நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் - 16. 15

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், அக்டோபர் 31, 2013 | , , , , ,

காங்கிரஸ் கட்சியின் மீது நாட்டின் பொருளாதாரத்தை குட்டிச்சுவர் ஆகிவிட்டதாக குற்றச்சாட்டு . பி ஜே பி மீது மதச்சார்பின்மையை கடைப்பிடித்து ஆர் எஸ் எஸ்  போன்ற  அழுக்கு மூட்டையைக் கட்டிக் கொண்டு அழும் கட்சி என்ற குற்றச்சாட்டு. 

இவை இரண்டுக்கும் மாற்றாக இன்னொருவர் வந்தால் நலமாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கும் வேளையில் அந்த இன்னொருவர் யார்? மூன்றாவது அணியாக இருந்து தேர்தலில் போட்டி இடவும் வெல்லவும் ஆளவும் வலிமையையும் செழுமையும் படைத்துள்ள இயக்கம் எது ? தலைவர் யார்? அப்படி ஒரு மூன்றாவது அணி அமைவது சாததியமா? அமைந்தால் வெல்லுமா ? இத்தனை ஆண்டுகாலம் நாட்டை கட்டி ஆண்ட காங்கிரசையும் இன மத உணர்வுகளை மக்களிடையே தூண்டிவிட்டு ஆட்சிக்கு வரத்துடிக்கும் கார்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையான பா ஜ கவையும் எதிர்த்து  நின்று வெல்லும் திராணி உள்ள கட்சி எதுவாக இருக்கும்? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் நமது அரசியல் இதயத்தில் லப் டப் என்று அடித்து எழுகின்றன. ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

முதலாவதாக, சென்ற அத்தியாயத்தில் சுட்டிக் காட்டியபடி சுதந்திரத்துக்குப் பிறகு,  காங்கிரசுக்கு அடுத்த நிலையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்திய அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக ஆட்சியைப் பிடிக்கக் கூடிய சக்தியாக உருவாகியிருக்க வேண்டியவர்களாக இதுவரை வளர்ந்து இருக்கலாம். கண்ணெதிரே    தென்பட்ட காட்டுக் கருவைக் கூட பெரும் காடாக வளர்ந்துவிட்டது. ஆனால் கம்யூனிஸ்டுகள் வளரவில்லை.  துரதிஷ்டவசமாக அவர்கள் அரசியலில் அடுத்த நிலையை  அடையமுடியவில்லை. கேரளம்,மேற்கு வங்கம், திரிபுரா, பீஹார், பஞ்சாப், ஆந்திரம், தமிழ்நாடு எனச் சில மாநிலங்களில் கணிசமான செல்வாக்கு இருந்தும் இதர மாநிலங்களில் பரவவும் இல்லை. அதற்கான செயல்திட்டமும் இருக்கவில்லை. இதற்கு மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் அந்தக் கட்சிகளில் இல்லாததோ அல்லது தாங்கள் கட்டிக் காத்த கம்யூனிச கோட்பாடு தான் பிறந்த இடமான சீனாவிலும் வளர்ந்த இடமான ரஷ்யாவிலும் உயிர் மூச்சை விட்டதும் கூடக் காரணமாக இருந்து இருக்கலாம்.   நக்சல்பாரிகள் போன்ற தீவிரவாதக் கும்பல் உருவாக  அடிப்படையில் கம்யூனிச சித்தாந்தங்களே காரணம்  என்று மக்கள் நினைத்ததும் கம்யூனிஸ்ட்களின் மீது மக்களுக்கு ஒரு ஈர்ப்புக் குறைவானதற்கு காரணமாக இருந்து இருக்கலாம். 

தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் இருந்த இடதுசாரிகள் புதிதாக வந்த தி.மு.கவிடம் அதை இழந்துவிட்டு திமுகவுடன் ஒரு நோஞ்சான் கூட்டாளியாக இருக்கும் நிலைக்குப் போய்விட்டார்கள். தொழிற்சங்க இயக்கத்தில் காட்டிய தீவிரத்தை அரசியலில் இடதுசாரிகள் காட்டாததை தமிழ்நாட்டில் திமுக அழகாகப் பயன்படுத்திக் கொண்டது.  தி.மு.க 1949ல் உருவானது முதல் ஆட்சியில் அமரும்வரை தொழிற்சங்க இயக்கமே நடத்தியதில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் தி மு கவும்  தொழிற்சங்கம் தொடங்கியது. இது கம்யூனிஸ்டுகளின்  இடதுசாரி தொழிற்சங்கத்தை உடைக்கத்தான் என்பது அரசியல் நோக்கர்களுக்கு கண்கூடாகத் தெரிந்த கதை.  இதற்கு தூபம் போட்டது சென்னை சிம்சன் தொழிற்சாலைத்     தகராறுகளாகும். தங்களது தொழிற் சங்கங்களின் வளர்ச்சியை கவனித்த அளவுக்கு கம்யூனிஸ்டுகள் அரசியலை கவனிக்க வில்லை. தமிழ்ச் சமூகத்தின் உணர்வுபூர்வமான  பிரச்சினைகளான சாதி, மொழிப் பிரச்சினைகளில் தி.மு.க காட்டிய ஈடுபாட்டை கம்யூனிஸ்டுகள் காட்டவில்லை. அவர்கள் கூட்டத்தில் பேசிய பூஷ்வா, வர்க்கபேதம் ஆகிய வார்த்தைகள் மக்களுக்கு விளங்கவில்லை. அவற்றை கவர்ச்சியாக  விளக்க அவர்களால் முடியவில்லை. கம்யூனிஸ்டுகளுக்கு திரைத்துறையில் ஈடுபாடு இல்லை. ஒரு சிகப்புத்துண்டை தோளில் போட்டுக் கொண்டு ஒரு கொடுவா மீசையை வைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகப் போயிற்று என்றே எண்ணினார்கள். கம்யூனிஸ்டுகள் பற்றி இன்னொரு நகைப்புக்கிடமான செய்தியும் உண்டு . கம்யூனிஸ்டுகள் தகரம் கண்டுபிடிக்கப் படும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் என்று நக்கலடிக்கபடுவார்கள்.  அதைவிட முக்கியமாக, முதலாளித்துவப்  பொருளாதார முறையை ஆதரித்த ராஜாஜி, காமராஜர் போன்றோர் கம்யூனிஸ்ட்டுகள் வளர்வதை விட கழகம் வளர்வது தங்கள் கொள்கைகளுக்கு  பெரிய ஆபத்தை விளைவித்து விடாது என்று  கணக்குப் போட்டு இருந்தார்கள். .

அனைத்திந்திய அரசியலிலும் இடதுசாரிகள் பலமடையமுடியாமல் பலவீனமாகவே இருந்ததற்கு இன்னொரு காரணம், காங்கிரசுக்கு எதிரான இதர சக்திகளுடன் அவர்கள் கோட்பாட்டுரீதியாகக் கை கோர்க்கத் தயங்கினார்கள். சோஷலிஸ்ட்டுகள் இந்தி பேசும் மாநிலங்களில் கணிசமான செல்வாக்குடன் இருந்தபோதும் அவர்களுடன் கம்யூனிஸ்டுகள் அன்றே  அணி சேரத் தயங்கினார்கள். சோஷலிஸ்ட்டுகளை விட காங்கிரசே மேல் என்று கருதும் பிரிவுகளும் கம்யூனிஸ்டுகளுக்குள்  இருந்து வந்தன. அப்படி சில தலைவர்கள் காங்கிரசிலேயே இணைந்தார்கள். கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு ரஷ்யா சீனா என்று புகழ் கீதம் பாடுவதிலேயே பொழுது போக்கினார்கள். 

ஆனால் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய இந்துத்துவ கட்சிகளுக்கு கம்யூனிஸ்டுகளைப் போல  மற்றவர்களுடன் கை கோர்ப்பதில் தயக்கமோ மயக்கமோ  இருக்கவில்லை. ஜனசங்கம்,  பல்வேறு சோஷலிஸ்ட் கட்சிகளுடன் நட்பாக இருந்தது. ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் எழுபதுகளின் இறுதியில் தொடங்கியபோது அதில் இந்துத்வா கட்சிகள் தீவிரமாகப் பங்கேற்றது. இந்திரா 1977ல் நெருக்கடி நிலையை முடித்துக் கொண்டு தேர்தல் அறிவித்தபோது அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியில் ஜனசங்கம் தன்னையும்  அதில் சங்கமம் ஆக்கிக் கொள்ளத்தயக்கம் காட்டவில்லை.  அதனால்தான் மொரார்ஜி பிரதமரானதும் வாஜ்பாயியும் அத்வானியும் மிக முக்கியமான அமைச்சகப் பொறுப்புகளைப் பெற முடிந்தது.

ஜனதா ஆட்சி கவிழ்ந்ததற்கு மொரார்ஜி-சரண்சிங்-ஜெகஜீவன்ராம் பதவி அதிகாரப் போட்டி மட்டுமே காரணம் என்று வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே இன்று பி.ஜே.பி ஆதரவாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது. பிரதானமான காரணம் ஜனதா கட்சியிலும் உறுப்பினராக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்-சிலும் உறுப்பினராக இருக்கலாமா என்ற இரட்டை உறுப்பினர் பிரச்சினையாகும். இரட்டை உறுப்பினராகத்தான் இருப்போம் என்று அத்வானியும் வாஜ்பாயியும் பகிரங்கமாகவே சொன்னார்கள். இதை சோஷலிஸ்ட்டுகள் எதிர்த்தார்கள். மொரார்ஜி அரசு கவிழ்ந்தது. இப்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியை தீவிரமாக ஆதரிக்கும் அரசியல் முகவர் சுப்ரமணியன் சுவாமி அப்போது இரட்டை உறுப்பினர் முறையை எதிர்த்தார் .

ஜனதாவில் கரைந்த ஜனசங்கம் மறுபடியும் 1980ல் வெளியே வந்து பாரதிய ஜனதா என்று புதிய  அவதாரம் எடுத்தது. இப்போது கூட தேவைப்பட்டால் பாரதிய ஜனதாவைக் கலைத்துவிட்டு நரேந்திர மோடிக்காக, கட்சிக்கு இன்னொரு பெயரைச் சூட்டிக் கொள்ளலாம் என்றால் அதைச் செய்ய ஆர்.எஸ்.எஸ். தயங்காது. கம்யூனிஸ்டு  கட்சிகளுக்கு இப்படி பல அவதாரங்கள் எடுக்கும் வாய்ப்பு இல்லை. வெவ்வேறு கட்சிகளுடன் போய் கலந்து பிரிந்து தன் வலுவைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்து கொள்ளும் அரசியல் கோட்பாடு இல்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் எண்பதுகளின் இறுதியில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அரசியலில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்திரா காந்தி கொல்லப்பட்டார். எம்.ஜி.ஆர் காலமானார். டெல்லியில் காங்கிரஸ் பலவீனமான நிலையில் ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் இருந்த வரை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருந்த கலைஞர் கருணாநிதிக்கு இன்னொரு வாய்ப்பு கிட்டியது. காரணம் எம்.ஜி.ஆரின் கட்சிக்குள் ஏற்பட்ட தற்காலிகப் பிளவு. தி.மு.கவை உடைக்க எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய காங்கிரஸ், இந்திராவின் அரசியல் தேவைகளுக்கேற்ப மாறி மாறி தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்று ஆதரித்து வந்தது.

ராஜீவின் வருகை எல்லா கட்சிகளையும் சிக்கலில் ஆழ்த்தியது. ராஜீவ் பிரதமரானபோது அவருடன் பல இளம் தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றார்கள். இந்திய அளவில் முதல் முறையாக பிரதமர் பதவிக்கும் கட்சித்தலைமைப் பதவிக்கும் 40 வயதில் ஒருவர் பொறுப்பேற்றது அதுவே முதல் முறை. இதர கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் 60, 70 வயதைக் கடந்தவர்கள். திமுகவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதைப்போல இத்தனை அதிக வயதுள்ளவர்கள் மட்டுமே பதவியில் இருந்தால் தேசியக் கொடிகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அரைக்  கம்பத்தில் பறந்துதான் இருக்கும்.  ராஜீவ் மட்டும் 1991ல் கொல்லப்படாமல் இருந்திருந்தால், மறுபடியும் இந்திய அரசியல் அடுத்த இருபதாண்டுகளுக்கு வயதானவர்களின் கைகளுக்குப் போகாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நீயா நானா போட்டிகளுக்கும் தேவை இருந்து இருக்காது. 

1984 தேர்தலில் ராஜீவின் காங்கிரஸ் 404 இடங்களுடன் மாபெரும்  வெற்றி பெற்றது. தோழமைக் கட்சியான அ.இ.அதி.மு.கவுக்கு 12 எம்.பிகள். தி.மு.க பெற்றவை வெறும் இரண்டு. பி.ஜே.பி பெற்றதும் இரண்டுதான். பல்வேறு இடதுசாரி கட்சிகள் சேர்ந்து மொத்தமாக 33 இடங்களைப் பெற்றன. ஆனால் ஒற்றைக் கட்சியாக ஆந்திர மாநிலக் கட்சி தெலுங்கு தேசம் என் டி ராமராவ் தலைமையில் 30 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாகியது. நேரு காலத்துக்குப் பின் மறுபடியும் காங்கிரஸ் பெரும்பலத்துடன் விளங்கியது நேருவின் பேரன் ராஜீவ் காலத்தில்தான்.  எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலை. ஆனால் டெல்லி அரசியலில் இனி மாநிலக் கட்சிகளுக்கு முக்கிய இடம் இருக்கப் போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாக தெலுங்கு தேசத்தின் வருகை இதுவரை இந்திய அரசியல் கண்டிராதது.

இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் ஆட்சியின் பல்வேறு ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கின. நீர்மூழ்கிக் கப்பல் பேரம், ஃபோபர்ஸ் பீரங்கி பேரம் போன்றவை. இளைய தலைமுறையிடம் நேர்மையையும் மாற்றத்தையும் எதிர்பார்த்த மக்கள் மத்தியில் இது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இன்றைய ஊழல்களுடன் ஒப்பிட்டால் போபர்ஸ் பீரங்கி பேரம் ஜுஜுபிதான்.  வெறும் 64 கோடி ரூபாய்கள்தான். பணவீக்கக் கணக்கில் பார்த்தால் கூட இன்றைய மதிப்பு அதிகபட்சம் 640 கோடி. ஆனால் இன்றோ  2 G , நிலக்கரி, காமன்வெல்த் என்று ஊழல் மரத்துக்கு  பல கிளைகள் முளைத்துவிட்டன. 

ஆனால் போபர்ஸ் பேரம் அரசியலில் ஏற்படுத்திய மாற்றம்தான் இன்று வரை முக்கியமானது. இதனால் ஏற்பட்ட உரசலால்தான் வி.பி சிங் அமைச்சரவையில் இருந்தும் கட்சியில் இருந்தும் வெளியேறினார்.  இனி இந்திய அரசியலில் எந்தத் தனிக்கட்சியும் பெரும்பான்மை பெறமுடியாது; கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன்தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலையை இந்த மாற்றம் எற்படுத்தியது.

ராஜீவ் ஆட்சியின் ஊழலை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியே வந்த வி.பி.சிங் காங்கிரசுக்கு எதிரான தேசிய முன்னணியை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்ட  நாடுதழுவிய மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்த  கூட்டணி. 1984 லேயே இப்படி ஒரு கூட்டணியை உருவாக்க என்.டி.ராமராவ் முயன்றார். விஜயவாடாவில் அவர் கூட்டிய மாநாட்டில் எம்.ஜி.ஆர், பிஜு பட்நாயக், பரூக் அப்துல்லா, மேனகா காந்தி எல்லாம் கலந்துகொண்டனர். ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. 1987 ல் வி.பி.சிங் உருவாக்கிய தேசியமுன்னணியில் ஜனதா தளம், சோஷலிஸ்ட்டுகள், தி.மு.க, தெலுங்கு தேசம், அசாம் கண பரீஷத் ஆகியவை பங்கேற்றன. அரசுக்கு ,  வெளியிலிருந்து பி.ஜே.பி, மற்றும் இடதுசாரிகள் இரு தரப்பினரும் இந்த முன்னணியை ஆதரித்தனர்.

அடுத்த தேர்தல் 1989ல் நடந்தபோது தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஏறத்தாழ இந்த தேர்தலும் 1977 ஜனதா வெற்றி பெற்ற தேர்தல் போலவே அமைந்தது. வட மாநிலங்களில் காங்கிரசுக்கு வீழ்ச்சி. தென் மாநிலங்கள் காப்பாற்றின. சென்ற முறை 30 இடம் பெற்ற தெலுங்கு தேசம் இம்முறை இரண்டே இடம்தான் வென்றது. தி.மு.கவுக்கு ஒரு எம்.பி.கூட கிடைக்கவில்லை. அ.இ.அ.தி.மு.கவுக்கு 11.  வி.பி.சிங் பிரதமரானதும் தன் அமைச்சரவையில் ஒரு எம்.பி கூட வெல்லாத தி.மு.கவுக்கும் இடம் கொடுத்து முரசொலி மாறனை அமைச்சராக்கினார். மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பில் நமக்கு நம்பிக்கை உண்டென்றால் இப்படித்தான் செய்தாகவேண்டும் என்று ஒரு பேட்டியில்  அப்போது வி.பி.சிங் சொன்னார். இந்த தேர்தலில் லாபமடைந்தவர்கள் பிஜேபி 85 இடங்களையும்   இடதுசாரிகள் 52 இடங்களையும் பெற்றார்கள். 

எப்படி 1979ல் ஆர்.எஸ்.எஸ்-ஜனதா இரட்டை உறுப்பினர் பிரச்சினை ஜனதா ஆட்சியைக் கவிழ்த்ததோ அதே போல இந்த முறையும் ஆர்.எஸ்.எஸ். பிஜேபியின் மிரட்டல் போக்குடைய இந்துத்துவ திட்டங்களுக்கு வி.பி.சிங் அரசு பணிய  மறுத்ததால் இந்த ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டக் கோரி அத்வானி நடத்திய இயக்கத்தை தடுத்ததும், முதல்முறையாக மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரும் மண்டல் கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்தியதும் ஆர் எஸ் எஸ்ஸின் கைப்பாவையான பிஜேபிக்கு கோபமூட்டி அதன் காரணமாக ஒரு சிறந்த மனிதரான  வி.பி.சிங் உடைய ஆட்சியைக் கவிழ்த்தன.

பிஜேபி, காங்கிரஸ் அல்லாத சோஷலிஸ்ட்டுகள், உதிரி ஜனதாக்கள் மறுபடியும் பலவீனமாகின. 1989லிருந்து 1991க்குள் அவற்றை தற்காலிகமாக ஆட்சியில் அமர்த்தி வெளியிலிருந்து ஆதரித்து வேடிக்கை காட்டிப் பின்னர் கவிழ்ப்பதை காங்கிரஸ் செய்தது.

இவ்வளவு அரசியல் நடப்புகளிலும் பிஜேபி தன்னை ஒரு இரண்டாவது கட்சியாக நிலைநிறுத்த உதவியது. ஆனால் இந்தியப் பாராளுமன்றத்தின் வரலாற்றின் ஆரம்ப காலங்களில்  இரண்டாவது நிலையில் இருந்த கம்யூனிஸ்டுகள் வாயில் ஐஸ் கிரீம் வைத்து உறிஞ்சிக் கொண்டு இருந்தார்கள். மேற்கு வங்கமும்  கேரளமும்  திரிபுராவுமே அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவாகத் தெரிந்தது. இப்போது மூன்றாம் அணி அமைக்க மாநாடு போடுகிறார்களாம். விதைக்கிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுவடை காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு போவதுபோல்தான் இருக்கிறது கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கை. இப்படி மூன்றாவது அணியை அமைப்பதற்கு கம்யூனிஸ்டுகள் முன்னெடுப்பதே ஒரு பொருத்தமில்லாத செயலாகவே தோன்றுகிறது. காரணம் கம்யூனிஸ்டுகள் இந்த நாடு தழுவிய பகுதிகள் அனைத்திலும் காலூன்றவில்லை.

முக்கியமாக ஏழைகள் நிறைந்த பீகார் மாநிலத்தில் – தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நிறைந்த ஆந்திர மாநிலத்தில்- இந்தியாவின் வர்த்தகத் தலைநகரத்தை தன்னகத்தே வைத்து இருக்கும் மராட்டிய மாநிலத்தில் – இன்னும் ஒரிசா , மத்தியப் பிரதேசம், உ.பி போன்ற மாநிலங்களில் தங்களுடைய தடங்களை இவர்கள் சரிவரப் பதிக்கவில்லை.     இப்போது இவர்கள் முன்னெடுத்து வைத்திருக்கும் மூன்றாவது அணி என்கிற கோட்பாடும் கோஷமும் கூட மாடுகளின் மாநாட்டுக்கு மரவட்டையை தலைமை தாங்க அழைத்தது போலவும் ஆடுகளின் மாநாட்டுக்கு அணில் குட்டியை தலைமைதாங்க அழைத்தது போலவுமே இருக்கிறது. அத்துடன் இருக்கும் ஒரே ஒரு வடையின் மீது கண் வைத்துக் காத்திருக்கும் பல நரிகளை அழைத்து இருக்கிறார்கள். யார் வடையைக் கவ்வுவது என்கிற இவர்களது போட்டியில் இந்த மாநாடும் அந்த மாநாட்டின் நோக்கமும் வெற்றி பெறுமா என்பது உச்சகட்ட சந்தேகம். 

முலாயம் சிங் யாதவ்,  நிதிஷ் குமார், ஜெயலலிதா ஆகியோர் முக்கிய அழைப்பாளர்கள். இந்தப் பட்டியலில் மம்தா பானர்ஜி இருக்க முடியாது. காரணம் , மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் அரசியல் எலும்பை எண்ணி நொறுக்கியவர் மம்தா. மாயாவதியை அழைக்க முடியாது காரணம் முலாயம் சிங் கை நனைக்கும் பந்தியில் மாயாவதிக்கு இலை போட  இயலாது.  அதே போல கருணாநிதி வரும் இறந்த வீட்டுக்கு துக்கம் விசாரிக்கக் கூட  ஜெயலலிதா வரமாட்டார். தெலுங்கு தேசம் வரும் மாநாட்டுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வராது. இதே நிலைமைகள் காங்கிரசையும் பாரதீய ஜனதாக் கட்சியையும் ஒரு சேர எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளின் அஸ்திவாரம் உள்ள மாநிலங்களிலும் நின்று நிலவுகிறது. இந்த நிலையில் மூன்றாவது அணி அமைப்பது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகவே இருக்கும். சந்தை நேரம் முடிந்த பிறகு சரக்குகளை விற்பனைக்குக் கொண்டு வரும் யுக்தியாகவே இருக்கும். 

அதே நேரம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணி அமைய ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ,  ஏற்கனவே தமிழ்நாட்டை ஆண்ட கட்சி என்கிற முறையில்  அகில இந்தியாவில் இரண்டு அணிகளுள் ஒரு அணியாக இருக்கும் காங்கிரஸ் , தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்கலாம். இவ்வளவு காலம் மாறி மாறி நடந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் தீமைகளை தோலுரித்துக் காட்டுவதன் மூலமும் –  இருக்கும் உதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உண்மையான மதச் சார்பற்ற அணியை காங்கிரசின் தலைமையில் தமிழ்நாட்டில் மட்டுமாவது  அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

அகில இந்திய அளவில் கம்யூனிஸ்டுகள் முன்னெடுக்கும் மதச் சார்பற்ற அணியில் சேர்வதற்கு திமுகவுக்கோ அல்லது அண்ணா திமுகவுக்கோ முழுத்தகுதி இல்லை.  விட்டால் தங்களின் மீது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக வெற்றி பெரும் அணியின் பக்கம் சேர்வதற்கு தமிழகத்தின் இரு முக்கியக் கட்சிகளுமே தயாராகவே இருக்கும். அதற்கான காரணங்களை அடுக்குவதில் இருவருமே வல்லவர்கள். இதற்கு முன் இப்படி மத சார்பான பிஜேபியுடன் கூட்டுவைத்த  அனுபவமும் காங்கிரசுடன் கூட்டு வைத்த அனுபவமும் இவர்கள் இருவருக்குமே உண்டு. ஆகவே அமைக்க சாத்தியமற்ற மூன்றாவது அணியை அகில இந்தியாவைப் பொருத்தவரை ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டு , தமிழ்நாட்டைப் பொருத்தவரை காங்கிரஸ் மூன்றாவது அணியை அமைக்க முயற்சிக்கலாம். கம்யூனிஸ்டுகளையும் இந்த அணியில் சேர்க்கலாம். ஆனால் அதற்குமுன்  போயஸ் தோட்டத்தில் புல் அறுத்துக் கொண்டிருக்கும் தா. பாண்டியனின் கையில் இருக்கும் கதிர் அரிவாளைப் பிடுங்கிவிட வேண்டும். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.   

ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

15 Responses So Far:

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

இந்திய அரசியல் வரலாற்றையும் கட்சிகளின் பலம்- பலவீனங்களையும்
வைரம் நிறுக்கும் தாராசில் நிறுத்து வரி வரியாக சொன்ன இருவருக்கும் ஆளுக்கொரு 'டாக்டர்' பட்டம் கொடுக்கலாம். போயெஸ் தோட்டத்தில் புல் அறுக்கும் கதிர் அரிவால் நெல் அறுக்கப் போவதெப்போ?

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

نتائج الاعداية بسوريا சொன்னது…

அன்புக்காக்க இப்ராஹிம் அன்சாரி அவர்களே,

தங்களுக்கு பொருளாதாரமும் வரலாறும் தெரிந்ததைப்போல், இப்படி இந்திய அரசியலை அக்குவேறு ஆணிவேராக அலசும் தாங்கள் அரசியலில் அடியெடுத்து வைத்தால் ஒரு நல்ல எதிர்காலம் அரசியலில் ஆரம்பமாகும் என்று நினைக்கின்றேன்.

ஏன் தாங்கள் அரசியலில் கால் பதிக்கக்கூடாது?
சமூகத்திற்கு நல்லதை செய்ய அரசியலை தாங்கள் பயன் படுத்தலாமே !
தங்களை போன்ற சிந்தனை வாதிகளும் அரசியல் ஆழம் தெரிந்தவர்களும் வந்தால் அரசியலுக்கே பெருமை என்று நினைக்கின்றேன்.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//ஏன் தாங்கள் அரசியலில் கால் பதிக்கக்கூடாது?//

"பதிக்க" நினைத்தால்... நம்மில் மிதிக்க ஒரு இயக்கம் உருவாகுமே ! சரிப்பட்டு வருமா ?

نتائج الاعداية بسوريا சொன்னது…

//"பதிக்க" நினைத்தால்... நம்மில் மிதிக்க ஒரு இயக்கம் உருவாகுமே ! சரிப்பட்டு வருமா ?//
மிதிக்க நினைக்கப்படாதவர்கள் அரசியலிலேயே இல்லை.

அதுதான் அரசியல்.

அப்படி நினைப்பவர்களை நாமும் மிதித்துக்கொண்டு செல்லவேண்டியதுதான்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

சாக்கடைக்குள் புகாமலேயே அவைகளின் நாற்றங்களை தெளிவாக பகுத்துள்ளீர்கள்.

உங்களின் மேலான ஆராய்வுகள் சாக்கடைவாதிகள் தங்களை வளப்படுத்திக் கொள்ள நிச்சயம் உதவும்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

\\ சந்தை நேரம் முடிந்த பிறகு சரக்குகளை விற்பனைக்குக் கொண்டு வரும் யுக்தியாகவே இருக்கும். \\

\\போயஸ் தோட்டத்தில் புல் அறுத்துக் கொண்டிருக்கும் தா. பாண்டியனின் கையில் இருக்கும் கதிர் அரிவாளைப் பிடுங்கிவிட வேண்டும்\\

அப்பப்பா...!! கவித்துவம் நிரம்பி வழியும் தேனடையைச் சுவைத்தேன்!

கட்டுக்குள் வார்க்கும் மரபும் கவிதையென்றால், நச்சென்ற நாலுவரிகட்குள் அடக்கும் வார்த்தைகள் புதுக்கவிதையென்றால்,சுருக்கென்று தைக்கும் கருவை முத்தாய்ப்பாய் இறுதிச் சொல்லில் உட்கார வைப்பது கவிதையென்றால்,

இந்தக் கட்டுரையும் கவிதை தான் என்பேன்! வடிவம் எதுவானாலும், உணர்வில் உந்தப்பட்டு, உணர்வை உந்தித் தள்ளும் வரிகள் யாவும் கவிதைகளாய் இரசிக்கப்படும்.


இக்கட்டுரையும் கூட்டணி; கட்டுரையின் நோக்கமும் கூட்டணி வேண்டல் எனபதை வைத்துச் சிந்தித்தால் எனக்கொர் உண்மை விளங்கி விட்டது:

வெற்றி என்பதும் தனியாக முடியாதது; ஒருவருக்கொருவர் கூட்டணியாக ஒத்துழைத்தால் மட்டும் சாத்தியம்; இஃது என் வாழ்விலும் யான் கண்ட சத்தியம்.


m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

காக்கா உங்கள்
எழுத்து நடைக்கும்
எழுச்சி நடைக்கும்
எடைக்கு எடை
தங்கம் கொடுக்கனும் !
-------------------------------------------

கரு உருவானதும்
கட்டுரையாகிறது
கருவறை சென்றதும்
வரையரை மீறியவைகள்
தலைப்புச் செய்தியாகிறது !

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

இபுராஹீம் அன்சாரி காக்கா தங்களையும், பாரூக் காக்கா அவர்களையும் நேரில் வந்து சந்தித்து வந்ததற்கு நன்றி தெரிவித்து என்னுடைய் கண்கள் இரண்டும் தொடரில். பின்னூட்டம் தந்திருந்தீர்கள் அதற்கும். என்னுடைய கண்கள் இரண்டும் தொடர் 7, 8, 9 ஆகிய பதிவுகளுக்கு பின்னூட்டமிட்ட அனைத்து சகோதரர்களுக்கும் பதில் எழுதும் வாய்ப்பை பெறவில்லை. என்பதை இதன் மூலம் தெரிவிப்பதோடு அனைத்து நல் உள்ளங்கலுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மிகவும் அற்புதமாக கடந்த கால அரசியல் நிகழ்வுகளை. படம் பிடித்து காட்டி இருந்தீர்கள் மிகவும் அற்புதமாக இருந்தது

அதிரை மன்சூர்

sabeer.abushahruk சொன்னது…

அரசியல் சதுரங்கம் விளங்குகிறது. விலாவாரியாக விளங்குகிறது.

இவ்வளவு அரசியல் ஞானம் எனக்கிருந்திருந்தால் நானும் கவுரதையாக இங்கிலீஷில் பென் ட்ரைவ் ஊழல் அல்லது ஃபேஸ் புக் ஊழல் என்று ஏதாவது ஒரு ஸ்டைலான ஊழலை பெயரோடு இணைத்துக் கொண்டு செம கெத்தாக வலம் வந்து கொண்டிருந்திருப்பேனோ?

கம்யூனிஸ்ட்களுக்காக ரொம்ப நல்லவங்களாகவல்லவா இருக்காய்ங்க!

நேற்று முடிந்து இன்று துவங்கும் சாயல் தெரிகிறது நாளையை எப்படியெல்லாம் அனுமானிக்கப் போகிறீர்களோ காக்காஸ்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா. காக்காமார்களே..

Ebrahim Ansari சொன்னது…

//எடைக்கு எடை
தங்கம் கொடுக்கனும் !// இப்படீன்னு தெரிஞ்சு இருந்தா ஆறுகிலோவை குறைத்து இருக்க வேண்டாமே என்று அடிமனது சொல்கிறது தம்பி அபூ இபு.

Ebrahim Ansari சொன்னது…

//நேற்று முடிந்து இன்று துவங்கும் சாயல் தெரிகிறது நாளையை எப்படியெல்லாம் அனுமானிக்கப் போகிறீர்களோ காக்காஸ்.//

தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,

நேற்று தென்றலாக இருந்தது - இன்று புயல் வீசுகிறது - நாளை சூறாவளியும் சுனாமியுமாக இருக்கலாம்.

மத உணர்வுகளைக் கிளப்பிவிட்டு மக்களைக் கூறு போடும் நிலைமைகளின் ஆரம்பம் தீவிரமாக இருக்கிறது. இதன்விளைவுகள் எப்படி இருக்குமென்ற அச்சம் அனைத்து நல்லவர்கள் மத்தியிலும்.

அல்லாஹ் காப்பானாக!

Ebrahim Ansari சொன்னது…

//இந்தக் கட்டுரையும் கவிதை தான் என்பேன்! வடிவம் எதுவானாலும், உணர்வில் உந்தப்பட்டு, உணர்வை உந்தித் தள்ளும் வரிகள் யாவும் கவிதைகளாய் இரசிக்கப்படும்.//

அன்பின் கவியன்பன் அவர்களுக்கு பார்க்குமிடமெல்லாம் நீக்கமற கவிதையே நிறைந்து நிற்கும். உங்களின் கண்ணோட்ட்டம் அப்படி. நாங்கள் கட்டுரையை எழுதிவிட்டு சற்று அதற்கு அலங்காரம் செய்கிறோம் அவ்வளவே, அன்பான கருத்துக்கு நன்றி.

Ebrahim Ansari சொன்னது…

அன்பின் தம்பி மன்சூர், தம்பி அபூ ஆசிப் தங்களின் அன்புக்கு நன்றி.

மன்சூர் அவர்கள் முத்துப் பேட்டை வந்த போது பகுருதீன் அவர்களை சந்திக்க இயலவில்லை. காரணம் அவர் இஷா தொழுகைக்கு வேறு பள்ளிக்குப் போய்விடுவார். இன்ஷா அல்லாஹ் தாங்கள் புறப்படும் முன்பு சந்திக்கலாம்.

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

இன்றும் இந்த உலகறிந்த உண்மையை அப்பொழுதே சொல்லிவிட்டார் கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியைப் பற்றி:

கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்...

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி
கேட்டதற்கு கண்ணதாசனின் கவிதையை பாருங்கள்..
.
அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌
தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில்

நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும்
ஆண்மையில்லா பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+