Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் - ரமழான் சிந்தனை 3

அதிரைநிருபர் | August 21, 2010 | , ,



1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)   
                 
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

- K.L.M இப்றாஹீம் மதனி

Courtesy: Readislam.net

இந்த அருமையான கட்டுரையை தொகுத்தளித்த கட்டுரையாளருக்காக துஆ செய்வோமாக.

3 Responses So Far:

அப்துல்மாலிக் said...

நல்ல விழிப்புணர்ச்சிப்பதிவு..

//புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள்.//

இஸ்லாத்தின் மீதுள்ள ஆர்வத்தையே இது காட்டுகிறது, மாஷா அல்லாஹ்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்திருக்கும் நாம் குர்ஆன் ஓதுவதற்கு நேரமில்லை என்று சொல்லுவது நியாயமில்லை.
http://tanzil.info
இணையதளம் மிக எளிதாக நமக்கு குர்ஆனை புரியும்படி கேட்டு ஓதுவதற்கு நல்ல வாய்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)//

நம் தங்குமிடங்களிலும், அலுவலகங்களிலும் முடிந்தவரை ஓத தெரியாத நம் சகோதரர்களுக்கு குர்ஆன் ஓத கற்றுக் கொடுத்து, சிறந்தவர்களாக திகழ முயற்சி செய்யலாமே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு