::::: தொடர் - 23 :::::
பெருமானாரின் திருவாழ்வில் இவ்விரு தன்மைகள் எவ்வளவு பேரிடத்தைப் பெற்றிருந்தன என்பது பற்றிய விவரங்களை இனி நாம் பார்க்கப் போகின்றோம்.
வெற்றி வீரராக மக்காவிற்குள் நுழைந்த அவர்களிடத்தில், இக்காலத்தில் வெற்றி பெற்றவர்களிடத்தில் வழக்கமாக இருக்கும் வெறித்தனம் இருக்கவில்லை! மாறாக, மக்கத்துக் கஅபாவினுள் பணிவுடனும் அடக்கத்துடனும், தலை குனிந்தவர்களாக, அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக, நபியவர்கள் நுழைந்தார்கள்! இதயம் நிறைந்த இரக்க உணர்வு அவர்களிடம் நிறையவே இருந்தது.
நபித்துவத்திற்குப் பின் அவர்கள் மக்காவில் வாழ்ந்த பதின்மூன்று ஆண்டுகளில் அவர்கள் நுகர்ந்த துன்பத்திற்கும் ஏச்சுப் பேச்சுக்கும் ஈடு கொடுக்க முடியாத நிலையில், தோழர்களையும் தம்மையும் துன்பத்திற்கு ஆளாக்கிய எதிரித் தலைவர்களின் கண் முன்னால், அன்புத் தோழர்கள் பலர் அவர்களால் கொலையும் செய்யப்பட்டதற்காகப் பழிக்குப்பழி என்ற நிலைபாட்டுக்கே இடங்கொடுக்காமல், மன்னிப்பின் மாண்பை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ, அந்தத் தலைவர்களுக்குப் புரியவைக்கும் விதமாக, கஅபாவினுள் நுழைந்தார்கள்!
மறு பக்கம் இறைத்தூதரின் இதயம் கனக்கத்தான் செய்தது! தம்மை மிகவும் நேசித்த பெரிய தந்தை அபூதாலிப், தமக்குப் பக்கத் துணையாக இருந்த மனைவி கதீஜா, அருமை மகள் ஜைனபு ஆகியோரின் இறப்புக்குக் காரணமாக இருந்த மக்கத்துக் குறைஷிகள், இப்போது மாநபியின் மன்னிப்பை எதிர்பார்த்தவர்களாக, என்ன நடக்குமோ என்ற எண்ணத்தில், அடங்கி ஒடுங்கி, கூனிக் குறுகி நின்றார்கள்.
என்ன செய்தார்கள் ஏந்தல் நபியவர்கள்? அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மன்னித்தார்கள்! பழிக்குப் பழி வாங்குதல் கிடையாது; எல்லோருக்கும் பொது மன்னிப்புண்டு என்பதை வெளிப்படையாகவே அறிவித்தார்கள்! அரபுச் சமுதாயத்தில் பரம்பரை பரம்பரையாக நிலவிய கொள்ளையடித்தல், ஆடவர்களைக் கொலை செய்தல், பெண்களையும் பிள்ளைகளையும் கைது செய்து அடிமைகளாக்குதல் முதலான பழி வாங்குதல்கள் அனைத்தையும் தாண்டி, பொது மன்னிப்பு என்று அறிவிக்க, அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு எத்துணைப் பெரிய இதயம் இருந்திருக்கவேண்டும்!
மக்கத்துக் குறைஷிகளால் தம் கண்களையும் காதுகளையும் நம்பவே முடியவில்லை! முஸ்லிம் படை வீரர்கள் தம் வீடுகளில் புகுந்து, தம்மையும் தம் மனைவி மக்களையும் கொலை செய்தும், தம் உடைமைகளைக் கொள்ளையடித்தும் பழி தீர்ப்பர் என்ற எதிர்பார்ப்பில், அவர்களுள் சிலர் தம் வீடுகளில் புகுந்து தாழிட்டுக்கொண்டார்கள். அந்த மக்களுக்கும் நபியவர்களின் நற்செய்தி போய்ச் சேர்ந்தது. தாம் எதிர்பார்த்தபடி, மக்காவை வெற்றி கொண்ட முஸ்லிம் போர் வீரர்கள் பழி தீர்ப்புச் செயல்களில் ஈடுபடாமல், தம் படைத் தளபதியான பெருமானாருக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, அமைதி காத்தார்கள்!
இஸ்லாத்திற்கு எதிரான ஈனச் செயல்களை ஈவிரக்கமின்றிச் செய்தவர்களுள், குறைஷித் தலைவரான அபூ சுஃப்யானின் மனைவியான ஹிந்த் பின்த் உத்பா என்ற பெண் ஒருவர். பத்ருக் களத்தில் தன் தந்தை உத்பாவைக் கொலை செய்த ஹம்ஸாவைப் பழிக்குப் பழி தீர்க்கவேண்டும் என்று சூளுரைத்துகொண்டு, ஹிந்த் உஹதுப் போருக்கு வந்திருந்தாள். வஹ்ஷி என்ற அடிமையைத் தனது பழி தீர்ப்புக்கு ஒப்பந்தம் செய்து வைத்திருந்தாள். அந்த வேலையைச் செய்தால், வஹ்ஷி அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார் என்றும் ஒப்பந்தம் செய்திருந்தாள். வஹ்ஷியும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் செய்து, ஹம்ஸாவின் உயிரற்ற உடலை அப்பெண்ணுக்குக் காட்டிக் கொடுத்தார். அதையடுத்து, ஹிந்த் ஓடோடிச் சென்று, அவ்வுடலைக் கீறிக் கிழித்து, ஹம்ஸாவின் ஈரலைக் கடித்துக் குதறித் துப்பினாள்!
அந்தப் பெண்ணும் இப்போது தன் வீட்டின் உள்ளே புகுந்து, தாழ்ப்பாள் இட்டுக்கொண்டாள். நபியவர்களின் மக்கா வெற்றியைத் தொடர்ந்து, தன்னைப் போன்ற தரம் தாழ்ந்தவர்களின் உயிருக்கு அபாயம் உண்டு என்று எதிர்பார்த்து அடைந்து கிடந்தாள். ஆனால், வெளியிலிருந்து வந்த செய்திகளோ, வேறு விதமாக இருந்தன! அதனால், அவளும் தன் வீட்டை விட்டு வெளியில் வந்து, மக்கள் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதைக் கேட்டு, அதன் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு விரும்பினாள்.
கஅபாவுக்கு விரைந்து சென்றாள். அங்கே அவள் கண்ட காட்சி, தன் கண்களையும் காதுகளையும் தன்னால் நம்ப முடியாதவாறு இருந்தது இறைத்தூதரும் தோழர்களும் கஅபாவில் தொழுதுகொண்டும், அல்லாஹ்விடம் இறைஞ்சிக்கொண்டும் இருந்தனர்! முஸ்லிம்கள் தமக்குக் கிடைத்த வெற்றியானது, இறைவனின் புறத்திலிருந்து கிடைத்த வெற்றியாகும் என்ற உண்மையை உள்வாங்கி, தமக்கு வெற்றியைத் தந்த அந்த இறைவனுக்குத் தம் இதயத்தால் நன்றியைச் செலுத்திக்கொண்டிருந்தனர்!
உலக வரலாற்றில், நாம் காணும் வெற்றிப் படையினர் செய்யும் வெறித்தனத்தை அவர்கள் காட்டவில்லை! அவர்கள் வெற்றி வீரர்களாக இருந்ததால், தம் எதிரிகளான மக்கத்துக் குறைஷியர் மீது பழிக்குப்பழி வாங்கி, ஆறுதல் அடைந்திருக்கலாம் அல்லவா? அதனைத் தேர்ந்திருக்கவில்லை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் திருக் கூட்டமும். அவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் எதிர்கொண்டிருந்த பெரும் பொறுப்பு இன்னொன்றும் இருந்தது. அது, அந்த இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த தூதுச் செய்தியை, மக்கா முழுவதற்கும் – அதற்கு அப்பால் உள்ள உலகம் முழுவதற்கும் – அறிவிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு!
உடலாலும் உள்ளத்தாலும் தமக்குத் தீங்கிழைத்த குறைஷிகளை மொத்தமாக மன்னித்ததன் மூலம், முழு உலகிற்கும் தமது மன்னிப்பின் மாண்பை அறிவித்தார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள்! அதன் விளைவாக, இஸ்லாம் வழங்கிய மன்னிப்பின் மாண்பை உலகறியச் செய்தது! தாம் இழைத்த கொடுமைகளுக்குப் பகரமாகப் பொது மன்னிப்பைப் பெற்றது கொண்டு, நற்சிந்தனை மூலம் மக்கத்து மக்கள் அந்த நபிக்கு நன்றிக் கடன் பட்டவர்களாகி, அந்த நபிக்குச் சேவை செய்யும் சேவகர்களாக மாறினார்கள்!
இஸ்லாமியத் தலைமைத்துவம் தனது சுய விருப்பத்துக்கு முதலிடம் கொடுக்காமல், பொது நன்மைக்கே முதலிடம் கொடுக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வைக்கும் என்ற செய்தியைப் பறை சாற்றிற்று. அந்தத் தலைமை நடந்துகொண்ட விதத்தால், அதற்குக் கட்டுப்பட்ட சமுதாயம் நன்குணர்ந்து, அரிய முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் என்ற உண்மைச் செய்தியை உலகிற்கு அறிவித்தது. அதன் விளைவு, உண்மைக்கு வெற்றி! இந்த வெற்றியின் காரணம், மாபெரும் மனிதரான நபியவர்கள் வழங்கிய மன்னிப்பேயாகும்.
கொண்ட கொள்கை பெரிதா? அல்லது, தலைவரின் தனிக் கருத்தா? என்ற கேள்வி எழும்போது, கொள்கைக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நபி வரலாற்றில் பதிவாகியுள்ள நிகழ்வு, உஹதுப் போரில் கொல்லப்பட்ட ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் என்ற மாவீரரைக் கொன்ற மனிதருக்கு நபியவர்கள் வழங்கிய மன்னிப்பேயாகும்.
ஹம்ஸா, நபியவர்களின் சிறிய தந்தையும் நபிக்கு உற்ற துணைவராகவும் இருந்தவராவார். உஹதுப் போரில் உயிர் துறந்த எழுபது பேருள், இவர் ஒருவருக்குத்தான், ‘செய்யிதுஷ் ஷுஹதா’ எனும் சிறப்புப் பெயர் கொடுக்கப்பட்டது. நபித்தோழர்களுக்குப் பின்னர் வந்த ‘தாபியீன்’களுள் இருவர், ஹம்ஸாவைக் கொலை செய்தவரும், தாம் செய்த கொடுஞ்செயலை நினைத்து வருந்தித் தூய முஸ்லிமாக மாறியவருமான வஹ்ஷி அவர்களைக் காணச் சென்றார்கள். அப்போது அவர் வயது முதிர்ந்தவராக இருந்தார். அவர் ஹம்ஸாவைக் கொலை செய்த நிகழ்வைப் பற்றிக் கூறுமாறு அவ்விருவரும் கேட்டார்கள். அதையடுத்து, தான் ஹம்ஸாவைக் கொலை செய்த விதத்தை விவரிக்கத் தொடங்கினார் வஹ்ஷி:
“இதே கேள்வியை, உங்களுக்கு முன் என்னிடம் கேட்ட நபியவர்களுக்குக் கூறியது போன்று உங்களுக்கும் விவரிக்கட்டுமா? பத்ருப் போரில் முஸ்லிம் வீரர்களால் கொலை செய்யப்பட்ட துஅய்மா இப்னு உதைபா என்பவரின் மருமகனாக இருந்த ஜுபைர் பின் முத்இம் என்பவரிடம் நான் அடிமையாக இருந்தேன். கொலை பாதகர்களான குறைஷிகள் பத்ருப் போரில் தமக்குக் கிடைத்த பெருந்தோல்வியைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம்களைப் பழி தீர்க்கவேண்டும் என்ற கருத்தில் அணி திரண்டு உஹதுக்குச் சென்றபோது, ஜுபைர் என்னிடம் கூறினார்: ‘டேய்! என் மாமனான துஐமாவை பத்ரில் கொலை செய்த ஹம்ஸாவைப் பழி தீர்க்க நீ எனக்கு உதவ வேண்டும். அப்படிச் செய்தால், உனக்கு அடிமைத் தளையிலிருந்து விடுதலை தருவேன்’ என்றார். அதற்கு நான், ‘அபிசீனிய அடிமையான நான் ஈட்டி எறிவதில் வல்லவன். ஒரு குறியை நோக்கி என் ஈட்டியை எறிந்தால், அது குறி தப்பாது. உஹதுப் போர் தொடங்கிய அன்று, ஹம்ஸாவைத் தேடிப் படைப் பிரிவின் ஓர் இடத்தில் குறி வைத்துக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் என் கண் முன்னால், படை நடுவில் உடல் பருத்த ஒட்டகத்தைப் போல் திமிறிக்கொண்டு நின்ற ஹம்ஸாவைக் கண்டுவிட்டேன்! அவர் எங்கள் மக்களை ஒவ்வொருவராக வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் வந்த எந்த ஒன்றாலும் அவரைத் தடுக்க முடியவில்லை.
“என்னை யாரும் பார்க்காத விதத்தில், நான் புதர்களையும் பாறாங்கற்களையும் பயன்படுத்தி, மறைந்து மறைந்து முன்னேறினேன். நான் ஹம்ஸாவைச் சென்றடையும் முன்னர் சிபா பின் அப்துல் உஸ்ஸா என்ற ஆள் ஹம்ஸாவை நெருங்கினார். அவர் தன்னை நோக்கி வருவதை அறிந்த ஹம்ஸா, ‘வாடா கண்ணா! கத்னா செய்யும் பெண்ணின் மகனே!’ என்று குரல் கொடுத்தார். தன் கைவாளால் அவனுடைய கழுத்தைக் குறி வைத்து ஒரே வீச்சு வீசினார் ஹம்ஸா. அவரின் வாள் வீச்சுக்கு முன்னர் குறி தப்பாமல், தலை தானாகத் துண்டிக்கப்பட்டு வீழ்ந்தது!
“எனது வலிமையை எல்லாம் வெளிப்படுத்தி, ஹம்ஸாவை நோக்கி என் ஈட்டியை எறிந்தேன். அது வேகமாகச் சென்று, அவருடைய கீழ்வயிற்றுக்குள் புகுந்து, அவருடைய கால்களுக்கிடையில் வெளிவந்தது. எதிர்பாராத விதமாகத் தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலைக் கண்டு வெகுண்டுபோன ஹம்ஸா, ஈட்டி வந்த திசையை நோக்கித் திரும்பி என்னைக் கண்டுகொண்டார்! ஈட்டியைப் பிடுங்கி எறிய முயன்று, முடியாமலாகிய பின், என் பக்கம் வர முயன்று, அதிலும் தோல்வியை அடைந்து, ஹம்ஸா நெடு மரம் போல் சாய்ந்தார்! அவர் இறக்கும் வரை அவரை அந்த ஈட்டியுடனே அப்படியே விட்டுவிட்டு, என் தங்குமிடத்துக்குத் திரும்பிவிட்டேன். இந்த ஒன்றைத் தவிர வேறு பணியொன்றும் எனக்கில்லை. ஆதலால், என் விடுதலையை எதிர்பார்த்து, அங்கிருந்து திரும்பிவிட்டேன்.
“அதன் பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் சிறிய தந்தையான ஹம்ஸாவின் இறப்பைப் பற்றி அறிந்து மிகவும் கவலையில் ஆழ்ந்தார்கள். அந்த நிகழ்வு, அண்ணலார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த பெரும் கவலைக்குரிய ஒன்றாகும். அன்னார் போர்க்களத்தில் ஷஹீதாகிக் கிடந்த ஹம்ஸாவின் உடலைக் காண்பதற்காகத் தோழர் ஒருவரின் துணையுடன் சென்றார்கள். நபியவர்கள் ஹம்ஸாவின் உயிரற்ற உடலைக் கண்டபோது, அவரின் வயிறு கிழிக்கப்பட்டு, உள்ளே இருந்த உறுப்புகள் வெளியிழுக்கப்பட்டு, சின்னாபின்னமான நிலையில் கண்டார்கள்!
“சற்று முன் கண்ட நபித்தோழர் அவ்வுடலை அந்த நிலையில் கண்டிருக்கவில்லை! அவர் கண்டது, உயிரற்ற உடலைத்தான்; சிதைவுற்ற நிலையில் இல்லை என்று கூறிய அத்தோழர், அபூசுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா செய்திருந்த சபதத்தைப் பற்றி அறிந்திருந்தார். ஹம்ஸாவின் ஈரலைக் கடித்துத் துப்ப ஹிந்த் முடிவு செய்ததை அறிந்த மக்கத்து வீரர்கள்தாம் அந்த வேலையைச் செய்து அவளிடம் பாராட்டைப் பெற்றிருக்கக் கூடும் என்பதை அறிவித்தார்.
“இதன் பின், நான் எனது இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டேன். ஹம்ஸாவைத் தீர்த்துக் கட்டுவதைத்தவிர அங்கு எனக்கு வேறு பொறுப்பு ஒன்றுமில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஹம்ஸாவின் இறப்பு பற்றித் தெரிவிக்கப்பட்டவுடன், அவர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்துவிட்டார்கள். இது, அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரச் செய்திகளுள் தலையாயதாகும். ஹம்ஸாவைப் பற்றிக் கூறும்போதெல்லாம், கருணை நபியவர்கள் கண்ணீர் வடிக்கத் தவறுவதில்லை. அந்த அளவுக்கு, அதன் தாக்கம் இருந்தது!
“பின்னர் நான் மக்காவுக்குத் திரும்பிவிட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்ளும்வரை, நான் மக்காவில் இருந்தேன். அதன் பின், மக்காவிலிருந்து தாயிஃபுக்குச் சென்றுவிட்டேன். நபியவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக ஒரு கூட்டம் தாயிஃபிலிருந்து மக்காவுக்குச் செல்லும்வரை, நான் தாயிஃபிலேயே இருந்தேன். நானோ, அதற்குப் பின்னர் எங்கு செல்வது என்று அறியாமல், தடுமாறி நின்றேன். ஷாமுக்கா? யமனுக்கா? அல்லது, வேறு எங்கேயுமா? இதை என்னால் முடிவு செய்ய முடியாத நிலை!
“அப்போது சிலர், ‘தமக்குத் தீங்கிழைத்தவர் இஸ்லாத்தை ஏற்றுத் திருந்தி வந்தால், அவர் மன்னிப்பார்; பழிக்குப் பழி வாங்கமாட்டார்’ என்று கூறினார்கள். எனவே, நான் எனது பயணத்தை மதீனாவை நோக்கித் திருப்பினேன். நபியவர்களின் முன்னால் ஷஹாதா மொழிந்து முஸ்லிமானேன். இது நபியை வியப்புக் கொள்ள வைத்தது. அப்பெருந்தகை, ‘நீதான் வஹ்ஷி என்பவனா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்’ என்று நான் பதிலளித்தேன். பின்னர் அவர்கள் என்னை உட்கார வைத்து, ‘என் சிறிய தந்தை ஹம்ஸாவை எப்படிக் கொலை செய்தாய் என்பதைக் கூற முடியுமா?’ என்று கேட்டார்கள். இப்போது உங்களுக்குக் கூறியது போன்றே அவர்களிடமும் விவரித்தேன். அந்த விவரணத்தைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘வஹ்ஷி! இதற்குப் பிறகு உன் முகத்தை எனக்குக் காட்டாமல் எங்காவது போய்விடு! முன்பு அல்லாஹ்வை எதிர்த்துப் போர் செய்ததைப் போன்று, இனி எஞ்சியுள்ள உனது வாழ்நாளை அல்லாஹ்வின் வழியில் செலவிடு.’ என்று அறவுரை பகர்ந்தார்கள். நபியவர்களின் வாக்கை மதித்து, அவ்வாறே செய்தேன். பின்னர் அவர்கள் இறந்து அல்லாஹ்வின் பக்கம் சென்றுவிட்டார்கள்.”
வஹ்ஷியின் வாழ்க்கை அன்றிலிருந்து மாறிவிட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தபோதே, தன்னை நபியென்றும், பின்னர் நபித்துவத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்றும் வாதாடிய பொய்யன் முஸைலிமாவை எதிர்த்து அனுப்பப்பட்ட படையில் சேர்ந்து, பிராயச் சித்தம் வேண்டிப் புறப்பட்டார்.
நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வந்து, தானும் நபிதான் என்று வாதிட்ட முஸைலிமாவுக்கு, நபித்துவத்தில் பங்கு கேட்பது கூடாதென்றும், தாமே இறுதி நபி; தமக்குப்பின் நபியாக எவரும் வரமாட்டார் என்றும் நல்லுரை பகர்ந்தார்கள். அவ்வுரையை அவன் காதால் கேட்டான்; அனால், அது அவனது இதயத்தைச் சென்றடையவில்லை. மாறாக, மதீனாவை அழித்துவிட எண்ணி, படையொன்றை ஆயத்தம் செய்தான். இதையறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவனுடைய ஆட்சிப் பகுதியாக இருந்த யமாமாவை நோக்கிப் படை ஒன்றை அனுப்பினார்கள். அப்படை வெற்றி வாகை சூடியது; முட்டாள் முஸைலிமாவும் கொல்லப்பட்டான்!
அவன் கொல்லப்பட்ட விதத்தை வஹ்ஷி விவரிக்கிறார்: “நான் முன்பு ஹம்ஸாவைக் கொலை செய்யப் பயன்படுத்திய அதே ஈட்டியை எடுத்துக்கொண்டு படையுடன் புறப்பட்டேன் படை நடுவில் அந்தப் பொய்யன் முஸைலிமா ஆணவத்துடன் நின்றதைப் பார்த்தேன். எனது ஈட்டியை அவனை நோக்கிக் குறி வைத்தேன். வைத்த குறி வீண் போகவில்லை. அதையடுத்து, எங்கிருந்தோ அபூ துஜானா என்ற நபித்தோழர் பாய்ந்துவந்து, தன் பலம் கொண்டமட்டும் தாக்கினார். பொய்யன் மலைபோல் சரிந்தான்! அபூ துஜானாவிடம்தான் நபியவர்களின் போர்வாள் கொடுக்கப்பட்டிருந்தது. என்னுடைய ஈட்டியால் முஸைலிமா கொல்லப்பட்டானா? அல்லது, மாவீரர் அபூ துஜானாவினால் கொல்லப்பட்டானா என்பது தெரியவில்லை. நான் வீசிய ஈட்டிதான் அவனுடை சாவுக்குக் காரணம் என்றால், எனக்கு ஏற்பட்ட ஆறுதலாலும் மகிழ்ச்சியாலும், ‘மனிதர்களுள் சிறந்தவரான ஹம்ஸாவைக் கொலை செய்த அதே ஈட்டியால், மனிதர்களுள் தாழ்ந்தவனான முசைலிமாவைக் கொன்றேன் என்ற ஆறுதல் எனக்கு உண்டாகின்றது.’
இன்னுமொரு வரலாற்றுத் தகவல், பொது நன்மைக்காகத் தன் சுய விருப்பத்தை விட்டுக்கொடுத்து, தலைமையின் தகுதியை உயர்த்திக்கொண்ட பெருமானாரின் தகைமையை உண்மைப்படுத்துகின்றது. அது, காலித் பின் வலீத் என்ற மாவீரர் எவ்வாறு இஸ்லாத்தைத் தழுவினார் என்பது பற்றிய நிகழ்வாகும்.
காலித் கூறுகின்றார்: “நான் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் பல போர்களில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு போரின் முடிவின்போதும் என் மனத்தில் உறுத்தலான உணர்வு வந்து நிற்கும். அது, ‘இறுதி வெற்றி முஹம்மதுக்கே’ என்பதாகும். அதனால், நான் வீணான முயற்சியில் இறங்கிவிட்டேன் என்பதுவே அந்த உறுத்தல்!
அது, ‘ஹுதைபிய்யா’ உடன்படிக்கைக்கு முந்திய நாள். 200 போர் வீரர்களைக் கொண்ட ஒரு படைக்குத் தலைமை தாங்கிப் புறப்பட்டேன் எதிரணியில், என் பார்வையில் படும் விதத்தில் நபியவர்கள் தொழுகை அணியில் நின்றார்கள். அது முஸ்லிம்களின் நடுப்பகல் தொழுகையாக இருந்தது. அந்த நிலை எனக்கு மிகச் சாதகமாக இருந்தது. போர் நிலையை மறந்து, ஓர்மையாக இறைவனை வணங்கிக்கொண்டிருக்கும் அவர்களைப் போட்டுத் தள்ளித் தீர்த்துக் கட்டிவிட அருமையான தருணம்!
“ஆனால், அவர்களைத் தாக்க விடாமல், ஏதோ ஒன்று என்னைத் தடுத்துக்கொண்டிருந்தது. ‘சரி, இருக்கட்டும்; அடுத்த தொழுகையில் அவர்களைப் பார்ப்போம்’ என்று எனது அடிமனம் உணர்த்திற்று. ஆனால், இந்த முறை, அவர்களின் தொழுகை வேறு விதமாக இருந்தது. அப்போதுதான், ‘இவர் பாதுகாப்பைப் பெற்றுள்ளார்’ என்று உணர்ந்தேன். அந்தத் தொழுகை, அச்ச நேரத்தில் தொழும் எச்சரிக்கைத் தொழுகை என்பதைப் பின்னர்தான் அறிந்தேன். நபித்தோழர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து, ஓரணி தொழுகையிலும், மற்றுமோர் அணி பாதுகாப்பிலும், முந்திய அணி ஒரு ரகஅத்தை முடித்தபின், அடுத்த அணி தொழுகையில் சேர்ந்து தொழுவதிலுமாக அமையும் (சலாத்துல் கவ்ஃப் எனும் அது) அச்ச நேரத் தொழுகையாகும். அந்தப் போரின்போதுதான், ‘அச்ச நேரத் தொழுகை’ பற்றிய இறை வசனம் இறங்கியிருந்தது.”
‘ஹுதைபிய்யா’ உடன்படிக்கையின்படி, விடுபட்ட உம்ராவை அடுத்த ஆண்டு நிறைவேற்றும் ‘உம்ரத்துல் கழா’வுக்காகப் பெருமானாரும் தோழர்களும் மக்காவுக்கு வந்திருந்தார்கள். அந்தக் குழுவில், காலிதின் தம்பியான வலீது பின் வலீதும் இருந்தார். அப்போது அவர் முஸ்லிமாக இருந்தார். மக்காவில் தன் அண்ணனான காலிதைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றார். காலிதின் வீடு காலியாகக் கிடந்தது!
பெருமானாரும் தோழர்களும் உம்ராக் கடமையை நிறைவேற்றுவதற்காக வருகின்றார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், நபிக்குக் கொடுமை விளைத்த மக்காவாசிகள் அனைவரும் தத்தம் வீடுகளைக் காலி செய்துவிட்டு, மக்காவுக்கு வெளியில் சென்றுவிட்டார்கள். அவர்களுடன் காலிதும் சென்றுவிட்டார். அதனால் வலீத் அவரைச் சந்திக்க முடியவில்லை. அதனால், வலீத் ஒரு கடிதம் எழுதி, வீட்டு வாசலில் வைத்துவிட்டுத் திரும்பிவிட்டார். அதன் கருத்தாவது:
“பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம். அன்புச் சகோதரா! இஸ்லாத்தின் மீது இவ்வளவு வெறுப்புக் கொண்டிருப்பதைத் தவிர, உன்னிடம் வேறு எந்தக் குற்றத்தையும் நான் காணவில்லை! உன்னைப் போன்ற அறிவுள்ள மனிதன் இஸ்லாம் எனும் நேர்வழியைப் பற்றிப் பிடிக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது! இந்த நேர்வழியைப் புறக்கணிக்கலாமா? உன்னைப் பற்றி, ‘காலித் எங்கே இருக்கின்றார்?’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். ‘நிச்சயமாக, அவரை அல்லாஹ் இஸ்லாத்தில் இணைய வைப்பான்’ என்று நான் அவர்களுக்கு மறுமொழி அளித்தேன். ‘காலிதைப் போன்ற எவரும் இஸ்லாத்தைப் புறக்கணிப்பாரா? அவரைப் போன்ற அறிவாளி தனது அறிவையும் ஆற்றலையும் இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தி, இஸ்லாத்தை வலுப்பெறச் செய்தால், அவருக்கல்லவோ நல்லது? நிச்சயமாக, மற்றவர்களைவிட அவருக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம்’ என்று நபியவர்கள் என்னிடம் கூறினார்கள். சகோதரா, எத்தகைய மேன்மையை நீ இழந்திருக்கின்றாய் என்பதைச் சிந்தித்துப் பார்.”
“இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றி இப்படிக் கூறியிருந்தது, என்னை உள்ளம் நெகிழச் செய்து, அவர்களிடத்தில் உடனே போகத் தூண்டியது” என்று தனது இஸ்லாமிய வாழ்க்கையின்போது காலித் நினைவுகூர்ந்தார்.
கவலையுடனும் பற்றுடனும் ஒருவரைப் பற்றி விசாரிப்பது என்பது, அவருடைய மறுமை வாழ்வைப் பற்றிக் கவலை கவனமும் கொண்டதனால்தான் என்று இலகுவாக அறிந்துகொள்ளலாம். இதுவே ‘தஅவா’ எனும் அழைப்புப் பணியின் சாரமாகும்.
இதைத் தொடர்ந்து, காலித் கனவு ஒன்றைக் கண்டார். அதில், தாம் ஒரு நெரிசலான பகுதியை விட்டு வெளிப்பட்டு, பரந்த வெளியில் இருக்கும் அழகிய இடத்திற்குப் போவதாகக் கண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், ஒரு நாள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தாம் கண்ட கனவின் விளக்கத்தைக் கேட்டார். அதற்கு, காலித் தனது இணைவைப்பு எனும் அழுக்கிலிருந்து வெளிப்பட்டு, இஸ்லாம் எனும் பேரொளியின் பக்கம் வந்ததையே குறிக்கும் என்று விளக்கம் கொடுத்தார்கள்.
நேரிய சிந்தனைப் பரிணாமம் காலிதின் மனத்தில் தோன்றிய அன்று, அது பற்றிய தகவலைத் தம் தோழர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களின் கருத்தை அறிவதற்காக காலித் அத்தோழர்களிடம் சென்று, தனது எண்ணத்தை வெளியிட்டார்.
முதலில் அவர் சென்றது, சஃப்வான் இப்னு உமையாவிடம். தனது தீர்மானத்தை அவரிடம் வெளியிட்டார். அதற்கு சஃப்வான், “முஹம்மதின் மார்க்கத்தில் அனைவரும் இணைந்து, நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருந்தாலும், முஹம்மதின் வழிக்கு நான் ஒருபோதும் போகமாட்டேன்” என்று தீர்மானமாகக் கூறினார்.
அடுத்து அவர் சென்றது, அபூஜஹ்லின் மகன் இக்ரிமாவிடத்தில். “நண்பா! நாம் குழிக்குள் பதுங்கியிருக்கும் நரியைப் போன்று இருக்கின்றோம். முஹம்மதும் அவருடைய நண்பர்களும் வெற்றி வீரர்களாகவும் இருக்கின்றனர். ஒரு வாளித் தண்ணீரை ஊற்றினால்தான் குழியிலிருந்து வெளிவரும் கோழை நிலையில் நாம் இருக்கின்றோம்” என்றார் காலித்.
காலிதின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளாமல், இக்ரிமா இஸ்லாத்தில் இணைவதை அறவே விரும்பவில்லை. “அப்படியா? நான் உம்மிடம் வந்ததைப் பற்றியும், இஸ்லாத்தில் இணையப்போவது பற்றியும் யாரிடமும் சொல்லிவிடாதீர்” என்று கூறிய காலித், உஹதுப் போரில் தன் குடும்பத்தின் ஏழு பேரை இழந்துவிட்ட உஸ்மான் இப்னு தல்ஹாவிடம் சென்றார். அவர் எந்தக் கருத்தில் இருப்பினும், அவரிடம் செல்லவே விரும்பினார்.
அவர் நிச்சயமாக மறுப்புத்தான் தெரிவிப்பார் என்று எண்ணியிருந்தும், காலித் உஸ்மானிடம் சென்று, தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
உஸ்மானைப் பொருத்தவரை, அவர் ஏறத்தாழ முஸ்லிமாக வேண்டும் என்ற நிலைபாட்டிலேயே இருந்தார். ஆனால், அதற்கொரு சரியான வாய்ப்பை நோக்கிக் கொண்டிருந்தார். இது அந்த வாய்ப்பாக இருக்குமோ? அல்லது, காலித் தன்னை எடை போட்டுப் பார்க்க வந்துள்ளாரோ? அல்லது, இவர் மக்கத் தலைவர்களின் வேவு பார்க்கும் ஆளோ? என்றெல்லாம் சிந்தித்து, இப்போது தனது நிலைபாட்டை வெளிப்படுத்திவிடுவதுவே சரி என்ற உறுதியுடன் காலிதுக்கு விடை கூற முன்வந்தார்.
காலித் வியப்படையும் விதத்தில், உஸ்மான் அந்த நிமிடமே காலிதுடன் இஸ்லாத்தை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்! முறையான அழைப்புப் பணி செய்தால், அப்போது வருந்தித் திருந்தி நேர்வழிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், இறை நாட்டத்தில் அவர் நேர்வழியடைவார் என்று இருக்குமானால், இறைக் கருணையால், அவர் நேர்வழி அடைவது திண்ணமே. இதுதான் அழைப்புப் பணியின் அற்புதம்!
அம்ர், காலித், உஸ்மான் ஆகிய மூவரும் மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள். மதீனாவின் எல்லையை அடைந்தவுடன், பயணத்தால் அழுக்கடைந்த தம் உடுப்புகளை மாற்றித் தூய்மையான ஆடைகளை உடுத்திக்கொண்டு, நபியவர்களைச் சந்திக்கத் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.
மதீனாவுக்கு வந்து, நபியைச் சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், “எந்த இறைவன் உங்கள் மூவரையும் இஸ்லாத்தின் பக்கம் சேர்த்து வைத்தானோ, அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மூவரும் அறிவில் சிறந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும்; அந்த அறிவுச் சிறப்பு உங்களை இஸ்லாத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்பதுவும் எனக்குத் தெரியும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபியவர்கள் அந்த மூவரின் திறமைகளைப் பற்றி அறிந்தவர்கள் ஆனதால், அவரவர் திறமைக்குத் தக்கபடி, சிறப்புப் பட்டங்களையும் பொறுப்புகளையும் கொடுத்தார்கள். பலருக்கு இல்லாத சிறப்புகளைக் கொடுத்து, மற்றவர்களை வழிநடத்தும் பொறுப்பையும் கொடுத்தார்கள். அனுபவமும் முதிர்ந்த அறிவும் பெற்ற நபித்தோழர்கள் பலரை வழிநடத்தும் ‘படைத் தளபதி’ என்னும் பொறுப்பை காலிதுக்குக் கொடுத்து, ‘சைஃபுல்லாஹ்’ (இறைவனின் போர்வாள்) எனும் பட்டத்தையும் வழங்கினார்கள். பின்னர் நடந்த போர்களின்போது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தமக்கு நபியவர்களால் வழங்கப்பட்ட அருஞ்சிறப்புகளை மெய்ப்பிக்கும் விதத்தில் வெற்றி வீரராக விளங்கினார்கள்.
பல்லாண்டுகளின் பின், காலித் பின் வலீத் அவர்கள் இறைவனைச் சந்திக்கப் போகும் இறுதிப் படுக்கையில் ஆனபோது, அன்னாரின் நண்பர் ஒருவர் அவரைக் காண வந்தார். அப்போது காலித் (ரலி) அவர்கள் நிம்மதி இழந்த நிலையில், “எனது உடலின் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் இறைநெறிப் போராட்டத்தினால், அம்புகளாலும் ஈட்டிகளாலும் போர்வாள்களாலும் காயம் படாத இடமே இல்லை. எனினும், இறைவழியில் மரித்த ‘ஷஹீத்’ என்னும் உயர்வான பட்டத்தைப் பெறாமல் இறக்கப் போகிறேனே என்பதுவே எனது இப்போதைய கவலை” என்று அழுது புலம்பினார்கள்.
அதற்கு அந்த நண்பர் கூறினார்: “கவலைப் படாதீர்! உங்கள் சேவைகளுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தக்க வெகுமதிகளைத் தருவான். ‘அல்லாஹ்வின் போர்வாள்’ என்ற பெருமைப்படத் தக்க பட்டத்தைப் பெருமானார் (ஸல்) அவர்கள் உங்களுக்கு வழங்கியபோது, உங்கள் விதி முடிவாக்கப்பட்டு, இப்படித்தான் உங்கள் இறப்பு நிகழும் என்ற உண்மை நிலை உறுதிப்பட்டுவிட்டது. எனினும், ‘அல்லாஹ்வின் போர்வாள்’ எப்படித் தாழ்ந்து போகும்? போர்க்களம் அல்லவா அதன் இலக்கு? சந்தேகம் இல்லாமல், நீங்களும் ‘ஷஹீது’தான்.”
முன் சென்ற அத்தியாயங்களில் புதைந்து கிடக்கும் உண்மை யாது? தலைவர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாமல், தனக்கும் தன் தலைமையின் கீழ் இருக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட பணிக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.
அன்பும் பாசமும் தோழமையும் கொண்ட தம்முடைய சிறிய தந்தையைக் கொலை செய்த கொடிய மனங்கொண்ட வஹ்ஷியை மன்னித்ததன் மூலம், வஹ்ஷி தான் செய்த மாபாதகத்தை நினைத்து வருந்தி, உண்மை மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு நேர்வழியில் தனது எஞ்சிய வாழ்நாளை முஸ்லிமாகவே கழிக்கும் பெரும் பேற்றைப் பெற வாய்ப்புண்டாகியது. இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடம், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கொடுஞ்செயல் புரிந்தவரை மன்னித்தது, பெருமானாரை ஓர் அப்பழுக்கற்ற தலைமையின் முன்மாதிரியாக ஆக்கிற்று. அதனால், மார்க்கமும் மனிதத் தன்மையும் நிலை பெற்றன.
ஒருவரைப் பற்றி, அல்லது ஒன்றைப் பற்றி நமக்கு வலுவான சான்றுகள் இருந்தாலும், அவற்றைத் தளர்த்திவிட்டுப் பொது நன்மையை நாடிச் செயல்படும்போது, நமது சுயநலம் நம்மைக் கட்டிப்போட்டுவிட முடியாது. அது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது, நமது விட்டுக்கொடுக்கும் தன்மை மூலம் வெற்றியின் வாசல் திறக்கும்; மக்களின் மனங்கள் திறக்கும்; தமது விருப்பத்தைத் தளர்த்திக்கொண்டு, பொது நன்மைக்காகத் தனது விருப்பத்தை விட்டுக்கொடுத்த தலைவர் என்று நம்மைப் புகழ்வார்கள்.
‘சொன்னார்கள்’ என்பதைவிட, ‘செய்தார்கள்’ என்பதுதான் புகழ் மிக்க வாழ்வின் வெற்றியாகி, சுய விருப்பை ஒதுக்கித் தள்ளி, கொண்ட கொள்கையில் உறுதியான தலைவரின் தகுதியை நிலைநாட்ட வல்லது. தமது சுயவிருப்பிற்கும், பொது நன்மைக்காக எடுத்துக்கொண்ட கொள்கைக்கும் இடையில் ஒரு வரம்பை ஏற்படுத்திக்கொண்டு, கொண்ட கொள்கையின் வெற்றியை நோக்கி விரைந்து செல்வதே தலைவரின் நோக்கும் போக்குமாக இருக்கவேண்டும்.
நோக்கத்தில் தொய்வு, அல்லது எதிர்ப்புகளால் ஏற்படும் ஆர்வக் குறைவு போன்றவை குறுக்கிடும்போது, தடுமாற்றமில்லாமல் முன்னேறிச் செல்வதே தலைமையின் இலக்கணம் ஆகும். அத்தகைய முன்னேற்றத்தில் தடை ஏற்படாத வகையில், தலைவரின் தியாக உணர்வு மிகைத்திருக்க வேண்டும். இதனைப் படம் பிடித்துக் காட்டும் விதத்தில்தான் பெருமானார் (ஸல்) அவர்களின் தலைமைச் செயல்பாடுகள் அமைந்திருந்தன. தமக்கு மட்டுமில்லாமல், தமக்கு முன்னால் வாழ்ந்துவிட்டுச் சென்ற இறைத்தூதர்களின் வாழ்க்கையிலும் சோதனைச் சூறாவளிகள் நிகழ்ந்துள்ளன என்ற உண்மையை நினைவுகூர்ந்து,
“எனக்கு முன் இவ்வுலகில் வந்து இறைச் செய்தியை மக்களுக்கு உணர்த்திவிட்டுச் சென்ற இறைத்தூதர்கள் அனைவரும் அந்தந்தக் காலத்து மக்களால் வதை செய்யப்பட்டார்கள். அவர்களுள் நானே அதிகமாக என் மக்களால் வதை செய்யப்பட்டிருக்கிறேன்” என்று தம் தோழர்களுக்கு நல்லுரை பகர்ந்தார்கள் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள்.
சோதனைகள் சூறாவளிகளாக வந்தபோது, அன்னாரின் பொறுமையும், கொள்கையில் உறுதிப்பாடும் ஒன்றுசேர்ந்து, இறைவனால் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டார்கள். அன்னாரின் கொடிய எதிரிகள்கூட, தம் தவற்றை உணர்ந்து இஸ்லாத்தின் பக்கம் அடியெடுத்து வைத்து, உண்மையாளர்களாக மாறினார்கள்.
அதிரை அஹ்மது
2 Responses So Far:
மக்கா வெற்றியும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை மாவீரர் ஹம்ஸா (ரலி) அவர்களின் வீரமரணமும் பற்றி, மரியாதைக்குரிய அஹ்மத் காக்கா அவர்கள் எழுதி இருக்கும் விதம் தத்ரூபமாக இருக்கின்றது. ஒரு மொழிபெயர்ப்பு மாதிரியே தெரியவில்லை! மென்மேலும் பயனுள்ள நல்ல நூல்களை அவர்கள் எழுதி முடித்து வெளியாக அல்லாஹ் அருள்வானாக.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
Post a Comment