Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 15, 2014 | , , ,

தொடர் : பகுதி பதினாறு

கடந்த சில அத்தியாயங்களில் யூதர்களின் அறிவுக் கூர்மை மற்றும் ஆற்றல்களைப் பற்றி புகழ்ந்து பேசினோம். அப்படிப்பட்ட யூதர்களையே நசுவினி ஆற்றுக்குக் கூட்டிப் போய் தண்ணீர் காட்டினார் ஒருவர். அவரின் பெயர் ஷாப்பேடை ட்ஜ்வி. Shabbetai Tzvi. இந்த அத்தியாயத்தில் இவரைப் பற்றி பேசக் காரணம் யூதர்களும் எந்நாளும் புத்திசாலிகளல்ல அவர்களிலும் ரசிகர் மன்றங்கள் அமைக்கும் அளவுக்கு உற்சாக மடையர்களும் இருந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான். 

அது மட்டுமல்லாமல், யூதர்களை சீராட்டித் தாலாட்டி பாலூட்டிய உஸ்மானிய துருக்கி சுல்தான் கோபப்படும் அளவுக்கு நாம் குறிப்பிட்டு இருக்கிற ஷாப்பேடை ட்ஜ்வி Shabbetai Tzvi யுடன் சேர்ந்து யூதர்கள் அடித்த கூத்தையும் இஸ்லாத்துக்கு மாறுபாடான நிகழ்வுகளையும் நினைவுபடுத்தவும் இஸ்லாத்துக்கு மாறுபாடு செய்வதாக எண்ணிக் கொண்டு தங்களின் தலைகளில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யூதர்களையும் சுட்டிக் காட்டத்தான். 

விஷயத்துக்கு வரலாம். 

யூதர்களின் வரலாறு பல வெற்றிகரமான கதாநாயகர்களையும் பல வில்லன்களையும் காட்டித்தந்து இருக்கிறது. அவர்களுக்கிடையில் ஒரு கோமாளியும் குதித்தான் என்பது மட்டும் செய்தியல்ல அந்த கோமாளியை நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா! என்று யூதர்கள் ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி ஆதரித்ததுதான் கொடுமை. 

இந்த ஷாப்பேடை ட்ஜ்வி Shabbetai Tzvi என்பவன் ஒரு டுபாக்கூர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலம் யூதர்களின் எல்லாமாக இவன் இருந்தான். இறுதியில் இவன் எடுத்த முடிவு இறைவன் இவனுக்கு விதித்த விதி. இவனது கதையைத் தெரிந்து கொள்ளும் முன்பு ஒரு செய்தியை நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த செய்தி என்னவென்றால் யூதர்களாகப் பிறந்தவர்கள் வேறு எந்த மதத்துக்கும் மாறிக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்த மதத்திலிருந்தும் யூத மதத்துக்கு மாற முடியாது என்பதுதான். அதாவது யூதனாக வேண்டுமானால் யூதனாகப் பிறக்க வேண்டும் என்பதே அந்த செய்தி.

யூதர்கள் பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் நிலத்தை நடுங்க வைத்திருக்கின்றன. அவற்றில் ஒரு செய்தி Shabbetai Tzvi, தன்னை ஒரு இறைத் தூதர் என்று கூறிக் கொண்டதும் அதை யூதர்கள் கொண்டாடி ஏற்றுக் கொண்டதும்தான். எப்படி இருக்கிறது இந்தக்கதை? இவருக்கு இப்படி சொல்லிக் கொள்ளும் துணிச்சல் எப்படி வந்தது. அவருடைய வரலாற்றை ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.

இன்றைக்கும் சிலர் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள சில ஸ்டண்டுகளை அடிக்கிறார்களே – தாங்கள் சொல்வதுதான் சரி என்று தலையாட்ட ஒரு கூட்டத்தை கூவ வைத்து வளர்க்கிறார்களே- அது போல ஒரு ஸ்டண்ட் வாழ்க்கைதான் ட்ஜ்வி உடையதும். 

இளவயதில் எகிப்து முதலிய நாடுகளில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு பின் துருக்கியில் இருந்த இஜ்மீர் என்ற ஊரிலிருந்து 1662 ஆம் ஆண்டு ஒரு சாதாரண பிழைப்புத்தேடி வந்த யூதனைப்போல் ஜெருசலத்துக்குள் புகுந்தார். அப்போது அவரது வயது இருபத்தி இரண்டு. ஆனால் இந்த இளவயதில் யூத மத்தத்தின் உயர்ந்த அந்தஸ்துகளில் ஒன்றான ‘ரபி’ என்ற நிலையை அவர் அடைந்து இருந்தார். இவ்வளவு இளவயதில் ‘ரபி’ என்கிற அந்தஸ்து அபூர்வமானது. இந்தப் பட்டமே இவருக்கு மக்களிடையே ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அவர் ஜெருசலத்தின் உள்ளே வந்த போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிற மாதிரி அப்பாவியாகவே வந்தார். ஆனால் வெகு விரைவில் ஜெருசலத்தில் வாழ்ந்த யூத சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார். யூதர்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்த முன் கூட்டியே திட்டமிடுவதில் பெயர் பெற்றவர்கள். ஆனால், அப்படிப்பட்ட அந்த யூத திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தார் இந்த ட்ஜ்வி.

ஒரு கையளவே இருந்த காலத்தில் யூத சமுதாயத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு முழுப் பொறுப்பேற்றவராக ட்ஜ்வி திகழ்ந்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இன்றும் கூட இவர் ஏற்படுத்திய தாக்கங்கள் யூத சமூகத்தால் அலசப்படுவதும் நினைவுகூறப்படுவதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். 

உண்மையான இறைத்தூதர்கள், தாங்கள் எந்த சமுதாய மக்களின் மத்தியில் பிறந்து வாழ்ந்தார்களோ அதே சமுதாய மக்களால் மறுக்கப்பட்டு பல வேதனைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர் என்பதே வரலாறு. ஹஜரத் நூஹு (அலை) முதல் ஹஜரத் மூசா (அலை) முதல் ஹஜரத் ஈசா (அலை) முதல் இறுதித்தூதர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வரை இறைத்தூதர்கள் மறுக்கப்பட்டதையும் வெறுக்கப்பட்டதையும் நாம் மறுக்க இயலாது; மறக்க இயலாது. ஆனால் ட்ஜ்வி தன்னை இறைத்தூதர் என்று இறைவனின் தரப்பிலிருந்து ஒரு வானவர் வந்து தன்னிடம் அறிவித்தார் என்று சொன்ன போது அதைப் பற்றி சிந்தித்தவர்களை விட உற்சாகமாக கைதட்டி வரவேற்றவர்களே அதிகம். 

காரணம்?

இறைவனின் இறுதித்தூதர் மக்காவில் பிறந்து மதினாவில் ஆட்சியமைத்தார் என்பதை மனதார வெறுத்துக் கொண்டிருந்த யூதர்கள் – அந்த யூத சமுதாயம் தாங்கள் இழைத்துக் கொண்ட தவறுகளாலும் வாக்கு மீறல்களாலும் தண்டனைகளுக்கு ஆளாகி – மதினாவின் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக குறைஷியர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டு அகழ்ப்போர் ஏற்படக் காரணமாக இருந்த காரணத்தாலும் – பனு குறைளா மற்றும் கைபர் போர்களில் பல யூதர்கள் கொல்லப்பட்டதும் யூதர்களின் நெஞ்சங்களில் பெருமானார் ( ஸல் ) அவர்களின் மீது ஒரு வித வெறுப்பை தலைமுறைகள் தாண்டியும் வளர்த்துவிட்டு இருந்தது. 

இந்த நிலையில் இறைவனின் இறுதித்தூதர் அரபுகளில் வம்சத்தில் வந்த முகம்மது ( ஸல்) அவர்கள் வாழ்ந்து ஆண்டு வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி மறைந்தபிறகும் - அவை அனைத்தையும் விட மேலாக, பல பாரம்பரியம் மிக்க யூதர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று தங்களின் வேதங்களில் வந்துள்ள செய்திகளை சான்றாகவும் சாட்சியாகவும் பல சம்பவங்களில் கூறிய பிறகும் - தங்களது யூத குலத்தில் பிறந்த ட்ஜ்வி மீண்டும் ஒரு இறை தூதராக அவதரித்தார் என்ற செய்தி பரப்பப்பட்டதும் அவரை உண்மைக்கு மாறானவர் என்று எண்ணாமல் கரம் நீட்டி வரவேற்று மகிழ்ந்தனர். 

தங்களுக்கு அடைக்கலம் அளித்து ஆதரித்த, இஸ்லாமியரான உஸ்மானியப் பேரரசின் மன்னர், தங்களது இந்த கூற்றை (கூத்தை) கை தட்டி வரவேற்று ரசிப்பாரா – இதை எப்படி எடுத்துக் கொள்வாரென்று எல்லாம் யூதர்கள் சிந்திக்கவில்லை; ட்ஜ்வியும் தனது சொல்லாற்றலால் இவைகளை சிந்திக்க விடவில்லை.

ட்ஜ்வியைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார். நாலு பேருக்கு நடுவில் தன்னை மிகுந்த ஒழுக்க சீலராக காட்டிக் கொண்டார். தனிமையில் தவத்தில் இருந்தார் ; தீவிரமான நோன்புகளைப் பிடித்தார்; பிரார்த்தனைக் கூட்டங்களில் நல்லுபதேசங்களை  அருளினார்;  தனிமையில் (Judean hills) ஜீடன் மலைக் குன்றுகளில் நடந்து திரிந்தார். நாடு கடந்து அடைக்கலம் பெற்று வந்த ஒரு சிறிய எண்ணிக்கையிலான யூத சமுதாயத்தின் நடுவில் தன்னை ஒரு தானைத் தலைவனாக காட்டிக் கொள்வது ட்ஜ்விக்கு ஒரு சிரமமான காரியமாக இல்லை. அப்போது அவருக்கு வயது முப்பத்தாறு. யாரையும் வசீகரிக்கும் அழகான தோற்றமும் தேஜசும் அவரது பிளஸ் பாயிண்டாக இருந்தன. மிகவும் எளிதாக அவனது வலையில் யூதர்கள் விழுந்தனர். அவரது சொல்லுக்கும் -   சொல்லுக்கு மட்டுமல்ல அவர் இசையமைத்துப் பாடிய இறைவணக்கப் பாடல்களுக்கும் தலையாட்டினார்கள். 

முதலாவதாக யூத மத சம்பிரதாயப்படி, இறைவனைப் புகழ்ந்தும் குறிப்பிட்டும் சொல்லும் ஒரு ஹீப்ரு மொழியின் வார்த்தையை பல உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்கள் கூடி இருந்த கூட்டத்தில் அவர் உச்சரித்தார். இப்படி அவர் அந்த ஹீப்ரு வார்த்தையை உச்சரித்தது பலரை சிந்திக்க வைத்தது. யூத மதத்தின் பெரும் முனிவர்கள் கூட அந்த ஹீப்ரு வார்த்தையை உச்சரிக்கக் கூடாது. இறைவனிடம் நேரடித்தொடர்பு உடையவர்கள்தான் அதை உச்சரிக்க முடியுமாம். அப்படிப்பட்ட தகுதியான வார்த்தையை உச்சரித்து அனைவரையும் அசத்தினார் ட்ஜ்வி. 

அடுத்து, ஜெருசலத்தில் ஹஜரத் சுலைமான் (அலை) அவர்கள் கட்டிய தேவாலயம் இடிக்கப்பட்டதாக கூறி அந்த நாளை மன்னர் சாலமனின் தேவாலயம் இடிக்கப்பட்ட நாள் என்று யூதர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் ட்ஜ்வி இனி அந்த நாளை தனது பிறந்த நாளாகக் கொண்டாடும்படி கட்டளை இட்டார். காரணம் தேவாலயம் இடிக்கப்பட்ட நாளில்தான் இவ்வுலகின் இறைவன் தன்னை உதிக்கச் செய்தான் என்றார்.

அதற்கும் பிறகு, ‘தேராவை மணந்து கொள்வது’ என்று யூதமதத்தில் ஒரு சடங்கு இருந்தது. இதன் பொருள் என்னவென்றால் துறவற வாழ்வை மேற்கொள்வது என்பதாகும். இப்படி இவர் துறவிக் கோலம் பூண்டபிறகு யூதர்கள் கூட்டம் கூட்டமாக கண்ணீர் மல்க ட்ஜ்வியை நோக்கித் திரள ஆரம்பித்தார்கள்- கைகளில் காணிக்கையுடன்தான். 

இத்தகைய நிலை ஏற்பட்ட பிறகு அவருக்கு யூதர்கள் வசிக்கும் உலக நாடுகளின் சில பகுதிகளுக்கு ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு யூத சமூகத்தை ஒன்றிணைப்பது அவசியமாயிற்று. இந்தப்பணியை kehillah என்றழைக்கிறார்கள். அதன்படி, எகிப்தின் கெய்ரோ , ஹெர்பன், ஜெலேபி, காஸாபோன்ற பகுதிகளுக்கும் அங்கிருந்த யூதர்களின் புனித இடங்களுக்கும் குகைகளுக்கும் சென்று பிராத்தனக் கூட்டங்கள் நடத்தினார். பெரும் பணம் திரண்டது. வசூலித்து வாரி எடுத்து வைத்துக் கொண்டார் பற்றற்ற துறவி.

இப்படி ஒரு வெற்றிகரமான சுற்றுப் பயணத்தின் நிறைவாக, ட்ஜ்வி பாலஸ்தீனத்துக்கு மீண்டும் வந்தார். தங்களின் தூதரைப் பிரிந்திருந்த யூதர்கள் தேவாலயங்களில் திரண்டனர். அப்படித் திரண்ட மக்கள் வெள்ளத்தின் மத்தியில் “ தூதர்களின் அரசர் “ என்கிற பட்டம் அவருக்கு சூட்டப்பட்டது. பட்டத்தை சூட்டியவர் அன்றைய யூதர்களின் தலைமை குருவான நாதான் (NATHAN) என்பவராவார். பலத்த கரகோஷங்களுக்கிடையே “ இனி எனக்கு இந்த நாதான் தான் ஜோவான் “ என்று அறிவித்தார் ட்ஜ்வி. ( ஜோவான் என்பவர் யோவான் என்ற பெயரில் அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் பிரதான சீடர் என்று பைபிளில் குறிப்பிடப்படுகிறார்.) 

இந்த அறிவிப்பால் உசுப்பிவிடப்பட்ட நாதான், “ மக்களை நோக்கி இனி ட்ஜ்வி நமது இறைத்தூதர். அவரது கருணையாலும் இறைவனுக்கும் அவருக்குமுள்ள நெருக்கத்தாலும் உஸ்மானிய துருக்கியின் ஆளுமைக்குட்பட்ட அடிமை பாலஸ்தீனத்தை சுதந்திர பாலஸ்தீனமாக ஆக்கி உலகெங்கும் சிதறுண்டு கிடக்கும் யூத மக்களை ஒன்றுதிரட்டி குடியமர்த்துவார்" என்று அறிவித்தார். தவளை தான் வாயால் கெட்டது. நிகழ்வுகளைக் கேள்வியுற்ற உஸ்மானிய துருக்கியின் மன்னர் இன்னும் மவுனம் காத்தார் ; பொறுமை காத்தார்.

இந்தப் பொறுமையின் காலம் இன்னும் பதினைந்து ஆண்டுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் இறைத்தூதர் என்று சொல்லி பல கூத்துக்களையும் அடித்தார் ட்ஜ்வி. பதினைந்து ஆண்டுகள் உலக சுற்றுப் பயணம். அங்கு பேசும்போதெல்லாம் , மீண்டும் ஜெருசலத்துக்கு செல்லும்போது ஒரு சிங்கம் எனது வாகனமாக இருக்கும் என்றும் ஜெருசலம் தங்களின் தலைநகராக இருக்குமென்றும் பல நாடுகளில் அறிவித்தார்.

உஸ்மானிய துருக்கிய மன்னர் இவற்றை கவனித்துக் கொண்டே இருந்தார். மீண்டும் பாலஸ்தீனத்துக்கு சிங்கத்தின் மீதேறி செல்வேநென்று அறிவித்த ட்ஜ்வி சில பாடல்களைப் பாடிக் கொண்டு தனது துதிபாடிகளுடன் துருக்கிக்குள் நுழைந்தார். இதற்காக காத்திருந்த சுல்தான், இனியும் பொறுக்க இயலாது எரி தழல் கொண்டுவா! என்று இறைத்தூதர் என்று தன்னை அறிவித்த ட்ஜ்வியைக் கைது செய்து கொண்டுவரும்படி தனது இராணுவத்துக்கு ஆணையிட்டார். தலையைத் தொங்கப் போட்ட பொய்த்தூதர் புன்சிரிப்புடன் கைகளில் விலங்குடன் அரசவைக்கு முன் நிறுத்தப்பட்டார்.

ஒரே மணி நேரத்தில் ட்ஜ்வியின் மீது பறந்துகொண்டிருந்த யூதர்களின் கொடி அகற்றப்பட்டது . ஆடம்பர அணிகலன்கள் அனைத்தும் களையப்பட்டு - பறிமுதல் செய்யப்பட்டு நேரடியாக துருக்கியின் சிறைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். அப்போதும் சிரித்துக் கொண்டே நடந்தார் பொய்த்தூதர். யூத சமூகம் கண்ணீர் விட்டழுதது; பால்குடமும் பன்னீர் குடமும் எடுத்தது. “நாட்டாமை! தீர்ப்பை மாற்றிச் சொல்லு ! “ என்று கதறாத குறைதான். (அண்மை நிகழ்வுகள் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல)

இறைவனருள் பெற்ற தூதரைக் காப்பாற்ற இறைவன் ஏதாவது அற்புதங்கள்- அதிசயங்களை அன்றே நிகழ்த்திக் காட்டி தனது தூதரை இரட்சிப்பார் - இதோடு துருக்கி அரசின் ஆட்சி கட்டில் ஆட்டம் காணப்போகிறது என்றெல்லாம் உலக யூத சமுதாயமே எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தது. ஆனால் அன்றைக்குப் பார்த்து வழக்கமாக அடிக்கும் கடல் காற்று கூட வீசவில்லை.

இருந்தாலும், இறைவன் ட்ஜ்வியை இரட்சித்தான். எப்படி ? இறுதிக்காட்சிகள் இப்படித்தான் இருந்தன.

சிறையின் சுவர்களை வெறித்துப் பார்த்தபடி இருந்து கொண்டு இருந்த ட்ஜ்விக்கு மன்னர் ஒரு வாய்ப்புத் தந்தார்.

ஒன்று ஏக இறைவனை ஏற்று இஸ்லாத்தில் இணைய வேண்டும் இல்லையேல் சாகத் தயாராக வேண்டு மென்பதே அந்த வாய்ப்பு. 

ஆட்டம் போட்ட மனிதரும் ஆரவாரம் செய்தவரும் கோட்டை கட்டி வாழநினைத்தவரும் தூக்கி வைத்த துருக்கி மன்னரைத் தோற்கடித்து சிங்கத்தின் மீதேறி பாலஸ்தீனத்தின் மன்னராக செல்வேநென்று அறிவித்தவரும் பொன்னும் மணியும் புகழும் பணமும் கமழும் மணமும் கண்ணீர் விட்டுக் காத்திருந்த கூட்டமும் துறவற மனமும் ட்ஜ்விக்கு தனது உயிருக்கு முன்னால் தூசியாகப் போனது. உயிர்ப் பசி வந்திட பத்தும் பறந்து போனது. அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்று முழங்கியவர்கள் தடைச் சட்டம் வந்ததும் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஓடிய நிகழ்வு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது. 

ஒரு துண்டை எடுத்து துருக்கியின் மன்னர் முன் விரித்து ‘லா இலாஹா இல்லல்லாஹ் முகம்மத் ரசூலுல்லாஹ்’ என்ற திருக் கலிமாவை ஓதி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டு உயிர்ப் பிச்சை பெற்று மக்களோடு மக்களாக மறைந்து போனார். அதற்குப் பின் யூதர்கள் பூதக் கண்ணாடி வைத்து தேடியும் தென்படவில்லை.

இறைத்தூதர் என்று யூதர்களால் பொய்யாக கொண்டாடப்பட்ட ட்ஜ்விக்கு இஸ்லாத்தைக் கொடுத்து இறைவன் இரட்சித்துக் கொண்டான். யூதர்கள் மீண்டும் அனாதையாக உணர்ந்தார்கள். அடுத்தது என்ன என்று ஆலோசிக்கத் துவங்கினார்கள். உலகவரலாறு, ட்ஜ்வியின் வரலாற்றை நகைச்சுவைக் காட்சிகளாக சித்தரிக்கிறது. 

இந்த சம்பவத்திலிருந்து துருக்கி அரசு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. 

அடுத்த காட்சிகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம். 
=========================================================================================
நன்றி : Dovid Rossoff Land of Our Heritage, Safed: The Mystical City, and The Tefillin Handbook

இபுராஹிம் அன்சாரி

17 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பத்திரிகையில் வரும் தொடர்கதைக்காக, கவிதைகளுக்காக, படக்கதைத் தொடருக்காக, கேள்வி பதில்களுக்காக என்று அதுவெளிவரும் நாளுக்காக ஆவலோடு காத்திருப்பதுண்டு.

அதுபோன்றே தங்களின் இந்தத் தொடருக்கான காத்திருப்பும் ஒரு சுகமான பரவசம்.

தங்களின் எழுத்துப் பணி மகுடம் எனில் இந்தத் தொடர் அதில் ஒரு மாணிக்கம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk said...

காக்கா,

//Shabbetai Tzvi//

இந்தாள் பெயரை முதலில் சைதாப்பேட்டை என்று வாசித்துத் தொலைத்துவிட்டேன். ஆனால், சைதாப்பேட்டைக்குப் பிறகு உள்ள பெயர் வாய்ல நுழைய மாட்டேங்குது. அதனால், வாகாக, 'சைதாப்பேட்டை கொக்கு' என்று வைத்துக் கொள்வோம்.

யுதர்கள் அதி புத்திசாலி ஜாம்பஜார் ஜக்குகள் என்று சொல்லி நம்ப வைத்துவிட்டது உலகம். இப்ப சைதாப்பேட்டை கொக்கு அந்த ஜாம்பஜார் ஜக்குகளை ரொம்ப இலகுவா ஏமாற்றி விட்டதாகவல்லவா தெரிகிறது!

இருப்பினும் யார் ஏமாந்தது என்று ஒரு "ஹாக்கி டாஸ்" போட்டுப்பார்த்து பேசித் தீர்மானிப்பது நல்லது.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,
வ அலைக்குமுஸ் சலாம்.
ஜாம் பஜார் ஜக்கு சைதாபேட்டை கொக்கு பாடலில் ஆயா கடை இடியாப்பமும் பாயா கறியும் இலங்கை வானொலியின் நினைவூட்டுகிறோம் பகுதியில் நினைவுக்கு வந்து விட்டது.

ஜசாக் அல்லாஹ் ஹைரன் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///அங்கிருந்த யூதர்களின் புனித இடங்களுக்கும் குகைகளுக்கும் சென்று பிராத்தனக் கூட்டங்கள் நடத்தினார். பெரும் பணம் திரண்டது. வசூலித்து வாரி எடுத்து வைத்துக் கொண்டார் பற்றற்ற துறவி.///

ம்ம்ம்ம்ம்

//யூத சமூகம் கண்ணீர் விட்டழுதது; பால்குடமும் பன்னீர் குடமும் எடுத்தது. “நாட்டமை! தீர்ப்பை மாற்றிச் சொல்லு ! “ என்று கதறாத குறைதான். (அண்மை நிகழ்வுகள் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல)வ்//

ம்ம்ம்ம்ம்ம்

///தனது உயிருக்கு முன்னால் தூசியாகப் போனது. உயிர்ப் பசி வந்திட பத்தும் பறந்து போனது. அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்று முழங்கியவர்கள் தடைச் சட்டம் வந்ததும் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஓடிய நிகழ்வு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.வ்//

ம்ம்ஹும்ம்ம்

பாலஸ்தீன வரலாறும் தமிழில் வரும்போது தமிழ் 'நடை' போட்டுத்தான் மேடைக்கு வருகிறது ! :)

sheikdawoodmohamedfarook said...

ஆகமொத்தம்''உலகபுத்திசாளிகள்''யென்றுபேர்வாங்கியயூதர்களுக்கு தோழர்டஜ்வி நல்லாஅல்வாகொடுத்திருக்கிறார்.

Ebrahim Ansari said...

//பாலஸ்தீன வரலாறும் தமிழில் வரும்போது தமிழ் 'நடை' போட்டுத்தான் மேடைக்கு வருகிறது ! :)//

தம்பி அபு இபு !

தமிழ் நடை போட்டு வருகிறதா?

இது தளிர் நடை. தளர் நடை.

தடைகள் இல்லாமல் இருந்தால் இன்னும் அழகு நடை போடும். ஆனால் அதற்குத் தடை இருக்கிறதே. !

Ebrahim Ansari said...

வளர் நடை போடும் வண்ணம் வண்ணத் தமிழில் வடிக்கவும் கவிதை அலங்காரங்கள் செய்யவும் கையொடிந்த நிலையில் இருக்கிறேன்.

Ebrahim Ansari said...

எடுத்துக் காட்டாக கவிதைகளை இட்டுக் காட்டினால் இட்டுக் கட்டும் இயல்புடையோர் இருக்கும்போது எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டதாக வேதனையாகவே உணர்கிறேன்.

sabeer.abushahruk said...

காக்கா,

இவ்வார அத்தியாயம் எவ்விதத்திலும் மொழியழகில் குறைந்துவிட வில்லை என்பதும் ஈர்க்கும் உரைநடையில் பொலிவாகவே இருக்கிறது என்பதும் என் கருத்து.

Shameed said...

//இந்த சம்பவத்திலிருந்து துருக்கி அரசு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. //

அடுத்த பகுதி இன்னும் விருவிருப்பாய் இருக்கும் என்பது நிச்சயம்

Shameed said...

//இன்றைக்கும் சிலர் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள சில ஸ்டண்டுகளை அடிக்கிறார்களே – தாங்கள் சொல்வதுதான் சரி என்று தலையாட்ட ஒரு கூட்டத்தை கூவ வைத்து வளர்க்கிறார்களே- அது போல ஒரு ஸ்டண்ட் வாழ்க்கைதான் ட்ஜ்வி உடையதும். //


//பால்குடமும் பன்னீர் குடமும் எடுத்தது. “நாட்டாமை! தீர்ப்பை மாற்றிச் சொல்லு ! “ என்று கதறாத குறைதான். (அண்மை நிகழ்வுகள் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல)//

//அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்று முழங்கியவர்கள் தடைச் சட்டம் வந்ததும் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஓடிய நிகழ்வு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது. //

ஆங்காங்கே பின் அடித்த விதம் அருமையிலும் அருமை

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர் அவர்களுக்கு,

ஒரு வகையில் உண்மைதான் . ஆனால் இன்னும் சுவையாக எழுத சில கவிதைகளை மேற்கோள் காட்டினால் அவை ஷிர்க் என்று வர்நிக்கபடுகின்றன. நீங்களும் அறிவீர்கள்.

இவ்விதம் பல சமயங்களில் பதில் கொடுப்பதற்கே நேரம் போய்விடுகிறது.

வெட்ட வெளியில் வைத்து வேட்டியை உருவ பலர் கண்கொத்திப் பாம்பாக இருப்பதையும் உணர்கிறேன்.

Ebrahim Ansari said...

சில நேரங்களில் பதிவாளர்கள் தவறுகள் செய்துவிட்டால் அவற்றை தனி மின் அஞ்சலில் குறிப்பிட்டு தவறுகளை திருத்தும்படி கேட்பது எனது பழக்கம். இதைப் பலமுறைகள் செய்து இருக்கிறேன்.

அப்படிப்பட்ட பண்பாடுகளை நானும் எதிர்பார்க்கிறேன். ஆனால் எங்கே நான் சறுக்குவேன் என்று கைதட்டி மகிழ காத்திருப்போரைக் காணும்போது வருத்தம் ஏற்படுகிறது என்பதை மறைக்காமல் சொல்கிறேன். அவ்வளவே!

sheikdawoodmohamedfarook said...

//பால்குடமும்பன்னீர்குடமும்எடுத்து...........//''இதுவும்ஒருசிர்க்குதான்.நம்பண்பாடுஅல்லவே!''யென்றுகூவுவார்கள்என எதிர்பார்த்தேன்.கூவல்சத்தம்ஓய்ந்துபோனமர்மம்என்னவோ?

sheikdawoodmohamedfarook said...

/'/எங்கேநான்சறுக்குவேன்'யென்றுகைதட்டிமகிழ காத்திருப்போரைகாணும்போது//இப்ராஹிம்அன்சாரிசொன்னது. பிறர்மனம்துன்புறும்படியும்அவர்களை தாழ்த்தியே பேசியும் தனக்குதானே மகிழ்ச்சிஅடைவது ஒருவிதமானமனோபாவம். எனக்குதெரியஒருகுடும்பம்இருந்தது.அந்தகுடும்பதார்கள்வாயில் இருந்து வருவதெல்லாம்பிறர்மனதைநோகடிக்கும்சொற்களே.அல்லாஅவர்களுக்குகொடுத்ததண்டனை/புத்திசுவாதீனாமில்லாபிள்ளை/,உடல்உறுப்புகுறைபாடு .ஊமைஆகியபிறவிகள்அங்கேபிறந்தன.அதைகண்டும்கூட அவர்கள் வாய் ஓயவில்லை.''எங்கூட்டுபவுனுகொளும்புபவுனு!ஒசத்தி பவுனு!உங்கூட்டுபவுனுபினாங்குபவுனு!மட்டப்பவுனு!''என்றுஎன்னிடம் விட்டார்கள்.''எங்கூட்டுபிள்ளைபந்துவிளையாடுறான்!உங்கூட்டுபிள்ளை கம்பு ஊண்டிதவளைபோல்தாவி-தாவி பாயிறான்! யார்பெத்தபிள்ளைஒசத்தி?''என்றேன்.மூஞ்சிசுருங்கிபோச்சு! ''இப்புடியெல்லாம்பெரியமனுசிட்டேபேசப்புடாதுமா!பெரியமனுசிண்டு இருந்தா நாலுந்தான்பேசுவா''பேசுவதெல்லாம்பேசிபுட்டுஇப்படிஒரு சப்பைக்கட்டு!நாம்மிகஅழகானஉடைஅணிந்திருந்தபோதிலும்நம்நிழல் கருப்பாகவேஇருக்கிறதுஎன்பதைமனிதன்உணரவேண்டும்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by a blog administrator.
Yasir said...

” வசூலித்து வாரி எடுத்து வைத்துக் கொண்டார் பற்றற்ற துறவி” போன்ற நையாண்டி நக்கலுடன்..அந்த பூச்சாண்டி சைதாப்பேட்டை கொக்குவின் வாழ்க்கையும், யூதர்கள் அதி புத்திசாலிகள் என்ற மாயையும் உடைந்தெரிந்தது இந்தப் பகுதி...எனிவே அல்லாஹ் அவரைப்பொருந்திக்கொள்ளட்டும்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு