Tuesday, May 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தலைமைத்துவத்தை நோக்கி...! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 18, 2014 | ,

:::: தொடர் - 2 ::::

எவ்வகையிலேனும் இறைவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் உயர்ந்த குணத்தைப் பெருமானார்(ஸல்) அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை விளக்குவதற்கு ஒரு சில மேற்கோள் காட்ட விழைகின்றேன்  

“கண்ணுக்குத் தெரிந்த ஒரு வெளிச்சத்தின் கடைக்கோடியை அடைந்துவிட்ட பின்னர், உங்கள் அறிவுக்கு எட்டாத அந்தகாரத்தில் விழப்போகும் அந்தத் தருணத்தில், (நன்மை-தீமை என்ற) இரண்டில் ஒன்று நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் முகிழ்ப்பதுதான் நம்பிக்கை ஆகும். இழப்பு எதிர்பார்க்கப்படுமானால், அதில் பொறுமை காக்க வேண்டும்; அல்லது, அதை விட்டு ஆகாசத்தில் பறந்துவிட வேண்டும்.” - Barbara Winters

நம்பிக்கை என்பது, ‘அறிவது என்றே இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றது. வேறுபட்ட உலகமது. சற்றேனும் சந்தேகத்திற்கு இடம் கொடாமல் அறிவதுதான் நம்பிக்கையாகும். அதுதான் ஒருவரை முடிந்தவரை முயன்று பார்க்கத் தூண்டுகின்றது. அழிவில்லை என்ற எதிர்பார்ப்பின் எல்லையைக் கடக்கத் துணிவது, அதனால் இன்னொரு நிலைக்கு உயர்வது, பின்னர் கற்பனையே செய்திருக்காத வகையில் அல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்றவை நிகழ்வதைக் காண முடியும்.

கண்ணுக்குப் புலப்படாத பாதையாக இருப்பினும், அதில் நன்மையுண்டு என்று அறிவதுதான் நம்பிக்கையாகும். பொருள்வாத உலகு (Materialistic world) கருதுவது போன்று, நம்பிக்கை என்பது கண்மூடித் தனமன்று. வெளியில் தெரிவதைப் புறக் கண்ணால் பார்க்காமல், இதயத்தில் உள்ள அகக் கண்ணால் பார்pபதுதான் நம்பிக்கை ஆகும். இரண்டாம் உலகப் போரின்போது நடந்த நிகழ்வொன்று எனது நினைவில் நிழலாடுகின்றது.

ஜெர்மன் படையினருடன் போரிட்டுக் களைப்படைத்திருந்த போர் வீரன் ஒருவன், வீழ்ந்துட்ட தன் சகப் போராளியின் வெற்றுடலைப் போய்த் தூக்கிவர அவனுடைய உயரதிகாரியின் உத்தரவை நாடி நின்றான்.

“ஒரு செத்த சடலத்தை, உன் உயிரைப் பணயம் வைத்துப் போய்த் தூக்கிவரப் போகின்றாயா?” என்று அதட்டிக் கேட்டார் அவர். ஆனால் அந்தப் போராளியோ, விட்டபாடில்லை; அடம்பிடித்தான். வேறு வழியின்றி, அந்த அதிகாரி, தன் படைகளிடம் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்தக் கட்டளையிட்டு, அவனுக்கு அனுமதி கொடுத்தார்.

துப்பாக்கித் தோட்டாவைப் போன்று விரைந்து சென்ற அவ்வீரன், சில நிமிடங்களிலேயே தன் தோழனின் உடலைத் தோளில் சுமந்தவனாக எவ்விதப் பாதிப்பும் இல்லாமல், வந்து சேர்ந்தான்!

“ஆகா, இந்தப் பிரேதத்தை எடுத்து வர உன் உயிரைப் பணயம் வைத்தாய்?” என்று கேட்டார் அதிகாரி.

“எஸ், ஸார். எனக்குத்தான் தெரியும் இதன் மதிப்பு. நான் அவனிடம் சென்று பார்த்தபோது, அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அப்போது அவன் சொன்னான்: 'நண்பா! எனக்கு நன்றாகத் தெரியும், நான் சாகுமுன் நீ வருவாய் என்று.’ உடனே நான் குனிந்து அவனைத் தூக்கி தோளில் வைத்தேன். அந்தோ! அப்போதுதான் அவனுடைய உயிர் பிரிந்தது!. இப்போது சொல்லுங்கள், நான் உயிரைப் பணயம் வைத்துச் சென்றதில் அர்த்தம் இருக்கின்றதா இல்லையா என்றான்?” அந்தப் போர்வீரன்.

‘நம்பிக்கை’ என்பது கண்மூடித்தனம் என்று யார் சொன்னது? 'நம்பிக்கை’ என்பது, பிறர் கண்ணால் பர்க்க முடியாதவற்றை இதயத்தின் உணர்வால் பார்ப்பதாகும். மக்கள் தாம் நுகரும் நன்மைகளுக்காக, அன்பினாலும் பக்தியினாலும் நன்றிப் பெருக்காலும் பார்ப்பதுதான் நம்பிக்கையாகும்.

நீண்ட பயணம் செய்து களைத்துப்போய், வழி தெரியாமல் திக்கற்று நிற்கும் நிலையில், ஒளி பாய்ச்சி வழி காட்டுவதுதான் நம்பிக்கையாகும். காரணம், அந்த நம்பிக்கைக்குத் தெரியும், பயணத்தின் முடிவில் வெற்றியோ தோல்வியோ கிட்டுவது, அப்பயணத்தின் தூரத்தினால் அன்று; அவரவர் இதயத்தினுள் இருப்பதை அறியவும் இறைவனை மகிழ்ச்சியடைய வைக்கும் நோக்குடன், இயல்பாக நிலைத்து நிற்கும் நம்பிக்கையில்தான் என்பது. கரடுமுரடான பெருவழியிலிருந்து மற்றவர்கள் எல்லோரும் களைத்துத் திரும்பிவிடும் அதே வேளை, ஒரு சிலரின் முகங்களில் மட்டும் தெரியும் புன்முருவல்தான் நம்பிக்கையாகும். காரணம், தோற்றுப் பின்வாங்கியோரால்தான் கேட்க முடியாத இனிய இறையோசையை இவர்கள் கேட்கின்றார்கள்.

இந்தச் சிலர் அந்தப் பெருவழியில் தொடர்ந்து நடக்கும்போது, பின்வாங்க்கியவர்கள் ஆச்சரியத்துடன் இவர்களைப் பார்க்கின்றார்கள்! பின்னர் துணிவு வரப்பெற்றவர்களாக இவர்களைத் தொடர்கிறார்கள். இத்தகைய உறுதியான பின்பற்றுதலுக்குப் பின்னர் அவர்களுக்குப் பயணச் சாந்தம் கிட்டுகின்றது! அதனால் அவர்களுக்கு ஆறுதலும் ஆனந்தமும் கிட்டுகின்றன!

'நம்பிக்கை’ என்பதற்கு இஸ்லாத்தில் ‘தவக்குல்’ (இறைவனிடம் பொறுப்புச் சாட்டுதல்) என்பதுதான் பொருளாகும். இதுபற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

“மேலும், எவர் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்றாரோ, அவன் அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும்) வெளியேறும் வழியை உண்டாக்குவான். அன்றியும், அவர் எண்ணிப் பார்க்காத விதத்தில், அவருக்கு அவன் வாழ்வாதாரங்களை வழங்குவான். எவர் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுகின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன் ஆவான்.” (அல்குர்ஆன் - 65:2,3)

நாம் மேலே குறிப்பிட்டது போன்று, நம்பிக்கை அல்லது ‘தவக்குல்’ என்பது மூன்று வகைப்படும். அவற்றைப் பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

தொடரும்
அதிரை அஹ்மது [தமிழாக்கம்]
மூலாசிரியர் : மிர்ஸா யாவர் பெய்க்
அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் புத்தகத்திலிருந்து....

2 Responses So Far:

Unknown said...

ஆறாம் பத்தியில் 'அனுமதி' என்பதற்கு பதிலாக 'அமைதி' எனப் பதிவாகியுள்ளது. திருத்தவும்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லா துறைகளுக்கும் எவ்வகையான நிலைபாட்டிற்கும் வாழ்வியலுக்கும் வாள்வீச்சிற்கும் உளவியலுக்கும் உலகாள்வதற்கும் ஆன்மீகத்திற்கும் ஆண்மைக்கும் என்று எதை எடுத்தாலும் எமக்கு முன்மாதிரியும் முழுமையான வழிகாட்டுதலும் எம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆவார்கள்.

தலைமைத் துவத்தில் சொல்லவா வேண்டும்?

காக்கா அவர்களின் தேன்தமிழில் சொல்லவும் வேண்டும்தான்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.