Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெண் இமைக்குள் ஆண்மை ! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2015 | , ,


ஏதோவொரு  மூலையில்
முடங்கிய என் மீது
நீங்கள் தான் வெளிச்சம் பாய்ச்சினீர்கள்

பத்துபைசாவிற்குக்கூட  பிரயோஜனமற்ற
என் சிறுபிள்ளைத்தன கேள்விகளுக்கும்
மதிப்பளித்து விடையளித்தீர்கள்
பொறுப்பான தந்தையாய்

கேலி செய்யும்
குட்டிச்சுவர்வாசிகளும்
தெரு ஆக்ரமிப்பு ஜந்துக்களும்
எனைமட்டும் சீண்ட
பயங்கொள்ளச் செய்தீர்கள்
காவல்வரும் சகோதரனாய்

கற்றது போதுமென
உங்களை கரம்கோர்த்தபோது
அதே கரத்தில் ,
லட்சியங்களை நிறைவேற்ற
சத்தியபிரமாணம் வாங்கிகொண்டீர்கள்
வழிகாட்டும் கணவனாய்

அடுப்படி மேலாண்மை பயில
ஆவல்கொண்ட போது
யுவான்ரிட்லியையும், தவக்குல் கர்மானையும்
அறிமுகப்படுத்தி
எனக்குள் சாதிக்கும் வெறியை விதைத்தீர்கள்
பெண்மை மதிக்கும் ஆசானாய்

புத்தகமெனும் உற்றத்தோழனை
பரிசளித்து
என்னை மெல்ல மெல்ல செதுக்குனீர்கள்
உயர்ந்த தோழனாய்

கண் கொத்த  கழுகுகளும்
வீழ்த்தி விட  வல்லூறுகளும்
படையெடுத்து காத்திருக்கையில்
பாதுகாப்பு அரணாய் எனை காத்தீர்கள்
பொறுப்புள்ள சமுதாய அங்கத்தவனாய்


போதுமென முடங்கி கிடந்தபோதெல்லாம்
பாதைகளை வகுத்து பயணிக்கச் செய்தீர்கள்
உன்னதமான வாழ்க்கை வழிகாட்டியாய்

குறைகளை பக்குவமாய் சொன்னீர்கள்
என் கோபங்களில் ஒளிந்திருக்கும் நியாயங்களை புரிந்தீர்கள்
திமிரினை ரசித்தீர்கள்
என் பேச்சுக்களுக்கு ரசிகனாய் இருந்தீர்கள்

பெண்ணின் மனதை
பெண்ணால் தான் அறியமுடியுமென்ற
வாழையடி வாழை நம்பிக்கைகளையெல்லாம்
வேரோடு சாய்த்து
என் ஆதங்கங்களையும் ஆசைகளையும் உணர்ந்தீர்கள்

நான் யார் என்பதையே
நீங்கள் தான் அறியத் தருகிறீர்கள்
என் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
உங்கள் பங்களிப்பே ஆக்ரமித்திருக்க
எப்படி என் வாயால் பேசுவேன்
ஆண்களை மட்டும் குறை கூறும் பெண்ணியத்தை ???

ஆமினா முஹம்மத்

வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2015 | ,


மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மிகமுக்கியமானவைகளில் ஒன்று வெகுதூரத்தை விரைவில் கடந்துசெல்ல ஏதுவாக கண்டுபிடித்த இயந்திரங்களாகும்.

இந்தக் கண்டுபிடிப்பால்தான் உலகம் பரந்து விரிந்து அனைத்தும் தொடர்பில் இருக்கிறது. இல்லையேல் ஒவ்வொரு பகுதிகளிலும் மனிதர்கள் திட்டுத்திட்டாக தொடர்பில்லாமல் குறுகிய வட்டத்திற்குள் வாழும்படி ஆகி இருக்கும். வெற்றுப்பகுதியோ வேறு நாடுகளோ அறியாமல் போய் இருக்கும்.

மனிதன் இவ்வுலகில் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்க்குச் செல்ல வேண்டுமானால் ஏதாவது ஒரு வாகனம் தேவைப்படுகிறது. பண்டைய காலப்பயணத்தை கால்நடையாக ஆரம்பித்து பிறகு கால்நடை விலங்கினங்களான ஒட்டகம்,குதிரை, கழுதை,மாடுகளென இவ்வகை விலங்கினங்களின் மேல் அமர்ந்து பயணம் மேற்க்கொள்ளப்பட்டு வந்தது.

பிறகு இவ்விலங்கினங்களை கட்டை வண்டியுடன் இணைக்கச்செய்து சற்று சவுகரிகமாக அமர்ந்து பயணத்தை மேற்கொண்டனர். இப்படித்தான் வெகுகாலமாக மனிதனின் பயணம் தொடர்ந்தது. பிறகு விஞ்ஞானமும், நாகரீகமும், படிப்படியாக வளர்ந்து மனிதனின் தேவைகள்கூடி பயணங்கள் துரிதமாகத் தேவைப்பட்டன. ஆகவே அதிவேகப் பயணத்திற்கான ஆயத்தத்தில் புதுப்புது கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிக்க அடியெடுத்து வைக்கத் தொடங்கினர். அதன் ஆரம்ப கட்டமாக மிதிவண்டியில் தொடங்கி ரிக்க்ஷா,மோட்டர் சைக்கிள்,ஆட்டோ,கார்,பஸ்,லாரி,கண்டினர்கள் என பற்ப்பல வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு சாலைகளில் பெருகி ஓடத்துவங்கின.அத்துடன் நீராவியால் இயங்கும் புகைவண்டி, நிலக்கரியில் இயங்கும் இரயில் ,டீசலில் இயங்கும் இரயில், மின்சார இரயில், இப்போது மெட்ரோ இரயில் என தண்டவாளத்தில் செல்லும் இரயில்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றியுடன் ஓட ஆரம்பித்தது.

அடுத்து பார்ப்போமேயானால் கடல் வழிப் பயணம் இது பண்டைய காலத்திலிருந்து இப்பயணம் மேற்க்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பயணத்திற்கு கப்பல், பாய்மரக்கப்பல், விசைப் படகு, நாட்டு படகு என தண்ணீரில் பயணிக்க வசதியாக கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்துப் போக்குவரத்துப் பயணத்தையும் விஞ்சும் வகையில் ஹெலிகாப்டர், ஏரோபிளேன், .என அடுத்த இலக்கை ஆகாயத்தில் பறந்து சென்று விரைவுப்பயணம் மேற்க்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது. நாடு விட்டு நாடு போகும் நாட்கணக்கான தூரத்தை 4,5 மணி நேரப்பயணத்தில் காலை உணவை தமது வீட்டிலும் பகல் சாப்பாட்டை பல்லாயிர மைலுக்கப்பால் இருக்கும் வேறு ஒரு நாட்டிலும் சாப்பிடும்படியான விரைவுப் பயணக்கண்டுபிடிப்பு ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்புதானே.!

இப்படி அசுர வேகத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணக்கருவிகளும் கண்டுபிடித்ததால் மனிதர்களின் நெடுந்தூரப் பயணங்கள் இலகுவாகவும் விரைவாகவும் அமைந்திருக்கிறது.

இத்தோடு நின்று விடாமல் இன்னும் அதிக தூரப் பயணமான விண்வெளிப் பயணம்,வேற்று கிரகமான சந்திரனுக்கு சென்றுவர ராக்கெட்பயணமென தொடர்ந்து அத்தோடும் முடிவு பெறாமல் இதுவரையான பயணக் கண்டுபிடிப்புக்கள் அனைத்தையும் விழுங்கும் அளவிற்கு எல்லாவற்றையும் விட வெகுதூரத்திலுள்ள வேற்று கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்திற்கு போய் மனிதர்களை குடியமர்த்த முயற்ச்சிக்கும் அளவுக்கு இந்தப் பயணக் கண்டுபிடிப்புக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கின்றது

அன்று நாள் முழுதும் பயணித்த தூரத்தை இன்று 1, 1/2, 1/4 மணிநேரத்தில் கணக்கிட்டுப் பயணிக்கும்படியான பயணக் கண்டுபிடிப்புக்கள் யாவும் வியக்கத்தக்கதேயாகும். ஒரு நிமிடம் சிந்தித்தால் மனிதனின் இந்தப் பயணக்கண்டுபிடிப்புக்கள் மிகவும் வியப்பில் ஆழ்த்தத்தான் செய்கிறது.!!!

அதிரை மெய்சா 

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 4 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2015 | ,


உலகிலேயே அதிகமான மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மார்க்கம் இஸ்லாம் என்று குறிப்பிட்டு இருந்தோம். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் ஆய்ந்து அறிந்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத - ஆசைப்படாத பலர் முஸ்லிம்கள் என்று பெயரளவில் வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைப் பார்த்துவிட்டு இதுதான் இஸ்லாம் போலிருக்கிறது என்று தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். 

ஆங்கிலத்தில் PERCEPTION என்றொரு வார்த்தை உண்டு. அந்த வார்த்தை மனோதத்துவ இயலுடன் தொடர்புடையது. ஒரு விஷயத்தைப் பற்றி முழுதாக ஆய்ந்து அறியாமல் வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு , அந்த விஷயத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதே PERCEPTION ஆகும். இந்தவகை அறியாதவர்களின் இலக்குக்கு இஸ்லாம் பலவகையிலும் இரையாகி இருக்கிறது. 

முதலில் நன்கு ஆராயாமல் முஸ்லிம்களின் மீது வைக்கப்படும் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் சிலவற்றைப் பார்க்கலாம். அத்தகையோரின் பார்வையில் இவ்வளவுதான் இஸ்லாம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 

முஸ்லிம்கள் அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள்; முஸ்லிம் பெண்கள் ஏராளமான தங்க நகைகளை அணிபவர்கள், முஸ்லிம்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள்; பெரிய வீடுகளைக் கட்டுகிறார்கள்; வெளிநாடுகளுக்குப் போய் நிறைய சொத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் போடுகிறார்கள்; அவர்களுடைய திருமணங்கள் பெரும் செலவில் நடத்தப் படுகின்றன; திருமண விருந்துகளும் பலவாறு அமர்க்களமாகவும் ஆடம்பரமாகவும் பலநாட்களுக்கு நடத்தப் படுகின்றன; எல்லா வகை விசேஷங்களிலும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்; ‘ தின்று கெட்டான் துருக்கன்’ என்ற பெயரே அவர்களுக்கு இருக்கிறது; முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்; நிறைய குழந்தைகளைப் பெறுகிறார்கள் ; குடும்பக்கட்டுப்பாட்டை அனுசரிப்பதில்லை; பெண்களுக்கும் கூட கணவன் இறந்துவிட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ அடுத்தவருக்கு திருமணம் செய்து வைப்பார்கள்; கடைகளையும் வணிக நிறுவனங்களையும் நடத்துவதில் காட்டும் ஆர்வத்தை கல்வி கற்பதில் காட்ட மாட்டார்கள்; அரசு வேலைகளுக்கு செல்லமாட்டார்கள்; பெண்களை வீட்டுக்குள் போட்டு பூட்டிவைப்பார்கள். ஆடுமாடுகளை இரக்கமில்லாமல் கணக்கின்றி கொல்கிறார்கள்; 

இவ்வாறெல்லாம் பரவலாக முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இவை அனைத்துமே வெறும் குற்றச்சாட்டுகள் என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட இயலாது. இவற்றுள் சில விஷயங்களில் முஸ்லிம்கள் இழைக்கும் குற்றங்களும் கணிசமான அளவுக்கு இருக்கவே செய்கின்றன. இத்தகைய நிலை ஏற்படுவதற்கு இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் மட்டும்தான் காரணமா? இல்லை! இஸ்லாத்தை கடைப்பிடிக்கிறோம் என்று வாயளவில் கூறிக்கொண்டு இஸ்லாமிய போர்வை போர்த்தி  வாழ்பவர்களும் – இஸ்லாத்தைப் பற்றிய தெளிவுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லாதவர்களும் ஒரு கணிசமான அளவுக்குக் காரணம்தான் என்பதை நேர்மையாக நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். 

அதே நேரம் விளங்காத அடிப்படையில் அநியாயமான குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு உதாரணமாக ஆடம்பரத் திருமணங்களும் விருந்துகளும் நடத்துவது; பெண்கள் வெளிப்படையாக தங்க நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு ஊருக்கு ஆடம்பர வெளிச்சம் காட்டுவது; கல்வியில் பின் தங்கிய நிலை ; அரசுவேலைகளுக்கு செல்வதை விரும்பாமை ஆகியவற்றை நாம் குறிப்பிடலாம். . 

இஸ்லாத்தை ஏனையோரிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற கடமையைத் தலையில் சுமந்து நிற்கும் முஸ்லிம்கள் தங்கள் மீது கூறப்படும் உண்மையான குற்றச்சாட்டுகளில் எவை  உண்மையானவை என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுடன் அவற்றைக் களைந்து தங்களை புனிதப் படுத்திக் கொள்ளவும் தயாராக வேண்டும். 

முதல்கட்டமாக, இஸ்லாம் வலியுறுத்தும் எளிமையான திருமணங்களை தங்களின் வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்; உணவுப் பொருள்களை வீண்விரயம் செய்வதை தடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணுக்கு அதிகமான அளவில் தங்க நகைகள் மற்றும் வீட்டுப் பொருள்களை சீதனமாகக் கொடுப்பதை தடுத்து அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். 

நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். “ வலிமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும். இரண்டாவதுநாள் கொடுப்பது சுன்னத் ஆகும். மூன்றாவது நாள் கொடுப்பது பகட்டாகும். எவன் பகட்டுக் காட்டுகிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் பகிரங்கப் படுத்துகிறான். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் ( ரலி) – திர்மிதி.)  

இன்று பல பகுதிகளில் வலிமா என்கிற சுன்னத்தான விருந்து நடைமுறையில் இல்லை. அதற்கு பதிலாக வரவேற்பு - ( RECEPTION) என அடுத்தவர் கலாச்சாரத்தைப் பின்பற்றி மண்டபங்களில் நடத்தப்படும் விருந்துகளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வலிமா என்னும் விருந்துமுறை கடைப்பிடிக்கப்படவேண்டிய கடமைதான். ஆனால் அதற்காக பெரிய அளவில் ஊரையெல்லாம் கூட்டியோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ அவசியமில்லை. தனது வசதிக்கு ஏற்றவாறு, சாதாரணமாக சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் என்கிற நபியின் வழிமுறை நிறைவேறிவிடும். ஆடம்பரமாக அனைவருக்கும் விருந்து வைக்கவேண்டுமென்று கட்டாயம் இல்லை. 

ஆனால் நடைமுறையில் நாம் இந்த எளிய முறையைப் பின்பற்றுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். நமது பணத்தையும் செல்வத்தையும் செலவு செய்து பல நேரங்களில் கடன்பட்டுக் கூட ஆடமபரமான விருந்துகளை வைக்கிறோம். இதனால் அல்லாஹ்வின் பொருத்தமும் இல்லாமல் போகிறது; ஆடம்பர விருந்துகளை    நடத்துவதன் மூலம் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற கருத்தை நாமே களங்கப்படுத்தவும் காயப்படுத்தவும் காரணமாகிவிடுகிறோம். அடுத்தவரின் விமர்சனத்துக்கும் பொறாமைக்கும் ஆளாகிறோம். ஆடம்பர அழுக்கை நமது முதுகில் வைத்துக் கொண்டு இஸ்லாம்! எளிமை! இனிமை! என்று அடுத்தவருக்கு எவ்வாறு நாம் அழைப்பு விடுக்க இயலும்? ஆடம்பரம் நமது அழைப்புப் பணிக்கு தடைக்கல்லை, தானாகவே  ஏற்படுத்தாதா? 

நபி (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தின்போது இரு முத்துக்கள் அளவுள்ள கோதுமையையே வலிமாவாக அளித்ததாக ஸபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(1 முத்து என்பது 750 கிராம் ஆகும். ஆதாரம்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது நபித்தோழர்கள் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். ( விருந்தில் ரொட்டியோ, கறியோ, குருமாவோ, பொறித்த கோழியோ , கிடையாது ). ஒரு போர்வையை தரையில் விரித்து பேரீத்தம்பழம், பாலாடைக்கட்டி நெய் போன்றவை பரிமாறப்பட்டன. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்னார்கள் , “நடை முறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை; காரியங்களில் கெட்டது பித்அத்கள். அவை அனைத்தும் வழிகேடுகளே . வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்” அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத் (ரலி) – புகாரி. 

இவ்விதம் இருக்க வலிமா விருந்து என்ற சுன்னத்தை புதுமைகள் சேர்த்து உலகுக்கு அறிமுகப்படுத்துவது பலரும் வாழ்த்தவேண்டிய திருமணங்களை அல்லாஹ்வின் பொருத்தம்  இல்லாமல் ஆக்கிவிடும் சூழலை ஏற்படுத்தும் என்பதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டி இருக்கிறது. 

சில திருமணங்களும் வலிமா விருந்துகளும் உணவின் ஆடம்பரங்களோடு நிற்பதில்லை. அதிகமான பொருட்செலவில் அழைப்பிதழ்கள் அச்சிடப்படுகின்றன. மண்டப வாயில்களில் ஆடம்பர வரவேற்பு வளைவுகள், கேரளத்து செண்டை மேளங்கள் , குடந்தை ஜோசப்பின் கிளாரினெட் கச்சேரிகள் , வாண வேடிக்கைகள் என்று அமர்க்களப்படுத்தப்படுகின்றன. அத்துடன் சில ஊர்களில் மொய் என்கிற விரும்பத்தகாத முரணான முறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரே நாளில் குறிப்பிட்ட ஒரு முஹல்லாவில் பல திருமணங்கள் நடத்தபடுகின்றன. அத்தனை வீடுகளிலும் தனித்தனியாக விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால் ஒரே வயிறுதானே இருக்கிறது. இதனால் பலவீடுகளில் சமைத்தவை வீணாகின்றன; இன்றுள்ள விலைவாசியில் சமைத்த உணவு சில சமயங்களில் தரைக்குள் புதைக்கப்படும் செய்திகளையும் நாம் வருத்தத்துடன் அறிகிறோம். அறியாமை, ஆடம்பரம், விரயம் என்று  எல்லாச் செயல்களுமே மற்ற மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் நமக்கும் ஒரே மாதிரி என்று இருந்தால் இஸ்லாம் என்பதின் தனித்தன்மைதான் என்ன என்று பிற மத சகோதரர்கள் சிந்திக்க மாட்டார்களா? பொறாமை கொள்ள மாட்டார்களா? விமர்சிக்க மாட்டார்களா? இந்த விரயம் பற்றிய வினா ஒரு அழைப்புப் பணியாளனை நோக்கி எழுப்பப்பட்டால் அவன் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறான்? 

நமது திருமணங்களை இஸ்லாம் வலியுறுத்தும் சிக்கனத்தின் சின்னமாகவும் அழைப்புப் பணியின் ஒரு அம்சமாகவும் நாம் ஆக்கிக் கொள்ள முடியும். உதாரணமாக திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டி என்கிற ஊரில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஊரில் நடைபெறவேண்டிய அத்தனை திருமணங்களும் ஒரே இடத்தில் சமுதாயத் திருமணமாக நடத்தப்பட்டு ஊர் முழுதுக்கும் ஒரே விருந்தாக வைத்து நடத்தப்படுகிறது. மொத்த செலவையும் திருமணங்களை நடத்தும் அனைத்துக் குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்கிறார்கள். பணவசதியற்ற ஏழைகளுக்கும் இங்கேயே செலவின்றி சிறப்பாகத் திருமணம் நடைபெறுகிறது. 

இந்த திருமண வைபவங்களில் பல்வேறு இன மத நண்பர்களும் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள். அத்தனை திருமணங்களும் பெரிய அளவிலான சடங்குகள் இல்லாமல் நடைபெற்று நிறைவுறுவதை பிற மத சகோதரர்கள் கண்ணால் கண்டு, உணர்ந்து இஸ்லாத்தைப் புகழ்ந்து பேசுகிறார்கள். இஸ்லாத்தைப் பற்றிய இத்தகைய இப்படிப் பட்ட புகழ்மொழிகளை இன்று பேசுபவர்கள் நாளை இஸ்லாத்தை நோக்கி வர இத்தகைய நல்லெண்ணங்கள் பாதை போட்டுக் கொடுக்கும். 

உண்மை இல்லாமல் குற்றம் சாட்டவேண்டுமென்பதற்காகவே முஸ்லிம்கள் மீது வைக்கப்படும் ஆராயாத குற்றச்சாட்டுகளைப் பற்றிய தங்களது தரப்பு விளக்கங்களை மாற்றார் விளங்கி ஏற்கும் வகையில் பண்பான , அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு விளக்க முயற்சிக்க வேண்டும். பல நேரங்களில் விவாதங்களில் கனி இருப்பக் காய் கவரும் நிகழ்ச்சிகளே நடை பெறுகின்றன. எந்த நிலைமையிலும் அடுத்தவரின் மத நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவதோ , கேலி செய்வதோ ஒரு உண்மையான முஸ்லிமுக்கு ஏற்றதல்ல. 

பிற மத சகோதரர்களிடம் நாம் விவாதிக்கும் நிலைமைகள் ஏற்பட்டால் அவர்களுடைய போற்றுதலுக்குரிய பெரியவர்கள், புலவர்கள், ஞானிகள் ஆகியோர் படைத்த இலக்கியங்களில் காணப்படும்  பொதுவான  மேற்கோள்களையே இஸ்லாத்தின் கருத்துக்களுடன் ஒப்பீடு செய்து பண்புடன் எடுத்துச் சொல்லலாம். 

பல கடவுள்களை வணங்கும் சகோதரர்களிடம் வாதிடும்போது ஒரே இறைவன் என்கிற கொள்கையை வலியுறுத்திய திருமூலரின், “ ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! ” என்கிற கருத்தையும், “ யாதும் ஊரே! யாவரும் கேளிர் “ என்ற கணியன் பூங்குன்றனாரின் கருத்தையும் 1330 திருக்குறள்களை எழுதிய திருவள்ளுவர் எந்த இடத்திலும் எந்தக் கடவுளின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பதையும், சேக்கிழார் எழுதிய பெரியபுராணமாகட்டும் கம்பர் எழுதிய இராமயணமாகட்டும் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் எந்தக் கடவுளையும் குறிப்பிடாமல் இஸ்லாம் கூறுகிற இறைவனின் பொதுத்தன்மைகளையே குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டலாம். “நட்டகல்லும் பேசுமோ” என்ற சிலை வணக்கத்துக்கு எதிராகப்  பேசிய சித்தர்களின் கருத்தை எடுத்துச் சொல்லலாம். 

வேதகாலம்தொட்டே தீவிர கடவுள் நம்பிக்கையில் உள்ள இந்து சகோதரர்கள் அன்றாடம் காலை மாலை வேளைகளில் ஓதும் ‘காயத்ரி ஜெபம்’ என்கிற சமஸ்கிருத ஸ்லோகங்களின் தமிழ் அர்த்தங்கள் முஸ்லிம்கள் ஓதும் சூரத்துல் பாத்திஹாவின் அர்த்தங்களைக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டலாம். இராமலிங்க அடிகளார் என்கிற வல்லாளாரின் ‘ ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டு’ மென்ற பாடல் எவ்வாறு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையுடன் ஒத்துப் போகிறது என்பதை எடுத்துச் சொல்லலாம்; ‘ அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நின்றதெது ’ என்று தொடங்கும் தாயுமானவரின் பாடல் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படையை அழகுத்தமிழில் சொல்வதை உணரச் செய்யலாம். 

“ இன்சொல் விளை நிலமாய் ஈதலே வித்தாக 
வன்சொல் களைகட்டி வாய்மை எருவிட்டு 
அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனும் 
பைங்கூழ் சிறுகாலைச் செய் –“ 

என்ற அறநெறிச்சாரத்தின்  நல்ல வரிகளை எடுத்துச் சொன்னால் வக்கிரங்களால் வறண்டுபோன இதய நிலங்களிளும் அறியாமையால் விதண்டாவாதம் செய்யும் இதயங்களிலும் அழைப்பு எனும் அருள்தரும் விதையை மூட்டை மூட்டைகளாக விதைக்க இயலும். 

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஏராளம் பேச வேண்டும். 
( தொடரும்) 
இபுராஹிம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 016 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 27, 2015 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

முஸ்லிம்களின் குறைகளை மறைத்தல்:

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும், துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 24:19)

'உலகத்தில் ஓர் அடியானுடைய குறையை மற்றொரு அடியான் மறைத்தால், மறுமை நாளில் அல்லாஹ் அவனை (அவனது குறையை) மறைப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா       (ரலி) அவர்கள் ( முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 240)

''என் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவர். ஆனால் (பாவங்களை) பகிரங்கப்படுத்துவோரைத் தவிர. ஒருவன் இரவில் ஒரு செயலைச் செய்கிறான். அதை அல்லாஹ் மறைத்திருக்கும் நிலையில் காலையில் எழுகிறான். (பின் தன் நண்பனிடம்) இன்னாரே இன்ன, இன்ன குற்றங்களை இரவில் செய்தேன் என்று கூறுகிறான் இதுதான் (பாவத்தை) பகிரங்கப்படுத்துவதாகும். அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்திருந்தான். அவனோ காலையில் அல்லாஹ் மறைத்திருந்த (பாவத்தை) பகிரங்கப்படுத்தி விட்டான்''என்று நபி(ஸல் அவர்கள் கூற நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 241)

முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுதல்:
...நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன்: 22:77)

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுபவனாக ஒருவன் இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது ஒரு குறையை மறைப்பான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 244)

''உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு  மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின்(குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும்வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:245).

மக்களிடையே இணக்கம் ஏற்படுத்துதல்:
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம் (அல்குர்ஆன் : 4:114)

...எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 8:1)

நம்பிக்கை கொண்டோர்(அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)

''மனிதர்கள் தங்களின் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் சூரியன்  உதயமாகும் ஒவ்வொரு நாளிலும் தினமும் அதற்கு தர்மம் செய்தல் வேண்டும். இரண்டு பேர்களுக்கிடையே நீதமாக நடப்பதும் தர்மம் ஆகும். ஒருவருக்கு ஒரு வாகனத்தை வாங்கித் தந்து. அதில் அவரை ஏற்றி அனுப்புவதும் தர்மம் ஆகும். அல்லது அவருக்கு அவரது பொருட்களை ஏற்றி விடுவதும் தர்மம் ஆகும். நல்ல வார்த்தை (பேசுதலும்) தர்மம் ஆகும். தொழுகைக்காக அவன் நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மம் ஆகும். பாதையில் இடையூறாக இருப்பதை அகற்றுவதும் தர்மம் ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 248)

''மனிதர்களிடையே சமாதானம் ஏற்படுத்தி வைக்க, நல்லதை எடுத்துச் சொல்லியோ அல்லது நல்லதை கூறியோ இருப்பவர் பொய்யர் அல்லர்'' என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 249)

நபி(ஸல்) அவர்கள் தன் வீட்டு வாசலில் இருவர் சண்டையிடும் சப்தத்தைக் கேட்டார்கள். அவர்களில் ஒருவர், மற்றொருவரிடம் பணிவு காட்ட வேண்டினார். மேலும் தன்|(கடன்) விஷயத்தில் தள்ளுபடி செய்யவும் வேண்டினார். அதற்கு அவர், ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் இதைச் செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அவ்விருவர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். ''நல்லது செய்ய மாட்டேன் என, அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் எங்கே? என்று கேட்டார்கள். ''நான் தான் இறைத்தூதர் அவர்களே! அவர் விரும்பியது அவருக்கு உண்டு. (அவரது கடனில் சிலதைத் தள்ளுபடி செய்கிறேன். அவரிடம் மென்மையாகவும் நடந்து கொள்கிறேன்)'' என்று கூறினார். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 250) 

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
தொடரும் இன்ஷா அல்லாஹ்
அலாவுதீன் S.

அடியேனின் அகரம் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2015 | , , , , , ,


அல்லாஹ் தந்த பொக்கிஷமே -இணை
இல்லா எந்தன் சொந்தமே!

என் தாயின் துணையே!
எந்தையே, என் தந்தையே!

நான்
தீராத அன்பு கொள்ளும் அன்பே!
நான்
என்றும் தங்கள் நாணின் அம்பே!

என்
மூச்சு காற்றின்
மூலக்காற்றே!

என்னை
அல்லாஹ்விடமிருந்து
பெற்றுத்தந்த வரமே!

அலிப் சொல்லித்தந்த
முதல் ஹஜ்ரத்தே!
அகரம் சொல்லித்தந்த
முதல் ஆசானே!

நபிவழி
நடக்கச் சொல்லித்தந்த
நஜாத்தே!
சமூகத்தின் பாதையில்
நடக்க சொன்ன - சுன்னத்துல்
ஜமாத்தே!

நான் வாழ
தேய்ந்த  நிலவே!
நான் இன்பம் கான
என்னில் வந்த கனவே!

உம்
முதுகு வளைத்து
எம் வாழ்வை நிமிர்த்தியே!
உம்
துன்பம் மறைத்து
இன்பம் மட்டும் தந்தீரே!

என் விந்தையே! தந்தையே!

உலகில் எம்முன்னே
மறைந் தாலும்
எனை ஆளும்
உம் அன்பு!பாசம்,தியாகம்!

நான் முன்னே இறந்தாலும் ,
கவலை வேண்டாம்
நீர்
என்னை என்றும்
மனதில் சுமக்கும் தாய்!

வாழ்க நீர் பல்லாண்டு
என் தந்தையே!
என் உயிரின் உந்தே!

அ.ர.முஹமது தஸ்தகீர்(கிரவுன்)

பினாங்கு சபுறுமாப்புளே ! - தொடர் 3 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2015 | , ,

எங்கு தேடியும் பாத்துமாயி யார் கண்ணிலும் அகப்பட வில்லை ‘தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் தனியா விட்டு விட்டு அவள் மாயமாய் எங்கு மறைந்தாள்?’ என்பதே ஊரார்களின் நெஞ்சில் ஊசலாடிய கேள்வி. நேரம் இரவு மணி பத்தரை ஆனாலும் ஊர் உறங்கவில்லை. யாரும் சோறு உங்கவில்லை. தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீ கூடகுடிக்காமல் ‘பாத்துமாயி எங்கே போனாள்?’ என்ற கேள்வியோடு கவலையும் கொண்டிருந்தார்கள். கடைசியாக. ஒரு பெரியவர் ’’தெருக் கோடியிலே ஈக்கிற பாழடஞ்ச குப்பை கெனத்தை பாத்தியலா?’’ என்ற கேள்வி ஒன்றை போட்டார்.

இதைக் கேட்டஎல்லாருடைய நெற்றி புருவமும் சுருங்கி விரிந்தது. அந்தக் கோணத்தில் யாரும் அங்கே அதை அப்படி யோசிக்கவில்லை! ‘அந்த அளவுக்கு போகும் படியான சூழல் பாத்துமாயிக்கு ஏதும் இல்லையை’’ என்றே எல்லோரும் எண்ணினார்கள். ‘’சரி! தேடியது தான் தேடினோம் இதையும் போய் பார்த்து விடுவோமே!’’ என்று. அரிக்கன் லாம்பு பினாங்கு பேட்டெரி லைட் எல்லாம் எடுத்துக் கொண்டு எல்லோரும் கிணத்தங்கரைக்கு போனார்கள். 

கிணற்றில் விளக்கை அடித்து பார்த்தபோது வெள்ளைதுணி ஒன்று நீரில் மிதப்பது போல் தெரிந்தது. கிணறுற்றில் நீர்மட்டம் வற்றி இருந்ததால் விளக்கு வெளிச்சம் அங்கே சென்றுயேற முடியவில்லை. இறங்கி பார்த்தாலே அது என்ன என்று தெரியும்! அங்கே கிடப்பது என்ன என்று தெரியாமல் எப்படி இந்தப்பாழுங் கிணற்றில் இறங்குவது’ என்ற கேள்வியும் வந்து கிணற்றில் இறங்கலாமா? வேண்டாமா என்ற Dilemmaவில் சிக்கி என்ன செய்வது என்று யோசித்த போது அங்கே நின்றவர்களில் வயதில் குறைவான பதினெட்டு வயதுடைய பையன் சொன்னான் ’’யாரும் கிணற்றில் இறங்க வேண்டாம். பட்டெரி விளக்கை கைற்றில் கட்டி சுச்சை தாட்டி அதை கிணற்றுக்குள் விடுங்கள். அந்த வெளிச்சத்தில் கிணற்றில் மிதப்பது என்ன? என்று தெரியும்’ என்றான். அந்த இளம் வயது பொடியனின் மதிநுட்பம் கண்டு அங்கிருந்த அனுபவசாலிகள் ஆடிப்போனார்கள். ’ஓட்டை பானைக்குள் சர்க்கரை இருக்கும்’  என்ற முதுமொழி மெய்யானது.

அவன் சொன்னது போல்விளக்கு கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் கிணற்றில் மிதந்தது ஒரு பெண்ணுடல். மூன்று ஆண்கள் கைலியை மடித்து கச்சை கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார்கள். மிதந்தது ஒரு பெண் உடல். மிதந்த உடலை புறட்டி பார்த்த போது ’’பா...த்...து...மா.. யீ..... யீ...... யீ ..... யீ....’’ கிணற்றில் இறங்கிய மூவரும் ஒரே குரலில் அலரிய அலறல் ஓசை. அந்த ஓசை எதிரொலித்து-எதிரொலித்து அங்கு நின்ற ஆண் பெண் அனைவர் நெஞ்சையும் ஒரு ஆட்டு ஆட்டி கசக்கி பிழிந்தது. அவர்கள் கண்களில் வழிந்தது கண்ணீரல்ல, ரத்தம்.! பாத்துமாயி கிணற்றில் விழுந்து உசிரை மாச்சு கிட்டா! ’’ஏன் மாச்சு கிட்டா’’? என்பது யாருக்கும் விளங்காத புதிர்! எல்லோர் கண்ணிலும் கண்ணீர்.! கண்ணீரில்லா கண்கள் அங்கில்லை!. தண்ணீரில் போன ஜீவனுக்கு கண்ணீரே காணிக்கையாக கொடுப்பதை தவிர மானிடரால் வேறு என்னதான் செய்ய முடியும்? .பாத்துமாயை பத்துமாசம் சுமந்து பெற்ற தாய்க்கு அந்தசுமை சுமையல்ல; பாத்துமாயீ தன்னை சுமந்து பெற்ற தாயின் நெஞ்சில் தூக்கி வைத்த இந்த சுமையை அவள் கண் மூடும் வரை சுமந்தே ஆகவேண்டும்.

’’அடி யென் மகளே! உன்னை பத்து மாதம் சுமந்து பெற்றதற்கு கூலியாக நீ கொடுத்தது இதுதான?’’ என்று நெஞ்சில் அடித்து கொண்டு அழுது புலம்பி நிலை குழைந்து விழுந்தாள். அப்பொழுதே காதும் காதும் வச்ச மாதிரி மையத்து எடுத்து முடிந்துவிட்டது.

‘’இது தாண்டா பாத்துமாயியோட கதே!’’ என்று மம்மசங்கனியோட உம்மா சொல்லி முடிச்சாங்க. ’’மவுத்தா போனவங்கலேல்லாம் பேயாவா வருவாங்க’? ன்னு  மம்மசங்கனி கேட்டான். ‘’தூக்கு போட்டுக்கிட் டுமவுத்தா போரவங்க, தண்ணிலே உலுந்து மொவுத்தாப் போனவங்க, கொலே செஞ்சி மவுத்தா போனவங்க அம்மா பாத்து மவுத்தா போனவங்க புருஷனுட்டே நல்லா வாழாமே போனவங்கள் குளியிலே அடங்கியதும் பேயாக கெளம்பி ராத்திரியெல்லாம் அலஞ்சு திரிஞ்சுட்டு அவங்க மையத்து போன வழியிலேயே வந்துட்டு வந்த வழியே திரும்பி போய்டுவாங்க.!” என்று மம்மசங்கனியோட உம்மா சொன்னாங்கோ. ’’பேயே கண்டு நாய் ஏம்மா கொலைக்கிது?’’ என்றான் மம்மசங்கனி. ’’அதா? பேய் வர்றது-மனுச கண்ணுக்கு தெரியாத காத்து கருப்பெல்லாம் நாய்கன்னுக்கு மட்டும் தான் தெரியும்.. அது வாறதே மனுஷருக்கு தெரியப்படுத்த கொலைக்கிது.

பேய் வரும் போது மனுஷங்க, புள்ளே உண்டாவுன சூலிய, தீட்டு தொடக்கு பட்டபொம்பளைய தலேபுல்லேயளுவோ, மாப்புளேகிட்டே படுத்து கெடந்துட்டு போற பொம்புலேயளுவோ, பொண்டாட்டிகிட்டே படுத்துகெடந்துட்டு போற ஆம்புளேயளுவோ இவங்கள்லாம் பேய் வர்ற அந்த அஹால நேரத்திலே அதுக்கு எதுக்கே போனா ஓங்கி ஒரே அடிதான். அப்புறம் வாயாலே ரத்தம் ரத்தமா கக்கிசாவ வேண்டியதுதான். பேய் யாரையும் பொம்பளையான்டும் ஆம்புளையாண்டும் பாக்காது! செலசமயங்களுலே பெத்த உம்மா, வலத்த வாப்பான்டும், மாமா-மச்சான்டும்கூட மொரேயெல்லாம் வச்சுபாக்காது! யாரா   இருந்தாலும் அடிக்கனுண்டு நெனச்சா அடுத்தது அடிதான் உளுவும். அதுக்கு மேலே வேறே பேச்சுக்கு எல்லாம் இடமே இல்லே!’’ என்றாங்கோ  மம்மசங்கனியோட உம்மா. ’’யாம்மா! பேயிண்டும் சொல்றாஹ்ஹ, கவுஸ்ஸுண்டும். சொல்றாஹ்ஹ, ரெண்டும் ஒன்னா? இல்லே வேறே வேறேயா?’’ என்று கேட்டான் மம்மசங்கனி.

கவுஸ்சுண்டா மௌத்தா போன ஆம்புளேயோ கபுறு குலிலேந்து கிளம்பி வந்தா அதே கவுஸுன்னு சொல்லு வாங்கோ! பொம்பளைங்க கபுறை உட்டு கெளம்பி வந்தா பேய்ம்பாங்க. என்று மம்மசங்கனியோடசொன்னாங்கோ. ‘’சரிடா! எனக்கு நெத்திரே கண்ணே சுத்திக்கிட்டு வருது! நீனும் கப்பலுலே வந்த கலப்பா இருப்பா! போய்படு!’’ என்றதும் .மம்மசங்கனி கூடத்துக்கு படுக்க போய்ட்டான்.
[தொடரும்].
S.முஹம்மது பாருக்

அகத்தின் அழகு 27

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2015 | , ,


என் அறிவார்ந்த பதில்களை சொல்லிக்கொண்டிருப்பது
நான் மூடி மறைத்த
நிழலாடும் முட்டாளின் சொற்கள்!

என் தைரியங்களென
நான்  வெளிகாட்டுபவையெல்லாம்
கோழையின் வேஷங்கள்!

என் சிரிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும்
வலிகளை நீங்கள் அறியப் போவதில்லை

என் சோகங்களுக்கு அப்பாலிருக்கும்
புன்னகைகள் உங்களுக்கு தெரியப் போவதில்லை!

முகமூடிகள் நிறைந்த மாய உலகில்
என் நிஜ உலகை அப்பட்டமாய் காட்ட
நானென்ன  முட்டாளா?

என் நிஜஉலகில் பிணைந்திருக்கும்
திருப்பங்களின் சுவாரசியங்களைப்
புரிந்துகொள்ளுமளவிற்குத் தான் நீங்கள் பக்குவப்பட்டவர்களா?

நிலை இப்படியிருக்க!
எதைக்கொண்டு என்னை எடைபோடுகிறீர்கள்!

நானே கொடுத்துக்கொண்டிருக்கும்
தரவுகளின் வழியே

என்னையே கணிக்கும்
உங்களின்  பேராற்றலினை

என் கடைநிலை சிற்றறிவும்
எள்ளிநகையாடுகிறது!

ஆமினா முஹம்மத்

அவன் - அவள் ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2015 | , , , ,

இந்நாளைப் போன்றதொரு
நந்நாளில்தான்
அவன் ஆளுமைக்கு
அவள் வாழ்க்கையைத் தந்தாள்

அழகால் அவனை
அடிமையாக்கினாள்
அன்பால் அவனை
அரசனாக்கினாள்

தொன்றுதொட்ட இல்லறம்
அன்று தொட்டான்
துவங்கியது துலங்கியது

அந்தரங்கம் அந்நியோன்யம்
போன்ற அகச்சொற்கள்களின்
அர்த்தம் பயின்றான்

ஆகாயம் அலைகடல்
செவ்வானம் சீமைதேசம்
போன்ற புறவாழ்வில்
சந்தோஷமாய்ச் சிறகடித்தான்

கண்டுவந்த கனா
கைகூடியதால்
புதுபுதுக் கனவுகளாகப்
பிரசவித்துத் தந்தாள்

பெற்றுத்தந்த கனவுகளையெல்லாம்
வளர்த்தெடுத்தான்
பற்றுக்கொண்டு பாசம்கொண்டு
ரசித்திருக்கிறான்

அன்னையானது முதல்
அவனையும் ஆள்கிறாள்

அவனைவிட்டு
அவன்
நிழல் போன தருணங்களில்கூட
அவள் போனதில்லை

நிலம் அசைந்தால்
உடைந்துதிரும்
கட்டடங்களைப் போல
அவள்
ஒவ்வோர் அசைவுக்கும்
இசைவாகவே அவன்
இயக்கம் இருக்கிறது

அவள்
புன்னகைகள்
அவனைப் புதுப்பிப்பது போலவே
அவள்
சுகக்கேடுகள்
அவனைச் சுட்டெறிக்கின்றன

விண்ணில் நீந்தும்
முகிழ்களாய்
அவளுள் அவன்
உலாவிக்கொண்டே இருக்கிறான்
அவள்
மெய்யென்றால்
மழையாய்ப் பெய்வான்
பொய்யென்றால்
மனதால்ச் சாவான்

புள்ளிகளைப் பூதமென்றும்
கீறல்களை வெட்டுகளென்றும்
மயங்கி
மருளும்
அவள்
மனநிலையை மாற்ற
என்னென்னவோ செய்கிறான்
எண்ணிப்பார்ப்பாளா

வயதாகிப் போவதுவும்
வியாதி வந்தேறுவதும்
வேகத்தடைகளாய்
ஆங்காங்கே
அவர்கள் தம்
வாழ்க்கை வாகனத்தை
அசைத்துப் பார்த்தாலும்...

அடிப்படை அன்பெனும்
அச்சு உறுதியானது -அவள்
மடிதனில் முடிவெனும் -அவன்
ஆசை இறுதியானது!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே.! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 22, 2015 | , ,


அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே
உன் விரிவுக்கு நிகராக யாதுமுண்டோ
மொத்தநீரையும் உனதுள்ளடக்கி - உலகின்
மூன்றில் இருபங்கை உனதாக்கி
நித்தமும் நீ எழுப்பும் ஓசையினால்
நெஞ்சம் கனத்திடும் நெகிழ்ச்சியிலே

எத்தனைதான் ஆச்சரியம் உனதுள்ளே
எண்ணி வியக்கிறோம் மனதினுள்ளே
அத்தனையும் நிறைந்திட்ட அதிசயமே
ஆராய முடியாத ஆழ்மனமே

கலர்கலராய் பலநிறத்தில் உன் தோற்றம்
காண்பதற்கு வியப்பூட்டும் அதிசயமே
கொடிசெடியும் மலைமடுவும் உனதுள்ளே
கோடான கோடி உயிர் வாழ்கிறதே

சுனாமிப் பேரழிவைத் தந்தபோதும்
பினாமிபோல் உன்மேல் பயணம் செய்வர்
கனாவில் உன் சப்தம் கேட்டபோதும்
கலங்காமல் மீனவர்கள் கடல் செல்வர்

சமுத்திரமாய் சங்கமிக்கும் உன்நீர்க்கு
சரிசமமாய் சொல்வதற்கு நிகரில்லை
பவித்திரமாய் வெளிப்படும் உன்போக்கு
பன்முகமும் காட்டுவது உன்சிறப்பு

உனக்கென்று ஓர் உலகம் உவர்ப்புநீராம் - நீ
உருவான இடம் எந்த நீர்நிலையாம்
கருவாக நீ சுமக்கும் உயிர்களெல்லாம்
உருவான விதம் நினைத்தால் அதிசயமே

கற்பனைக்கு எட்டாத கடல்நீரே - நீ
கசந்தாலும் உப்பாகி சுவைதருவாய்
இத்தனை நீர் நிறைந்த ஆழ்கடலே
இக முடிவானதும் எங்கு செல்வாய் ?

அதிரை மெய்சா

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? - பகுதி - 3 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2015 | , , ,


கடந்த வாரத்தில்  அழைப்புப் பணி  தொடர்பாக,  அண்டைவீட்டாரோடு  நாம் பேணவேண்டிய சில கடமைகளைப் பார்த்தோம். இப்போது நமது வீட்டை விட்டு சற்று வெளியே வந்து நம்மைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும் சமுதாயத்தையும்  நோக்குவோம். ஒரு அழைப்புப் பணியாளர் தனது சொந்த ஒழுக்கங்களைப் பேணுவதும் தனது அண்டைவீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறைகளும் எந்த அளவுக்கு இதயங்களை வெற்றி கொண்டு இஸ்லாத்தில் இணைக்குமோ அந்தச் செயல் எவ்வாறு இறைவனுக்கு இனிக்குமோ, அதே அளவு இன்னும் அதைவிட ஒரு படி மேலாக, ஒரு அழைப்பாளன் தனது சமுதாயத்தோடும் தான் இணைந்து வாழும் சமூகத்தோடும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதிலும்கூட இழைந்து   ஊடுருவி இருக்கிறது.   

நுமான் இப்னு பஷீர் ( ரலி ) அவர்கள் புகாரியில் ஒரு அற்புதமான  நபி மொழியை அறிவிக்கிறார்கள்.

“ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவர்  மற்றவரைச் சார்ந்து நிற்பதிலும் இறை நம்பிக்கையாளர்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். அந்த உடலின் ஓர் உறுப்புக்கு நோய்கண்டுவிட்டால் அதனால் உடலின் மற்ற உறுப்புகளும் இருப்புக் கொள்ளாமல் அதன் துன்பத்தில் பங்கு கொள்கின்றன. ஓர்  இறை நம்பிக்கையாளன் அதைப் போன்றே  பிறரின் துயர் கண்டு வாடவேண்டும்.  “ – என்பதே அந்தப் பொன்மொழி .  

பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்ன அற்புதமான  உவமைகளில் ஒன்றாக இந்த நபி மொழி கருதப்படுகிறது. சமுதாயத்தையும் சமூகத்தையும் ஒரு முழு உடலுக்கு ஒப்பிட்டார்கள். காலில் முள் குத்தினால் வாய் ஆ! என அலறுகிறது; கை அந்த இடத்தைத் தடவி விடுகிறது; கண்கள் வலி தாங்காமல் கண்ணீரைச் சொரிகின்றன; மூளை அதற்கான  மருந்தைத் தேடுகிறது.  காலில் தானே முள் குத்தியது! அதனால் மற்ற உறுப்புகள் ஏன் பதற வேண்டும்? பதைக்கவேண்டும்? 

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று நம்மில் பலர் இருக்கிறோம். விஷமுள்ள  கொடிய பாம்பு , அடுத்த வீட்டுக்குள் புகுந்துவிட்டால் அது நமது வீட்டுக்குள்ளும் வர எவ்வளவு நேரம் ஆகும்? தீயின் துளி  ஒன்று அடுத்த வீட்டுக் கூரையில் பட்டுவிட்டால் தொடர்ந்து நமது வீட்டுக்கும் பற்றிப் பரவி  எரிய  பல ஆண்டுகளா  ஆகும்? ஆகவே ஒருவருக்கு ஒன்று சம்பவித்தால் அது அவரை மட்டுமே  சார்ந்தது அவரை மட்டுமே  பாதிக்கக் கூடியது  என்று விட்டுவிட இயலாது. ஒரு உடல் உறுப்பைப் போல செயல்பட்டு ஒருவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அடுத்தவர்களும் அந்தத் துன்பத்தைக் களைய  ஒன்றிணைந்து   நடவடிக்கைகளை எடுப்பது நம்மையும் அழிவிலிருந்து காப்பாற்றும் என்பது நாம் படிக்காமலேயே கற்றுக் கொள்ள  வேண்டிய பாலபாடமாகும். இந்தக் கருத்தைதான் பெருமானார் (ஸல்) அவர்களின் அமுதமொழி நமக்கு சொல்லித்தருகிறது. அழைப்புப் பணியாளரும் இதை   அடிப்படையாகக் கற்றுக் கொள்ள வேண்டிய  கருத்தாகும்.   

ஒரு கதை ஒன்று சொல்வார்கள். அது ஒரு கதை மட்டுமல்ல நல்ல ஒரு பாடமும் கூட. 

ஒரு விவசாயி வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்தது. அதை ஒழிப்பதற்காக விவசாயி ஒரு எலிப்பொறியை வாங்கி வந்து தனது மனைவி இடம் காண்பித்து இன்று இரவு இந்த எலிப் பொறிக்குள் ஒரு சுட்ட கருவாட்டுத்துண்டை வைத்துவிடு! தொல்லை தரும்  எலி வந்து சிக்கிக் கொள்ளும் என்று சொன்னார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எலி மிகவும் கவலையோடு அந்த வீட்டில் இருந்த சேவலிடம் போய் என் உயிருக்கு ஆபத்து!  இதோ!  என்னைப் பிடிக்க எலிப்பொறி வந்திருக்கிறது என்று சொன்னது. ஆனால் சேவல் அதைப் பற்றி எனக்கென்ன கவலை? நீதான் கவலைப் பட வேண்டும் என்று எலி இடம் சொன்னது. நேராக எலி அங்கிருந்த  வான்கோழியிடம் போய்  அதேபோல் புலம்பியது. வான்கோழியும் அது உன்பிரச்னை எனக்குக் கவலை இல்லை என்றது. பிறகு நேராக அந்த வீட்டில் வளர்ந்த      செம்மறியாட்டிடமும்  போய் எலி  தனது கவலையைத் தெரிவித்தது. கவலையில்லாமல் தலையை ஆட்டிய ஆடும் போடா!  போய் உன் உயிரைக் காப்பாற்றிக் கொள் எனக்கு எவ்விதக் கவலையும் இல்லை என்று சொல்லி எலியை விரட்டிவிட்டது. 

அன்று இரவு எலிப்பொறி தயாராக்கப்பட்டு வைக்கப்பட்டுவிட்டது. நடு நிசி! எலிப் பொறி இயங்கும் சப்தம் கேட்டது. உடனே விழித்த விவசாயியின் மனைவி எலி மாட்டிக் கொண்டது என்ற சந்தோஷத்தில் எலிப்பொறியை நோக்கிப் போய் இருட்டிலேயே அதில் கையை வைத்தாள். உண்மையில் பொறியில் மாட்டியது எலியல்ல ஒரு விஷப்  பாம்பு! அந்தப் பாம்பு  அந்த வீட்டுக்காரியை கடித்துவிட்டது. விஷம் தலைக்கேறி விட்டது. வீட்டுக்காரியை வைத்தியரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். வைத்தியர் பாம்பின் விஷத்தை இறக்கி, வீட்டுக்காரியை காப்பாற்றிவிட்டு அந்த அம்மையார்  மிகவும் களைப்பாக இருந்தததால் அவருக்கு ஒரு கோழியை  அறுத்து சூப் வைத்துக் கொடுக்கச் சொன்னார். 

தனது அன்பு மனைவிக்கு முன் விவசாயிக்கு கோழி பெரிதாகப் படவில்லை. எந்தக் கோழி எலிப்பொறியால்  தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்றதோ அந்தக் கோழி இப்போது அடுப்பில் சூப்பாக கொதித்தது. அடுத்தநாள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட சொந்தக்காரர்கள் உடல்நலம் விசாரிப்பதற்காக திரண்டு வந்தார்கள். அவர்களுக்கு விருந்து வைக்க வீட்டிலிருந்த வான்கோழியும் அறுத்து சமைக்கப்பட்டது. வீட்டுக்காரி பெரிய ஆபத்திலிருந்து மீண்டு  வந்திருக்கிறாள் ஆகவே ஆட்டை அறுத்து ஏழைகளுக்குக் கொடுத்துவிடு என்று ஒரு பெரியவர் சொன்னதால் செம்மறி  ஆடும் அறுத்துப் பங்கிடப்பட்டது.  வீட்டின் ஒரு ஓரத்த்தில் எலிப் பொறி கிடந்தது. வீட்டுக்காரர் உன்னால்தானே இவ்வளவும் என்று   என்று முனங்கிக் கொண்டே அதைத்தூக்கிப் பரணியின் மேல் போட்டார். எலி மட்டும்  எப்போதும்போல சுதந்திரமாக  ஓடி விளையாடியது. 

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் ஆபத்தின் அடையாளங்கள் வரும்போது அது  நமக்கு வராது என்று நாமே  நினைப்பதும் கூடாது; நமக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று விலகவும் கூடாது. அதேபோலத்தான் சமூக , சமுதாய வாழ்வும். 

ஊருக்குள் ஓடி வரும் வெள்ளம் ஆட்களின் ஐடிகார்டைப் பார்த்து இழுத்துச் சென்று அழிப்பதில்லை. அழிவையும் இழிவையும் அனைவரும் ஒன்றுகூடித்தான் தடுக்க வேண்டும். எனக்கென்ன என்று இருப்பவர்களையே கேடுகள் முதலில் சூழும். 

“மனிதர்கள் சீப்பின் பற்களைப் போன்றவர்கள் ; மனித இனத்தோர் அனைவரும் ஒரே இறைவனின் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் “ என்ற  நபி     (ஸல்) அவர்களின் பொன்மொழி சாதி மத இனம் கடந்து  மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவிக் கொள்ளவேண்டுமென்று நமக்கு எடுத்துச் சொல்கிறது.     

நாட்டில் திடீரென்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்தப் பேரிடர்கள் குலம் பார்த்து குணம் பார்த்து வருவதில்லை.  அறிவியல் கணிப்புகளை மீறி இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு விடுகின்றன. அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும்  வெள்ளம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இப்படிப் பட்ட  நிலைமைகள் ஏற்படும்போது அத்தகைய இடர்களால் இடரப்பட்டு இடருறும்  மக்களுக்கு உதவிக்கரம் நீட்டப்படுவதில் முதல் கரம் ஒரு அழைப்புப் பணியாளரின் கரமாக இருக்கவேண்டும். இதயங்களை இஸ்லாம் வெல்லவேண்டுமானால்  அழைப்புப் பணியாளரின் கரங்களில்  ஏந்தும் அன்புநிறைந்த வாளால் மட்டுமே  இயலும். . 

தேவையில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று சொல்வார்கள். ( A FRIEND  IN NEED IS A  FRIEND INDEED )

“உதவி வரைத்தன்று உதவி , உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்று திருக்குறளும் சொல்கிறது. துன்பத்திலும் துயரத்திலும் இருப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பண்பு ஒரு அழைப்பாளனின் அடிப்படை குணமாக இருக்க வேண்டும். உதவி தேவைப் படாத நேரங்களில் செய்யப்படும் உதவிகள் பயனற்றவையாக இருக்கும். அந்த வகையில் இயற்கை பேரிடர் , உயிர்காக்கும் அரிய வகை இரத்த தானம், மருத்துவ உதவிகள் ஆகியவை ஒரு அழைப்பாளரின் சமூக சேவைக்கான பட்டியலில் முதலிடம் பெற வேண்டும். 

மனிதர்களுக்கு மற்ற மனிதர்களின் உதவிகள் தேவைப்படும் இடங்கள் என்று நாம் சில இடங்களைத் தேர்வு செய்தால் அவற்றுள் மருத்துவ மனை, சிறைச்சாலை, காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள்  ஆகியவை நிச்சயம் இடம் பெறும். காரணம் இங்கெல்லாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பாராதவகையில் மனித உதவிகள் அவசியம் தேவைப்படும். 

சாலைவிபத்துக்களில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்பவர்கள் எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அனாதைகள்தான். சில நேரங்களில் அவர்களால் தங்களின் முகவரியைக் கூட  சொல்ல இயலாத நினைவிழப்பு, கோமா போன்ற சிக்கல்களில்  அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். இதே மாதிரி நிலைகள் மனிதர்களுக்கு காவல் நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும்கூட ஏற்பட்டு விடுகின்றன.  அப்பாவிகள் சிலர் சந்தேக வழக்குகளில் கைது செய்யப்பட்டு தங்களுடைய நிலைமைகளை விளக்க சந்தர்ப்பமின்றி தடுத்துவைக்கப்படுகின்றனர். நிலுவையில் உள்ள பொய்வழக்குகள் அவர்கள் மீது புனையப்படுவதையும் நாம் அறிந்து இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலைகளில் இன மத பேதமின்றி மனிதர்கள் அனைவரையும் தேடிப்போய்  உதவுவதில் அழைப்புப்பணியாளருக்கு ஆயிரம் வேலைகள் உள்ளன.  

அண்மையில் நாம் நேரடியாக அறிந்து மகிழ்ந்த ஒரு சம்பவம் என்னவென்றால் கடலூர் மாவட்டத்தில் கணக்கின்றி பெய்த மழையும் அதைத்தொடர்ந்த காற்றும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன. அத்தகைய சூழ்நிலையில் அந்த மாவட்டத்தில் ஒரு முக்கியமான முஸ்லிம்களின் கேந்திரமான பரங்கிப் பேட்டை என்ற ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிவாசல்களைச் சேர்ந்த திருமண மண்டபங்கள், முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களில் தங்க வைத்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உணவுத் தேவைகளையும் சிறப்பாக செய்து கவனித்துக் கொண்டார்கள். 

ஏற்கனவே  2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலும் பல மீனவக் குடியிருப்புகளை கூட்டத்தோடு காப்பாற்றி அழைத்து வந்து இவ்வாறு காப்பாற்றித் தொண்டு செய்தார்கள். இவர்களின் இப்படிப்பட்ட  மனிதாபிமான நடவடிக்கைகள் மத, சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு என்பது ஒருபக்கமிருந்தாலும் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிற அனைத்து மக்களுக்குமான மனிதாபிமானம்தான்  இங்கே புகழ்மொழியாக கோலோச்சியது. சுனாமிக்குப் பின் கருணையுள்ளம் கொண்ட முஸ்லிம்களைக் கண்டுவிட்டு தங்களின் வாழ்வுமுறையாக  இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அந்த ஊரில் ஏராளம். 

முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் , மனித உயிர்களை அழிப்பவர்கள் என்று மேல்நாட்டார் மற்றும் எதிர்மறை ஊடகங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் , மற்றவர்களின் துயர் துடைப்பதற்காக  அணிகளாகத் திரண்டு அனைத்து உயிர்களையும் அரவணைத்துக் காக்கும்  செயல்களை அரங்கேற்றுவது எவ்வளவு பெரிய மரியாதையை இந்த மார்க்கத்துக்குப் பெற்றுத்தரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

நமது இத்தகைய செயல்களும் அழைப்புப்பணியின் வகைகளில் அடங்குவதுதான். 

இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறையப் பேசலாம். 
தொடரும்...
இப்ராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 015 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2015 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அவதூறு:

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்' என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' 'என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1523)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  (புகாரி)

நற்செயல்கள், சந்தேகம், அநீதம்

...நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்...  (அல்குர்ஆன் : 2:148)

'உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது இறையச்சமுடையயோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.' (அல்குர்ஆன் : 3:133)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)

'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் நல்லதை ஏவுங்கள். தீயவற்றிலிருந்து தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும், அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 193)

'இருள் நிறைந்த இரவு போல் (தொடரும்) குழப்பத்தை அஞ்சி, நீங்கள் நற்செயல் புரிய விரையுங்கள். ஒருவன் காலையில் மூஃமினாக இருப்பான். மாலையில் காபிராக இருப்பான். அல்லது மூஃமினாக மாலையில் இருப்பான். காபிராக காலையில் எழுவான். உலக நோக்கங்களுக்காக தன் மார்க்கத்தையே விற்று விடுவான்என்று    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 87)

'நிச்சயமாக உண்மையை பேசுதல், நல்லது செய்வதை ஏற்படுத்தும். நல்லது செய்வது சொர்க்கத்தை பெற்றுத்தரும். நிச்சயமாக! உண்மையை பேசுபவர், இதில் உண்மையாளர் என அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். நிச்சயமாக! பொய் பேசுதல், தவறுகள் செய்வதை ஏற்படுத்தும். தவறுகள் நரகைப் பெற்றுத்தரும். நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால், அல்லாஹ்விடம் பொய்யர் என பதிவு செய்யப்படுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.''  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 54 )

'உனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டு விடுவீராக! உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக! நிச்சயமாக உண்மை, அமைதி (அளிக்கும்). பொய் சந்தேக(த்தை வளர்க்கு)ம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள். (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 55 )

'உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்  (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)

அநீதம் இழைத்தோருக்கு  எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 40:18)

அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை. (அல்குர்ஆன் : 22:71)

''ஓர் அடியான் (நல்லதா? கெட்டதா?) என சிந்திக்காமல் பேசுகிறான். அதன் மூலம் அவன் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ள மிக தூரமான அளவுக்கு நரகில்  வீழ்வான்'' என, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 1514 )

''ஒவ்வொரு முஸ்லிமின் ரத்தம், அவரின் கண்ணியம், அவரின் பொருள் அனைத்தும் (சீர்குலைக்க) இன்னொரு முஸ்லிமின் மீது தடையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம்).    ரியாளுஸ்ஸாலிஹீன்: 1527 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு