நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 15
தித்திக்கும் திருமறையில் தன் திருத்தூதரைப் பற்றி அம்மக்களுக்கு அருளாளன் அல்லாஹ் (ஜல்) அறிமுகப்படுத்தும்போது;
"வேதம் கொடுக்கப் பட்டவர்கள் எவரும் தம் பிள்ளைகளைச் சந்தேகமில்லாமல் அறிவதைப் போல் நம் தூதராகிய இவரை (எல்லாம் வல்ல) இறைவனின் தூதர்தாம் என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள்தாம் இவரை நம்ப மாட்டார்கள்" (1) என்றும்; அதுமட்டுமின்றி,
அவர்களில் எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நம் தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான இவ்வேதத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள். (2) என்ற தேனமுத வார்த்தைகளால் மிகத் தெளிவாகச் சொல்கின்றான்.
ஆனால், எந்த இறைத் தூதரை அந்த யூதர்கள் எதிர்பார்த்து வந்து இத்தனை ஆண்டுகள் யத்ரிப் நகரில் குடியேறி வாழ்ந்து வந்தார்களோ, அதே அண்ணல் நபியை “நானிலம் போற்றும் நம்பிக்கையாளராக, இனிய இல்லறத் தலைவராக, மறை பெற்ற மாமணியாக, கொள்கை வழுவாத குரிசில் ஆக, வாய்மையிலே வரலாறு கண்டவராக, பொதுநலத்திற்காக தம் சுயநலத்தைத் துறந்தவராக” நிஜமாகவே நேரில் கண்ட போது, அவர்கள் அடியோடு மாறிப் போனார்கள். காரணம், இனத் துவேஷமும் அதனால் எழுந்த கடும் பொறாமையும் தவிர வேறெதுவுமில்லை!
மதீனாவின் பூர்வீகக் குடிகளான 'அவ்ஸ்'களுக்கும் 'கஸ்ரஜ்'களுக்கும் இடையே சிண்டுமுடிந்து பெரும் சண்டைகளை மூட்டிவிட்டு, அந்தக் கலவரத்தின் கதகதப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த குள்ள நரிக்கூட்டத்தை, அந்த மாமனிதரின் அரிய வரவு அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது!
பேரொளியைக் கொண்டுவந்த பெருமானார் (ஸல்) வருகைக்குப் பின் இனச் சண்டையெல்லாம் இல்லாமல் போனது! அண்ணல் நபி (ஸல்) போதித்த அன்பும் அமைதியும் நடந்து காட்டிய நட்பும் நாகரீகமும் மதீனாவின் மக்களுக்கு பெருமகிழ்வை அளித்தது!
கண்ணிருந்தும் காரிருளில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்காக, கை மறைப்பில் ‘ஓரிறைக் கொள்கை’ என்னும் மங்காத மணிவிளக்கை ஏந்திவந்த மகிமை நபியின் மாண்பான வரவின்போது; "மதீனத்து மண்ணும் அவர் நடந்தால் மின்னியது பேரீச்சை மரமும் அந்தப் பெருமானிடம் பேசியது! (3) மலையும் மகிழ்ந்து அசைந்தது! மாநிலம் புகழ்ந்து போற்றியது! மாநபி ஏந்திவந்த இறையருள் வேதம் ஊரெங்கும் ஒலித்தது மதீனாவே புதினமாகி அங்கே மறைமணம் சூழ்ந்தது, மக்கள் மனமெல்லாம் நிறைந்தது!"
ஆனால், யூதர்களுக்கு மட்டும் குரோதம் கொழுந்து விட்டு எரிந்தது! இயல்பிலேயே கபடமும் சூழ்ச்சியும் கொண்டிருந்த யூதர்கள், நம் இனிய நபியையும் இஸ்லாத்தையும் இல்லாமல் ஆக்கிவிட என்னென்ன தகிடுதித்தம் செய்யமுடியுமோ, கொலை முயற்சி உட்பட அத்தனை நயவஞ்சகத்தையும் அரங்கேற்றிப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் விரித்த வஞ்சக வலையில் பலமுறை அவர்களே விழுந்தார்கள். (உதாரணம்:பனீ குரைளா, பனீ நதீர்)
ஹிஜ்ரீ 7ஆம் ஆண்டில் கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, “அனிச்ச மலரின் மென்மை மனமும், அழகுத் தாழை மடலின் குணமும், பனி நீர் போன்ற தூய உள்ளமும் கொண்ட” இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அந்த வஞ்சகர்களால் விஷம் தடவப்பட்ட ஆட்டிறைச்சி அன்பளிப்பாகத் தரப்பட்டது. ஜிப்ரீல் மூலம் விஷயம் தெரிந்தவுடன் ஞானத்தின் திறவுகோல் நாயகம் (ஸல்) அவர்கள், 'இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நேர்மை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.
அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் , 'நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் 'சரி. உண்மையைச் சொல்கிறோம், அபுல்காசிம் அவர்களே!' என்று பதிலளித்தார்கள்.
அப்போது தகைமை நபி (ஸல்) அவர்கள் 'உங்கள் தந்தை யார்?'என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'எங்கள் தந்தை இன்னார்' என்று பதிலளித்தார்கள். உடனே மகிமை நபி (ஸல்) அவர்கள், 'பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தாம்' என்று கூறினார்கள். யூதர்கள், 'நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள்; நன்மையைச் சொன்னீர்கள்' என்று கூறினார்கள்.
அறிவின் அருவியான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'நான் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?' என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கவர்கள், 'சரி, அபுல் காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே இதையும் அறிந்து கொள்வீர்கள்' என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நரகவாசிகள் யார்?' என்று கேட்டார்கள்.
அதற்கு ‘பேருக்குத் தாடி வைத்து பெருமைக்குத் தொப்பி அணிந்திருந்த’ அந்த யூதர்கள், 'நாங்கள் அந்த நரகத்தில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்' என்று பதிலளித்தார்கள்.
இதைக் கேட்ட, அறிவுப் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம், 'அதில் நீங்கள் தாம் இழிவடைவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புகமாட்டோம்' என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களிடம்,
'நான் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'சரி' என்று கூறினர். அப்போது பொறுமை நபி (ஸல்) அவர்கள், 'இந்த ஆட்டிறைச்சியில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஆம். கலந்திருக்கிறோம்' என்று பதிலளித்தார்கள். அப்போது அண்ணலார் (ஸல்)அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'நீங்கள் பொய்யராக இருந்து, விஷத்தின் மூலம் இறந்தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அந்த விஷமானது தீங்களிக்காது' என்று பதிலளித்தார்கள்.(4)
சுற்றி நின்ற நபித் தோழர்கள் கொதித்தெழுந்தபோது, ‘பெருமானாரின் பெருந்தன்மை மட்டும் மனிதாபிமானம் என்ற மலை உச்சியைத் தொட்டு நின்றது!’ அந்த மனித நேயத்தின் மகத்தான தொடர்ச்சியாக, ‘மன்னிப்பு’ என்ற மாண்பை அங்கேயே அரங்கேற்றினார்கள் அருங்குண சீலர் அண்ணல் நபியவர்கள்.
ஆனால், அந்தப் படுபாவி யூதர்கள் பச்சாதாபப்பட்டார்களா என்றால், இல்லவே இல்லை! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பொய்யரல்லர்! முற்றிலும் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கும் ஒரு முத்திரை நபி தான் அவர் என்பதை ஒரு சித்திரை நிலவுபோல் நேருக்கு நேர் கண்டும் தங்களின் அழிச்சாட்டியத்தினால் அழிந்து போகவே விழைந்தார்களே தவிர, யூதர்களில் பெரும்பாலோர் இறுதிவரை திருந்தவே இல்லை!
யூதர்களின் வியாபாரத் தந்திரம்:
கல்பில் நிறைந்த கருணை நபி (ஸல்) அவர்கள் புனித கஃபாவின் ஒரு மூலையில் அமர்ந்து இருந்ததை நான் கண்டேன். அப்போது வாஞ்சை நபியவர்கள் தம் பார்வையை வான் நோக்கி செலுத்தினார்கள். பின்னர், யூதர்கள் கையாளும் தந்திரத்தைக் கண்டு, சிரித்தார்கள்.
"அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக!" என்று மூன்று முறை கூறிவிட்டு, "அல்லாஹ் (ஜல்), யூதர்களுக்குக் கால் நடைகளின் கொழுப்பைச் சாப்பிடுவதைத் தடை செய்திருந்தான். ஆனால், அவர்களோ, அக்கொழுப்பை உருக்கி விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்திலிருந்து சாப்பிடலானார்கள். ஆனால், உண்மையாக அல்லாஹ் (ஜல்) ஒரு சமூகத்தினருக்கு ஒரு பொருளை உண்பதைத் தடை செய்துவிட்டால், அந்தப் பொருளை விற்ற கிரயத்தை உண்பதும் தடையாகி விடும்" என்று கூறினார்கள். (5)
மதீனத்து மன்னர் சுவைத்துச் சாப்பிட்ட மீன்:
சிரியாவில் இருந்து சரக்குகளுடன் வந்து கொண்டிருந்த எதிரிக் கும்பலை இடைமறிப்பதற்காக அபூ உபைதா (ரலி) தலைமையில் முன்னூறு பேர் கொண்ட ஒரு சிறு படை அனுப்பப்பட்டது. ஒரு படை வீரருக்கு ஒரு நாளைக்கு ஒரு பேரீத்தம் பழமே அனுமதிக்கப்பட்டது. அதுவும் தீர்ந்துவிடவே, பெருமானாரின் படையினர் இலை தழைகளைச் சாப்பிட்டு வந்தனர். எனவே, இதற்கு 'இலைப்படை' என்று பேரானது!
இறுதியாக கருணையுள்ள இறைவன், பசியால் வாடித் தவித்த நபித்தோழர்களுக்கு அவர்கள் கடலை வந்தடைந்தபோது ஒரு வகைத் திமிங்கில மீனைக் கரை ஒதுங்கச் செய்து, அதன் மூலம் உணவளித்தான்! அது எந்த அளவுக்கு ராட்சஷ மீன் என்றால், அதன் விலா எலும்பு வழியாக ஒருவர் தன் ஒட்டகத்தில் பயணம் செய்துவிடலாம். அதன் அகன்ற கண்களில் நான்கு பேர் தாராளமாக அமர்ந்திருக்கலாம். 18 நாட்கள் அந்தப் புனிதப் போராளிகளுக்கு உணவாக அமைந்தது அந்த அற்புதமான மீன்! அந்த மீனிலிருந்து பானை பானையாக அருமையான ஒரு வகை எண்ணெயை வழித்தெடுத்து, தங்கள் உடலில் தேய்த்துக் கொண்டனர் சஹாபாக்கள். அதன்மூலம் ஊட்டச்சத்து இன்மையால் வறண்டு போயிருந்த அவர்களின் சருமத்திற்குச் சற்றுப் பொலிவும் புத்துயிரும் கிடைத்தன!
மதீனா சென்றடைந்ததும் சத்தியத் தூதர் (ஸல்) அவர்களிடம் சம்பவங்களை விவரித்தனர் சஹாபாக்கள்.
"அது உங்களுக்கு அல்லாஹ் (ஜல்) தேர்ந்தெடுத்து அனுப்பிய 'பரக்கத்' ஆன அருள் உணவாகும்." என்றார்கள். பின்னர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு, " அதில் ஏதாவது மீதம் இருக்கிறதா? " என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதருக்கு ஒரு துண்டு மீன் கொடுக்கப்பட்டது. அதனைப் பெற்று, மிகுந்த ரசனையுடன் ரசித்து ரசித்துச் சாப்பிட்டார்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள். (6)
வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ் (ஜல்) தன் அருள்மறையிலே கூறுகின்றான்:
சத்தியத்தின்பால் வழிகாட்டும் ஒரு கூட்டத்தார் மூஸாவின் சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் (தாங்கள் சத்திய வழியில் செல்வதுடன், மக்களுக்கும்) சத்திய வழியை அறிவித்து, அதன்படி நீதமாகவும் நடக்கின்றனர். (7)
அல்லாஹ் (ஜல்) குறிப்பிடும் அவர்களில் ஒருவர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) ஆவார். அவர் ஒரு கண்ணியமான, நேர்மையான ஓர் அறிஞராக இருந்தார். அது மட்டுமின்றி, இறுதி நபியைப் பற்றிய வர்ணனைகளை அவர்தம் வேதத்திலிருந்து தெளிவாகப் பின்வருமாறு அறிந்து வைத்திருந்தார்:"
நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியமளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பி இருக்கின்றோம். நீர் எமது அடிமையும் தூதரும் ஆவீர். தனது எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ்வையே நம்பிய 'முதவக்கில்' என்று உமக்கு பெயரிட்டுள்ளேன்"
மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
இறுதி நபியாகிய அவர் கடுமையான சுபாவம் கொண்டவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுபவராகவோ இருக்க மாட்டார். மாறாக, பெருந்தன்மையுடன் மன்னித்து விட்டுவிடுவார். வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தும்வரை அல்லாஹ் (ஜல்) அவரது உயிரைக் கைப்பற்ற மாட்டான். அவரது மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சாட்சியம் கூறுவர். அதன் மூலம் குருடான கண்களும், செவிடான காதுகளும் மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும். (8)
தவ்ராத்'திலிருந்து மற்றுமோர் அறிவிப்பாவது:
திருத்தூதர் (ஸல்) அவர்களின் பண்பைப் பற்றிய தவ்ராத்தில் உள்ள விவரணை ஆவது:
அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது, மக்காவில் பிறப்பார். தாபத் (மதீனாவின் அசல் பெயர்) என்ற ஊருக்குப் பயணம் (ஹிஜ்ரத்) மேற்கொள்வார். அவருடைய நிர்வாகம் சிரியா வரை இருக்கும். அவர் இழிச் செயல் உடையவரல்லர். கடைத்தெருக்களில் நின்று கூச்சல் இடுபவரும் அல்லர். தீமைக்குத் தீமையே பரிகாரம் காண்பவரும் அல்லர். மாறாக, தனக்கிழைக்கப்பட்ட குற்றங்களை அவர் மன்னிப்பார். இரக்க குணமுடையவர். இன்பத்திலும் துன்பத்திலும் அல்லாஹ்வையே புகழ்ந்திடும் அவரது சமூகத்தினர் அவர்களின் ஒவ்வொரு கஷ்டத்திலும் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்துவார்கள். உடலின் ஓரங்களைக் கழுவித் தூய்மை (உலூ) செய்வார்கள். மறைவுப் பகுதிகளை மறைப்பார்கள். அவர்கள் போருக்கு அணிவகுத்து நிற்பதுபோல, தொழுகைக்கு அணிவகுத்து நிற்பார்கள். அவர்களின் பள்ளிவாயல்களில் (இறைவனைத் துதிக்கும்) அவர்களின் சப்தம் தேனீயின் ரீங்காரத்தைப் போல் இருக்கும். அந்த ரீங்கார சப்தம் வான் வெளியில் எதிரொலிக்கும். (9)
முதன்முதலாக, மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அந்த உத்தமரைக் கண்டபோது, மக்களுக்கு சிறிய உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
சிறிதாயினும் அழகிய உரை: "மக்களே! ஒவ்வொருவரும் ஸலாம் சொல்லிக்கொள்ளுங்கள். பசியாக இருப்பவர்களுக்கு உணவளியுங்கள். பிறர் தூங்கிக் கொண்டிருக்கையில் நீங்கள் தொழுது கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் சுவனம் நுழைவீர்கள்".
முதன்முறைதான் பார்த்தாலும் அவருக்கென்னவோ பல காலம் பழகியதுபோல் உணர்ந்தார்! “நிரந்தரமாய்ப் பூத்திருக்கும் புன்னகையால் சிவந்தக் கனிவாயும், மென்மையான அழகில் தாமரையை வெல்லும் மலர்ந்த கைகளும், ஞான ஒளி வீசிநின்ற பரந்த நெற்றியும், யாழைத் தோற்கடிக்கும் இனிய பேச்சும், அரம்பையரும் விரும்பும் அழகுத் தோற்றமும் கண்டு” அவர் அண்ணலின் அருகே வந்தார். மீண்டும் மீண்டும் அவர் வேதத்தில் அடிக்கடிப் படித்துப் பார்த்துகொண்ட வர்ணனைகள் அவர் மனதில் அப்படியே படமாய்ப் படிந்திருந்தது. அந்தத் தன்மைகள் அனைத்திற்கும் உயிர் வந்து அவர் முன் உருவமாய் நின்றதைக் கண்டார். சத்தியத் தூதரை அணுகி சாட்சி பகர்ந்தார். அன்றிலிருந்து அவர் வாழ்வில் புது வசந்தம் வீசுவதை அவர் உணர்ந்தார். ஆனால், முன்பு அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய யூதர்கள், அவர் இஸ்லாத்தை வாழ்வு நெறியாக ஏற்றுக் கொண்டதும் அவரை இழித்துப் பேசிக்கொண்டே இருந்தனர். உண்மையை அதன் முழுப் பரிமாணத்தில் உணர்ந்த பிறகு, வேறென்ன விமர்சனம் பற்றிய கவலை! அவர் பிறந்த சமூகத்தை அவருக்குத் தெரியாதா என்ன!
ஒருமுறை, சாந்தமே தவழும் நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபச்சாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள். அப்போது, ஞானத்தின் ஒளிவிளக்கு நாயகம் (ஸல்) அவர்கள், 'உங்களில் விபச்சாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள்.
அவர்கள் 'நாங்கள் அவ்விருவரையும் அவர்களின் முகங்களில் கரும்புள்ளியிட்டு அடிப்போம்' என்று கூறினர்.
அருள்மறை கொண்டு வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'உங்கள் வேதமான தவ்ராத்தில் விபச் சாரம் செய்தவருக்கு 'ரஜ்கி' என்ற சாகும்வரை கல்லால் அடிக்கும் தண்டனையை நீங்கள் காணவில்லையா?' என்று கேட்க,
‘ஊருக்கு உபதேசமும் ஆனால், உள்ளத்தில் படுமோசமுமாக இருந்த’ அந்த யூதர்கள், 'அப்படி ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை' என்று பதிலளித்தனர். உடனே, உண்மை மார்க்க அறிஞராயிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), யூதர்களிடம், 'பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது.
அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் 'ரஜ்மு' தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து மறைத்துக்கொண்டு தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். கைக்குக் கீழே உள்ள ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, 'இது என்ன?' என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, 'இது ரஜ்முடைய வசனம்' என்று கூறினார்கள்.
எனவே, விபச்சாரம் புரிந்த அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நீதி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது.
அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவளின் மீது கவிழ்ந்து கொள்வதை நான் பார்த்தேன். (10)
யூத அறிஞர்களுள் மற்றொருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, "முஹம்மதே! மறுமை நாளில் தூயோன் அல்லாஹ் (ஜல்) வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும் மரங்களை ஒரு விரல் மீதும் தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும் இதர படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு,
"நானே ஏகாதிபத்தியம் உள்ள அரசன்" என்று சொல்வான் என்பதை எங்களின் வேத நூலான தவ்ராத்தில் கண்டோம்! என்று கூறினார்.
அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த யூத அறிஞரின் கருத்தை உண்மைதான் என்று ஆமோதிக்கும் விதத்தில் 'அவர்களின் கடைவாய்ப்பற்கள்’ தெரியச் சிரித்தார்கள்.
பின்னர், "அல்லாஹ்வை அவர்கள் மதிக்க வேண்டிய விதத்தில் கண்ணியப்படுத்தவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும். வானங்கள் அவன் வலக்கரத்தில் சுருட்டப்பட்டு இருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன். மிக்க உயர்ந்தவன்" எனும் 39:67வது இறைவசனத்தை எங்களுக்குக் குர்ஆனிலிருந்து ஓதிக் காட்டினார்கள். (11)
தம் தோழர்களுக்கிடையே மாண்புமிகு தூதர் (ஸல்) அவர்கள் மறுமை நாள் பற்றிய ஒரு சிறிய உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்:
'மறுமை நாளில் இந்த பூமி அடுப்பில் இருக்கும் ஒரு ரொட்டியைப் போன்று சமதளமாக மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்துப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த இறைவன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப்போடுவான். அதையே சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்' என்று கூறினார்கள்.
சற்று நேரத்தில், அந்த சபையைக் கடந்து போய்க் கொண்டிருந்த யூத அறிஞர்களுள் ஒருவர் அங்கு சற்று முன் என்ன பேசப்பட்டது என்பதை அறியாமல், மனிதரில் புனிதர் மாநபி (ஸல்) அவர்களின் அருகில் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். அதற்கு, பண்பான நபி பெருமான் (ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்' என்று கூறினார். அப்போது, அனைவரையும் நேசிக்கும் அருமை நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ‘கோடைமழையின் சாரல் போலக் குளிர்ச்சியாகச் சிரித்தார்கள்!’
பிறகு இன்னுமொரு செய்தியை உங்களுக்குச் சொல்லவா? என்று கேட்டுவிட்டு,
'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு அப்போது எதுவென்று தெரியுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு; அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'அப்படியென்றால் அது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் 'அவை காளை மாட்டின் ஈரலும் மீனின் சினையும் ஆகும்.' அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை மட்டுமே சொர்க்கவாசிகளில் எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்' என்று கூறினார். (12)
பழைய ஏற்பாடு என்றாலும் புதிய ஏற்பாடு என்றாலும் அல்லது 'வேறு எந்த ஏற்பாட்டை' அவர்கள் செய்தாலும் சத்தியம் என்றும் ஒளிவீசவே செய்யும் அசத்தியம் அழிந்துவிடும் என்பதை இதோ காண்போம்:
சகல ஜாதிகளிலும் (விரும்பப்பட்டவர் ஆகிய) அஹ்மது வருவார்: (ஆகாய் 2:7)
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்தும் மட்டும் சளைப்பதும் இல்லை. பதறுவதுமில்லை. அவருடைய வேதத்திற்குத் தீவுகள் காத்திருக்கும்: (ஏசாய் 42:4)
அவர் வந்து பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும் நியாயத் தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்தும் உணர்த்துவார்: (யோவான் 16:8)
வேதம் அருளப்பட்டவர்கள் என வீண் பெருமை கொண்டிருந்தாலும், அவர்கள் மறையிலேயே அஹ்மது நபி (ஸல்) அவர்களின் பெயர் தெள்ளத் தெளிவாகப் பொறிக்கப் பட்டிருந்தும், அதே சத்தியத் தூதர் அவர்கள் கண்ணெதிரே அந்த வர்ணனைகளின் முழு வடிவில் அவ்வேதம் உரைக்கும் முழு அர்த்தங்களுடன் நிற்பதைக் கண்டும், அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விசுவாசம் கொண்டார்களா என்றால், இல்லவே இல்லை! மாறாக, கொலை செய்யவும் முற்பட்டார்கள்!
இவ்வாறு, அல்லாஹ்வின் திரு வசனங்களை மறுத்துக் கொண்டும் அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டும் அவனது கட்டளைகளை மீறிக் கொண்டும் அவன் அருளாய் அனுப்பிய அவன் தூதர்களையே கொலை செய்துகொண்டும் உண்மை வேத வரிகளை மாற்றி, விருப்பம்போல் எழுதி வைத்துக் கொண்டும் 'அல்லாஹ்வின் கை கட்டப் பட்டிருக்கின்றது!' (13) என்று அச்சமின்றி ஆணவத்துடன் பிதற்றிக் கொண்டும் திரிந்ததனாலேயே, கண்ணியத்திற்கும் பெருமைக்கும் உரிய அல்லாஹ்வின் சாபத்திற்கு என்றென்றும் அவர்கள் ஆளாகிவிட்டனர்.
இத்தகு இழிவான நிலையிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமூகத்தினராகிய நம்மை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் (ஜல்) காப்பாற்றுவானாக! சத்தியத்தின் ஒளி நம் உள்ளங்களில் பிரகாசிக்கச் செய்வானாக! சாந்தியின் பக்கம் நம்மை நடத்துவானாக. ஆமீன்!
o o o 0 o o o
ஆதாரங்கள்:
(01) அல்குர்ஆன் 6:20
(02) அல்குர்ஆன் 7:157
(03) புஹாரி 918: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(04) புஹாரி 5777: அபூஹுரைரா (ரலி)
(05) அபூதாவூத் 3488: இப்னு அப்பாஸ் (ரலி)
(06) புஹாரி 4360: வஹ்ப் இப்னு கைஸான் (ரஹ்)
(07) அல்குர்ஆன் 7:159
(08) சுனன் தாரிமி 6: அபூவாகித் அல்லைதீ (ரலி)
(09) சுனன் தாரிமி 8: கஃபுல் அஹ்பார் (ரலி)
(10) புஹாரி 4556: இப்னு உமர் (ரலி)
(11) புஹாரி 4811: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
(12) புஹாரி 6520: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
(13) அல்குர்ஆன்: 5:64
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M. ஸாலிஹ்
3 Responses So Far:
மாஷா படிக்க படிக்க தெவிட்டாத தேனமுது.....நன்றி காக்கா..
அஸ்ஸலாமு அலைக்கும் இக்பால் காக்கா,
எத்தனை முறை உங்கள் வர்ணனையை வாசித்தாலும் சலிப்படையாது.
அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக.
//“நானிலம் போற்றும் நம்பிக்கையாளராக, இனிய இல்லறத் தலைவராக, மறை பெற்ற மாமணியாக, கொள்கை வழுவாத குரிசில் ஆக, வாய்மையிலே வரலாறு கண்டவராக, பொதுநலத்திற்காக தம் சுயநலத்தைத் துறந்தவராக”//
இந்த வர்ணனையில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு பொன்னான வரலாறுகள் உள்ளது.
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்து, தூய இஸ்லாத்திற்க்காகா மென்மேலும் பணியாற்ற நல்லருள் புரிவானாக.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி யாஸிர் அபுசாஜித் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் காணும்போது மகிழ்வாக இருக்கிறது. நன்றிகள்!
அதிரை நிருபர் ஆசிரியர் குழுவின் தலையாயவர் ஆன தம்பி தாஜுத்தீன் அவர்களின் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. இந்த துஆவை மட்டுமல்லாமல், தாங்கள் சமீபத்தில் செய்துவந்த தங்களின் 'உம்ராவின்' துஆக்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் கபூல் செய்து கொள்வானாக! ஆமீன்.
Post a Comment