சுனாமி - அற்புதம்...! அதியற்புதம்...!

அற்புதம்...!  அதியற்புதம்...!

2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி.  உலகத்தைக் குலுக்கிய ஒரு சோக நிகழ்வு,  ‘சுனாமி’ என்று அறியப்படும் பேரழிவு!  தூரக் கிழக்கு நாடான இந்தோனேஷியாவின் கடற்பகுதியில் ஏற்பட்ட ‘சுனாமி’யை இன்றுவரை உலக மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.  இவர்களுள், படைத்த இறைவனை பயந்து நடப்பவர்கள் பலர்;  ‘யாருக்கோ வந்த சோதனை இது. நமக்கென்ன?’ என்று நினைத்திருப்போர் பலர்.

உலகைப் பாதித்த அந்தச் சோதனை, முஸ்லிம்களுக்கு ‘மஹ்ஷர்’ எனும் யுகமுடிவு நாளை நினைவுபடுத்திய மாபெரும் நிகழ்வாகும் என்பது, இதில் பாதிப்படைந்து மீண்டவர்களுக்கல்லவா தெரியும்?  

“அந்த நாள்! அன்று மனிதன் தன் சகோதரனை விட்டு வெருண்டோடுவான்! தன் தாயையும் தந்தையையும், தன் மனைவி, பிள்ளைகளை விட்டும் (யார் யாரோ என்பது போல்) விரண்டோடுவான்” (80:34-36) என்று குர்ஆன் அந்த நாளை நினைவூட்டுகின்றது. 

இது போன்ற யுக முடிவு நாளின் நிகழ்வுகளை நினைவுபடுத்தியது, அந்தச் சுனாமி. நமது நாட்டைப் பொறுத்த வரையில், மிகப் பாதிப்படைந்த ஊர்களுள், குமரி மாவட்டத்துக் குளச்சல் எனும் கடற்கரைச் சிற்றூர் ஆகும். இக்கிராமத்தில் நுழைந்த கடல் நீர், இவ்வூரின் புராதீனப் பள்ளியான ‘மாலிக் தீனார் பள்ளி’யின் உள்ளே காற்றாடியின் அளவுக்கு அப்பள்ளியை ஆக்கிரமித்திருந்தது என்று அங்குள்ள உறவினர்கள் கூறினர்!

பெற்றெடுத்துச் சில மாதங்களே ஆன தன் பச்சிளங் குழந்தையை மட்டுமாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று வெள்ளப் பெருக்கில் நீந்திக்கொண்டிருந்தாள் தாயொருத்தி.  ஆழிப்பேரலையோ, அந்தத் தாயைப் பிஞ்சுக் குழந்தையை விட்டுப் பிரித்தது!  தாய் எங்கோ, குழந்தை எங்கோ என்று, இரண்டு உயிர்களும் பிரிந்தன!

பல நாள்கள் சென்று நீர் மட்டம் வடிந்த பின்னர், குழந்தையை இழந்த அந்தத் தாயின் கால்கள் நிலத்தில் பதிந்தன!  ‘குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லையே’ என்ற கவலையில் மூழ்கியிருந்த அந்தத் தாயின் காதில் ஒரு செய்தி வந்து விழுந்தது!  

பக்கத்துக் கிராமத்தில், உறவினர் யாரென்று அறியப்படாத குழந்தை ஒன்று அழுதுகொண்டு கரையொதுங்கிக் கிடக்கின்றதாம் என்ற செய்தியை அந்த அபலைத் தாயிடம் யாரோ காதில் போட, ‘வளர்ந்த நம்மையே சுனாமி சுற்றி வளைத்துப் போட்டது. என் பிஞ்சுக் குழந்தை அதற்கு எம்மாத்திரம்’ என்று சிந்தித்தவராக,  ‘எதற்கும் அந்தக் குழந்தையைப் போய்ப் பார்த்து வருவோமே’ என்று அந்தத் தாய் விரக்தியுடன் கிளம்பினார்.

என்ன வியப்பு!  அழுத நிலையில் கிடந்த அந்தக் குழந்தை அவருடையதுதான்!  தாயின் அழுகை அற்புதமாகி, அற்புதம் ஆனந்தமாகி, பால்குடி மாறாத அந்தப் பைந்தளிரை வாரி எடுத்துப் பாலமுதை ஊட்டினார் அத்தாய்!  நம்பத்தான் முடியவில்லை பலரால்.  ஆனால், நடந்தது என்னவோ, உண்மை! என் சின்ன மாமியாரின் உறவினர் அந்தப் பெண் என்பதால், நம்பியே ஆகவேண்டிய நிலை!

இதைவிடச் சிறந்த அற்புதம், இந்தோனேஷியாவின்  வடக்கு சுமத்ரா தீவின் Aceh மாவட்டத்தில் நடந்தது.  இச்செய்தியை The Washington Post தனது இம்மாத 8 / 8 / 2014 இதழில் பதிவிட்டிருந்தது.  வியக்க வைக்கும் அச்செய்தியின் சுருக்கம் இதுதான்:

‘சுனாமி’ என்னும் பேரழிவு ஏற்பட்டு, இவ்வாண்டு முடிவில் பத்தாண்டுகள் ஆகின்றன.  அன்று நான்கே வயதான சிறுமி, கடலலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, இந்தோனேஷியாவின் கடைக்கோடித் தீவான ‘பன்யாக்’ தீவில் கரையொதுங்கினாள்.  அவளுடன் அவளுக்கு மூன்று வயது மூத்த சகோதரன்  ஆரிஃபும் தன் தந்தைக்குரிய உடைந்த படகைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, அவனும் பெற்றோருமாய் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.  அடுத்து வந்த பேரலை ஒன்று பெற்றோரை விட்டு ஆண்  பிள்ளையையும் பிரித்துவிட்டது!        

ரவ்ழத்துல் ஜன்னா என்ற பெயரை உடைய அந்தச் சிறுமி மட்டும் உடைந்து போன படகின் ஒரு பலகையைப் பற்றிப் பிடித்துக்கொண்டாள்.  இறுதியில் அவள் கரையொதுங்கிய ‘பன்யாக்’ தீவின் மீனவர் ஒருவரின் பார்வையில் பட்டுவிட்டாள். உயிருக்குப்  போராடிக்கொண்டிருந்த அச்சிறுமியை எடுத்துச் சென்று, சுமத்ராவில் வசிக்கும் தன் தாயிடம் ஒப்படைத்தார் அந்த மீனவர். அந்தப் புதிய தாய், அச்சிறுமிக்கு ‘வெண்ணி’ என்ற பெயர் வைத்து வளர்த்துவந்தார். 

சிறுமியும் தனக்குக் கிடைத்த மறுவாழ்வாக எண்ணி, கடந்த பத்தாண்டுகளாக அங்கேயே வளர்ந்து வந்தாள்.  இதற்கிடையில், அவளின் பெற்றோர் தாம் இழந்த பிள்ளைகள் இருவரையும் பற்றித் தகவல் அறிந்தவர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவ்விருவரின் படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். 

கடந்த ஜூன் மாதத்தில் ஒரு நாள், சிறுமியின் தாய் மாமா Acehவின் தெருவில் நின்ற சிறுமி தன் மருமகளின் தோற்றத்தில் இருந்ததைக் கண்டு, நின்று நிதானமாக நோக்கினார்.  பத்தாண்டுகளுக்கு முன் இழந்த தன் மருமகள்தான் அவள் என்று உறுதிப்படுத்திக்கொண்டு, அவள் வசிக்கும் வீட்டைக் கேட்டறிந்து, விசாரித்தார்.  முடிவில், தன் மருமகள் ரவ்ழாதான் என்பதை உறுதி செய்துகொண்டு, அவளின் தாயான தன் சகோதரிக்கு அறிவிப்புச் செய்தார்.

உடனே புறப்பட்டு வந்தனர் பெற்றோர் இருவரும்.  தன் உண்மைத் தாயைக் கண்ட ரவ்ழா, தாயை ஆரத் தழுவினாள்!  தாய் ஜமாலியா ஜன்னா அதைவிடப் பன்மடங்கு ஆனந்தத்தில் மூழ்கினார்!தாம் இழந்திருக்கும் இன்னொரு பிள்ளையான ஆரிஃப் என்றாவது ஒரு நாள் உயிருடன் வருவான் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரவ்ழாவின் பெற்றோர். 

அதிரை அஹ்மது

4 கருத்துகள்

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும். சுப்ஹானல்லா!அல்லாஹ் மகா பெரியவன்! இப்ப கொஞ்சமாவது அவர்களின் சோக அலை வடிந்திருக்கும்! மற்றபிள்ளையும் கிடைத்துவிடும் என நம்பிக்கை அலை அடிக்க ஆரம்பித்திருக்கு இன்சா அல்லாஹ் ஒருனால் அந்த அலையும் கரை ஒதுங்கும்!அவர்கள் கவலை வடியும்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

தான்இழந்திருக்கும்இன்னொருபிள்ளைஆரிபும்என்றாவது ஒருநாள்வருவான்என்றுகாத்திருக்கும்தாயே!நீபால்கொடுத்தபாசத்தின் தேடலுக்குஅல்லாஹ்உனக்குநல்லபரிசளிப்பான்.ஆமீன்

sabeer.abushahruk சொன்னது…

சுனாமி சார்ந்த நிகழ்வுகளில் ஏராளமான ஆச்சர்யங்களும் அதிர்ச்சியானவையும் உள்ளன.

அவ்வகையில் இதுவும் ஆச்சர்யமான, இறைவனின் அற்புதத்தைச் சொல்லும் பதிவு.

Ebrahim Ansari சொன்னது…

சுனாமி சார்ந்த நிகழ்வுகளில் ஏராளமான ஆச்சர்யங்களும் அதிர்ச்சியானவையும் உள்ளன.

அவ்வகையில் இதுவும் ஆச்சர்யமான, இறைவனின் அற்புதத்தைச் சொல்லும் பதிவு.