நேபாளம்
நிலநடுக்கத்தால்
குலைநடுங்கிப் போய்விட்டது
இமயமலையின் மடியில்
தவழ்ந்திருந்த தேசம்
இயற்கையின் அடியால்
தகர்ந்து மட்டுமல்ல
எட்டடி
நகர்ந்தும் போய்விட்டது
கட்டடங்கள் உருக்குலைந்து
வெற்றிடங்களாய்ப் போக
வெறித்துப் பார்த்தவண்ணம்
நேபாளிகள்
காண்பவர் கண்களோ
கசிகின்றன
சொந்தங்களை இழந்தும்
பந்தங்களைப் பிரிந்தும்
சிதைக்கப்பட்ட சமூகமாய்
புதையுண்டது நேபாளம்
தலைநகரின் கலைநயத்தை
அதிர்வலைகள்
சிதறடித்துவிட்டன
இடிபாடுகளிலிருந்து
உடலங்கங்கள்
சடலங்களாய் மீட்கப்படுகின்றன
கணக்கெடுக்குப் பின்னர்
மீண்டும் புதைக்கவோ
மீந்ததை எரிக்கவோ
வரம்புமீறிய
வன்முறைக் காட்சிகளை
வாரித்தந்து வரும் ஊடகங்களால்
மரத்துப்போன மனம்கூட
கனத்துப் போகிறது - நேபாள
இனத்துப்
பேரழிவைக் கண்டு
ஆன்மீகம் இதை
ஆண்டவனின் கோபப்பார்வை என்றும்
விஞ்ஞானம்
பாறைகளின் இடப்பெயர்ச்சி என்றும்
காரணம் தேடினாலும்
எஞ்சிய சொந்தங்களுக்கு
இது
பெரும் ரணமே!
வலியோடான வாழ்க்கையில்
நிலநடுக்கத்தைவிட கொடுமையான
மனநடுக்கம் தினமிருக்கும்
அடுத்த நொடியைக்கூட
அனுமானிக்கத்
திராணியற்ற மானுடம்
இருந்த இடம் தெரியாமல்
இடிந்தழிந்து போகுமுன்
அடுத்த வாழ்விடத்திற்காக
ஆகுமானதை
எண்ணியும் நடத்தியும் வாழ்தலே
எந்தப் பேரிடருக்கும்
ஈடு கொடுக்கும் ஏற்பாடு!
இறைவன்
நேபாளத்தையும்
மிஞ்சிய
பூலோகத்தையும் காப்பானாக
ஆமீன்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
3 Responses So Far:
ஆமீன்
நேபாள நிலநடுக்கம் .. நீங்காத பெரும்துக்கம்.. மாண்டோர்கள் ஏராளம்.. மனம் கனக்கிறது பரிதாபம் .. மீண்டோர்கள் மீண்டும்வாழ .. வாரிவழங்குது இஸ்லாமிய மனிதநேயம்.. இதை உணரா மனிதனுக்கு ..இதுஒரு இறைப்பாடம்
ஆமாம் காக்கா குலைநடுங்க வைத்த நில நடுக்கம்தான்...மலைகள் பஞ்சாக பறக்கும் என்பதற்க்கு சான்றாக அமைந்தது இந்த நடுக்கம்....யாஅல்லாஹ் அனைத்து மக்களையும் காப்பாயாக ஆமீன்
Post a Comment