Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மல்லிபட்ணம் சாலமீது! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | June 05, 2014 | , ,

ஒரு மாத காலமாய்க்
காணாமல் போன
சாலமீது
சட்டென்று நேரில் வந்து நின்றதும்
திக்கென்றது

வழக்கமான சுறுசுறுப்பும்
வாட்டசாட்டமான தோற்றமும்
வகைமாறி
கட்டுக் குழைந்து
கண்கள் பஞ்சடைந்து
பார்க்கப் பரிதாபமாக...

என்னாயிற்று சாலமீதுக்கு?

மல்லிபட்டிணம் சாலமீது
பூர்வீகம் அதிரைதான்
அப்பாவி அவர்தம்
சொந்தபந்தங்கள்
சொத்துபத்துகளை அபகரித்து
கைவிட்டுவிட
மல்லிபட்னம் சாலமீதானார்
என்பது செவிவழிச் சேதி

வரையறுத்துச் சொல்லிவிட முடியாத
ஒழுங்கான பட்டியலுக்குள் வராத
பொருட்கள் அடங்கிய
அழுக்கு மூட்டை ஒன்றும்;
வெளுத்துச் சாயம்போன
ஊதா நிற
மாப்பிள்ளைத் தொப்பியும்;
சுயமாக ஒட்டுப்போட்ட
நைந்துபோன வேட்டி சட்டையும்;
தடித்த
மேல் ஸ்தாயி
மழலைக் குரலும்
சாலமீதுவின் அடையாளங்கள்

ரொட்டி சால்னா
சோறு ஆணம்
சிங்கிள் டீ
சில்லறை என
ஏதாகிலும் கொடுத்தால்
தடித்த குரலில்
மெளலீது
திக்ர்
ஈ எம் ஹனீஃபா என்று
கலந்துகட்டிப் பாடியும்
காது பொத்தி
கால் உதைத்து
நிலம் அதிர
குதித்துக் குதித்து ஆடியும் காட்டும்
சாலமீது

ஹந்தூரி
பெருநாட்கள்
நோன்பு மாதத்திலும்
கொடிமர மேடையிலோ
பெரிய புளிய மரத்தடியிலோ
ரயிலடி பெஞ்சிலோ
மூட்டையைப் பிரித்து
சோலியாயிருக்கும்

சுறுசுறுப்பான சாலமீது
திரும்பி வந்ததிலிருந்து
அடிவயிற்றில் வலிப்பதாகச் சொல்லி
பாட்டு ஆட்டம் இரண்டிலும்
வேகம் குறைந்து போனது
எப்போ பார்த்தாலும்
சுணக்கமாகவே இருந்தது

என்ன நடந்தது
என்று சொல்லத்தெரியாத
சாலமீதுவை
யாரோ
ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போய்
ஐந்து கிலோ அரிசியும்
அம்பது ரூவா பணமும்
ஒரு
ஆர்லிக்ஸ் போத்தலும்
தந்ததாகச்
சாலமீது சொன்னபோது
மனசு வலித்தது;
சாட்டையால் அடிக்க வேண்டும்போல்
சமூகத்தின்மீது
சினம் கூடியது!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

16 Responses So Far:

Ebrahim Ansari said...

கந்தூரி ஊர்வலங்களும் கல்யாண வீடுகளும் மல்லிபட்டினம் சாலமீது இல்லாவிட்டால் களை கட்டாது.

அந்தக் காலத்தில் நவராத்திரி சிவாஜிக்குப் பிறகு நான் பார்த்த நவரச நாயகன் அவர்.

சில நேரங்களில் விரக்தி. சில நேரங்களில் மகிழ்வுடன் பாட்டு.


நேயர்கள் கேட்டால் காதுகளில் ரிப்பன் கட்டி ஆடும் ஆட்டம்.

ஆடும்போது மிதிக்கிற மிதியின் விசையின் வேகத்தில் நிலம் கூட பொத்துக் கொள்ளுமோ என்று நினைக்கத் தோன்றும்.

புகை வண்டி நிலையத்தில் நின்று "பொட்டி" தூக்குவதிலாகட்டும் கலரி வீடுகளில் சகன் கழுவதிலாகட்டும் உதட்டோரம் ஒரு புன்னகையுடன் நின்று செய்யும் சாலமீதை காலங்கள் ஓடினாலும் நாம மனங்களில் இருந்து காலவெள்ளம் கழுவிவிடாது.


இன்று நினைத்தாலும் மறக்க முடியாத முகம் அந்த களங்கமற்ற அப்பாவியின் முகம்.

இந்த வெள்ளை மனது வேந்தனைக் கூட தங்களது தன்னலத்துக்கு பயன்படுத்தியவர்களை சாட்டையால் அடித்தால் கூட பற்றாது;

சாலமீதை நினைவூட்டிய கவிதையைத் தந்த தம்பி சபீர் அவர்களுக்கு நன்றி.

sheikdawoodmohamedfarook said...

//அஞ்சுகிலோஅரிசி அம்பது ரூவா பணம் ஆர்லிக்ஸ் போத்தல்// ஒரு அப்பா வியின் கிட்னிக்கு இதுதான் இப்போதைய ரேட்டா? இனிமே நாலு இட்டலிக்கும் கொஞ்சம் சட்டினிக்கும் கிட்டினி விலைபோகுமோ ? பட்டினி போக்க கிட்டினி விலையாகும் நாட்டில் வாழும் மனிதர்கள் தங்கள் இதயத்தை என்ன விலைக்கு எடைபோட்டுகொடுத்தார்கள்?

adiraimansoor said...

சாலமீது யார் என்பது எனக்கு தெரியாது
ஏதோ ஒரு அப்பாவி மனிதனின் சோக கதை
அப்பாவி மனிதகளின் வாழ்க்கையில் விளையாடும் மனித மிருகங்களை மன்னிக்க முடியாது

அதிரை தேனருவி said...

மறுமையில் நல்லிடம் தேடி கோடிகள் கொட்டி பள்ளிகளும் வின் தொட்டு நிற்க்கும் மீனாராக்களும் கட்டுகிறோம். அயும்பது அறுபது ஆடுகள் அறுத்து கமகம பிரியாணி போட்டு அக்கம்பக்கத்துக்கு ஊர்களை அழைத்து திறப்புவிழாவும் செய்கிறோம். ஆனால் மல்லிபட்டணம் சாலாமீதுபோன்றஅப்பாவி ஏழைகளைநாம் ஏன் மறந்தோம்?

இப்னு அப்துல் ரஜாக் said...

சாலமீது யார் என்பது எனக்கு தெரியாது
ஏதோ ஒரு அப்பாவி மனிதனின் சோக கதை
அப்பாவி மனிதகளின் வாழ்க்கையில் விளையாடும் மனித மிருகங்களை மன்னிக்க முடியாது

ZAKIR HUSSAIN said...

சாலமீது....மறக்க முடியாத ஓர் அப்பாவி மனிதன். எல்லோரிடமும் காசு கேட்கும் இந்த மனிதனை சமயத்தில் கோபித்துக்கொள்ளும் சமூகம் அந்த மனிதனை அந்த சூழ்நிலைக்கு தள்ளியவனை சீண்டுவது கூட கிடையாது...

இதுபோல் இரண்டு வயதான பெண்கள் வீடுகளில் பிச்சை கேட்டு சாப்பிடும்போதும் கேள்விப்பட்டிருக்கிறேன் [ சின்ன வயதில் ].

அந்த இருவரும் வசதியான மரைக்கா வீட்டு வாரிசுகளாம் ...அவர்களது சொத்து ஏமாற்றி பறிக்கப்பட்டதாம். அந்த கவலையிலேயே இவர்களும் ஒரு மனநோயாளி மாதிரி ஆகிவிட்டார்களாம்.


நாமெல்லாம் முஸ்லீம் இல்லே....மறந்தே போயிடுச்சி போங்க....

Shameed said...

சாலமீது இவர் வைத்திருக்கும் உண்டியல் பல கலரில் ஒட்டுதுணிகள் வைத்து தைத்து தகதகவென்றிக்கும்

தரை அதிர டான்ஸ் ஆடினாலும் உண்டியலை தரையில் வைக்க மாட்டார்

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

மல்லிபட்டண சாலமீதை நான் பாக்கவே இல்லே! ஈந்தா கொண்ணாந்து எங்கண்ணுலே காட்டுங்களேன்! பாக்க தேட்டமா ஈக்கிது!

Ebrahim Ansari said...

//மல்லிபட்டண சாலமீதை நான் பாக்கவே இல்லே!//

அன்புள்ள மச்சான்,

நீங்கள் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. நீங்கள் ஒருவேளை மறந்து இருக்கலாம்.

நீங்கள் அதிரை ரயிலடியில் மலேசியாவிலிருந்து வந்து இறங்கு கின்ற நேரத்தில் ஒரு பொட்டி தூக்குபவராகவும்,

உங்கள் திருமணத்தில் அல்லது உங்கள் மகனின் சுன்னத் விருந்தில் கொல்லைப்புறம் நின்று வேலை பார்க்கும் வேலக்காரர்களில் ஒருவராகவும்

அந்தக்காலத்தில் பந்தலில் ஸ்பீகர் கட்டிப் பாட்டுப் போடுவார்களே அத்தகைய வீடுகளில் பந்தலில் CASUAL ஆக ஆடுபவராகவும்

விடலைப்பசங்கள் வெட்டிகுளத்துப் படித்துறையில் மாலை நேரங்களில் வைத்துக் கொண்டு பாடச்சொல்லி கேட்கும் பாடகராகவும்,

தெருவில் நடந்து போகும்போது சிரித்தபடி எதிரே வந்து பார்வையாலேயே காசு கேட்கும் ஒரு நபராகவும் நீங்கள் சந்தித்து இருக்கவே இருக்கலாம்.

அவர் அதிகம் நடமாடிய இடம் கடற்கரைத் தெரு என்பதால் மற்றவர்கள் அவரைப் பார்க்காமலிருந்து இருக்க வாய்ப்புண்டு. .

நாளை கடற்கரைத் தெருவில் கல்வி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. நடைபெறும் வளாகம் மல்லிபட்னம் சால்மீது நடமாடிய இடங்கள்தான். நானும் இன்ஷா அல்லாஹ் நாளை போக இருக்கிறேன் .

இந்தக் கவிதையின் தாக்கம் நாளையும் எனது நினைவுகளில் நிழலாடும்.

தம்பி ஜாகீர் சுட்டி இருக்கும் இரு சகோதரிகள்?

நீரடித்து நீர் விலகாது என்பார்களே ஆனால் விலகும் என்பதற்கு உதாரணம்.
கோழி மிதித்து குஞ்சு சாகாது என்பார்களே ஆனால் சாகும் என்பதற்கு உதாரணம்.
மனித ஆசைகள் அப்பாவிகளிடமிருந்து அவர்களது சொத்துக்களை மட்டுமல்ல உறுப்புகளையும் அபகரிக்கும் என்பதற்கு நாம் கண்களால் பார்த்த உதாரணங்கள் இவர்கள்.

இன்னும் அஹமது தம்பி , அஜ்வாத் என்று இரு சகோதர்களை நாம் கண்டு இருக்கிறோம். ஒருகாலத்தில் தெருக்களில் குதிரைகளில் வருவார்களாம். பின்னாளில் அவர்களது சொத்துக்கள் சொந்தக்காரகளால் அபகரிக்கபப்ட்டு ஒருவேளைச் சோற்றுக்கு கூட கஷ்டப்பட்டார்கள்.

sabeer.abushahruk said...

அப்பாவி மனிதர்களிடம் அவர்களின் கிட்னி போன்ற உறுப்புகளைக் கொள்ளையடிக்கும் கிராதகக் கூட்டம் பசிநோயைத் தந்து தன்மானம் இழக்கச் செய்யும் வயிற்றை கொள்ளையடிக்கட்டுமே! பசிப்பிணியற்று சீவிக்கட்டுமே!

நம்பிக்கை துரோகம் செய்து எமாற்றியவர்களின் துரோகத்தை எண்ணி எண்ணி கலங்கும் அந்த அப்பாவிகளின் நினைவுகளைத் திருடிக்கொள்ளுங்களேன்.
புத்துணர்வோடு எஞ்சிய காலங்களைக் கழிக்கட்டுமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வலி....!
சொல்லும் வரிகள் !

கவிதையின் முடிச்சு
அவிழாமலே அப்படியே..
மல்லிபட்ணம் சாலமீது

Anonymous said...

கத்தும் கடல் விளைந்த முத்துமணி மாலையிட்டு என்ராசா!
உன்னை முழு மதியா பார்த்திருந்தேன்!

வைர மணி மாலையிட்டு என் ராசா உன்னை
வளர்மதியாய் பார்த்திருந்தேன்!

பவள மணி மாலையிட்டு என் ராசா உன்னை
பால் நிலவாய் பார்த்திருந்தேன்!

மணி-மணியாய் நீ அணிந்து
கனி –கனியாய் உனக்கூட்டி நான்
களித்திருந்த வேளையிலே
ஊரார் கண் பட்டதோ? உறவார் கண் சுட்டதோ?

நீ போன திக்குத்தெரியாமே திசைமாறி
புலம்பி நின்னேன் பொட்டலிலே!

தேடி அலஞ்ச கண்ணு தேஞ்சே போயிருச்சு!
வாடி வதஞ்ச நெஞ்சு வகை மாறி போயிருச்சு!
கூடி உறவுமுறை குமுறி அழுதுடுச்சு!
கள்ளி வெளஞ்ச நெஞ்சில் களியூட்ட வந்தாயோ?

அள்ளி அணைச்ச நெஞ்சை!அமுதூட்டி வளர்த்த நெஞ்சை!
கொள்ளி எரிஞ்ச நெஞ்சை குளிரூட்ட வந்தாயோ?

மல்லிபட்டண சாலமீதா என் மனம் குளிர
வந்தவனே! வா! வா! வா!

S.முஹம்மது ஃபாருக்

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒரு சாலமீது நினைவினைத் தொடர்ந்து பல அப்பாவிகளை நினைவுகூர்ந்து கருத்திட்ட

ஃபாரூக் மாமா அவர்கள், இப்றாகீம் அன்சாரி காக்கா அவர்கள், ஹமீது, ஜாகிர், மன்சூர், இப்னு அப்துல் ரஜாக, அதிரை தேனருவி, அபு இபுறாகீம் ஆகியோருக்கு மிக்க நன்றி!

கிரவுன் எங்கே காணோம்?

ஃபாரூக் மாமா அவர்களின்தெம்மாங்கு

"கத்தும் கடல் விளைந்த..." என்று துவங்கி சோகமாக பாடப்பட்டிருந்தாலும் ரசிக்கத்தக்க ரிதம் நிலவுகிறது.

அதிரை.மெய்சா said...

மல்லிபட்னuம் சாலமீதையும் நினைவிகூர்ந்த அருமை நண்பன் சபீர் தனக்கே உரித்தான கவிவரிகளில் சொல்லிய விதம் அருமை.

இப்படி நல்லுள்ளம் படைத்த மனிதர்கள் எத்தனையோ பேர் மோசடியின்பால் வீதிக்கு வந்தவர்கள் நிறைய உள்ளனர்.மோசடிப் பேர்வழிகள் இக்கவிதை படித்த பின்பாவது உணரட்டும்.

அதிரைக்காரன் said...

'மல்லிப்பட்டினம் சாலமீது' யாரென்று முதலில் யூகிக்க முடியவில்லை என்ற போதிலும் எங்கோ, எப்போதோ பரிச்சயமான முகம் என்பது தட்டுத்தடுமாறி நினைவில் வந்தபோது இப்றாஹீம் காக்காவின் கூடுதல் தகவல்கள் சாலமீது காக்காவை கண்முன்னே கொண்டு வந்தது. 80 களின் தொடக்கத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் வரும் நேரத்தை இவரிடம் கேட்டுவிட்டு, ரயிலடிக்குச் செல்லலாம் எனுமளவுக்கு நடிகர் வினீத் சாயலை நினைவூட்டும் நெடுநெடுவென்ற தேகம். எத்தனையோ சபுராளிகளின் பயணச்சுமைகளை கம்பன் நிற்கும் மூன்று நிமிடத்திற்குள் இறக்கி, குதிரை வண்டியில் எற்றிவிடும் லாவகமாக உடம்பு கொண்ட இந்த உழைப்பாளி இத்தனை வருடங்களாக சொல்லமுடியாத சோகத்தையும் சுமந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது.

காலம் கொடியது. கால ஓட்டத்தில் கடந்து சென்ற மனிதர்களிலும் கொடியவர் இருக்கிறார்கள். பரிதாபத்திற்குரிய இந்த உழைப்பாளிக்கு. நம்மாலியன்ற உதவிகள் ஏதும் செய்ய முடியுமா சபீர் காக்கா? இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் முதல் அவருக்கு மாதம் ₹1000 கிடைக்கும் வகையில் அதிரை நிருபர் & அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் மூலம் திட்டமிடலாமே.

என்னுடன் மேலும் 11 பேர் முன்வந்தால் இன்ஷா அல்லாஹ் அதிரை பைத்துல்மால் மூலம் இவருக்கு இந்த உதவியைச் செய்யலாம்.

துபாயிலுள்ளவர்கள் வருடத்திற்கு 65 திர்ஹம் ஒருமுறை வழங்கினால் நம்மால் முடிந்தவரை இந்த சகோதரருக்கு மேற்கண்ட உதவியைச் செய்யலாம். என்னோடு யாரேனும் இணைந்தாலும் சரி அல்லது இதை முன்னெடுக்கும் எவரோடும் நானும் இணைந்து கொள்கிறேன்.

பின்னூட்டத்திலோ அல்லது நெறியாளருக்கு மடலிட்டோ தொடர்பு கொள்ளவும்.

அல்லாஹ் நம் எண்ணங்களைப் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.