:::::: :தொடர் - 25 :::::::
அன்று, முஸ்லிம்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் தமது பிறந்தகமான மக்காவை விட்டு மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்து வந்து சேர்ந்தபோது, மதீனாவின் அரசியல் சூழ்நிலை மக்காவின் சூழ்நிலையை விட்டு மாறுபட்டிருந்தது. பழமையான அரபுகளும், அவர்களுள் முஸ்லிம்களான சிலரும், மதீனாவுக்கு உரிமை கொண்டாடி வந்த யூதர்களுமான கலப்புச் சமுதாயமாக இருந்தது.
அந்த நிலையில், இறைநம்பிக்கையின் அடிப்படையில், புதிய சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, மதீனத்து முஸ்லிம்களால் அன்புடன் வரவேற்கப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொறுப்பாக இருந்தது. அந்த ஒற்றுமைச் சமுதாயமானது, ஆண்டாண்டுகளாக இருந்துவந்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்டதாகவும் இருந்தது. இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியின் அடிப்படையில், இறைவன் அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருந்த வேதக் கட்டளைகளின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டிய புத்தமைப்பாகவும் இருந்தது. அந்த இஸ்லாமிய ஆட்சியைச் செயல்பாட்டில் கொண்டுவர, அல்லாஹ்வின் கட்டளைகள் ‘வஹீ’ என்னும் வேத வெளிப்பாடுகளாக நபியவர்களுக்கு வந்துகொண்டிருந்தன.
அவற்றுள் ஒன்று, இப்படியும் இருந்தது: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் தந்தையரும், உங்கள் சகோதரர்களும், ஓரிறைக் கொள்கையைவிட இறைமறுப்பைத் தேர்ந்தெடுப்பார்களாயின், (அவர்களை) உங்களுக்குப் பொறுப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால், அவர்களே உங்களுள் வரம்பு மீறியவர்கள். (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தையரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவியரும், உங்கள் நெருங்கிய உறவினரும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வமும், உங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சும் உங்களுடைய வியாபாரமும், நீங்கள் ஓய்ந்து நிம்மதி அடையும் இல்லங்களும், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைவழியில் போரிடுவதையும்விட உங்களுக்கு விருப்பமானவையாக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளைப்படி (வேதனையைக் கொண்டு) வருவதை எதிர்பார்த்து இருங்கள். பாவிகள் கூட்டத்தை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (9:23,24)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! என்னுடைய எதிரிகளையும் உங்களுடைய எதிரிகளையும், நேசம் வைத்துள்ள தோழர்களாக்கிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், அவர்கள் ‘தீனுல் இஸ்லாம்’ எனும் உண்மை மார்க்கத்தை ஏற்காமல் மறுத்துவிட்டனர். உங்களுடைய இரட்சகனான அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக நம் தூதரையும் உங்களையும் (மக்காவை விட்டு) வெளியேற்றுகின்றனர். எனது பாதையில் போரிடுவதையும், எனது பொருத்தத்தை நாடியும் நீங்கள் வெளிப்படுவீர்களாயின், அவர்களை (நீங்கள் நண்பர்களாக) எடுத்துக்கொள்ளாதீர்கள்.“ (60:01)
இன்னும் இதுபோன்ற வசனங்களை அவ்வப்போது இறக்கி, முஸ்லிம்களை எச்சரிக்கை செய்தான் அல்லாஹ். மக்கத்து இணைவைப்பாளர்களோடு கடந்த காலத்தில் செய்துகொண்ட உடன்படிக்கைகளையும் உறவு முறைகளையும் முறித்துக்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தான். அரபுச் சமுதாயத்தில், இது போன்ற பிணைப்புகளும் ஒப்பந்தங்களும் பழமைக் காலம் முதற்கொண்டே புனிதமாக மதிக்கப்பட்டவையாக இருந்துவந்தன. ஆனால், ‘இஸ்லாம்’ என்னும் புதிய பாதை, புனித வாழ்க்கை மக்காவில் முஹம்மத் (ஸல்) அவர்களால் என்றைக்கு அறிமுகப் படுத்தப்பட்டதோ, அன்றிலிருந்து அரபுச் சமுதாய வழக்கத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் மாபெரும் மாற்றத்திற்கு உள்ளாகின. குர்ஆன் எனும் வேதமும், அதனுடன் இணைந்த தூதுத்துவமும் அந்த அரபுச் சமுதாயத்தில் ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி, நபியையும் நபித்தோழர்களையும் அந்த மாற்றங்களுக்கு உடன்பட வைத்தன.
இனப் பிணைப்பைவிட, இஸ்லாமியப் பிணைப்பு மேலானது என்று நபித்தோழர்கள் நன்கு உணர்ந்துகொண்டார்கள். கடந்த காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தார்களோ, அவற்றை எல்லாம் மறந்து, புதிய வாழ்க்கை நெறியான இஸ்லாம் ஒன்று மட்டுமே நிலையான வாழ்க்கைக்கு உரியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். எந்த ஒரு கொள்கைக்கும் உண்மையான சோதனை, அக்கொள்கையை நடைமுறைப் படுத்துவதில்தான் ஏற்படும். நபியவர்களின் தலைமையில் இருந்ததால், நபித் தோழர்கள் தமக்கு முன்னால் இருந்த சோதனையில் சாதனை புரிந்து வெற்றி பெற்றார்கள்.
அதன் பின்னர், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் எந்த அடிப்படையில் ஒன்றிணைவது என்பது பற்றிய நெறிமுறைகளைத் தன் வேதக் கட்டளைகளால் அந்தத் தோழர்களுக்கு அல்லாஹ் வழி வகுத்துக் கொடுத்தான். அவர்களுள் உண்மையான நண்பர்கள் யார், யார் அவர்களின் எதிரிகள் என்று தன் வேதக் கட்டளைகள் மூலம் நெறிப்படுத்திக் கொடுத்தான். உண்மையான நண்பர்கள் யார், அவர்களின் தன்மைகள் யாவை என்பதை அறிந்துகொள்ளும் விதத்தில் நட்புறவு கொள்ளுமாறு அந்த நபித் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். வேதம் கொடுக்கப்பட்ட முந்தையச் சமுதாய மக்கள் அல்லாஹ்வுக்கும் அந்தந்தக் காலத்தின் இறைத்தூதர்களுக்கும் மாறு செய்து, தமக்குரிய அழிவைத் தாமே தேடிக்கொண்டார்கள் என்பது பற்றிய வரலாறுகளையும் தனது வேதத்தின் மூலம் தெளிவு படுத்தினான். அந்த மக்கள் அந்த இறைநெறியைக் கடைப்பிடித்து நடந்தால் வெற்றியும், அதனைப் புறக்கணித்தால் மறுமைத் தண்டனையும் உண்டு என்பதைத் தெளிவு படுத்தினான்.
அந்த வழிகாட்டல், இவ்வாறு அமைந்தது: “அல்லாஹ்வும் அவன்தன் தூதரும் இறைநம்பிக்கையாளர்களுமே உங்களுக்கு உற்ற நண்பர்களாவர். அவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாகவும், தொழுகையை நிறைவேற்றுபவர்களாகவும், ஜக்காத்தை வழங்குபவர்களாகவும் இருப்பார்கள். மேலும், எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இறைநம்பிக்கை கொண்டவர்களையும் தோழர்களாக ஆக்கிக்கொள்வார்களோ, அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அவர்களே வெற்றியாளர்கள்.” (5:55,56)
இது போன்ற இறைவசனங்களின் மூலம், தீமையிலிருந்து நன்மையையும், பிழையிலிருந்து சரியானதையும், ஆண்டாண்டுகளாக நிலவிவந்த இனப்பகைகளுக்கு மாறான ஒற்றுமையையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இலகுவாகப் பிரித்தறிய முடிந்தது. இதுவே புதிதாக அமைந்த மதீனத்துச் சமுதாயத்தினை ஒற்றுமையால் கட்டமைப்புச் செய்யக் கருவாகவும் அமைந்தது.
சகோதரத்துவ சமுதாயத்தை உலகளாவிய ஒரு தலைமையின் கீழ் கட்டமைப்புச் செய்யத் தேவையான காரணிகளைப் பற்றி இதற்கு முன் விரிவாகப் பார்த்துவந்துள்ளோம். மறுபடியும் அவற்றை எடுத்துரைப்பது, ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்தில் ஆக்கும் என்பதால், இனி நாம் அவற்றை விவரிக்க விரும்பவில்லை. இங்கு நாம் வலியுறுத்த விரும்புவது, தலைமைத்துவத்தின் தொடக்க நிலையில் நாம் முன்மாதிரியாகக் கொள்ளத் தேர்ந்தெடுத்த தலைவரின் தகுதிகள் மற்றும் தன்மைகள், இஸ்லாம் கூறும் தலைமைத்துவத்திற்குச் சிறந்த சான்றுகளாக நிற்கும் என்பதே.
பெருமானாரின் தனித்தன்மையும் ஒழுக்கப் பண்புகளும் இராஜ தந்திரமும் உயர்குடிப் பிறப்பும் இரக்க உணர்வுமான சிறப்புத் தன்மைகளே பொது மக்களைக் கவர்ந்து, அவர்களை இறைத்தூதரின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் இழுத்துக்கொண்டு வந்தன எனக் கூற முடியும். அக்காலத்து மக்கள் யாரும் இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியின் உயர்வைக் கண்டு இஸ்லாத்தின் பக்கம் வரவில்லை. மாறாக, அம்மக்கள் இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் உயர் பண்புகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தவர்களே என்று கூறலாம். இஸ்லாத்தின் விழுமியங்களைச் சிந்தித்துப் பார்த்து, இறைத்தூதரின் தோழர்கள் என்ற தூய தன்மைக்குத் தம்மை உயர்த்திக்கொண்டவர்கள் யாரும் இருக்கவில்லை. இறைத்தூதரின் தோழர்கள் – சீடர்கள் அல்லர் – தம் தலைவரை அனைத்தையும்விடவும், தமது உயிரைவிடவும் உயர்வாக மதித்தார்கள். இதோ, இதற்குச் சான்றாகும் இறைவாக்கு:
“இறை நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைவிட இந்த நபிதான் மிக்க முன்னுரிமைக்கு உரியவராவார். இவருடைய மனைவியர் அவர்களின் தாய்மார்களாவர். அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி, இறை நம்பிக்கையாளர்களையும் நாடு துறந்தவர்களையும்விட, நெருங்கிய உறவினர்களே அவர்களுள் சிலர் சிலரைவிட (சொத்தை அடைய) உரிமைப்பட்டவர்களாவர். எனினும், அவர்களில் சிலருக்கு ஏதேனும் நீங்கள் உதவி புரிய விரும்பினாலன்றி, (மரண வாக்குமூலம் செய்ய) உங்களுக்கு உரிமையுண்டு. இது, வேதத்தில் கூறப்பட்ட விதிமுறையாகும்.” (33:6)
ஒரு தலைமைக்குக் கட்டுப்பட, அவரை நேசித்து, அவருடைய ஆணைகளை மதித்து, அவர் எடுக்கும் எந்த முடிவையும் மதித்து, தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமது இசைவை வழங்கித் தோழர்கள் ஒன்றிணைந்து இருப்பது, தலைமை எதிர்நோக்கும் இக்கட்டான தருணம் ஆகும். இந்த நிலையை, நபித்தோழர்கள் ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’ நிகழ்ந்தபோது கண் முன்னால் கண்டார்கள். மக்கத்துக் குறைஷிகள் நபியவர்களின் முன் வைத்த நிபந்தனைகள் மக்காவாசிகளுக்குச் சாதகமானவை; முஸ்லிம்களுக்குப் பாதகமானவை. அதனால் நபித்தோழர்கள் அவற்றை விரும்பவில்லை. எனினும், தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற நிலையில் இருந்த அவர்கள் ‘கசப்பான மருந்தாக’ அவற்றை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசித்தார்கள்; அன்னாரை நம்பினார்கள்; பெருமானார் தமக்கு வந்துகொண்டிருந்த ‘வஹி’யின் அடிப்படையில் செயல்படுபவர்கள் என்ற உண்மையால், தம் விருப்பத்தைப் பின்னால் தள்ளிவிட்டுத் தம் ஒப்பற்ற தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டார்கள்.
எதிலும் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பது, தலைமை எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்றாகும். மக்கத்துக் குறைஷியரின் படை மதீனாவை நோக்கி வந்து உஹது மலையின் அடிவாரத்தில் வந்து முகாமிட்டிருந்தபோது, குறைஷிகள் மதீனாவைத் தாக்குவதிலிருந்து பாதுகாக்க முஸ்லிம்களிடம் இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று, மதீனாவில் இருந்துகொண்டே குறைஷிப் படையை எதிர்கொள்வது. அப்போது மதீனத்துப் பெண்களும் சிறுவர்களும் படை வீரர்களோடு இணைந்து போர் புரிவது. இது, நபியவர்களின் விருப்பமும், நயவஞ்சகத் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையின் பரிந்துரையுமாக இருந்தது.
இன்னொரு கருத்து, மதீனாவை விட்டு வெளியில் சென்று, உஹதிலேயே எதிரிகளைச் சந்திப்பது. இது, பெரும்பாலான தோழர்களினதும், பத்ருப் போரில் கலந்து போர் செய்ய வாய்ப்பின்றிப் போன தோழர்களினதும் விருப்பமாக இருந்தது. எதிரிப் படையைத் தமது புனிதப் பதியான மதீனாவுக்குள் நுழைய அனுமதிப்பது, வெட்கிக் குனியச் செய்யும் செயலாகும் என்பதே அவர்களின் மாற்றுக் கருத்தின் காரணம். இதைத் தோழர்களுள் பெரும்பாலோர் அழுத்தமாகப் பதிவு செய்தனர். இக்கருத்தில் மறைந்திருந்த உண்மையையும் நியாயத்தையும் ஓரிரு நிமிடங்களில் உய்த்துணர்ந்த பெருமானார் (ஸல்) அவர்கள், உடனே தம் வீட்டுக்குள் சென்று, தமது பாதுகாப்புக் கவசத்தை அணிந்தவர்களாக போருக்குப் புறப்பட ஆயத்தமாகி வெளிவந்தார்கள்!
ஆட்சித் தலைவர், ஆன்மிக வழிகாட்டி, போர்த்தளபதி என்ற அடிப்படைத் தகுதியில், நபியவர்கள் தம் தோழர்களைத் தமது ஆணைக்குக் கட்டுப்பட வைத்திருக்கலாம். அதற்கு மேல் ஒருவரும் மாற்றுக் கருத்தைக் கூறாமல் உண்மைத் தூதரின் ஆணைக்குக் கட்டுப்பட்டிருக்கலாம். ஆனால், நபியவர்கள் அதை விடுத்து, பெரும்பான்மைக் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.
அன்றைய நாள் வெள்ளிக் கிழமையாக இருந்தது. தமது ‘குத்பா’ உரையில் அண்ணலார் அவர்கள், தம் தோழர்களை விளித்து, அன்று தொடங்க இருந்த போரில் உறுதியாகவும் வெற்றியை எதிர்பார்த்தும் இருக்குமாறு ஆர்வமூட்டினார்கள்.
தொழுகை முடிந்த பின்னர் தோழர்களுள் சிலர், தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தமது கருத்திற்கு உடன்பட வைக்க மிகவும் அழுத்தம் காட்டிவிட்டோமோ என்றெண்ணி வருந்தினார்கள். அத்தகைய மதீனத்து நபித்தோழர்களுள் பிரபலமான ஸஅத் பின் முஆத் (ரலி), உஸைத் பின் ஹுழைர் (ரலி) ஆகிய இருவரும் நபியவர்களிடம் வந்து, நபியவர்களின் சொந்தக் கருத்துக்கு மாற்றமாக, தாம் தமது கருத்தை வலிமையாக வற்புறுத்தி, அவர்களின் மனத்தைப் புண் படுத்திவிட்டோமோ என்பதைக் கூறி வருத்தம் தெரிவித்தார்கள். ‘முஹாஜிர்’களின் பிரதிநிதியாக, அண்ணலாரின் சிறிய தந்தையும் தோழருமான ஹம்ஸா (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது தனியறையில் இருந்தபோது அவர்களைச் சந்தித்துத் தமது வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.
அதைத் தொடர்ந்து அண்ணலார் (ஸல்) வெளியில் வந்து, தம் தோழர்களை நோக்கிக் கூறினார்கள்: “தன் நபிக்கும் அவருடைய எதிரிகளுக்கும் இடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும்வரை, அணிந்த போர்க் கவசத்தைக் கழற்றுவது நபிக்கு முறையன்று.” உங்கள் பரிந்துரையை நான் ஏற்றுக்கொண்டேன் என்ற கருத்தில் இவ்வாறு கூறி, தம் தோழர்களைச் சமாதானப் படுத்தினார்கள். அதன் பின்னரே அண்ணலாரின் தோழர்கள் அமைதியுற்றார்கள்.
அதிரை அஹ்மது
0 Responses So Far:
Post a Comment