தொடர் - பகுதி பத்தொன்பது
மகாபாரதக் கதையில் ஒரு காட்சியை வியந்து சொல்வார்கள். அர்ஜுனனுக்கு வில்வித்தை பயிற்றுவித்த குரு துரோணாச்சாரியார் , மரக்கிளையில் அமர்ந்து இருந்த ஒரு குருவியைக் குறிவைக்கச் சொன்ன போது, “ உன் கண்களுக்கு என்ன தெரிகிறது? மரமா? மரக்கிளையா? மரத்தில் கனிந்து காய்த்துத் தொங்கும் கனியா ? குருவியா ? “ என்று கேட்டாராம். அதற்கு அர்ஜுனன் , “ எனக்கு எதுவுமே தெரியவில்லை. அந்தக் குருவியின் நடுக் கழுத்துதான் தெரிகிறது “ என்றானாம்.
“எவ்வினையோர்க்கும் இம்மையில் தம்மை
இயக்குதற்கு இன்பம்பயக்குமோர் இலக்கு”
என்று மனோன்மணிய காவியத்தை எழுதிய சுந்தரம்பிள்ளை சொல்கிறார்.
“உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும் மயங்க வைப்பது ஒரு முகமே மங்கை உந்தன் திருமுகமே! “ என்று கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் அண்மையில் எங்கிருந்தோ நம் காதுகளில் விழுந்தன. யாரோ ஒரு கதாநாயகன் ஒரு கதாநாயகியைப் பற்றிப் பாடிய பாடலாக இருந்தாலும் நமக்கென்னவோ யூதர்களின் பாலஸ்தீன வேட்கையையும் அதற்கான வேட்டையையும்தான் பொருத்திப் பார்க்கும் எண்ணம் வந்தது. யூதர்களைப் பொறுத்தவரையில் பாலஸ்தீனம் என்கிற மங்கையின் நினைவுதான் என்றும்; எங்கும் ; எப்பொழுதும்.
யூதர்களின் வாழ்வை வரலாற்று ரீதியாக எண்ணிப் பார்த்தாலும் (Thinking) ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தாலும் (Counting) கருத்து மாறுபாடுகளையும் மீறி யூதர்களின் உலக எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமையும் ஒரே குறிக்கோளும் அனைவராலும் பாராட்டப்படுமென்பது நிச்சயம்.
என்ன வழிமுறைகளைக் கையாண்டேனும் எவ்வளவு பணத்தைக் கொட்டிக் கொடுத்தேனும் யாரோடு வேண்டுமானாலும் பல்லிளித்தும் யாருக்கு வேண்டுமானாலும் பல்லக்குத்தூக்கியும் பாலஸ்தீனத்தில் தங்கள் இனத்தின் படுக்கையைப் போடவேண்டுமென்ற குறிக்கோளோடு இவர்கள் அலைந்த ஆண்டுகள் பல நூற்றாண்டுகளாகும்; பல தலைமுறைகளாகும்.
இடைப்பட்ட காலத்தில் இவர்கள் இழந்தது பல உயிர்கள் அதுவும் கொத்துக் கொத்தாய் - கூட்டம் கூட்டமாய். நடுவீதிகளில் - நான்கடுக்கு மாளிகைகளில் - நான்கு ரோடுகளின் சந்திப்புகளில் – சந்தைகளில், சாக்கடைகளில் – கடைவீதிகளில் - கல்வி நிலையங்களில் – வழிபாட்டு த்தளங்களில் – வயல்வெளிக் காடுகளில் - இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற விழுந்து கிடந்தவை யூதர்களின் பிணங்கள். யூதர்கள் உலகெங்கும் பறந்து பிரிந்து பரவிக் கிடந்த காலங்களில் பறந்து சென்ற கழுகுகளும் பருந்துகளும் யூதர்களின் கொட்டிக் கிடந்த பிணங்களைத் தின்று பசியாற்றிக் கொண்டிருந்தன. இருந்தபோதிலும், திட்டமிடுதலிலும் விழுந்த பின்னும் எழுந்து நிற்பதிலும் யூதர்கள் தயங்கியதுமில்லை; தளர்ந்ததுமில்லை.
உலக வரலாற்றில் எந்த இனமும் இவ்வளவு குறிக்கோள்களுடைய உள்ளத்தின் அடித்தளத்தின் உந்து சக்தியுடன் செயல்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு - யூதர்களைத் தவிர-என்ற விடையைத் தவிர வரலாற்றில் வேறு விடை கிடையாது. இந்த அம்சம் உலகமே யூதர்களிடம் படித்துக் கொள்ள வேண்டிய அம்சம். ஒடுக்கப்பட்ட எந்த இனமும் இவர்களின் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றுக் கூச்சல்கள், கொடிபிடித்தல் மட்டும் கொள்கைகளுக்கு வெற்றியைத் தராது என்பதையும் ஒற்றுமை எனும் தாரக மந்திரம் இல்லாத எந்த சமுதாயமும் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலாது என்பதற்கு யூதர்களின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
சொல்லப்போனால் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் யூதர்களின் தலைகள் அறுவடைக்குப் பின் அறுத்தெரியப்படும் தக்காளிச் செடிகள் போல சீவப்பட்டன. ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் முதுகுளத்தூர் பகுதியில் வாழ்ந்த ஒரு இனம் ஒட்டுமொத்தமாக குற்றப்பரம்பரையாக கருதப்பட்டது போல் யூதர்களின் இனம், இயேசு கிருஸ்துவை முள் கிரீடம் சூட்டி- சாட்டையால் அடித்து – சிலுவையை சுமக்கச்செய்து- ஆணிவைத்து அடித்துக் கொன்றது என்ற நம்பிக்கையின் குற்றச்சாட்டின் பின்னணியிலேயே யூதர்கள் பார்க்கப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் எவ்வளவு அடித்தாலும் இவன் தாங்குகிறானே – வெட்ட வெட்டத் தழைக்கிறானே ! அடிக்க அடிக்க எழும் பந்து போல மேலெழும்பி வருகிறானே! என்ற பொறாமையுணர்வும் மேலோங்கி நின்றது.
அவ்வளவு அழித்தொழிப்புகளையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தங்களை முன்னேற்றிக் கொள்வதிலேயே யூதர்கள் கொக்குப் போல குறியாக இருந்தார்கள். அப்படி ‘ ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருந்த’ கொக்குப் போல வாழ்க்கையை எதிர் நோக்கி இருந்த யூதர்களுக்கு தாங்கள் வாழ இடம் கிடைத்த நாடுகளில் தங்களால் இயன்ற அத்துணை வணிகங்களிலும் ஈடுபட்டார்கள்.
பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க பொறுமை, அரசியல் சாதுர்யம், ஒற்றுமை ஆகியவை மட்டும் போதாது- கட்டுக் கட்டாகப் பணமும் வேண்டுமென்று அவர்கள் அறிந்து இருந்தார்கள். எனவே எல்லாவகையான தொழில்களிலும் ஈடுபட்டதுடன் புதிய புதிய வணிக யுக்திகளையும் கண்டு பிடித்து அவற்றில் முழு ஈடுபாட்டுடன் இருந்தார்கள். வணிகத்தில் வாக்கு சுத்தமும் நேர்மையும் வணிகத்தை வளர்ப்பதற்காக அவர்கள் கடைப்பிடித்த வழிகள் என்று எல்லா வரலாற்றாசிரியர்களும் அவர்களைப் பாராட்டுகிறார்கள்.
நாம் யாருக்கு மரியாதை கொடுக்கிறோமோ- யாரைப் பேணுகிறோமோ – யாரை அனுசரிக்கிறோமோ- அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்பது உலகப் பாடம் அல்லவா? அதன்படி யூதர்கள் பணத்துக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் ; பேணினார்கள்; பாதுகாத்தார்கள்; அனுசரித்தார்கள் . அதனால் அவர்களிடம் பணம் குவிந்தது. குவிந்த பணம் தனக்கு மட்டுமென்று எண்ணாமல் தனது சமுதாயத்துக்காக - தங்களின் தாயகத்துக்காக என்ற எண்ணமும் அவர்களிடம் வளர்ந்தது.
பணம் குவிந்த பின் மனிதர்களுக்கு அடுத்து எழும் ஆசை, ஆதிக்க ஆசைதான். அரசாங்கத்தின் தயவில் அண்ட இடம் கிடைக்குமா என்று உற்றுப் பார்த்தவர்களிடம் பணம் சேர்ந்ததும் எந்த நாடுகளில் தமது இனத்தவரை ஆளும் பதவியில் அமர்த்த இயலும் என்று ஆராய்வது அவர்களது அடுத்த பணியாக இருந்தது. அந்த வகையில் ஒரு நாட்டில் வார்டு உறுப்பினர் தேர்தல் நடந்தாலும் அதில் பங்கெடுக்க வேண்டுமென்று நினைத்தார்கள். இதற்காக உலக யூதர்கள் அனைவரும் அவர்களது திருச்சபை மூலம் உதவினார்கள். பணத்துக்குப் பஞ்சமில்லை - இப்போது பதவிதான் வேண்டுமென்ற நிலை. அந்த வகையில் எங்கெல்லாம் ஜனநாயக முறைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் தங்களது பார்வையைத் திருப்பினார்கள். அவர்களது பதவி வேட்டைக்கு ஏதுவாக ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் ஒரு அம்சமாக பல நாடுகளில் ஜனநாயகம் மலரத் தொடங்கியது. ஜனநாயக முறைகளில் தேர்தல்கள் நடந்தால் வெற்றியோ தோல்வியோ வேட்டியை வரிந்து கட்டு என்று எல்லாத் தேர்தல்களிலும் கலந்துகொண்டார்கள். பல முறை இடறி விழுந்தாலும், முதல் முறையாக வென்று காட்டினார்கள்.
அவர்கள் முதலில் வென்றது ஒன்றும் கூடுவாஞ்சேரியிலோ கொக்காலடியிலோ அல்ல. பிரான்சு தேசத்துப் நாடாளுமன்றத்துக்கு 1848- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒரு யூதர்களின் பிரதிநிதி வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். இதை த்தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் முதலில் ஹாலந்திலும் தொடர்ந்து இத்தாலியிலும் யூதர்கள் அமைச்சர்களாயினர் . இடைப்பட்ட காலங்களில் பற்பல ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு ஆதிக்க அரசியல் பதவிகளில் யூதர்கள் புகுந்து கொண்டார்கள். இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தார்போலும் உலகமே மூக்கின்மேல் விரலை வைக்கும் வகையிலும் சூரியனே அஸ்தமிக்காத அரசியல் ஆளுமை வல்லமை படைத்த பிரிட்டனில் ஒரு அரசியல் அதிசயம் நடந்தது. அந்த அதிசயத்தை நிகழ்த்தியவரின் பெயர் பெஞ்சமின் டி இஸ்ரேலி ( Benjamin Disraeli ) . பெயரை வைத்தே கண்டு பிடிக்கலாம் இவர் பிறப்பால் ஒரு யூதரென்று. அது கூட முக்கியமில்லை; அவரது காலடியில் மண்டியிட்ட பிரிட்டனின் உச்ச அதிகாரம் படைத்த பதவிதான் முக்கியம். அந்தப் பதவி பிரிட்டனின் பிரதமர் பதவி. நம்ப முடியாவிட்டாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.
எந்த பிரிட்டன் யூதர்களை ஓட ஓட விரட்டியதோ- கிருத்துவர்கள் அல்லாதவர்கள் பிரிட்டனில் வசிக்கக் கூடாது என்று யூதர்களை மனதில் வைத்துக் கொண்டு ஒரு நேரத்தில் அரசு அறிவிப்புச் செய்ததோ - அதே பிரிட்டனில் அந்த நாட்டின் உயர்ந்த பதவியாகிய பிரதமர் பதவி ஒரு யூதரிடம் சென்றடைந்தது என்றால், அந்த சரித்திரச் சாதனையின் பின்னணியில் நாடற்ற யூத சமுதாயத்தின் இலக்கும் அந்த இலக்கை நோக்கிய திட்டமிட்ட செயலாற்றலும், உழைப்பும், ஒற்றுமையும் ஓங்கி நின்றதுதான் காரணம்.
Michael Shapiro என்பவர் The Jewish 100 – A Ranking of the most influential Jews of All Time என்ற பெயரில் எழுதிய நூலில் யூதராகிய பெஞ்சமின் டி இஸ்ரேலிக்கு உலகில் புகழ்பெற்ற யூதர்களில் 21 ஆவது இடத்தை வழங்கி அவரது வாழ்க்கையை விவரித்து இருக்கிறார்.
இந்ததொடரில் ஏற்கனவே பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்களைப் பற்றிப் படித்து இருக்கிறோம். அப்படி ஸ்பெயினிலிருந்து வெளியேறி, பிரிட்டனுக்கு ஓடி வந்த குடும்பம்தான் பெஞ்சமின் டி இஸ்ரேலியின் குடும்பம். பிரிட்டனின் அரசியல் சட்டப்படி, பிரிட்டிஷின் தேசிய மதமான கிருத்துவ மதத்தைச் சாராதோர் தேர்தல்களில் போட்டி இட இயலாது. தேர்தலில் போட்டி இட்டுப் பதவிகளைப் பெற வேண்டுமென்பதற்கான சதுரங்கக் காய் நகர்த்தலில் பெஞ்சமின் உடைய தந்தை, குடும்பத்துடன் தழுவ மனமில்லாமல் கிருத்துவ மதத்தைத் தழுவினார்.
பெஞ்சமின் பிரிட்டனின் பிரதமரானதும் உலக அரங்கில் யூதர்களின் மதிப்பும் மாண்பும் இன்னும் ஓங்கத் தொடங்கியது. அதற்கு ஏற்றாற்போல் யூத சமுதாயத்தில் பல அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் இலக்கியச் செல்வர்களும் தங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். அவர்களுடைய கல்வியறிவு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உலக அங்கீகாரமும் கிடைக்கத்தொடங்கியது.
நாம் நினைவு படுத்திக் கொள்வோம். பாலஸ்தீனைத் தனது கரங்களில் வைத்திருந்த உஸ்மானிய துருக்கி அரசுக்கு பக்க பலமாக நின்றது பிரிட்டன். நெப்போலியனும் ரஷ்யாவும் துருக்கியுடன் போரிட்ட போதெல்லாம் துருக்கிக்கு ஆதரவளித்து துணை நின்றது பிரிட்டன். இப்போது அந்த பிரிட்டனில் யூதர் ஒருவர் அமைச்சரவையின் தலைவர். பாலஸ்தீனோ யூதர்களின் கனவு தேசம். அப்படியானால் பாலஸ்தீன் தொடர்பாகவும் துருக்கியின் உறவின் தொடர்பாகவும் பிரிட்டன் இனி என்ன நிலைப்பாடு எடுக்கும் என்ற கேள்வி நமது நெஞ்சில் எழுவது இயற்கை. இது பற்றிய காட்சி மாற்றம் பின்னர் வரும் அத்தியாயங்களில் இறைவன் நாடினால் விவாதிக்கலாம். இப்போது இந்தக் கேள்வியைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வெற்றி ஒரு புறமிருக்க, உலகின் இன்னும் சில பகுதிகளில் யூதர்களை விரட்டியடிக்கும் வேலை நின்றபாடில்லை. யூதர்களை ஆதரித்த நெப்போலியன் போன்றவர்கள் போர்களில் தோற்று சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தும் உலகிலிருந்தும் மறைந்த பின் பிரான்சிலிருந்தும் அதைத்தொடர்ந்து ஜெர்மனியிலிருந்தும் யூதர்கள் வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ரஷ்ய நிலையும் சொல்லவே வேண்டாம். யூதர்கள் என்று பெயரைச் சொன்னாலே ரஷ்யர்கள் இடுப்பில் சொருகிவைத்திருக்கும் கட்டாரிக் கத்தியை எடுத்தார்கள். இன்னும் பல நாடுகளில் யூதர்களை அழித்து ஒழிப்பது அரசியல் அஜென்டாவாகவே இருந்தது. ஆகவே, பல கிருத்துவ நாடுகளில் யூதர்களால் அன்றாடம் அச்சமின்றி நிம்மதியாக வாழமுடியவில்லை.
அரபு நாடுகளுடனோ அவர்களுக்கு ஜென்மப் பகை. மனிதர்களோடு மட்டும் பகையல்ல; படைத்த இறைவனோடு கூடவும் பகை. ஆகவே கண்டதும் கொல்லும் கிருத்தவர்களைக் கூட யூதர்கள் மன்னித்தார்கள் ஆனால் உறவுக்கு கை நீட்டும் அரபுகளுடன் உறவாட மறுத்தார்கள்.
இந்த நிலையில் யூதர்களுக்கு வேண்டியது என்ன? பட்டமா ?பதவியா? பல்கலைக்கழகங்களில் படிக்க இடமா? ‘ இவன் ரெம்ப நல்லவன்டா’ என்ற பாராட்டுக்களா? கட்டுக் கட்டாக பணமா? இல்லை! இல்லவே இல்லை! இப்போது யூதர்களுக்குத் தேவை எலிப்பொறியானாலும் ஒரு தனிப்பொறி. East or West Home is Best.
ஆகவே நாமிருந்த நாடு நமக்கேன்போம்; அது நமக்கே உரியதாம் என்பதறிவோமென்று உலகளாவிய யூதர்களின் முன்னால் இருந்த வழி போர் செய்தேனும் தங்களின் புனித மண்ணை மீட்பதுதான்.
ஆனால் போர் என்ன புதுக்கோட்டை சந்தையில் விற்கும் பொரிவிளங்காய் உருண்டையா? வலிமையான துருக்கியப் பேரரசுடன் போரிட்டு நாட்டை வெல்வது, குளத்தில் வேட்டியை முட்டை கட்டிக் கொண்டு நீச்சல் அடித்து இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போவதா? தொங்கும் ஒடங்காயை தொரட்டி போட்டுப் பறிப்பதா?
இதற்கு வலுவான திட்டங்கள் தேவை; அரசியல் காய் நகர்த்தல்கள் தேவை என்பதை உணர்ந்தார்கள். அதற்காக சில திட்டங்களை தீட்டினார்கள். இன்று, தமிழ் தேசியம் என்று சொல்லிக் கொண்டு, முச்சந்திகளில் இளநீரை குடித்துவிட்டு வழுக்கைத் தேங்காயை வழித்து சாப்பிட்டுவிட்டு கோம்பையைத் தூக்கியெறிந்துவிட்டுப் போகும் சீமான்கள் போல இல்லாமல், தீர்க்கமான ஒரு ‘யூத தேசியத் திட்டத்தை’ முன்னெடுத்தார்கள். உலகெங்கிலுமுள்ள யூதர்களை ஒன்றிணைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். இந்த இயக்கத்தின் பெயர் Zionist Movement .
இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர் Theodar Herzl என்ற எழுத்தாளர் , பேச்சாளர். இவரைப்பற்றி இரண்டு வரிகளில் அல்ல ஒன்றரை வரிகளில் கூற வேண்டுமானால்
“சொல்வல்லான்; சோர்விலான் இவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது”
என்று, வள்ளுவனின் வரிகளில்தான் கூறவேண்டும். இருந்தாலும் இவரைப் பற்றி இன்னும் நிறையப் பேச வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம்.
இபுராஹிம் அன்சாரி
19 Responses So Far:
Ore kodiyin keel thittangalai theetti kurikolai adaintha youtha inaththin varalaru. Pala kodiyin keel pala vithamaka thittukintra nammavarkalukku Nalla paadam .
Varalattru aasiriyarukku valthukkal.
அன்புள்ளmyத்துனர்இப்ராஹீம்அன்ஸாரிஅவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இந்தவாரத்தொடரில்எடுத்தஎடுப்பிலேயேகாபீர்களின்கதையான மஹாபாரதகதா மாந்தர்களான அர்ஜுனன், துரோணர்களை எல்லாம் கொண்டுவந்திருகிறீர்களே?இதற்க்குசூடானகண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் சந்திக்க வேண்டியநிலைவருமே!தயாரா?
அஸ்ஸலாமுஅலைக்கும்!அட,அட,அட வரலாற்று நிகழ்வுகளை இவ்வளவு சுவாரசியமாய் எழுத முடியுமா?முடியும் எழுதி முடிக்கும் போது முடியும் முடியும் ஆனால் மொட்டையாக எழுதாமல் எல்லா வற்றுக்கும் முடிச்சி போட்டு எழுத உங்களால் மட்டுமே முடியும் அல்ஹம்துலில்லாஹ்!!!!!!!!.
யூதர்களைப் பொறுத்தவரையில் பாலஸ்தீனம் என்கிற மங்கையின் நினைவுதான் என்றும்; எங்கும் ; எப்பொழுதும்.
--------------------------------------------------------------------------------
மன்+கை=மங்கை அதனால்தான் "மண் கை"கூடிவரும் வரை அவர்கள் நினைவு அதைச்சுற்றியே இருந்திருக்கு!!!.
யூதர்கள் உலகெங்கும் பறந்து பிரிந்து பரவிக் கிடந்த காலங்களில் பறந்து சென்ற கழுகுகளும் பருந்துகளும் யூதர்களின் கொட்டிக் கிடந்த பிணங்களைத் தின்று பசியாற்றிக் கொண்டிருந்தன. இருந்தபோதிலும், திட்டமிடுதலிலும் விழுந்த பின்னும் எழுந்து நிற்பதிலும் யூதர்கள் தயங்கியதுமில்லை; தளர்ந்ததுமில்லை.
----------------------------------------------------------------
இதை எழுதியது மு.க(மு.கருனா நிதி)என படிப்பவர் நினைப்பர் ஆனால் இது மு.க அல்ல காக்கா என கீழே எழுதியவர் பெயரைப்பார்த்ததும் தான் உறுதியாகும் புதிதாய் படிப்பவர்களுக்கு!
ஒடுக்கப்பட்ட எந்த இனமும் இவர்களின் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றுக் கூச்சல்கள், கொடிபிடித்தல் மட்டும் கொள்கைகளுக்கு வெற்றியைத் தராது என்பதையும் ஒற்றுமை எனும் தாரக மந்திரம் இல்லாத எந்த சமுதாயமும் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலாது என்பதற்கு யூதர்களின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
----------------------------------------------------
சரியான நச்'வரிகள் சொரணை வரும் படி சொல்லியுள்ளீர்கள்! சொரணை வருமா? நம் சமூதாய அமைப்புகளுக்கும் நமக்கும்!
அவர்கள் முதலில் வென்றது ஒன்றும் கூடுவாஞ்சேரியிலோ கொக்காலடியிலோ அல்ல. பிரான்சு தேசத்துப் நாடாளுமன்றத்துக்கு 1848- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்
-------------------------------------------------
நகைச்சுவையுடன் எழுதபட்ட வரிகள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
இந்த நாவல் வெகு விறுவிறுப்பாகச் செல்கிறது. நாவல்? வேறு எப்படி விவரிப்பது இதை வாசிப்பதில் தோன்றும் சுவாரஸ்யத்தை? எனினும் நாவல் என்னும் விமர்சனத்தை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன், அதில் புனைவு இருக்கும் என்பதால்.
யூதர்களின் வெட்டவெட்ட முளைக்கும் யுக்தியில் நிறைய சதிச்செயல்களும் அப்பட்டமான சுயநலனும் மிகைத்திருந்ததையும் தாங்கள் ஆங்காங்கே அறியத் தந்திருக்கிறீர்கள்.
காட்சிகள் கலைகட்டுகின்றன காக்கா.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!
sabeer.abushahruk சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
இந்த நாவல் வெகு விறுவிறுப்பாகச் செல்கிறது. நாவல்? வேறு எப்படி விவரிப்பது இதை வாசிப்பதில் தோன்றும் சுவாரஸ்யத்தை? எனினும் நாவல் என்னும் விமர்சனத்தை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன், அதில் புனைவு இருக்கும் என்பதால்.
--------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும் கவிஞரே! நாவல் படிக்கும் ஆவல்தான் நீங்க ஒருவிதத்தில் சொன்னது சரிதான்!ஆனாலும் இந்த நாவலை எப்படி நாவால் வர்ணிப்பது!அது பயணிப்பதை பார்க்கும்போது தெரியாமல்தான் நானும் தவிக்கிறேன்!
//அர்ஜுனனுக்குவில்வித்தைகற்றுகொடுத்த துரோணாச்சாரியார்ஒரு மரத்திலிருந்தகுருவியை குறி வைத்து அடிக்க சொன்ன போது ''உன் கண்களுக்கு என்னதெரிகிறது? மரமா? கிளையா? கொப்பா? காய்த்துதொங்கும்கனியா? குருவியா?" என்றாராம். .''எனக்குஒன்றுமேதெரியவில்லை!குருவியின்கழுத்துதான் தெறிகிறது!''என்றானாம்.//மைத்துனர்இனா.ஆனா.சொன்னது.// ''உன்கண்களுக்குஅந்தபெரியமரம்தெரியவில்லை! கிளைதெரியவில்லை! கொப்பு தெரியவில்லை! ஆனால்அந்தசின்னக்குருவிமட்டும்எப்படிதெரிந்தது?'' என்று துரோணர் அர்ஜுனனிடம் கேட்டாராம். ''நான்அடிக்கவேண்டியதுகுருவியைதவிரமற்ற மரமோ.கிளையோஅல்ல! அதனால் என்கண்ணுக்கு குருவிமட்டுமே தெரிந்தது!''என்றானாம்அர்ஜுனன். இதைநான்அண்ணாவின்ஒருசொற்பொழிவில்கேட்டேன். இதிலிருந்துநாம்கற்றுக்கொள்ளவேண்டியது என்ன வென்றால் நமது Targetஎன்னஎன்பதை சரியாகஅறிந்துஅதை நோக்கியே நம்பயணத்தை தொடரவேண்டும்என்பதேயாகும்.
க்ரவுன்,
அது மு.க. எழுதியது என்றால், கீழே உள்ளது பாலகுமாரன் எழுதியதா?
//யூதர்களின் வாழ்வை வரலாற்று ரீதியாக எண்ணிப் பார்த்தாலும் (Thinking) ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தாலும் (Counting) கருத்து மாறுபாடுகளையும் மீறி யூதர்களின் உலக எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமையும் ஒரே குறிக்கோளும் அனைவராலும் பாராட்டப்படுமென்பது நிச்சயம்.//
இது? கல்கி எழுதியதா?
//இடைப்பட்ட காலத்தில் இவர்கள் இழந்தது பல உயிர்கள் அதுவும் கொத்துக் கொத்தாய் - கூட்டம் கூட்டமாய். நடுவீதிகளில் - நான்கடுக்கு மாளிகைகளில் - நான்கு ரோடுகளின் சந்திப்புகளில் – சந்தைகளில், சாக்கடைகளில் – கடைவீதிகளில் - கல்வி நிலையங்களில் – வழிபாட்டு த்தளங்களில் – வயல்வெளிக் காடுகளில் - இப்படிப் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற விழுந்து கிடந்தவை யூதர்களின் பிணங்கள்//
மாஷா அல்லாஹ் ...வரலாற்றை இப்படி உங்கள் ஸ்டையிலில் எழுதினால் வரலாறு பிடிக்காத பையன்கூட படித்து பாசாகிவிடுவான்....கடின உழைப்பில் வரும் உங்கள் இத்தொடர் எங்களை பாலஸ்தீனத்துடன் ஒன்ற வைக்கின்றது
அன்புள்ள மச்சான் அவர்களுக்கு
வ அலைக்குமுஸ் சலாம்.
ஒரு மகாபாதகத்தின் வரலாற்று வளர்ச்சியை எழுதும்போது மகாபாரதக் கதையின் காட்சி என்று எங்கோ கேட்ட செய்தி நினைவுக்கு வர அதைப் பொருத்திக் காட்ட வேண்டியதாயிற்று. நல்ல வேலை இதுவரை எந்த ஆட்சேபனையும் அதற்கு வரவில்லை.
மேலும் இந்த அத்தியாயத்தை மகாபாரதத்தில் தொடங்கி மனோன்மணித்தை குறிப்பிட்டு திருக்குறளில் நிறைவு செய்துள்ளேன். இதற்கும் ஒன்றும் மாற்றுக் கருத்துக்கள் இதுவரை வரவில்லை.
அனைவருக்கும் நன்றி.
அன்பான தம்பி சபீர்! மற்றும் கிரவுன் ஆகியோருக்கு
வலைக்குமுஸ் சலாம்.
தங்கள் இருவரின் தமிழ் மணம் கமழும் கருத்து மழைக்காக நான் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன். நீங்கள் இருவரும் வரிக்கு வரி படித்து தெரிவிக்கும் ஒவ்வொரு எழுத்தும் இன்னும் உற்சாகப் படுத்தும் இன்னும் ஊக்கப்படுத்தும் . ஜசாக் அல்லாஹ் ஹைரன் .
தம்பி எல் எம் எஸ் ! இப்போதெல்லாம் எள் என்பதற்கு முன் எண்ணெயாக மாறி உடனே கருத்திடுகிறீர்களே! மிக்க மகிழ்ச்சி. உடல் நலம் பேணிக் கொள்ளவிழைகிறேன்.
மருமகனார் யாசிர் அவர்களுக்கு
தங்களின் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி.
இந்த ஆக்கத்தில் உங்கள் உழைப்புடன் சேர்ந்து உங்களின் மொழித்திறமையும் தெரிகிறது. சில இடங்களில் தேர்ந்த கவிஞரின் திறமை சில இடங்களில் நடப்பு இலக்கியத்தை சாதாரண வாசகனுக்கும் காட்டும் எழுத்தாளர் இப்படி சகல கலா நிபுணராக தெரிகிறது. நீங்கள் அதிரை நிருபருக்கு கிடைத்த பரிசுதான்.
Post a Comment