Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் 14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2015 | ,

கடந்த ஞாயிற்றுக்கிழமை பலருக்கு கொண்டாட்டமாகவும் சிலருக்கு திண்டாட்டமாகவும் அமைந்தது. காரணம், பீஹார். 

பீஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்து என்பதைவிட உலகமே எதிர்பார்த்தது என்பதே உண்மை. 

அலசலுக்கு முன் பீகாரை பற்றி ஒரு சிறிய சரித்திர ரவுண்ட் அப். 


மகத ராஜ்யம் என்பது இந்தியாவின் முன்னோடி சாம்ராஜ்யங்களில் ஒன்றான மவுரிய சாம்ராஜ்யத்தின் ஏற்றமும் எழுச்சியும் மிக்க பகுதியாகும்..இந்திய வரலாற்றைப் படித்தவர்கள் சந்திரகுப்த மவுரியர் என்கிற பெயரை அறியாமல் இருக்க இயலாது. அவர் ஆண்ட பூமிதான் இன்றைய பீஹார். அவர் மட்டுமல்ல அசோகர் தி கிரேட் என்று வரலாறு புகழும் அசோகச்சக்கரவர்த்தி பிறந்ததும் பீஹாரின் இன்றைய தலைநகரான பாடலிபுத்ரம் என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய பாட்னாவில்தான். அசோகர் மட்டும்தானா? குப்தர்காலம் பொற்காலம் என்று வரலாறு போற்றத்தக்க விதத்தில் குப்தர்களால் ஆளப்பட்டதும் பீகார்தான். தஞ்சாவூர் முதலாம் இராஜராஜ சோழனால் வெற்றி கொள்ளப்பட்டதும் பீஹார்மண்தான்.

மகான்கள் என்றும் மதத்தலைவர்கள் என்றும் புகழப்படும் பலர் அவதரித்த பூமி அது. இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் புத்தர் பிறந்த கயா மட்டுமல்ல ஜைன மதத்தின் கடைசி மகான் ஆன மகாவீரர் பிறந்த வைசாலியும் அங்குதான் இருக்கிறது. சீக்கிய மதத்தின் 10 – ஆவது கடைசி குருவான குரு கோவிந்த சிங் பிறந்ததும் இதே பாட்னாவில்தான். நாளந்தா பல்கலைக் கழகம் என்பது இந்தியாவின் முதல் பல்கலைக் கழகம் டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் போன்ற குறிப்பிடத்தக்க முதல் வரிசைத் தலைவர்களோடு ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற சிறப்புமிகு அரசியல் தலைவர் மற்றும் இந்தியாவில் சிலகாலம் துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன்ராம் ஆகியோரும் பீஹாரைச் சேர்ந்தவர்தான். 

நீண்ட காலம் மன்னர்களின் ஆட்சி மாறி மாறி நடந்தாலும் எப்போதும் அவர்களோடு ஒட்டிக் கொண்டு இருந்து காலம் ஓட்டும் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தின் அரசியல் செல்வாக்குதான் அங்கு செல்லுபடியாகிக் கொண்டு இருந்தது. இதனால் சரித்திர காலம்தொட்டு அண்மைக்காலத்தில் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சரத் யாதவ் , ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற சமூக நீதிக் காவலர்கள் அரசியல் வானில் ஒளிவிடும்வரை பீஹாரின் பெரும்பான்மை மக்களாக இருந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபானமையின மக்களுக்குடைய வாழ்வு அதிகாரச் சுரண்டலுக்கும் உயர்சாதி கொடுமைகளுக்குமே ஆளாகி இருந்தது. 

லாலுவும் நிதிஷும் பஸ்வானும் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கூட்டணிகளை மாற்றி மாற்றி தோற்றும் வென்றும் அரசியல் நடத்தினாலும் இந்த முறை தடம் மாறிப் போன ராம்விலாஸ் பாஸ்வானை ஒரு ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு லாலுவும் நிதிஷும் தங்களின் கரங்களில் இதுநாள் வரை ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட ஏந்தி நின்ற எல்லா ஆயுதங்களையும் கீழே வீசி எறிந்துவிட்டு இந்தியாவை எதிர் நோக்கி வந்த வகுப்புவாத சுனாமியை சோனியா காந்தி என்ற துணையுடன் நட்புப் பாலம் கட்டி தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். 

உண்மையில் நடைபெற்று முடிந்த பீஹார் சட்ட மன்றத் தேர்தல்களின் முடிவுகள் வரும்வரை இந்தியாவின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது எனலாம். இந்தக் கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றிக் காட்டி ஒரு மாநிலத்து மக்கள் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கே இனி அச்சமில்லை என்று அஞ்சுதலை நீக்கி ஆறுதலைத் தந்து இருக்கிறார்கள். 

இந்த மெஹா கூட்டணியின் மெஹா வெற்றிக்குக் காரணம் என்று நாம் சிலவற்றைப் பட்டியலிடவேண்டுமானால் இந்த வெற்றிக்கு முதல் காரணம் நாம் உணர்ந்த வரை அரசியல் வித்தகர் நிதிஷோ அங்கிள் லாலு பிரசாத் அவர்களோ அம்மையார் சோனியாவோ அல்ல. யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல் “ ஆறடி உயரமுள்ள மனிதனை ஆறு அங்குல நாக்கு கொன்றுவிடும் “ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சுட்டினார்களே அந்த நாவைப் பேணாத பிஜேபியின் வளர்ச்சியின் நாயகன் திரு மோடி அவர்களும், அவரது ஊது குழல்களும்தான். 

பிஜேபியின் இந்த தலைகாட்ட இயலாத தோல்விக்கு என்னவெல்லாம் காரணங்கள்? 

முதலாவதாக ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாடு தழுவிய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டுமென்று பீகாரில் பேசினார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உயர்சாதி பிரமணீயக் கட்டமைப்புக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை உண்டென்றால் அது இட ஒதுக்கீடுதான். ஆனால் காலமெல்லாம் ஒடுக்கப்பட்ட பீஹார் மக்களுக்கு அந்த வார்த்தைதான் வரப்பிரசாதம். அதில் தீமூட்ட வந்த தீயவர்களுக்கு இந்த தைரியம், மத்தியில் மோடி அசுரபலத்துடன் பதவியில் அமர்ந்தது முதல்தான். ஆகவே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க பீஹார் மக்கள் முனைந்தனர். 

அடுத்து , பீகாரில் ஜனதா தள மெகாக் கூட்டணி வெற்றி பெற்றால் உண்மையான வளர்ச்சியின் நாயகனாக கடந்த பத்தாண்டுகளாகத் திகழும் நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று அறிவித்து தேர்தலை எதிர் கொள்ளும் போது பிஜேபியால் அவ்வாறு ஒருவரை முன்னிலைப் அடுத்த இயலவில்லை. பாவம் மோடி ஏற்கனவே பிரதமராக இருப்பதால் அவருக்கும் அந்த வாய்ப்பு இல்லை. ஆகவே யாருக்காக நாம் வாகளிக்கிறோம் என்று தெரியாமல் பீஹார் மக்கள் வாக்களிக்கத் தயாராயில்லை. 

மூன்றாவதாக, இந்தத் தேர்தல் மாட்டுக்கறி சாப்பிடுவோருக்கும் சாப்பிடாதோருக்கும் நடைபெறும் தேர்தல் என்றும், இந்தத் தேர்தலில் ஜனதா தள மெகா கூட்டணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் வெடி வெடிப்பார்கள் என்றும் இங்குள்ள முஸ்லிம்களின் உடல்தான் இங்கிருக்கிறது உள்ளம் பாகிஸ்தானில் இருக்கிறது என்றும் அமித்ஷா உட்பட்ட முன்னணி தலைவர்களின் மேடைப் பேச்சுக்கள் தங்களை அவமானபடுத்தியதாகவே பீஹார் மக்கள் உணர்ந்தனர். தங்களின் ஒப்பற்ற தலைவர்களை நரேந்திர மோடி மூன்று இடியட்ஸ் என்று கூறியதற்கு பதிலுக்கு அவரைத் திட்டாமலேயே பாடம் படித்துக் கொடுக்க அவர்களின் கரங்களில் வாக்குச்சீட்டுத் தரப்பட்டது ; வகையாகப் பயன்படுத்திக் கொண்டனர். 

நான்காவதாக, தாத்ரியில் நடைபெற்ற முகமது அக்லக் என்ற அப்பாவி மாட்டுக்கறி சாப்பிட்டார் என்பதற்காகவே மனித குலம் சகிக்க முடியாதபடி கல்லாலேயே அடித்து அவரைக் கொன்ற நிகழ்ச்சி பெரும் தாக்கத்தை பீஹார் மக்களின் மத்தியில் ஏற்படுத்தியது. இன்று அவருக்கு அந்நிலை நாளை ஏன் நமக்கு இருக்காது என்ற கேள்விக்கு வாக்குச்சீட்டால் பதில் அளிப்பதைத் தவிர வழி இல்லை அவர்களுக்கு. 

ஐந்தாவதாக, அரியானாவில் நடைபெற்ற அவலச்சாவு. இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயர்சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தலித்கள் நிறைந்த பீஹார் மக்களின் மனதைப் புண்படுத்திய காயம் காய்வதற்குள் , அந்த சம்பவத்தை நாய் மீது கல்லெறிந்த சம்பவத்துக்கு சர்வசாதரணமாக ஒப்பிட்டு ஒரு மத்திய அமைச்சர் பேசியது பீஹார் மக்களை ஒரு ஜனநாயக நெறியில் தீர்த்துக்கட்டும் முடிவை எடுக்க வைத்தது. 

வளர்ச்சியின் நாயகன், வளர்ச்சிதான் எங்கள் நோக்கம் என்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி முன்வைத்த திட்டங்களை நம்பி அதிகமான பாராளுமன்ற இடங்களை அவர்களுக்கு அள்ளி வழங்கிய பீஹார் மக்கள் மோடியின் மகுடியில் மயங்கி நிதிஷ் குமாருக்கு இழைத்த பாவத்துக்கு, இவ்வாறு மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அவருக்கு வாரி வழங்கி பரிகாரம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அநீதிக்கும் அக்கிரமத்தும் வேட்டு! அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒட்டு! என்று சமூக நீதியில் திளைத்த பீஹார் மக்கள், தீர்ப்புகளைத் திருத்தி நீதி வழங்கி இருக்கிறார்கள். 

இந்த பீஹார் தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத சார்பற்ற, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அரசியல் சக்திகள் திக்குக்கு ஒன்றாகப் பிரிந்து தங்களின் வாக்குகளைப் பிரித்துக் கொண்டதால் ஒன்றாக இருந்த நான்கு மாடுகளை பிரித்துவிட்டு , தனித்தனியாக அவற்றை அடித்துக் கொன்றது போல் பிஜேபி மிருக பலத்துடன் வெற்றி பெற்றது. 

அதன் காரணமாக நாடு இதுவரை கட்டிக் காப்பாற்றி வந்த சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், சமூக நீதி ஆகிய நல்ல கொள்கைகளுக்கு ஏற்பட்ட ஆபத்தையும் சமஸ்கிருதத்துக்கு சாமரம் வீசுவது, சகோதர்களைப் பிரிப்பது, என்றோ எழுபது வருடங்களுக்கு முன்பு பிரிய வாய்ப்பிருந்தும் இந்திய மண்ணையே எங்களின் மண் என்று இங்கேயே இருந்த இஸ்லாமியர்களை இங்கே போ! அங்கே போ! என்று விரட்டத் துணிவது யார் எதை சாப்பிட வேண்டுமென்று பெரும்பான்மை மக்களுக்கு ஒரு சிறு கூட்டம் உத்தரவிடுவது மீறினால் உயிரை எடுப்பது போன்ற தீய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டுமானால் ஒன்றுபடு! வென்று விடு! என்று காங்கிரஸ் எடுத்துவைத்த திட்டத்துக்கு கைகொடுத்து ஒரு ஆபத்தில் சிக்கி அல்லலாடிக் கொண்டிருந்த மக்கள் மனதுக்கு இந்த விட்டுக் கொடுக்கும் தன்மையால் பெற்ற வெற்றி ஆறுதலைத் தந்து இருக்கிறது . 

இந்த ஒற்றுமையின் வெற்றிக்காக யாரைப் பாராட்டுவது என்றுதான் தெரியவில்லை. இரண்டு முறை முதலமைச்சராக இருந்து வளர்ச்சிப் பணிகளை ஆற்றிய நிதிஷ் குமாரும், மக்கள் தலைவரான லாலு பிரசாத் அவர்களும் பிஜேபியையும் அதை வழிநடத்தும் ஆர் எஸ் எஸ்ஸையும் ஒழித்துக் கட்டுவது என்ற ஒற்றை குறிக்கோளின் முன் தங்களின் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து கட்டித்தழுவிக் கொண்டது காங்கிரசின் துணையுடன் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. 

விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை ; கெட்டுப் போவோர் விட்டுக் கொடுப்பதில்லை என்ற கருத்தின் உதாரணம்தான் இந்த வெற்றி. தமிழகம் போன்ற மாநிலங்களில் அரசியல் வித்தகர்கள் என்று புகழப்படும் சிலர் இன்னும் அறியாத வித்தை இது. இந்த வெற்றியின் மூலமாவது இந்த விட்டுக் கொடுக்கும் வித்தையை வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியையும் எழுப்பாமல் இருக்க இயலாது. 

இந்த வெற்றி திசைமாறிப் பிஜேபியின் கைகளுக்குப் போயிருந்தால் சாத்வி நமது தூக்கத்தில் வந்து தனது கோரப் பற்களைக் காட்டி தொல்லை கொடுத்திருப்பார். மோகன் சர்மா, வி கே சிங்க் ஆகியோர் இன்னும் எந்தெந்த தரங்கெட்ட வார்த்தைகளால் நம்மைப் பேசுவார்களோ என்று உடல் நடுங்குகிறது. அமித்ஷா தனது குறுந்தாடியைத் தடவிக் கொண்டே நம்மை அடித்துவிரட்ட வந்திருப்பார். அதாவது பரவா இல்லை மோகன்பகவத் தனது அரைக்கால் டிரவுசருடன் தனது தொந்தியைதூக்கிக் கொண்டு ஓடிவருவதை நினைத்தால்தான் மிகவும் அச்சமாக இருக்கிறது. இது நமது நினைப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நினைப்பு. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்துவிட்டதே என்று திசைதெரியாத பறவைகளான இந்திய மக்களுக்கு, “ நாங்க இருக்கோம் “ என்று வாசன் ஐ கேர் ஸ்டைலில் பீஹார் மக்கள் ஆறுதல் தந்து இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் லாலு பிரசாத் அவர்களுக்குத் தனியாக இன்னொரு பாராட்டையும் நாம் வழங்க வேண்டும். தனது கட்சி, நிதிஷ் குமார் கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும் நிதிஷ்தான் முதல்வர் என்று அறிவித்தது அவரது பெருந்தன்மைக்கும் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய தனது அச்சத்தை நீக்குவதற்கு உரிய அரசியல் அர்ப்பணிப்புக்கும் சான்று.

இந்த வெற்றி இதோடு நிறைவுற்றது என்று ஸ்வீட் எடுத்துக் கொண்டாட இயலாது. இந்த கூட்டணி ஆட்சி , எவ்வித இடையூறும் பதவிப் போட்டியும் இல்லாமல் தனது ஐந்து வருட ஆட்சியை நல்லாட்சியாகத் தரவேண்டும். ஒரு மாநிலத்தின் வெற்றி, நாட்டின் சரித்திரத்தையே மாற்றிக் காட்டும் என்பதற்கும் வாக்குச் சீட்டால் செய்த தவறு அதே வாக்குச்சீட்டாலேயே திருத்தப்பட்டு இருக்கிறது என்கிற ஜனநாயகத்தின் உயர்ந்த பட்ச தன்மைகளையும் உண்மையிலேயே நிருபித்துக் காட்ட வேண்டும். தேர்தல் பணிகளின் தொடக்கத்தில் இந்தக் கட்சிகளுக்கிடையே அற்புதமாய் அமைந்த விட்டுக் கொடுக்கும் தன்மைகள் ஆட்சியின் காலங்களிலும் தொடரவேண்டும். அதுவே இந்த நாட்டை நாசப்படுத்தும் கோட்பாடுகளைக் கொண்ட தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் . அந்த ஐந்து ஆண்டுகளை நோக்கி நாடே தனது விழிகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறது.

பேராசிரியர் ஹாஜா கனியின் கவிதைவரிகளுடன் நிறைவு செய்கிறேன். 

மாடுமுட்டி கோபுரங்கள் 
சாய்வதில்லை...
=============== 

கார் காலம்
பீகார் களம்
மனதில் மழை...

பட்டாசு சப்தம்
ஒருநாள் முன்னதாகவே
கேட்கிறது...

பாகிஸ்தானிலிருந்து அல்ல..
பக்கத்துத் தெருவிலிருந்து...

முகத்தில் மை ஊற்றியவர்களை
விரலில் மை வைத்தோர்
வீழ்த்தியிருக்கிறார்கள்..

திருப்பியளிக்கப்பட்ட
விருதுகள் 
மகாகூட்டணிக்கு
மகுடமாய் மாறின...

எஞ்சியுள்ள
அஹ்லாக்குகளும்
நுஃமான்களும்
வீட்டில் விரும்பியதை
சமைக்க...

கல்புர்கிகளும்,
பன்சாரேக்களும்
விரும்பியதைப் படைக்க...

மலரட்டும் காலம்...

******
இப்ராஹீம் அன்சாரி

14 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

இந்ததேர்தல்முடிவுபொதுவாகவேமக்களுக்கும் மற்ற''நீயா? நானா?''அரசியல்வாதிகளுக்கும்ஒரு உண்மையை கூறி இருக்கிறது. அது லாலுபிரசாத்தின்விட்டுக்கொடுக்கும்பெருந் தன்மையே. இதுஅரசியலுக்குமட்டுமல்ல மகிழ்ச்சியானவாழ்க்கைகும்அவசியம்.

sheikdawoodmohamedfarook said...

வரலாறு ,அரசியல்ஜாதிகலந்து கட்டுரையாளர் கையாண்ட எழுத்து technologyவியக்க வைக்கிறது.உலகின் முதல்பல்கலைகழகம்நாளந்தா.

sheikdawoodmohamedfarook said...

கட்டுரையின்கடைசிபகுதி தீஅணைப்பு வண்டியின் மணியோசை. இதைஆங்கலத்தில்மொழியாக்கம்செய்து நித்திஷ்குமாருக்கும் லாலுபிரசாத்யாதவுக்கும்அனுப்பிவைக்கலாம்.

N. Fath huddeen said...

தொடரட்டும் கூட்டணி!
டெல்லியை பிடித்து நல்லாட்சி தரும் வரை,
நாடு உண்மையான முன்னேற்றம் காணும் வரை,
சிறுபான்மையோர், பழங்குடியினர் பாதுகாப்பு கிடைக்கும் வரை.

வாழ்த்துக்கள்!

Shameed said...

பீகார் பற்றிய சரித்திர ரவுண்ட் அப்பை படித்ததும் எப்போதோ படித்த வராலாற்று பாடம் நினைவுக்கு வந்தது

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.வழக்கம்போல் அருமையான அலசல்!மாஞ்சியை தூண்டிவிட்டு தாழ்தபட்டவர்களின் ஓட்டை பிரிக்க மாஞ்சி,மாஞ்சி வேலைபார்த்த காவிகளின் கணவு கைகூடவில்லை! காரணம் நிதிசுடன்,லாலுவும் ,சோனியாவும் கைகோர்த்ததால்.எனக்கு தனிப்பட்ட ஒரு அபிப்ராயம் நிதிஸ் இந்த பி.ஜே.பியுடன் கூட்டாய் இருந்த காலம் முதல் உண்டு இந்தியாவுக்கு நிதிஸ் போன்ற திறமைச்சாலி பிரதமராக வேண்டும்.பாஸ்வான் இந்த தீபாவளியில் வெறும் புஸ்வா(ன்)னம்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

தீர்க்கமான, தெளிவான ஆய்வு! பீஹாரின் வரலாற்றுப்பின்னணியை வார்த்துத்தந்ததற்குப் பிரத்யேக நன்றி.

தோல்வியை தோல்வி என்று சொல்லாமல் பின்னடைவு என்று ஏன் சொல்கிறார்கள் காக்கா?

பின்னடைவை "ஆப்பு" என்றும் சொல்லலாம்தானே!!!

இந்த அடி இவர்களுக்கு இனியும் தொடரும்.

அருமையான கட்டுரை!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

ஹாஜா கனி அவர்கள்
காவிகளின் முகங்களில்
கவிதை மூலம்
காரி உமிழ்ந்துள்ளார்கள்!

Yasir said...

மாஷா அல்லாஹ் தெளிவான/வீரியமான/விலாவாரியான ஆக்கம்....ரசிக்க வைக்கும் எழுத்துநடை

அப்புறம் இன்னொன்றையும் லாலு அவர்கள் சொன்னார்...நிதிஷ் பீகாரை கவனிக்கட்டும்...நான் வாரணாசி வழியாக டெல்லி சென்று..இந்த மத துவேசக்கும்பலுக்கு மணிகட்டுறேன் என்று

Ebrahim Ansari said...

ஆமாம் மருமகனார் யாசிர் அவர்களே! எனது வேலை பீகாரில் முடிந்துவிட்டது. அடுத்து நான் தலைநகருக்குச் செல இருக்கிறேன். அங்கு எனக்கு நிறைய வேலை இருக்கிறது. சிலரை வீட்டுக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது என்று வீரமாக அவர் சொன்ன வார்த்தைகள் வரலாற்று சிறப்பு மிக்கவை.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் ! பாருங்கள் இவ்வளவுக்குப் பிறகும் இவர்கள் புத்தி வந்தவர்கள் மாதிரியா பேசுகிறார்கள்?

பீஹார் வெற்றியை ஒரு சிம்பிள் மேதமேடிக்ஸ் என்று சொல்கிறார் பிஜேபியின் ராம சுப்பிரமணியன்.

அதற்கு பேராசிரியர் அருணன் NO . This is Chemistry என்று சொன்னார்.

Ebrahim Ansari said...

அதிரை நிருபரின் கவி இரட்டைக் குழல் துப்பாக்கிகளே ! ( சபீர் - கிரவுன் )

வ அலைக்குமுஸ் சலாம்.

Ebrahim Ansari said...

எல்லோரும் வருகிறோம். ஆனால் நெறியாளரையும் அமீரையும்தான் இந்தப் பக்கமே காணோம்.

Ebrahim Ansari said...

அண்மையில் லாலு வின் அமுத மொழி

சமூசாவுக்கு ஆலு- பீகாருக்கு இந்த லாலு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு