நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 17
போர்க்களத்தில் ஆர்த்தெழுந்தால் மூர்க்கமான வேங்கை அவர்! சூழ்ந்துகொண்டு வீழ்த்த வரும் பகைவர் முன்னே தன்னந் தனியே பாய்ந்து, சுற்றிச் சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று அவர்! அவர் குதிரையின் குளம்படிச் சத்தம் கிளப்பும் புழுதியின் புயல் வேகத்திலேயே எதிரிகள் இதயங்கள் வெடித்து வீழ்வர்! காற்றைக் கிழித்துச் சீறிப் பாய்ந்து வரும் அந்தக் கம்பீரக் குதிரையின் கனைப்பொலிதான் அக்கிரமக்காரர்களை அதிரவைக்கும் 'மலக்குல் மவ்த்' உடைய மரணமணிச்சத்தம்!
அவரை நோக்கி எதிரிகளால் எறியப்படும் ஈட்டிகளும் அம்புகளும் அவர் இலக்கைத் தடைசெய்ய எத்தனிக்கும் இரும்புக் கேடயங்களும் சுற்றிச் சுழற்றப்படும் வாட்களும் எதிரிகள் பின்வாங்கிப் பதுங்கிக்கொள்ளும் கோட்டைகளும் கொத்தளங்களும் அந்த இரட்டைவாள் வீச்சாளர் மாவீரன் அலீயின் 'துல்ஃபிகார்' என்னும் வாள் வீச்சுக்கு முன்னால், ச்ச்சும்மா வெறும் அட்டைப் பொம்மைகள்!
போரில் மிகச் சரியாக வியூகம் வகுத்து எதிரியை ஒரு சில நொடிகளிலேயே மண்ணைக் கவ்வச் செய்வது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களின் தனிச்சிறப்பாகும்! உதாரணமாக, பத்ருப்போர்! வீரபராக்கிரமன் என்று வீணர்களால் போற்றப்பட்ட எதிராளி வலீதை நேருக்கு நேர் எதிர்கொண்டபோது ஒரு புழுதிப் படலம் தோன்றியதைத்தான் தோழர்களால் காண முடிந்தது. அடுத்த கணம் அலீ (ரலி) அவர்களால் பந்தாடிப் பிணமாக வீசி எறியப்பட்டான் வலீத்!
எதிரி சுதாரித்துக்கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் சில நொடி இடைவெளியில் அவனை அடித்து வீழ்த்தும் இந்தத் தனிக் கலையைத் தன் ஒவ்வொரு தாக்குதலிலும் அலீ (ரலி) யின் பெயர் உச்சரித்தே அடித்து வென்றான் பிரபல குத்துச்சண்டை வீரன் முஹம்மத் அலீ கிளே! அந்தப் பெயர் சொல்லாமலேயே கவனமாய்க் காய்நகர்த்தி அடித்தான் குங்ஃபூ கலைஞன் புரூஸ் லீ!
எப்படியும், இவர்கள் போன்ற களமிறங்கும் எல்லா வீரர்களுக்கும் 'நம்பர் ஒன் ரோல் மாடல்' நம் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள்தான்!
ஹீரோ என்றால் அசிங்க நாற்றமெடுத்த அரசியல்வாதியைப்போல், சதைவெறி பிடித்த போலி ஆன்மீகவாதியைப் போல், செயற்கை அரிதாரம் பூசி வலம் வரும் சினிமா நடிகன்போல், தெருநாய்போல் ஊளையிடும் வெறிகொண்ட பாடகன்போல் நிச்சயமாக அல்ல! இதுபோன்ற எதிலாவது பிரபலமாகும் எவனும் ரசிகப் பட்டாளங்களையே விரும்புவான் அல்லது தனக்கென்று செலவு செய்து அப்படிப்பட்ட அடிவருடித் தொண்டர்களை உருவாக்குவான்!
ஆனால் 'அல்லாஹ்வின் சிங்கம்' அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் தன்னைக் கண்மூடித்தனமாக விரும்பிய, பின்பற்றிய, தனக்கு தெய்வீகத் தன்மையைக் கற்பித்த ரசிகர்களையே இந்தத் 'தனி மனித வழிபாடு' வரம்பு மீறிய செயல் என்று சுட்டிக்காட்டி தம் நேர்மையால், வீரத்தால் அவர்களையே அடித்து விரட்டிய அந்த 'நம்பிக்கையாளர்களின் தனிப் பெருந்தலைவர்' இதுவரை வரலாற்றில் அவர் ஒரே ஒருவர்தான்!
அவர்கள் ஷியா என்றும் காரிஜியா என்றும் ஸபாயியா என்றும் அலவீயா என்றும் ஃபாத்திமியா என்றும் இஸ்மாயீலியா என்றும் ஹஷ்ஷாஷியா என்றும் போரா என்றும் எந்தப் பெயரைச்சூட்டிக் கொண்டாலும் இவர்கள் அனைவருமே நம் கர்ம வீரர், அருமை வீரர் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்தவர்களும் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் இதுபோன்ற வழிகெட்டவர்களுக்கு ஆதரவு அளிக்காததால் அறிவிழந்து போய் அவர்களையே எதிர்த்து நின்று குழப்பம் செய்தவர்களும்தான்!
அலீ(ரலி) அவர்கள் வெளிப்படையாகப் பேசக்கூடியவராகவும் மிகவும் நேர்மையாக நடக்கக் கூடியவராகவும் உலக ஆதாயத்திற்காக வளைந்து கொடுத்துப் போகாதவராகவும் இருந்தார்கள்.
மொத்தத்தில் 'Straight forward' என்ற ஆங்கில வார்த்தைக்கு, சுருக்கமாக அலீ இப்னு அபீதாலிப் (ரலி) என்று நாம் அர்த்தம் எழுதிவிடலாம்!
எனினும் எளிமையானவர்! எல்லோரையும் அவர் எளிதாக சந்திப்பார்! ஆனால், 'தோல்வியை' மட்டும் அவர் இதுவரை சந்தித்ததேயில்லை!
அஞ்சா நெஞ்சன், ஆண்மையின் அடையாளச் சின்னம் அலீ (ரலி) பிறந்தது அல்லாஹ்வின் வீட்டில்! வளர்ந்தது அண்ணல் நபியின் வீட்டில்! வாழ்ந்தது சுவனத்தின் தலைவியுடன்! பெற்றெடுத்தது பேரழகன் ஹசனையும் பெரும்தியாகி ஹுசைனையும்! வீரமும் விவேகமும் ஒரே நேரத்தில் அணிகலன் கண்டிருந்த அற்புத நாயகர் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள்.
அலட்டல் பேர்வழியான அப்பாஸ் பின் மிர்தாஸ் என்ற கவிஞருக்கு ஒரு முறை சில ஒட்டகங்கள் பெருமானார் (ஸல்) சார்பாகப் பரிசளிக்கப்பட்டன! அந்தப் பரிசில்கள் அவருக்குப் போதவில்லை என்பதை சில வரிகளால் அவர் கவிதை பாடினார்!
அவரை அழைத்து 'உயய்னாவுக்கும் அல் அகராவுக்கும் சேர்த்து' என்ற கவிதை வரி மூலம் மிர்தாஸ் என்ன சொல்ல வருகிறார் என்பதை உம்மி நபி (ஸல்)அவர்கள் விசாரித்தார்கள்! அருகே இருந்த அபூபக்ரு (ரலி) அவர்கள் நபியைப் பார்த்து, 'அண்ணலே! அது அப்படியல்ல! 'உயைனாவுக்கும் அல் அக்ராவுக்கும் சேர்த்து!' என்று திருத்தினார்.
கவிதைகள் பற்றி அரபி இலக்கணம் அறிந்திடாத, எழுதவும் படிக்கவும் தெரியாத ஏந்தல் நபி (ஸல்) அவர்கள், 'அதைத்தானே நானும் சொன்னேன்! இரண்டும் ஒன்றுதானே!' என்று கூற, அபூபக்ரு (ரலி) மகிழ்ச்சி மிகுதியால் சிரித்துக் கொண்டே துள்ளிக் குதிக்கலானார்! அத்துடன், 'அல்லாஹ் (ஜல்) அல்குர்ஆனில் உங்களை எப்படி வர்ணித்து உள்ளானோ அப்படியே நீங்கள் இருக்கிறீர்கள் அல்லாஹ்வின் தூதரே!'
அதாவது 'அவருக்கு நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை! அது அவருக்கு அவசியமானதுமில்லை' என்று இறைவன் சொல்வது போலவே இருக்கிறீர்கள் என்று உற்சாகத்தில் சான்றளித்தார் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் (1)
உடனே வள்ளல் நபி (ஸல்)அவர்கள், கவிஞர் மிர்தாஸுக்கு நூறு ஒட்டகைகள் அன்பளிப்பாக வழங்கினார்கள்! அது மட்டுமின்றி, தம் சபையில் இருந்த தோழர்களிடம் இவரை அழைத்துச் சென்று 'இப்படிப் பாடிய இவரது நாவைத் துண்டித்துவிடுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். பெருமானாரின் இந்த வெளிப்படையான கட்டளையை அட்சர சுத்தமாக அமுல்படுத்த 'குத்துவாள்' உருவிப் பாய்ந்து வந்தார் உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள்.
ஆனால், ஞானத்தின் தலைவாயில் அலீ (ரலி) அவர்கள், மரண பயத்தால் நடுங்கி வெலவெலத்துப் போயிருந்த கவிஞர் மிர்தாஸின் கைபிடித்துக் கருவூல அறைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். 'கவிஞர் அவர்களுக்கு என்னென்ன வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ அத்தனையும் இதிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். கவிஞரின் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை!
"என்னது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்படித்தான் என் நாவைத் துண்டிக்க உத்தரவிட்டார்களா?" என்று ஆச்சர்யமாய்க் கேட்டு நின்றார் கவிஞர் மிர்தாஸ்.
'ஆம். நிச்சயமாக, அதன் அர்த்தம் அதுவேதான்! என்று புன்னகை தவழக் கூறி நின்றார்கள் அறிவின் தலைவாசல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள். தாம் யாத்த கவிதை வரிகளை எண்ணி வெட்கத்தால் குன்றிப் போனார், அண்ணலின் அற்புத அரவணைப்பில் ஒன்றிப் போனார் மிர்தாஸ்!
அலீ-ஃபாத்திமா (ரலி) நிக்காஹ் நிகழ்ந்த அடுத்த நாள் காலை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) உடைய வீடு வந்து கதவைத் தட்டியபோது, திறந்தவர் அண்ணலின் வளர்ப்புத் தாய் பரக்காஹ்!
"ஓ, உம்மு அய்மன். என் தம்பியைச் சற்றே கூப்பிடுங்கள்".
"தம்பியா? யார் அது?"
"அவர்தான் அலீ இப்னு அபீதாலிப்!"
"அவர் இன்னும் உங்களுக்குத் தம்பியா, அல்லாஹ்வின் தூதரே! நேற்றிலிருந்து அவர் உங்கள் மருமகன் அல்லவா?" என்றுசொல்லிச் சிரித்தார் உம்மு அய்மன் (ரலி)
புன்னகையுடன் தலையசைத்தார்கள் பூமான் நபியவர்கள். "அப்படியல்ல! எப்போதும் எனக்கு அவர் தம்பிதான்!"
ஒருமுறை உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் தம் அருமை மகள் ஃபாத்திமாவின் வீட்டிற்கு வருகை தந்து, "உன் கணவர் எங்கே?" என்று வினவினார்கள். "தந்தையே! எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய விவாதம் நிகழ்ந்தது. எனவே, என் மீது கோபமாக அவர் வெளியேறிவிட்டார்" என பதில் கிடைத்தது. ஆளை அனுப்பித் தேடியதில் மஸ்ஜித் நபவீயில் கண்டதாகத் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தால், அலீ (ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் அண்ணலார் அவர்கள் மனம் நெகிழ்ந்து, அவர்மீது படிந்திருந்த மண்ணைத் தட்டித் துடைத்து விட்டவாறே, "எழுந்திரும்! அபூதுராப். (மண்ணின் தந்தையே) எழுந்திரும்!" என்றார்கள். அவரது உறக்கம் கலைந்தது. அழகிய அழைப்பால் வருத்தம் மறைந்தது. அன்றிலிருந்து அந்தச் செல்லப்பெயர் நிலைத்துப் போனது. அவருக்கும் அது மிகப்பிடித்துப் போனது. (2)
அகழிப்போர்! ஆயிரம் வீரர்களுக்கு நிகரான மாமல்லன் 'அம்ர் இப்னு அப்தூத்' என்பவனை எதிர்கொள்ள எல்லோரும் தயங்கி நின்றனர். அப்போது, அலீ (ரலி) எழுந்தார். "ஓ, அலீ. கவனம் தேவை! அவன் இப்னு அப்தூத்!". இது இறைத்தூதரின் எச்சரிக்கை!
நல்லது. "அவனைப் பற்றி நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதரே!" இது அலீயின் அடக்கமான பதில்.
என்ன சாகசமோ அது! குதிரையின் மீதேறிப் பாய்ந்து வந்தவன் மீது, குபீரென மின்னல் வெட்டியது போல ஒரு வேக வீச்சு அது! சற்று நிமிடத்தில் இப்னு அப்தூத் தன் உயரம் குறைந்து உயிர் மாண்டான்!
அந்தத் தறுதலையின் தலை தனியே தள்ளிப்போய், வாய் பிளந்து வீழ்ந்து கிடந்தது! அந்த மாமிச மலையின் வீழ்ச்சி கண்டு, இஸ்லாமிய சமுதாயம் மொத்தமும் பேருவகை கொண்டது! தலைவன் மாண்டதால் அந்தக் குதிரைப்படை வீரர்கள் அனைவரும் தலை தெறிக்க வெளிறிப்போய் ஓடி ஒளிந்தனர்!
அப்போதுதான் "லா ஃபத்தாஹ் இல்லா அலீ! லாஸைஃப இல்லா ஃதுல்பிகார்" (அலீயைப் போன்ற வெற்றி வீரன் வேறு எவனுமில்லை! ஃதுல்பிகார் போன்ற போர்வாள் வேறு எதுவுமில்லை) என்று மகிழ்ச்சி மொழி பகர்ந்து சிரித்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். (3)
யமன் தேசம். ஏகத்துவ ஒளிக்கதிர்கள் மக்காவின் ஃபாரான் மலைத்தொடர்களில் உதித்தெழுந்து,
ஸன்ஆவின் மலைக் குன்றுகளில் பட்டுத் தெறித்து ஒளி வீசத் துவங்கிய காலம்! யமன்வாசிகள் புதிதாக தூய இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருந்தார்கள். எனினும், பழைய வழக்கங்களும் நடைமுறைகளும் இன்னும் கொஞ்சம் எஞ்சி இருந்தன! அவர்களின் பழைய பழக்கத்தின்படி ஒரு பெண்மணியோடு ஒரு மாத காலத்திற்குள் மூன்று நபர்கள் உடலுறவு கொண்டுவிட்டார்கள். ஒன்பது மாதம் கழித்து, அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இப்போது அந்தக் குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை கிளம்பி விட்டது. ஒவ்வொருவரும் அது தன் குழந்தையே என வாதிட்டார்கள். அறிவுலக மேதை அலீ (ரலி) அவர்கள், அக்குழந்தைக்கான ஈட்டுத் தொகையை நிர்ணயித்தார்கள். அதை மூன்று பாகங்களாக பங்கிட்டார்கள். அதன்பின்னர், சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். சீட்டு யாருக்கு விழுந்ததோ அவரிடம் குழந்தையை ஒப்படைத்தார்கள். மற்ற இருவருக்கும் எஞ்சிய ஈட்டுத் தொகையின் இரு பாகங்களை அவரிடமிருந்து வசூலித்துக் கொடுத்தார்கள்.
இந்தத் தீர்ப்பை அறியவந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மகிழ்ச்சிப் பெருக்கால் தங்கள் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். (4)
இன்னொரு விசித்திரமான வழக்கு. தன்னுடைய தாயை ஒருவன் மானபங்கப் படுத்திவிட்டான் என்று ஒருவனை இழுத்து வந்து வழக்கு மன்றத்தில் நிறுத்தினார் ஒருவர். அப்படி, தான் ஒரு கனவு கண்டதாகக் கூறினார். ஆனால், தண்டனை அளித்தே ஆக வேண்டும் என்று வாதம் செய்து நின்றார். 'குற்றவாளி என்று குறிப்பிடப்படுபவரைக் கொண்டுபோய் வெய்யிலில் நிறுத்துங்கள். அவருடைய நிழலைக் கசையால் அடியுங்கள்' என்றுஅலீ (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். (5)
ஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு, அவளின் துர் நடத்தைக்காக தண்டனை அளித்திட உமர் ஃபாரூக் (ரலி) முற்பட்டார். 'கூடாது. அவளுக்கு மனநிலை சரியில்லை! அவள்மீது சட்டம் செல்லுபடியாகாது' என ஞானஞாயிறு அலீ (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அதுகண்ட உமர் ஃபாரூக் (ரலி) தம் எண்ணத்தைக் கைவிட்டார்கள். (6)
அண்ணல் நபி (ஸல்) அவர்களே அலீ (ரலி) அவர்களுக்கு 'அக்ளாஹும் அலீயுன்' அவர்களுள் மிகச்சிறந்த தீர்ப்பு வழங்குபவர் அலீ ஆவார் என்றுபட்டம் அளித்துள்ளார்கள்.
அடுத்து கைபர்! யூதர்களின் மாபெரும் இரும்பு போன்ற வலுவான காமூஸ் கோட்டை! அக்கோட்டையின் தளபதி மர்ஹப் மிகப்பெரும் வீராதி வீரன்.
யுத்தக்களத்தில் கொழுந்து விடும் நெருப்பாய் புகுந்து வரும் சூராதி சூரன்! இஸ்லாமியப்படை, பல நாட்கள் முற்றுகையிட்டும் ஓர் இம்மியளவும் முன்னேற முடியவில்லை! மர்ஹப் அல் யஹூதி ஒரு மிகப்பெரும் தடைக்கல்லாக தன் படையுடன் தடுத்து நின்றான்.
மறுபக்கம், கண் வலியால் அவதிப் பட்டுக்கொண்டு போர்முனைக்குச் செல்ல இயலாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள் அலீ (ரலி).
நாளை காலை நான் ஒருவரிடம் இந்தக்கொடியை அளிப்பேன். அவரை அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்புகிறார்கள். அவர் அல்லாஹ்வின் அருளால் எதிரிக்கோட்டையை எதிர்த்துத் தகர்த்தெரிவார் என்றார்கள் அண்ணல் நபி அவர்கள். ஒவ்வொரு தோழரும் அந்த வெற்றிக்கொடி தன் கையில் தரப்படவேண்டும் என்று பேராவல் கொண்டனர்!
அடுத்த நாள் அலீ (ரலி) யை அழைத்து தம்மடியில் படுக்கவைத்து தன் அருட்கரங்களால் அவர் கண்களைத் தடவி ஆசீர்வதித்து, அவருக்காக சிறப்பான ஒரு பிரார்த்தனையைச் செய்தார்கள் அலீயின் அண்ணன் அருமை நபியவர்கள்.
அன்றைய நாள், அதன் முழுவீச்சில் துவங்கியது மூர்க்கமான மகா யுத்தம்!
சூறாவளிப் புயல் களத்தில் சுற்றிச் சுழன்றடித்தது போல் பாய்ந்த அலீ (ரலி) யின் வேகத்துக்கு ஈடுகொடுக்கத் திராணியற்று வேரோடு மண்ணாகி வீழ்ந்து மடிந்தான் ஒவ்வொரு யூதனும்!
தர்மத்தின் தளபதியின் பளபளக்கும் போர்வாள், சூழ்ச்சிக்கார யூதர்களைத் தவிடு பொடியாக்கித் தகர்த்துக் கொண்டிருந்தது! நேருக்கு நேர் மோதத் திராணியற்று, மறைந்திருந்து அடித்த யூதன் ஒருவனின் பலமான தாக்குதலால் கையில் பிடித்திருந்த கேடயம் நழுவிக் கீழே விழுந்தது.
அப்போதுதான் நிகழ்ந்தது அந்த மகா அற்புதம்! அங்குமிங்கும் ஆர்ப்பரித்து நின்ற அநியாயக் கும்பலை நோக்கி நின்ற அலீ, வீரத்தில் வேங்கை எனும் புலி, கையில் கேடயமில்லாமல் நிராயுதபாணியாக நின்றவர், சடாரென்று பாய்ந்து அந்தக் காமூஸ் கோட்டையின் பிரம்மாண்டமான வாசற் கதவையே தனி ஒருவராக நின்று அநாயாசமாகக் பெயர்த்தெடுத்தார்!
கழற்றி எடுத்தது மட்டுமல்லாமல் ஏழு மல்லர்களும் ஒன்றாக சேர்ந்து தூக்க முயன்றாலும் தூக்கமுடியாத, ஒரு மலைக்குன்று போன்ற அந்தக் கதவை ஒரு கேடயம்போல் கையில் வைத்துச் சுழற்றத் தொடங்கினார்!
இரும்புப் பாளத்தால் உருக்கி செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான கதவை அப்படி சுற்றிச் சுழற்றியது மட்டுமல்லாமல், சுழற்றிக் கொண்டே முன்னேறி யூதர்களின் கோட்டைக்குள்ளேயே தீரமுடன் பாய்ந்து சென்றார்.
கோட்டையின் மதகு போன்ற அந்த மாபெரும் கதவையே பெயர்த்தெடுத்து கையில் சுற்றிக்கொண்டு மின்னல்போல பாய்ந்து வரும் உருவம் மனித இனமா அல்லது ஜின் இனமா என்று புரியாமல் அதிர்ச்சியிலே மயங்கி விழுந்தான் துரோகத்திற்காகவே பிறந்த ஒவ்வொரு யூதப் பதரும்!
கோட்டையின் உள் மண்டபத்தில் யூதர்களின் தளபதி, அவர்களின் வீராதி வீரன் என்று பெருமிதப்படும் மர்ஹப் அல் யஹூதி கர்வத்துடன் தோன்றினான்!
அன்றைய தினம் ஒரு பெரும் மதர்ப்பில் இருந்தான் அவன். "இரும்பு போன்ற என் எஃகுக் கோட்டைக்குள்ளேயே வந்து சிக்கிக் கொண்டாயா குறைஷியே! கிட்டே நெருங்கினால் கண்டதுண்டமாக வெட்டிப் போடுவேன் உன்னை. முடிந்தால் ஒற்றைக்கு ஒற்றை வந்து பார் பொடிப் பயலே!" என்று கொக்கரித்தான் வஞ்சகர்களின் தளபதி !
கோட்டையின் கதவை வீசி எறிந்த வேகத்தில், அந்த மாமிச மலை மர்ஹபை நோக்கிய அலீ (ரலி),
“ஈன்றெடுத்த என் அன்னையால் ‘ஹைதர்’ எனச் சிறப்புப் பெயர் சூட்டி அழைக்கப் பட்டவன் நான்!
காட்டு ராஜாவான கம்பீரச்சிங்கத்தின் அச்சத்தையும் அதிர்ச்சியையும் எதிராளிக்கு அளிப்பவன் நான்!
கண்ணைப் பறிக்கும் மின்னலாய்க்களம் புகுந்து, உயிர் பறிக்கும் கொடும் இடியாய் எதிரியாகிய உன் மீது இறங்குபவன் நான்!'
என்ற போர்ப்பரணியைப் பாடிக்கொண்டே ஒரே பாய்ச்சலாக அவன் மேல் பாய்ந்து புறப்பட்டது 'அஸதுல்லாஹ்’ என்ற அந்த அல்லாஹ்வின் சிங்கம்!
வெற்றி வீரன் அலீயின் சக்திமிக்கப் போர் வாள் மர்ஹபின் உடலைப் பலகூறுகளாகப் பிளந்தபோது, ஒரு பெரும் பூகம்பத்தால் பலமுறை உலுக்கப்பட்ட ஒரு மலைபோல அங்கே வீழ்ந்து மடிந்தான் அக்கிரமக்காரர்களின் தளபதி மர்ஹப் அல்யஹூதி.
அல்லாஹுஅக்பர்!
இந்த மாபெரும் கைபர் வெற்றியால், 'அல்லாஹ்வும் ஜிப்ரீலும் மீக்காயீலும் உம் மீது திருப்தி கொள்கிறார்கள்' என்றருளினார்கள் ஏந்தல் நபி பெருமான் (ஸல்) அவர்கள்.
இவ்வாறு, தன் இளமைக் காலத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாசறையில் பெற்றுக் கொண்ட பயிற்சிகள், அலீ (ரலி) அவர்களின் இறுதிக் காலம் வரை நீடித்து நின்றன! மிகவும் கூர்மையான அறிவும் தொலை நோக்குச் சிந்தனையும் சத்தியத்தை விரும்பும் நெஞ்சத்தை கொண்டு அவரைப் பக்குவப்படுத்தி இருந்தன! அனைத்து சோதனையான நிகழ்வுகளிலும் அவரை எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாத மாவீரனாகவும் அல்லாஹ்வின் ராஜபாட்டையில் தன்னை அர்ப்பணித்து நடப்பவராகவும் அவரைப் பரிணமித்துக் காட்டின! இவ்வாறு வீரமும் விவேகமும் அவரை அடையாளம் காட்டி, அவரின் தனிப்பட்ட ஆளுமையாகத் தங்களை அலங்கரித்துக் கொண்டன!
அலீ பின் ரபாஹா (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது: அலீ (ரலி) அவர்களுக்காக, வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் தமது காலை வாகனத்தில் வைத்ததும் 'பிஸ்மில்லாஹ்' என்று கூறினார்கள். சரியாக ஏறி அமர்ந்ததும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்றார்கள். பின்பு,
'சுப்ஹானல்லதீ சஹ்ஹரலனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன் வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்' என்று கூறலானார்கள்.
அதன்பிறகு, 'அல்ஹம்துலில்லாஹ்' என்று மூன்று முறையும் 'அல்லாஹு அக்பர்' என்று மூன்று முறையும் 'ஸுப்ஹானக்க இன்னீ கத்லலம்த்து நஃப்சீ ஃபக்ஃபிர்லீ ஃபஇன்னஹூ லா யக்ஃபிருத்துனூப இல்லா அன்த்த' என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.
அப்போது நான் 'அமீருல் முஃமினீன் அவர்களே!' தாங்கள் எதற்காகச் சிரித்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள்,
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் செய்வதைப் போன்று செய்து விட்டுச் சிரித்தார்கள். அப்போது நான், நீர் கேட்டது போன்றே அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே. நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்?' என்று கேட்டேன்.
அதற்கு, ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், 'இறைவா! என் பாவங்களை மன்னிப்பாயாக! ஏனெனில், உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க மாட்டார்கள்' என்று பிரார்த்திக்கும்போது, அந்த அடியானைப் பார்த்து அல்லாஹ் (ஜல்) மகிழ்ச்சியடைகிறான்' 'அதனை நினைத்து நான் சிரித்தேன்' என்றருளினார்கள். (7)
இதோ அந்த அறிவுலக மேதையின் வைரவரிகள் சில:
- நம்முடைய தொழுகை, அர்ப்பணங்கள், வாழ்வு, மரணம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதே!
- ஒன்றுபட்டு இருங்கள். தொழுகையைவிட ஒற்றுமை பிரதானமானது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
- உங்கள் இரத்த உறவுகளுடன் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். அதன் மூலம், அல்லாஹ் உங்கள் மீது கருணை கொள்வான்.
- இறையச்சத்தில் நேர்மையைக் கடைபிடியுங்கள். இன்னும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குள் சரணடைந்து விடுங்கள்.
- உங்களின் தகுதிக்கு மீறிய ஒன்றின் மீது நீங்கள் ஆசை வைக்காதீர்கள்.
- எப்பொழுதும் உண்மையாளர்களாக இருங்கள்.
- குர்ஆனை ஆத்மார்த்தமாகப் பின் பற்றுங்கள். அதனை நடைமுறைப் படுத்தும் விஷயத்தில் பொடுபோக்காக இருந்து விடாதீர்கள்.
- உங்களது மார்க்கத்தைப் பரிகசிப்பவர்கள் குறித்து, நீங்கள் அச்சப்பட வேண்டாம்.அவர்கள் உங்களுக்கு தீங்கிழைக்க நாடினால் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான்.
- இந்த உலக வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
- இறைவனின் கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். வாழ்வின் யதார்த்தங்களைத் துணிவோடும் தைரியத்தோடும் எதிர்கொள்ளுங்கள்.
- உங்கள் வழியில் நிற்கின்ற தடைகளைக் கண்டு தடுமாறிவிடாதீர்கள்.
- நன்மையான விஷயத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். விஷமிகள் விஷயத்தில் நீங்கள் உதவிக் கொள்ளவேண்டாம்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மீதும் அவர்களின் குடும்பத்தார் அனைவர் மீதும் அல்லாஹ்வின் நல்லாசிகள் உண்டாகட்டுமாக!
o o o o o 0 o o o o o
ஆதாரங்கள்:
(1) அல்குர்ஆன் 36:69
(2) புஹாரி 6280 : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
(3) இப்னுஹிஷாம்
(4) முஸ்தத்ரக் ஹாக்கிம் : 3/135
(5) தாரீஃக்குல் குலஃபா, ஸுயூத்தி
(6) முஸ்னத் அஹ்மத் 140
(7) திர்மிதீ 3446: அலீ இப்னு ரபாஹா (ரலி)
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்
0 Responses So Far:
Post a Comment