Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-2) 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 10, 2015 | , ,

ஆச்சாரமான , கட்டுக்கோப்பான குடும்பத்தில்  தான் சகோதரி காயத்ரி பிறந்தார். பல சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு ஊடே தான் அவர் பால்ய காலம் நகர்ந்தது. எப்படி பல கடவுள் இருக்க முடியும் என்ற அவரின் கேள்விக்கு வீட்டினர் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ”இப்படியெல்லாம் சொல்லகூடாது. சாமி அடிக்கும்” என அம்மாவின் அதட்டல்கள் சிறுமியின் சிந்தனைக்கு பூட்டுப்போடவில்லை. பல கடவுள் இருக்க வாய்ப்பே இல்லை எனும் உறுதியுடனேயே இளமைக்காலம் கழிந்தது. டாக்டரான தந்தை, தன் மகளுக்கு சிறப்பான கல்வியை வழங்கியதன் விளைவாக Msc முடித்து 1988 ஜூலை 29 ல் கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் பேராசிரியையாகப் பணி தொடர வந்தார். அப்போதைய இஸ்லாமிய சூழல் சகோதரிக்குள் இனம்புரியாத ஈர்ப்பைத் தந்தது. ”லா இலாஹ இல்லல்லாஹ்”*- என்ற வாசகம் அவரின் நீண்ட நாள் தேடலுக்கு விடை கொடுத்தது. காலை நேர கல்லூரி வணக்கத்தில் ஒவ்வொரு நாளும் குர்ஆன் வசனங்கள் தமிழ் அர்த்தத்துடன் சொல்லப்படுவது வழக்கம். அவையெல்லாம் அந்த இளம் பெண்ணின் மனதை ஊடுருவிச் சென்றது. தொடர்ந்து நான்கு வருடம் இஸ்லாம் குறித்து ஆராய்ந்தார். 

1991ல் ஒருமுறை அவரின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போக மிகுந்த இக்கட்டான நிலையில் இருப்பதாக மருத்துவர்களும் கைவிட முதன் முறையாக அல்லாஹ்விடம் மன்றாடினார்.  முதன்முறையாகத் தன்னிச்சையாக அவர் மனம் தொழுகையை நாடியது. அவரின் பிராத்தனையை அல்லாஹ் அங்கீகரித்துக்கொண்டான். அன்னை வெகு விரைவில் பூரண குணமானார். இனியும் தாமதிக்க கூடாது என நினைத்த அந்த பெண்மணி நேராகச் சென்றது அப்போதைய தாசீம் பீவி கல்லூரி முதல்வரான சகோதரி நபிஷா-கலீம் அவர்களிடம். தான் முஸ்லிம் ஆக விரும்புவதை சகோதரி சுமையா தெரிவித்ததும் அந்த முஸ்லிம் பெண்மணி உடனே சந்தோஷப்பட்டுவிடவில்லை. அறிவுரை வழங்கினார். ”நீ இன்னும் திருமணமாகாதவள், உன் இந்த முடிவால் உன் வாழ்க்கையின் பாதை மொத்தமாக மாறக்கூடும், உன்னால் இவையெல்லாம் சமாளிக்க முடியுமா என முதலில் யோசனை செய்துகொள். ஒன்றும் அவசரமில்லை, நிதானமாக முடிவெடு” என சமாதானப்படுத்தினார். தன் முடிவில் உறுதியாய் இருந்த அந்த திடப்பெண்மணி பிடிவாதமாய் நின்றார். நவம்பர் 5, 1991ல் சகோதரி நபிஷா கலீம் அவர்களையும் இன்னும் சிலரையும் சாட்சியாக வைத்து கலிமா ஷஹாதத்தை மொழிந்து இஸ்லாத்தை தழுவினார். அவர் முஸ்லிமாக மாறிய விஷயம், ஏழு மாதங்கள் வரை அவரது வீட்டினருக்குத் தெரியாது. 

வீட்டினருக்குத்  தெரிய வரும்போது  நீங்கள் நினைத்து வைத்திருக்கும் அதே சூறாவளி, பூகம்பமெல்லாம் நிகழவே செய்தது. ஆனால் இஸ்லாமிய ஆணிவேர் ஆழமாய் வேரூன்றிய ஆலமரமாய் நின்ற சகோதரி சுமையாவை அவை சிறிதும் அசைத்துப்பார்க்கவில்லை. தன் கொள்கையில் உறுதியாய் நின்றார். அவர் எண்ணமும் உறுதியும்  போலவே அவருக்கு சிறப்பான வாழ்வை அல்லாஹ் அமைத்துக்கொடுத்தான்.  இன்று அவர் ஓர் ராஜ்ஜியத்தின் ராணி. அவரை அல்லாஹ் கண்ணியபடுத்தினான். சகோதரியைப்  புரிந்துகொள்ளகூடிய முஸ்லிமான சேக்தாவூத் அவர்களை கரம்பிடித்தார். அவர் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொதுமேலாளராக உள்ளார். ஆரம்பத்தில் வெறுத்த குடும்பத்தினர், தன் மகள் சமூகத்தில் கண்ணியத்துடனும், பேரும் புகழுடனும்  நடத்தப்படுவதைப் பார்த்து,கோபம் மறந்து சமாதானமாயினர்.  சகோதரி சுமையா தன் தாயைப் பற்றி பகிர்ந்த போது , அல்லாஹ் அவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும் என அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். அவரின் ஏக்கம் புரிந்தது. சுவனத்தின் வாசனையைத் தன் தாய்க்கும் கிடைக்க எந்த ஒரு மகளும் விரும்பத்தானே செய்வார். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்** வழங்க துஆ செய்வோம். 

பழைய நினைவுகளில் இருந்து மீண்டபோது சகோதரி சொன்ன வார்த்தை வாயடைக்கச்செய்தது. “யாரைப் பார்த்து இஸ்லாமிய சூழலை விரும்பினேனோ அதே மக்கள் ஷிர்க்கில் இருப்பது நினைத்து வேதனையாக உள்ளது.”. அனைவரையும் நேர்வழிபடுத்த அல்லாஹ் போதுமானவன். சுமையா-சேக்தாவூத் தம்பதியினருக்கு இரு குழந்தைச் செல்வங்களை அல்லாஹ் அருளினான். மூத்தவர்  சென்னை ராமசந்திராவில் MBBS படிக்கிறார், இளையவர்  டெல்லியில்  I.I.T ல் படிக்கிறார். 

இஸ்லாம் என்னைக் கட்டுப்படுத்துகிறதா?

இந்துவாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள். ஆக இரண்டு சூழலுக்கும் இடையேயான நிலைமை உங்களால் உணர முடியும். இஸ்லாம் என்ற கட்டுபாடு உங்கள் அறிவுக்கு எல்லை விதிப்பதாக நினைத்ததுண்டா? என்று வினவினோம். ”நிச்சயமாக எந்த எல்லையையும் விதித்ததில்லை. மார்க்கத்தின் வழிமுறைகள் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் அவன் கடமை என்ன என்றும் சீரான முறையில் கோடிட்டு காட்டியுள்ளது. இஸ்லாம் என்ற வழிமுறை சிறப்பாக வாழ வழி வகுத்துத்தரும் மார்க்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படும் முஸ்லிம்கள் இஸ்லாம் என்ற கட்டுபாட்டை சுமையாக நினைக்கமாட்டார்கள். முன்பை விட இஸ்லாம் எனக்கு மிகச் சிறப்பான சுதந்திரத்தைத் தந்துள்ளதை என் நடைமுறைகளிலிருந்தே உணர்கிறேன்” என தீர்க்கமாகப் பதிலளித்தார். 

”இஸ்லாம் தான்  என் தனிதன்மை...  ஹிஜாப் தான் என் அடையாளம்... தொழுகை     என் உரிமை, இவற்றை  இழக்க எப்போதும் நான் தயாராக இருப்பதில்லை.  என்னால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் என் உரிமையை விட்டு கொடுக்க முடியாது,  தொழுகை என் பணிகளை குறிக்கிடுமே தவிர என்றுமே அலுவல் பணிகள் என் தொழுகையில் குறுக்கிட விடமாட்டேன். இதில் எவ்வித விட்டுக்கொடுத்தலும் கிடையாது” எனவும் விளக்கினார்.

தாசிம்பீவி கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத்

மேற்கொள்ளும் ஆய்வுகள்:

சகோதரி சுமையாவின்  துறை உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆகும். அதில் படித்து, பட்டம் பெற்று வேலைக்கு சேர்ந்து சம்பளம் வாங்கிகொண்டிருப்பது மட்டுமே தன் படிப்பின் நோக்கம் அல்ல என்ற உறுதியுடன் இருந்தவர், அத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள விரும்பினார். இன்று நடைபாதை கடைகளில் உணவு உண்ணும் கலாச்சாரம் அதிகமாகப் பரவிவிட்டது. யாத்ரீகர்கள், பயணிகள், மக்கள் அதிகம் வரக்கூடிய இடங்களான மதுரை, ராமேஷ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுமார் சுமார் 400 உணவு தயாரிப்பாளர்களை சந்தித்து அவர்கள் தயாரித்து அதில் 200 தயாரிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள்  விற்கும் உணவுகளை ஆராய்ந்து ஆய்வு கட்டுரை சமர்பித்தார். இந்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வுடன் நில்லாமல் மதுரையில் 50 உணவு தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி எவ்வாறெல்லாம் சுத்தமான மற்றும் ஆரோக்யமான உணவுகளைத் தர வேண்டும் என்பது குறித்தும்  HACCP வழிமுறைகளை பற்றியும் பயிற்சி அளித்தார்.  அரசு சார்ந்த கூட்டமைப்பாக இதனைக் கொண்டு வந்தால் தான் சுகாதாரத்தைக் கடைபிடிக்க முடியும் என்ற தீர்வையும் முன்வைத்தார்.  

அதுமட்டுமா? கடற்பாசிகளைக் கொண்டு ஆராய்ச்சி நடத்துகிறார். இராமநாதபுர மாவட்ட கடல்களில் எளிதாய் கிடைக்கும் கடற்பாசி குறித்தான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை. 198 வகையான கடற்பாசி இனங்கள் கல்ப் ஆஃப் மன்னாரில் மட்டும் உள்ளது. சைனா,  ஜப்பான் போன்ற நாடுகளில் பதப்படுத்தி உணவுகளில் அதிகமாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். சாலையோரக் கடைகளிலும் கூட கடற்பாசி கொண்டு தயாரிக்கப்படும் சாசேஜ் வகைகள் அதிகம் விற்கபடுகின்றன. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு மைக்ரோ நியூட்ரிஷன் டெபிசியன்சி தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. கடற்பாசியில் அதிகபடியான தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நிச்சயம் கடற்பாசி அதற்கு தீர்வாக அமையும். இது குறித்து தொடர்ந்து ஆறு வருடங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இன்னும் 4 வருடங்களுக்குள் கடற்பாசிகளைக் கடற்கரைகளில் வளர்க்கவும், பதப்படுத்துவதற்குமான தொழில்நுட்பம் இராமநாதபுர மாவட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்றும் உந்துதலுடன் முயற்சித்து கொண்டிகிருக்கிறார். அவரின் முயற்சியால் கடற்பாசி கொண்டு சாக்லேட் தயாரித்து PATENTற்கும் பதிவு செய்ய IPRற்கும் அனுப்பப்பட்டுள்ளது. மாஷா அல்லாஹ். வாழ்த்துகள் சகோதரி.

இந்தியாவில் இயற்கையாக விளையக் கூடிய தாவரங்கள், மூலிகைகள் விஷயங்கள்  நமக்குத் தெரியாமலேயே உள்ளது. அவையெல்லாம் ஆராய்ந்து அவற்றை கொண்டு புட் ப்ராடெக்ட் டெவலப்மெண்ட் பண்ண வேண்டும், மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்பது சகோதரியின் ஆவல். அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.   இந்திய நாட்டில் கிடைக்கும் வளங்களை கொண்டு குழந்தைகளுக்கான மைக்ரோ நியூட்ரியன்ட் டெபிசியன்சியை கட்டுபடுத்தவும்,  ஒழிக்கவும் தேவையான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார். 

இப்படி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் நீங்கள் என்றாவது ”சராசரி பெண்ணாய் நாமும் இருந்திருக்கலாமே” என  நினைத்ததுண்டா ? என கேட்டோம், “நான் என்றுமே அப்படிபட்ட எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. இறைவன் கொடுத்த அல் ஹிக்மாவை நாம் வீணாக்கியும் சரியான முறையில் அதை உபயோகப்படுத்தாமலும்  இருந்தால் இறைவன் நம்மை மறுமையில் நிச்சயமாக கேள்விக்கணக்கு கேட்பான். ஆக எந்த இக்கட்டான சூழ்நிலை வந்த போதும் அனைத்தையும் தூக்கிவிட்டு முடங்கி கிடக்க ஒருபோதும் நான் விரும்பியது கிடையாது” என்ற பதிலில் இஸ்லாமியக் கோட்பாடுகளுடனான சமுதாய சிந்தனையும் கலந்துவந்தது. 

ஆற்றிவரும் சமூகப்பணிகள்:

2000 ஆம் ஆண்டில் சீதக்காதி  தன்னார்வ தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டு அதனைத் தமிழக அரசின் தமிழ்நாடு விமன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் கீழ் பதிவு செய்து அதன் மூலம் உதவிகள் செய்து வருகிறார். தற்சமயம் சீதக்காதி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஆபிசராக உள்ளார். இதன் மூலம் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து வட்டியில்லா கடன் மூலம் சமூகத்தில் புறக்கணிக்கபட்ட பெண்களின் மறுமலர்ச்சிக்கு உதவி வருகிறார். பலவிதத் திறன் நோக்கு பயிற்சிகளை வழங்கி, பெண்களிடையே தைரியத்தை விதைத்து அவர்களை தொழில்முனைவோராக மாற்றி வருகிறார் .

இவ்வளவு கேட்டுவிட்டு இஸ்லாமியப் பெண்மணி பற்றி கேட்காமல் இருக்க முடியுமா? கேட்டே விட்டோம். ”நீங்கள் தொடர்புகொள்ளும் முன்பே நான் சில முறை தளத்தை பார்த்துள்ளேன்.  பல இஸ்லாமிய பெண்கள் இத்தளத்தில் பங்காற்றி கருத்துக்கள் பகிர்ந்து வருவதை கவனித்தேன். சிறப்பான முறையில் இத்தளம் வளர்வதாக உணர்கிறேன்.  சிறப்பாக இதனை நடத்திகொண்டிருக்கிறீர்கள். இதை மேலும் முன்னெடுத்துச் செல்வது மற்ற இஸ்லாமிய பெண்ளுக்கும் நன்மை பயக்கும் விஷயமாகவும்  வரப்பிரசாதமாக அமையும் என நம்புகிறேன்” என்றார். பல லிட்டர் சாத்துகுடி ஜூஸ் குடித்த  தெம்பு இப்போது. அவரின் முன்னேற்றத்திற்கும், இன்னும் பல சாதனைகள் படைத்து நம் சமூக்கத்திற்கு பயன்தருவதற்கும், இம்மை மறுமை  வெற்றிக்கும் கட்டாயம் துஆ செய்யுங்கள் சகோதர சகோதரிகளே!

*லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரிய இறைவன், அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை

** ஹிதாயத் - நேர்வழி

1 Responses So Far:

sabeer.abushahruk said...

வாய்த்த வழியைவிட்டு விலகி
மாற்றுவழியை ஏற்று - அதில்
தோற்றுவிடாது பயணிக்கும்
சகோதரி அவர்களின்
பயணம்
ஒரு பாடம்

மாஷா அல்லாஹ்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு