வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

தொடர் : பகுதி ஆறு

உலக வரலாற்றில் பல விந்தையான வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட பலரை சந்தித்து இருக்கிறோம். வெறி கொண்ட வேங்கைள் போல உயிர்களை வெட்டிச் சாய்த்தவர்களையும் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதியவர்களையும் நல்லது செய்யப் போய் தானாகவே வம்புகளில் மாட்டிக் கொண்டவர்களையும் நல்லவர்களாக நடித்த கெட்டவர்களையும் வரலாறு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் நாம் சந்திக்க இருக்கும் சலாஹுதீன் அய்யூபி என்ற பெயர் படைத்த ஒரு மாவீரர் தான் செய்திருக்கும் சாதனைகளின் அளவுக்கு அவ்வளவாக உலகத்தாரால் அறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அடிப்படையில் ஒரு வீரராகவும், ஆளுமையில் ஒரு இராஜ தந்திரியாகவும், சூழ்நிலைகளைக் கையாளுவதில் சாதுரியம் மிக்கவராகவும், துயரத்தில் இருப்பவர்களை அரவணைப்பதில் காருண்யம் மிக்கவராகவும் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் வரலாற்றில் ஆஜராகி இருக்கிறார். வீரமும் அன்பும் கருணையும் காருண்யமும் நிறைந்த அந்த மாவீரரின் வீரப்படலத்தைப் பார்க்கலாம். ஒரு குறுநில மன்னராக அறிமுகமாகி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வெற்றிக் கனிகளைத் தன் மடி நிறையக் கட்டிக் கொண்ட சலாஹுதீன் அய்யூபி அவர்களைப் பற்றிக் காணலாம். 

பாலஸ்தீனம், கிருத்துவர்களால் கைப்பற்றப்பட்ட பிறகு எஞ்சி இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் எகிப்து நாட்டில் கலிபாவின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தவர்தான் குர்திஷ் இனத்தைச் சேர்ந்த சலாஹுதீன் அய்யூபி. நபிமார்கள் அடங்கப்பட்ட ஜெருசலமும் வளமிக்க பாலஸ்தீனமும் முஸ்லிம்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டது சலாஹுதீன் அய்யூபிக்கு மண்டைக் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மீண்டும் பாலஸ்தீன் முஸ்லிம்களின் கைகளுக்கு வரவேண்டுமென்று இரவுபகல் எண்ணம் கொண்டவராக இருந்தார். ஆனால் மிச்சம் இருக்கும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் சலாஹுதீன் அய்யூபின் நிலை, ஒரு மாநிலத்தின் மன்னர் என்பது மட்டும்தானே தவிர முழு அதிகாரமும் படைத்தவரல்ல. ஆகவே நடை முறைப்படி, அரசராக இருப்பவரின் அனுமதி பெற்றே காய்களை நகர்த்த வேண்டிய நிலை. 

ஆனாலும் அவர் வைத்திருந்த வாளின் அரிப்பைத் தாங்க முடியாமல் லிபியாவின் ஒரு பகுதியையும் கூடவே யேமன், ஹிஹாஸ் ஆகிய பகுதிகளையும் கிருத்தவர்களுடன் போரிட்டு வென்று இஸ்லாமிய சாம்ராஜ்யத்துடன் இணைத்த பெருமைக்குரியவராக இருந்தார். 

இத்தனை பகுதிகளை வென்ற சலாஹுதீன் அய்யூபிக்கு ஜெருசலத்தையும் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை உருவாகி இருந்தது. இதற்காக அவருக்குத் தேவைப் பட்டது இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி உடைய அனுமதியும் ஒத்துழைப்பும்தான். அதற்காக சக்கரவர்த்தியைச் சந்தித்து தனது திட்டங்களை விவரித்து ஜெருசலத்தை வெற்றி கொண்டுவிட வேண்டுமென்ற வெறி அல்ல இன உணர்வு, சலாஹுதீன் அய்யூபினுடைய உள்ளத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. 

ஆனால் சக்கரவர்த்தியோ இன்னொரு சுயனலவாதியின் கைப்பாவையாக மட்டுமல்ல நடப்பது எதையுமே அறியாத அறிய இயலாத சின்னஞ்சிறு வயதினராகவும் நோஞ்சானாகவும் இருந்தார். அவருடைய தந்தை நூருத்தின் மஹ்மூத் என்பவர் மறைந்ததால் வாரிசு முறைப்படி, முகத்தில் மீசை கூட முளைக்காத அல்ல .... அரும்பு கூட விடாத மலீக்க்ஷா என்பவர்தான் சக்கரவர்த்தியாக இருந்தார். 

வேங்கைகள் அமர்ந்து இருந்த சிம்மாசனத்தில் மலீக்க்ஷா என்கிற வெள்ளாட்டுக் குட்டி அமர்ந்து கொண்டு செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் கைகளில் சட்டி குடுவைகள் கொடுக்கப்பட்டு அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து அவைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

சக்கரவர்த்தியை பொம்மையாக்கி சாவி கொடுத்து ஆடவைத்துக் கொண்டிருந்தவர் இன்னொரு மாநிலத்தின் மன்னராக இருந்த குமுஷ்தஜின் என்பவராவார். அறியாப் பருவத்தில் சக்கரவர்த்தி - அவரை ஆட்டிவைக்க கொடிய எண்ணம் கொண்ட குமுஸ்தஜின் ஆகியோர் கொண்டதே அரசியல் அமைப்பாக இருந்தது.

சக்கரவர்த்தியைத் தடம் புரளச் செய்து ஒழித்துக் கட்டிவிட்டு தானே சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக பட்டம் சூட்டிக் கொள்ள குமுஸ்தஜின் ஆசையும் ஆர்வமும் கொண்டு அதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கி இருந்தான். அவன் ஏற்படுத்திய இரும்புத்திரைக்குப் பின்னால் சக்கரவர்த்தி ஒரு சிறைக்கைதியைப் போல் போட்டதைத் தின்று கொண்டு பொழுது போக்கிக் கொண்டு இருந்தார்.

சட்டப்படி, அந்நியருடன் போடும் சண்டைகளுக்கு சக்கரவர்த்தியின் அனுமதிவேண்டுமென்ற நிலையில் அவரை சந்தித்து சம்பிரதாயமாக ஒரு அனுமதி வாங்கி பாலஸ்தீனத்தின் மீது படையெடுக்க சலாஹுதீன் அய்யூபி திட்டமிட்டார். ஆனால் சக்கரவர்த்தியை சலாஹுதீன் அய்யூபி போன்ற மாவீரர்கள் சந்தித்து விட்டால் தனது சதி வேலைகளுக்கு சக்தி இல்லாமல் போய்விடுமென்று உணர்ந்த குமுஸ்தஜின், சக்கரவர்த்தியை சலாஹுதீன் அய்யூபி சந்தித்து விடாமலிருக்க அனைத்து வகையான தடைகளையும் ஏற்படுத்தினார். 

ஏற்கனவே தன்னந்தனியாக பல பிரதேசங்களை வென்று இருந்த சலாஹுதீனுக்கு இந்த நிலை சலிப்பை ஏற்படுத்தியது. தானே சுதந்திர மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டு போர் தொடுக்கலாமா என்று கூட யோசித்தார். ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியுடனேயே போர் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படுமே என்ற எண்ணத்தில் அவரது ஆர்வத்தைத் தள்ளிப் போட்டார். 

ஆனாலும் காலம் கடந்ததே தவிர சக்கரவர்த்தியால் சரியான நிலைக்குவர இயலவில்லை. குமுஸ்தஜின் குறுக்கே நின்று கொண்டே இருந்ததால் பொறுமை இழந்த சலாஹுதீன் அய்யூபி போருக்கு தயாராக வேண்டிய நிலை வந்தாலும் தான் கவலைப்படப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். அவரது அந்த அறிவிப்பு சாம்ராஜ்யத்தை ஒரு கலக்கு கலக்கியது. சலாஹுதீன் அய்யூபி போன்ற நினைத்ததை முடிப்பவருடைய அறிவிப்பால் உள்ளதும் போய்விடுமோ என்று சாம்ராஜ்யத்தை யோசிக்க வைத்தது. அதனால் சலாஹுதீன் அய்யூபியை தனி உரிமை பெற்ற சுல்தானாக சாம்ராஜ்யம் அங்கீகரித்தது. சலாஹுதீன் அய்யூபி ஆளும் பகுதிகளில் சாம்ராஜ்யம் தலையிடாது; குறுக்கிடாது என்று அறிவிக்கப்பட்டது. இப்படியாக சலாவுதீன் ஆண்டுகொண்டிருந்த எகிப்து மற்றும் அவர் வெற்றி கொண்ட பகுதிகளுக்கு சாதாரண சலாஹுதீன் அய்யூபி சுல்தான் சலாஹுதீன் அய்யூபியாக உருவெடுத்தார்.

நோஞ்சானாகவும் விளையாட்டுப் பிள்ளையாகவும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின் பதவியில் அமர்ந்து இருந்த மலீக்க்ஷா 1182 ஆம் ஆண்டில் தனக்கு இருபது வயது கூட நிரம்பாமல் இருந்த நிலையில் இறந்து போனார். சக்கரவர்த்தியின் இறப்புக்காகவே காத்திருந்தது போல் சக்கரவர்த்தி மறைந்த செய்தி கிடைத்ததுமே சலாஹுதீன் விஸ்வரூபம் எடுத்தார். தனது படைகளைத் திரட்டிக் கொண்டு பெரும்பாலும் மத்திய ஆசியா முழுவதையுமே கைப்பற்றினார். சலாஹுதீனுடைய சண்டமாருத நிலையைக் கண்ட பல சின்னஞ்சிறு அரசுகள், சலாஹுதீனுடன் போர் செய்து புண்ணியமில்லை என்று கருதி தங்களின் பொழுதை வீணாக்காமல் வா! ராஜா வா! என்று சலாஹுதீனை வரவேற்று சலாஹுதீனுடைய அதிகாரத்துக்கு அடிபணிவதாக தாங்களே முன் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு சலாஹுதீனை அரசராக ஏற்றுக் கொண்டார்கள். மத்திய ஆசியா முழுதும் சலாஹுதீன் வெற்றிக் கொடி கட்டி- பகைவரை முட்டும்வரை முட்டி – அவரை தட்டும் வரைதட்டி தன்னிகரில்லாத் தலைவராக உருவெடுத்தார். ‘மாபெரும் சபைகளில் அவர் நடந்தால் அவருக்கு மாலைகள் விழுந்தன. ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் என்று அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள் ‘ . அரசர்கள் அய்யூபியின் வீரத்துக்கு முன் மண்டியிட்டார்கள். வலிமை நிறைந்த சலாஹுதீனை வலிய வந்து ஏற்றுக் கொண்டு தங்களை அவருடன் இணைத்துக் கொண்டார்கள்.

ஆனால் விதிவிலக்காக சிரியா மட்டுமே கிருத்தவர்களின் ஆட்சியின் கீழ் மிச்சம் இருந்தது. சிரியாவையும் வீழ்த்திவிடவேண்டுமென்று சலாஹுதீன் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது சிரியா தானாக வந்து பொறியில் மாட்டியது. ஒரு முஸ்லிம்களின் வணிகக் குழு சிரியாவின் வழியாகச் சென்று கொண்டிருந்த போது, சிரியாவின் கிருத்தவ இராணுவம் அவர்களைத் தாக்கி வணிககுழுவில் இருந்த அனைத்து முஸ்லிம்களையும் கொன்று போட்டது. இதுவே சிரியா மீது படை எடுப்பதற்கு சலாஹுதீன் அவர்களுக்கு போதுமான காரணமாக அமைந்தது. பொங்கி எழுந்தார்; புறப்பட்டார் சிரியா நோக்கி. 

ஆக்ரோஷமாக போரில் இறங்கிய சலாஹுத்தீனின் படை சிரியாவின் இராணுவத்தை துவம்சம் செய்தது. வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி கிட்டத்தட்ட பத்தாயிரம் கிருத்துவ வீரர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். இன்றைய லெபனான் நாட்டின் பிரதேசங்களாக நாம் காணும் பெய்ரூட், ஜாபா முதல் ரமல்லா, டால்மெய்ஸ், நப்லஸ் போன்ற அன்றைய சிரியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் சலாஹுதீன் அவர்களின் வசமாயின. இப்படியாக , சிரியாவுடனான இந்த யுத்தத்தின் போக்கும் பாதையும் சலாஹுதீன் அவர்களை ஜெருசலத்தின் எல்லை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் கொண்டு போய் நிறுத்தியது

அடுத்தது என்ன?

சலாஹுதீன் அய்யூபி அவர்களின் நீண்டநாள் கனவான ஜெருசலமும் பாலஸ்தீனமும் வீழ்ந்து மீண்டும் முஸ்லிம்களின் ஆட்சி அங்கு ஏற்பட்ட வரலாறுதான்.

அங்கே நடந்த அரசியல் அதிகாரத்தின் அதிசயங்களை அடுத்த வாரம் காணலாம். இன்ஷா அல்லாஹ். 

இபுராஹீம் அன்சாரி

11 கருத்துகள்

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

வரலாறு சொல்வதற்கும் தனித் திறமை வேண்டும், எவ்வித சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக எடுத்துச் செல்லும் எழுத்து நடை - மாஷா அல்லாஹ் !

ஆரம்பித்த இடத்திலிருந்து இந்த அத்தியாயம் நிறைவாகும் வரை அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது, இவ்வாறு எடுத்துச் சொல்லும் பாங்குதான் மனதிலும் ஆழமாக பதியும்.

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...!

sheikdawoodmohamedfarook சொன்னது…

//நல்லவர்களாஇருந்தகெட்டவர்களையும்வரலாறுபடம்பிடித்துகாட்டுகிறது//உப்புபுளிமிளகாய்போட்டால்தான்மீன்ஆனம்ருசிக்கிறது.அதுபோல் சரித்திரத்திலும்நல்லவர்களும்கெட்டவர்களும்;கோழையும்வீரனும் இருந்தால்தான்சரித்திரம்ருசிக்கிறது. மாவீரனை சரித்திரம் புகழ்கிறது;கோழையேஇகழ்கிறது.இந்தவாரமும் சென்ற வார 'சடப்புடா! கடப்புடா'வை எதிர்பார்த்தேன். ஆற்றுநீர் அமைதியாக ஓடுகிறதே?!

sheikdawoodmohamedfarook சொன்னது…

தயவுசெய்துஅடுத்தவாரம்நம்மராஜாவும்அடுத்தநாட்டுராஜாவும்சண்டை போட்டுநம்மராஜாதோத்துபோறமாதிரிஒருவரலாறுஎழுதுங்க.அப்பத்தான் நாங்கசூடானகமென்ட்போடஎங்களுக்குபாயிண்ட்கிடைக்கும்.இப்போமாதிரிகைசூப்புற புள்ளயே ராஜாவாக்குற சப்புண்ட சரித்திரமெல்லாம்வேண்டாம் .பாதிபடிக்கும்போதேதூக்கம்வந்துருச்சு!

Ebrahim Ansari சொன்னது…

பெரியவர் மச்சான் எஸ் எம் எப் அவர்கள் சொன்னது

//இப்போமாதிரிகைசூப்புற புள்ளயே ராஜாவாக்குற சப்புண்ட சரித்திரமெல்லாம்வேண்டாம் //

கற்பனையை எழுதுவதானால் மனோகரா! உன்னை ஏன் அழைத்துவரச் செய்திருக்கிறேன் தெரியுமா ? என்றும் திருத்திக் கொள்ளுங்கள் தயவு செய்து அழைத்துவரவில்லை இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள் என்று எழுதலாம் .

ஆனால் நடந்ததை எழுதுகிறேன். இதிலும் சுவை கூட்டத்தான்
// வேங்கைகள் அமர்ந்து இருந்த சிம்மாசனத்தில் மலீக்க்ஷா என்கிற வெள்ளாட்டுக் குட்டி அமர்ந்து கொண்டு செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியின் கைகளில் சட்டி குடுவைகள் கொடுக்கப்பட்டு அவர் சிம்மாசனத்தில் அமர்ந்து அவைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.// என்றெல்லாம் கவரும்படி எழுதி இருக்கிறேன். . இன்னும் கவர்ச்சியாக எழுத வேண்டுமென்றால் குத்தாட்டம்தான் போட வேண்டும்.

Ebrahim Ansari சொன்னது…

//இந்தவாரமும் சென்ற வார 'சடப்புடா! கடப்புடா'வை எதிர்பார்த்தேன். ஆற்றுநீர் அமைதியாக ஓடுகிறதே?!//

புயலுக்குப் பின்னே அமைதி.

சடப்புடா கடப்புடா இல்லாமல் சரித்திரம் ஏது?

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.

இந்த வாரம் அமைதியாக ஓடிய நதி அடுத்த வாரம் ரத்த ஆறாக ஓடப் போகிறதே!

Ebrahim Ansari சொன்னது…

தம்பி அபு இப்ராஹீம் அவர்களுக்கு,

இந்தத் தொடரின் வாரபப்திவுகளை மிக நீண்டதாக எழுதாமல் சின்னச்சின்ன அத்தியாயமாக எழுதும்படி ஒரு அறிவுரை/ கோரிக்கை/ ஆலோசனை/ நல்லெண்ணம் கலிபோர்னியாவிலிருந்து .

அதன்படி எழுதியுள்ளேன். இனியும் இவ்வாறே இன்ஷா அல்லாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

மாவீரனின் அருமையான வரலாறு,அழகு மொழி நடையில்.நன்றி காக்கா.
ஒரு சிறு திருத்தம்.அவர் இன உணர்வுக்காகப் போராடவில்லை.மாறாக இஸ்லாம் மார்க்கத்தின் முதல் கிப்ளாவை மீட்க வேண்டும் என்ற மார்க்க உணர்வுடனேயே போரிட்டார்.
இதை அவர் நடந்து கொண்ட விதங்கள் மூலம் அறிய இயலும் .மேலும் மார்க்க உணர்வு தவிர வேறு எந்த உணர்வுக்காகவும் (இன,மொழி,பிராந்தியம் etc)போராடினால் அல்லாஹ் ஏற்க மாட்டான் என ஹதீஸ் உள்ளது.

Ebrahim Ansari சொன்னது…

Ref: Bro. Ibn. Abdul Razak

//இஸ்லாம் மார்க்கத்தின் முதல் கிப்ளாவை மீட்க வேண்டும் என்ற மார்க்க உணர்வுடனேயே போரிட்டார்.//

Exactly.

முதல் கிப்லா மாற்றாரிடம் இருப்பதை ஏற்காமல்தான் அவர் போரிட்டாவது மீட்க வேண்டுமென்று நினைத்தார் என்பதை குறிப்பிட்டுத்தான் இருக்க வேண்டும்.

பதிவில் நான் எழுதியதில் கீழ்க்கண்ட பகுதியில்

//நபிமார்கள் அடங்கப்பட்ட ஜெருசலமும் வளமிக்க பாலஸ்தீனமும் முஸ்லிம்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டது சலாஹுதீன் அய்யூபிக்கு மண்டைக் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மீண்டும் பாலஸ்தீன் முஸ்லிம்களின் கைகளுக்கு வரவேண்டுமென்று இரவுபகல் எண்ணம் கொண்டவராக இருந்தார்.//

என்கிற பகுதியில் முதல் கிப்லா முஸ்லிம்களிடமிருந்து பிடுங்கப்பட்டது சலாஹுதீன் அய்யூபிக்கு மண்டைக் குடைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தது என்று எழுதி இருந்தால் சிறப்பாகவே இருந்திருக்கும் .


ஜசாக் அல்லாஹ் தம்பி இப்னு அப்துல் ரெஜாக்.

sabeer.abushahruk சொன்னது…

எழுத்தின் வாயிலாக காட்சிகளை கண்முன் விரிக்க உங்களால் மட்டும்தான் காக்கா முடியும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

உமர் முக்தார் படத்தை இயக்கிய இயக்குனர் எனது அடுத்த திரைப்படம் பாலஸ்தீன் மாவீரன் சலாஹுத்தின் அய்யூபி அவர்களின் வரலாறு என்று சொன்னதும் இஸ்ரேல் நடுங்கியது.இந்த படம் எடுக்கப்பட்டால் இஸ்ரேல் என்ற நாடு ஒன்று இல்லாததையும்,நாம் அகதிகள் தான் என்பதையும் உலக மக்கள் அறிந்துகொள்வார்கள் என்று பயந்து அந்த இயக்குனரை ஜோர்தான் ஹோட்டலில் குண்டு வைத்து கொலை செய்தார்கள்.