நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1) 2

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மே 09, 2015 | ,

இன்றும் அடிமைகளின் நிலையை ஒத்ததாக இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலை பார்க்கப்படுகிறது. எவ்வளவோ பக்கம் பக்கமாக நாம் பதில் அளித்தாலும் கூட ஹிஜாப் அடிமையின் சின்னமாகவும், முஸ்லிம் பெண்கள் பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகவும் இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறது. ஒன்னரை கிலோ பெறுமானமுள்ள  கேவலம் துணியா ஒரு பெண்ணை சிறைப்படுத்த முடியுமென்பதை அவர்கள் அறிவதில்லை. இவர்களுக்கு விளக்கம் கொடுப்பதை விடவும் வாழும் உதாரணங்களை சொன்னால் பொருத்தமாக இருக்கும் அல்லவா... அமெரிக்காவில் வாழும் ஆமினா அசல்மியையோ பிரிட்டனில் வாழும் யுவான்னையோ அழைக்கப் போவதில்லை. இதோ ! இதே தமிழ்நாட்டில்  பிரபலமாய் இருக்கும் இஸ்லாமிய பெண்மணிகளை “சாதனைப் பெண்மணி” எனும் பகுதியில் அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அந்த வரிசையில் நாம் இன்று  பார்க்கபோகும் ஆளுமை கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரி முதல்வர் DR. சுமையா.  

முதலமைச்சரிடம் விருது பெற்ற சகோதரி. சுமையா

கீழக்கரையை தாண்டி  இராமநாதபுர மாவட்டத்தில்  பல இஸ்லாமியர்களால் அதிகம் அறியப்படுபவர் சகோதரி சுமையா. சத்தமில்லாத புரட்சி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிறு சிறு உதவிகளுக்குக் கூட கேமரா, வீடியோ  உட்பட மீடியாவையே துணைக்கு அழைத்துச்செல்லும் இன்றைய அரசியல்வாதிகளின் மத்தியில் 15 வருடங்களாக இவரின் சாதனைகள் யாவும் பொது நலனை மட்டுமே சார்ந்திருக்கிறது. தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ள அவர் முயற்சிக்கவில்லை, அல்லாஹ்வின் உவப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இடைவிடாது உழைத்தார். விருதுக்கும் புகழுக்கும் முயற்சிக்காமலேயே முதலமைச்சரிடம்  ”பெஸ்ட் சோஷியல் வொர்க்கர்” விருது வாங்கும் நிலைக்கு உயர்ந்தார். விருது வாங்கிய அந்த நிமிடம் பற்றி கேட்ட போது  அவர் சொன்ன பதில் ,  “அன்று சரியாக லைலத்துல் கத்ர் ஒற்றைபடை நாள். நோன்புடனேயே விருது பெற்றேன்.  நான் செய்த காரியங்களை அல்லாஹ் அங்கிகரித்து எனக்கு வழங்கிய பரிசாகவே இதனை நினைத்தேன். என் பொறுப்புகள் இன்னும் ஏராளமிருப்பதையும் எனக்கு உணர்த்தியதாக கருதுகிறேன்”. 

2012ல் மாவட்ட சமூக நலத்துறை வழியாக ராமநாதபுர மாவட்ட கலெக்டர் அவர்களால்  சகோதரி பெயர்  பெஸ்ட் சோசியல் ஒர்க்கர் அவார்ட்க்கு பரிந்துரைக்கப்பட்டது. மொத்தம் 32 மாவட்டங்களில் இருந்தும்  இதே போல் 32 பெயர்கள் பரிந்துரைக்கபட்டு இறுதியில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்மூவரில் சகோதரி சுமையாவும் ஒருவர்.  பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் வரதட்சனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காகவும், சுனாமி மீட்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருவதற்காகவும்   இவரின் சேவையை பாராட்டி   2012 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின நிகழ்ச்சியின் போது தமிழக முதலமைச்சர் கையால்   சிறந்த சமூக பெண்மணி விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள். ”கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி-  இந்த இரண்டும் என்னை   இந்த நிலைக்கு வர வழிவகை செய்தது. வாழ்வின் ஒவ்வொரு அடுத்த கட்ட நகர்தலில் இவை இரண்டுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பாதுகாப்பையும்  துணைக்கு அழைத்துகொள்வேன்” என்றார் நிதானமாக.  

அவரைப்பற்றி வந்த தகவல்கள் ஆச்சர்யத்தை விதைக்க உடனே அவரைத் தொடர்புகொண்டோம். நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக விடையளித்தார்.

தீன் கல்வியில் திளைத்து வளரும் தாசிம்பீவி கல்லூரி மாணவிகள்:

முஸ்லிம்கள் நிரம்பிய கடற்கரை ஊர் கீழக்கரை.  தாசீம் பீவி மகளிர் கல்லூரிக்குள் நுழைந்தால் இஸ்லாமிய மணமும் நாளைய சாதனைப்பெண்களான மாணவிகளும் நிரம்பியிருக்கும்  சூழல் நம்மை வரவேற்கும். ஒரு பக்கம் உலகக் கல்வி, இன்னொரு பக்கம் குர் ஆனை ஓதும் மாணவிகள். இஸ்லாமியப் பெண்களுக்கென்று தனியாக என்னென்ன வகுப்புக்கள் நடத்தி வருகிறீர்கள் என விசாரித்தோம். ”முபல்லிகா என்ற  3 வருட பட்ட படிப்பை கட்டாய கல்வியாக எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் எங்கள் வளாகத்தில் இலவசமாகக் கற்கவைக்கிறோம். குறிப்பாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தீனியாத் வகுப்புப் பாடத்திட்டங்கள் அன்றாடம் விடுதியிலேயே நடத்தபடுகின்றன. தஜ்வீதும் உடன் ஓத பயிற்சி கொடுக்கிறோம். தர்ஜுமாவுடன் குரானைப் புரிந்து ஓத ஊக்கப்படுத்துகிறோம்” என்று தன் செயல்திட்டங்களையெல்லாம் சகோதரி ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்ல வியப்பே மிஞ்சியது. சுப்ஹானல்லாஹ். 

ஐவேளையும் தவறாது கேட்கும் பாங்கு சத்தம் அதே கல்லூரி வளாகத்தின் மையப்பகுதியிலிருந்து ஒலித்தது.  மாணவிகள் வேகமாய்ப் புறப்படுகிறார்கள், ஜமாஅத்தாய் தொழுவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தால் இமாம் தொழுகை நடத்த ஆயத்தமானார். ஆச்சர்யம் மேலிட்டது. தொழுகையின் அவசியத்தையும் கட்டாயத்தையும்  உணர்ந்து கல்லூரி வளாகத்திலேயே தொழுகைக்கென்று  கட்டிடத்தை நிறுவியது மட்டுமல்லாமல்  இமாம் நியமித்து ஜமாஅத் தொழுகை நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்ததை பார்த்த மாத்திரத்தில் சகோதரி சுமையாவின் ஆளுமை வெளிப்பட்டது. இந்த வருடம் தான் நிறுவனர்  மர்ஹூம் அல் ஹாஜ் அப்துர் ரஹ்மான் அவர்களின் பெயரால் தனியாக பள்ளிவாசல் வளாகத்தில் நிறுவப்பட்டதாக சகோதரி விளக்கினார். அடடா பெண்கள் ஜமாஅத்தாய் தொழும் பாக்கியம் தமிழக முஸ்லிம் பெண்கள் எத்தனை பேருக்கு கிட்டும் ? ஒரு பெண்ணிற்குத் தானே இன்னொரு பெண்ணின் ஏக்கம் புரியும். தன் அதிகாரத்திற்கு உட்பட்ட கல்லூரியில் மாணவிகளின் மீதான தன் அணுகுமுறையை சகோதரி சுமையாவிடம் கேட்ட போது  ”ஒரு பெண் எப்படி வாழ வேண்டும்,  எவ்வாறான கல்வி பயில வேண்டும், எப்படிப்பட்ட அடையாளங்களுடன் சமுதாயத்தில் வலம் வர வேண்டும் என்பதை கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே உலக கல்வியோடு பெண்களின் எதிர்கால சமுதாய வாழ்வுக்கும் சேர்த்து பொறுப்பெடுத்துகொள்வது எங்கள் அணுகுமுறைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. கல்வி மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கநெறிகளை போதிப்பதில் மிகுந்த கவனத்தை செலுத்துகிறேன். ” என்றார். 

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள மாணவிகளைத் தயார்படுத்துதல்:

இஸ்லாமியப் பெண்களிடத்தில் காணப்படும் தற்போதைய கல்வி வளர்ச்சி மற்றும் மார்க்க அறிவு குறித்துத் தனது பார்வையைச் சற்று ஆதங்கத்துடன் சகோதரி பகிர்ந்தார்.  ”பொதுவாக பெண்களின் நிலைகளை விசாரித்தால் வேதனையே மிஞ்சுகிறது. "கணவனுக்கு வேலை இல்லை, விட்டுட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டார், 2 குழந்தைகளை விட்டு இறந்துவிட்டார், குடும்பத்தை வழிநடத்த சிரமமாய் உள்ளது" என ஒவ்வொரு பெண்ணிற்கு பின்னும் ஒரு கண்ணீர்க் கதை உள்ளது. முஸ்லிம் பெண்களோ கல்வியறிவு இல்லாததால் வெளிவரவும், பேசவுமே கூச்சபடுகிறார்கள். கல்வியின் அவசியத்தை உணராத பெண்கள் வாழ்வின் துயரங்களின் போது கல்வி இழப்பை எண்ணி வருந்துகிறார்கள். இவர்களில் பலரிடத்திலும் மார்க்க அறிவு என்பதும் குறைவாகவே இருக்கிறது.  இளம் பெண்களை பொருத்தவரை பெரும்பான்மையான  பெற்றோர்கள் தன் மகள் சிறந்த முறையில் பட்டப்படிப்பு பெற வேண்டுமென நினைக்கிறார்களேயொழிய மார்க்க அறிவை வளர்க்க தாய் தந்தை சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே இதன் அவசியத்தை உணர்ந்து உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பாடதிட்டங்கள் நடத்துகிறோம். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்களிடையே தன்னம்பிக்கை வளர்க்கவும் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு இருவகைக் கல்வியும் எத்தி வைப்பதால் எங்கள் கல்லூரி  மாணவிகளின் பெற்றோர்களும்  திருப்தியடைகிறார்கள். எங்களை மேலும் சீரிய வழிகளில் பயணிக்க அல்லாஹ் பேரருள் புரிவானாக. எங்கள் கல்லூரி விட்டு, வெளி செல்கையில் முழுமையான பெண்ணாகவே இந்த சமுதாயத்திற்கு ஒப்படைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறேன்” என முடித்தார்.   நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல்மாடல் இருக்கலாம். ஆனால் அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சகோதரி சுமையா தான் ரோல் மாடல் . 

கல்லூரியைச் சாதனைகள் நோக்கிக் கொண்டு செல்லும் திறமைவாய்ந்த முதல்வர்

ஒரு பெண்ணாக , 27 வருடங்களாக கல்வித்துறையில் இருப்பதில் சந்தித்த சவால்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என வினவிய போது , “இறைவன் தந்த ஞானமும் அறிவும் எனக்கு  இந்த துறையில் மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. தொழுகை என்ற கவசத்தோடு வலம் வருவதால்  எத்தனை சவால்கள் வந்தாலும்  அவை எனக்கு சுமையாக இல்லை. தொழுகையைக் கொண்டும் , பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோருவேன்” என்ற அவரின் அமைதியான பதிலில் வெளிபட்ட ஈமான் நிச்சயம் துவண்டு இருக்கும் பெண்களுக்கு பெரிய  எனர்ஜி டானிக் தான். பெண்கள் நிர்வாகத்திறமையில் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்லர் என்பதற்கு உதாரணமாகச் சட்டென சகோதரி.சுமையாவை கை நீட்டலாம். அவரின் கடும் முயற்சியால் NAAC மற்றும் ISO தரச்சான்றிதழ் பெற்றுள்ளது அவரின் உயிர் மூச்சான தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 2005-ல் பல்கலைக்கழக மான்யக் குழுவால் இக்கல்லூரிக்கு 'தன்னாட்சி' அந்தஸ்து * கிடைத்து அழகப்பா பல்கலைகழகத்திலேயே முதல் 'தன்னாட்சி ' பெற்ற தரம் வாய்ந்த கல்லூரியாக இன்னும் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நம்மை இன்னும் ஆச்சர்யபடுத்தும் விஷயமும் காத்திருந்தது. கர்நாடகா மாநிலம் மைசூரில் பிறந்தவர் சகோதரி சுமையா. 1988ல் கிழக்கரையில் தாசீம் பீவி அப்துல் காதர் கல்லூரி நிறுவப்பட்டது. அந்த ஆண்டுதான் முதன் முறையாக கீழக்கரைக்கு , ரஜபுத்திர வமிசத்தை சேர்ந்த காயத்ரியாக  காலடி எடுத்து வைத்தார். ஆம்! சகோதரி காயத்ரி  மூன்றாண்டுகள் இஸ்லாத்தை ஆய்வு செய்து, இஸ்லாமியல் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு, சுமையாவாக மாறினார். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் அருளியதுபோல் அவர் தாய் தந்தைக்கு இன்னும் வழங்கவில்லை. சகோதரியின் தந்தை மதுரையில் பிரபல ப்ராக்டிஸ் டாக்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சகோதரியின் தாய்  தன் முதியவயதிலும் பிடிவாதமாக -  இன்னும் இந்துவாக - ஆனால் அதே முஸ்லிம் மகளின் வீட்டில் தான் வசிக்கிறார். அத்தனை வைராக்கியம் கொண்ட பெண்மணியின் மகள் எப்படி சுமையாவாக மாறினார்? எப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொண்டார்?  இஸ்லாம், அவரது வாழ்க்கையை எந்த வகையில் மாற்றியது? மேலும் பல வியக்கவைக்கும் தகவல்கள் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்......

2 Responses So Far:

Ebrahim Ansari சொன்னது…

சாதனைப் பெண்மணி மட்டுமல்ல. ஒரு உதாரணப் பெண்மணி. பெண்களுக்கு மத்தியில் குறிப்பாக வாய்ப்பு இருப்பவர்கள் பிற மத சகோதரிகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய நிகழ்வுகள் அடங்கியது இவரது சாதனை வரலாறாகும்.

sabeer.abushahruk சொன்னது…

மாஷா அல்லாஹ்.

இவர்களைப்பற்றி கேள்விப்பட்டதுண்டு. விளக்கமாகத் தர முன்வந்துள்ள இத்தொடரை வரவேற்கிறேன்.

நம் வீட்டுப் பெண்களுக்கும் இவர்களைப்பற்றி எடுத்துச் சொல்வது பலனளிக்கும்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+