ஒரு ச்சிக்குபுக்கு பாதை...


எழும்பூர் இரயில் நிலையம்
எட்டுமணி இராப் பொழுது
எங்களூர் கம்பன் ரயில்
எட்டு பத்துக்கு எடுக்கத்தயார்

வசந்த பவன் தயிர்சாதம்I
வாழையிலைப் பொட்டலத் துள்
வாங்கி வைத்த வார இதழ்
வாசிக்க கை இருப்பில்

மேற்படுக்கைக் கேட்டு வாங்கும்
மாணவப் பருவம் அது
மேற்படி ரயில் பயணம்
மறவாத இன்ப வடு

ரயில் கிளம்பும் முன்னரே
உயிர் போகும் ஊர்நோக்கி
தயிர் சாதம் உண்டபின்னே
துயில் நாடி கண்சொக்கும்

தாள கதி தாலாட்ட
தூக்கம் கனா வந்துசேறும்
பாலச் சத்தம் தட்டியெழுப்ப
பக்கம் புரண்டு படுக்கை தொடரும்

திருத்துறைப்பூண்டி காஃபி ருசி
அடியக்காமங்கலத்தில் எழுப்பிவிடும்
முத்துப்பேட்டை நிலையம் முதல்
வாசலில் நின்றால் வயல் விரியும்

சுந்தரம் தம்பிக்கோட்டை மரவகாடு
அப்பக்கம் உப்பள வெண்மை
இப்பக்கம் தென்னையின் பசுமை
இடையிடையே மாவும் பலாவும்

கேசம் கலைக்கும் எதிர்க்காற்றில்
வாசம் இருக்கும் ஈரமண்ணின்
விரல்கள் துலாவி முடி ஒதுக்க
தலைமுடிக்குள் நிலக்கரி துகள்கள்

சங்கிலிப் பாலம் தொட்டுவிட்டால்
சந்தோஷ பலம் கூடிவிடும்
அதிராம்பட்டினம் நிலையத்துள்
ரயில் நுழைய மனம் மகிழும்

ஊரின் உயிரனங்களில்
ஒன்றாகவே கம்பன் ரயில்
உறவொன்று இறந்ததுபோல்
துக்கம் காக்கிறது ரயில் நிலையம்

நிஜ ரயில் கனவாகிட
பொம்மை ரயில் பிள்ளைகளுக்கு
தடதடக்கும் ஊர் எல்லையோ
தண்டவாளம் புதைந்த மயானமாய்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

27 கருத்துகள்

Yasir சொன்னது…

ஆஹா....ரயிலில் பயணித்த பழைய ஞாபகங்கள் கவிதையாக அருமை காkகா....கம்பனை நிறையவே மிஸ் பண்ணுகின்றோம்

sheikdawoodmohamedfarook சொன்னது…

''பொன்னுக்குபாடியகம்பனுக்கும்கூழுக்குபாடியஅவ்வைக்கும்நிகராக[அதிராம்]பட்டினதாராகியநாங்கள்ரயிலுக்கும்பாடுவோம்-மயிலுக்கும்பாடுவோம்'' என்றுமருமகன்சபீரின்கவிதைசான்றுபகர்கிறது.

crown சொன்னது…

எழும்பூர் இரயில் நிலையம்
எட்டுமணி இராப் பொழுது
எங்களூர் கம்பன் ரயில்
எட்டு பத்துக்கு எடுக்கத்தயார்.
-------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆரம்பமே திருவிழா கோலகலம் கானும் வார்தையும்,அந்த சுகானுபவத்தை சுட்டி காட்டி நினைவைதூண்டும் எழுத்தும்.

crown சொன்னது…

வசந்த பவன் தயிர்சாதம்I
வாலையிலைப் பொட்டலத் துள்
வாங்கி வைத்த வார இதழ்
வாசிக்க கை இருப்பில்
----------------------------------------------------------
அசந்த தேகத்துக்கு வசந்த பவன் (உ)தயிர் சாதம்!வார இதழ் ஒரு வாரம் ,வாரா இதழானால் வாடும் நம் இதழ்! அந்த காலம் குதூகலத்தின் உச்சம்!இப்ப நினைவு தெரிந்த பின் வார இதழெல்லாம் பார்க்காவிட்டால் வருத்தபடுவதில்லை!

crown சொன்னது…

மேற்படுக்கைக் கேட்டு வாங்கும்
மாணவப் பருவம் அது
மேற்படி ரயில் பயணம்
மறவாத இன்ப வடு

ரயில் கிளம்பும் முன்னரே
உயிர் போகும் ஊர்நோக்கி
தயிர் சாதம் உண்டபின்னே
துயில் நாடி கண்சொக்கும்
------------------------------------------------------
இருக்கையில் இருக்கையில் ரயில் கிளம்பிவிட்டால் இருக்"கை"யில் இறக்கை முளைக்கும் ஊர் நோக்கி உயிர் பறக்கும்! அது இன்றும் நடக்கும்! எப்படி மறக்கும்?ஆனால் கம்பன் தான் கானா போனான்!

crown சொன்னது…

தாள கதி தாலாட்ட
தூக்கம் கனா வந்துசேறும்
பாலச் சத்தம் தட்டியெழுப்ப
பக்கம் புரண்டு படுக்கை தொடரும்
--------------------------------------------------------------------
பலாச்சுளை சுவை கண்டேன் இப்படி வரிக்குவரி வர்ணனைகள்!பாலச்சத்தம் நம்மை தட்டி எழுப்பும்,
பலர் சத்தமும் அப்படித்தான்!ஆனால் பால(ர்)சத்தம் தாயை தாலட்டவும் முத்த,சத்தம் எழுப்பவும் செய்யும் சுகமான அனுபவங்கள்!

crown சொன்னது…

திருத்துறைப்பூண்டி காஃபி ருசி
அடியக்காமங்கலத்தில் எழுப்பிவிடும்
முத்துப்பேட்டை நிலையம் முதல்
வாசலில் நின்றால் வயல் விரியும்

சுந்தரம் தம்பிக்கோட்டை மரவகாடு
அப்பக்கம் உப்பள வெண்மை
இப்பக்கம் தென்னையின் பசுமை
இடையிடையே மாவும் பலாவும்
--------------------------------------------------------------------
எத்தனை சுவாசங்கள் என் நுரையீரலில் பறிமாறப்பட்டாளும்!
அத்தனைக்கும் அப்பால்,
ஊரின் காற்று முகத்தில் அடித்தாலும் அதன் மேல் கோபம் வராம போன மிச்ச காற்று !
என் நுரையீரலில் ஓரத்தில் இன்னும் சேமிப்பாய் இருக்கிறது!

crown சொன்னது…

சுந்தரம் தம்பிக்கோட்டை மரவகாடு
அப்பக்கம் உப்பள வெண்மை
இப்பக்கம் தென்னையின் பசுமை
இடையிடையே மாவும் பலாவும்
------------------------------------------------------------------
அது மரவ காட இல்லை,இல்லை மறவா காடு!உப்பளவெண்மையும்.தென்னை பசுமையும்,இடை,இடையே மாவும்.பாலாவும் சரிதான் ஆனால் புகையும் பகையும்,பொசுக்கும் நெருப்பும்,சிவப்பு உதிரம் உதிரும் நிலைதான் வெளுத்ததே சாயம்!சாயுபு மார்களும்,தேவ சகோதர்களும் சிந்திப்பார்களா?இயற்கை நம்மை இனைத்திருக்க செயற்கையாய் ஏன் பகை முளைக்குது??

crown சொன்னது…

கேசம் கலைக்கும் எதிர்க்காற்றில்
வாசம் இருக்கும் ஈரமண்ணின்
விரல்கள் துலாவி முடி ஒதுக்க
தலைமுடிக்குள் நிலக்கரி துகள்கள்
-----------------------------------------------------------------------
அருமை!இது உண்மையின் வெளிப்படையும் கூட! அதனால்தான் சிலருக்கு பவரான தலையோ? நிலக்கரிபோல் மண்டைக்குள்ளும் கரி ,அந்த தலைகள் பல நேரம் பவர் ஆஃப் ஆகிவிடுவதும் ! எல்லாம் பவர் செய்யும் வேலை!ஆனாலும் சமுதாயதில் ஒருவர் மாத்தி ஒருவர் கரி பூசிக்கொள்கிறோமா? இயக்க மயக்கம் நம் சமுதாயத்தை அழிக்காமல் இருந்தால் நம் வண்ட வாளம் ,எந்த தன்டவாளத்திலும் ஏறாதிருக்குமே!சிந்திப்போமா?

crown சொன்னது…

சங்கிலிப் பாலம் தொட்டுவிட்டால்
சந்தோஷ பலம் கூடிவிடும்
அதிராம்பட்டினம் நிலையத்துள்
ரயில் நுழைய மனம் மகிழும்
---------------------------------------------------------
இனைந்த சங்கிலியாய் ஒருங்கினைந்துவிட்டால் பலம் கூடும் ,சந்தோசம் நிலவும்!இது ரயில் பயண அனுபவமல்ல!வாழ்கை பயணத்தில் பயின்ற பாடம்!

crown சொன்னது…

ஊரின் உயிரனங்களில்
ஒன்றாகவே கம்பன் ரயில்
உறவொன்று இறந்ததுபோல்
துக்கம் காக்கிறது ரயில் நிலையம்
------------------------------------------------------------------------------------
வராத ரயிலுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் கை'காட்டியும் கைகட்டி மவுனாமாய் அழுகிறதோ?

crown சொன்னது…

நிஜ ரயில் கனவாகிட
பொம்மை ரயில் பிள்ளைகளுக்கு
தடதடக்கும் ஊர் எல்லையோ
தண்டவாளம் புதைந்த மயானமாய்!
-----------------------------------------------------------------------
தண்டவாளம் புதைந்த மயானமாய்!-மனம் வலிக்கும் உண்மை வரிகள்!!!என்ன பயமென்றால் திடீர் கோயிலோ!குதர்கம் போதிக்கும் தர்காவோ எதிர் காலத்தில் வராமல் இருந்தாலே போதும்!

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

அழகிய பயணம்!மனதினில் இன்பச் சலனம்!ஆனாலும் முடங்கி போன நிஜம் அடங்கா அழும் மனம்!பலவித பரவசம் !எங்களை பயணம் அழைத்துச்சென்ற கவிஞருக்கு நன்றியும்!வாழ்த்தும்.பயணதோரும் தூவிய கவிதை மழையில் நணைந்ததில் குளிர் கலிபோர்னியா வரை வீசுது!

ZAKIR HUSSAIN சொன்னது…

சபீர்,

நீ எழுதிய கவிதையில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கவிதை.

தொலைந்துபோன வசந்தம் புதுப்பித்தது உன் சிந்தனையும் , கவிதையும்.

ZAKIR HUSSAIN சொன்னது…

இன்னொருமுறை நீ சொன்ன அனைத்து வரிகளையும் வாழ்ந்து பார்க்க வேண்டும்.

இதற்க்காக மட்டும் ஒருமுறை ஊர் வந்தாலும் தப்பில்லை.

Ebrahim Ansari சொன்னது…

பின்னோக்கி ஓடும் நினைவுகளின் பெட்டிகள் கோர்க்கப்பட்ட இரயில் .

பயணித்த அனைவருக்கும் இந்த அனுபவங்கள் இருக்கும்.

மீண்டும் வரும் சமுதாயத்துக்கும் இந்த இனிமை கிடைக்குமா?

N.A.Shahul Hameed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்!
கவிதை வரிகளும் இனிமை.சந்தமும் ரயில் ஓடும் சத்தம் போல் வருகிறது.
வாழ்த்துக்கள்
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

sheikdawoodmohamedfarook சொன்னது…

கம்பன்மறந்துவைத்துத்துவிட்டுப்போனஎழுத்தாணிமருமகன்சபீரின்கையில்கிடைத்துவிட்டதுபோலும்!அதுகவிதையாய்விதைக்கிறதே!

அதிரை.மெய்சா சொன்னது…

கம்பனிட்ட ஓசையினை
காதும் கேட்டு நாளாச்சு
கனவாகிப் போனதை எண்ணி
கனத்து மனம் நொந்தேபோச்சி

வாரியிறைத்த வாக்குறுதியை
வந்த அரசும் மறந்துடிச்சி
வக்கனையாய் பேசிப்பேசி
வறியோர் வயிற்றில் அடிச்சாச்சி

அகலப்பாதை ரயில் கனவில்
அகண்டு விழியும் காத்தாச்சி
பவளப் பட்டணம் போயிவர
பாவிமனத்தில் ஏக்கமாச்சி

நேற்றுகண்ட ரயில் கனவில்
நீல நிறமா மாறிப் போச்சி
அன்று கண்ட செங்கலரே
அசலாய் ஆழ்மனதில் பதிஞ்சேபோச்சி

இனி என்று காண்பது ரயில்வரவை
ஏக்கம் மனதில் கூடிப் போச்சி
அன்பு நண்பனின் கவிவரிகள்
ஆதங்கம் ஏற்ப்பட உதவிடிச்சி

Shameed சொன்னது…

மரவகாட்டு பதநீர் போல் கவிகதை இனிக்கின்றது

adiraimansoor சொன்னது…

///அழகிய பயணம்!மனதினில் இன்பச் சலனம்!ஆனாலும் முடங்கி போன நிஜம் அடங்கா அழும் மனம்!பலவித பரவசம் !எங்களை பயணம் அழைத்துச்சென்ற கவிஞருக்கு நன்றியும்!வாழ்த்தும்.பயணதோரும் தூவிய கவிதை மழையில் நணைந்ததில் குளிர் கலிபோர்னியா வரை வீசுது! ///

க்ரவுன் மச்சான் சவூதிக்கும் அந்த காற்று வீச தொடங்கி விட்டது

///மரவகாட்டு பதநீர் போல் கவிகதை இனிக்கின்றது ///

க்ரவுனுடைய கடைசி வரியையும் ஹமீதின் பதனீர் தித்திப்பையும் சேர்த்து என் ஹிருதயத்தில் பட்டாம் பூச்சி பறக்க தொடங்கி விட்டன

Ahamed irshad சொன்னது…

அட்டகாசம் காக்கா..

அருமை அருமை அருமை..!!!!

Ebrahim Ansari சொன்னது…

அரசுகள் மாறிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நமது நிலைமைகள் மாறுவதற்கான அறிகுறிகள் தென்பட வில்லை.

இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதேபோல் இந்தியா முழுதும் அரைகுறைத் திட்டங்கள் அறுநூறுக்கு மேல் இருப்பதாகவும் அவற்றுள் முன்னுரிமைத் திட்டங்கள் முப்பதை மட்டும் எடுத்துச் செய்ய இருப்பதாகவும் மூன்று தினங்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்திருந்த தென்னக ரயில்வேயின் மேலாளர் கூறி இருக்கிறார்.

அந்த முப்பதில் நமது ஊரின் கனவை நிறைவேற்றும் இந்தத் திட்டமும் அடங்குமா என்பது தெரியவில்லை.

கடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நமது பாராளுமன்ற உறுப்பினர் திரு பரசுராமன் இதுபற்றி பேசவில்லை. நமது ஊர் ஆளும்கட்சியின் அன்பர்கள் இது பற்றிப் பாராளுமன்ற உறுப்பினரிடம் சொல்லி ரயில்வே அமைச்சரை சந்தித்து வற்புறுத்த சொல்ல வேண்டும்.

தங்கள் தொகுதிக்கு என்னென்ன வேண்டுமென்று ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் சமர்ப்பித்த பட்டியலில் கூட இந்தப் பணியை நிறைவேற்றுவது பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை என்றும் அறிகிறோம்.

நமது கேள்விகள்.

மயிலாடுதுறை- காரைக்குடி வழித்தடத்தில், மயிலாடுதுறை- திருவாரூர் வழித்தடப் பணிகள் நிறைவடைந்தும் , பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டும் இருக்கும் நிலையில்

திருவாரூர்- பட்டுக்கோட்டை வழித்தடப்பணிகள் மட்டும் கழுத்தில் சங்கிலியைப் பறிப்பது போல் பறித்தும் தடுத்தும் வைக்கபட்டிருப்பதேன்?

இந்தப் பகுதிகளில் அதிகம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன என்கிற பாவத்தைத் தவிர இந்தப் பகுதிகள் செய்த பாவம் என்ன?

இதற்குப் பரிகாரம் என்ன?

இந்தப் பகுதி மக்களின் ஒன்று திரண்ட போராட்டம் இல்லாமல் அரசின் கவனத்தைக் கவர இயலுமா?

சிந்திக்க வேண்டும். செயல்படத் துணிய வேண்டும்.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாசித்த, கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி! விரிவான ஏற்புரைக்கு நேரமில்லாத அளவிற்கு வேலை சோலியாக இருக்கிறேன்.

இவ்வாறான எண்ணற்றப் பயணங்களின்போது என்னோடு பயணித்தவன் ஜாகிர் என்பதால் அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது வியப்பல்ல.

கிரவுனுக்குக் கொஞ்சமேனும் புள்ளி வைத்துக் கொடுத்தால் அதில் ரங்கோலி கோலமிடும் அளவுக்குத் தமிழ் செழுமையாக கைவரும் என்பதற்கு ஒரு உதாரணம்:

//வராத ரயிலுக்கு
துக்கம் அனுசரிக்கும் வகையில் கை'காட்டியும்
கைகட்டி
மவுனாமாய் அழுகிறதோ?//

--

// நிலக்கரிபோல்
மண்டைக்குள்ளும் கரி ,
அந்த தலைகள்
பல நேரம்
பவர் ஆஃப் ஆகிவிடுவதும் !
எல்லாம் பவர் செய்யும் வேலை!

//அது
மரவ காடா -இல்லை
மறவா காடு! //

--
//அகலப்பாதை ரயில் கனவில்
அகண்டு விழியும் காத்தாச்சி
பவளப் பட்டணம் போயிவர
பாவிமனத்தில் ஏக்கமாச்சி//

மெய்சாவின் மேற்கண்ட ஆதங்கமும்

ஈனா ஆனா காக்காஅவர்களின் :

//இந்தப் பகுதிகளில் அதிகம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன என்கிற பாவத்தைத் தவிர இந்தப் பகுதிகள் செய்த பாவம் என்ன? //

என்கிற கருத்தில் தெறிக்கும் கோபமும் குறிப்பிடத்தக்கவை!

மேலும், ஃபாரூக் மாமாவின் ::

//''பொன்னுக்குபாடியகம்பனுக்கும் கூழுக்குபாடியஅவ்வைக்கும்
நிகராக -அதிராம்
பட்டினதாராகியநாங்கள்
ரயிலுக்கும்பாடுவோம்-
மயிலுக்கும்பாடுவோம்'' // என்னும் கருத்து பிடித்திருந்தது.

எனக்கு தொடர்ந்து ஊக்கம் தரும் யாசிர், ஹமீது, இர்ஷாத், ஸார், மன்சூர் ஆகிய சகோதரர்களுக்கும் நேரில் பாராட்டிய தம்பி அஹ்மது அமீனுக்கும் நன்றி.

ஒரு ச்சிக்கு புக்கு கதை என்னும் தலைப்பை ச்சிக்கு புக்கு பாதை என்று மிகப் பொருத்தமாக மாற்றிய அபு இபுவுக்கும் நன்றி.

வஸ்ஸலாம்!

அப்துல்மாலிக் சொன்னது…

நிஜத்தில் அனுபவித்தோம் இன்றோ கற்பனையில் அனுபவித்ததை நினைத்து அனுபவிக்கிறோம்

ஒவ்வொரு வரிகளும் ஆரவார அனுபவம், அருமை காக்கா

ZAEISA சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
சபீர்பாய்,,, நீங்கள் இப்போது ஊரில்தானே உங்களை நேரில் காண ஆசை......