Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர்-8 10

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2013 | , ,


மனமும் கண்களும்

கண் என்பது மனித உடலில் தனி உறுப்பாக இருந்தாலும் உடலின் எல்லா உறுப்புகளுடனும் அதற்கு தொடர்பு உண்டு. அதே போன்று மனதிற்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு. ஒருவரது கண்களை வைத்தே ஒருவரது செயல்பாடுகள், குணாதிசயங்களை அடையாளம் காண முடியும் . (உ.ம்) நல்ல சிந்தனையும், ஒழுக்கமும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள் கண்களில் ஓர் அபரீதமான அமைதியும், அன்பும், குளிர்ச்சியும், கருணையும், வெளிப்படுவதை நன்கு அறிய முடியும் இவர்களுக்கு கண்களில் பெரும்பாலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.

சிலர் தவறான நடவடிக்கைகள், பெண்களிடம் காம களியாட்டத்தில் விருப்பமுள்ளவர்களாகவும், கொலை வெறி கொண்டவர்களாகவும் பழி பாவத்திற்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பர். இவர்களது கண்களைப் பார்க்கும்பொழுதே ஒருவித அச்சம் நமக்கு ஏற்படுவதை நன்கு அறிய முடியும் அவர்கள் விகாரமாக காட்சியளிப்பர்., இவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களின் பாதிப்பு ஏற்படும், எனவே நல்ல சிந்தனையும் நல்ல குணாதிசயமும் நமது கண்களுக்கு ஆரோக்கியத்தையும், அழகையும் ஏற்படுத்தும்.

கண்களை அல்லது கண்பார்வையை இழப்பதற்கு இன்னும் பல காரணங்கள்  உண்டு. நாம் உண்ணும் உணவு, நமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சூழ்நிலை, நாம் செய்யும் தொழில், தூக்கமின்மை என்பனவற்றுடன் நாம் அவற்றை சரியாக பராமரிக்காது விட்டுவிடுவதுவே முக்கிய காரணிகளாகும்..


பார்வை இழப்பிற்கு வயது மட்டும் காரணமல்ல. எமது அக்கறையின்மையே முக்கிய காரணமாகும். கண் வைத்தியரிடம் ஒழுங்கான கால இடைவெளியில் காண்பிப்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 சதவிகிதமான பார்வை இழப்புக்களை தடுக்க முடியும்.  எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிடிலும் கூட 40 வயதிற்கு பின் கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். 

தமது குடும்பத்தில் அல்லது பரம்பரையில் கண் நோயுள்ளவர்களுக்கு இது மேலும் முக்கியமானதாகும்.  உங்கள் பார்வையில் குறைபாடு புலப்படும் வரை கண் மருத்துவரை காண்பதைத் தள்ளிப் போட வேண்டாம். உங்கள் ஒரு கண்ணில் கோளாறு இருந்தாலும் மற்ற கண் பார்வை தெளிவாக இருப்பதால் குறைபாட்டுடன் உள்ள பார்வையை   ஈடு செய்துவிடுவதால் நோயாளி அதனை உடனடியாக உணர மாட்டார். எனவேதான் கண்பார்வைக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை அவசியமாகும். 

முதலில் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பதை எடுத்துக் கொள்வோம். பலரது நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக குறைந்த வெளிச்சத்தில் வாசிப்பதால் பார்வைக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவ்வாறு வாசிப்பதால் கண்கள் விரைவில் களைப்படைந்து விடும் என்பது உண்மை. 

வாசிக்கும் போது படிக்கும் ஒளிவிளக்கின் வெளிச்சம் தாளின் மேல் நேரடியாக விழுவதே சிறந்ததாகும். முதுகிற்குப் பின்னிருந்து உங்கள் தோள்களுக்கு மேலாக வெளிச்சம் வாசிக்கும் தாளில் விழுவது சிறந்ததல்ல. அதேபோல ஒளிவிளக்கு உங்களுக்கு முன் இருப்பதும் நல்லதல்ல. சுற்றிவர ஒளி பரவ முடியா மறைப்பினால்(Shade) மூடப்பட்டு, வெளிச்சம் நேரடியாக உங்கள் புத்தகத்தின் மீது மட்டும் விழ வைக்கும் மேசை விளக்கே (Table Lamp) நல்லதெனலாம்.

படிக்கும் போது  எழுத்துக்கள் சரியாக தெரியாவிட்டால், அப்போது கண்களை பரிசோதித்து, அதற்கு கண்ணாடிகளை போடாமல், சிரமப்படுத்தி அப்படியே படித்து கண்களுக்கு சிரமம் கொடுத்தாலும், குறைவான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்கும்போதும், மேலும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப்படைந்துவிடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு பிரச்சனைகள் ஆரம்பிக்கும். ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிகளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுபடலாம்.

கண்ணாடி அணிவதில் எச்சரிக்கை தேவை

இன்று கண்ணாடி அணிவதை சிலர் கவர்ச்சிக்காக எவ்வித பரிசோதனையுமின்றி அணிந்து கொள்கின்றனர். கண்களில் சிறிய பிரட்சனையாக இருந்தாலும் உடனடியாக கண்களை, கண் டாக்டரிடம் பரிசோதித்து அவர் பரிந்துரைக்கின்ற பார்வையின் அளவீடு அடிப்படையில் கண்ணாடி அணிவது மட்டுமே கண்களுக்கும் கண் பார்வைக்கும் பாதுகாப்பாக அமையும். ஒருவரது கண்கள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கண்ணாடியை இன்னொருவர் பார்வை நன்றாக தெரிகிறது என்பதற்காக அணியக்கூடாது அது முற்றிலும் தவறு.

தற்காலிகமாக கண்பார்வை நன்றாக தெரிவதுபோலத் தோன்றினாலும் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவிதமான பார்வைக் கோளாறுகளுக்கும் ஒவ்வொருவிதமான கண்ணாடி உண்டு ஒரு கண்ணாடிக்கு பதிலாக வேறு கண்ணாடி அணிந்தால் குறைபாடு குறைவதற்குப் பதிலாக அதிகமாகிவிடும். அதனால் கண் டாக்டரின் ஆலோசனையும் அனுமதியும் இல்லாமல் எந்த கண்ணாடியும் அணியக்கூடாது.

உங்களின் பார்வைக் குறைபாடுக்கு ஏற்ப, பொருத்தமான வலது கண் லென்ஸ், இடது கண் லென்ஸ் வகைகளை டாக்டர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.. அதற்கு ஏற்ற வகையில் கண்ணாடிக் கடைக்காரர், நீங்கள் தேர்வு செய்த ஃபிரேமில் கண்ணாடியைப் பொருத்தி, சரியான கோணங்களில் லென்ஸோ மீட்டரில் வேறுபாடு செய்து, கண்ணாடியை அழகாக உருவாக்கிக் கொடுப்பார்.

ஒரு கண்ணாடி  உங்களுடன்  உறையாடுகின்றதை கொஞ்சம் செவிதாழ்த்தி கேளுங்கள்

உன் கண் ஆடியாக உன்னிடம் வந்து சேருகிறேன். கான்டாக்ட் லென்ஸ் என்று என் ஒன்றுவிட்ட சகோதரனும் இருக்கிறான். இவனை அணிய, ஃபிரேம் தேவை இல்லை. குட்டியாக பிளாஸ்டிக் ஷீட் போல இருப்பான். அதைக் கண்ணில் தினமும் பொருத்திக்கொள்ள வேண்டும்.  

எந்த வகையாக இருந்தாலும் என்னைத் துடைத்து சுத்தமாகப் பராமரித்தால், நீண்ட காலம் உழைப்பேன். அத்துடன், கண்களுக்கு நன்மை பயக்கும் கீரை போன்ற உணவுகளைச் சாப்பிட்டால், என்னை அணிய வேண்டிய அவசியமே இருக்காது. செய்வீர்களா? சிந்தித்து எனக்கு ஓய்வு அளியுங்கள்.

என் சிறு வயசு பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகின்றது 1969ல் ஆறாங்கிளாஸ் நான் படிக்கையில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் பள்ளிக் கூடத்தில் எங்களுடன் வகுப்பில் இருந்த நல்லா படிக்கின்ற சக புள்ளைங்களில் சிலபேர் கண்ணாடி அணிந்திருந்ததைப் பார்த்து  அவனுக்கு அது ஒரு கெட்டப்பாக தெரிந்ததினாலும் கண்ணாடி போட்டா நல்லா படிப்பு வரும் என்ற ஒரு எண்ணம்  அவனுக்குள் இருந்ததாலும் அது போன்று நாமும் போட்டால் என்ன என்ற எண்ணம் வர அதற்குண்டான வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.  

வீட்ல போய் எனக்கு கண்ணாடி வாங்கித்தான்னு சொன்னா ஒண்ணும் எடுபடாதுன்னு அவனுக்கு தெரியும். அதனால மெல்ல ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டான். போர்டுல டீச்சர் எழுதறது எதுவும் சரியா தெரியலைனு மெல்ல மெல்ல பிட்டை போட்டு பில்டப் பண்ண ஆரமபிச்சான். அப்புறம் அவன் புடுங்கல் தாங்க முடியாமல் அவனுடைய அப்பா அவனை பட்டுக்கோட்டையில் உள்ள கண் டாக்டர் சாகுல் ஹமீது அவர்கள் கிட்ட கூட்டிப் போனார். அவனுக்கு புதுசா இன்னொரு பயம் வேற வந்திட்டது. ஒரு வேளை டாக்டருக்கு உண்மை தெரிஞ்சிட்டா நம்ம நிலை என்னாகும் அப்படினு ஒரு கவலை வேற. 

சரி இருந்தாலும் சமாளிப்போம்னு மனசுல ஒரு தைரியத்தை வரவழைச்சிகிட்டு போய் உட்கார்ந்தான். அங்கே ஒரு நர்சம்மா அவனுடைய கண்ணுல விளக்கெண்ணை மாதிரி ஒரு ஐட்டத்தைக் கொட்டிட்டு 2 மணி நேரம் கழிச்சு தான் கண்ணை டெஸ்ட் பண்ண முடியும். அதுவரை கண்ணை திறக்கக் கூடாதுனு உத்தரவு போட்டுட்டு போய்ட்டாங்க. அவனுக்கு கண்களில் உலக மகா எரிச்சல். அப்போதான் அவனுக்கு ஒண்ணுக்கு, ரெண்டுக்கு, பசி எல்லாம் ஒண்ணா சேர்ந்து வந்தது. ஒரு வழியா ரெண்டு மணி நேராம் போனப்புறம் டாக்டர் அவனைக் கூப்பிட்டு கண்ணை நல்ல கழுவிட்டு ஒரு போர்டில் உள்ள எழுத்துக்களை காமிச்சி படிக்கச் சொன்னார். 

எல்லாத்தையும் சரியா படிச்சா நம்ம குட்டு உடைஞ்சிடுமேன்னு சின்ன எழுத்தை எல்லாம் கொஞ்சம் கஷ்டப் பட்டு படிக்கிற மாதிரி அவன் முடிஞ்ச வரை ஆக்ட் கொடுத்தான். அந்த டாக்டர் வேற வேற கண்ணாடியை எடுத்து அவன் ஃப்ரேமில் சொருகி இப்ப படி இப்ப படினு அவன் உயிரை வாங்கினார்.  

எங்க தப்பு பண்ணினான்னு அவனுக்குத் தெரியவில்லை அந்த பாழாய் போன டாக்டருக்கு அவன் மீது சந்தேகம் வந்திருச்சி. அப்புறம் கடைசியா ஒரு முறை ஃப்ரேமில் வேறு எதோ ஒரு கண்ணாடியை போட்டு இப்ப படினு சொன்னபோது ரொம்ப அற்புதமா எல்லாத்தையும் படிச்சித் தொலைச்சிட்டான். அப்புறமாத்தான் ஃபிரேமில் விரலை விட்டுப் பார்த்தால் அதில் கண்ணாடியே இல்லை ! ஆகா கவுத்துட்டாங்களே அப்படினு நினைச்சிகிட்டே அவங்கப்பாவை பார்த்தா அவரும் அவனை முறைச்சுப் பார்த்துகிட்டிருந்தார். சரிடி இன்னிக்கு உனக்கு டின்னுதான் போ அப்படினு நினைச்சிகிட்டே விட்டுக்குப் போய்..... ஹ்ம்ம் அந்தக் கதையெல்லாம் இங்கன சொன்னா மிச்சமிருக்கிற அவனுடைய மானமும் போய்டும் அப்புறம் நீங்கள்  அது யாரு எவரு என்று கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள்  வேண்டாம் வம்பு இதோடு விட்டுவிடுவோம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வரும் (9வது) தொடரில் மூக்கு காண்ணாடி எப்படி உருவாகின்றது என்பதை பார்போம்.
தொடரும்
அதிரை மன்சூர்

10 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்றைய பாடம் கண்களுக்கு நல்ல அறிவுரையோடு நகைச்சுவை கலந்து நல்ல ஜோர்.

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

//என் சிறு வயசு பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகின்றது 1969ல் ஆறாங்கிளாஸ் நான் படிக்கையில் //

ஆகா நல்ல மாட்டிக்கிட்டியலா மன்சூர் பாய் .1969 ஆறாங்கிளாஸ் படிச்ச நீங்க 1967லில் பிறந்த என்னை காக்கா என்று கூப்பிடுவது எந்த வகையில் நியாயம்

கண்ணை நல்ல கசக்கிட்டு இதுக்கு யாரவது நல்ல தீர்ப்பா சொல்லுங்க

sabeer.abushahruk said...

ஹமீது,

கண்ணக் கசக்கக் கூடாது என்று இந்த பதிவின் ஆசிரியர் சொல்லியிருப்பதால் கண்ணாடியைத் துடைத்துவிட்டுக் கணக்குப் போட்டு பார்த்தப்ப….

அறுவத்தி ஒன்பதில ஆறாம்ப்பு என்றால் குறைந்த பட்சம் 11 வயது இருக்கனும் (வலது கையால் இடது காதைத் தொட்டுக்காட்டினாத்தான் ஒன்னாம்புல சேர்ப்பாய்ங்க); அப்புறம் அறுவத்தி ஒன்பதிலேர்ந்து ரெண்டாயிரத்து பதிமூனுவரை 44 ஆவுது. அப்ப, அந்த 11ம் இந்த 44ம் சேர்ந்தா 55 ஆவுதே.

அப்படீன்னா மன்சூர் எனக்கும் காக்காவா!!!!???? ஹய்யா.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய மன்சூர் காக்கா அவர்களுக்கு,
பதிவு ரொம்ப அருமையாகப் போய்க்கொண்டிருக்கு,காக்கா.
அறிவியல் ஆன்மீகம் மருத்துவம் மட்டுமல்லாது அவ்வப்போது சமூகம் ஒழுக்கம் என்றும் அலசுகிறது, காக்கா.
கலக்குங்கள், காக்கா.
காக்கா, காக்கா, காக்கா, மன்சூர் காக்கா.

Shameed said...

அன்பிற்குரிய மன்சூர் காக்கா அவர்களுக்கு,
பதிவு ரொம்ப அருமையாகப் போய்க்கொண்டிருக்கு,காக்கா.
அறிவியல் ஆன்மீகம் மருத்துவம் சமூகம் ஒழுக்கம் மற்றும் உண்மையான செய்திகளாகவும் போகின்றது என்பதற்கு ஆதாரமாக நீங்கள் ஆறாம் கிளாஸ் படிச்ச செய்தியும் அதனை ஒட்டி வந்த கேள்வி மற்றும் அதற்கான தீர்ப்பும் சான்று காக்கா.காக்கா.காக்கா.காக்கா.

ZAKIR HUSSAIN said...

கண்கள் பற்றிய ஒரு தகவல் [ மருத்துவம் ]

பொதுவாக கண்களில் வரும் அதிகமான பிரச்சினைகளுக்கு வலி வராததால் பிரச்சினை அதிகம் ஆன பிறகே மருத்துவரை போய் பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தனது வாழ் நாளில் 50 வருடம் கழித்த பிறகு 'முதன் முறையாக" கண் மருத்துவரை கன்சல்ட் செய்கிறார்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

கண்ணான மருத்துவ நண்பா, அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர், இன் ஷா அல்லாஹ் ஏப்ரல்-மே (2014)ல் விடுப்பில் வந்து கண் புரை நோய்க்கான சிகிச்சையைச் செய்திட நாடியுள்ளேன். மருத்துவரே! ஒரு மாத விடுப்பில் சரியாகி விடுமா? அல்லது இரண்டு மாதங்கள் விடுப்புக் கேட்க வேண்டுமா? உங்களின் மறுமொழி கண்டதன் பின்னர்த் தான் விடுமுறை விண்ணபத்தில் எத்தனை மாதங்கள் வேண்டும் என்று குறிப்பிட வேண்டும்.

Anonymous said...

//கண்களை வைத்தே ஒருவரின் குணங்களைஅறியலாம்// இது உண்மையே!

அது மட்டுமல்ல ஒருவரின் எண்ணங்களையும் நோக்கங்களையும் பழக்க வழககங்களையும் அறியமுடியும்.

சிலர் கண்களில் 'மெஸ்மரைஸ் [Mesmerizing]’பிறரை தன் வயப்படுதும் சக்தியும் உண்டு.

இந்த சக்தி கொண்ட பெரும்பாலோர் இதை தீயவழிகளிலும்-தங்கள் சுய நலதுக்காவுமே பயன் படுத்துகிறார்கள்!.

காவியுடை சாமியார்கள் காமலீலைகளுக்கு பெண்களிடம் இதை பயன்படுத்தி காரியத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

இந்த வசிய சக்தி சாமியார்களிடம் இல்லையென்றால் வசீகரமிக்க ஆழகிய இளம் யுவதிகள் இந்த பயங்கரமான தாடிக்கும் மீசைக்கும் பயப்படாமல் வயப்பட்டு-இனங்குவார்களா? என்பதை நீங்களே பாத்து யோசித்துக் கொள்ளுங்கள். சாதாரணமான நம்மளாலேதான் அது முடியுமா? அதுக்கு மேலே நான் சொல்லமாட்டேன்.

ரஷ்யாவின் ஜார் சக்கரவர்த்தியே வெறும் பொம்மையாக்கி அவரை ஆட்டிப் படைத்த ரஷ்புட்டின் என்ற ராஜகுருவுக்கு இந்த மெஸ்மாரிச சக்தி இருந்ததாகவும் அவனை ஒழித்துக் கட்ட எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் கடைசியில் ஜார் மன்னரின் குடும்பத்தினரே அவனை விருந்துக்கு அழைத்து துப்பாகியே அவன் கையில் கொடுத்து தன்னை தானே சுட்டுச் சாகும் படி கூறினார்கள். அதை மறுத்த அவன் கையிலிருந்த துப்பாகியே வேறு ஒருவன் பிடுங்கி ரஸ்புடினை சுட்டுக்கொன்றான். ரஷ்ய மொழியில் ரஸ்புடின் என்றால் Dirty Dog என்றுபொருளாம்?!

அரச மாளிகை நுழைவுக்கு முன் ரஸ்புடின் ஆடு மாடுகள் திருடியும் வழிப்பறி செய்தும் காலம் போக்கினான். இப்படியே போனால் கட்டு படியாகாது! ‘Track மாத்தி புடிச்சா புளியங்கொப்பை புடிக்கணும்' என்று மாற்றியோசித்தான். கிடைத்தது விடை!

ஆறு மாசமா சேவிங்கும் செய்யாமல் முடியும் வெட்டாமல் சலூன் பக்கமே தலை வைச்சுபடுக்காமல் இருந்தான். ஒரு நாள்அவன் கண்ணாடியே பாத்தபோது அவனுக்கே ஆச்சரியம்'. ரஷ்யானந்த சாமிஜி' போலவே பொலிவான தோற்றத்தில் தாடி-குடிமியோடு கண்ணாடியில் நின்றான்!.

அடுத்த கனமே இடுப்பில் காவித் துணி கட்டி ரஷ்யாவின் அரச மாளிகை கதவை தட்டினான். காவித் துணிக்கு கதவு திறக்க மறுக்குமா?

அடுத்த கனமே திறந்தது கெர்மிளின் கதவு.

ரசியவின் அரச மாளிகை பிரவேஷம் கிட்டியது. போடவேண்டிய வேஷம் போட்டால் பெரிய இடத்து பிரவேஷம் தானாகவே கிட்டும்!

புகுந்தவன் மன்னரையும் மன்னரின் மனைவியேயும் கைக்குள் போட்டுக் கொண்டு ''தான் சொன்னதே சட்டம் ! இட்டதே கட்டளை!'' என்று நாட்டையே ஆட்டி வைத்தான்.

ஊழல் ஊட்ட சத்துணவு உண்டு உப்பியது. இப்போது ரஹ்புடின் ஆலமரத்தை அண்டுன பல்லி ! எந்தக் கவலையும் இல்லை!

History repeat itself, ரஸ்புடின் ஸ்ட்யிலே கோட்டைக்குள் நுழைந்தவர்களுக்கெல்லாம் அடிக்குதையா ராஜ யோகம்!

வேசங்கள்தான் மாறுதே தவிர மேட்டர்களில் மாற்றமே இல்லை; எல்லாம் ஒன்னுதான்!. அதை அப்படியே உட்டுட்டு நமது பிரச்சனைக்கு வருவோமே!

மருத்துவ நோக்கில் கண் பற்றிய விஷயங்கள் தவிர கண்ணின் மற்றொரு சக்தியான மெஸ்மரிசம் பற்றி நிறைய புத்தகங்கள் [ஆங்கிலத்தில்] உண்டு!.


கம்புயூட்டரில் பார்த்தல் தெரியும் அந்த புத்தகங்களின் சாராம்சத்தையும் அ.நி யில் எழுதலாம். பயனுடையதாய் இருக்கும் இது ஒரு வேண்டுகோளே தவிர வற்புறுத்தல் அல்ல!

S. முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

Ebrahim Ansari said...

கடந்த இருவாரங்களாக கருத்துப் பெட்டகத்தில் தம்பி மன்சூரைக் காணாமல் கண்கள் இரண்டும் தேடின.

ஆனால் இன்று காதுகளுக்கு முதலில் அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு அலைபேசி. எடுத்தால் ஸலாம் சொல்லி முடித்ததும் காக்கா நான் அதிரை மன்சூர் பேசுகிறேன் என்கிற இன்ப அதிர்ச்சி.
வந்து இருவாரங்களாகிறதாம்.
நேரில் வந்து பார்ப்பதாக அன்பாக சொல்லிவிட்டு அதன்படியே வந்து பார்த்து ஒன்றாக மக்ரிப் தொழுதுவிட்டு சற்று முன் பிரிந்து சென்றார்.

அதிரை நிருபர் ஈட்டித்தந்த அளப்பரிய அன்பு நெஞ்சங்களில் ஒன்று.

பகிர்வதில் ஆனந்தமடைகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு