Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறக்க முடியா மனிதர் ! - நினைவலைகள்...! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | October 18, 2013 | , , ,

‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது!

‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை (அக்டோபர் 2ம் தேதி) ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன்.


“The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த சிறந்த மனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக்கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ்வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்!


60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது!

அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் பள்ளிவாசல்களில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடுநிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.

காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது! S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.


கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன்முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார்!

1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம்! அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன! பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது! 

இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!

அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.


அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்!” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.

தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின! 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது! நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்!

எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.


02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்! அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள்! இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி.
இது ஒரு நினைவலைகளின் மீள் பதிவு

ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்

14 Responses So Far:

Unknown said...

மரக முடியாத மா மனிதர்

sabeer.abushahruk said...

வாழ்க அம்மாமனிதர் அவர்களின் உயர்ந்த நோக்கம்

Aboobakkar, Can. said...

'வேட்டி உடுத்திய வெள்ளைக்காரன் 'மர்கூம் S M S அவர்களின் பொற்காலத்தில் நான் பள்ளியில் படித்து முடித்த காலம் வரை ஸ்பெசல் பீஸ் என்று கட்டியதெல்லாம் வருடம் ஒன்றுக்கு ருபாய் 10.50 மட்டுமே.சமுதாயத்தின் வளர்ச்சியில் ஜாதி மத பேத மற்ற ஒரு சிறந்த மணிதர் அல்லாஹ் அன்னாருக்கு சுவர்கத்தை நசீபாக்க அனைவரும் துஆ செய்யுவோம் ...ஆமீன் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மறக்க முடியா மனிதர் - கல்வித் தந்தை அவர்களை என்றும் நினைவுகூர்வதில் நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம்.. !

எங்கள் பள்ளிக்கென்று ஒரு கலையரங்கம் உருவாக செயல்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இந்த தருணத்தில் கல்வித் தந்தையின் பெயர் அங்கே என்றும் ஜொலிக்க பரிந்துரைக்கப்படும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மறக்க முடியா மனிதர் - கல்வித் தந்தை அவர்களை என்றும் நினைவுகூர்வதில் நன்றியுடையவர்களாக இருப்போம்.. !

அன்னாரின் வழியில் அவர்களின் வாரிசுகள் தொடர்ந்து சிறப்பான கல்விச் சேவை செய்ய அல்லாஹ் செல்வத்தை வாரி வழங்குவானாக!

Anonymous said...

தமிழுக்கு எப்படி அகத்தியர் முதல்வனோ அதுபோல் அதிரைக்கு மர்ஹும் S.M.S.அவர்கள்.

அவர் அதிரை மக்களின் முகத்தில் கல்வி கண்களையும் அகத்தில் அறிவுக் கண்களையும் பொறுத்தினார். அது மட்டுமல்ல அவர் சாதனை !

அவர், அதிரை பஞ்சாயத்து தலைவராய் இருக்கும்போது அதிரை நகர வீதிகளில் சோறு போட்டு சாப்பிடும். அளவுக்கு வீதிகள் சுத்தமாக இருந்தது. குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது குப்பை வண்டி வந்து குப்பைகளை அள்ளிச் செல்லும்.

பஸ்ஸ்டாண்டு கட்டும் திட்டமும் அவர் கொண்டு வந்த திட்டமே!. அவர், எண்ணியதை எண்ணியபடி செய்து முடிக்கும் சாதனை செல்வர்.

அதிரை மக்கள் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டிய மனிதர் அவர். அல்லாஹ் அவரின் ஆன்மாவுக்கு சாந்தியும் சமாதானமும் அருள்வானாக! ஆமீன்.

நானும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே நேர்த்திக் கடன் வச்சுருக்கேன். எதுக்காக தெரியுமா? “அதிராம்பட்டனத்துலே தெருவுக்கு தெரு ஒரு குப்பை அள்ளும் வண்டியை பாக்கனுங்கர'ஹாஜத் நிறைவேறிட்டா என் நேதிக்கடன்! நினைவேறிடும்.
[குப்பை வண்டிய பார்க்க கொடுத்து வைக்கனும் போலே] எல்லாரும் விருப்பம் தெரிவிங்கோ !!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

எங்கள் பள்ளிக்கென்று ஒரு கலையரங்கம் உருவாகச் செயல்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் கல்வித் தந்தையின் பெயர் அங்கே என்றும் ஜொலிக்கப் பரிந்துரைக்கப்படும் !

“சேர்மன்வாடி” என்று ஒவ்வொரு முறையும் பேருந்து நடத்துனர், அந்த நிறுத்தத்தைக் குறிப்பிடும் காலமெல்லாம், அன்னாரின் தூய ஆட்சி நம் கண்முன்னால் நிற்கும். இருக்கின்ற தலைவர்களும், வரப்போகின்ற தலைவர்களும் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றினைக் கேட்டு, அதன்படி ஆட்சி செய்தலும் அன்னார்க்கு நாம் செய்யும் நன்றி கடனாகும்.

எம் தலைமை ஆசான் அவர்களுக்கு அன்னாருடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் அன்னார்ச் செய்தப் பேருதவிகளை நினைவு கூறுவதால் எப்படி மனத்தினில் நன்றி கூறிய ஓர் ஆத்மத் திருப்தி உண்டானதோ, அவ்வண்ணமே, தமியேன் மாணவர் தலைவனாக (1973ல்) இருந்த வேளையில், பலமுறை அன்னாரின் இல்லத்தில் சேர்மன்வாடியில் சந்திக்க அழைத்து, ஆலோசனைகள் வழங்கியுள்ளார்கள்; அவைகளை என் நினைவு நாடாக்களைச் சுழல விட்டு அன்னாரின் அப்பேருதவிகளை எண்ணிய வண்ணம் இப்பின்னூட்டம் இடுகிறேன்; நன்றி கடனாகத்தான் என்பதையும் தெரிவிக்கிறேன்.

கலையரங்கம் கட்டிடப் பணிகளுக்குப் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரம் அறியத் தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அல்லது இன் ஷா அல்லாஹ் விடுப்பில் தாயகம் வந்தால் நேரில் பள்ளி முதல்வர் அவர்களிடம் தொகையை அளிக்கலாமா என்பதையும் தெளிவு படுத்த விழைகிறேன்

KALAM SHAICK ABDUL KADER said...

இ.அ.காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்,

ஐந்தாம் நிழற்படத்தில் கட்டம் போட்டச் சட்டையணிந்து (நடுவில்) நிற்பவர், தங்களுக்கும் எனக்கும் புகுமுக வகுப்பில் வரலாறு பாடம் நடத்திய உயர்திரு.ஜெயராஜ் சார் தானே?

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ் ஸலாம்.

ஆமாம் கவியன்பன் அவர்களே! தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

வாழ்வில் மறக்க முடியாத பத்து பேர்கள என்று என்னை ஒரு பதிவு எழுதச்சொன்னால் நான் பேராசிரியர் டி. ஜெயராஜ் அவர்களைப் பற்றியும் எழுதுவேன்.

Unknown said...

அதிரை நகரம் என்றுமே நன்றிக்கடன் பட்ட மாமனிதர் S.M.S. அவர்கள்.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

உணர்வு பூர்வமான கட்டுரை. இப்படி ஒரு மனிதர் நம்மிடையே தோன்றி அவரது சிந்தனைகள் செயல் வடிவம் பெற்று இராவிட்டால் நம்மில் பலருக்குப் பெயருக்குப் பின் இருக்கும் கல்வியின் அடையாளங்கள் இருக்காது.
காமராசரை படிக்காத மேதை என்பார்கள். நமது தாளாளர் அவர்கள் பேசாமலேயே காரியங்கள் சாதிக்கும் பேசா மேதை. எத்தனையோ பள்ளி கல்லூரி விழாக்களில் ஒன்றில் கூட இவர் பேசி நான் கேட்டதில்லை.

இன்ஷா அல்லாஹ் மேல் நிலைப் பள்ளியில் கலையரங்கம் விரைவில் அமைக்க நாம் ஊர் கூடி தேர் இழுப்போம். அதகான ஆக்கப்பணிகளில் ஈடுபட்டு இருக்கிறோம். உரிய நேரத்தில் நிதி திரட்டல் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும்
முன்னாள் மாணவர் தலைவர்களுக்கு நிறைய நிதி திரட்டல் வேலை இருக்கிறது. ( என்னையும் சேர்த்தே சொல்கிறேன்).

KALAM SHAICK ABDUL KADER said...

//முன்னாள் மாணவர் தலைவர்களுக்கு நிறைய நிதி திரட்டல் வேலை இருக்கிறது. ( என்னையும் சேர்த்தே சொல்கிறேன்).\\

என்னால் முடிந்த அளவுக்கு , இன்ஷா அல்லாஹ், என் தாய்ப்பள்ளிக்குத் தமியேன் செய்யும் கைமாறாகக் கருதி அந்தக் கனவுக் கலையரங்கைக் கட்டி முடிபோம்.

மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு என்பதை அறிவீர்கள்; அதனாற்றான், முதன்முதலாக வங்கிக் கணக்கு விவரம் கேட்டேன்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
மறக்கமுடியாத கொடைவள்ளல்.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

அனைவருக்கும் கல்விகொடுத்த மறக்க முடியாத மாமனிதர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு