படிக்கட்டுகள் - 13

பொதுவாக ஒருவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தவன் என்று ஒரு அளவுகோல் இருக்கும்போது அதை அவன் வைத்திருக்கும் 'பணம்' மட்டுமே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த தவறான அனுகுமுறை என்றால் 'பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம்' எனும் பொதுவான கருத்துதான்.

ஆனால் அந்த பணம் படைத்தவர்களின் மனதை ஆய்வு செய்யும் திறமை நம்மிடம் இருந்தால் நமது கருத்து சரியா தவறா என தெரிந்துவிடும் அப்படி என்றால் பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை என்ற இன்னொரு இலவச இணைப்பான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அது பொறுப்புகளை சுமக்க தயங்குபவர்கள் கண்டுபிடித்த ஃபார்முலா. வாழ்க்கையில் ஒன்றும் சாதிக்காமல் பக்கத்தில் உள்ள தஞ்சாவூர் போய் வந்தால் கூட வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதும் வாங்கி வராமல் வீட்டுக்கு வந்து "பணமா முக்கியம்..நான் மட்டும் வசதியானவனாய் இருந்தால் ஏழைகளை படிக்க வைப்பேன், ஊருக்கு உழைப்பேன், அநாதை ஆசிரமம் கட்டுவேன், முதியோர்களை அரவணைப்பேன்' என்று அசோக சக்ரவர்த்திமாதிரி பீத்தும் எந்த நடிகர்களையும் இப்போது கின்டர்கார்டன் படிக்கும் பிள்ளைகள் கூட 'என்னா சீன் போடுரான்யா" என கமென்ட் அடித்துவிடும்.

இப்போது கையில் இருக்கும் 50 ரூபாயில் உன்னால் / உங்களால் என்ன தர்மம் செய்ய முடியும் என்பதை செயலில் காட்ட முடிந்தவர்கள்தான் தொடர்ந்து தர்மம் செய்பவர்களாக இருக்கிறார்கள். தர்மத்துக்கும் மனதுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறது. ஒரு கோடி கையில் கிடைத்து விட்டால் தர்மம் செய்யும் மனம் வந்துவிடும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இருப்பினும் மனிதன் ஒரு சில விசயங்களில் மட்டும் வெற்றியடைந்தவனாய் பார்ப்பது "பார்வையில் கோளாறு' . இதை சரி செய்யத்தான் “WHOLE PERSON CONCEPT” என்ற ஒரு விசயம் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு மனிதன் வெற்றியாளன் தானா இல்லை வெற்றியாளன் மாதிரி முகமூடி அனிந்தவனா என யார் தீர்மானிப்பது.... நீங்கள்தான்.... யாரை?... உங்களை 'மட்டும்'தான்.  மற்றவனை சரி செய்ய அவனுக்கு தெரியும்... முதலில் நாம் நம்மை பார்ப்போம்

WHOLE PERSON CONCEPT


      1.   Health.
உடல் ஆரோக்கியத்தை பேனுவதென்பது வயதான பிறகு உள்ள விசயம் என்ற தவறை இன்னும் இந்த நவீன உலகம் செய்து கொண்டிருக்கிறது.  குதிரைக்கு கண் கட்டிய மாதிரி பணம் மட்டுமே / வேலை மட்டுமே / விசுவாசம் மட்டுமே என ஒடும் வாழ்க்கையில் தடுக்கி விழுந்தபோது தேடும்போது கிடைக்காத செல்வம் 'உடல் நலம்'.

தள்ளிப்போட்டு பார்த்துக்கொள்ள இது ஒன்றும் அரியர்ஸ் அல்ல. 'அரியது"..இறைவன் கொடுத்த வரத்துக்கு சில மரியாதைகள் இருக்கிறது. மரியாதை இல்லாமல் போகும்போது அது மாயமாய்த்தான் போய்விடும்.உடல் மீது கவனம் செலுத்தாமல் எதிர்காலத்திட்டம் தீட்டுவது அவ்வளவு ஏற்புடையது அல்ல.

உங்கல் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         2.   Family
ஒரு மனிதன் வெற்றியடைய ஒடிக்கொண்டிருக்கிறான் என்றால் குடும்ப வாழ்க்கை சரியாக அமைய வேண்டும். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாமல் ஒரு மனிதன் வெற்றியடைய முயற்ச்சி எடுப்பது என்பது 'தினம் தினம் எதிர்நீச்சல்". இதில் பெண்களின் பங்கு மிக முக்கியம். தோல்விகளில் ஆதரவாகவும், வெற்றியடையும்போது நிதானத்தையும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதையும் கற்பிக்கும் ஆசானாக இருக்கும் வீட்டுப்பெண்கள் இருக்கும் வரை ஆண்களால் எந்த சவால்களையும் சமாளிக்க முடியும். இப்போதைய கால கட்டத்தில் பொருள்களை தேடி அலையும் இந்த "நவீன பசி"யில் பெண்களிடம் நான் காணும் ஒரு விசயம் கல்யாணம் ஆன பிறகும் தனது தகப்பனின் மகளாக இருக்கும் கதாபாத்திரத்தை விட்டு தனது கணவனின் மனைவியாக வாழும் கதாபாத்திரத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ள அதிக காலம் எடுத்துக் கொள்கிறார்கள். இது நிச்சயம் மாற வேண்டும். மற்றும் சிலர் கணவனுடன்  ஷாப்பிங் போகும்போது கணவனை ஒரு மொபைல் ஏ.டி.எம் மெசின் மாதிரி நடத்துவதை தவிற்க வேண்டும்.

ஆண்கள் 'சம்பாதிக்கிறேன்" என்ற ஒரே காரணத்துக்காக பெண்களை அடிமைபோல் நடத்திவிட்டு அதற்கு தேவையில்லாமல் ஞானி மாதிரி பேசுவதை தவிர்க்க வேண்டும். கல்யாணம் செய்து பல வருடங்கள் ஆன பிறகு சில ஆண்கள் "வெருமனே" மனைவியை குறை சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, இத்தனை நாட்கள் அன்பை வளர்க்காமல் எப்படி குறைகாண மட்டும் தெரிந்து கொண்டார்கள் என்பது ஆச்சர்யம். கல்யாணம் செய்த ஆரம்ப காலத்தில் கணவனின் பல முட்டாள் தனங்களையும், பிடிவாதங்களையும், வறுமையையும் தாங்கிக்கொண்ட மனைவியை சில ஆண்கள் வசதி வந்த பிறகு ' அவளுக்கு அவ்வளவு இன்டலக்சுவல் இல்லை" என்று சொல்லும்போது... இப்போ ஒரு ஃபிளாஷ் பேக் போட்டால் தேவலாம் என தோனும்.


உங்கள் குடும்பத்தில் நீங்கள் மதிக்கப்படுமளவுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்?


.. நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

          3. Education
அதான் பள்ளிக்கூடம் எல்லாம் போயிட்டுதானே இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம் என சொல்லவேண்டாம். "கல்வி என்பது சர்டிபிகேட்டுக்குள் அடங்கும் சர்ப்பம் அல்ல' என்று எழுதினால் இவன்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டான்யா என கமென்ட் எழுதக்கூடும் என்பதால் கல்வி என்பது கருவறை தொடங்கி கல்லரை வரை என்ற அந்த ஓல்டு வார்த்தையை எழுதுகிறேன். நாம் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்றால் நாம் 'முடிந்து" விட்டோம் என்று அர்த்தம்.


ஒவ்வொரு நாளும் உங்கள் துறைசார்ந்த விசயங்களை உங்கள் முன்னேற்றம் சார்ந்த விசயங்களை எந்த அளவு படிக்கிறீர்களோ அந்த அளவு முன்னேறலாம். சிலர் வாசிப்பதை தவறாக புரிந்திருக்கிறார்கள். பரபரப்புக்காக எழுதப்படும் 'தொடர் கொலைகள்- பாலியல் குற்றங்கள்" போன்ற விசயங்கள் நீங்கள் ஃபாரன்சிக் , போலீஸ், இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம்' சார்ந்து இருந்தால் பிரயோஜனப்படும்இல்லாவிட்டால் நீங்கள் மேகசினுக்கு கொடுத்த காசு பப்ளிசருக்கு பயன்படும்..அம்புடுதேன்.


நீங்கள் எவ்வளவு நேரம் உங்களை உயர்த்திக்கொள்ளும் கல்வியில் நேரம் செலவளிக்கிறீர்கள்.


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

         4.   Career.
நீங்கள் தேர்ந்தெடுத்த வேலை , படிப்பு , தொழில் உங்களுக்கு மனதிருப்தியை தருகிறதா இல்லாவிட்டால் எங்கு நாம் தவறு செய்திருக்கிறோம் என்று எப்போதாவது ஒரு அரைமணி நேரம் அதற்காக ஒதுக்கி உட்கார்ந்து யோசித்திருக்கிறீர்களா... எதிலும் செக்கு மாட்டுத்தனமா இருந்து விட்டால் உழவுக்கு பயன்படாமல் போய்விடலாம் எனும் படிக்காத மேதைகள் சொன்னது இப்போதும் என் காதில் விழுகிறது.


நீங்கள் பணம் சம்பாதிக்கும் தொழில் / துறை உங்களை முன்னேற்ற உதவ வேண்டும்.... முன்னேற்றியதா?... முன்னேற்றாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். 

5.Service [to Society]
உங்களின் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் ஒரு வெறுமை நிலை நிச்சயம் உருவாகும். ஒருவன் சரியான மனிதம் கற்றிருந்தால் எல்லைகளை மீறிய அன்பு அவன் மனதுக்குள் குடியிருக்கும். மற்றவர்களின் சோகத்தை கேட்கும்போது அழாத கண் இருந்தும் பயனில்லை. தன்னால் முடிந்தால் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. ரோட்டில் கிடக்கும் கருவேல முட்கிளையை எடுத்துப்போட உடல் தெம்பு இருந்தும் பஞ்சாயத்து போர்டை வையும் சமுதாயத்தால் சமுதாயத்துக்கு பயனில்லை.
 
சேவை செய்பவர்களைப்பற்றி ' அவனைப்பார்... இவனைப்பார்.. எவ்வளவு அள்ளிக் கொடுத்திருக்கிறான். எவ்வளவு சேவை செய்திருக்கிறான் என்று மற்றவனை உதாரணம் காட்ட பிறந்தவர்களா நீங்கள்?. அப்படி உதாரணம் மட்டும் காண்பிப்பவராக இருந்தால் உங்கள் தாய் உங்கள் எதிர்காலத்துக்காக கண்ட கனவுக்கு என்னதான் மதிப்பு?.


இன்று உங்களை சுற்றியுள்ள சமுதாயத்துக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?


நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

6. Financial
கடனில்லாத வாழ்க்கையும், வரும் வருமானத்தை செலவு செய்யும்போது உங்கள் உள் மனதுக்குள் உறுத்தல் இல்லாத ஒரு மனநிலையும் இருந்து விட்டாலே சரியான ட்ராக்கில் இருக்கிறீர்கள் என்பது என் கருத்து.


மற்றவர்களைப்போல் இல்லையே என்று புலம்பாமல் போன வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உங்களின் வருமானம் எந்த அளவு உயர்ந்திருக்கிறது என்று நீங்களே உங்களுக்கு ஒரு செக்கிங் வைத்துக் கொண்டால் நலம். போட்டி உங்களுடன் தான் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்றவனின் வாழ்க்கையை நீங்கள் வாழ பார்க்காதீர்கள். அது நிச்சயம் முடியாது.

ஒருக்கால் உங்கள் வருமானம் குறைவாக இருந்தால் அதற்காக என்ன செய்யலாம்?


நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.


7. Spiritual
இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இறைவனின் கருணையில்லாமல் அவனது உதவியில்லாமல் எதுவும் தன்னால் நடந்து விடாது. காலையில் விழித்ததிலிருந்து அந்த ஏக இறைவனிடம் கையேந்திப்பாருங்கள்... அவன் உங்களின் தாயின் அன்பை மிஞ்சியவன். இறைவன் இல்லை என்று சொல்பவர்களையும் தன் அன்பால் வழிநடத்திச் செல்லும் இறைவனை வணங்குவதில் உள்ள சந்தோசம் அவனிடம் பிச்சை கேட்கும் சந்தோசம் எந்த உலக சந்தோசமும் தந்துவிடாது. [ இது பற்றி ஒரு எபிஸோட் எழுத வேண்டும் என்பது என் ஆசை] 

இன்று உங்களைப்படைத்த கருணைமிகு இறைவனை எத்தனை முறை நினைத்தீர்கள்? அப்படி நினைக்க எது தடையாக உங்களின் அன்றாட வாழ்க்கை "உண்மைநிலை"யை உணராமல் செய்திருக்கிறது. 


நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விசயங்களான 7ம் வாழ்க்கைக்கு முக்கியம்.இந்த 7 முக்கியமான விசயங்களும் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையில் வாழ்வது மிக மிக எளிதானது. மறுபடியும் சொல்கிறேன் நான் முஸ்லீமாக பிறந்ததனால் இதை எழுதவில்லை. [தயவு செய்து மாற்று மத சகோதரர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது] . எந்த சூழ்நிலையிலும் தனிமனிதனின் கெளரவம் காக்கப்படும் வாழ்க்கையை இஸ்லாம் சொல்லியிருக்கிறது என்றுதான் சொல்கிறேன். 

இந்த 7 தலைப்புகளும் ஒரு மனிதனுக்கு சரியான முறையில் அமைய / அமைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று , இரண்டு மட்டும் கூடுதலாக இருந்து மற்றது குறைவாக இருந்தால் ....மன்னிக்கவும் ...உங்களை உடன் மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.

முடிவெடுப்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை we will see in next episode.

ZAKIR HUSSAIN

6 கருத்துகள்

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Zakir Hussain,

Excellent life saving points to ponder.

As per my opinion, I would like to assign ranks as below.

1. Family, Education, Spirituality and Health - All related to personal development gives the deeper base.

2. Service to humanity: I think it is the ultimate goal of any business or work we render to fellow human being is the foundation for our richness.

3. Career and financials: It is the result of the above 2 bases fetch the great career and financial independence inherently.

Thanks and best regards

B.Ahamed Ameen from Dubai.

ZAKIR HUSSAIN சொன்னது…

Thanx brother B.Ahamed Ameen,

I do agree with your words. As far health is concern it must be a good base to lead the successful life.

Since you highlights some thing good, we request your good self to write some article based on personal development or any headings you like .

Thanx once again

அப்துல்மாலிக் சொன்னது…

ஜஸ்ட் படிச்சிட்டு போகக்கூடிய பதிவு இல்லை இது.. பாதுகாத்து சந்ததிகளுக்கு பாடமாக சொல்லிக்கொடுக்கக்கூடிய பொக்கிஷம்..

sabeer.abushahruk சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…

I double Abdul Malick