Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கச் சென்றனர்; துடிக்கக் கொன்றனர்!! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | October 11, 2013 | , , , ,


படிக்கவே அனுப்பிப் பெற்றோர்ப் பயத்துடன் இருக்கும் ஆசை
அடிக்கவா அறிவை ஊட்டி அனுதினம் வளர்த்தார் ஆசான்?
வெடிக்குதே மனமும் ஏனோ விடியலின் சமயம் செய்தி
படித்ததும் எனக்கும் தானே படிப்பவர் செயலை எண்ணி

அறிவிலார் நிகழ்த்தும் பாவம் அனைத்தையும் படித்துப் பார்த்தால்
அறிவுளோர் அடைவர் சோகம்; அவர்களின் குறைகள் என்ன?
நெறிகளை முறையாய்க் கற்றால் நிலத்தினில் குருதி சிந்தி
வெறியுடன் அலைந்துக் கொல்லும் வெகுளியும் வருமா முந்தி?

தடியுடன் அரிவாள் கொண்டு தலையினை உடனே வெட்டி
முடிவுரை எழுதிச் சென்று முடிவிலே அவர்தம் பெற்றோர்
முடிவிலா இருளில் வாழ முடிந்ததே இவர்கள் கற்றப்
படிப்பினில் இருந்து நாமும் படிப்பினைப் பெறுவோம் இன்றே!

தவறுகள் நடக்கா வண்ணம் தணிந்துதான் தடுத்தார் ஆசான்
கவலைகள் பயமும் இன்றிக் கலைகளாய்க் கொலையும் ஆச்சு
அவலமும்  வருதல் நோக்கி அமைதியாய் நடந்தால் என்ன?
எவருமே உதவ மாட்டார்  இனிவரும் பலன்தான் என்ன?

எழுத்தினை அறியச் செய்த இணையிலா அறிஞர் ஆசான்
கழுத்திலே அரிவாள் வைக்கக் கடுமனம் வருதல் மோசம்
அழுத்திடும் விழியில் பொங்கும் அழுகையில் எழுதிப் பாட
வழுத்தியே விளிக்கும் ஆசான் வலியினை நினத்துப் பார்க்க!
 
தியாகமும் நிரம்பச் செய்து தினம்தினம் வறுமை தாங்கி
வியாதிகள் பெருகக் கண்டும் விடியலாய் உனையே ஏங்கி
மயானமும் அழைக்கும் காலம் வரைக்குமே பொருளை ஈட்டி
நியாயமாய் அளித்த பெற்றோர் நினைவினில் வராமல் போச்சே!

படித்துநீ பெறுதல் பட்டம் படித்திட விரும்பும் பாரும்
துடித்திடும் கொலையைக் கற்கத் துணையது எவரோ கூறும்?
குடித்திடும் மதுவா? உள்ளம் குடிபுகும் விழியாள் தானா?
கெடுத்திடும்  கொலைவெறி உன்னில் கொணர்ந்திட வளர்த்தாய்த் தானாய்!  

“கவியன்பன்” கலாம்

17 Responses So Far:

sabeer.abushahruk said...

கவியன்பன்,

கவிதை அருமை. கவிதையில் கவலையும் கல்வி கற்றலின் நிலைமையும் அப்பட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நெல்லைதான் அதிகம் படித்தவர்களைக் கொண்ட மாவட்டம். அவர்கள் ஏனோ அறிவால் அணுக வேண்டியவற்றை அரிவாலேயே அணுகுகின்றனர்.

வாழ்த்துகள்.

Ahamed irshad said...

கவிதையில் சிறப்பா சொல்லியிருக்கீங்க காக்கா... வேதனைதான் இச்சம்பவம்..

Ebrahim Ansari said...

ஒரு பெண்ணை கேலி செய்ததர்காக இடை நீக்கம் செய்யப்பட ஒரு தொல்லையாகப் பிறந்த ஒரு பிள்ளை யுடன் இன்னும் இரண்டு தொல்லைகள் சேர்ந்து இதைச் செய்து இருக்கிறார்கள்.

தவறான நடத்தியுள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட கல்வி நிலையங்களில் கவுன்சளிங்க் அவசியம் தேவை. இது ஒரு மன நலம் சார்ந்த பிரச்னை. ஆனால் இன்று மாறிவரும் சூழ்நிலைகளை , மாணவ- ஆசிரியர்களின் உறவுகளை , கல்வித்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

ஒரு சோகத்தை - சமூக அவலத்தை- தனது வார்த்தை வங்கிகளால் வடித்துத்தந்துள்ள கவியன்பன் கலாம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.

crown said...

தடியுடன் அரிவாள் கொண்டு தலையினை உடனே வெட்டி
முடிவுரை எழுதிச் சென்று முடிவிலே அவர்தம் பெற்றோர்
முடிவிலா இருளில் வாழ முடிந்ததே இவர்கள் கற்றப்
படிப்பினில் இருந்து நாமும் படிப்பினைப் பெறுவோம் இன்றே!
------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிதை வரிகளின் வலிமை அந்த ஆசான் அடைந்த வலியையும், பெற்றோர் பெற்ற வலியையும் சொல்லுதல் சிறப்பு!. நொடியினில் முடிந்த உயிர் இனி வரும் காலமெல்லாம்,யாவரும் மடியினில் உயிரை முடிந்தா வரமுடியும்>???


crown said...

படித்துநீ பெறுதல் பட்டம் படித்திட விரும்பும் பாரும்
துடித்திடும் கொலையைக் கற்கத் துணையது எவரோ கூறும்?
குடித்திடும் மதுவா? உள்ளம் குடிபுகும் விழியாள் தானா?
கெடுத்திடும் கொலைவெறி உன்னில் கொணர்ந்திட வளர்த்தாய்த் தானாய்!
-------------------------------------------------
மதுவோ அல்லது மாதுவோ? எதுவோ காரணம் என்றாலும் இது முறையா? சரியா ? முன்னொருகாலம் அது உயிர் காப்பான் நண்பன் ,இக்காலம் உயிர் கேட்பான் நண்பன் காலம். பெற்றவர் மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சொல்வார்கள் இன்றைய பிள்ளை மனம் கொல்லுன்னு சொல்லுது காரணம் சினிமா என்னும் பித்து பிடிக்கவைக்கும் கலாச்சாரம்.

crown said...

முன்னோரு காலம் ஆசிட் எங்கே கிடைக்கும் என்றால் பள்ளிக்கூட, கல்லூரி ஆய்வு கூடங்களில் என அறியப்பட்டது இப்பொழுது பெரும்பாலான இளைஞர்கள் கையில் அது எந்த நேரமும் இருப்பதும் அதனால் ஏற்படுத்தபட்ட கொலைவெறிதாக்குதலும் அதிகம்,அதிகம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அஸ்ஸலாமு அலைக்கும். கவிதை வரிகளின் வலிமை அந்த ஆசான் அடைந்த வலியையும், பெற்றோர் பெற்ற வலியையும் சொல்லுதல் சிறப்பு!. நொடியினில் முடிந்த உயிர் இனி வரும் காலமெல்லாம்,யாவரும் மடியினில் உயிரை முடிந்தா வரமுடியும்>???//

அடேய் அடேய் கிரவ்னு... - அருமைடா(ப்பா) !

கவிதை வரிகளின் வலிமை
அந்த ஆசான் அடைந்த வலியையும்,
பெற்றோர் பெற்ற வலியையும்
சொல்லுதல் சிறப்பு!.

நொடியினில் முடிந்த உயிர்
இனி வரும் காலமெல்லாம்
யாவரும் மடியினில் உயிரை
முடிந்தா வரமுடியும்>???

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரே!

நெல்லையின் மண்ணில் சோகம் நிகழ்ந்ததைக் கேட்டுத் துன்ப
எல்லையைத் தொட்டு மீண்டேன் ; எழுதிட முனைந்தால் ஏதும்
சொல்லையே காணேன்; இங்குச் சூழ்ந்தயிக் காலம் நன்றாய்ப்
பல்லையே காட்டி என்னைப் பரிகசிப் பதனைப் பார்த்தேன்.

காலத்தின் கோலத்தைக் கவிதையில் சொல்ல வந்தேன்; இச்சோகத்தை எழுதும் இக்கவிதையில் வாழ்த்துகள் ஏற்பதை விட மாணவர்களின் இந்தக் கொலைவெறியை மட்டும் எண்ணிப்பார்க்கிறேன்.

உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

KALAM SHAICK ABDUL KADER said...

காலத்தின் கோலத்தைக் கவிதையில் சொல்ல வந்தேன்; இச்சோகத்தை எழுதும் இக்கவிதையில் வாழ்த்துகள் ஏற்பதை விட மாணவர்களின் இந்தக் கொலைவெறியை மட்டும் எண்ணிப்பார்க்கிறேன்.

“கொலவெறிக் கொலவெறி” என்று பாட வைத்து மாணவர்களைப் கொலைவெறியர்களாக மாற்றியதற்குத் திரைப்படங்களும் குற்றவாளிகளே; நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைக் கெட்ட மானிடர்களை நினைக்கையிலே!

மூத்த சகோதரர்- முனைவர் இப்றாஹிம் அன்சாரிக் காக்கா, மகுடக் கவிஞர்க் கிரவுனார், அன்பு நெறியாளர் அபுஇபுறாஹிம் ஆகியோரின் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

KALAM SHAICK ABDUL KADER said...

\\வேதனைதான் இச்சம்பவம்\\ என்னும் கருத்துடன் பின்னூட்டமிட்ட அன்புச் சகோதரர் இர்ஷாத் அவர்களுக்கு என் நன்றி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வேதனையை கவிப்படுத்தியமை அருமை!

பாதிக்கப்பட்ட அன்னாரின் குடும்பத்திற்கு அல்லாஹ் நல்லதை கொடுத்து இனி இதுபோல் இல்லாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!

Shameed said...

சமூக அக்கறை உள்ள கவிதை

KALAM SHAICK ABDUL KADER said...

விளைபயிர்கள் நன்குவாழ்ந்து
வேர்பிடித்து மலர்ந்து காய்க்க
களையெடுத்தல் உழவனுக்குக்
கடமையில்லையா? விளைந்த
பயிர்கள்தம் நிலைகுலைந்து
பண்புகெட்டுக் காப்பவனின்
உயிர் களையும் உரகமாயின்
உலகம் தாங்குமா? இறைவ!

மனம் வருந்தி இறைஞ்சும் உங்களுகு மிக்க நன்றி. இலண்டன் இளங்கவி ஜாஃபர் ஸாதிக் அவர்களே!

KALAM SHAICK ABDUL KADER said...

கல்வியில் நுழைந்த தீமை
,,,,,,கல்வீச்சாய் ஆன பின்னும்
செல்வத்தைச் சேர்த்தல் மட்டும்
.......ஜீவனம் என்று செய்தார்
சொல்வித்தை காட் டி யோர்பின்
,,,,,சுழன்றனர் உழன்றார் மக்கள்
நல்லதும் தீதும் இல்லை
......என்றவர் ஆள லானார்

இத்தனை தீங்கும் நாட்டுள்
......இருப்பதைச் சகித்துக் கொள்ளும்
மெத்தனப் போக்கில் சென்றோர்
......வெட்கத்தை விட்டு விட்டார்
சத்தியம் அஹிம்சை எல்லாம்
.....சலுகைக்குள் அடங்கிப் போக
எத்திடும் பணத்தின் முன்னே
.....எல்லாமே முடங்கிப் போச்சு

அதனால்தான் எதையும் ஏற்கும்
...... அடிமையாய் இளைஞன் ஆனான்
சதைஆசை பணத்தா சைக்குள்
..... சரிந்துநம் கலைகள் வீழ
அதிர்ச்சியைத் தாங்கும் போதை
....... ஆழத்துள் அனைத்தும் சிக்க
சதிச்செயல் கொலைகொள் ளைகள்
......சமயத்தில் எழநாம் வீழ்ந்தோம்


சமூக அக்கறையும் சாடலும் தான் பொதுவாகப் பாடல் நதியின் அக்கரை என்பதை உள்வாங்கிக் கருத்தளித்த அன்புச் சகோதரர் ஷா.ஹமீத் அவர்களுக்கு நன்றி.

KALAM SHAICK ABDUL KADER said...

\\கனத்த இதயத்தோடு கிளம்ப எத்தனிக்கையில் நம் கைபற்றிக் கொண்ட சுரேஷின் மகள் அக்‌ஷயா, "அங்கிள்… அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே.. ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா, அப்பா இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?" என்று கேட்ட அந்த சின்னஞ்சிறு குழந்தையின் முகம் ஏனோ இன்னும் நெஞ்சை வீட்டு நீங்க மறுக்கிறது.\\

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article5228553.ece#comments

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Kaviyanban Abul Kalam,

An empathetic poem. There are corruptions in the characters of few human. Thats the reason, these kinds of chaos and unjustice to others.

May Allah guide us to the right path and save us from evils.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

KALAM SHAICK ABDUL KADER said...

Wa alaikkum Salam, Brother Ahmed Ameen,

jazakkalllah khairan, Thanks for your comments.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு