நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நல்லாருக்கியாம்மா? 43

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், டிசம்பர் 11, 2014 | , ,


(மகளுக்கு ஒரு மனு II)

என் அன்பு மகளே,

பிறப்பதற்கு முன்பிருந்தே
என்னைப்
பிறிந்திருந்ததில்லை நீ

உன்
உம்மா வயிற்றைத் தடவி
உன்னை உணர்ந்து
உற்சாகமான காலங்கள் அவை

மாலை வேளைகளில்
மதிலென வளர்ந்த
மரங்களுக்கு இடையேயான
நடை மேடையில்
உன்
உம்மோவோடான உலாவில்
உனக்கான உலகை
உரையாடி மகிழ்ந்தது
உனக்கும் கேட்டிருக்குமா

அனல் பறக்கும்
அரபு தேசத்தில்
உற்றார் உறவினர் என
ஒருத்தர்க்கூட உடனில்லாத
ஒற்றைத் தம்பதியான எமக்கு
உன் பிறப்பு
ஓர்
அல்லாஹ்வின் அருட்கொடை

மணல் பூக்கும் பாலையில்
மகள் நீ பிறந்தாய்
வளைகுடாவில் நம் வீடு
இன்னொரு மகள் வரவால்
பூவனமானது.

கைகளில் தவழ்ந்த
கற்கண்டு உன்னை
கண்களால் பருகி
களிப்புற்றிருந்தேன்

நீ
புரண்டு படுத்தது
முரண்டு பிடித்தது
தரையில் தவழ்ந்தது
தடையில் விழுந்தது

என
உன் ஒவ்வொரு
வளர்ச்சி மாற்றத்தையும்
உண்ணிப்பாகக் கவனிப்பேன்
உள்ளம் பூரிப்பேன்

எழுத்துரு இல்லாத
உன்
மழலை மொழி
என்
எல்லா பொழுதுகளையும்
இன்பமய மாக்கியது

எழுந்து நடக்க முயன்று நீ
விழுந்து கிடக்க

என்
ஆள்காட்டி விரல் பிடித்து
அழகு நடை பயில
அக்கணம்
அண்ணாந்து பார்க்கும்
உன் அழகு முக
வாய் பூக்கும் பூக்கள்
வனத்து பூக்களையும் மிஞ்சும்
நீ பார்க்கும் பார்வை
நெஞ்சை நிறைக்கும்

என் கைகளிலும்
தோளிலும் தலையிலும்
நெஞ்சிலும் வயிற்றின் மேலும்
சில சமயயம்
ஊஞ்சலென கால்களிலும்
நீ
என்னைத் தொட்டுக்கொண்டே
வளர்ந்து வந்தாய்

கண்ணுக்கு மட்டுமல்ல
கைக்கும் எட்டும் தூரத்திலேயே
என் மகள் நீ
இருந்து வந்தாய்

இளமையை வளர்த்தும்
முதுமையைத் தேய்த்தும்
காலம் ஓடியது

உனக்கென ஒரு
கனவை விதைத்து
அதை மெய்ப்படுத்த
கடினமாய் உழைத்து
கண் துஞ்சாது
மெய்வருத்தம் பாராது
படித்து
இன்றோ
மருத்துவ மாணவியாக
வெகு தொலைவில்
ஒற்றையாய் நீ

படிப்பை நீ கவனிக்க
உன்னைக் கவனிக்க
உடனில்லையே நான் என்ற
உள்ளத்து வலிக்கு
உன்னிடமிருந்து
உன் தந்தை எதிர்ப்பார்க்கும்
ஒரே மருந்து:

"நான் நல்லாருக்கேன் வாப்பா"

-ஷஹ்னாஸ் வாப்பா
Sabeer Ahmed abuShahruk

43 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//இளமையை வளர்த்தும்
முதுமையைத் தேய்த்தும்
காலம் ஓடியது//

அத்தனையும் உயிரோட்டம்...
உருக்கியெடுக்கும் உணர்வு (கண்ணீர்) கோர்வை...
கொடுத்து வைத்த மகள்(கள்)..

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahruk

Your beautiful poem shows your true infinite bond of love towards your child Shahnaz. I am having similar amazing experience with my younger child Shaikha now here in Dubai. Alhamdulillah...

Nothing is equal to that joy and cheers of cute child's beauty of talking and each and every activities of the childhood moments.

Thanks for the poem and the picture of younger age father and daughter.!!!.

B. Ahamed Ameen from Dubai.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

"நான் நல்லாருக்கேன் வாப்பா"
ஒரு வரி
ஆயிரம் அர்த்தம்

அருமை

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

Assalamu alaikkum.

Kavi kakavin manu
Ovvoru thanthaikkum nalla oru menu.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும். கவிஞரே! படித்துக்கொண்டு வரும் போதே இறுதியில் இப்படித்தான் எழுதிமுடிச்சிருப்பீங்கன்னு உங்கள் கவிதையுடன் நன்கு பழகியவன்(உங்களை விட உங்கள் கவிதை எனக்கு நல்ல பரிச்சியம்)என்றவரையில் கண்டுபிடித்து விட்டேன்!ஹா,ஹா,ஹா,ஹா.....

crown சொன்னது…

உன்
உம்மா வயிற்றைத் தடவி
உன்னை உணர்ந்து
உற்சாகமான காலங்கள் அவை
-------------------------------------------------
எத்தனை முறை இப்படி செய்து பரவசப்பட்டிருப்போம்! மெயி சிலிர்க்கும் தருணம் அது!

crown சொன்னது…

மாலை வேளைகளில்
மதிலென வளர்ந்த
மரங்களுக்கு இடையேயான
நடை மேடையில்
உன்
உம்மோவோடான உலாவில்
உனக்கான உலகை
உரையாடி மகிழ்ந்தது
உனக்கும் கேட்டிருக்குமா
-------------------------------------------------------------
கேட்டுத்தான் இருக்கும் கவிஞரே! அதானால் தான் அன்று போட்ட பதியம் இதயத்தில் பதிந்து பலர் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் மருத்துவராக உருவெடுத்திருக்கிறது இன்று என நம்புகிறேன்!

crown சொன்னது…

அனல் பறக்கும்
அரபு தேசத்தில்
உற்றார் உறவினர் என
ஒருத்தர்க்கூட உடனில்லாத
ஒற்றைத் தம்பதியான எமக்கு
உன் பிறப்பு
ஓர்
அல்லாஹ்வின் அருட்கொடை
-------------------------------------------------
ஆம் அல்லாஹ்வின் அருட்கொடையான இந்த குடை உங்களின் நிழல்களில் வளர அல்ல உங்களுக்கு தனிமை வெப்பம் தணிக்கும் நிழல் தந்த நிஜம்!

crown சொன்னது…

எழுத்துரு இல்லாத
உன்
மழலை மொழி
என்
எல்லா பொழுதுகளையும்
இன்பமய மாக்கியது
-----------------------------------------------
மழலை மொழி இது பூ ஓசையின் மொழிப்பெயர்ப்பு!கவன ஈர்ப்பு!

crown சொன்னது…

என்
ஆள்காட்டி விரல் பிடித்து
அழகு நடை பயில
அக்கணம்
அண்ணாந்து பார்க்கும்
உன் அழகு முக
வாய் பூக்கும் பூக்கள்
வனத்து பூக்களையும் மிஞ்சும்
நீ பார்க்கும் பார்வை
நெஞ்சை நிறைக்கும்
-------------------------------------------------
வாய் பூக்கும் பூக்கள்! இனி ஒரு முறை இது வாய்க்கும்? அதுவும் கைகூடி வந்தது உன் குழந்தை மூலம்(கவி தாத்தாவுக்கு)!எல்லாருக்கும் இது வாய்க்க வல்ல நாயன் அல்லாஹ்வை வேண்டி நிற்ப்போம்!!!

crown சொன்னது…

படிப்பை நீ கவனிக்க
உன்னைக் கவனிக்க
உடனில்லையே நான் என்ற
உள்ளத்து வலிக்கு
உன்னிடமிருந்து
உன் தந்தை எதிர்ப்பார்க்கும்
ஒரே மருந்து:

"நான் நல்லாருக்கேன் வாப்பா
-------------------------------------------------------------------
இந்த ஒற்றை வார்தை கற்றை ,கற்றையாய் சந்தோச ஒளிப்பாய்ச்சுது!அல்ஹம்துலில்லாஹ்! யாவருக்கும் இது போல் நடக்க அல்லாஹ் போதுமானவன்! உணர்வு சுமந்தகவிதை!சின்ன தாக மனதில் இன்ப சுமையை ஏற்றிவிட்டது!

sabeer.abushahruk சொன்னது…

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,

//உங்களை விட உங்கள் கவிதை எனக்கு நல்ல பரிச்சியம்)//

என் கவிதைகளுக்கும்
என்னைவிட
உங்களை மிகவும் பரிச்சயம்

மற்றவர்களால்
வாசிக்கப்படுபவை
உங்களிடம்
வசியப் படுகிறது

எப்படி முடிக்கப் போகிறேன்
என்பதைக்
கண்டிப்பாக யூகித்திருப்பீர்கள்

ஏனெனில்
இதைத்தானே தற்காலம்
தினமும் கேட்க விழைகிறது
தங்கள் செவியும்

Ebrahim Ansari சொன்னது…

பாசத்தின் பதட்டம்! அன்பின் அடையாளம். ! இதுபோல் பிரிந்திருக்கும் பலரின் உணர்வுகளின் உருவகம். !

வழக்கமான கவிதைகளிலிருந்து இது வேறுபட்டது. இப்படி வேறுபட்டதற்கு காரணம் பெற்ற மகளோடு ஒன்றுபட்டதே.

al thahleel சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்....உங்கள் மகள் ஷஹ்னாஸ்ஸை கொன்டு அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக...ஆமுன்

Abdul Khadir Khadir சொன்னது…

எழுந்து நடக்க முயன்று( ஒரு சிறந்த மருத்துவராக முயன்று) நீ
விழுந்து கிடக்க (உன் முயற்ச்சியில் எந்த தொய்வும் இல்லாமல் எல்லா கட்டத்திலும்) நான் உனக்காக ஆதரவாக நின்று உன் வாழ்க்கை வெற்றி பெறத்தான் என்று நீ நினைத்தது போல எனக்கு சொல்ல தோன்றுகின்றது.

உன் கருவை உன் மனைவி சுமந்து அதை ஒரு அழகிய மகளாக
அறிவுள்ள மகளாக பெற்றது இறைவன் அருட்கொடையே !

அபு ஆசிப்.

Abdul Khadir Khadir சொன்னது…

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

மழலை மொழிக்கு ஈடு இணை ஏது ?

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

அல்ஹம்துலில்லாஹ்....அருமையான கவிதை வரிகள் வளைகுடாவில் மட்டுமல்ல பல்லாண்டுகளாக மடமைத்தனமாக தன் வாழ் நாளை தொலைத்து வாழும் பெரிய நாடுகளிலும்தான்.

அதிரை.மெய்சா சொன்னது…

பாலைவனத்துப் பால்மணக்கப்
பிறந்ததாலோ என்னவோ
உன் அருமை மகள்
சோலைவனத்துப் பைங்கிளியாய்
சொக்கத் தங்கமாய்
சுடர்விட்டு மின்னும் நட்சத்திரமாய்
இன்று தூரத்தில் அஸ்தமித்தாலும்
தாமதிக்காமல்
உந்தன் நிழல்போல
உனக்குள் ஒருவனாய்
உன் நினைவுகளோடு
ஒட்டிக் கொண்டிருப்பதே
உன் பாசப் பிடிப்பினையை
பறை சாற்றுகிறது நட்பே

உன் நினைவுகளுக்குள்
ஒளிந்து
ஒளி வீசிக் கொண்டிருக்கும்
உன் அன்புமகளின்
எண்ணற்ற
சமூக சேவைகள் யாவும்
சுமூகமாய்ச் சுபிட்சம் பெற்று
சாந்தியுடன்
இனி வரும் காலத்தை
சந்தோசங்கள் சங்கமிக்க
சலனமற்று வாழ்த்துகிறேன்
மனதார

சமாதானம் கொள். நண்பா
உன் அன்பு மகள் உன்னோடுதான்
என்றென்றும் உன்னோடு தான்..

Riyaz Ahamed சொன்னது…

சலாம் பாச நேசத்தை பகிர்வதில் என் பெரியண்ணாவின் கவி வரிகள் ஒவ்வொன்றும் ஒரு காவியம் படைக்கும்.

crown சொன்னது…

சுடர்விட்டு மின்னும் நட்சத்திரமாய்
இன்று தூரத்தில் அஸ்தமித்தாலும்
----------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். கவிஞரே! சொல்லுங்கள் இதில் அஸ்தமனம் என்பது மொழிக்குற்றமாய் இருப்பதால் பொருள் குற்றமாய் ஆகி நிற்கிறது!அல்லாஹ் தங்கள் மகளின் ஆயுளை நீடிப்பானாக ஆமீன் , நண்பரிடம் விளக்கவும்!

அதிரை.மெய்சா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பின் சகோதரர் கிரவுன் அவர்களுக்கு தாங்கள் குற்றம் கண்ட இவ்வரிகளை என்னால் குற்றமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் சில சூழ்நிலையில் அதன் பொருளை நாம் மாற்றித்தான் யோசிக்க வேண்டும். எதையும் மேலோட்டமாகமட்டும் பார்க்காமல் சற்று ஆழமாக சிந்தித்தால் அதன் அர்த்தம் புரியும்.

//சுடர்விட்டு மின்னும் நட்சத்திரமாய்
இன்று தூரத்தில் அஸ்தமித்தாலும்
தாமதிக்காமல்
உந்தன் நிழல்போல//

அஸ்த்தமானம் உதயம் என்பதின் எதிர்மறைப் பொருள். அது நிரந்தர மறைவுக்கு அர்த்தமாகாது.

அதாவது என்நண்பன் தன்மகளைவிட்டு பிரிந்து இருப்பது இவ்வுலக வாழ்க்கையில் தற்காலிகப்பிரிவு [அஸ்த்தமானம் ] மீண்டும் தாமதிக்காமல் உதயமாகும் என்பதே அர்த்தமாகும். இதற்குமேல் விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். மீண்டும் ஆட்சேபனை இருந்தால் கருத்தை நீக்கி விடுகிறேன்.

Shameed சொன்னது…

//எழுத்துரு இல்லாத
உன்
மழலை மொழி
என்
எல்லா பொழுதுகளையும்
இன்பமய மாக்கியது//

முட்டை என்று நாம் சொல்லும்போது உங்கள் மகள்
புட்டை என்று மழலை மொழி சொன்னது இன்றும் நினைவில் இருக்கு

DIGITECH சொன்னது…

//"நான் நல்லாருக்கேன் வாப்பா"//என்ற வார்த்தை நிச்சயம் அருமருந்தாகும்

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

இப்பதிவுக்குத் தொடர்புடைய இன்னும் இரண்டு கவிதைகளச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்:

மகளுக்கொரு மனு

முதல் மகளே
நீ
மூத்த பெண்ணானாய்!

வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்!
வீடு முழுவதும்
ஊடுருவினாய் - நீ
இல்லத்தில் இல்லாத
நேரத்திலும் - என்
உள்ளத்துள் நிறைந்து நின்றாய்!

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்றாய்
பெற்றவன் என்னிடம்
பட்டறிவு பெற்றாய்!

அலிஃப் பா தா உன்
அழகுவாய் கற்கையில்
அஞ்சு வேளைத் தொழுததுபோல்
நெஞ்சு நெகிழ்ந்தது!

நீ
புன்னகைத்தாய்...
நான்
என்னைப் புதுப்பித்துக்கொண்டேன்!
பூவெனச் சிரித்தாய்...
என்னுள்
பூவனம் வளர்த்தேன்!
கோபித்தாய்...
கொஞ்சிக் குளிர்வித்தேன்!
அழுதாய்...
அடிபட்டவனாய் வலியுணர்ந்தேன்!
கன்னத்தில் முத்தமிட்டாய்...
காலத்தை வென்றெடுத்தேன்!
உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
வெவ்வேறு ஆளானேன்!!

இவ்வாறு வளரும்
என் மகளே,
என்னிடம் ஒரு மனு உண்டு
உன்னிடம் தர...
எல்லாத் தந்தையர் சார்பாகவும்...

உலகக் கல்வியின்
உல்லாசம் தவிர்
மார்க்கக் கல்வியில்
வாழ்கையைப் படி!

புறத்து ஆணின்
பார்வையைத் தவிர் -அது
கழுத்துச் சுருக்கின்
முடிச்சென உணர்!

தோழிகள் மத்தியில்
வாழ்வியல் விவாதி
திரைப்பட, தொலைக்காட்சி
தூண்டல்கள் ஒழி!

இறைமறை வேதம்
பலமுறை ஓது
நபிவழி பயின்று
நன்னெறி போற்று!

படிக்கும் காலத்தில்
பெற்றோர் சொல் கேள் -மண
முடிக்கும் காலத்தில்
கணவனைப் படி!

அன்னையாய் நீயும்
உன்னையே காண்கையில்
கற்றவை அனைத்தையும்
பாலோடு புகட்டு!

ஒழுக்கக் கோட்பாடு
கொண்டு
தாலாட்டுப் பாடு!
கதைப்பாட்டில்கூட
கண்ணியம் கற்பி!

மனுவின் வேண்டுகோள்
மனதினில் கொள்
உன்னைப் பார்த்தே
உன் இளையவர் வளர்வர்
ஏனெனில்...

முதல் மகளே
நீ
மூத்த பெண்ணாவாய்!

நன்றி: அதிரை நிருபர் மற்றும் சத்தியமார்க்கம்

sabeer.abushahruk சொன்னது…

சாயல்கள்!

என்அன்புமகளே!

நீ
முகத்தில்அம்மாவின்சாயல்
அகத்தில்அப்பா

உடல்வடிவில்அம்மா
உளவியலில்அப்பா
உன்
விழிகள்அம்மாவின்சாயல்
பார்வையோஅப்பாவின்கோணம்

பெண்மையிலும்மென்மையிலும்அம்மா
உண்மையிலும்தன்மையிலும்அப்பா

நடையுடைபாவனையில்அம்மா
நடைமுறைதோரணையில்அப்பா

அன்பிலும்பண்பிலும்அம்மா
வசிப்பிலும்வாசிப்பிலும்அப்பா

உன்னில்தான்எத்துணைசாயல்கள்!
இறைமறைநீஓத
வசனங்களைஉன்வாயுரைக்க
உன்
இனியகுரலில்
இசையின்சாயல்

தொழுகைக்கம்பளத்தில்
தளர்க்குப்பாயமணிந்து
உனைப்
படைத்தவன்முன்பாக
பணிவாகக்கைகட்டியது
நன்றியின்சாயல்

அடுத்தவர்வலியுணர்ந்து
ஆறுதல்சொல்வதில் - நீ
அன்பின்சாயல்;
படித்ததைப்பிறர்க்கு
பக்குவமாய்ச்சொல்வதில்-நீ
பண்பின்சாயல்

மாற்றான்பார்வையைப்
மட்டுப்படுத்தவும்
கயவர்நோக்கத்தைக்
கட்டுப்படுத்தவும்
ஹிஜாபுக்குள்குளிர்நிலவாய்
நீ
அழகின்சாயல்

மெத்தென்றநடையிலும்
கத்தாதகுரலிலும்
கண்ணியத்தின்சாயல்

வாழ்வியலில்நீ
வான்மறைசொல்லும்
மாதுவின்சாயல்

வாதிப்பதில்நீ
வாக்குகள்மாறாத
நீதியின்சாயல்

ஈடேற்றம்வேண்டி
இறைஞ்சிடும்மகளே
இரவிலும்பகலிலும்
இயல்பாய்வாய்க்கட்டும்
இஸ்லாத்தின்
ஒழுங்கியல்சாயல்

உலகமகளிர்க்குநீ
உதாரணமாயிரு
உண்மைமார்க்கத்தின்
எல்லாசாயல்களும்
இருக்கட்டும்உன்னில்

ஓரிறைக்கொள்கையில்
தியாகங்கள்செய்த
நபித்தோழியர்சாயலில்
தொடரட்டும்பயணம்

மகளிர்க்குமார்க்கத்தை
மறவாமல்எத்திவை
இஸ்லாத்தின்சாயலில்
இலங்கட்டும்இவ்வையகம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மாஷா அல்லாஹ்... இன்று மதியம் தங்கள் மகள் படிக்கும் மருத்துவ 'கல்லூரி தினம்' College day 12-12-2014, மூன்று தனித்துவ பாடங்களில் பல்கழகத்திலேயே இரண்டு பாடங்களில் முதலிடமும் ஒரு பரிசுக்கான போட்டிப் பாடத்தில் இரண்டாவது இடம் பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்லூரி தின விழாவில் பரிசு பெற்ற காட்சியை கண்டு மகிழ்வடைகிறோம் அல்ஹம்துலில்லாஹ் !

இன்னும் வளங்கள் பெற்று சிறப்புற வாழ்த்துகிறோம் இன்ஷா அல்லாஹ் !

al thahleel சொன்னது…

உங்கள் மாதிரி தகப்பன் அல்லாஹ் எல்லோருக்கும் கொடுக்கனும்....பாசத்திர்க்கு,,,பன்பிற்க்கு,,அன்பிற்க்கு,,.்அடைக்கலத்திர்க்கு...கவிக்கு..... நிச்சயமாக இந்த தருனம்..உங்கள் அன்பு மகளுக்கு...சந்தோசமாக இருக்கும்....பாரக்கல்லாஹு ஃபீக்கும்

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அபு இபுறாகீம்,

இன்று எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. காரணம், இந்தப் பதிவின் வாயிலாக எனக்கும் என் மகளுக்கும் கிடைத்த வாழ்த்துகளும் துஆக்களும்.

இரண்டாவதாக, இன்று நடந்த முதலாண்டிற்கான MBBSல் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் என் மகள் இரண்டு தங்கப் பதக்கங்களும் (முதலிடம்), இரண்டு இரண்டாம் இடத்திற்கான பரிசுகளும் பெற்று என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளாள்.

இத்தருணத்தில், எல்லா விதத்திலும் எனக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்த தங்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

sabeer.abushahruk சொன்னது…

dear brother B. Ahamed Aneen

wa alaikkumussalaam varah...

//I am having similar amazing experience with my younger child Shaikha now here in Dubai. Alhamdulillah...//

It is the feeling of every father who loves his family, mother and children in particular. There is nothing personal intended to speak in public through this posting but to share the real feeling of a father towards his daughter; in order to show a wise model to the soceity.

And it is also to envourage parents of our community not to find religios excuses to STOP their daughters to go higher studies.

Today, my daughter awarded with 2 gold medals and 2 second places in University level exams held last year. i believe it is an extra ordinary acheivement of Adirai girl.

Moreover, i was so happy when my daughter received those awards on stage IN ABHAYA and HIJAB !!!

thanks for you contineous support.

sabeer.abushahruk சொன்னது…

தம்பி இப்னு அப்துர்ரஸாக்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களின் பாராட்டிற்கு நன்றி! உங்களுக்கு அவசியம் அறிவிக்க வேண்டிய செய்தி:

மாற்று மதத்தினர் பெரும்பான்மையாகப் படிக்கும் அந்த மருத்துவக் கல்லூரியில் என் மகளுடன் சேர்த்து இன்னும் சில முஸ்லிம் பெண்கள் பயின்றாலும் வகுப்புக்கு அபாயா அணிந்து செல்வது என் மகளும் ஒரு சிலரும் மட்டும்தான்.

இன்றைய பரிசளிப்பு விழாவில் புர்காவும் ஹிஜாபும் அணிந்து மேடையில் பரிசை வாங்கிய என் மகளைக் கண்டு என் சமூகம் மகிழ்ந்திருக்கும்.

துஆச்செய்யுங்கள்!

sabeer.abushahruk சொன்னது…

சகோ எல் எம் எஸ்,

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வதையே எல்லோர்க்கும் சொல்லவே இந்தப் பதிவு.

ஆம், எல்லா வாப்பாமார்களுக்குமான மெனுவாகத்தான் இதன் கரு எடுத்துக் கொள்ள்ப்பட வேண்டும்.

நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

வ அலைகுமுஸ்ஸலாம் கிரவ்ன்,

எனக்குத்தெரியும், எழுதி அனுப்பியதும் அபு இபுவிடம் சொன்னேன், "கண்டிப்பாக இது க்ரவ்னுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று.

காரணம், மற்றவர்களுக்கு இது ஒரு ரசனைமிக்க உணர்வுபூர்வமானக் கவிதையாக மட்டுமே தோன்றினாலும்; மகள்களைப் பெற்றத் தந்தையர்க்கு இது அவர்களின் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களை நினைவூட்டும்.

நான் உணர்ந்ததெல்லாம் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். ஆகவே இந்தப் பதிவு உங்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. தங்களின் தொடர்ச்சியான அன்பிற்கும் நட்பிற்கும் துஆக்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டவனாகவும் எதிர்காலத்திலும் வேண்டுபவனாகவும் இருக்கிறேன்.

தப்க்கள் மகள்களைக்கொண்டு தங்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக, ஆமீன்.

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய இப்றாகிம் அன்சாரி காக்கா,

தங்களின் தொடர் ஆதரவும் பாராட்டும் கிடைக்கப் பெற்று மனம் நெகிழ்கிறேன்.

ஒருசிறந்த எழுத்தாளரும் சிந்தனையாளருமாகிய தங்களின் பாராட்டு என் எழுத்தைத் தகுதியானதாகக் காட்டுகிறது.

நன்றி

sabeer.abushahruk சொன்னது…

சகோ. al thahleel,

தங்களின் துஆவுக்காக ஜஸாக்கல்லாஹு க்ஹைரன்.

கூடுதலான துஆவாகப் பதிந்த இரண்டாவது கருத்த்கிற்கும் நன்றி.

தம்பி அதிரைத் தென்றல்,

ஜஸாக்கல்லாஹு க்ஹைரன்.

sabeer.abushahruk சொன்னது…

காதர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உன் பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

(சென்னையில் தான் படித்த பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்து சாதித்த உன் மகள் ராபியாவை மேற்படிப்பு படிக்க வைக்காமல் நிறுத்திய உன்மேல் எனக்கு கோபம் உண்டு)

ரியாஸ்,
வ அலைக்குமுஸ்ஸலாம்,

நமக்கு அன்பும் பாசமும்தானேடா அடிப்படை. அதைத்தான் அறிந்த மொழியில் சொல்லி வருகிறேன்.

ஹமீது,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

ஹாஹா.

ஆமாம். அந்த மழலை தந்த இன்பம் எந்த கொம்பாதிக் கொம்ப பேச்சாளனாலும் தந்துவிட முடியாது.

sabeer.abushahruk சொன்னது…

மெய்சா,

உன் அன்பான வாழ்த்திற்கும் துஆவுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி. கவிதைகளின்மேல் உனக்குண்டான தீராத பற்றும் சிறுபிராயம் தொட்டே என்மேலான அபரித அன்பும் நான் அறிந்ததே.

நன்றி.

க்ரவுன்,

அஸ்த்தமனம் தமிழ்ச் சொல்லல்ல. எனவே அதை உபயோகிக்கும் இடத்தை பொறுத்து நாம் உதயத்திற்கு எதிரான அர்த்தம் கொள்வதற்குப் பதிலாக மெய்சாவின் கருத்தில், "என் பார்வைக்கு மறைந்திருந்தாலும் நாளையே உதித்து வெளிப்படுவாள்" என்று அர்த்தம் கொள்வது சர்ச்சைகளற்றது.

மெய்சா,

அஸ்த்தமனம் என்னும் வார்த்தையை இயன்றவரை உயர்திணைகளுக்கு (உயிருள்ளவற்றிற்கு) உபயோகிப்பதைத் தவிர்த்துக்கொள்.

நன்றி

sabeer.abushahruk சொன்னது…

Digitech,

ஜஸாக்கல்லாஹு க்ஹைரன் சேனா மூனா

sheikdawoodmohamedfarook சொன்னது…

ஆண்கல்விக்கேதடைபோட்டசமுதாயத்தில்பிறந்து மருத்துவத்தில்இரண்டுதங்க மெடல் தட்டிவந்த பேத்திக்கு வாழ்த்துக்கள்துவாக்கள்! பேத்தியின்சாதனைதங்கமெடல்தட்டியதுமட்டுமல்ல அன்றுகல்விக்குபோட்டதடையையும்தட்டியதும் ஒருஒலிம்பிக்சாதனையை! ஈன்றறெடுத்தமகளைஅவைக்களத்தில்முன்நிறுத்திய அன்னைகும்தந்தைக்கும்பாராட்டுக்கள்.

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

My heartfelt congratulations for Gold Medal awards received by the sister Shahnaz and for Abushahruk's family, hope you all are at zenith of happiness. Jazakkallah khairan.

B. Ahamed Ameen from Dubai.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

//தம்பி இப்னு அப்துர்ரஸாக்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களின் பாராட்டிற்கு நன்றி! உங்களுக்கு அவசியம் அறிவிக்க வேண்டிய செய்தி:

மாற்று மதத்தினர் பெரும்பான்மையாகப் படிக்கும் அந்த மருத்துவக் கல்லூரியில் என் மகளுடன் சேர்த்து இன்னும் சில முஸ்லிம் பெண்கள் பயின்றாலும் வகுப்புக்கு அபாயா அணிந்து செல்வது என் மகளும் ஒரு சிலரும் மட்டும்தான்.

இன்றைய பரிசளிப்பு விழாவில் புர்காவும் ஹிஜாபும் அணிந்து மேடையில் பரிசை வாங்கிய என் மகளைக் கண்டு என் சமூகம் மகிழ்ந்திருக்கும்.

துஆச்செய்யுங்கள்!//

வ அலைக்கும் ஸலாம் காக்கா.
உங்கள் மகளின் ஹிஜாப் பேணுதல் குறித்த செய்தி மிகவும் சந்தோஷமான ஒன்று.என்னவாக இருந்தாலும் என் மார்க்கமே பெரிது எனும் உயர்ந்த எண்ணமே இதற்கு காரணம்,எங்கள் துவாக்கள் உங்கள் மகளுக்கும் - ஹிஜாப் பேணும் அனைவருக்கும் உண்டு.இதை எல்லாம் விட,இன்ஷா அல்லாஹ் உங்கள் மகளுக்கு மலக்குகளின் துவா கிடைக்கும்.அல்லாஹ்வின் கருணை கிட்டும்.நபிகள் நாயகம் ஸல் அவர்களின் அன்பு கிடைக்கும்.ஆமீன்.ஆமீன்.

Yasir சொன்னது…

உங்களைப்போன்ற மனதுள்ளவர்களின் வாரிசுகள் வரிந்து கட்டிக்கொண்டும் வெற்றிகளை குவிக்கும் அதற்க்ககு அல்லாஹ் 100% உதவி செய்வான் என்பதில் இம்மியளவும் சந்தேகம் இல்லை காக்கா...வாழ்த்துக்களும் துவாக்களும் சந்தோஷம் காக்கா

N. Fath huddeen சொன்னது…

Jo! உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கு. அல்ஹம்து லில்லாஹ், மாஷா அல்லாஹ்!
மருத்துவ மாணவிக்கு -
மருத்துவ மகளுக்கு
என் வாழ்த்துக்கள் துஆவுடன்.

sabeer.abushahruk சொன்னது…

ஃபாரூக் மாமா / இப்னு அப்துர்ரஸாக் / B. அஹமது அமீன் / யாசிர் / அபு ஹாமிது (Jo)

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு