Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்க சனநாயகம்! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 19, 2015 | , ,


'தண்ணி'யில் தள்ளாடிய தமிழ்நாடு
தற்போது
தண்ணீரில் தத்தளிக்கிறது

காப்பிய நாயகர்களையும்
கறவம் பசுக்களையும்
கடவுளெனக் கும்பிடக்
கற்றுக்கொண்ட
'குடி'மகன்கள் மிகைத்தத் தமிழகத்தில்

திரைக்கதை வசனமெழுதி
தயாரிக்கப்பட்ட நாயகர்களைத்
தலைவனெனத் தேர்ந்தெடுத்து
தட்டுக்கெட்டனர் தமிழர்கள்

கேரளாவும் கர்நாடகாவும்
கேட்டும் தராத தண்ணீரைக்
கொட்டோ கொட்டெனக்
கொட்டிக் கொடுக்கிறது வானம்

அதன் உபரியை
வீணாக்காமல்
தடுக்காத அரசு
பேரிடர் பாதிப்புகளைப்
பார்வையிடுவதாய்ப்
போர்வையிடுகிறது

எதிர்க் கட்சி ஊடகங்கள்
பாதிப்பைப் பட்டியலிட
ஆளும் கட்சியோ
நிவாரணங்களைக் காட்டுகிறது

ஊடகவியாதிகள்
வழக்கம்போல
நாடகவியலில் சிறக்க

அரசியல்வியாதிகளோ
மக்களை
கண்ணீரும் கம்பலையுமாகவோ
தண்ணீரும் தேம்பலுமாகவோ
கண்டுகளிக்கப் பழகிவிட்டனர்

வாரிசுகளை
முதல்வராக்கும் மும்முரத்தில்
அய்யாமார்களும்

வழக்குகளை வழிகெடுக்கும்
வியூகங்களில்
அம்மாக்களும் சோலியாய் இருக்க

தண்ணியடிக்கவோ -எதையாவது
தூக்கியடிக்கத் தயாராகவோ

தன்னினத்தை மட்டும்
தனித்து மேம்படுத்தவோ

தான்சார்ந்தச் சாதியைத்
தூக்கிப் பிடிக்கவோ

சில்லறைத் தலைவர்கள்
சிந்தனை வயப்பட்டிருக்க

வாய்ச்சொல் வீரரிடமோ
அரிதார அழகரிடமோ
மயங்கி
மற்றுமொரு தேர்தல் மூலம்
தன்மானம் இழக்க
இதோ இப்போது
தயாராகிவிடுவான் தங்கத் தமிழன்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

24 Responses So Far:

crown said...

தண்ணி'யில் தள்ளாடிய தமிழ்நாடு
தற்போது
தண்ணீரில் தத்தளிக்கிறது
----------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இதயத்தில் ஈரம் இல்லாதவர்களின் ஆட்சி மாறி,மாறி நடப்பதால் மாரியின் வரவிலும் மிதக்கிறது!மதுவின் மயக்கத்திலும் மிதக்கிறது.

crown said...

காப்பிய நாயகர்களையும்
கறவம் பசுக்களையும்
கடவுளெனக் கும்பிடக்
கற்றுக்கொண்ட
'குடி'மகன்கள் மிகைத்தத் தமிழகத்தில்
-----------------------------------------------------------------------------
மக்களை மாக்களாக பாவிக்கும் மிருகங்களின் ஆட்சி!மக்களை கால்னடையாக ஆக்கிய கயவர்களின் ஆட்சிகள்!

crown said...

திரைக்கதை வசனமெழுதி
தயாரிக்கப்பட்ட நாயகர்களைத்
தலைவனெனத் தேர்ந்தெடுத்து
தட்டுக்கெட்டனர் தமிழர்கள்
-----------------------------------------------------------------------
அதனால்தான் இன்னும் விடைதெரியாதவிடுகதையாக இருக்கிறது மக்களின் வாழ்வாதார நிலை!

crown said...

அதன் உபரியை
வீணாக்காமல்
தடுக்காத அரசு
பேரிடர் பாதிப்புகளைப்
பார்வையிடுவதாய்ப்
போர்வையிடுகிறது
-------------------------------------------------
வானம் தந்த மழை வா நம் மழையை சேகரிப்போம் என்ற உரிமையான உபரியைகூட உபயோகப்படுத்தாமல் ஊதாரித்தனமாய், அரசு இயந்திரம் இயங்காமல் உள்ளது!.

crown said...

எதிர்க் கட்சி ஊடகங்கள்
பாதிப்பைப் பட்டியலிட
ஆளும் கட்சியோ
நிவாரணங்களைக் காட்டுகிறது
-----------------------------------------------------------
நிர்மூலம் அது நீர்மூலம் ஆக்கப்பட்டது பொதுஜனங்களின் அன்றாட வாழ்கை!அன்றாடங்காட்சிகளும்,அன்றாடம் காட்சி குடிக்கும் குடிமக்களும். நிவாரணத்தை எண்ணி தன் கோவணம் அவிழ்ந்து நிர்வானமாகப்பட்டது தெரியாதது அலைகளிக்கப்படுகிறார்கள்!.

crown said...

ஊடகவியாதிகள்
வழக்கம்போல
நாடகவியலில் சிறக்க
---------------------------------------------------
ஊடகக்காட்டில் மழை! பிறரின் கண்ணீர் துளிகளிலும் வியாபாரம் பார்க்கும் ஆபார வியாபார மூளை!

crown said...

அரசியல்வியாதிகளோ
மக்களை
கண்ணீரும் கம்பலையுமாகவோ
தண்ணீரும் தேம்பலுமாகவோ
கண்டுகளிக்கப் பழகிவிட்டனர்
-------------------------------------------------------------------
அவர்கள் மக்கள் வெள்ளத்தில் மிதக்கபழகியவர்கள்!அனுதாப அலையில் அள்ளத்தெரிந்தவர்கள்!

crown said...

வாய்ச்சொல் வீரரிடமோ
அரிதார அழகரிடமோ
மயங்கி
மற்றுமொரு தேர்தல் மூலம்
தன்மானம் இழக்க
இதோ இப்போது
தயாராகிவிடுவான் தங்கத் தமிழன்!
-------------------------------------------------------------------
தன் குடி தண்ணீரில் மூழ்கினாலும்,தன்குடியால் குலமே மூழ்கினாலும் ,மூச்சடக்கி அரசியல் வியாதி கையில் முத்து கொடுக்க இப்பவா ஆயத்தம் ஆகிடுவான் தங்கம் தன்னிடம் தங்கா தமிழன்!

crown said...

கவிதையின் மூலம் கரைசேர வழி சொன்னகவிஞருக்கு நன்றி!இனி எதிர்காலத்திலாவது எதிர் நீச்சல் போட பழகவேண்டும்!

sheikdawoodmohamedfarook said...

அற்ப்புதமாககவிதைசெய்யும்செய்யும்ஆற்றல்மருமகன்சபீரிடம்தேங்கி கிடப்பதை கடந்த கால கவிதைகளில் கண்டேன். ஏன்ஒரு குறுங்காவியத் தொடர் ஒன்றுஎழுதக்கூடாது?

sheikdawoodmohamedfarook said...

//மற்றுமொருதேர்தல்மூலம்தன்மானம் இழக்கஇதோ இப்போ தயாராகிவிடுவான் தங்கத்தமிழன்// .சென்னைஇப்பொழுதுதண்ணீர்ஓடும் வேனிஸ் நகரம்.தேர்தலின்போதுதமிழ்நாடேவேனிஸ் நகராகும்.

crown said...

அற்ப்புதமாககவிதைசெய்யும்செய்யும்ஆற்றல்மருமகன்சபீரிடம்தேங்கி கிடப்பதை கடந்த கால கவிதைகளில் கண்டேன். ஏன்ஒரு குறுங்காவியத் தொடர் ஒன்றுஎழுதக்கூடாது?
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இதை நான் வழிமொழிகிறேன்.இ.அ.காக்காவுடன் கலந்து ஏதேனும் ஒரு காவியத்தை இ.அ.காக்கா எழுத அதற்க்கு கவிவடிவம் கவிஞர் தரனும். அதிரை நிருபருக்கு என் வேண்டுகோள் .கவிஞரிடமும்,மேதை இ.அ.காக்காவிடமும் கலந்து பேசி சம்மதம் வாங்கவும்!.அதை கவிக்கோ போல் உள்ளவர்கள் வெளியிடனும்.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம், க்ரவ்ன்!

//மாரியின் வரவிலும் மிதக்கிறது!
மதுவின் மயக்கத்திலும் மிதக்கிறது.//

மற்றுமொரு "மெதப்பு" உண்டு! பதவி சுகம் தரும் அதிகார மெதப்பு!

//மக்கள் வெள்ளத்தில் மிதக்கபழகியவர்கள்! அனுதாப அலையில் அள்ளத்தெரிந்தவர்கள்!//

தண்ணிக்கு எதிராக தற்கொலை செய்துகொள்ள செல்ஃபோன் கோபுரங்கள் கிடைக்கும் தமிழகத்தில் தண்ணீரிலிருந்து தப்பிக்க ஓர் அரை கோபுர உயரம்கூட கிடைக்காதது துயரம்.

//மூச்சடக்கி அரசியல் வியாதி கையில் முத்து கொடுக்க இப்பவே ஆயத்தம் ஆகிடுவான் தங்கம் தன்னிடம் தங்கா தமிழன்!//

அப்படியே தங்கினாலும் அதைத் தாங்க முடியாமல் தூங்கா இரவுகளில் தவிப்பான்.

நன்றியும் வாழ்த்துகளும்

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாசிப்புக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

தங்களின் மற்றும் க்ரவ்னின் அன்பிற்கு நன்றி. எல்லாவற்றிற்கும் ஒரு காலநேரம் வாய்க்க வேண்டும். நான் எழுதியவற்றில் பல கவிதைகள் நான் அதிகாலையில் அஜ்மானிலிருந்து பிள்ளைகளை காரில் ஏற்றிக்கொண்டு ஷார்ஜா வழியாக துபை பள்ளிக்கூடங்களுக்கு விட்டுவிட்டு ஷார்ஜாவுக்கு வேலைக்குத் திரும்பும் வேளையிலான போக்குவரத்து நெரிசல்களின்போது சிந்தையில் உதித்து சிக்னலுக்கு சிக்னல் எழுதிக் கோத்தவை.

நேரம் ஒதுக்கி எழுத என் வேலைச்சுமை அனுமதிப்பதில்லை. இதில் எழுதியதைத் தொகுப்பதோ புதிதாக எற்றெடுத்து எழுதுவதோ சாத்தியமா என்று தெரியவில்லை.

அல்லாஹ் அஃலம்!

அதிரை.மெய்சா said...

தண்ணியில் தள்ளாடும் தமிழகத்தை
காப்பதா.?

தங்களின் பெயரை நிலைநாட்டிக்கொள்ள
தமிழகத்தை காப்பதா.?

தேர்தல் நேரத்தில் நடக்கும் தெருக்கூத்துபோல
மழை வெள்ளத்தை வைத்து ஒரு மட்டரகமான
அரசியல்.
சென்னை மழைநீரில் சாக்கடையும் சேர்ந்து
கலந்ததுபோலத்தான் நிவாரணப்பணிகள் நடந்திருக்கிறது.

வாழ்க சனநாயகம்

எல்லாவற்றையும் உன் தரமான கவிதையில் நன்றாக
சாடியுள்ளாய். அருமை.

Shameed said...

//புதிதாக எற்றெடுத்து எழுதுவதோ சாத்தியமா //

கவலை வேண்டாம் அதற்கும் கிரீன் சிக்னல் கிடைக்கும்

Ebrahim Ansari said...

உள்ளதை உள்ளபடி, பலர் உள்ளத்தில் உணர்ந்தபடி இந்தக் கவிதை வரிகள் வார்த்தைச் சாட்டையால் வக்கற்றோர் மீது விழுந்த வடுக்களை ஏற்படுத்தும் வரிகள்.

அரிதாரப் பூச்சு அரசியல் , தமிழைக் கேடயமாக்கி தப்பித்துக் கொள்ளும் அரசியல் , ஒருவர் சிறையில் இருந்தால் ஊரே மொட்டையடித்துக் கொள்ளும் அரசியல், எண்ணற்ற மக்களின் இருப்பிடங்களில் அழைப்பிதழ் இல்லாமலேயே தண்ணீர் நுழைந்தபோதுகூட நீயா நானா - பூவா தலையா என்று போட்டுப் பார்க்கும் அரசியல் , தான் பிறந்த முந்திரிக்காட்டைக் கூட முழுதாக அறியாத மகனை முதல்வராக்க முனையும் அரசியல், இவ்வளவு கேடுகெட்ட அரசியலை இனியும் நாற்பது முறை மழைபெய்தாலும் தூய்மைப் படுத்த இயலாது. இதுதான் தமிழகத்தின் நிலை.

ஒரு ஆட்டின் தலையையும் வாலையும் பார்வையில் படும்படி வைத்துக் கொண்டே நாற்பது நாய்களின் கறியை விற்க முடியும் என்ற நிலைதான் இன்றைய தமிழகம்.

புயலுக்கு நிவாரணம் கிடைக்காமல் செத்தவர்களும் இங்கு உண்டு . நிவாரணம் வாங்குவதற்காக கூட்டத்தில் சிக்கி செத்தவர்களும் இங்கு உண்டு. அரசு ஒதுக்கிய ஐநூறு கோடியில் நாம் அடிப்பது எவ்வளவு என்று கணக்குப் போடுவதிலேதான் இன்று கால்குலேட்டர்கள் பிசியாக இருக்கின்றனவாம்.

புலம்புவதைத் தவிர வழி இல்லை.

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன்,

நல்ல எண்ணங்களுக்கு நன்றி. இறைவன் நாடினால் நடக்கும்.

Anonymous said...

சலாம்

தங்க தமிழன் என்பதற்கு கேடுகெட்ட தமிழன் என பொருள் வருது கவி முழுதும் படித்தால். ஒன்றை சொல்லி மற்றதை புரியவைப்பது இளங்கவியின் தனி சிறப்பே ஒரு அழகு தான்

Riyaz Ahamed

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய மெய்சா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சரியாகச் சொன்னாய். இதெல்லாம் பழகிப்போய்விட்ட தமிழினம் இனியும் அனுபவிக்கும்.

நன்றி

sabeer.abushahruk said...

ஹமீது,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜஸாக்கல்லா க்ஹைர்.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பேசுபொருளுக்கு வலு சேர்க்கும் தங்கள் கருத்துக்கு நன்றி. சமூக சீர்திருத்தங்கள் சம்பந்தமாக நீங்கள் சொல்லாததை நான் சொல்லிவிடமுடியாது. இருந்தாலும் என் பங்குக்கு இந்த முறைகேடுகளைச் சாடவேண்டிய கடமை இருக்கிறதல்லவா?

அதுதான் இது!

மிக்க நன்றி

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் ரியா,

அது!

ZAKIR HUSSAIN said...

பாஸ்...முதன் முதலாக நம் ரியாஸ் கமென்ட் 'சரியான' நேரத்தில் எழுதியிருக்காப்லெ...இதற்காக ஒரு சங்க மரியாதை, வீரவால் , பொன்னாடை போர்த்தும் விழா ஏதாவது சிங்கப்பூரில் ஏற்பாடு செய்ரீங்களா பாஸ்.?

சிங்கப்பூரில் ஒலி 98.6 / தமிழ் டி வி இல் ஏதாவது கவரேஜ் தேவைப்பட்டால் முன் கூட்டியே சொல்லிடுங்க>>>

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு