தாயின் பேச்சைக் கேளாமல்
தன்வழி மட்டும் போதுமெனப்
போயின் மக்கள் கதியென்ன?
போதனை யொன்றைக் கேளுங்கள்:
முட்டை யிட்ட ஒருகோழி
முடங்கி நன்றாய் அடைகாத்தே
எட்டுப் பிள்ளைக் குஞ்சுகளை
இயன்று பெற்று மகிழ்ந்ததுவே.
வெளியில் வந்த குஞ்சுகளோ
விதியை மறந்து தம்போக்கில்
துளியும் கவலை இல்லாமல்
துள்ளித் துள்ளி ஓடினவே!
கூக்கூ வென்று குஞ்சுகளைக்
கூவி யழைத்தது தாய்க்கோழி
நோக்கா தவைபோல் குஞ்சுகளும்
நொடியில் ஓடிச் சென்றனவே.
பட்டுப் போன்ற உடலோடு
பாதை மாறிப் போகின்ற
எட்டுக் கோழிக் குஞ்சுகளின்
இடக்குப் பேச்சைக் கேளுங்கள்:
அம்மா இந்த உலகத்தின்
அழகைப் பார்க்கச் செல்கின்றோம்
சும்மா நில்லு! நாங்களெலாம்
சுற்றிப் பார்த்துத் திரும்பிடுவோம்!
கோழித் தாய்தன் அன்பாலே
கூறும் சொல்லைக் கேளாமல்
சூழும் நாசம் அறியாமல்
சுற்றிச் சென்றன குஞ்சுகளே.
பாதை மாறிச் செல்லாதீர்
பருந்து வந்து தூக்கிவிடும்!
பேதை கள்போல் நடவாதீர்
பேச்சைக் கேட்டு நில்லுங்கள்!
மழையும் வந்தால் நனைந்திடுவீர்!
மரங்கள் வீழ்ந்தால் நசுங்கிடுவீர்!
இழையும் வண்டி வாகனங்கள்
இல்லா தும்மை அழித்துவிடும்!
அப்போ தந்த வீதியிலே
அடுத்து வந்த மிதிவண்டி
தப்பாய் மோதிக் குஞ்சொன்றைச்
சாக டித்துச் சென்றதுவே!
மிரண்ட ஏழு குஞ்சுகளும்
மெல்லத் தாயின் அறிவுரையை
இரண்டு நொடியில் மனங்கொண்டே
இவர்ந்து வந்து சேர்ந்தனவே.
அதிரை அஹ்மது
2 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஷ்...
காக்கா,
நல் மருந்தொன்றை மதுரத்தில் குழைத்துத் தந்ததுபோல் இனிக்கிறது.
மாஷா அல்லாஹ்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
தாயின் சொல்லை மதியாதோர்
தம்மை வந்து அடைகின்ற
சேயின் துன்பம் அழகுறவே
செம்மை மொழியில் சொன்னீர்கள்..
இப்படி யோருயர் போதனையை
இயல்பாய் அழகு கவியாக்கி
செப்படி வித்தை செய்கின்ற
செயலும் எமக்கு வாய்த்திடுமோ?
- ஆவலுடன்,
அதிரை என்.ஷஃபாத்
Post a Comment