Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 4 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2015 | ,


உலகிலேயே அதிகமான மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மார்க்கம் இஸ்லாம் என்று குறிப்பிட்டு இருந்தோம். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் ஆய்ந்து அறிந்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத - ஆசைப்படாத பலர் முஸ்லிம்கள் என்று பெயரளவில் வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைப் பார்த்துவிட்டு இதுதான் இஸ்லாம் போலிருக்கிறது என்று தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். 

ஆங்கிலத்தில் PERCEPTION என்றொரு வார்த்தை உண்டு. அந்த வார்த்தை மனோதத்துவ இயலுடன் தொடர்புடையது. ஒரு விஷயத்தைப் பற்றி முழுதாக ஆய்ந்து அறியாமல் வெளித்தோற்றத்தை மட்டும் கண்டு , அந்த விஷயத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதே PERCEPTION ஆகும். இந்தவகை அறியாதவர்களின் இலக்குக்கு இஸ்லாம் பலவகையிலும் இரையாகி இருக்கிறது. 

முதலில் நன்கு ஆராயாமல் முஸ்லிம்களின் மீது வைக்கப்படும் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் சிலவற்றைப் பார்க்கலாம். அத்தகையோரின் பார்வையில் இவ்வளவுதான் இஸ்லாம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 

முஸ்லிம்கள் அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள்; முஸ்லிம் பெண்கள் ஏராளமான தங்க நகைகளை அணிபவர்கள், முஸ்லிம்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள்; பெரிய வீடுகளைக் கட்டுகிறார்கள்; வெளிநாடுகளுக்குப் போய் நிறைய சொத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் போடுகிறார்கள்; அவர்களுடைய திருமணங்கள் பெரும் செலவில் நடத்தப் படுகின்றன; திருமண விருந்துகளும் பலவாறு அமர்க்களமாகவும் ஆடம்பரமாகவும் பலநாட்களுக்கு நடத்தப் படுகின்றன; எல்லா வகை விசேஷங்களிலும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்; ‘ தின்று கெட்டான் துருக்கன்’ என்ற பெயரே அவர்களுக்கு இருக்கிறது; முஸ்லிம் ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்; நிறைய குழந்தைகளைப் பெறுகிறார்கள் ; குடும்பக்கட்டுப்பாட்டை அனுசரிப்பதில்லை; பெண்களுக்கும் கூட கணவன் இறந்துவிட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ அடுத்தவருக்கு திருமணம் செய்து வைப்பார்கள்; கடைகளையும் வணிக நிறுவனங்களையும் நடத்துவதில் காட்டும் ஆர்வத்தை கல்வி கற்பதில் காட்ட மாட்டார்கள்; அரசு வேலைகளுக்கு செல்லமாட்டார்கள்; பெண்களை வீட்டுக்குள் போட்டு பூட்டிவைப்பார்கள். ஆடுமாடுகளை இரக்கமில்லாமல் கணக்கின்றி கொல்கிறார்கள்; 

இவ்வாறெல்லாம் பரவலாக முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இவை அனைத்துமே வெறும் குற்றச்சாட்டுகள் என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட இயலாது. இவற்றுள் சில விஷயங்களில் முஸ்லிம்கள் இழைக்கும் குற்றங்களும் கணிசமான அளவுக்கு இருக்கவே செய்கின்றன. இத்தகைய நிலை ஏற்படுவதற்கு இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் மட்டும்தான் காரணமா? இல்லை! இஸ்லாத்தை கடைப்பிடிக்கிறோம் என்று வாயளவில் கூறிக்கொண்டு இஸ்லாமிய போர்வை போர்த்தி  வாழ்பவர்களும் – இஸ்லாத்தைப் பற்றிய தெளிவுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லாதவர்களும் ஒரு கணிசமான அளவுக்குக் காரணம்தான் என்பதை நேர்மையாக நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். 

அதே நேரம் விளங்காத அடிப்படையில் அநியாயமான குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு உதாரணமாக ஆடம்பரத் திருமணங்களும் விருந்துகளும் நடத்துவது; பெண்கள் வெளிப்படையாக தங்க நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு ஊருக்கு ஆடம்பர வெளிச்சம் காட்டுவது; கல்வியில் பின் தங்கிய நிலை ; அரசுவேலைகளுக்கு செல்வதை விரும்பாமை ஆகியவற்றை நாம் குறிப்பிடலாம். . 

இஸ்லாத்தை ஏனையோரிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற கடமையைத் தலையில் சுமந்து நிற்கும் முஸ்லிம்கள் தங்கள் மீது கூறப்படும் உண்மையான குற்றச்சாட்டுகளில் எவை  உண்மையானவை என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுடன் அவற்றைக் களைந்து தங்களை புனிதப் படுத்திக் கொள்ளவும் தயாராக வேண்டும். 

முதல்கட்டமாக, இஸ்லாம் வலியுறுத்தும் எளிமையான திருமணங்களை தங்களின் வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்; உணவுப் பொருள்களை வீண்விரயம் செய்வதை தடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணுக்கு அதிகமான அளவில் தங்க நகைகள் மற்றும் வீட்டுப் பொருள்களை சீதனமாகக் கொடுப்பதை தடுத்து அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். 

நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். “ வலிமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும். இரண்டாவதுநாள் கொடுப்பது சுன்னத் ஆகும். மூன்றாவது நாள் கொடுப்பது பகட்டாகும். எவன் பகட்டுக் காட்டுகிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் பகிரங்கப் படுத்துகிறான். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் ( ரலி) – திர்மிதி.)  

இன்று பல பகுதிகளில் வலிமா என்கிற சுன்னத்தான விருந்து நடைமுறையில் இல்லை. அதற்கு பதிலாக வரவேற்பு - ( RECEPTION) என அடுத்தவர் கலாச்சாரத்தைப் பின்பற்றி மண்டபங்களில் நடத்தப்படும் விருந்துகளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வலிமா என்னும் விருந்துமுறை கடைப்பிடிக்கப்படவேண்டிய கடமைதான். ஆனால் அதற்காக பெரிய அளவில் ஊரையெல்லாம் கூட்டியோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ அவசியமில்லை. தனது வசதிக்கு ஏற்றவாறு, சாதாரணமாக சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் என்கிற நபியின் வழிமுறை நிறைவேறிவிடும். ஆடம்பரமாக அனைவருக்கும் விருந்து வைக்கவேண்டுமென்று கட்டாயம் இல்லை. 

ஆனால் நடைமுறையில் நாம் இந்த எளிய முறையைப் பின்பற்றுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். நமது பணத்தையும் செல்வத்தையும் செலவு செய்து பல நேரங்களில் கடன்பட்டுக் கூட ஆடமபரமான விருந்துகளை வைக்கிறோம். இதனால் அல்லாஹ்வின் பொருத்தமும் இல்லாமல் போகிறது; ஆடம்பர விருந்துகளை    நடத்துவதன் மூலம் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற கருத்தை நாமே களங்கப்படுத்தவும் காயப்படுத்தவும் காரணமாகிவிடுகிறோம். அடுத்தவரின் விமர்சனத்துக்கும் பொறாமைக்கும் ஆளாகிறோம். ஆடம்பர அழுக்கை நமது முதுகில் வைத்துக் கொண்டு இஸ்லாம்! எளிமை! இனிமை! என்று அடுத்தவருக்கு எவ்வாறு நாம் அழைப்பு விடுக்க இயலும்? ஆடம்பரம் நமது அழைப்புப் பணிக்கு தடைக்கல்லை, தானாகவே  ஏற்படுத்தாதா? 

நபி (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தின்போது இரு முத்துக்கள் அளவுள்ள கோதுமையையே வலிமாவாக அளித்ததாக ஸபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(1 முத்து என்பது 750 கிராம் ஆகும். ஆதாரம்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது நபித்தோழர்கள் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். ( விருந்தில் ரொட்டியோ, கறியோ, குருமாவோ, பொறித்த கோழியோ , கிடையாது ). ஒரு போர்வையை தரையில் விரித்து பேரீத்தம்பழம், பாலாடைக்கட்டி நெய் போன்றவை பரிமாறப்பட்டன. (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்னார்கள் , “நடை முறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை; காரியங்களில் கெட்டது பித்அத்கள். அவை அனைத்தும் வழிகேடுகளே . வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்” அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத் (ரலி) – புகாரி. 

இவ்விதம் இருக்க வலிமா விருந்து என்ற சுன்னத்தை புதுமைகள் சேர்த்து உலகுக்கு அறிமுகப்படுத்துவது பலரும் வாழ்த்தவேண்டிய திருமணங்களை அல்லாஹ்வின் பொருத்தம்  இல்லாமல் ஆக்கிவிடும் சூழலை ஏற்படுத்தும் என்பதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டி இருக்கிறது. 

சில திருமணங்களும் வலிமா விருந்துகளும் உணவின் ஆடம்பரங்களோடு நிற்பதில்லை. அதிகமான பொருட்செலவில் அழைப்பிதழ்கள் அச்சிடப்படுகின்றன. மண்டப வாயில்களில் ஆடம்பர வரவேற்பு வளைவுகள், கேரளத்து செண்டை மேளங்கள் , குடந்தை ஜோசப்பின் கிளாரினெட் கச்சேரிகள் , வாண வேடிக்கைகள் என்று அமர்க்களப்படுத்தப்படுகின்றன. அத்துடன் சில ஊர்களில் மொய் என்கிற விரும்பத்தகாத முரணான முறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரே நாளில் குறிப்பிட்ட ஒரு முஹல்லாவில் பல திருமணங்கள் நடத்தபடுகின்றன. அத்தனை வீடுகளிலும் தனித்தனியாக விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால் ஒரே வயிறுதானே இருக்கிறது. இதனால் பலவீடுகளில் சமைத்தவை வீணாகின்றன; இன்றுள்ள விலைவாசியில் சமைத்த உணவு சில சமயங்களில் தரைக்குள் புதைக்கப்படும் செய்திகளையும் நாம் வருத்தத்துடன் அறிகிறோம். அறியாமை, ஆடம்பரம், விரயம் என்று  எல்லாச் செயல்களுமே மற்ற மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் நமக்கும் ஒரே மாதிரி என்று இருந்தால் இஸ்லாம் என்பதின் தனித்தன்மைதான் என்ன என்று பிற மத சகோதரர்கள் சிந்திக்க மாட்டார்களா? பொறாமை கொள்ள மாட்டார்களா? விமர்சிக்க மாட்டார்களா? இந்த விரயம் பற்றிய வினா ஒரு அழைப்புப் பணியாளனை நோக்கி எழுப்பப்பட்டால் அவன் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறான்? 

நமது திருமணங்களை இஸ்லாம் வலியுறுத்தும் சிக்கனத்தின் சின்னமாகவும் அழைப்புப் பணியின் ஒரு அம்சமாகவும் நாம் ஆக்கிக் கொள்ள முடியும். உதாரணமாக திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டி என்கிற ஊரில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஊரில் நடைபெறவேண்டிய அத்தனை திருமணங்களும் ஒரே இடத்தில் சமுதாயத் திருமணமாக நடத்தப்பட்டு ஊர் முழுதுக்கும் ஒரே விருந்தாக வைத்து நடத்தப்படுகிறது. மொத்த செலவையும் திருமணங்களை நடத்தும் அனைத்துக் குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்கிறார்கள். பணவசதியற்ற ஏழைகளுக்கும் இங்கேயே செலவின்றி சிறப்பாகத் திருமணம் நடைபெறுகிறது. 

இந்த திருமண வைபவங்களில் பல்வேறு இன மத நண்பர்களும் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள். அத்தனை திருமணங்களும் பெரிய அளவிலான சடங்குகள் இல்லாமல் நடைபெற்று நிறைவுறுவதை பிற மத சகோதரர்கள் கண்ணால் கண்டு, உணர்ந்து இஸ்லாத்தைப் புகழ்ந்து பேசுகிறார்கள். இஸ்லாத்தைப் பற்றிய இத்தகைய இப்படிப் பட்ட புகழ்மொழிகளை இன்று பேசுபவர்கள் நாளை இஸ்லாத்தை நோக்கி வர இத்தகைய நல்லெண்ணங்கள் பாதை போட்டுக் கொடுக்கும். 

உண்மை இல்லாமல் குற்றம் சாட்டவேண்டுமென்பதற்காகவே முஸ்லிம்கள் மீது வைக்கப்படும் ஆராயாத குற்றச்சாட்டுகளைப் பற்றிய தங்களது தரப்பு விளக்கங்களை மாற்றார் விளங்கி ஏற்கும் வகையில் பண்பான , அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களுக்கு விளக்க முயற்சிக்க வேண்டும். பல நேரங்களில் விவாதங்களில் கனி இருப்பக் காய் கவரும் நிகழ்ச்சிகளே நடை பெறுகின்றன. எந்த நிலைமையிலும் அடுத்தவரின் மத நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவதோ , கேலி செய்வதோ ஒரு உண்மையான முஸ்லிமுக்கு ஏற்றதல்ல. 

பிற மத சகோதரர்களிடம் நாம் விவாதிக்கும் நிலைமைகள் ஏற்பட்டால் அவர்களுடைய போற்றுதலுக்குரிய பெரியவர்கள், புலவர்கள், ஞானிகள் ஆகியோர் படைத்த இலக்கியங்களில் காணப்படும்  பொதுவான  மேற்கோள்களையே இஸ்லாத்தின் கருத்துக்களுடன் ஒப்பீடு செய்து பண்புடன் எடுத்துச் சொல்லலாம். 

பல கடவுள்களை வணங்கும் சகோதரர்களிடம் வாதிடும்போது ஒரே இறைவன் என்கிற கொள்கையை வலியுறுத்திய திருமூலரின், “ ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! ” என்கிற கருத்தையும், “ யாதும் ஊரே! யாவரும் கேளிர் “ என்ற கணியன் பூங்குன்றனாரின் கருத்தையும் 1330 திருக்குறள்களை எழுதிய திருவள்ளுவர் எந்த இடத்திலும் எந்தக் கடவுளின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பதையும், சேக்கிழார் எழுதிய பெரியபுராணமாகட்டும் கம்பர் எழுதிய இராமயணமாகட்டும் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் எந்தக் கடவுளையும் குறிப்பிடாமல் இஸ்லாம் கூறுகிற இறைவனின் பொதுத்தன்மைகளையே குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டலாம். “நட்டகல்லும் பேசுமோ” என்ற சிலை வணக்கத்துக்கு எதிராகப்  பேசிய சித்தர்களின் கருத்தை எடுத்துச் சொல்லலாம். 

வேதகாலம்தொட்டே தீவிர கடவுள் நம்பிக்கையில் உள்ள இந்து சகோதரர்கள் அன்றாடம் காலை மாலை வேளைகளில் ஓதும் ‘காயத்ரி ஜெபம்’ என்கிற சமஸ்கிருத ஸ்லோகங்களின் தமிழ் அர்த்தங்கள் முஸ்லிம்கள் ஓதும் சூரத்துல் பாத்திஹாவின் அர்த்தங்களைக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டலாம். இராமலிங்க அடிகளார் என்கிற வல்லாளாரின் ‘ ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டு’ மென்ற பாடல் எவ்வாறு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையுடன் ஒத்துப் போகிறது என்பதை எடுத்துச் சொல்லலாம்; ‘ அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நின்றதெது ’ என்று தொடங்கும் தாயுமானவரின் பாடல் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படையை அழகுத்தமிழில் சொல்வதை உணரச் செய்யலாம். 

“ இன்சொல் விளை நிலமாய் ஈதலே வித்தாக 
வன்சொல் களைகட்டி வாய்மை எருவிட்டு 
அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனும் 
பைங்கூழ் சிறுகாலைச் செய் –“ 

என்ற அறநெறிச்சாரத்தின்  நல்ல வரிகளை எடுத்துச் சொன்னால் வக்கிரங்களால் வறண்டுபோன இதய நிலங்களிளும் அறியாமையால் விதண்டாவாதம் செய்யும் இதயங்களிலும் அழைப்பு எனும் அருள்தரும் விதையை மூட்டை மூட்டைகளாக விதைக்க இயலும். 

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஏராளம் பேச வேண்டும். 
( தொடரும்) 
இபுராஹிம் அன்சாரி

24 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.வரிக்கு வரி பிரமிப்பூட்டும் சொல்லாடல்,உதாரணம்,மாற்றார் தோட்டத்தில் விளைந்திட்ட நல் மலர் இப்படி எல்லாம் தொகுத்து வழங்கும் ஞானம் போற்றதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்னார்கள் , “நடை முறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை; காரியங்களில் கெட்டது பித்அத்கள். அவை அனைத்தும் வழிகேடுகளே . வழிகேடுகள் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்” அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத் – புகாரி. (தவறுதலாக (ரலி)என்பது விடுபட்டுள்ளது.அ. நி எடிட்டர்காக்கா கவனிக்கவும்.பள்ளப்பட்டியில் செய்வது நம் சமூகத்தை பற்றிய செய்தி "பலப்பட்டிருக்கும்" நாமும் அதுபோல் நடைமுறையில் கொண்டுவருவோமாக!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

அற்புதமான ஆலோசனைகள். மாற்று மத சகோதரர்களின் கவனத்தை ஈர்க்கும் வழிகாட்டுதல்கள். பொறுப்பான தஃவா.

இப்படிப்பட்ட இலகுவான அனுகுமுறைகள் நல்ல பலனைத் தரும் என்பது திண்ணம்.

தொடரட்டும் தங்கள் பணி.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk said...

//எடுத்துச் சொன்னால் வக்கிரங்களால் வறண்டுபோன இதய நிலங்களிளும் அறியாமையால் விதண்டாவாதம் செய்யும் இதயங்களிலும் அழைப்பு எனும் அருள்தரும் விதையை மூட்டை மூட்டைகளாக விதைக்க இயலும்//

கண்டிப்பாக இயலும்!

Ebrahim Ansari said...

வ அலைக்குமுஸ் சலாம்.
அதிரை நிருபரின் இருகவிக்கண்களான தம்பி சபீர் மற்றும் கிரவுன் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

இந்தப் பதிவைப் படித்து விட்டு ஒரு வழக்கறிஞர் ஆகப் பணியாற்றும் ஒரு நண்பர் கேட்டார். " என்ன அண்ணன் ! பதிவில் வழக்கமாகப் போடும் பச்சை மிளகாயைக் காணோம்? "

நான் : நல்லிணக்கத்தின் மீது இச்சை அதிகமானதால் பச்சை மிளகாய் போடவில்லை; பச்சையாகவும் எழுதவில்லை. பண்பு, அன்பு, பாசம், இணக்கம், இணைப்பு , இதயத் திறப்பு, சமம், சகோதரத்துவம் , சரிநிகர் ஆகியவற்றின் சாரமே இந்தத் தலைப்பில் விவாதிப்போம் என்றேன்.

காலத்தின் தேவை என்றார்.

அவர் பெயர் ? : பாண்டியன் என்று நிறைவுறும்.

இதுவரை இந்த ஒரு விதை விதைக்கப்பட்டதாக கணக்கு வந்துள்ளது என்று கருதுகிறேன். மாஷா அல்லாஹ்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

வ அலைக்குமுஸ் சலாம்.
அதிரை நிருபரின் இருகவிக்கண்களான தம்பி சபீர் மற்றும் கிரவுன் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

இந்தப் பதிவைப் படித்து விட்டு ஒரு வழக்கறிஞர் ஆகப் பணியாற்றும் ஒரு நண்பர் கேட்டார். " என்ன அண்ணன் ! பதிவில் வழக்கமாகப் போடும் பச்சை மிளகாயைக் காணோம்? "

நான் : நல்லிணக்கத்தின் மீது இச்சை அதிகமானதால் பச்சை மிளகாய் போடவில்லை; பச்சையாகவும் எழுதவில்லை. பண்பு, அன்பு, பாசம், இணக்கம், இணைப்பு , இதயத் திறப்பு, சமம், சகோதரத்துவம் , சரிநிகர் ஆகியவற்றின் சாரமே இந்தத் தலைப்பில் விவாதிப்போம் என்றேன்.

காலத்தின் தேவை என்றார்.

அவர் பெயர் ? : பாண்டியன் என்று நிறைவுறும்.

இதுவரை இந்த ஒரு விதை விதைக்கப்பட்டதாக கணக்கு வந்துள்ளது என்று கருதுகிறேன். மாஷா அல்லாஹ்.
----------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.பூவோடு(சபீர்காக்கா)சேர்ந்த நாறும்( நானும்) மணக்கிறேன்.பச்சையாக எழுதாமலும்,கொச்சையாக எழுதாமலும் இப்படி மெச்சதக்க எழுத உங்களிடம் மற்றவர்கள் பிச்சை எடுக்கனும்.பிச்சி எடுக்கிறீங்க!தேவைக்கு மட்டும் குச்சி எடுக்கிறீங்க! சாமாதன கட்சி நடத்தல்சரியான ஆள் நீங்கள் தான்!கருத்தை அச்சி வார்ப்பதில் ஆட்சி செய்றீங்க!யாரும் சூழ்ச்சி செய்து உங்க எழுத்தை வீழ்ச்சி அடைய வைக்க முடியாது!என்பதுவரை மகிழ்ச்சி!விதை விருட்சமாகட்டும் ஆமீன்.

அதிரை.மெய்சா said...

இக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே இஸ்லாத்தை பற்றி தவறாக புரிந்துகொள்ளும் சில மாற்றுமத சகோதரர்களுக்கு நன்கு மனதில் பதியும்படி உணர்த்தியிருக்கிறீர்கள்.

உங்களது இந்த விளக்கத்தை வாசித்தால் பெயரளவுக்கு இஸ்லாமி யாராக இருப்பவர்களும் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை சரிவர பேணாதவர்களும் பேணி நடக்க மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

அருமை. தொடருங்கள் காக்கா.

sheikdawoodmohamedfarook said...

பள்ளபட்டிதிருமணசிஸ்டம் வரவேற்கதக்கது. ஆனால்சகனில் கூடதெரு, ஆள்,குடும்பம் வித்யாசம் பார்க்கும் நம்மஊருஇஸ்லாம்ஏற்றுக்கொள்ளுமா?

sheikdawoodmohamedfarook said...

உருவமற்ற ஒரேஇறைவன்பற்றிஇந்துமதம்சார்ந்த ஞாணிகள், புலவர்களின் இனிக்கும்தமிழ் பாடல்களைபோட்டுஅவர்களை கவர்ந்துவிட்டீர்கள் .இதைநம்பி அவர்கள் இதுவரை கடைபிடித்து வந்த உருவ வழி பாட்டை கைவிட்டு இஸ்லாத்திற்க்கு வந்தால் ஆணுக்கொரு பெண்ணைமனைவியாகவும் பெண்ணுக் கொரு ஆணை கணவனாகவும் கொடுப்பது யார்?I meanபூனைக்கு மணிகட்டுவது யார்?

N. Fath huddeen said...

"திருமண அறிவிப்பிதழ் தானே தவிர, திருமண அழைப்பிதழ் அல்ல!" என்று நமதூரின் இஸ்லாமிய முற்போக்கு சிந்தனையாளர் ஒருவர் சொல்லுவர் அடிக்கடி.

நமதூர் ஆலிம் ஒருவர் தனது மகனுக்கு ஈத் பெருநாள் அன்று பெருநாள் தொழுகை முடிந்ததும் அறிவிப்பு செய்து திருமணம் முடிந்தது. மிகவும் எளிய முறையில் நடந்தேறியது.

தமிழ் நாட்டில் சிறந்த எழுத்தாளர் என்ற பட்டம் பெற்ற இஸ்லாமிய நண்பர், பெரும் தொழில் அதிபர், நற்சிந்தனையாளர், இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் வரவேண்டும் என்று மிகக் கடினமாக உழைத்துக்கொண்டிருப்பவர் தனது மகள் ஒரு MBBS டாக்டர், திருமணம் நடந்தது. அப்பேற்பட்டவர் அந்த திருமணத்திற்கு அழைத்தது வெறுமனே 32 பேர்கள் தான்!

இன்ஷா அல்லாஹ், நாமும் இது போன்று எளிய முறையில் நடத்த முயற்சிப்போமாக.

Ebrahim Ansari said...

மரியாதைக்குரிய மச்சான் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.
//நம்மஊருஇஸ்லாம்ஏற்றுக்கொள்ளுமா// என்று கேட்டிருக்கிறீர்கள்.
விடையளிப்பது கடினம்தான். ஆனாலும் இங்கு எழுதப்படுவது நமது ஊரை மனதில் வைத்து அல்ல. பொதுவான சமுதாயத்தை மனதில் வைத்துத்தான் எழுதுகிறேன்.
தமிழன் என்றொரு இனம் உண்டு ; தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று ஒரு கவிஞர் பாடினார். அதே போல் அதிரைக்கு என்று சில பழக்க வழக்கங்கள் – புரையோடிப்போன பழக்க வழக்கங்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. ஆனால் காலம் மாறிக் கொண்டு இருக்கிறது. பல வளர்ந்து வரும் இளைஞர்கள் இங்கு நிலவி வரும் வேறுபாடுகளை உணர்ந்து இருக்கிறார்கள். அவைகளை மாற்ற வேண்டுமென்று நினைக்கிறார்கள்; சிறுகச் சிறுக செயலிலும் காட்டப்பட்டு வருகிறது.
நெருங்கவே இயலாது என்று நினைத்த சில குடும்பங்கள் அமெரிக்காவில் சம்பந்தம் பேசி ஊரில் வைத்து திருமணம் நிகழ்வுற்ற சம்பவங்கள் எல்லாம் இப்போது மெல்ல மெல்ல நிறைவேறி வருகிறது. பொருளாதாரத்தில் ஊர் வளர்ச்சி அடையும் நிலையில் சமுதாயத்தில் இருக்கும் சில குறைபாடுகளும் நிச்சயம் களையப்படுமென்று நம்புவோம். அதற்காகவும் து ஆச் செய்வோம்.
நீங்கள் குறிப்பிட விரும்புகிற முஸ்லிம்களுக்கிடையேயான ஏற்ற தாழ்வுகள் காணும் மனப்பான்மை நமது ஊரில் மட்டுமல்ல இன்னும் சில ஊர்களிலும் இருக்கவே செய்கின்றன.
மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கும் நேரத்தில் நம்மையும் நாம் செப்பனிடவும் , செம்மைபடுத்தவும் – இன்றுள்ள மொழியில் சொல்லவேண்டுமானால் தூர்வாரவும் – வேண்டும் என்பதை மறுக்க இயலாது.
இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடர் நிறைவுறும் முன்பு இது பற்றி தனி அத்தியாயம் எழுதி கவனப்படுத்தலாம். மாற்றாருக்கு இஸ்லாத்தை அறிமுகப் படுத்த நாம் முனையும் முன்பு நம்மிடையே குணங்களில் மண்டிப்போய் இருக்கும் சில முட்புதர்களையும் வெட்டி வீசியே ஆகவேண்டும்.

Ebrahim Ansari said...

கேள்வி பிறந்தது அங்கே! நல்ல பதிலும் கிடைக்குமா இங்கே?

பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்களின் கேள்வி.

//இஸ்லாத்திற்க்கு வந்தால் ஆணுக்கொரு பெண்ணைமனைவியாகவும் பெண்ணுக் கொரு ஆணை கணவனாகவும் கொடுப்பது யார்?I meanபூனைக்கு மணிகட்டுவது யார்?//

நான் அறிந்தவரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட வயதுக்கு வந்த எந்த ஆணும் பெண்ணும் பிரம்மச்சாரிகளாக வாழ்வது இல்லை. அவரவர்களுக்கு ஏற்றபடி திருமணங்கள் நடைபெறுகின்றன.

பெரும்பாலும் இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட குடும்பங்களே தங்களுக்குள் சம்பந்தம் செய்துகொள்கின்றன. இதற்கு பல உதாரணங்களை நான் நேரடியாக அறிந்த பல குடும்பங்களில் இருந்து என்னால் சுட்டிக் காட்ட இயலும்.

ஒருவேளை உங்களது கேள்வி அதிரையின் மனப்பான்மையை வைத்துக் கேட்டிருந்தால் அதற்கு இப்போது பதில் சொல்ல இயலாது. அதில் பல FACTORS இருக்கின்றன. அவற்றை விரிவாக எழுதவேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிடலாம். நமது ஊர் சம்பந்தங்கள் பெரும்பாலும் சொந்த குடும்ப த்துக்குள்ளேயேதான் செய்யப்படுகின்றன.

ஆகவே புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு ஏன் பெண்/ ஆண் கொடுப்பதில்லை என்று கேட்பது நடைமுறைக்கு அவ்வளவாக சரியாக வராது என்றே நினைக்கிறேன். வெளிக் குடும்பத்திலேயே சம்பந்தம் செய்யாத சூழ்நிலையில் இருப்பவர்களிடம் இப்படி கேட்பது சாத்தியம் இல்லை. பெரும்பாலும் பிள்ளைகள் பிறந்து தொட்டிலில் கிடக்கும்போதே குடும்பத்து பெரியவர்களின் மனதில் சம்பந்தங்கள் நிழலாடிவிடுகின்றன.

அதுதான் சொன்னேனே அதிரையின் சூழல் வைத்துக் கேள்விகளை இப்போது எழுப்புவது சரியாகாது. இப்போது நாம் பொதுவாகவே பேசுகிறோம்.

நம்மைப் பற்றி உள்ள குறை நிறைகளையும் ஆய்வோம் விவாதிப்போம் இன்ஷா அல்லாஹ்.

காலப்போக்கில் இவைகளும் சரியாகலாம். .

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி எழுத்தாளர் மெய்ஷா அவர்களுக்கும் சிறந்த உதாரணங்களை இங்கு பட்டியலிட்ட தம்பி N. Fath huddeen அவர்களுக்கும் ஜசாக்கல்லாஹ் ஹைரா. தங்களைப் போன்றவர்களின் கருத்திடல் இங்கு எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும்.

crown said...

நான் அறிந்தவரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட வயதுக்கு வந்த எந்த ஆணும் பெண்ணும் பிரம்மச்சாரிகளாக வாழ்வது இல்லை. அவரவர்களுக்கு ஏற்றபடி திருமணங்கள் நடைபெறுகின்றன.

பெரும்பாலும் இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட குடும்பங்களே தங்களுக்குள் சம்பந்தம் செய்துகொள்கின்றன. இதற்கு பல உதாரணங்களை நான் நேரடியாக அறிந்த பல குடும்பங்களில் இருந்து என்னால் சுட்டிக் காட்ட இயலும்.

ஒருவேளை உங்களது கேள்வி அதிரையின் மனப்பான்மையை வைத்துக் கேட்டிருந்தால் அதற்கு இப்போது பதில் சொல்ல இயலாது. அதில் பல FACTORS இருக்கின்றன. அவற்றை விரிவாக எழுதவேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிடலாம். நமது ஊர் சம்பந்தங்கள் பெரும்பாலும் சொந்த குடும்ப த்துக்குள்ளேயேதான் செய்யப்படுகின்றன.

ஆகவே புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு ஏன் பெண்/ ஆண் கொடுப்பதில்லை என்று கேட்பது நடைமுறைக்கு அவ்வளவாக சரியாக வராது என்றே நினைக்கிறேன். வெளிக் குடும்பத்திலேயே சம்பந்தம் செய்யாத சூழ்நிலையில் இருப்பவர்களிடம் இப்படி கேட்பது சாத்தியம் இல்லை. பெரும்பாலும் பிள்ளைகள் பிறந்து தொட்டிலில் கிடக்கும்போதே குடும்பத்து பெரியவர்களின் மனதில் சம்பந்தங்கள் நிழலாடிவிடுகின்றன
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நான் நினைத்தது வரிக்கு வரி எழுதிவிட்டீர்கள். மாற்று மதத்தினரும் பெண் எடுக்கும் விசயத்தில் அவ்வளவு எளிதாக எடுத்து விடுவதில்லை.

sheikdawoodmohamedfarook said...

//புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பெண்/ஆண் கொடுத்து சம்பந்தம் செய்வதுதற்போதைக்குசரியாக வராது// அப்படியென்றால்அவர்கள் இன்னும்'முழுஇஸ்லாம்'' என அங்கீகரித்து பட்டம் வழங்கப் டவில்லையா?வாஜிப்பானதொழுகையில் ரக்காத்துகளில் ஏதும்மாற்றங்கள்உண்டா?அதிராம் பட்டினத்துக்கென்று இஸ்லாத்தில் ஏதேனும்Exception/ Privilegeகொடுக்கப்பட்டு இருக்கிறதா ? தொழுகையில் ஏழையின்பின்னால்பணக்காரன் நின்று தொழும் சமத்துவநிலை இஸ்லாத்தில்மட்டுமேஉண்டுஎன்பவர்கள் சாப்பாட்டு சகனில் ஏழைகளோடு உக்காந்துஉங்க ஒப்பவில்லையேஏன்?

Ebrahim Ansari said...

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார் என்றால் அவர் ஒரே இறைவன் என்பதையும் பெருமானார் ( ஸல்) அவர்கள் அந்த இறைவனுடைய அருட்தூதர் என்பதையும் அந்த இறைவனின் மறையும் அந்த நபியின் வழியும் நடப்பேன் என்றே உறுதி எடுத்து ஏற்கிறார். அப்படி ஏற்றால்தான் சரியாக இருக்கும்.

நான் இஸ்லாத்தை ஏற்றால் அதிரையில் பெண் தருவார்கள் என்றோ அல்லது அதிரையில் சகனில் கூப்பிட்டு உட்கார வைப்பார்கள் என்றோ ஏற்பது இல்லை. அதேபோல் அவர்கள் சகனில் உட்காரக்கூடாது என்று போர்டு எழுதிப் போடுவதும் இல்லை.

அதிரைக்கென்று இஸ்லாத்தில் ஏதேனும்Exception/ Privilegeகொடுக்கப்பட்டு இல்லைதான். ஆனால் இங்கு நிலவும் பாரம்பரிய குடும்ப சூழ்நிலைகளை அவ்வளவு சுலபமாக விட்டு விட பொதுவாக மனம் வராது. அதை வற்புறுத்தவும் கூடாது.

திருமணம் என்பது இருவீட்டார் கலந்து பேசி மனம் ஒப்பி அவரவர் தோதுக்கு செய்வது ஆகும். சிலர் இஸ்லாம் என்கிற நல்ல வழியைத் தேர்ந்தெடுப்பார்கள் அவர்களுக்கு பெண் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைகளைப் பெற்று ரெடிமேடாக வைத்துக் கொள்ள நடைமுறை சாத்தியம் இல்லை. அப்படி ஒரு விதியும் இல்லை. ஒருவருக்கொருவர் மனம் ஒப்பினால் பொருத்தம் இருந்தால் அவர்கள் கூட செய்துகொள்வார்கள். அதை யாராலும் தடுக்க இயலாது. இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்று மார்க்க ரீதியாக தடை ஒன்றும் இல்லை என்பது மட்டுமே நாம் சொல்லக் கூடிய செய்தியாகும். செய்வதும் செய்யாததும் தனிநபர்களின் விருப்பத்தையும் சூழலையும் பொறுத்தது.

அதேநேரம்,
எப்படி இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒருவரை தாவா செய்து மனத்தளவில் தயாராக்குகிரோமோ அதேபோல் உண்மையான சரிநிகராக வாழ்வதற்கும் ஏற்கனவே இருக்கும் முஸ்லிம்களையும் தாவா செய்து மனத்தளவில் தயாராக்க வேண்டும். இது நம் முன்னே இருக்கும் பெரும் பணி மற்றும் காணப்படும் இடையூறு என்பதையும் நான் ஏற்கிறேன். இதைப் பற்றியும் நிறைய விவாதிக்கவேண்டும்.

இதைப்பற்றி இனி கருத்துரையில் விவாதிக்க இயலாது.

இதற்கான நீண்ட விளக்கம் தேவை. அந்த விளக்கங்கள் இன்ஷா அல்லாஹ் இத்தொடரின் நிறைவில்..

சஹானில் உட்காரும் மனிதர்களிடம் நான் அறிந்தவரை யாரும் வருமானவரி சர்டிபிகேட் கேட்பதில்லை மச்சான். உட்கார்ந்தவர்களை எழுப்பிவிடுவதும் இல்லை. பொதுவாகவே சஹனுக்கு நாலு பேர் என்றால் அவர்கள் ஒரு நண்பர்கள் குழாமாக பள்ளியிலிருந்தே ஒன்றாகவே வருவார்கள் ; ஒன்றாகவே உட்கார்வார்கள். பேசிகொண்டு சிரித்துகொண்டு சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்கள்.

தனியாக வருபவர்களையும் யாரும் ஒதுக்கி புறக்கடைக்குத் தள்ளுவதில்லை. அவர்களைப் போல் செட் சேராமல் தனித் தனியாக நிற்கும் நான்கு பேரை சேர்த்து சாப்பிட வைப்பார்கள். இது கண்கூடு.

மனமாற்றங்கள் இருதரப்பிலும் தேவை என்று நீங்கள் சொல்லவருவதை நான் புரிந்துகொள்கிறேன். அதைப் பற்றி அத்தியாயத்தில் பேசலாம்.

sabeer.abushahruk said...

நல்ல விளக்கம்!

நண்மை தேடித்தரும் பொறுமை!

ஆனால், நன்றி ஃபாரூக் மாமாவுக்குத்தான்; அவர்கள் தோண்டப்போய்த்தான் நீங்கள் கருத்துப்பெட்டியில் ஊற்றெடுத்திருக்கிறீர்கள்.

எனினும், துஆ கண்டிப்பாக உண்டு

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk said...

யதார்த்தத்தைக் கொண்டு மடக்கியும்; எதிர்பார்ப்புகளைக் கொண்டு விடையளித்தும்; நடப்பு இதுதானே என்று மீண்டும் கதவடைத்தும்; நடப்பை மாற்றவெர் இந்த முயற்சி என்று கதவைத் திறந்தும்...

ஆஹா ஆஹா... வாசகனுக்கு செம்ம தீனி!

வாழ்க மச்சான்கள்!

sabeer.abushahruk said...

இன்னும்,
'இருட்டா இருக்கே' என்ற ஃபாரூக் மாமாவின் புலம்பலுக்கு, 'இதோ வெளிச்சம்' என்று ஈனா ஆனா காக்கா ஜன்னல் திறப்பதும்;

'குறுகிய வட்டமாச்சே' என்ற குமுறலுக்கு 'இதோ இன்னும் கொஞ்சம் விட்டம்' என்று வாதிடுவதும்;

"பாதையைக் காணோமே?" என்ற கேள்விக்கு "விரலைப் பிடியுங்கள்" என்று கூட்டிச் செல்வதும்...

நீங்கள் ரெண்டு பேரும் பேசிக்கொள்ளும்போது பக்கத்தில் இருந்து கேட்கனும்போல் இருக்கு!

sheikdawoodmohamedfarook said...

என்முஸ்லிம்நண்பர்ஒருவர்சொன்னார்''என் மகனின் கல்யாண பத்திரிக்கை கொடுத்து அழைக்க எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டுக்கு சென்றேன். அம்மாஇருந்தார்கள்.பத்திரிக்கையை வாங்கிபடித்தஅம்மா சொன்னார்கள்''என்மகளுக்குஎத்தஜோடிஉங்கள்மகன்!''படிப்பிருக்கு! அழகுருக்கு!பொருத்தம்இருக்கு!வீதியிலேரெண்டுபேரும்கைகோத்து நடந்தால்எட்டுகண்ணும்உட்டுரைக்கும்.உங்க மகனை என்மகளுக்கு எடுத்துமுடிக்கலாந்தான.ஆனால் நீங்கள் மட்டஜாதியாச்சே!'' என்று அம்மா சொன்னார்களாம் .ஒருவர்முகத்துக்கு முன்னாடியே அவரை கொச்சை படுத்துவதை இஸ்லாம் ஏற்றுகொள்கிறதா? இஸ்லாத்தில் மட்டஜாதி ஒசத்திஉண்டா?

sheikdawoodmohamedfarook said...

மருமகனேசபீர்!நான் உடும்பு! பிடித்தால் விடமாட்டேன். மாட்டிகொண்டார்.மைத்துனர்இனா.ஆனா.

Ebrahim Ansari said...

//இஸ்லாத்தில் மட்டஜாதி ஒசத்திஉண்டா?//

மரியாதைக்குரிய மச்சான் அவர்களுக்கு,

நான் ஒவ்வொவொரு படியாக மேலேறி வர நினைக்கிறேன். நான் ஏறி நடந்து வரும் படிகளின் பாதையில் எங்கேனும் தெரிப்புகளோ, பிளவுகளோ தெரிந்தால் அவைகளுக்கும் பரிகாரம் சொல்லித்தான் வருவேன். இன்ஷா அல்லாஹ்.

ஆனால் நீங்கள் பாதி வழியில் ஒரு படியைக் காட்டி இடையிலேயே அதை சரி செய்யச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்லும் இந்த ஜாதிப் பிரச்னை இஸ்லாத்தின் விமர்சகர்கள் சொல்லிவருவதுதான். அதற்கான விளக்கமும் நாம் தொடர்ந்து அளித்து வருவதுதான்.

மார்க்கப்படி இல்லாத ஒன்றை சமூகப் பழக்கத்தில் சில சுய நலமிகள் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் அவர்களுக்கு இருக்கும் மார்க்க அறிவின் குறைபாடே. அதனால்தான் சொன்னேன் தாவா எனபது அயலாருக்கு மட்டுமல்ல உள்வீட்டாருக்குமே தேவைப் படுகிறது என்று.

இந்தக் காலத்தில் கூட இவ்வாறு பேசுகின்றவர்களை- நடப்பவர்களை- சிந்திப்பவர்களை கிழி கிழி என்று கிழிக்க இருக்கிறேன். இப்போது எழுதும் இந்த அத்தியாயங்களில் போடாத பச்சை மிளகாய், சாத்தூர் மிளகாய், ராஜமுந்திரி குண்டு மிளகாய் எல்லாம் போட்டுத்தான் இந்தத் தொடர் நிறைவுறும்.

ஆகவே நான் அந்தப்படிக்கு அல்லது அந்த நிலைக்கு வரும்வரை பொறுமை காக்க வேண்டுகிறேன். இப்போதே இப்படி தவணை முறையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் கருத்துக்களை தொகுப்பாகக் கூற இயலாத அளவுக்கு கருத்துச் சிதறல்கள் ஏற்படக் கூடும் என்று அஞ்சுகிறேன்.

உங்கள் உடும்பை அப்போது எடுத்து வெளியில் விடுங்கள். நாங்கள் யாவரும் அதனுடன் விளையாடிப் பார்க்கலாம்.

//மாட்டிகொண்டார்.மைத்துனர்இனா.ஆனா//. இப்போதானா? நான் பிறந்த அன்றுமுதலே - நான் வளர்ந்த காலம் தொட்டே மாடிக் கொண்டேனே!

ஒருமுறை ஆறுமுகங்கிட்டங்கி அருகே நான் உங்களிடம் வாங்கிய அறை இன்னும் வலிக்கிறதே!.

இப்போது மழை பொழிகிறது. மெல்லிய இசையில் " பூங்கதவே தாழ் திறவாய் ! பூவாய்! செம்பாவாய் ! இனிமையாக " ஓடிக்கொண்டு இருக்கிறது

sheikdawoodmohamedfarook said...

பதில் திருப்திஅளிக்கிறது! கொஞ்சநாள் பொறுத்துதிருந்து பார்ப்போம் !வேதாளம்முருங்கைமரம்ஏறாமல்இருந்தால்நல்லதே!அஸ்ஸலாமுஅலைக்கும்[வரஹ்]

Unknown said...

ஃபாரூக் காக்கா,
கைத்தடியைச் சாத்தி வய்ங்க.
ச்சேர்ல உக்காந்து பேப்பர் படிங்க.
எங்க 'எழுத்தறிஞரை' எழுத விடுங்க.

crown said...

Adirai Ahmad சொன்னது…

ஃபாரூக் காக்கா,
கைத்தடியைச் சாத்தி வய்ங்க.
ச்சேர்ல உக்காந்து பேப்பர் படிங்க.
எங்க 'எழுத்தறிஞரை' எழுத விடுங்க.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு