நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எனக்கொரு ‘என்கவ்ன்ட்டர்’ ! 8

அதிரைநிருபர்-பதிப்பகம் அமைதியின் ஆளுமை | சனி, மே 30, 2015 | , ,


எவரோ ஒருவர் பின்னாலிருந்து என் கண் கட்டை அவிழ்த்து விட்டார். ஆனால், பின்னுக்கு இழுத்துக் கட்டப்பட்ட என் கைகள் இரண்டும் மட்டும் அவிழ்க்கப்படவில்லை.

பார்வையைத் தெளிவாக்குவதற்கு, கண்களைக் கசக்கிப் பார்க்க முடியவில்லை.  என் கைகள்தாம் கட்டப்பட்டிருக்கின்றனவே!

தெளிவற்ற வெளிச்சத்தில், அது ‘பாம்பே’ (மும்பை) போல் தெரிந்தது.  ஹிந்தியும் மராட்டியும் பேசிக்கொண்டு, மக்கள் கூட்டம் கூட்டமாக எதிரும் புதிருமாகப் போய்க்கொண்டிருந்தனர்.

என்னைச் சுற்றிப் பார்த்தேன்.  என்னைக் கண்டும் காணாமலும் காவலர்கள் சிலர், ‘மஃப்ட்டி’யில்.

“ஏ க்யா ஜகா ஹே?”  சற்றே துணிவை வரவழைத்துக்கொண்டு, என்னைச் சுற்றி நின்றவர்களிடம் கேட்டேன்.

“ரே!  ச்சுப்!” என்று எச்சரித்தான் ஒருவன்.  நான் பேசவே கூடாதாம்!

“அரே ட்டமில் வாலா ஹிந்தி பாத் கர்த்தா ஹை!” இன்னொருவன் வியப்பில் வீழ்ந்தான்.

“அரே!  தும்  பீ.....?”  கண்ணை உருட்டிப் பார்த்தான் முதலாமவன்.

இவன் அவனுடைய உயர் அதிகாரி போலே.

“சோரி சார்.”  உதடுகளை சப்பிக்கொண்டு, நிலத்தில் கண்களைப் பதித்தான் அவன்.

“தும் கிதர் ஹை, மாலும்?” உயரதிகாரி என்னைப் பார்த்துத் தாழ்ந்த குரலில் கேட்டான்.

“’தும் கிதர் ஹோ?’ போல்னா.”  நான் அவனுடைய ஓட்டை ஹிந்தியைத் திருத்திக் கொடுத்தேன்.

“ஓ!  தும் கடிபோலி ஹிந்தி போல்த்தே ஹோ?  ரேய்!  தும் பாத் நை கர்னா..!?”  முதல் எச்சரிக்கை அது, எனக்கு.

ரோட்டோரத்தில் வந்து நின்ற MTC பஸ்ஸில் என்னை ஏற்றி, அவர்களும் ஏறிக்கொண்டார்கள்.  பஸ் பறந்தது.

என்னை உள்ளே தள்ளினார்கள்.  “ஆரே!” (வாடா) என்ற பெண் குரல்!  நிமிர்ந்து பார்த்தேன்.  என்னால் சகிக்க முடியவில்லை.  அவ்வளவு அலங்கோலம்!  ‘ரெட்லைட் ஏரியா’க்காரியோ?

பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றபோது, என்னைத் தள்ளிக்கொண்டு இறங்கினர் என்னுடன் வந்த அந்த இருவரும்.

சிறிது தூரம் நடந்தே சென்று, கட்டியும் கட்டாமலும், பாதியில் நின்ற பலமாடிக் கட்டடத்தை அடைந்தனர்.  அங்கு ‘லிஃப்ட்’ இன்னும் பொருத்தப்படவில்லை.

ஏறினோம்.  இல்லை, என்னை ஏற்றினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.  எத்தனையாவது தளத்திற்கு அழைத்துவரப்பட்டேன் என்பது தெரியாது!

பெரிய ‘ஹால்’ போல் இருந்த இடத்திற்குள் தள்ளப்பட்டேன் நான்.  அங்குக் கண்ட காட்சி, எனக்கு ஓங்காரம் எடுத்தது.  Naked ஆகப் படுத்துக் கிடந்த வாலிபர்கள் இருவர், ‘ஹெராயின்’ புகைத்த புகையை உள்ளுக்குள் இழுத்து, ஒருவன் முகத்தில் மற்றவன் ஊதி விளையாடிக் கட்டிப் புரண்டார்கள்!  அதையடுத்து நடந்தது இன்னும் அசிங்கம்!  இருவேறு பாலினர் போல் இதழ்களைச் சுவைத்துக்கொண்டனர்!  ஐயோ, சகிக்கவில்லை!

“லேட் ஜாவ்!  ஸோ ஜாவ்!”  அந்த மும்பை நகரத்தில் உள்ள இந்த நரகத்தில் படுத்து, உறங்கவும் சொல்கிறான்!  உறக்கமா வரும்?

தன் உதவியாளனைப் பார்த்து, “இஸ்க்கூ பக்டோ” என்று ஒரு பேப்பரைக் கொடுத்தான்.

அந்த அரை வெளிச்சத்தில் பேப்பரை எட்டிப் பார்த்தேன்.  பல மொழிகளில் அதில் கிறுக்கப்பட்டிருந்தது.  அவற்றுள் என் தங்கத் தமிழும் ஒன்று.  அந்தோ!  அது பட்ட பாடு?  அலை கடலுக்குள் அடித்து விரட்டப்பட்ட பர்மிய ‘ரோஹிங்க்யா’ முஸ்லிம்களைப் போன்று இருந்தது!

“ஏய் ட்டமில்வாலா!  துமாரா நாம் கிதர் ஹே?  இஸ் மே பத்தாவ்!” என்றான் காவலன்.  ஒருவாறு பாடுபட்டுத் தேடி, என் தாய்த் தமிழ் இதுதான் என்று கண்டுபிடித்தேன்.  அதில் எழுதியிருந்த பெயர் எனது பெயரன்று!

“ஏ மை நஹீன்.  மேரா நாம் இஸ் மே நஹீன்” என் பெயர் அதிலில்லை என்று மறுத்தேன்.  அடுத்து வந்தவை, அடி!  தள்ளல்!!

“ஹே போலோ யார்” – உண்டு என்று சொல்லப்பா என்றான் அடுத்து நின்ற ‘குற்றவாளி’.  அதனால், “ஹை” என்று சொல்லி, துடிக்கும் என் ஆட்காட்டி விரலை வைத்தேன்.  இல்லாவிட்டால், அடி விழும்!

சென்னையில் இருந்தபோது ‘ழுஹர்’ தொழுகை முடிந்தவுடன், “பசி பிக்கிது” என்று என் நண்பர் ஒருவர் வயிற்றில் கை வைப்பார்.  ஆனால், இன்று மும்பையில் அது, பற்றி எரிந்துகொண்டிருந்தது!  என்ன செய்வது?

எனக்குக் காவலாக நின்றவனிடம், முகத்தில் பரிதாபத்தைத் தேக்கி, வயிற்றைக் காட்டினேன்.

அவ்வளவுதான்!  “பூக் லக்தா ஹை?” என்று கேட்டு, வாயருகில் ஒரு குத்து விட்டான்!  ‘வலிக்குதா?’ என்று கேட்பது போல் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, “இஸ்கூ காவோ!  இஸ்கூ பீவோ” என்று, தான் சிகரெட் புகைத்துவிட்டு, சட்டென்று அனைக்க உதவிய கால் கிளாஸ் தண்ணீரையும், அடுத்துக் கிடந்த சிகரெட் பாக்கெட்டையும் காட்டினான்;  வற்புறுத்தவும் செய்தான்!

அதாவது வயிற்றுக்குள் போகட்டுமே என்ற நினைப்பில், சிகரெட் பாக்கெட்டைத் துண்டு துண்டாகக் கிழித்துத் தண்ணீரில் போட்டுக் குடிக்கலாம் என்று முடிவெடுத்தேன்!  அப்போது......

“அல்லாஹும்ம சல்லியலா செய்யதனா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதனா முஹம்மதின்.......” என்ற குரல் கேட்டது!  ‘இது, ‘தக்வாப் பள்ளி’ மோதினார் ஹாஜா ஷரீபின் குரல் அல்லவா?  இவர் எங்கே இங்கு வந்தார்?’ என்று வியந்து, கண்ணைக் கசக்கினேன்.  ஆம்;  அது நேற்றைய ‘ஸுப்ஹ்’ தொழுகைக்கான ‘பாங்கு’!

கனவு கலைந்தது!  எனக்கு ஏனிந்தக் கனவு?  “அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்” என்று என் வாய் மொழிந்தது.

விழித்தெழுவதற்கான ‘துஆ’வை மொழிந்துகொண்டு, எழுந்து ‘உழு’ செய்யப் போனேன், கண்ட கனவை அசை போட்டுக்கொண்டு!  

அதிரை அஹ்மத்

8 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். சாச்சா,

இன்று ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகம் படும் பாடு உங்களுக்கு ஒரு சேம்பிளாக இப்படி கனவாக வந்திருக்கலாமென்று நினைக்கிறேன்.

சில வேளை இப்படி சம்மந்தமே இல்லாத கனவுகள் வந்து எம்மை சல்லைப்படுத்தி விடுகிறது. அதன் பரிபூரண விளக்கத்தை படைத்தவனே நன்கறிவான்.

சில நேரம் பயங்கர கனவில் சப்தமிட்டிருக்கிறேன். அடுத்த நாள் காலை உங்கள் ரூமில் என்ன சப்தம் என அடுத்த ரூம்மெட் சொல்லவும் கேட்டிருக்கிறேன். அல்லாஹ் அஹ்ழம்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

பள்ளிப்பருவத்தில் பள்ளிக்கு எல்லா மாணவர்களும் கால்நடையாகவும், சைக்கிளிலும் சென்று கொண்டிருந்த சமயம், என் நீண்ட நாள் கனவான RX 100 YAMAHA Black வீட்டில் அடம் பிடித்து வாங்கி உள்ளுக்குள் ஏகப்பட்ட சந்தோசமும், குதூகலமும். அப்பாடா என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் பொழுது "காலையிலேர்ந்து சாங்காலம் வரை ஒரே விளையாட்டு சுபுஹுக்கு எழும்ப மட்டும் சடைப்பு" என்று அதட்டி என் அப்பா எழுப்பியதும் தான் தெரிந்தது. அடச்சீ கனவா இது என்று நொந்து கொண்டேன். வேறு வழி?

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

மே தோ 'டர்'ரீ கயா, யே க்யா ஹுவா ஹம்ரா ப்யாரா பாய்க்கோ சமஜ்கர்.

அல்லாஹ்னே பஜாயா யிஸ்கோ சப்னா பனாக்கர்.

அல்லாஹ் ஆப்கோ சாந்த் சலாமத் அவ்ர் லம்பே உம்ர்ப்பர் ரக்கே, ஆமீன்.

sabeer.abushahruk சொன்னது…

காக்கா,

இதோ என் பங்கிற்கு:

மரண ஒத்திகை?!

வளி மண்டலத்தின்
மொத்தப்
பிராண வாயுவும்
உறிஞ்சப் பட்டுவிட
எஞ்சிய
வெற்றிடத்தால்
மூச்சுத் திணறியது!

எண்பதுகளில்
திரைப்படத்தில் கண்ட
அசுர வடிவ
சுறா வொன்று
தன்
தாடைகள் அகட்டி
தலை கவ்வி
கழுத்தைக் கடிக்க
மூச்சுத் திணறல்
முற்றியது!

வேற்று கிரக
பறக்கும் தட்டிலிருந்து
இறங்கி வந்த
ராட்சதனின்
நாக்கு நீண்டு
தொண்டையத் துளைக்க
மூச்சுத் திணறல்
தீவிரமடைந்தது!

அமேஸான் காடுகளின்
அனகொன்டா வொன்று
கழுத்தைக் கவ்வி
அருவியில் ஏற
மூச்சு
முடங்கத்
துவங்கியது!

கருப்பு வெள்ளைக்
காலத்து
கடுமுக வில்லன்
தன்
கைகள் கொண்டு
என்
கழுத்தை நெறிக்க
உயிர் போவதை
உணர முடிந்தது!

ஆயினும்
எஞ்சிய
சொற்ப பலம் கொண்டு
கழுத்தை அழுத்திய
வில்லன் கைகளை
பிய்த்து எறிந்தேன்...

என்
கழுத்தின் மீது கிடந்த
தன்
கால்
உதறி யெறியப்படுவதை
உணராத
உறக்கத்திலிருந்த
என் மகன்
தன் தூக்கம் கலைந்து
மருண்டு விழிக்க...
வியர்வை துடைத்தெடுத்து
சுவாசம் சீரானதும்
மகனைக் கட்டிக்கொண்டு
மீண்டும் உறங்கலானேன்...

இந்தச்
சலனங்கள்
ஓய்ந்ததும்
இரா
தன் இருட்டை
மீண்டும்
கெட்டியாக்கி கொண்டது!
Abu Haajar Ahamed Firdhous Ahamed Ashraf சொன்னது…

கெட்ட கனவுகளை பிறரிடம் பகிராதிருப்பது தானே இஸ்லாம் கற்று தந்த வழிமுறை?

Adirai Ahmad சொன்னது…

நீங்கள் சொல்வது, ஒரு வகையில், சரிதான். இருப்பினும், நான் கண்ட கனவை ஒரு நிமிடம் என் மாற்றுச் சிந்தையில் ஓடவிட்டேன். அதை எழுத்துருவாக்கினால், அதன் மூலம் நம் சமுதாயத்திற்கு எதிராகக் கட்டவிழ்க்கப்படும் கொடுமைகள் பற்றிய நினைவூட்டலும், கொஞ்சம் spiceyயாக, நகைச்சுவை சேர்த்தால், சபீர் போன்றவர்களின் கவிதை நர்த்தனமாடுமல்லவா? மேலே கண்டீர்கள்தானே?

ZAKIR HUSSAIN சொன்னது…

சகோதரர் அதிரை அஹ்மது அவர்களுக்கு...இப்படி திடீர் என்று நீங்கள் ரிமோட்டை எடுத்து Zee Tv க்கு மாற்றினால் எங்களைப்போல் உள்ளவர்கள் எப்படி ??....

கீழே Sub Title கூட போடாமல் இனிமேல் படத்தை ஓட்டாதீர்கள்.

உங்களுடைய சப்பாத்தி பத்தாதுனு...சபீர் வேர தனியா சுடுறான்.

Bro MSM Naina...நான் முதலில் Yamaha RX100 ஓட்ட ஆரம்பித்த அன்று 'கொஞ்சம் Bulk ஆக இருந்த என்னுடன் வேலை பார்த்த ஹாஜா மாமூ சொன்னது "ஜார்சேன்...ஹேன்டிலை வலுவா புடிங்க....வேகமா போனா நீங்களே ப்ளாஸ்டிக் பை மாதிரி பறந்துடுவீங்களோனு யோசனையா இருக்கு ' [ அப்போதெல்லாம் அனியாயத்துக்கு நான் ஒல்லியா இருப்பேன். ]

Bro Abu Hajar..ஹீரோதான் கெடலையே..அதற்குள் கரண்ட் போயிடுச்சிலே...

அப்புறம் எப்படி "கெட்ட கனவா" ஆகும்.

Shameed சொன்னது…

கனவிலும் ஹிந்தியை திருத்தி கொடுத்த அதிரை தமிழர் அஹ்மது காக்கா அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+