அண்மையில், ‘இலக்கியம், ஓர் இஸ்லாமியப் பார்வை’ எனும் தலைப்பில் இலங்கை அறிஞர் மன்ஸூர் நலீமி அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுக் காணொளியைக் கேட்டேன். தேர்ந்த மார்க்க அறிஞரானதால், அவர் அரபு இலக்கியத்திலிருந்து மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளை விவரித்திருந்தார். இலக்கியம் என்பது கட்டுரை, கதை, கவிதை போன்ற பல இயல்களை உள்ளடக்கியதாகும். ஆனால், இவ்வறிஞர் கவிதையை மட்டும் இலக்கியமாகக் கருதித் தம் சொற்பொழிவைத் தொகுத்து வழங்கியிருந்தார். http://adiraipost.blogspot.in/2012/07/blog-post_23.html
அவர் ஓரிடத்தில் ஆதங்கத்துடன், “தமிழில், குறிப்பாக இஸ்லாமியத் தமிழில் சிறந்த இலக்கியங்கள் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார். அவர் அரபு மொழியை மட்டும் சிறப்புறக் கற்றதால் – தமிழிலக்கிய ஈடுபாடு கொள்ளாதவராக இருப்பதால் - அதிலும், நம் சமகால இலக்கியச் செழுமை பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறாதவராக இருப்பதால், அவ்வாறு கூறினார் போலும். அவருடைய கண்ணுக்கும் கருத்துக்கும் படாமல், இன்று இஸ்லாமியத் தமிழில் இலக்கியப் பரப்பு விரிந்திருக்கின்றது என்பதுவே உண்மை.
பொதுவான தமிழிலக்கியங்களாகப் பேசப்படும் கம்பராமாயணம், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலானவற்றின் இலக்கியத் தரத்திற்கு எவ்விதத்திலும் குறையாத விதத்தில் ‘இஸ்லாமிய’ இலக்கியங்களைப் படைத்துள்ளனர் நம் இஸ்லாமியப் புலவர்கள். இத்தகைய இலக்கிய முன்னேற்றம், பொதுவான இலக்கிய வளர்ச்சி தடை பட்டிருந்த பதினாறாம் நூற்றாண்டில் நம் தமிழ் முஸ்லிம் புலவர்கள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தி, தமிழிலக்கியத் தொண்டாற்றியுள்ளனர் என்பதுவே உண்மையாகும். இத்தகைய இலக்கியங்களுள் சிலவற்றை நான் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து, சென்ற 1970களில் ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சிந்தனை’ எனும் பெயரில் தொகுப்புக் கட்டுரைகள் வரைந்து, பின்னர் அது நூலுருப் பெற்று, இரண்டு பதிப்புகளையும் கண்டுள்ளது.
ஒரு வேளை, அறிஞர் மன்ஸூர் கருதியது, குர்ஆன் – சுன்னா அடிப்படையில் இல்லை என்பதாக இருக்கலாம். இவ்வாறு இருந்தாலும், நாம் அவர் கூற்றை ஏற்க முடியாது. மாறாக, கடல் போல் பரந்துள்ள கவிதை இலக்கியங்கள் நம் கண் முன்னே காணக் கிடைக்கின்றன. அப்பெருங்கடலில் மூழ்கிச் சில முத்துகளையாவது எடுத்து வாசகர்களுக்குத் தரலாம் என்பதுவே எனது அவா.
சென்ற இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிவுப் பின்னணியில், தமிழில் ‘கவிதைப் புரட்சி’ செய்தவர்களுள் குறிப்பிடத் தக்க பேரறிஞர், என் தமிழ்ப் பேராசிரியர், ‘இறையருட்கவிமணி’ கா. அப்துல் கபூர் அவர்களாவார். அரபி மொழியறிவும் ஆங்கிலப் புலமையும் தமிழ்ப் பெரும்புலமையும் கொண்டு அன்னார் யாத்தளித்த கவிதை நூல்கள், கவியரங்கக் கவிதைகள் ஏராளம். அவை பற்றிய சிறியதோர் அறிமுகத்தை இப்பதிவில் காணலாம் வாருங்கள்!
‘நபியின் கவிஞர்’ என்ற பெயரைப் பெற்ற ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய பின்னர் யாத்த ‘மர்திய்யா’ எனும் இரங்கற்பா ‘ஷபீஹுக்க பத்ரின்’ என்று தொடங்குகின்றது. அதனை ‘முழுமதி’ எனும் பெயரில் அழகுதமிழ்க் கவியாக்கி அளிக்கின்றார் என் ஆசான்:
“நும்தோற்றம் முழுமதியாம்; நுவல்வேனதிற் பேரொளியாம்
நும்முகமோ நறுமணத்தின் நுவலழகே சொட்டுவதாம்
சீருலகின் பேரழகே! சிந்தனையின் எல்லையதே!
ஈருலகில் பொறுப்பார்யார் எழில்பொழியும் முகங்கண்டு?
ஆதநபி வழிமுறையில் ஹவ்வாக்கள் ஈன்றதில்லை
வேதநபி போன்றொருவர் வெகுசொர்க்கத் திலுமில்லை!”
இந்த நெடிய கவிதையடிகளை மொழியாக்கம் செய்துவந்த ‘இறையருட்கவிமணி’, இறுதியாக,
“பரிந்திடுவார் ரசூலுல்லாஹ்; பாரல்லாஹ் பிழைபொறுப்பான்
உரியநெறி அனைத்திலுமே உயர்வுபெறும் காலமெல்லாம்
இறைமறையே எம்தலைமை; இறையவனே எம்’கிப்லா’
இறையன்றிக் காப்பில்லை; இறையவனே மாபெரியோன்”
என்று தம் கவியாக்கத்தை நிறைவு செய்கின்றார்.
பேராசிரியரின் படைப்பிலக்கியங்களுள் ஒன்று, ‘இறையருள் மாலை’ எனும் அருள் வேட்டல் ஆகும். இப்பனுவலின் கண்ணிகள் அனைத்தும் கசிந்துருகி இறையருளைக் கோரும் பாமாலையாகும். கசிந்துருகும் கவிமணியின் எண்ணப் பிரதிபளிப்பின் ஓர் எடுத்துக்காட்டு:
“உன்னிடத் திருந்தே உலகுக்கு வந்தோம்
உன்னிடத் தன்றோ மீட்சியும் அல்லாஹ்!
மண்ணுறை வாழ்வை மகிழ்வாக்கித் தந்து
விண்ணுறை வாழ்வை விரிவுசெய் அல்லாஹ்!”
இப்பாமாலை முழுவதுமே ‘துஆ’ எனும் இறைவேட்டலாக இருப்பதால், படித்துப் பரவசம் கொண்டு, கசிந்து கண்ணீர் சொரியும் நிலைக்கு நம்மை ஆக்குகின்றது.
பேராசிரியரின் புகழ்பெற்ற பாமாலைகளுள் குறிப்பிடத் தக்கது, ‘நாயகமே!’ எனும் படைப்பாகும்.
“அருளாளன் அன்புடையோன் அல்லாஹு வின்கருணைப்
பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே!”
என்று தொடங்கி, நபியவர்களின் நல்வாழ்வு, நற்போதனைகள், முன்மாதிரி ஆகியவற்றை அழகுறக் கோர்த்து, அரும்புகள்கூடப் பாடி அகம் மகிழும் விதத்தில் அமைத்தளித்துள்ளார் என் பேராசான்.
“பாலைகளில் காடுகளில் பனிபடர்ந்த நாடுகளில்
சோலைகளில் தீவுகளில் சொல்நாட்டும் நாயகமே!”
என்றெல்லாம் பாடித் தமது ‘ஹுப்புன்நபி’ எனப்படும் நபிநேசத்தைப் பதிவு செய்கின்றார்கள்.
இளம் சிறார்கள் மீது எல்லையற்ற பாசத்தைப் பொழிந்த ‘இறையருட்கவிமணி’யவர்கள், அந்த அரும்புகள் பாடி மகிழ்வதற்காகக் கோர்த்த பாமாலைதான் ‘அரும்பூ’ எனும் தொகுப்பு. இந்நூலைப் பற்றிக் கவிதையால் தமது கருத்தைப் பதிக்கின்றார் நம் ‘அதிரை அறிஞர்’ புலவர் அஹ்மது பஷீர் அவர்கள்:
“கரும்புக் காட்டைக் கவியாக்கிக் காதிற் குள்ளே ஊற்றியவர்
சுருங்கிப் போன மானிடரைச் சொற்பொழி வாலே நிமிர்த்தியவர்
விருந்து படைத்து வெகுநாட்கள் விலகிச் சென்றன எனும்போதில்
அரும்பு மலரைக் கண்டேனே அதிக இன்பங் கொண்டேனே!
படிக்க எடுத்தேன்; வெடுக்கென்று பற்றிக் கொண்டார் வீட்டிலுளோர்
முடித்தார் ஒருவர் பின்னாக முடிக்கப் பொறுக்க மாட்டாமல்
படிக்க முனைந்தார் அனைவருமே பழுத்த குலையில் ஈக்கள்போல்
தொடுத்த ‘அரும்பூ’ அத்தனையும் சுவைத்’தேன்’ ‘சுவைத்தேன்’ என்றாரே!”
என் ஆசான் ‘இறையருட்கவிமணி’ அவர்களின் கவியரங்கத் தலைமைக் கவிதைகளின் தாக்கத்தைப் பற்றிய தகவல்களை, இன்ஷா அல்லாஹ், அடுத்த பதிவில் பார்ப்போம்.
12 Responses So Far:
தொடர்கிறது
கவிதைமீதான இஸ்லாமியப் பார்வை
படர்கிறது
கவிஞன்மேலான தீனொளியின் தீர்வை
மூழ்கடிக்கப்படவிருந்த
முஸ்லிம் கவஞர்களுக்கு
நீரடியில்
முத்து வைத்துக் காத்திருந்த சிப்பி நீர்
மொழிகொண்ட காத்துவிட்ட சிற்பி நீர்.
என்
வேண்டுகோள் என்ன
தூண்டுகோல் ஆனதா?
காத்திருங்கள் கவிஞரே
துரிதமாய் முன்னேறும்
தொழில்நுட்பம் ஒரு நாள்
இதை
வாசிக்கும் தங்கள்
வாய் பூக்கும்
புன்னகையைப் படம்பிடிக்கும்
பின்னூட்டமாய் இடம்பிடிக்கும்!
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
//மொழிகொண்ட காத்துவிட்ட சிற்பி நீர்.//
"மொழிகொண்டு" என்று திருத்தி வாசிக்கவும்
எங்கள் அனைவரின் சார்பாக கவிக் காக்காவின் கருத்தே இந்த பதிவுக்கு முத்தாய்ப்பாக இருக்கிறது !
//என் ஆசான் ‘இறையருட்கவிமணி’ அவர்களின் கவியரங்கத் தலைமைக் கவிதைகளின் தாக்கத்தைப் பற்றிய தகவல்களை, இன்ஷா அல்லாஹ், அடுத்த பதிவில் பார்ப்போம்.//
காத்திருக்கிறோம் ! இன்ஷா அல்லாஹ்...
தமிழ் இலக்கியத்தில் இசலாமியர் பங்கு ..
தேவையான ஆய்வு அறிவு தாகம் உள்ள
அதிரை நிருபர் வாசகர்களுக்கு ரமலான் பரிசு ..
//என் ஆசான் ‘இறையருட்கவிமணி’ அவர்களின் கவியரங்கத் தலைமைக் கவிதைகளின் தாக்கத்தைப் பற்றிய தகவல்களை, இன்ஷா அல்லாஹ், அடுத்த பதிவில் பார்ப்போம்.//
காத்திருக்கிறோம் ! இன்ஷா அல்லாஹ்...
"அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலமுமோர் இறையின் இனியபேர் போற்றி”
இப்பா வரிகளைத்தான் என்னுரை/கவியரங்கத் துவக்கம் மற்றும் பிற சொற்பொழிவுகளில் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்; காரணம்; இறையருட்கவிமணி அவர்களின் பால் எனக்கு ஏற்பட்ட பேரன்பு இப்பட்டம் வழங்கப்பட்ட அன்று செக்கடிப்பள்ளியில் (பேராசிரியர் மு.அப்துல்கறிம் அவர்களால்)வழங்கப்பட்ட போது அதற்கான ஏற்புரையில் அவர்கள் சொன்ன வார்த்தை விளையாட்டுகள் என்னை ஈர்த்தன; அதன் பின்னர் அவர்களின் கவிதைகள். பாடல்களின் பால் ஈர்க்கப்பட்டவனாய் எனக்கு இவர்கள் ஆசானய் இருக்க வேண்டும் என வேண்டினேன்; ஆனால் எனக்கு ஆசானாய் இருக்கும் தங்கட்கு இவர்கள் ஆசானாய் இருந்ததும் என் பேறு என்றே கருதி அவர்களின் வழி நின்று தங்களின் தொடர் பயிற்சிகளைப் பின்பற்றி அடியேனும் “இஸ்லாமிய இலக்கியத்துறையில்” ஒரு சிறிய பங்களிப்பைச் செய்வேன் இன்ஷா அல்லாஹ் ; இஃதே என் வாழ்வில் பெற்ற பெரும் பேறென்று இலங்கை காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தின் வாப்பா (பன்னாட்டு இஸ்லாமியக் கழக நிறுவனர்) அவர்களிடம் உறுதிமொழியளித்தேன்,
தாங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கிய “இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை” நூலில் தங்களின் பேராசான் அவர்கள் தங்களைப் பாராட்டி எழுதும் வரிகளைப் படித்து விட்டு வியந்தேன்; ஒரு மாணவரின் எல்லா நற்குணம், நல்லறிவாற்றல் எல்லாம் ஓர் ஆசான் எப்படித் துள்ளியமாய்க் கவனித்து கணக்கிட்டு அவற்றை தன் வாழ்த்துரையில் உளமாற பாராட்டியுள்ளார்கள்!
இத்தொடரின் முத்தாய்ப்பாக உள்ளது முத்தான இத்தொடர் என்றே கருதுகின்றோம். அல்லாஹ்வின் அருளால் தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதே எங்களின் துஆவும் அவாவும்!
//இலமுமோர் //
இலகுமோர் என்று திருத்தி வாசிக்கவும்
இருட்டில் தட்டச்சு செய்கின்றேன்
இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கஃபூர் சாஹிப் அவர்கள், நம் காதிர் முகைதீன் கல்லூரியில் 1964 - 1967 காலங்களில் முதல்வராகப் பணியாற்றியவர்கள். அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் பேராசிரியர் கல்லூரி முதல்வராக நிர்வாகத் திறமையுடன் செயலாற்ற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய முதல் முதல்வர் என்றால் அது மிகையாகாது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஈன்றெடுத்த "தமிழறிஞர்". ஆனால் அவர்கள் இயற்றிய "விந்தைக்குரிய மொழி!" என்ற கட்டுரையைப் படிக்கும்போது, எந்தப் பல்கலைக் கழகம் ஈன்றெடுத்த "அரபு மொழி அறிஞர்" என அறிய முடிய வில்லையே?!
இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கஃபூர் சாஹிப் அவர்கள் எழுதிய "மிக்க மேலானவன்" நூலை படித்தவர் பேராசிரியர் அவர்களின் அறிவியல் அறிவை அறிய முடியும்!
எங்கிருந்து தான் அவ்வளவு செய்திகளையும் திரட்டினார்களோ தெரியாது! இன்றைய "Natural geographical channel / Science Discovery channel" பார்ப்பதைப் போல் இருக்கும்.
“இறையருட்கவிமணி” அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகமாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்றைக்கு அதிரையில் பிறந்து எழுத்துலகில் அருந்தமிழ் தொண்டாற்றும் ஜனாப் . அஹமது காக்கா அவர்கள் ஆகட்டும், தனது நாவளத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் சொல்னாட்டும் பேராசிரியர் அப்துல் காதர் ஆகட்டும், ஆசிரியப்பணியில் தன்னை அர்ப்பணித்த ஹாஜா முகைதீன் சார் அவர்கள் ஆகட்டும், இன்னும் வாவன்னா சார் உட்பட அனைவரிடமும் இறையருட்கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களின் தாக்கம் மறைந்திருப்பதை அவர்களாலேயே மறுக்க முடியாது. அப்படி ஒரு வாரிசுக்கூட்டத்தை உருவாக்கிய நாவரசர், எழுத்தாளர், பண்பாளர். சிரித்த முகமும் எளிய அணுகுமுறைகளும் என்றும் மறக்க முடியாதவை.
இலக்கியம் ஈந்த தமிழ் என்கிற அவர்களது நூல் – எட்டாம் வகுப்பு படிக்கும்போது – பள்ளி ஆண்டு விழாவில் எனக்கு அவர்களால் பரிசளிக்கப்பட்டதை – இன்றும் எனது நூலகத்தில் பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். அவர்களின் மும்மணி மாலை, மிக்க மேலானவன் ஆகிய நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கு நம்மவர்கள் ஆற்றிய அரும் தொண்டுக்கு தலையாய உதாரணங்கள்.
அன்னாரை நினைவு படுத்திய அதாவது ஒரு மேதையை நினைவூட்டிய மேதைக்கு நன்றி.
இபுராஹீம் அன்சாரி
Post a Comment