"கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று பாடல் பாடிய பாரதி, இன்று இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார். அண்ணா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு, பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 41 பேரும், மருத்துவப் படிப்பிற்கு சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ், போலி என கண்டறியப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வில், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் தங்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்கின்றனர். இது வழக்கமான ஒன்று தான். யார், யார் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்கின்றனர் என்பது, கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், ஏஜன்டுகள் கைக்குச் செல்கிறது. அவர்கள் மாணவர்களை அணுகி, 10 ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்று, "கல்வித் துறையின் கம்ப்யூட்டரில் மதிப்பெண் மாற்றியமைக்கப்படும்' என்ற உறுதிமொழியுடன், கடந்த 2000 ஆண்டு முதல், மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக வாரி வழங்கியுள்ளனர். இதில் பலர், பல லட்சம் சம்பாதித்தும், ஓய்வு பெற்றும், வேறு துறைக்கும் போய்விட்டனர். இந்த ஆண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய, 66 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், அவர்களின் முகவரி அறிந்த ஏஜன்டுகள், 10 அல்லது 5 சதவீத மாணவர்களையாவது அணுகி இருப்பர் என வைத்துக் கொண்டால் கூட, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ்களை இந்த ஆண்டு பெற்றிருப்பர். இதில், ஒரு சில மாணவர்களின் மதிப்பெண், கல்வித் துறையில் உள்ள கம்ப்யூட்டரில், சரியான தருணத்தில் திருத்தப்படாத காரணத்தால், இன்று சிலர் மட்டும் மாட்டிக் கொண்டனர். 2000ம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள், இன்று காலரை தூக்கிக் கொண்டு, பல உயர் பதவிகளில் அமர்ந்து, தங்களின், "கடமை'யை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில், பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், வசதியானவர் அல்லது ஓரளவு வருமானம் உள்ளவர்கள். ஏழை, எளிய கிராமப்புற மக்கள் இதில் சிக்கவில்லை என்பது, கவனிக்க வேண்டிய ஒன்று.
பண வசதியில்லாத, தன் கிராமத்தில் பள்ளி இல்லாத ஏழை மாணவன், இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே பள்ளிக்கு புறப்பட வேண்டும். அங்கு பாடம் படித்து, தனிப் பயிற்சி எனும் டியூசன் இல்லாமல், மாலை வீடு வந்து, பெற்றோருக்கு சில உதவிகள் செய்ய வேண்டும். மின் வசதி கூட இல்லாத நிலையில் படித்து, தேர்வில் வெற்றி பெறுவதே சாதனையாக உள்ள நிலையில், பணம் உள்ளவர்கள், இப்படி குறுக்கு வழியில், போலி மதிப்பெண்கள் மூலம் சாதனை மதிப்பெண்கள் பெற்று, சன்மானம் பெறுகின்றனர். போலிகள், இன்று நமக்கு விடப்பட்ட சவால்களில் பெரும் சவாலாக உள்ளது. போலி டாக்டர், போலி வக்கீல், போலி காவல் அதிகாரி என பலர், இன்று நாட்டில் உலா வருகின்றனர்.
மனிதனுக்கு முக்கியம் உயிர். அதில் கூட விளையாட, போலிகள் துணிந்து விட்டனர். ஊசி போட தெரிந்தால் போதும், மருத்துவ பிரதிநிதிகள் மூலம் நான்கு மாத்திரைகள் பெயரை தெரிந்து வைத்து, போலி டாக்டர்கள் உலா வர துவங்கி விட்டனர். போலி கல்வி நிறுவனங்களில், தங்களின் வாழ்வை தொலைத்து, பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர். போலி முத்திரை தாள்கள், போலியாக தயாரித்த விற்பனை பத்திரம், கள்ள நோட்டுகள், போலி தபால் தலைகள் என, பல போலிகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவர்களின், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டன. வேறு கலைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலத்திற்குச் சென்ற மாணவர்களின் போலி மதிப்பெண் சான்றிதழ் என்னவானது? தமிழக அரசின் சிறப்பு முத்திரை வில்லை ஒட்டப்பட்ட, போலி மதிப்பெண் சான்றிதழ், கல்வித் துறையில் பணிபுரியும் பலரின் துணை இல்லாமல் எப்படி கிடைத்தது? சரி... ஒவ்வொரு மதிப்பெண்ணும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயிர். ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, விரும்பிய பாடமோ, கல்லூரியோ கிடைக்காமல் போய்விடும். ஒரு மதிப்பெண்ணுக்கு இத்தனை ரூபாய் என்று பணத்தை கறந்துள்ளனர்.
மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த 66 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்து, சான்றிதழ்களை சரிபார்த்தால், இந்த ஆண்டில் நடந்த ஊழலில் உண்மை, உலகுக்குத் தெரியும்.
* மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டை கண்காணிக்க, தனியாக ஒரு துறை ஏற்படுத்த வேண்டும்.
* கடந்த 2000 ஆண்டு முதல், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும்.
* விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல ஓய்வு தரப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தினமும் 100 கி.மீ., பயணம் செய்கின்றனர். காரணம், விடைத்தாள்களை திருத்தும் மையத்திற்கு தங்கும் வசதி போதிய அளவில் இல்லை.
* விடைத்தாள் திருத்தும் இடங்களில் போதிய மின் வசதி, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். கத்திரி வெயில் காலத்தில், விடைத்தாள் திருத்துபவர்களுக்கு கஷ்டம் தவிர்க்கப்பட வேண்டும்.
நன்கு படித்து, தேர்வு எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத ஏழை, எளிய மக்கள் என்ன செய்வர்? தன் பிள்ளை நல்ல மதிப்பெண் பெற்று வாழ வேண்டும் என்று எண்ணி, மூட்டை தூக்கும் தொழிலாளி, கூலித் தொழிலாளி, விற்பனை பிரதிநிதிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என, ஏழை மக்கள் எல்லாம் வாய் பேச முடியாத ஊமைகள். இவர்களின் வாய்ப்பை பறித்து, தங்கள் வாழ்வை வசந்தமாக மாற்றிய போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்றவர்களை, எந்த சட்டத்தின் மூலம் தண்டிப்பது? கடந்த 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில், 1,179 மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்கள், மாநிலத்தில் முதல் மாணவர்களாக அறிவிக்கப்பட்டனர். தனக்கு மதிப்பெண்கள் மிகவும் குறைந்துள்ளது என்று எண்ணிய ஊத்தங்கரை தனியார் பள்ளியைச் சேர்ந்த பாலமுருகன், மறு மதிப்பீடு செய்தான். விடைத்தாள்களின் நகல்களை வாங்கிய போது தான் தெரிந்தது, சில விடைகள் திருத்தப்படவே இல்லை என்று. அந்த மாணவனுக்கு, 1,184 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சத்தமில்லாமல் சாதனை அமுக்கப்பட்டது. ஒருவேளை அந்த மாணவனுக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் போராடும் திறன் இல்லையென்றால், அந்த மாணவனின் திறமை வெளியே தெரிந்திருக்காது. இதுபோல் எத்தனை மாணவர்கள், காணாமல் போயினர்.
மொரார்ஜி தேசாயின் மகள், மருத்துவக் கல்லூரி தேர்வில் தோல்வியடைந்தார். "மறு மதிப்பீடு செய்ய வேண்டும்' என மகள் கூறியதை, மொரார்ஜி தேசாய் மறுத்தார். "மறு மதிப்பீட்டில் மகள் வெற்றி பெற்றால், என் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தி, இந்த வெற்றி கிடைத்தது என கூறுவர். எனவே, மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெறு' என அறிவுரை கூற, மனமுடைந்த தேசாயின் மகள், தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் தேசாய், தன் மீது தவறில்லை என வாதிட்டார். தேசாய் நினைத்திருந்தால், தன் மகளுக்கு ஒரு மருத்துவமனையே கட்டித் தந்திருக்க முடியும். தேசாய் எங்கே... இவர்கள் எங்கே...
நவீன கம்ப்யூட்டர் உலகில், தவறுகள் நடக்காது என்று எல்லாரும் எண்ணினோம். கம்ப்யூட்டரில் திருத்தி, ஊழல் செய்ய முடியும் என்றால், உண்மையான குடிமகன் ஒவ்வொருவனும், போலி நாட்டில் வாழும் போலி மக்கள் போல் உள்ளனர்.
- சிராஜ் சுல்தானா - முதுகலை ஆசிரியர்
நன்றி: Dinamalar
தகவல்: மு செ மு நெய்னா முகம்மது
5 Responses So Far:
இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகள் வெளியிடும் அதிரை நிருபர் & சகோதரர் மு செ மு நெய்னா முகம்மது இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்தும் சமுதாயம் நிச்சயம் எதிர் காலத்தில் சிறப்பான வித்தகர்களை உருவாக்கும். எவனும் எக்கேடு கெட்டால் என்ன என் பிள்ளை படித்தால் மட்டும் போதும் எனும் ஸ்பைனல் அற்ற மனிதர்களினால் தான் லஞ்சமும் , அநியாயங்களும் தலைவிரித்தாடுகிறது.
மொரார்ஜி தேசாய் ஒரு விடுதலை போரட்ட தியாகி என்பதை தவிர எதையும் சரியாக கிழிக்கவைல்லை என்பது என் கருத்து. பிரதமராய் இருக்கும் போது எந்த மருத்துவ கழகமும் ஒத்துக்கொள்ளாத ஒரு ட்ரீட்மென்ட்டை இந்த அறிவுக்கொழுந்து திருவாய்மலர்ந்தது. "சுகாதார வாழ்வுக்கு காலையில் அவர் அவர்களின் சிறு நீரை அவர் அவர்கள் குடிக்கவேண்டும்" என்ற ஒப்பற்ற! கண்டுபிடிப்புதான் அது.இந்தியாவில் உள்ள அனைத்து மெடிக்கல் அசோசியேசனும் தலையில் அடித்துகொண்டது.
தன் மகளுக்கு RE-VALUATION விசயத்தில்கூட அரசியல் ஸ்டன்ட் ஆக இது இருக்கலாம்...ஐந்துவருட பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் இந்த பதவி பித்தர்கள்.
ZAKIR HUSSAIN
என்னோட மார்க்கும் இப்படித்தான் அமுக்கப் பட்டிருக்கொமோ :)) (இல்லைன்னா ?) - மறு கூட்டலை மற்று(ம்)கூட்டலாக்கிய கல்விக் கலவானிகள் ஆச்சர்யப் படவைக்கவில்லை என்னை.
பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு விடுமுறையில் 40 நாள் ஜமாத்தில் செல்ல நேரிட்டது அப்போது என்னுடன் படித்த இரண்டு நண்பர்கள் கும்பகோனத்தைச் சேர்ந்த நண்பர்கள் வந்திருந்தனர் அப்போது பரீட்சைப் பேப்பர் திருத்தும் நேரமாதலால் அந்த சமயத்தில் எங்கள் தப்லீக் ஜமாத் ஈரோட்டில் இருந்தது அங்கே சந்தித்த ஒரு சகோதரர் சொன்னார் "நீங்கள் தஞ்சாவூர் மாவட்டமா உங்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு இங்கேதான் திருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது" என்று ஒரு பள்ளிக்கூடத்தைக் காட்டினார்... அப்போ இப்படியெல்லாம் யோசனை வரவேயில்லை !
இந்த போலி சான்றிதழ் விவகாரம் காலம் காலமாய் நடந்து வரும் சமாச்சாரம். போலி இல்லாத விவகாரங்களே இல்லை. போலிகளால் பயனடைந்தவர்களைவிட பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகம் அதிகம்.
சகோதரர் ஜாஹின் சொல்வது போல் மொராஜி தேசாய் சுதந்திர போரட்டக்காரர் என்பது மட்டும் தான், பெரிதாக நாட்டுக்கு எந்த நன்மையும் செய்தாரா என்பது கேள்விக்குறியே.
கல்வித்துறையில் கருப்பு ஆடுகளில் அட்டகாசம் தற்காலிகமாக மட்டும் தான் ஒடுக்கப்பட்டுள்ளது. அரசு இந்த கல்வித்துறையில் கல்வி களவானிகளால் நடந்த முறைகேடுகளுக்கு தகுந்த விசாரனை நடத்த வேண்டும்.விசாரனை நடத்துபவர் போலி சான்றிதழ் பெற்றவராக இல்லாமல் இருந்தால் சரியே.
மொரார்ஜி தேசாய் ஒரு விடுதலை போரட்ட தியாகி என்பதை தவிர எதையும் சரியாக கிழிக்கவைல்லை என்பது என் கருத்து. பிரதமராய் இருக்கும் போது எந்த மருத்துவ கழகமும் ஒத்துக்கொள்ளாத ஒரு ட்ரீட்மென்ட்டை இந்த அறிவுக்கொழுந்து திருவாய்மலர்ந்தது. "சுகாதார வாழ்வுக்கு காலையில் அவர் அவர்களின் சிறு நீரை அவர் அவர்கள் குடிக்கவேண்டும்" என்ற ஒப்பற்ற! கண்டுபிடிப்புதான் அது.இந்தியாவில் உள்ள அனைத்து மெடிக்கல் அசோசியேசனும் தலையில் அடித்துகொண்டது.
தன் மகளுக்கு RE-VALUATION விசயத்தில்கூட அரசியல் ஸ்டன்ட் ஆக இது இருக்கலாம்...ஐந்துவருட பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் இந்த பதவி பித்தர்கள்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.என் கருத்தும் இதுதான்.தேசாய் ஒரு அதி மேதாவி???மூத்திரம் குடிக்கச்சொன்ன முட்டாள்.அதவிடுங்க!படிச்சவன் தான் ஊழல் இல்லாத அரசியல் நெறியை கடைபிடிப்பாங்கன்னு ஒரு மாயை இருக்கு.படிச்சவனோ படிக்காதவனோ ,ஒழுக்கம் ஓங்கி உள்ளவனாலேயே நல்ல ஆட்சியைத்தரமுடியும்.படிச்சவந்தான் விதவிதமா ஊழல் பன்றான்.வாதியருங்களே மாணவனை சிகெரெட் வாங்கி வான்னு கீழ் வகுப்பிலேயே ஆரம்பிசிட்றாங்க இவனுங எல்லாம் எங்கே,எப்ப திருந்துறது????
crown says
Monday, August 30, 2010 4:29:00 AM
வாதியருங்களே மாணவனை சிகெரெட் வாங்கி வான்னு கீழ் வகுப்பிலேயே ஆரம்பிசிட்றாங்க இவனுங எல்லாம் எங்கே,எப்ப திருந்துறது??? ///
இதையெல்லாம் தாண்டித் தானே பரீட்ச்சையும் எழுதுறோம் அங்கேதான் கைவைக்கிறாங்க படுவாவிங்க !
Post a Comment