருபவர்தான் கட்ட வேண்டும்.  வியாபர ஸ்தலத்தின் பெயர் பலகையைப் பார்த்தும் சிலர் கணிப்பதுண்டு.  உதாரணமாக, 786 என்று எழுதி பிறையும் நட்சத்திரமும் போட்டு syrikat Abdul Karim & Anak Anak, அதாவது ஆங்கிலத்தில் Abdul Karim & Sons  என்று இருந்தால் ஓரளவு வளமான ‘கை’ என்று கணிப்பார்கள்.  அல்லது syrikat Abdul karim Sdn Bhd (Sdn Bhd என்றால் private limited) இது ரொம்ப வளமான “கை” என்று கணிப்பார்கள். 

Syrikat என்ற மலாய் சொல்லுக்கு Company என்று பொருள்.  தனியாருடையதாக இருந்தால் Kedai Buku Abdul Kadir என்று போர்டு தொங்கும்.  இது பங்குதாரர்கள் தொந்தரவு இல்லாத கடை.  முதலாளியே மனம் வைத்தபடி எதையும் செய்யலாம்.  எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை.  வெறும் பேக்கை போக்கைகளை பங்காளிகளாக சேர்த்துக்கொண்டு புத்திசாலிகள் ஓடியாடி சம்பாதித்து வருஷ கடைசியில் கணக்கு பார்க்கும்போது வருஷம் 364 நாட்களும் தூக்கமோ தூக்கமென்று தூங்கிவிட்டு அந்த ஒரு நாள் மட்டும் “இது ஏன் இந்த செலவு கூடி இருக்கிறது? அது என்ன அந்த செலவு அப்படி இருக்கிறது? “ என்று கேள்விமட்டும் கேட்கும் ஸ்லீப்பிங் பார்ட்னர் தொல்லையும் லொள்ளும் இருக்காது.

“மூனு மாதத்திற்கு முன் கடைக்கு வந்தேன். அந்த கட்டை பய என்னை கண்டும் காணாமே வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்” என்றும், “என் மருமகன் இங்கு வந்தபோது யாரும் தே (டீ) வாங்கிக் கொடுக்கலையாம். இப்படியெல்லாமா தொழிலை நிர்வாகம் செய்வது?’ என்ற முனகலும் பங்காளி தொழிலில் உண்டு.  அந்த காவியம் எழுத வேண்டுமென்றால் கம்பனைத்தான் எழுப்பிவர வேண்டும். அவன் “கம்பெனியாணம்” என்று தலைப்புப் போட்டு எழுதுவான். 

இப்போது பிரச்னைக்கு வருவோம்.  இங்கே நான் பெறிய முதலாளி! பெறிய முதலாளி என்று பெரிய ‘றி’ போட்டு எழுதினேன்.  தமிழ் வழக்குப்படி இது தப்பு.  சிறிய ‘ரி’ போட்டுத்தான் பெரிய முதலாளி என்று எழுத வேண்டும். சின்ன ‘ரி’ போட்டால் பெரிய முதலாளிக்குக் கோபம் வரும்.  “என்னிடம் கை நீட்டி சம்பளம் வாங்குறவன் என்னை சின்ன ‘ரி’ போட்டு கவலப்படுத்தி விட்டான்” என்று கோபித்துக் கொள்வார்.  அதனால்தான் பெரிய ‘றி’ போட்டு எழுதினேன்.  எழுத்துப் பிழை கண்டு பிடிக்க வேண்டாம். 

இனி இப்பொழுது பேசுபொருளுக்கு வருவோம்.

ஒரு நாள் பகல் 2 ½ மணி இருக்கும்.  28 வயது மதிக்கத்தக்க ஒருவரும் அவரோடு மெல்லிய தேகமும் சாதாரண உடையும் உடுத்தி வறுமையில் வாடும் தோற்றத்துடன் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரும் கடைக்குள் நுழைந்தனர்.

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்று இருவரும் ஒரே குரலில் சலாம் சொன்னார்கள்.  நானும் பதில் சலாம் சொல்லி நாற்காலியில் உட்காரச் சொன்னேன். உடனடியாக கையில் கொண்டு வந்த ஃபோட்டோ ஆல்பத்தை எடுத்து “இதைப் பாருங்கள்” என்றார். பார்த்தேன்.  குழந்தையும் குட்டியுமாக பெண்களும் ஆண்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.  மற்ற ஃபோட்டோக்களில் சின்ன சின்ன குடிசை வீடுகள் அருகே குப்பை, கூளம், கோழி, நாய், சாக்கடை, உடைந்து போன பானை சட்டிகள்.  கலர் ஃபோட்டோக்கள்.  ஒரு பழைய கீத்துக் கொட்டகை அதன் முன் ஒரு பழைய பச்சை மை போர்டு அந்த கிராமத்தின் பெயரை வெள்ளை மையால் எழுதி “தொழுகிற பள்ளி” என்று போர்டு தொங்கியது.  இப்படி பல ஃபோட்டோக்கள். ஏழ்மையின் அவல நிலையை அந்த வண்ணப்படங்கள் தெளிவாக்கின.  நல்ல கேமராக் கலையில் கைதேர்ந்த படப்பிடிப்பாளன் எடுத்த ஃபோட்டோவாக இருந்தது.   பார்த்துவிட்டு திருப்பி அவரிடம் கொடுத்தேன்.  இந்த பீடிகை எதற்கு என்று தெரிந்து கொண்டேன்.

“நாங்கள் பாண்டிச்சேரி அருகிலுள்ள, ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி, அங்கிருந்து வருவதாக” சொன்னார்.  நான் கேட்டுக் கொண்டு சும்மா இருந்தேன்.  “இது ஒரு ஏழைகள் நிறைந்த கிராமம்.  சுமார் 100-150 இஸ்லாமிய குடும்பங்கள் இங்கே இருக்கிறது.  அதோடு 40-50 இந்துக் குடும்பங்களும் அங்கே ஒற்றுமையாக பலகாலம் வசித்து வருகிறார்கள்.  சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பாக மதம் மாறிய அந்த இந்துக் குடும்பங்கள் எல்லோருக்கும் கலிமா சொல்லி அவர்கள் விருப்பப்படி இஸ்லாத்திற்கு கொண்டு வந்து விட்டோம்.  ஆண்களுக்கு ஹத்தனாவும் செய்து விட்டோம்.” என்றார்.

அவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கவும் நல்ல உடைகள் கொடுக்கவும் கீத்து கொட்டகையாக இருக்கும் பள்ளிகளை கட்டிடமாகக் கட்டித்தரும்படி பலமுறை பாண்டிச்சேரி முதல்வர் ஃபாரூக் மரைக்காரிடம் கேட்டும் அவர் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அவர் கோயில் திருவிழாக்களில் தேர் இழுக்கிறார்” என்றார்.

அவர் சொன்ன செய்திகள், காட்டிய படம் எல்லாம் பொய். ஒவ்வொரு நோன்பு மாதங்களுக்கு முன்பு வந்து பின்பு வருபவர்களை ஒவ்வொரு இடமாக்க் கூட்டிப்போய் ஏதாவது கதை சொல்லி வசூல் செய்து வசூலில் பெரும் பகுதியை இந்த இளைஞர் விழுங்கி விடுவார் என்று பலர் என்னிடம் சொல்லி இருக்கின்றனர். இவருக்குக் கோலாலம்பூரில் தமிழ் முஸ்லிம்களின் கடை எங்கே இருக்கிறது , எதைச் சொன்னால் எவ்வளவு கொடுப்பார்கள் என்ற கணிப்பில் நிபுணர்.   இவர் பிழைப்பே இதுதான்.

ஒவ்வொரு கடைக்கார முதலாளிகளுடைய பெயர் ஊர் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார். நன்றாக உழைக்கும் திடகாத்திரமான் உடற்கட்டு.  இருந்தாலும் காசு தேட இந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். 

“நீங்கள் பார்த்து நன்றாக செய்யுங்கள். பாண்டிச்சேரி பாரூக் மரைக்காயர் பெயரும் உங்கள் பெயரும் ஒன்றுதானே? அவர் போல் நீங்கள் நடக்காமல் நன்றாகச் செய்யுங்கள். என்றும் அல்லாஹ் உங்களுக்கும் ஊரில் நிறைய தந்திருக்கிறான்! அல்லாஹ் உடைய பரக்கத் உங்களுக்கு இன்னும் நிறைய கிடைக்கும்” என்றார்.

“ஆமீன்!” என்றேன்.

“என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.
“உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்!. உங்களுக்கு இரண்டு திருமண மண்டபம் இருப்பதைப் பார்த்தேன். உங்கள் பெயர் அங்கே இந்து முஸ்லீம் எல்லோருக்கும் நன்றாகத் தெரிகிறதே! நல்லபடியாக சொல்கிறார்களே!” என்றும் கொஞ்சம் கூடுதலாக ஐஸ் வைத்தார். 

அவர் வைத்த ஐஸ் என் கொதிப்பைக் கூட்டியது.  ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு என்வலோப்பில் மலேசிய ரிங்கிட் 50/- வைத்து அவரிடம் கொடுத்தேன்.  அதை வாங்கிய அவர் என் முன்னேயே திறந்து பார்த்தார். முகம் மாறியது. 

“என்ன 50 வெள்ளியைத் தருகிறீர்கள்? நான் இவ்வளவு விபரங்க்ளைச் சொல்லியும் இதைக் கொடுக்கிறீர்களே? இதை வைத்து என்ன செய்ய முடியும்? “ என்றார்.

கேள்வியில் கோபமும் வேகமும் பளிச்சிட்டது.

“கோப்ப்படாதீர்கள். இவ்வளவுதான் நம்மால் முடியும்” என்றேன்.

“ஒரு கிராமத்து மக்களையே அவர்கள் விருப்பப்படி முஸ்லீமாக மாற்றியிருக்கிறோம்.  பாண்டிச்சேரி பாரூக் மரைக்காயர்தான் காஃபிர்களுக்கு சப்போர்ட் செய்கிறார் என்றால் அவர் பெயருடைய நீங்களும் இப்படி செய்கிறீர்களே!” என்று கொஞ்சம் அதிகாரத் தொணியில் கேட்டார்.

“கொஞ்சம் பொறுமையுடன் கேளுங்கள். அந்த ஃபோட்டோக்களை எல்லாம் எடுங்கள்” என்றேன்.

பள்ளிவாசல் கொட்டகைப் பட்த்தை எடுத்துக்காட்டி, “இத் ஏற்கனவே இருந்த முஸ்லீம்கள் தொழுத பள்ளிதானே?” என்றேன்.

“ஆமாம.” என்றார்.

“இப்போது இஸ்லாத்திற்கு வந்தவர்கள் முன்பிருந்தவர்களைவிட மிக்க் குறைவுதானே?” என்று கேட்டேன்.

“ஆமாம்” என்றார்.

“காலகாலமாக முஸ்லீமாக இருந்தவர்களுக்கு ஒரு பள்ளிவாசல் கட்ட எந்த முயற்சியும் எடுக்காமல் புதிதாக இஸ்லாத்திற்கு வந்த முஸ்லீம்களுக்கு பள்ளிவாசல் கைலி புடவை என்று பேசுகிறீர்களே! ஏன்?” என்றேன்.  மெளனமாக இருந்தார்.

“நீங்கள் பாண்டிச்சேரி ஃபாரூக் மரைக்காயர் தேர் இழுக்கிறார் என்கிறீர்களே அவருக்கு ஏன் முஸ்லீம்கள் ஓட்டு போட்டீர்கள்? அவர் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதுதானே?” என்று சொல்லிவிட்டு,  “நீங்கள் நினைத்து வந்த கல்யாண மண்டப ஃபாரூக் நான் அல்ல. பாண்டிச்சேரி ஃபாரூக்கும் நான் அல்ல! ஆனால் என் பெயரும் ஃபாரூக் தான். இந்த 50 வெள்ளி வேண்டுமா வேண்டாமா?” என்றேன்.

“மூன்று பேரும் ஃபாரூக்தான். ஆனால், குணமும் பணமும் அதைத் தேடும் வழிகளும் வேறுவேறு” என்றேன்.  மீண்டும் முறைத்தார்.

“முறைக்காதே! போலீசுக்கு டெலிஃபோன் போட்டால் நீ வசூல் செய்யும் விஷயம் சொன்னால் உள்ளே தள்ளுவார்கள். நீ டூரிஸ்ட் விசாவில் வந்திருக்கிறாய். உன் பாஸ்போர்ட்டை முடக்குவார்கள். இஸ்லாத்தின் பெயரில் பொய்கள விற்று சுகமாக வாழ நினைக்காதே. உழைத்துப்பிழை! பிழை செய்து பிழைக்காதே! போய் விடு! அதிகம் பேசினால் பிழைப்பு கெட்டு விடும்” என்றேன்.

கொடுத்த காசை எடுக்காமல் போய் விட்டார்.

மிச்சம் என்று வைத்துக் கொண்டேன்.   
(தொடரும்...)
S.முஹம்மது ஃபாருக்

18 Responses So Far:

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள மச்சான் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அழைக்கும்.

ஆரம்பமே படு ஜோர். அதிலும் அந்த பெரிய " றி "விஷயம் உங்களுக்கே உரித்தான நையாண்டி மேளத்தின் ஓசையின் ஒரு துளி.

இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.

நிச்சயம் என்னிடம் அடிக்கடி சொல்லி நாம் வயிறு வலிக்க சிரிக்கும் சார்டட் பேங்க் விஷயம் இருக்குமென்று எதிர் பார்க்கிறேன். அனைவருக்கும் பகிர்வோமே!

sabeer.abushahruk சொன்னது…

வாழ்க்கையின் அனுபவங்களை வயதில் மூத்தோர்கள் சொல்லும்போது நமக்கு இலவசமாக ஒரு பாடம் கற்பிக்கப்பட்டு விடுகிறது.

அதிலிருந்து, அதாவது அவர்களின் அனுபவத்தின் வலியை நாம் பெறாமல், பட்டுத்தெளிய வேண்டிய தீர்வுகளை படாமல் எட்டி விடலாம். வலி அவர்களோடு, வாழ்வியலின் வழிகாட்டுதல்கள் நமக்கு.

இது திரிக்கப்பட்டு திணிக்கப்பட்ட இந்திய வரலாற்றைப்போல் நம்மை திசை திருப்பி விட்டு விடாது.

"பார் தம்பி, இது எனக்கு இவ்வாறு நேர்ந்தது; நாளைக்கு உனக்கும் நேராமல் இருக்க நான் இப்படிச் செய்த தவறை நீ செய்யாமல் பிழைத்துக்கொள்" என்பது ஒரு வகையில் போதனை அல்லவா?

அவ்வகையில் இத்தொடரை வரவேற்கிறேன். அழகான கதை சொல்லியின் லாவகத்தை ஃபாரூக் மாமாவின் எழுத்தில் காண சந்தோஷமாக இருக்கிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஃபாரூக் மாமா!

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear Uncle,

Nice narration of your personal experience through the title 'Address of Experiences'.

It creates awareness by revealing the true faces of few lazy and cunning people who have habit of exploiting other's time and money for their own personal gaining. They use the sentiments of doing social service and religious acts but Allah only knows their true intentions . These kinds of business will not last for long, it will collapse and their lives will be also collapsed. Because a begger with begging mentality cannot become a permanent richer.

I have learned so much from your writings by reading between the lines, and expecting more.

May Allah provide you with peace and health.

Jazakkallah khairan,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…


“முறைக்காதே! போலீசுக்கு டெலிஃபோன் போட்டால் நீ வசூல் செய்யும் விஷயம் சொன்னால் உள்ளே தள்ளுவார்கள். நீ டூரிஸ்ட் விசாவில் வந்திருக்கிறாய். உன் பாஸ்போர்ட்டை முடக்குவார்கள். இஸ்லாத்தின் பெயரில் பொய்கள விற்று சுகமாக வாழ நினைக்காதே. உழைத்துப்பிழை! பிழை செய்து பிழைக்காதே! போய் விடு! அதிகம் பேசினால் பிழைப்பு கெட்டு விடும்” என்றேன்.
Well said Kakka .
We are expecting more from you.
The real story of yours is really touching one and it will give us a lesson.jasakkallah Khair Kakka

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்.

வசூல் ராஜாக்களை வரிஞ்சிக் கட்டிய விதம் படும் ஜோர் இது போன்றவர்களை புகை படத்துடன் வெளியிட்டால் அவர்கள் ரோஜாக்களை போல் வாடிவிடுவர்களே !

இறைவா! தர்மத்தின் நன்மையை வசூல் ராஜாக்களுக்கு புரிய வைத்து.தன் உடல் உழைப்பின் மூலம் அவர்களும் பிறர்க்கு தர்மம் செய்யக் கூடிவர்களாக ஆக்குவாயாக.

sheikdawood mohamedfarook சொன்னது…

மைத்துனர் இப்ராஹீம் அன்சாரிக்குஅஸ்ஸலாமு அலைக்கும்.அந்தசாட்ட்ரர்ட் பேங்க் விஷயம்''மலேசியாவில் தஞ்சைமாவட்டமுஸ்லிம்கள்-எழுச்சியும் வீழ்ச்சியும்''என்ற பெயரில் ஒருஎழுதிகொண்டிருக்கிறேன்.இன்ஸாஅல்லாஹ்அதில்இதுவரும்.

sheikdawood mohamedfarook சொன்னது…

/இலவசம் விலை போனதே/என்ற இந்தகுறுந்தொடரின் முதல் பகுதிக்கு அன்புடன்பின்னூட்டம் தந்த மைத்துனர்இப்ராஹிம் அன்ஸாரி,மருமகன்ஷபீர்அபுசாருக் மருமகன் அஹமதுஅமீன் தம்பி இப்னு அப்துல்ரஜாக் தம்பி லெ.மு.செ.அபூபக்கர் ஆகியோருக்கும் மற்றும் படித்துக்கருத்திடவாய்ப்பு கிடைக்காத அனைவருக்கும் என் நன்றியும் ஸலாமும்உரித்தாகுக.

Shameed சொன்னது…

//கொடுத்த காசை எடுக்காமல் போய் விட்டார்.//

பல்க் பார்ட்டியா இருப்பாரோ!

sabeer.abushahruk சொன்னது…

//பல்க் பார்ட்டியா இருப்பாரோ!//

அதெல்லாம் கெடையாது. திரும்ப கூப்பிடுவாங்கன்னு எதிர்பார்த்திருப்பார்; நோகாம நுங்கு சாப்பிடற பார்ட்டிங்க.

திரைகடலோடியும் திரவியம் தேடும் டெக்னிக்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அனுபவங்களை பொதுவில் பகிரும்போது... கத்திமேல் நடக்கும் அனுபவம்தான், மேலும் சந்தித்த அல்லது நினைவை விட்டு மறக்கவியலாத விஷயங்களை சொல்ல வரும்போது அனுபவ உயிரோட்டத்தில் வெளிவரும் பாத்திரங்களுக்கு சொந்தக் காரர்கள் அன்றைய நிலையில் இருந்த நிலையிலிருந்து மாறியிருக்கலாம் அல்லது நம்மிடையே இல்லாமல் இருந்திருக்கலாம்.

அன்புவங்களின் விலாசம் என்ற தலைப்பிட்டதன் நோக்கமே, எழுதியவரின் அனுபவமே அன்றி யாரையும் தனிநபர்களைச் சாடுவதற்கு அல்ல. நம்மிடையே களைய வேண்டிய அல்லது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவே இத்தகைய அனுபவங்களை அவ்வப்போது பகிர்வது அவசியமாகிறது.

தனிமனிதர்களின் தவறுகளால் சமுதாயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, சமுதாயத்தின் அறியாமையை எவ்வாறு ஒரு சிலரின் ஆதாயத்திற்குள்ளாக்கப்படுகிறது என்ற அனுபவங்களை அனுபவத்தவர்கள் சொல்லித்தான் தெரிய முடியும்.

ஆகவே, இந்த தொடர்... சொல்லிக்காட்டும் சம்பவங்களில் ஏதேனும் வாசிக்கும் ஒவ்வொருக்கும் உணரப்பட்டிருக்கும் அல்லது கேள்வி பட்டதாக இருக்கும்.

சுவைபடவும், வாசிக்கும்போது விறுவிறுப்பையும் அழகுற சேர்த்து சொல்லும் விதம் அருமை !

'நகை' 'சுவை' இரண்டுக்கும் நடுவில் "ச்" வைப்பதிலும் அங்கே 'நச்'சு கலக்காமல் பார்த்துக் கொள்வதில் தேர்ந்தவர்கள் எழுதும் தொடர்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் !

ஜமீல் சொன்னது…

ஆ ஹா ...! அம்பது ரிங்கி போச்சே!!

sheikdawood mohamedfarook சொன்னது…

//ஆஹா!அம்பது ரிங்கி[ட்] போச்சே!!// தம்பி ஜமீல் சொன்னது .ஆயீரம் இரண்டாயிரம் கொடுக்கும் இளிச்சவாயன்கள் இருக்கும்போது இது ஒரு chicken feed!

ZAKIR HUSSAIN சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ZAKIR HUSSAIN சொன்னது…

இந்த நிகழ்வுகளின் களம் மலேசியா என்று இருந்தவுடனேயே கண்டு கொண்டேன் இது ஃபாரூக் மாமா அவர்களின் ஆக்கமாக இருக்கும் என்று..

சமயங்களில் நினைப்பது உண்டு, ஃபாரூக் மாமா அவர்களை பேசச்சொல்லி , ஆடியோவில் பதிந்து அதை பிறகு எழுத்தாக இணையத்தில் பதிய வேண்டும் என்று. காரணம் அந்த மனிதரின் அத்தனை நாட்களும் [ மலேசியாவில் அவர் இருந்த காலம் ] மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை.

தேளுடனும், நட்டுவாக்களியுடனும், பாம்புகளுடனும் எப்படி சிரித்துப்பழக வேண்டும் என்று எனக்கு பாடம் சொல்லித்தந்த குரு. நமக்கு வரவேண்டிய பணத்தை வைத்துக்கொண்டு நம்மிடமே எகத்தாளம் பேசும் நாதாரிகளிடம் எப்படி ஒன்றும் நடக்காத மாதிரி வியாபாரம் செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லித்தந்தவர் ஃபாரூக் மாமா அவர்கள்.

தொப்பி , தாடி இவைகளுக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் இருக்கவேண்டும் என்று அப்ரானியாக நம்பியிருந்த என்னைப்போன்ற படித்த [!] ஆட்களிடம் 30 வருடத்திற்கு முன்பே ' அப்படியெல்லாம் நினைத்து மடையனாகி விடாதே.....அதற்கும் நீ நினைக்கும் நேர்மைக்கும் ஒரு மில்லிமீட்டர் சம்பந்தமும் கிடையாது. தாடி தன்னால் வளரும், தொப்பி 10 வெள்ளிதான்...அவை எப்படி மனிதனுக்கு நேர்மையை கற்றுத்தரும் என்று என்னை விழித்துக்கொள்ள செய்தவர்.

முதலில் உன்னை நம்பு , உன் உழைப்பை நம்பு. பணத்துக்கும் நிம்மதியான தூக்கத்தும் சம்பந்தமே இல்லை. அதற்காக பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல என்று இருந்து விடாதே என்று, வாழ்வியலின் அத்தனை கோணத்தையும் எனக்கு சொன்னவர் ஃபாரூக் மாமா அவர்கள்.

ஃபாரூக் மாமா எழுதும் தொடர் வரும் சமயங்களில் தானாக நமக்கு உண்மை புலப்படும்.

Shameed சொன்னது…

நான் என் தகப்பனார் கூட ஒன்றாக இருந்த நாட்களை விட சகோ ஜாகிர் என் தகப்பனார் கூட ஒன்றாக இருந்த காலம் அதிகம் என நினைக்கின்றேன் ( சரியா ஜாகிர் அவர்களே)

sheikdawood mohamedfarook சொன்னது…

//தொப்பி தாடி இவைளுக்கும் நேர்மைக்கும்சம்பந்தம் இல்லை// மருமகன்ஜாஹிர்.சொன்னதுஎன்றாலும்இவர் தொப்பிதடிஇல்லாமலும்சிலரைஏமாற்றினார்
.தொப்பிபோட்டு தாடிவச்சும் பலரை ஏமாற்றினார்.ஏமாந்தவர்களில் பாதிக்குபாதி தாடியும் வச்சுதொப்பியும்போட்டவர்களே!ஒருநாளைக்கு இந்தஇளமைகூட்டத்துடன் சரபோஜிகோபுரத்துக்குபோய் என்நெஞ்சின்சுமைகளையெல்லாம்பிரித்துகொட்ட ஆவி துடிக்கிறது.அந்தநாளும்வந்திடாதோ!

ZAKIR HUSSAIN சொன்னது…

//நான் என் தகப்பனார் கூட ஒன்றாக இருந்த நாட்களை விட சகோ ஜாகிர் என் தகப்பனார் கூட ஒன்றாக இருந்த காலம் அதிகம் என நினைக்கின்றேன் ( சரியா ஜாகிர் அவர்களே) //

you are 100% correct

Yasir சொன்னது…

Masha Allah lot of lesson to be learned from your great experience mama we are lucky to have you in adirainirubar may Allah bless you with sound health ....expecting more

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+