Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் - 16. 15

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2013 | , , , , ,

காங்கிரஸ் கட்சியின் மீது நாட்டின் பொருளாதாரத்தை குட்டிச்சுவர் ஆகிவிட்டதாக குற்றச்சாட்டு . பி ஜே பி மீது மதச்சார்பின்மையை கடைப்பிடித்து ஆர் எஸ் எஸ்  போன்ற  அழுக்கு மூட்டையைக் கட்டிக் கொண்டு அழும் கட்சி என்ற குற்றச்சாட்டு. 

இவை இரண்டுக்கும் மாற்றாக இன்னொருவர் வந்தால் நலமாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கும் வேளையில் அந்த இன்னொருவர் யார்? மூன்றாவது அணியாக இருந்து தேர்தலில் போட்டி இடவும் வெல்லவும் ஆளவும் வலிமையையும் செழுமையும் படைத்துள்ள இயக்கம் எது ? தலைவர் யார்? அப்படி ஒரு மூன்றாவது அணி அமைவது சாததியமா? அமைந்தால் வெல்லுமா ? இத்தனை ஆண்டுகாலம் நாட்டை கட்டி ஆண்ட காங்கிரசையும் இன மத உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டு ஆட்சிக்கு வரத்துடிக்கும் கார்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையான பா ஜ கவையும் எதிர்த்து  நின்று வெல்லும் திராணி உள்ள கட்சி எதுவாக இருக்கும்? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் நமது அரசியல் இதயத்தில் லப் டப் என்று அடித்து எழுகின்றன. ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

முதலாவதாக, சென்ற அத்தியாயத்தில் சுட்டிக் காட்டியபடி சுதந்திரத்துக்குப் பிறகு,  காங்கிரசுக்கு அடுத்த நிலையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்திய அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக ஆட்சியைப் பிடிக்கக் கூடிய சக்தியாக உருவாகியிருக்க வேண்டியவர்களாக இதுவரை வளர்ந்து இருக்கலாம். கண்ணெதிரே    தென்பட்ட காட்டுக் கருவைக் கூட பெரும் காடாக வளர்ந்துவிட்டது. ஆனால் கம்யூனிஸ்டுகள் வளரவில்லை.  துரதிஷ்டவசமாக அவர்கள் அரசியலில் அடுத்த நிலையை  அடையமுடியவில்லை. கேரளம்,மேற்கு வங்கம், திரிபுரா, பீஹார், பஞ்சாப், ஆந்திரம், தமிழ்நாடு எனச் சில மாநிலங்களில் கணிசமான செல்வாக்கு இருந்தும் இதர மாநிலங்களில் பரவவும் இல்லை. அதற்கான செயல்திட்டமும் இருக்கவில்லை. இதற்கு மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் அந்தக் கட்சிகளில் இல்லாததோ அல்லது தாங்கள் கட்டிக் காத்த கம்யூனிச கோட்பாடு தான் பிறந்த இடமான சீனாவிலும் வளர்ந்த இடமான ரஷ்யாவிலும் உயிர் மூச்சை விட்டதும் கூடக் காரணமாக இருந்து இருக்கலாம்.   நக்சல்பாரிகள் போன்ற தீவிரவாதக் கும்பல் உருவாக  அடிப்படையில் கம்யூனிச சித்தாந்தங்களே காரணம்  என்று மக்கள் நினைத்ததும் கம்யூனிஸ்ட்களின் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்புக் குறைவானதற்கு காரணமாக இருந்து இருக்கலாம். 

தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் இருந்த இடதுசாரிகள் புதிதாக வந்த தி.மு.கவிடம் அதை இழந்துவிட்டு திமுகவுடன் ஒரு நோஞ்சான் கூட்டாளியாக இருக்கும் நிலைக்குப் போய்விட்டார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் காட்டிய தீவிரத்தை அரசியலில் இடதுசாரிகள் காட்டாததை தமிழ்நாட்டில் திமுக அழகாகப் பயன்படுத்திக் கொண்டது.  தி.மு.க 1949ல் உருவானது முதல் ஆட்சியில் அமரும்வரை தொழிற்சங்க இயக்கமே நடத்தியதில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் தி மு கவும்  தொழிற்சங்கம் தொடங்கியது. இது கம்யூனிஸ்டுகளின்  இடதுசாரி தொழிற்சங்கத்தை உடைக்கத்தான் என்பது அரசியல் நோக்கர்களுக்கு கண்கூடாகத் தெரிந்த கதை.  இதற்கு தூபம் போட்டது சென்னை சிம்சன் தொழிற்சாலைத்     தகராறுகளாகும். தங்களது தொழிற் சங்கங்களின் வளர்ச்சியை கவனித்த அளவுக்கு கம்யூனிஸ்டுகள் அரசியலை கவனிக்க வில்லை. தமிழ்ச் சமூகத்தின் உணர்வுபூர்வமான  பிரச்சினைகளான சாதி, மொழிப் பிரச்சினைகளில் தி.மு.க காட்டிய ஈடுபாட்டை கம்யூனிஸ்டுகள் காட்டவில்லை. அவர்கள் கூட்டத்தில் பேசிய பூஷ்வா, வர்க்கபேதம் ஆகிய வார்த்தைகள் மக்களுக்கு விளங்கவில்லை. அவற்றை கவர்ச்சியாக  விளக்க அவர்களால் முடியவில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு திரைத்துறையில் ஈடுபாடு இல்லை. ஒரு சிகப்புத்துண்டை தோளில் போட்டுக் கொண்டு ஒரு கொடுவா மீசையை வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகப் போயிற்று என்றே எண்ணினார்கள். கம்யூனிஸ்டுகள் பற்றி இன்னொரு நகைப்புக்கிடமான செய்தியும் உண்டு . கம்யூனிஸ்டுகள் தகரம் கண்டுபிடிக்கப் படும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் என்று நக்கலடிக்கபடுவார்கள்.  அதைவிட முக்கியமாக, முதலாளித்துவப்  பொருளாதார முறையை ஆதரித்த ராஜாஜி, காமராஜர் போன்றோர் கம்யூனிஸ்ட்டுகள் வளர்வதை விட கழகம் வளர்வது தங்கள் கொள்கைகளுக்கு  பெரிய ஆபத்தை விளைவித்து விடாது என்று  கணக்குப் போட்டு இருந்தார்கள். .

அனைத்திந்திய அரசியலிலும் இடதுசாரிகள் பலமடையமுடியாமல் பலவீனமாகவே இருந்ததற்கு இன்னொரு காரணம், காங்கிரசுக்கு எதிரான இதர சக்திகளுடன் அவர்கள் கோட்பாட்டுரீதியாகக் கை கோர்க்கத் தயங்கினார்கள். சோஷலிஸ்ட்டுகள் இந்தி பேசும் மாநிலங்களில் கணிசமான செல்வாக்குடன் இருந்தபோதும் அவர்களுடன் கம்யூனிஸ்டுகள் அன்றே  அணி சேரத் தயங்கினார்கள். சோஷலிஸ்ட்டுகளை விட காங்கிரசே மேல் என்று கருதும் பிரிவுகளும் கம்யூனிஸ்டுகளுக்குள்  இருந்து வந்தன. அப்படி சில தலைவர்கள் காங்கிரசிலேயே இணைந்தார்கள். கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு ரஷ்யா சீனா என்று புகழ் கீதம் பாடுவதிலேயே பொழுது போக்கினார்கள். 

ஆனால் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய இந்துத்துவ கட்சிகளுக்கு கம்யூனிஸ்டுகளைப் போல  மற்றவர்களுடன் கை கோர்ப்பதில் தயக்கமோ மயக்கமோ  இருக்கவில்லை. ஜனசங்கம்,  பல்வேறு சோஷலிஸ்ட் கட்சிகளுடன் நட்பாக இருந்தது. ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் எழுபதுகளின் இறுதியில் தொடங்கியபோது அதில் இந்துத்வா கட்சிகள் தீவிரமாகப் பங்கேற்றது. இந்திரா 1977ல் நெருக்கடி நிலையை முடித்துக் கொண்டு தேர்தல் அறிவித்தபோது அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியில் ஜனசங்கம் தன்னையும்  அதில் சங்கமம் ஆக்கிக் கொள்ளத்தயக்கம் காட்டவில்லை.  அதனால்தான் மொரார்ஜி பிரதமரானதும் வாஜ்பாயியும் அத்வானியும் மிக முக்கியமான அமைச்சகப் பொறுப்புகளைப் பெற முடிந்தது.

ஜனதா ஆட்சி கவிழ்ந்ததற்கு மொரார்ஜி-சரண்சிங்-ஜெகஜீவன்ராம் பதவி அதிகாரப் போட்டி மட்டுமே காரணம் என்று வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே இன்று பி.ஜே.பி ஆதரவாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது. பிரதானமான காரணம் ஜனதா கட்சியிலும் உறுப்பினராக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்-சிலும் உறுப்பினராக இருக்கலாமா என்ற இரட்டை உறுப்பினர் பிரச்சினையாகும். இரட்டை உறுப்பினராகத்தான் இருப்போம் என்று அத்வானியும் வாஜ்பாயியும் பகிரங்கமாகவே சொன்னார்கள். இதை சோஷலிஸ்ட்டுகள் எதிர்த்தார்கள். மொரார்ஜி அரசு கவிழ்ந்தது. இப்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியை தீவிரமாக ஆதரிக்கும் அரசியல் முகவர் சுப்ரமணியன் சுவாமி அப்போது இரட்டை உறுப்பினர் முறையை எதிர்த்தார் .

ஜனதாவில் கரைந்த ஜனசங்கம் மறுபடியும் 1980ல் வெளியே வந்து பாரதிய ஜனதா என்று புதிய  அவதாரம் எடுத்தது. இப்போது கூட தேவைப்பட்டால் பாரதிய ஜனதாவைக் கலைத்துவிட்டு நரேந்திர மோடிக்காக, கட்சிக்கு இன்னொரு பெயரைச் சூட்டிக் கொள்ளலாம் என்றால் அதைச் செய்ய ஆர்.எஸ்.எஸ். தயங்காது. கம்யூனிஸ்டு  கட்சிகளுக்கு இப்படி பல அவதாரங்கள் எடுக்கும் வாய்ப்பு இல்லை. வெவ்வேறு கட்சிகளுடன் போய் கலந்து பிரிந்து தன் வலுவைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்து கொள்ளும் அரசியல் கோட்பாடு இல்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் எண்பதுகளின் இறுதியில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அரசியலில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்திரா காந்தி கொல்லப்பட்டார். எம்.ஜி.ஆர் காலமானார். டெல்லியில் காங்கிரஸ் பலவீனமான நிலையில் ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் இருந்த வரை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருந்த கலைஞர் கருணாநிதிக்கு இன்னொரு வாய்ப்பு கிட்டியது. காரணம் எம்.ஜி.ஆரின் கட்சிக்குள் ஏற்பட்ட தற்காலிகப் பிளவு. தி.மு.கவை உடைக்க எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய காங்கிரஸ், இந்திராவின் அரசியல் தேவைகளுக்கேற்ப மாறி மாறி தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்று ஆதரித்து வந்தது.

ராஜீவின் வருகை எல்லா கட்சிகளையும் சிக்கலில் ஆழ்த்தியது. ராஜீவ் பிரதமரானபோது அவருடன் பல இளம் தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றார்கள். இந்திய அளவில் முதல் முறையாக பிரதமர் பதவிக்கும் கட்சித்தலைமைப் பதவிக்கும் 40 வயதில் ஒருவர் பொறுப்பேற்றது அதுவே முதல் முறை. இதர கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் 60, 70 வயதைக் கடந்தவர்கள். திமுகவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதைப்போல இத்தனை அதிக வயதுள்ளவர்கள் மட்டுமே பதவியில் இருந்தால் தேசியக் கொடிகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அரைக்  கம்பத்தில் பறந்துதான் இருக்கும்.  ராஜீவ் மட்டும் 1991ல் கொல்லப்படாமல் இருந்திருந்தால், மறுபடியும் இந்திய அரசியல் அடுத்த இருபதாண்டுகளுக்கு வயதானவர்களின் கைகளுக்குப் போகாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நீயா நானா போட்டிகளுக்கும் தேவை இருந்து இருக்காது. 

1984 தேர்தலில் ராஜீவின் காங்கிரஸ் 404 இடங்களுடன் மாபெரும்  வெற்றி பெற்றது. தோழமைக் கட்சியான அ.இ.அதி.மு.கவுக்கு 12 எம்.பிகள். தி.மு.க பெற்றவை வெறும் இரண்டு. பி.ஜே.பி பெற்றதும் இரண்டுதான். பல்வேறு இடதுசாரி கட்சிகள் சேர்ந்து மொத்தமாக 33 இடங்களைப் பெற்றன. ஆனால் ஒற்றைக் கட்சியாக ஆந்திர மாநிலக் கட்சி தெலுங்கு தேசம் என் டி ராமராவ் தலைமையில் 30 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாகியது. நேரு காலத்துக்குப் பின் மறுபடியும் காங்கிரஸ் பெரும்பலத்துடன் விளங்கியது நேருவின் பேரன் ராஜீவ் காலத்தில்தான்.  எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலை. ஆனால் டெல்லி அரசியலில் இனி மாநிலக் கட்சிகளுக்கு முக்கிய இடம் இருக்கப் போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாக தெலுங்கு தேசத்தின் வருகை இதுவரை இந்திய அரசியல் கண்டிராதது.

இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் ஆட்சியின் பல்வேறு ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கின. நீர்மூழ்கிக் கப்பல் பேரம், ஃபோபர்ஸ் பீரங்கி பேரம் போன்றவை. இளைய தலைமுறையிடம் நேர்மையையும் மாற்றத்தையும் எதிர்பார்த்த மக்கள் மத்தியில் இது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இன்றைய ஊழல்களுடன் ஒப்பிட்டால் போபர்ஸ் பீரங்கி பேரம் ஜுஜுபிதான்.  வெறும் 64 கோடி ரூபாய்கள்தான். பணவீக்கக் கணக்கில் பார்த்தால் கூட இன்றைய மதிப்பு அதிகபட்சம் 640 கோடி. ஆனால் இன்றோ  2 G , நிலக்கரி, காமன்வெல்த் என்று ஊழல் மரத்துக்கு  பல கிளைகள் முளைத்துவிட்டன. 

ஆனால் போபர்ஸ் பேரம் அரசியலில் ஏற்படுத்திய மாற்றம்தான் இன்று வரை முக்கியமானது. இதனால் ஏற்பட்ட உரசலால்தான் வி.பி சிங் அமைச்சரவையில் இருந்தும் கட்சியில் இருந்தும் வெளியேறினார்.  இனி இந்திய அரசியலில் எந்தத் தனிக்கட்சியும் பெரும்பான்மை பெறமுடியாது; கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன்தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலையை இந்த மாற்றம் எற்படுத்தியது.

ராஜீவ் ஆட்சியின் ஊழலை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியே வந்த வி.பி.சிங் காங்கிரசுக்கு எதிரான தேசிய முன்னணியை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்ட  நாடுதழுவிய மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்த  கூட்டணி. 1984 லேயே இப்படி ஒரு கூட்டணியை உருவாக்க என்.டி.ராமராவ் முயன்றார். விஜயவாடாவில் அவர் கூட்டிய மாநாட்டில் எம்.ஜி.ஆர், பிஜு பட்நாயக், பரூக் அப்துல்லா, மேனகா காந்தி எல்லாம் கலந்துகொண்டனர். ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. 1987 ல் வி.பி.சிங் உருவாக்கிய தேசியமுன்னணியில் ஜனதா தளம், சோஷலிஸ்ட்டுகள், தி.மு.க, தெலுங்கு தேசம், அசாம் கண பரீஷத் ஆகியவை பங்கேற்றன. அரசுக்கு ,  வெளியிலிருந்து பி.ஜே.பி, மற்றும் இடதுசாரிகள் இரு தரப்பினரும் இந்த முன்னணியை ஆதரித்தனர்.

அடுத்த தேர்தல் 1989ல் நடந்தபோது தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஏறத்தாழ இந்த தேர்தலும் 1977 ஜனதா வெற்றி பெற்ற தேர்தல் போலவே அமைந்தது. வட மாநிலங்களில் காங்கிரசுக்கு வீழ்ச்சி. தென் மாநிலங்கள் காப்பாற்றின. சென்ற முறை 30 இடம் பெற்ற தெலுங்கு தேசம் இம்முறை இரண்டே இடம்தான் வென்றது. தி.மு.கவுக்கு ஒரு எம்.பி.கூட கிடைக்கவில்லை. அ.இ.அ.தி.மு.கவுக்கு 11.  வி.பி.சிங் பிரதமரானதும் தன் அமைச்சரவையில் ஒரு எம்.பி கூட வெல்லாத தி.மு.கவுக்கும் இடம் கொடுத்து முரசொலி மாறனை அமைச்சராக்கினார். மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பில் நமக்கு நம்பிக்கை உண்டென்றால் இப்படித்தான் செய்தாகவேண்டும் என்று ஒரு பேட்டியில்  அப்போது வி.பி.சிங் சொன்னார். இந்த தேர்தலில் லாபமடைந்தவர்கள் பிஜேபி 85 இடங்களையும்   இடதுசாரிகள் 52 இடங்களையும் பெற்றார்கள். 

எப்படி 1979ல் ஆர்.எஸ்.எஸ்-ஜனதா இரட்டை உறுப்பினர் பிரச்சினை ஜனதா ஆட்சியைக் கவிழ்த்ததோ அதே போல இந்த முறையும் ஆர்.எஸ்.எஸ். பிஜேபியின் மிரட்டல் போக்குடைய இந்துத்துவ திட்டங்களுக்கு வி.பி.சிங் அரசு பணிய  மறுத்ததால் இந்த ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டக் கோரி அத்வானி நடத்திய இயக்கத்தை தடுத்ததும், முதல்முறையாக மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரும் மண்டல் கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்தியதும் ஆர் எஸ் எஸ்ஸின் கைப்பாவையான பிஜேபிக்கு கோபமூட்டி அதன் காரணமாக ஒரு சிறந்த மனிதரான  வி.பி.சிங் உடைய ஆட்சியைக் கவிழ்த்தன.

பிஜேபி, காங்கிரஸ் அல்லாத சோஷலிஸ்ட்டுகள், உதிரி ஜனதாக்கள் மறுபடியும் பலவீனமாகின. 1989லிருந்து 1991க்குள் அவற்றை தற்காலிகமாக ஆட்சியில் அமர்த்தி வெளியிலிருந்து ஆதரித்து வேடிக்கை காட்டிப் பின்னர் கவிழ்ப்பதை காங்கிரஸ் செய்தது.

இவ்வளவு அரசியல் நடப்புகளிலும் பிஜேபி தன்னை ஒரு இரண்டாவது கட்சியாக நிலைநிறுத்த உதவியது. ஆனால் இந்தியப் பாராளுமன்றத்தின் வரலாற்றின் ஆரம்ப காலங்களில்  இரண்டாவது நிலையில் இருந்த கம்யூனிஸ்டுகள் வாயில் ஐஸ் கிரீம் வைத்து உறிஞ்சிக் கொண்டு இருந்தார்கள். மேற்கு வங்கமும்  கேரளமும்  திரிபுராவுமே அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவாகத் தெரிந்தது. இப்போது மூன்றாம் அணி அமைக்க மாநாடு போடுகிறார்களாம். விதைக்கிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுவடை காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு போவதுபோல்தான் இருக்கிறது கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கை. இப்படி மூன்றாவது அணியை அமைப்பதற்கு கம்யூனிஸ்டுகள் முன்னெடுப்பதே ஒரு பொருத்தமில்லாத செயலாகவே தோன்றுகிறது. காரணம் கம்யூனிஸ்டுகள் இந்த நாடு தழுவிய பகுதிகள் அனைத்திலும் காலூன்றவில்லை.

முக்கியமாக ஏழைகள் நிறைந்த பீகார் மாநிலத்தில் – தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நிறைந்த ஆந்திர மாநிலத்தில்- இந்தியாவின் வர்த்தகத் தலைநகரத்தை தன்னகத்தே வைத்து இருக்கும் மராட்டிய மாநிலத்தில் – இன்னும் ஒரிசா , மத்தியப் பிரதேசம், உ.பி போன்ற மாநிலங்களில் தங்களுடைய தடங்களை இவர்கள் சரிவரப் பதிக்கவில்லை.     இப்போது இவர்கள் முன்னெடுத்து வைத்திருக்கும் மூன்றாவது அணி என்கிற கோட்பாடும் கோஷமும் கூட மாடுகளின் மாநாட்டுக்கு மரவட்டையை தலைமை தாங்க அழைத்தது போலவும் ஆடுகளின் மாநாட்டுக்கு அணில் குட்டியை தலைமைதாங்க அழைத்தது போலவுமே இருக்கிறது. அத்துடன் இருக்கும் ஒரே ஒரு வடையின் மீது கண் வைத்துக் காத்திருக்கும் பல நரிகளை அழைத்து இருக்கிறார்கள். யார் வடையைக் கவ்வுவது என்கிற இவர்களது போட்டியில் இந்த மாநாடும் அந்த மாநாட்டின் நோக்கமும் வெற்றி பெறுமா என்பது உச்சகட்ட சந்தேகம். 

முலாயம் சிங் யாதவ்,  நிதிஷ் குமார், ஜெயலலிதா ஆகியோர் முக்கிய அழைப்பாளர்கள். இந்தப் பட்டியலில் மம்தா பானர்ஜி இருக்க முடியாது. காரணம் , மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் அரசியல் எலும்பை எண்ணி நொறுக்கியவர் மம்தா. மாயாவதியை அழைக்க முடியாது காரணம் முலாயம் சிங் கை நனைக்கும் பந்தியில் மாயாவதிக்கு இலை போட  இயலாது.  அதே போல கருணாநிதி வரும் இறந்த வீட்டுக்கு துக்கம் விசாரிக்கக் கூட  ஜெயலலிதா வரமாட்டார். தெலுங்கு தேசம் வரும் மாநாட்டுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வராது. இதே நிலைமைகள் காங்கிரசையும் பாரதீய ஜனதாக் கட்சியையும் ஒரு சேர எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளின் அஸ்திவாரம் உள்ள மாநிலங்களிலும் நின்று நிலவுகிறது. இந்த நிலையில் மூன்றாவது அணி அமைப்பது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகவே இருக்கும். சந்தை நேரம் முடிந்த பிறகு சரக்குகளை விற்பனைக்குக் கொண்டு வரும் யுக்தியாகவே இருக்கும். 

அதே நேரம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணி அமைய ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ,  ஏற்கனவே தமிழ்நாட்டை ஆண்ட கட்சி என்கிற முறையில்  அகில இந்தியாவில் இரண்டு அணிகளுள் ஒரு அணியாக இருக்கும் காங்கிரஸ் , தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்கலாம். இவ்வளவு காலம் மாறி மாறி நடந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் தீமைகளை தோலுரித்துக் காட்டுவதன் மூலமும் –  இருக்கும் உதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உண்மையான மதச் சார்பற்ற அணியை காங்கிரசின் தலைமையில் தமிழ்நாட்டில் மட்டுமாவது  அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

அகில இந்திய அளவில் கம்யூனிஸ்டுகள் முன்னெடுக்கும் மதச் சார்பற்ற அணியில் சேர்வதற்கு திமுகவுக்கோ அல்லது அண்ணா திமுகவுக்கோ முழுத்தகுதி இல்லை.  விட்டால் தங்களின் மீது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக வெற்றி பெரும் அணியின் பக்கம் சேர்வதற்கு தமிழகத்தின் இரு முக்கியக் கட்சிகளுமே தயாராகவே இருக்கும். அதற்கான காரணங்களை அடுக்குவதில் இருவருமே வல்லவர்கள். இதற்கு முன் இப்படி மத சார்பான பிஜேபியுடன் கூட்டுவைத்த  அனுபவமும் காங்கிரசுடன் கூட்டு வைத்த அனுபவமும் இவர்கள் இருவருக்குமே உண்டு. ஆகவே அமைக்க சாத்தியமற்ற மூன்றாவது அணியை அகில இந்தியாவைப் பொருத்தவரை ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டு , தமிழ்நாட்டைப் பொருத்தவரை காங்கிரஸ் மூன்றாவது அணியை அமைக்க முயற்சிக்கலாம். கம்யூனிஸ்டுகளையும் இந்த அணியில் சேர்க்கலாம். ஆனால் அதற்குமுன்  போயஸ் தோட்டத்தில் புல் அறுத்துக் கொண்டிருக்கும் தா. பாண்டியனின் கையில் இருக்கும் கதிர் அரிவாளைப் பிடுங்கிவிட வேண்டும். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.   

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2013 | , , , ,

உலக மாந்தர் அனைவருக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை எங்கு ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும், அதனையே முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் ஸூரத்துல் கியாமா [மறுமை நாள்] என்ற அத்தியாயத்தின் வசனங்களை அழகிய உச்சரிப்புடன் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்) 

வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-

75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-

75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.

75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).

75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

75:13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

75:14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.

75:15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

75:16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.

75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

75:20. எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

75:21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

75:23. தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

75:25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

75:26. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-

75:27. “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.

75:28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

75:30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  

75:31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.

75:32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

75:33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

75:34. கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

75:35. பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

75:36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

75:37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

75:39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

75:40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?


நன்மையை நாடியே பதிக்கப்பட்டதன் பலனை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக!

அதிரைநிருபர் பதிப்பகம்

1984ல் - பேயோடு ஒரு ஹாய் ! - குறுந்தொடர் - 2/4 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2013 | , , , , ,

‘பூ’வின் வாடைதான் மூக்கிற்குத் தெரிந்ததே தவிர ‘பேய்’ கண்ணுக்கு தெரியவில்லையே என்று  பேயைக் காட்ட வந்தவரிடம்,

“என்ன காக்கா, பூ வாடைதான் வருது பேயைக் காணோமே?” என்றதும்…

“ நான் பல தடவை பேயை இங்கே பார்த்திருக்கிறேன் இன்னைக்கி பூ வைத்துக் கொண்டு வந்த பெண் பேய் நம்ம எல்லோரையும் பார்த்து பயந்துகிட்டு கடல் கரை பக்கம் போச்சு” என்றார்.

அது போச்சு என்றதும் நமக்கு தைரியம் வந்துரிச்சு.  திருப்பி அவரிடம்… 

“ நம்மளை பார்த்து பேய் ஏன் காக்கா பயப்படனும்?” என்று வினவ..

“நம்மளோடு யாரோ ஒருவன் நெருப்பு ராசிக்காரன் இருக்கான் அதான் பேய் பயந்து கிட்டு கடல் கரை பக்கம் போச்சு” என்றார்.

நாங்களும் தைரியத்தை தூக்கலாக வரவழைத்து கொண்டு அவர் வரமாட்டார் என்ற நம்பிக்கையில், “சரி வாங்க காக்கா கடல் கரைக்கு போய் அந்த பேயை பார்த்து விடுவோம்” என்று கூப்பிட்டதும்.

“சரி  வாங்கடா போவலாம்”  என்று ஸ்டடியாக நின்றதும் எங்களுக்கெல்லாம்  தூக்கி வாரி போட்டது.

இப்போ  கடல் கரையை நோக்கி நடை பயணம் தொடங்கியது. 

கஸ்டம்ஸ் பில்டிங் அந்த இருட்டில் தலைவிரி கோலமாய் காட்சி அளித்தது அதற்கு காரணம் உடைக்கப்பட்ட ஓடுகளும் களவாடப்பட்ட கதவுகளும் பேய் வீட்டை நினைவு காட்டியது. அங்கே நின்ற பாதாங்காய் மரத்தை காட்டி “இந்த மரத்தில்தான் பூ வாடையோடு போன அந்த பெண்  தூக்கு போட்டு கொண்டு இறந்தது” என்று மேலும் எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் கொண்டே கடற்கரை ரோட்டில் உள்ள முதல் பாலத்தை கடந்தோம் கடலை நெருங்க நெருங்க பயமும் எங்களை நெருங்கிக் கொண்டே  வந்தது.

“ஏன் காக்கா அந்த பெண் தூக்கு போட்டு கொண்டு செத்தது?” என்று நூறு நாள் நிற்காமல் ஓடின அந்தக்கால ரெக்கார்டு சத்தத்தில் கேட்டதுதான் தாமதம், சட்டென்று அவரே தொடர்ந்தார்

“அந்த பெண் ஒரு கல்லுரி மாணவனை காதலித்ததாம் அவன் இந்த பாதாங்காய் மரத்தடியில்  இருந்து தான் படித்துக் கொண்டிருப்பானாம். அவன் படிக்க வரும்போதெல்லாம் இந்த பெண்ணுக்கு  பூ வாங்கிக் கொண்டு வருவானாம். இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியம், அதனால் வீட்டில் எதிர்ப்பு கிளப்பியதால் இந்த பெண் இந்த பாலங்காய் மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டு செத்துவிட்டது”

என்று ஒரு முன் கதை சுருக்கம் சொன்னார்.

கதையைக் கேட்ட நண்பன் “காதலால் வாழ்ந்தது கொஞ்சம் பேராத்தான் இருக்கும்  காதாதலால் செத்தது அதிகம் பேரா இருக்குமோ?” என்று முணுமுணுத்தான்.

இந்த முணுணுப்போடு நாங்கள் இரண்டாவது பாலத்தை நெருங்கும் போது  மணி சரியாக ஒன்று. இரண்டாவது  பாலத்தை தாண்டி கடல் கரையை நெருங்கியதும் கொஞ்சம் தூரத்தில் கடல் தண்ணீருக்கும் கரைக்கும் நடுவே  ஒரு நிழல் போல் ஒரு உருவம் தென்பட்டது பேயை காட்ட வந்தவரோ…

”டேய் அங்கே பாருங்கடா பேய் நிற்கின்றது”  என்றார் 


அங்கே தென்பட்ட உருவத்தை காட்டி அனைவரும் அதையே உற்று நோக்கி கொண்டிருக்கையில் நடந்தது, அந்த ஆச்சர்யம் நின்ற உருவம் லேசாக அசைந்து அசைந்து ஆடியது நின்ற இடத்திலேயே. 

எங்களுக்கோ பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது பக்கத்திருந்த நண்பன் சொன்னான்.

“அந்த பேய் உயரம் கம்மியா இருக்கே இது பேயா அல்லது கடல் மோகினியா” என்ற சந்தேகத்தை கொத்திக் கிளைப்பினான். 

மற்ற நண்பனோ “இது மோகினிதான் இது நம்மளை சும்மா விடாது நல்ல மாட்டிக்கிட்டோம்” என்று மேலும் பயத்தை பத்தற்றதோடு கலந்தான். 

எங்களில் ஒருவன் மட்டும் வாயே திறக்காமல் வாயில் முனுமுனுத்தவாறு இருந்தான் “என்னடா முனுமுனுக்குறே” சீண்டியதுதான் தாமதம்.

“என்னை காப்பாத்திக் கொள்ள யாசின் ஓதி கொண்டிருக்கின்றேன்” அதே முனுமுனுப்போடு.

“அடப்பாவி ஒனக்கு மட்டும் ஒதிக்கிறியோ இது நியாயமா எல்லோருக்கும் சேத்து  ஒதுடா” என்றதும் யாசினை சத்தமிட்ட உரக்க ஓத ஆரம்பித்தான்.

பேயை காட்ட வந்தவர் “பேயை பாத்தாச்சு வாங்கடா  போவலாம்” என்றார்.

இவ்வளவு நேரமும் அமைதியா இருந்த இன்னொருவன் “அது பேயாக தெரியவில்லை வேறு ஏதோ” என்றான்.

பேயை காட்ட வந்தவரோ “அப்போ நீ அது கிட்டேயே  போய் பாரு அது கொடுக்குற அறையிலே ரெத்தம் கக்கி  சவாய்” என்று பயமுறுத்தினார்.

“அடிக்கப் போறது நானா என்று பார்ப்போம்” என்று சொல்லி கடல் கரை ஓரம் நின்று கொண்டிருந்த தோணியில்  போய் ஒரு கம்பை உருவிக் கொண்டு வந்து அந்த அசைந்து  ஆடிக் கொண்டிருந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் பின்னால் நானும் நடக்க தொடங்கினேன்…!
தொடரும்
Sஹமீது

'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2013 | , ,

அதிரை தாருத் தவ்ஹீத் - (ADT) என்ற பெயர் அதிரை மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒன்றே !. அதன் தூய பரிணாமத்தின் சுவடுகளை அறிந்திருக்கும் வாய்ப்புகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் அறியும் வண்ணமாக "தூய பரிணாமத்தின் அறிமுகம்" என்ற மடக்கோலையை வெளியிட்டிருக்கிறார்கள்

அதிரை தாருத் தவ்ஹீத் பரந்து விரிந்து நிமிர்ந்த நடைபோடும் தூய பரிணாமத்தின் அறிமுகம் இதோ:-







அதிரைநிருபர் பதிப்பகம்

கண்கள் இரண்டும் - தொடர் - 9 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2013 | , ,


அகத்தின் அழகு முகத்திலும் முகத்தின் அழகு மூக்குக் கண்ணாடியிலும் தெரியும்!

மூக்குக் கண்ணாடி என்பது பார்வைக் குறைபாடுக்கான வரப்பிரசாதமாக இருந்த காலம் போய், இன்று இளைஞர்கள் மத்தியில் ஃபேஷன் பொருளாகிவிட்டது.    1990 வரை தடிமனான ஃப்ரேம் உள்ள மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்களைப் பார்க்க முடிந்தது.

மூக்கு கண்ணாடி என்றாலே சேவுப்பிள்ளை கணக்கப்பிள்ளை ஞாபகம்தான் எனக்குவரும் (சேவுப்பிள்ளை கடை என்பது கடைத்தெருவில் அன்சாரி கேப் மார்ட்டுக்கு எதிரில் இருந்த பேமஸ் மளிகை கடை மூக்கு கண்ணாடியை போட்டுக்கொண்டு அவர் விடும் லுக் இருக்கே அந்த லுக்கே தனி.  அதற்கு பிறகு காலம் செல்லச் செல்ல, கண்ணாடி அணிவதால் கண்கள் இடுங்கிப்போவதும், மூக்கு வளைவதும் என முகமே மாறிவிடுகிறது என்பதால், கண்ணாடிகளின் உபயோகம் குறைந்து, கான்டாக்ட் லென்ஸ் வந்தது. இன்று இளம்பெண்களில் பெரும்பாலானோர் தேவைக்காக லென்ஸ் அணிந்தாலும், பேஷன், அழகுக்காக கண்ணாடியையும் பயன்படுத்துகின்றனர். அதிலும், மூக்குக்கண்ணாடியில் குறிப்பிட்ட ஃபிரேம் மட்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களைப் பார்வையால் இழுக்க ஆரம்பித்திருக்கிறது. 


சென்னையில் இருந்தபோது ஒரு மூக்குக் கண்ணடி வாங்கினேன். அதைக் கழற்றி மேஜை மேல் வைத்தால் அது மின்சாரக் கம்பத்தை கண்ட ஆண் நாய் போல ஒரு காலைத் தூக்கிக் கொண்டே அமர்ந்தது. கடைக்காரனிடம் ஓடினேன்.

கடைக்காரப் பையன் கண்ணாடியை மேஜை மீது வைத்து அதைக் கூர்ந்து பார்த்தான்.

மறு கணம் அவன் பார்வை என் முகத்தின் மீது வந்த்து போட்டானே ஒரு போடு ."சார் ஒங்க மூஞ்சி கோணல் சார். எங்கு போய்க் கண்ணடி போட்டாலும் அது அப்படித்தான் சார் நிக்கும்", என்றான். அதற்கு முன்பும் என் கண்ணாடி அப்படி நின்றதில்லை. ஏன் அதன் பின்னரும் தான். மூக்கிலே மூச்சு நின்றாலும் மறக்க முடியுமா சென்னையில் மூக்குக் கண்ணாடி வாங்கியதை.! 

ஹலோ கொஞ்சம் என்னை பாருங்க நல்லாக் கண்ணைத் தூக்கிட்டு பாருங்க... 

நான்தாங்க உங்க 'மூக்குக் கண்ணாடி’ பேசுறேன். விதவிதமான ஃபிரேம்களைப் போட்டு என்னை அலங்கரிக்கிறீங்க. சிலர் அடிக்கடி உடைச்சுடுறீங்க. மறந்து எங்கேயாவது என்னை வெச்சுடுறீங்க. நான் எப்படி எல்லாம் உருவாகி வருகிறேன் என்று தெரிந்தால், அப்படிப் பண்ண மாட்டீங்க தானே, வாங்க சொல்றேன்.. கண்ணாடி மற்றும் ஃபிரேம் ஆகியவை பொதுவாக எனது பாகங்கள் என்றாலும், அந்த இரண்டு பிரதான பாகங்களுக்குள் சில பாகங்கள் உண்டு.  

ஆரம்பக் காலத்தில் கண்ணாடி (குவி மற்றும் குழி) லென்ஸைக் கொண்டு என்னைச் செய்தார்கள். இப்போதும் பிரத்யேகமாய் ஆர்டர் கொடுத்தால், கண்ணாடியாலும் செய்வது உண்டு. என்றாலும், 80 சதவிகித மூக்குக் கண்ணாடிகளைப் பிளாஸ்டிக் லென்ஸ்களைக்கொண்டே செய்கிறார்கள். தொழிற்சாலையில் இருந்து நான் முழுவதுமாய் தயா ராகி வெளியே வர பல நாட்கள் ஆகின்றன.

'பாலிகார்பனேட்’ எனும் பிளாஸ்டிக்கில் இருந்து கண் துண்டு (Eye piece) எனப்படும் 'பிளாஸ்டிக்’ கண்ணாடிகளை முதலில் உருவாக்குகிறார்கள். அது, 75 இன்ச் தடிமன் கொண்டது.  

இதை, வட்ட வடிவ வில்லைகளாகத் தேய்க்கவும், பார்வை லென்ஸாக மாற்றவும் கர்வ்-ஜென்ரேட்டர் எனப்படும் கருவி பயன்படுகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி, 25 இன்ச் தடிமன் கொண்டவையாக மாற்றுகிறார்கள்.


அந்த வில்லையை எந்த வகைக் கண் கண்ணாடியாக உருவாக்க வேண்டும், அதில் எந்த மாதிரியான வேலைப்பாடு செய்ய வேண்டும்... என்று கணிப்பொறி மூலம் வடிவமைத்து, அடுத்தக் கட்ட வேலை தொடங்குவார்கள்.

இங்கே லென்ஸில், பார்வை மையம் (Optical centre) தேர்வு செய்யப்படும். இதற்கு, 'லென்ஸோ மீட்டர்’ எனும் கருவி பயன்படுகிறது. காரீய கலவைப் பூச்சு மூலம் எட்டப் பார்வை, கிட்டப் பார்வை லென்ஸ்களாக அவை மாற்றுவதற்கு, ஒவ்வொரு 'பிளாங்க்’ வில்லையாக எடுத்து, அதைக் கவனத்துடன் பிளாக்கர் கருவியில் பதப்படுத்துவார்கள்.

அலுமினியம் ஆக்சைடு, தண்ணீர் மற்றும் பாலிமரில் லென்சை, பல மணி நேரம் ஊற வைப்பார்கள். 'டிண்ட்’ எனப்படும் கரும்பூச்சை சேர்த்து, கண் கண்ணாடியில் கூலிங்கை ஏற்றுவார்கள். பிறகு, வலது கண் கண்ணாடி, இடது கண் கண்ணாடி பொறிக்கும் வேலை நடக்கும். பிறகு, கண்ணாடிக் கடைகளுக்கு வருவேன்.

எனக்குக் கவசமாக இருக்கும் ஃபிரேம்கள், ஸ்டெயின்லெஸ் கம்பிகள், அலுமினியம், பிளாஸ்டிக் என விதவிதமாகத் தயாராகின்றன. சமீப காலமாக அலுமினியம் ஆக்ஸைடு, பாலிமர் மற்றும் உதிர்ந்த பிளாஸ்டிக் துகள்களில் இருந்துகூட ஃபிரேம்கள் தயாராகின்றன.

நீங்கள், கண் டாக்டரிடம் போகிறீர்கள். அங்கே எழுத்துகள் தெரிகிறதா எனப் பரிசோதிக்க ஒரு சார்ட் இருக்கும். அதை படிக்கச் சொல்வார்கள். அதற்கு ஸ்நெல்ஸ் சார்ட் என்று பெயர். காரணம், அதைக் கண்டுபிடித்தவர், பெடர் ஸ்நெல்ஸ். இப்படி நான் உங்கள் முகத்தை அழகு படுத்துவதோடு நான் நின்றுவிடாமல் என்னால் முடிந்தவரை பார்வை குறைவுடையோர்க்கு நான் பக்க பலமாக இருப்பதை மறந்து விடாதீர்கள் என்னை மறந்தும் இருந்துவிடாதீர்கள் தடவப்போவது நான் அல்ல என்பதை உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன்.

மூக்குக் கண்ணாடிகளின் வகை:

ஆரஞ்சு நிற லென்ஸ் கொ‌ண்ட மூ‌க்கு‌க் க‌ண்ணாடி சுற்றுப்புறத்தை பிரகாசமாக்கும். ஃபோட்டோ குரோமிக் லென்ஸ் வெளிச்சம் அதிகமாக ஆக இருண்டுக் கொண்டே வரும்.  எந்த நிறமானாலும் கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.  

கண்ணாடி வாங்குவதற்கு முன் அதை அணிந்து முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அந்தக் கண்ணாடி உங்கள் முகத்திற்கு பொருந்தி வருகிறதா என சரி பார்க்கவும்.

உங்கள் கண்ணாடியின் அளவு உங்கள் முக அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கக் கூடாது. கூலிங் கிளாஸ் வா‌ங்குவதாக இரு‌ந்தா‌ல் காலை அல்லது மதியத்தில் வாங்கவும். அப்போதுதான் அது தேவையான அளவு கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதா என்பது தெரியும்.

மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி

மக்களிடையே தொடர்புக்கு மிகவும் அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது.

அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்கு அவசியமாகிறது. குறைந்தபட்சமாக தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.

சிலர் பொது இடங்களில் பலமொழிகளை பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற மொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.

இவர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக் கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர் (மொழி பெயர்க்கும் கருவி) இருக்கும். இது ஒரு கமெராவும், மைக்ரோ போனும் இணைந்த கருவியாகும்.

இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும் போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும் படியாக காட்டப்படும்.

இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும். இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது.

ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

வெயிலிலிருந்து பாதுகாப்பு:

சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலெட் கதிரினால் சருமம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றிலும் உள்ள பகுதி மிகுதியான தாக்குதலுக்கு ஆட்படுகிறது. சருமத்தின் வெளிப்புறம், சூரிய ஒளியினால் அதிகமாக பாதிக்கப்பட்டால் சில நேரங்களில் தோல் புற்றினைக் (Skin Cancer)கூட ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி கண்களின் கீழேயுள்ள தசைகளில் இறுக்கத்தையும் கருமையையும் படரச் செய்கிறது.

இம்மாதிரியான பின் விளைவுகளையும், காட்ராக்ட், கருவளையம் போன்ற சீர் கேடுகளையும் தவிர்த்து விட, நல்ல தரமான குளுமைக்கண்ணாடி (Cooling Glasses)களை அணிந்து கொள்ளலாம். கண்களை சுற்றிவரும் கருவளையம் பற்றி பின்னர் விவரிக்கின்றேன். கண்களில் வெளிச்சம் படாதவாறு பாதுகாக்கக் கூடிய வகையில் குடை மற்றும் கிரிக்கெட் குல்லா போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஆக மொத்தத்தில் சூரிய ஒளியைவிட்டும் கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் 10 வது தொடரில் மூக்குக்கண்ணாடி திரறையரங்குகளும் அதன் பரிமான வளர்ச்சி பற்றியும்  சிறிது அலசுவோம்.  

தொடரும்...
அதிரை மன்சூர்

பகுத்தறிவாளர்களின் மதம்! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2013 | , ,

உலகில் அதிகம் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தப்பட்ட கொள்கை ஒன்று உண்டெனில் அது அனேகமாக இஸ்லாம் மார்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனையாளர்களில் பலர் இறுதியில் உணர்ந்து கொண்ட தீர்வாக அவர்கள் கண்டு கொண்டது இஸ்லாம். மற்ற கொள்கைகளைப்போல் இஸ்லாம் மேலோட்டமானத் தீர்வுகளைச் சொல்லவில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமின்றி இவ்விரு நிலைகளுக்கும் முந்தைய பிந்தைய தேடல்களுக்கும் இஸ்லாத்தில் தெளிவான விளக்கமுண்டு.

ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய, மானுடவியல் குறித்த ஒலிநூலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.(யூடூபில் தேடினால் கிடைக்கும்). அதில் நாமறிந்த / கேள்விப்பட்ட / வாசித்த பல்வேறு தகவல்களைச் சொல்லியுள்ளார். ஏற்கனவே "வந்தார்கள் - வென்றார்கள்" என்ற மொகலாயர் வரலாற்றை விகடனில் எழுதிய அனுபவம் இருப்பதாலோ என்னவோ வரலாற்றுச் செய்தியை அறிவியல் ரீதியான தகவல்களுடன் கலந்து தொகுத்திருந்தார். இரண்டு மணிநேரம் கேட்கக்கூடிய சுவாரஸ்யமான தொகுப்பாக இருந்தது. 

(நண்பர் "தோழர்கள்" நூருத்தீன் எழுதிய உத்தம சஹாபாக்களின் உன்னத சரித்திரத் தொகுப்பையும் இதுபோன்று ஒலிநூலாக வெளியிடும்படி முகநூல் பக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்ததன் பின்னணி சமீபத்தி வாசித்த ஒலிநூட்களால் ஏற்பட்ட ஈர்ப்பும் ஒருவகையில் காரணம். இணையம்,வலைப்பூ, முகநூல் என்று கவனம் திரும்பியபிறகு நூல் வடிவில் வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவரும் நிலையில் பிறர் வாசிக்கக் கேட்பது கூடுதல் வசதியாக இருக்கிறது. தற்போது கேட்டுக் கொண்டிருப்பது கல்கியின் "பொன்னியின் செல்வன்" ஒலிநூல்.)

மதனின் ஒலிநூலை விளம்பரப்படுத்துவதல்ல என் நோக்கம். அதில் சொல்லப்பட்டிருந்த பலவிடயங்களுக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைக்கப்பெற்றார் என்று தெரியவில்லை. (அதாவது ஆதரமற்ற தகவல்கள்!) ஓரிரு அறிவியல், வரலாற்றுத் தொகுப்புகளை கற்பனை கலந்து தொகுத்திருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன். பேசப்பட்டுள்ள பலவிடயங்களுக்கு அவரால் சான்றுகளைத் தரவே முடியாது. மனித இனம் தோன்றுவதற்கு முந்தய பிரபஞ்சம், உலகம் குறித்த தகவல்களை எங்கிருந்து பெற்றார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்!

தொல்லியல் ஆய்வு முறையில் கார்பன் டேட்டிங் என்ற முறை அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. அதற்கு ஏதேனும் படிமங்கள் அடிப்படையாக இருந்தால்தான் அதையும் ஓரளவு கணிக்க முடியும். தகவல்களை வைத்துக்கொண்டு அறிவியல் ரீதியிலான ஆக்கங்களைத் தொகுப்பது நம்பகத்தன்மயைக் கேள்விக்குறியாக்கும் என்பதால் தகுந்த ஆதாரமுள்ள அதேசமயம் அறிவுக்கு ஒவ்வும் விடயங்களையே கையாள்வோம்.

இந்தப் பதிவில் மதனை ஏன் இழுத்தேன் என்றால், உண்மையில் மானுடவியல் குறித்த தகவல்களுக்கான அரிய தொகுப்பாக குர்ஆனில் ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளதை திறந்த மனதுடன் அணுகினால் கிடைக்கும். இஸ்லாம் மக்களிடம் இன்று வரை எடுபட்டத்தற்கும் 1400 ஆண்டுகளாக முன்னெடுத்துச் சொல்லப்படுவதற்கும் இதுவே காரணம்.

முகநூல் பகிர்வொன்றில் நடிகர் கமலஹாசனை மேற்கோள் காட்டி, "அவசர சிகிச்சையின்போது யாரும் இந்து ரத்தம், கிறிஸ்தவ ரத்தம், முஸ்லிம் ரத்தம் என்று கேட்பதில்லை. மனித இனம் நலம் பெறுவதற்கும் சிலநேரம் மதத்தை ஒதுக்கி வைக்க முடியுமெனில் ஏன் வாழ்நாளெல்லாம் அதை ஒதுக்கி வைத்து நலமடைய முடியாது? என்று வியாக்கியானம் பேசியிருந்தார். அப்பகிர்வில் பதில் கருத்திட முடியவில்லை என்பதால், ஐயா கமலஹாசன், இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி/மனித வாழ்வை வழிநடத்தும் தத்துவம்.இதை ரத்ததோடு ஒப்பிடுவது சரியல்ல. வாதத்திற்காக ஒப்பீட்டளவில் இது சரியென்றாலும் ரத்தத்திலும் ஏன் இத்தனை பிரிவுகள் உள? எல்லா ரத்தமும் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்வீர்களா? என்று கருத்திட்டிருந்தேன்.

அறிவுஜீவிகள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பலருக்கு தங்கள் கருத்திலுள்ள அபத்தம் சில நேரங்களில் பிடிபடாது. நம்பிக்கையை மறுப்பதுதான் பகுத்தறிவு என்பதும் ஒருவகையான மூட நம்பிக்கையே. ஏனெனில் ஒரு விசயத்தை மறுப்பது அறிவார்ந்ததாக இருக்குமெனில், அதை இருப்பிலுள்ள இன்னொரு சிறந்த ஒன்றால் தான் மறுக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்பது பலரின் நம்பிக்கை. இல்லை என்பது அத்தகைய நம்பிக்கைக்கு எதிரான நிலையன்றி அறிவுப்பூர்வமான நிலைப்பாடல்ல. 

நான் அணிந்துள்ள சட்டை சரியல்ல என்று சொல்பவர் அதைவிடச் சிறந்த சட்டையை அணிந்திருக்க வேண்டும். சட்டையே அணியாத அல்லது கிழிந்த சட்டையுடன் இருப்பவர் என் சட்டையைக் குறைசொன்னால் எவ்வாறு நகைப்புக்குரியதோ அதுபோன்றே அரைகுறை கடவுள் மறுப்பும். பெரியார் ஈ.வெ.ரா எதிர்த்த கடவுள் /மதநம்பிக்கை ஆகியவை இஸ்லாம் குறித்ததல்ல. அவர் பிறந்த சமூகத்தினர் கடவுளாக நம்பியவற்றையே அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.இஸ்லாம் குறித்து நல்ல அபிப்ராயமே பெரியார் கொண்டிருந்ததை நாத்திகர்களே ஒப்புக் கொள்வர். 

உண்மையில் பகுத்தறிவாளர்களாக தங்களை நம்புபவர்கள் போற்ற வேண்டிய கொள்கை இஸ்லாமே. ஏனெனில், இஸ்லாமும் கடவுள் இல்லை என்றே சொல்கிறது!! அதாவது மனிதன் கடவுளை படைக்க முடியாது; மனிதர்களால் படைக்கப்பட்டவை கடவுளாக முடியாது என்பதே இஸ்லாத்தின் கொள்கை. கூடுதலாக அல்லாஹ் மட்டுமே கடவுள் என்று சொல்கிறது. அது சரியா / தவறா என்பதை இஸ்லாத்தை திறந்த மனதுடன் அணுகினால் சாத்தியப்படும்.

ஆக, கடவுள் மறுப்பு என்பது பகுத்தறிவல்ல; உண்மையை அறிவுப்பூர்வமாகப் பகுத்தறிய முன்வராத நிலையே தற்போதுள்ள நாத்திகம்! உண்மையான பகுத்தறிவாளராக வேண்டுமெனில் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்! 

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

பகிரங்க மன்னிப்பும் தன்னிலை விளக்கமும்!

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2013 | , ,

அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் (1-9-2012) அதிரை நிருபர் தளத்தில் “மார்க்க பிரச்சாரகருக்கு – சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசரத் தடை ஏன்?” என்றொரு பதிவு வெளியாகி இருந்தது. அதில் பலர் சங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்தும் சிலர் சங்கத்தின் நடவடிக்கையை ஆதரித்தும் பின்னூட்டம் இட்டிருந்தனர். என் கருத்தாகப் பின்வருமாறு பின்னூட்டியிருந்தேன்.

அபூ சுஹைமா சொன்னது… 

என்னைப் பொறுத்தவரை தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.

குச்சிப் பள்ளி விவகாரம் வெளிவந்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதால், ஒரு குடும்பத்துக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.

ஆயிஷா மகளிர் மன்ற உரிமையாளருக்கும் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அவர் சங்கத்தின் சில நிர்வாகிகளைத் தூண்டி தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டார் என அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

இது தவிர மேலும் சில காரணங்கள் ஓராண்டுக்கு முன்னரே எனக்குத் தெரியும் என்பதால், இந்த முடிவு சரியானது. ஆனால் முடிவு எடுக்கப்பட்ட நேரம் மற்றும் அனைத்து நிர்வாகிகளையும் கலந்து ஆலோசிக்காதது தவறு.

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தடை செய்வதால், அதிரையில் ஏகத்துவப் பிரச்சாரமே தடை செய்யப்படும் என்று நினைப்பதும் தவறு.

இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் மட்டுமே அரசியல் செய்வதில்லை.

அப்துல் கரீம்
S/o. முஹம்மது அலிய் ஆலிம் 

Reply திங்கள், செப்டம்பர் 03, 2012 7:07:00 AM 

சங்கத்தை மதிக்கவில்லை என்ற காரணம் சரியானாலும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் தவறு என சங்கத்தைக் கண்டித்ம் உள்ளேன். ஆனாலும் நான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அடிமைச் சேவகம் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டேன்.

பின்னர், சங்கத்தின் நிர்வாகிகளை அவமரியாதை செய்யும் எண்ணம் தமக்குத் துளியும் இல்லை என அல்லாஹ்வை சாட்சியாக்கி ஹைதர் அலி ஆலிம் சொன்ன பின், இதுதொடர்பாகக் கருத்து எதையும் நான் தெரிவிக்கவில்லை. 

கைர்.

அண்மையில் ஊர் சென்று திரும்பும் நாளன்று மாலையில் ஹைதர் அலிய் ஆலிமை அவர்களது வீட்டில் என் நண்பருடன் சென்று சந்திக்க நேரிட்டது. அப்போது, “உங்களுடைய எழுத்துகள் என்னை மிகவும் காயப்படுத்தியது” என்று கூறினார்கள். சிலபல விளக்கங்கள் / கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், “நான் எழுதியது உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விடை பெற்றுவிட்டேன்.

பின்னர், என் நண்பரைத் தொடர்பு கொண்டு, “அபுசுஹைமாவுடைய கருத்து எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல் இருந்தது. நான் மிகுந்த மனக்குமுறலுக்கு ஆளானேன். அந்தக் கருத்து உலகம் முழுவதும் உள்ளவர்களால் வாசிக்கப்பட்டது போல் மன்னிப்பும் இடம்பெற வேண்டும்” என்று விரும்புவதாக என் நண்பன் சொன்னார்.

ஹைதர் அலிய் ஆலிமைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்கு இருக்கவில்லை. அந்தச் சமயத்தில் நான் கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எனது கருத்தை முன் வைத்தேன். என் கருத்தால் அவருடைய உள்ளம் காயப்பட்டிருப்பதாகக் கூறியதாலும் என் நண்பனிடமும் தொலைபேசிக் கூறியதாலும் ஹைதர் அலிய் ஆலிம் அவர்களிடம் பகிரங்கமாக எனது மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லாஹ் மன்னிப்பவன்; மன்னிப்புக் கோருபவர்களை விரும்புபவன்.

அப்துல் கரீம்
S/o. முஹம்மது அலிய் ஆலிம்

மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 3 35

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2013 | , ,


மாமன்னர் ஒளரங்கசீப் - தொடர்கிறது...

மாமன்னர் ஒளரங்க சீப் கட்டாயமாக மதமாற்றம் செய்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  ஆனால் சில வரலாற்றுச் செய்திகளை ஆய்ந்து பார்க்கும் போது  அவைகள் உள்நோக்கத்தோடு  இட்டுக் கட்டிய கட்டுக் கதைகள் என்றே பதியத் தோன்றுகிறது. முதலாவதாக :

மராட்டிய மன்னர் சிவாஜியின் மகன் சாம்பாஜி. அவரது மகன் ஷாஜி. ஏழு வயதிலேயே சில நடைமுறை அரசியல் காரணங்களுக்காக  கைது செய்யப்பட்டான். அவனை சிறுவன் என்பதால் சிறையில் அடைத்துக் கொடுமைக்கு ஆளாக்க விரும்பாத மனிதாபிமானமிக்க ஒளரங்க ஒளரங்கசீப்,  சிவாஜியின் பேரனை தனது அரண்மனைக்குக் கொண்டு வரச் செய்தார்.  தனது  இரண்டாவது மகள் ஜீனத்துன்னிசாவை அழைத்து, "இனி இவன் உன் பொறுப்பு. இவனை ஒரு வீர மராட்டிய மன்னனாகவே வளர்த்து ஆளாக்கு. ஒரு போதும் மத மாற்றம் செய்யாதே! அல்லாஹ் அவனுக்கு அருள் புரியட்டும்” என்று அவரிடம் ஒப்படைத்தார். இந்த   வேதம் புதிது போலத் தோன்றவில்லையா?. 18 ஆண்டுகள் சிவாஜியின் பேரன், ஒளரங்கசீப் உடைய எந்நேரமும் திருமறை குர் ஆன் முழங்கும்  அரண்மனையில் ஒரு இந்துவாகவே வளர்ந்து வெளியேறினான். ஒளரங்க சீப் நினைத்து இருந்தால் அந்த இளம் நெஞ்சில் இஸ்லாமிய விதையை விதைத்து அவரை மதம் மாறி இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. 

ஒளரங்கசீப் இந்து இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் அவர் மணக்கும் முன் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு  மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்? அவர் நினைத்து இருந்தால் இவர்களில் பாதியளவினரையாவது மதமாற்றம் செய்து இருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை.  

அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் தானே முன் வந்து  சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். 

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்று நோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத் தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். "பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது" என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. இந்த பனாரஸ் ஆணை பல வரலாற்று ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப் படாமலேயே மறைக்கப் பட்டு இருக்கிறது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture (1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. "ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத் தன்மையையும் மத சகிப்புத் தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

மத சகிப்புத் தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப் படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? 

அதே நேரம் ஒரு உண்மையை இங்கே உரக்க சொல்லியாக வேண்டும். ஒளரங்க சீப்பின் ஆட்சிகாலத்தில் தானாக மனம் மாறி மதம் மாறிய நிகழ்வுகள் இருந்தன. அதற்கு ஒளரங்க சீப்போ அல்லது அவரது ஆட்சியோ காரணமல்ல. இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறுபவர்களுக்கு முப்பத்தி ஐந்து கிலோ அரிசியும் ஐந்து லிட்டர் மண்ணெண்ணையும் இலவசம் என்று அறிவித்து அரசின் மூலம்  மதமாற்றம் நடைபெறவில்லை. எந்த முஸ்லிம் மன்னரது காலத்திலும் இந்து மக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதில்லை.  இரண்டு வகைகளில் மதமாற்றங்கள் நடைபெற்றன என்பதை வரலாறு பதிவு செய்கிறது. 
  • முதலாவதாக  “எல்லோரும் சகோதரர்களே” என்கிற ‘சுஃபி’ துறவிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்து மதச் சாதிக் கொடுமைகளால் வெறுப்புற்ற அடிநிலை மக்கள் சமுதாயக் காரணங்களுக்காக தாங்களாக முன் வந்து இஸ்லாத்தை ஏற்றனர்.
  • இன்று அவுலியாக்கள் என்று போற்றப்படும் பலர் மதப் பிரச்சாரகர்களாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுடைய அழைப்புப் பணியால் ஈர்க்கப் பட்ட பலர் உண்மைகளை அறிந்து மனம் மாறி மதம் மாறினர்.
  • இஸ்லாமிய வர்த்தகர்களின் நம்பிக்கை நாணயம் வாழ்வுமுறை வணிகத்தில் நேர்மை ஆகியவற்றைப் பார்த்து பலர் மதம் மாறினர்.  
  • அரசியல் ரீதியாக ஆளும் வர்க்கமாக இருந்து புதிய மன்னர்களைத் தங்கள் விசுவாசத்தால் அசத்த விரும்பியவர்களும் மதம் மாறினர்.

ஆனால் எந்த நிலையிலும் சாதாரண மக்கள் கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டதில்லை. ஒளரங்கசீப்பால்  வெற்றி கொள்ளப் பட்ட குறுநில மன்னர்களும் சிற்றரசர்களும் கூட மதம் மாற்றப் படவில்லை.  

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. அப்படி ஒளரங்கசீப் கட்டாயமாக மதமாற்றம் செய்து இருந்தால், ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு,  தளர்ந்து  போன மொகலாயர் ஆட்சியில், ஒளரங்க சீப்பால்  மதம் மாற்றப் பட்டவர்கள் மீண்டும் தங்களின் தாய் மதத்துக்குப் போய் இருக்கலாமே! அப்படி யாரும் போனதாகத் தெரியவில்லை என்பதே வரலாறு.  இஸ்லாத்தில் இணைந்தவர்கள் முஸ்லிம் ஆட்சி நீங்கிய பின்பும் பழைய மதத்திற்குத் திரும்பவில்லை என்பதும் கட்டாய மதமாற்றம் எப்போதும் நடைபெற்றதில்லை என்பதை நிரூபிக்கிறது. 

மாறாக,  ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார் என்பதையும் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். 

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்தியதும் , பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடித்ததும் வேறு அரசர்கள் களத்தில் நடந்த வரலாற்று உண்மை. உதாரணத்துக்கு ,  ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில்  ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு. 

நாம் “சிதம்பர ரகசியம்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறோம் அல்லது பயன்படுத்துகிறோம். சிதம்பர ரகசியம் என்றால் என்ன? இந்த சிதம்பர ரகசியத்தின் பின்னணியில் ஒரு சிதம்பர ரகசியம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அது ஒரு கொலைக் கதை அல்லவா? சிதம்பரம் கோயில் கர்ப்பகிரகத்துள் வைத்து அப்பர் அடிகளை கொலை செய்துவிட்டு இறைவனுடன் கலந்து விட்டார் என்று கட்டிவிடப்பட்ட கதையல்லவா? (மஞ்சை வசந்தன்) . இந்த நிகழ்ச்சி பற்றி வரலாற்றாசிரியர்கள் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? இது போல் எத்தனையோ மகான்களை கொன்றுவிட்டு அவர் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார் என்று கட்டிவிடப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை வெளிக் கொணரும் தைரியம் எத்தனை வரலாற்று ஆசிரியர்களுக்கு இருக்கிறது? 

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது இட்டுக்கட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப் படுகிறது ;  பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்க சீப்  உடைய வாழ்க்கை ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் ஆள்வோருக்கும் ஒரு பின்பற்றப்படத்தக்க பாடம். பல போர்க்களங்களில் சமர் புரியும் நேரங்களில் தொழுகை நேரம் வந்தால் போர் புரிவதை நிறுத்திவிட்டு , நேரம் தவறாமல் தொழுகையை முடித்துவிட்டு , பிறகு தனது தாக்குதலைத் தொடருவார். எளிமையான வாழ்வுக்கு உதாரணமாக ஒரே ஒரு உதவியாளரை தன்னுடன் வைத்துக் கொண்டவர். அவருடைய ஆட்சிகாலத்தில் அவரால் லாகூரில் ஒரே ஒரு பள்ளி பெரிய அளவில் கட்டப்பட்டது. அதற்கு அடுத்து டெல்லி செங்கோட்டையின் உள்ளே, மிகச்சிறிய அளவில் அவரால் கட்டப்பட்ட  முத்து மசூதி ( Moti Masjid ) அவரது சிக்கன வாழ்வுக்கு சான்று பகரும். அரசின் பணத்தை சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தாத அவரது தன்மை இஸ்லாமிய கலிபாக்களுடைய வாழ்வை நினைவூட்டுகிறது. அவரது உயிலின் சில வாசகங்களை இங்கே தர விரும்புகிறேன். 
  • நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எதுவும் கட்டக் கூடாது.
  • என் கல்லறை மீது எவ்வித அலங்காரங்களும் இருக்கக் கூடாது. 
  • நான் தொப்பிகளை எனது கைகளால் தைத்து விற்று சேர்த்துவைத்து இருக்கும் பணத்தில் சிறிய அளவு அஜா பெக் இடம் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு எனது இறுதிச் சடங்குகளை செய்யவேண்டும். அந்தப் பணத்தின் அளவுக்கு மேல் எதுவும் செய்யக் கூடாது . 
  • என் இறுதி ஊர்வலத்தில் எவ்வித ஆடம்பரமும் இருக்கக் கூடாது. 
  • இதுவும் போக திருக் குர் ஆனை கையால் எழுதி , விற்று சேர்த்த பணம் என் பையில் இருக்கிறது . அது புனிதமான பணம். அதை ஏழைகளுக்கு தர்மமாக கொடுத்துவிடுங்கள்  . 

ஆகியவை அவரது உயிலின் குறிப்பிடப்படவேண்டிய அம்சங்களாகும். 

Unlike his predecessors, Aurangzeb considered the royal treasury to be held in trust for the citizens of his empire. He made caps and copied the Quran to earn money for his use. He did not use the royal treasury for personal expenses or extravagant building projects. என்றுதான் வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால் அவரின் இந்த நல்ல குணங்கள் பாட நூல்களில் பங்கு பெற்றனவா? இது போன்ற நற்குணங்களை போதிக்காமல், மொள்ள மாறிகள், முடிச்சவிக்கிகள் அல்லாத நல்ல அரசியல்வாதிகளை நாம் எப்படிக் காண முடியும்? 

ஒளரங்க சீப்பின் உயிலின் அம்சங்களை  இன்றைய அரசியல் வாதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அண்மையில் பதவி காலம் முடிந்து விலகிய ஒரு குடியரசுத் தலைவி , தான் சுற்றிய உலக நாடுகள் அனைத்துக்கும் தனது பேரன் பேத்தி உட்பட குடும்பத்தையும் கூடவே அழைத்துச் சென்றார். அவரது மம்மியை கூட அழைத்துப் போயிருந்தால் கூட பாதகமில்லை. ஆனால் தனக்கு மசாலா அரைக்க அம்மியையும் கூட விமானத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் மரணமடைந்தால் அந்த மாநிலத்தில் அவரது இறுதிச் சடங்குகளில் அரசின் சார்பாக நடைபெறும் ஆடம்பர அலங்கோலங்களை இந்த நாடு கண்டது; கண்டு கொண்டு இருக்கிறது; இன்னும் காண விருக்கிறது.  

ஒரு உண்மையான  முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் இன்னொரு வரலாற்றுடன் அடுத்த வாரம். 

எனக்கு மட்டும் சொல்லுங்களேன் யாரைப் பற்றி என்று ஒரு குரல் கேட்கிறது. 

தேர்வுகளில் தொடர்ந்து தோல்வி அடைபவர்களை யார் என்று சொல்வோம்?

கஜினி முகமது என்றே சொல்வோம். இன்ஷா அல்லாஹ். 
தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

அதிரை ஈத்-மிலன் கமிட்டியின் நன்றி அறிவிப்பு! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2013 | , , ,

பிஸ்மில்லாஹ்...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்... அது சமயம் கலந்து கொண்ட அனைத்துச் சமுதாயத்தை சார்ந்த சகோதரர்களுக்கும் அதிரை ஈத்-மிலன் கமிட்டி சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சிக்கு பெருமளவில் பொருளாதார உதவி புரிந்த உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு, மற்றும் சென்னை வாழ் அதிரை சகோதரர்களுக்கும் அதிரை ஈத்-மிலன் கமிட்டியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக.

இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப்  பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நமதூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத்-மிலன் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி கல்லூரி வகுப்புத்தோழர்கள், அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய பல தரப்பட்ட மக்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பு பிற சமுதாய அன்பர்களை அழைத்து, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த அதிரை ஈத்-மிலன் கமிட்டிக்கு இயக்கம் மற்றும் அரசியல் சார்பற்ற  பல தரப்பட்ட இளைஞர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சியை எந்தவொரு விருப்பு வெறுப்புக்கும் ஆளாகாத வகையில் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், பல சகோதரர்களின் நீண்ட நாள் தியாக உழைப்பின் விளைவாக, அதிரை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் அருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, சகோ. ஹாபிழ் முஹம்மது சாலிஹ் இறை வசனம் ஓத, சகோ. ஜமீல் முஹம்மத் சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்த, சகோ. இப்ராஹீம் அன்சாரி தலைமையேற்க, சகோ. வழக்குரைஞர் முனாஃப் முன்னிலை வகித்து சிறப்பு அழைப்பாளர்களான மாவட்ட நீதிபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் சகோ. பரீத் அஸ்லம், மற்றும் மௌலவி முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றி மாற்று மதச் சகோதர சகோதரிகளின் வினாக்களுக்கும் பதிலளித்தார்கள். இறுதியாக அதிரை கா.மு கல்லூரி அரபித்துறை பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இவ்விழாவில் நமதூரை சார்ந்த நேரில் மற்றும் தொலைபேசியின் மூலமாக அழைக்கப்பட்ட பிற சமுதாய அன்பர்கள் மற்றும் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் பொழுது, அவர்களை வரவேற்ற விதம், உணவு பரிமாற்றத்தின்பொழுது சைவ/அசைவ உணவு வகைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மனமாறப் பரிமாறியது, வந்திருந்த அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும் நம் சமுதாய இளைஞர்களின் தன்னலமற்ற சகோதர வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ வைத்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் பிற சமுதாய அன்பர்களுக்கும் வாசனைத்  திரவியங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இஸ்லாத்தைப்பற்றிய அறிமுக புத்தகங்கள் அடங்கிய அன்பளிப்புப் பெட்டியொன்றும் வழங்கப்பட்டது.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, ஆலோசனைப் பெட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மாற்று மத அன்பர்களின் ஆலோசனைகளும் நிகழ்ச்சியை பற்றிய மேலான கருத்துக்களும் நமதூரில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


அவைகளுள் சில அன்பர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் கீழே தரப்பட்டுள்ளது;

செ. கோப்பெருஞ்சோழன், அன்னவாசல், சொன்னது... 

இதுவரையில் என்னை பொருத்தவரையில் நடைபெறாத ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி, அனைவரும் சமத்துவம் என்று வாய்மொழியாக பேசுபவர்கள் மத்தியில் இது உண்மை என்று நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். நன்றி.

எல்லா பிரச்சனைகளும் முதலில் பள்ளியில் தான் ஏற்படுகிறது, முதலில் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாணவர்களின் மனப்போக்கை மாற்ற வேண்டும்.

N.R.ரெங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர், பட்டுக்கோட்டை,  சொன்னது.....

மனிதநேயம், சமூக நல்லிணக்கம் ஒங்க பயனடையும் நிகழ்ச்சி. அனைவரிடத்தில் ஒற்றுமை மனப்பான்மை வளர வேண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.

D. ரமேஷ், தமிழன் T.V சொன்னது... 

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மதம் வேறாக இருந்தாலும் இறைவன் மட்டும் ஒருவனே என்ற செய்தி மிக சிறப்பாக இருந்தது. இந்த மக்கள் சந்திப்பு நமது ஊரை மட்டும் இல்லாமல் அனைத்து ஊர் மக்களுக்கும் சேர்ந்து அடைய வேண்டும்.

G.பிரபாகர், அதிரை, சொன்னது.... 

அனைவரையும் ஒற்றுமையோடு சிந்தித்து வாழ வழிவகுத்த இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது எனது அருமை அதிரை நண்பர்களுக்கு நன்றி. அனைவரும் ஒற்றுமையோடு போட்டி,பொறாமை இன்றி வாழ வேண்டும்.

N.வேணுகோபாலன், ஆசிரியர், கா.மு.ஆ.மே.நி பள்ளி சொன்னது.... 

தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒரு கூட்டம் இது மிகவும் பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஒருநாள் இதுபோன்ற கூட்டம் நடத்தினால் சமூக நல்லிணக்கம் நிச்சயம் வளரும்.

S.கார்த்திகேயன், அதிரை, சொன்னது.... 

இது போன்ற நிகழ்ச்சிகள் மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் அதிரை ஈத்-மிலன் கமிட்டிக்கு என்று நன்றிகள்.

இது போன்ற நிகழ்வுகள் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோதான் நடத்த முடியும் ஆனால் நாம் அன்றாடம் மதபேதம் பாராமல் உதவி கரம் நீட்ட வேண்டும்.

K. சொக்கலிங்க பத்தர், அதிரை, சொன்னது... 

பல மத சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக யாவரும் பின் பற்ற வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் நம்மிடம் ஷைத்தான் வராமல் இருக்க இறைவனிடம் துவா கேளுங்கள்.

பேரா. M.A. முஹம்மது அப்துல் காதிர், முன்னாள் முதல்வர், கா.மு. கல்லூரி, சொன்னது...

... சமூக நல்லிணக்கம், முஸ்லிம்களாகிய நம்மிடத்தில்தான் முதலில் வர வேண்டும், ஏற்படுத்த முயல வேண்டும். இது போன்ற நிகழ்ச்சி ஆண்டாண்டு தோறும் நடைபெற வேண்டும். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளும், அமைப்பும் மிக மிகச்சிறப்பு.

S.பாலசுப்ரமணியன், அதிரை, சொன்னது.... 

அனைத்து சமூகத்தையும் ஒன்றுபட செய்து ஒற்றுமை சமூதாய சகோதரத்துவத்தை ஒன்றுபட செய்து இவ்விழாவை ஏற்பாடு செய்து கொடுத்த அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இதுபோன்ற என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வேற்றுமை இல்லாமல்.

V.காந்தி, அதிரை, சொன்னது.... 

இந்த நிகழ்ச்சி என்னுடைய மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது சாதி,மதம், வேறுபாடின்றி எல்லோரும் அண்ணன் தம்பி போல் வாழவேண்டும். நம் எல்லோரையும் படைத்த ஆண்டவன் ஒருவன்தான். அப்படி இருக்கும் பொழுது  நாம்தான் பிரிவினையோடு வாழ்ந்து வருகிறோம் இதை மனதில் வைக்க நாம் ஒற்றுமையாக வாழவேண்டும்.

A.தாஜுதீன், மல்லிபட்டினம், சொன்னது... 

காலத்திற்கேற்ப இந்துபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து மதத்தினர்களையும் ஒன்று இணைத்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்வதன் மூலம் சமத்துவமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் நாட்டின் வளர்ச்சியையும் காணலாம்.

இதுபோன்ற விழாக்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் கூட்டி அனைத்து சமூதாய மக்களையும் ஒன்றிணைத்து பிரிவினைவாதத்தின் சூழ்ச்சியில் விழாமல் பாதுகாக்க வேண்டும்.

சி. சுந்தர்ராஜு, ஆச்சாரி, சொன்னது... 

முஸ்லீம், இந்து, கிறிஸ்டியன் எல்லோரும் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதுதான் என்னுடைய விருப்பம் என்னுடைய ஆசை.

இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தியதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

P.சங்கர், அதிரை, சொன்னது... 

அனைத்து சமூகத்தினரையும் ஒன்றுபடுத்தியதற்க்கு இந்த சுப நிகழ்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது நன்றி.

இதேபோல் ஒரு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்றால் நமதூர் பெருமை உலகம் முழுக்க பெருமை சேர்க்கும்.

ராகேஷ், ஜோய் அலுக்காஸ், ஜுவல்லரி, தஞ்சாவூர், சொன்னது... 

Good, thank you for giving opportunity to participate in this noble event and also understand Islam, we all are human. 

A.L. அஷ்ரப் அலி,  அதிரை, சொன்னது... 

இந்த நிகழ்ச்சி முதன் முறையாக அதிரையில் நடைபெறுகிறது இதன் மூலம் அனைவரையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்து நல்ல கருத்துகளை கேட்கும் வாய்ப்பாக அமைந்தது.

இதே போன்று நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

T. லெனின், பேராசிரியர், கா.மு.கல்லூரி, சொன்னது... 

இந்த நிகழ்ச்சி சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள், சகோதர சகோதரிகள் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மனப்பூர்வமாகவும் இதயப்பூர்வமகவும் மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன்.

இதுபோல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

A.முஹம்மது முகைதீன், அதிரை, சொன்னது... 

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள், இது தாங்களுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த இறைவன் நமக்கு ஒற்றுமையை தந்தருள்வானாக.

R. தனபால், அதிரை, சொன்னது... 

அழைப்பிதழ் பெற்றபோது எல்லோரும் சிறியவர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன், ஆனால் கலந்து கொண்டபோது இது போன்ற நிகழ்ச்சிகள் தேவை என்பதை உணர்ந்தேன்.

அதிரையில் உள்ள 21 வார்டுகளுக்கும் வார்டு 1-க்கு 2 நபர் வீதம் அமைப்பை ஏற்படுத்தவேண்டும்.

N.முஹம்மது ஜபருல்லாஹ், அதிரை, சொன்னது... 

நல்ல ஒரு எடுத்துகாட்டு, எல்லா வருடமும் நடத்தக்கூடிய நிகழ்ச்சி. ஊரில் உள்ள எல்லா முஹல்லாவும் ஒன்றுபட வேண்டும். எந்த முடிவாக இருந்தாலும் முஹல்லா அனைத்தும் சேர்ந்து எடுக்க வேண்டும், இயக்கங்கள் என்பது தேவையில்லை.  

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நமக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்திருந்தாலும், நாம் அனைவரும் அல்லாஹ்வைத் துதித்து, அவனிடத்தில் பாவ மன்னிப்புக் கோருவோமாக..

இனி வரும் காலங்களில் நமதூர் அனைத்து சகோதரர்களும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்த முன்வரவேண்டும். 

நன்றி!

இப்படிக்கு, 
அதிரை ஈத்-மிலன் கமிட்டி
அதிராம்பட்டினம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு