ஆரம்பத்தில் சரியாக ஓத வராததாலும், உஸ்தாத் அவர்களின் கண்டிப்பாலும் பள்ளிவாசல் எனும் கட்டிடம் ஏதோ கண்டிப்பு நிறைந்த இடமாகவே பட்டது. இருப்பினும் நான் பிறந்த என் வீட்டுக்கும், பிறகு ஆறாவது வகுப்பு படிக்கும்போது புதிய வீட்டுக்கு மாறிய போதும், 2 வீட்டுக்கும் பள்ளிவாசலுக்கும் இருந்த / இருக்கும் தூரம் 20 மீட்டர் கூட இருக்காது.
வாழ்க்கையின் பல நிலைகளை கடந்தாலும் பள்ளிவாசல் பக்கத்திலேயே வாழ்ந்த அந்த காலங்கள் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலங்களை கொண்டது.
எங்கள் தெரு [ தரகர் தெரு ] பள்ளிவாசலுக்கென்று ஒரு நல்ல அமைப்பு இப்போதும் இருக்கிறது. கடற்கரை பகுதியிலிருந்து வீசும் காற்று குளத்தி தண்ணீரில் பட்டு ஒரு தென்றலாகவே எப்போதும் பள்ளிவாசலை நிரப்பும். தொழுகை முடிந்ததும் உடனே யாரும் வீட்டுக்கு போக நினைக்காத அளவுக்கு அந்த காற்று எங்களை கட்டிப்போடும்.
சின்ன வயதில் எங்கள் தெரு பள்ளிவாசல் நினைவுகள் எல்லாமே எனக்கு காமெடியானது. 70 களின் தொடக்கத்தில் பள்ளிவாசலில் ஒதுச்செய்ய ஹவுல் கட்டினார்கள். தெரு,..ஏற்கனவே நிறைய சட்ட திட்டங்கள் நிறைந்த தெரு. எனவே ஹவுலில் யாரும் இறங்கினால் நூறு ரூபாய் அபராதம் என்று எங்கள் தெரு பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்படி அபராதம் போடாமல் கண்டித்து அனுப்பினால் கதைக்கு ஆவாது என்பது நடைமுறை உண்மை. இந்த ரூல்ஸ் தெரியாத நான் தொழுது விட்டு வரும்போது [ 5ம் வகுப்பு படிக்கும்போது ] எங்கள் தெரு சஹுர்தீன் கைதவறி போட்ட தஸ்பீஹ் மணியை எடுக்க ஹீரோ மாதிரி ஹவுலில் இறங்கி எடுக்க முக்குளித்து எழுந்தவுடன் என் கண்ணுக்கு தெரிந்த முதல் ஆள் வாட்ஸப்பை விட வேகமாக பஞ்சாயத்துக்கு தெரிவிக்க அந்த இரவே என் சார்பாக என் தாய் மாமா அவர்கள் 100 ரூபாய் அபராதம் கட்டி விட்டு ஆயிரம் ரூபாய்க்கு திட்டினார்கள். [ பணம் பெரிதல்ல....தாய் மாமா ஒரு பஞ்சாயத்தார் ..எங்கள் தெரு பஞ்சாயத்தில் கை கட்டி நின்று தான் அப்போது பதில் சொல்ல வேண்டும். 'இவன் என்னை சபையிலெ கை கட்ட வச்சுட்டானே' என்ற வார்த்தை மட்டும் அன்றைக்கு நான் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது அசரீரி மாதிரி அடிக்கடி காதில் விழுந்தது. எனக்கு 10 வயது இருக்குமாகையால் இந்த விசயத்தின் சீரியஸ்னஸ் தெரியாமல் நாளைக்கு எங்கு பந்து விளையாடப்போகலாம் என்பதிலையே கவனம்.
எங்கள் தெருவில் அப்போது மிகவும் கட்டுக்கோப்பாகவும் , ஒற்றுமையாகவும் பல விசயங்கள் நடந்தது. தெருவின் குளத்தை தூர்வார எங்கள் தெரு ஆட்களே இறங்கி நின்று வேலை பார்த்தனர் . [ நானும் தான் ] ..யாரும் வரவில்லை என்றால் அபராதம். மற்றும் இந்த பள்ளியில் அதிக நாள் இமாமாக இருந்த அஹமது ஹாஜா லெப்பை அவர்கள் எனக்கு ஓதித்தந்த உஸ்தாத். அவரது உழைப்பும் மற்றவர்களுக்கு அறிவுறுத்தும்போது யாரையும் சாராமல் நடுநிலைமையாக பேசுவது மிகவும் சிறப்பாகவே இருக்கும். யாருக்காகவும் மார்க்கத்தை விட்டுத்தர மாட்டார்.
பள்ளிவாசலில் நோன்புக்கஞ்சியும், மற்ற விசயங்களுக்காக ஒன்று கூடி முடிவெடுப்பதும், பஞ்சாயத்தும் எப்போதும் மறக்க முடியாது.
பள்ளிவாசல் ஒழுக ஆரம்பித்தவுடன் 1991 ல் பள்ளிவாசல் கட்ட மனை போடப்பட்டது. பழைய பள்ளிவாசல் எங்களிடமிருந்து விடை பெற்றது.
புதிய பள்ளிவாசல் கட்ட நுங்கம்பாக்கத்தில் உள்ள அஷதுல்லா பாஷா எனும் எஞ்ஜினீயரை போய் பார்க்க எனது வாப்பா சொன்னார்கள். அப்போது இங்கு மலேசியாவில் உள்ள பள்ளிவாசல் ட்ராப்ட் ப்ளானை [ Taman Tun Dr Ismail Masjid , Kuala Lumpur ] எடுத்துக்கொண்டு கொட்டேசன் கேட்டேன். அவர் சொன்ன தொகை எனக்கு லேசாக தலை சுற்றியது அப்போதைக்கு 4 கோடி ரூபாய் சொன்னார்.
பிறகு அதே ப்ளானில் சுருக்கி / வெட்டி இப்போதைக்கு உள்ள பள்ளிவாசல் முழுக்க முழுக்க எங்கள் தெருவாசிகளின் ஆதரவுடன் கட்டப்பட்டது. இதில் எங்கள் தெருவாசி அல்லாத ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டுமானால் ஜனாப். இக்பால் ஹாஜியார் அவர்களின் ஆரம்ப கால ஒத்துழைப்பு / உதவி மறக்க முடியாது.
இப்போதைக்கு உள்ள எங்கள் தெரு பள்ளிவாசல் திறப்பு விழாவை எங்கள் தெரு ஆட்கள் தன் வீட்டுத் தேவையை விட அதிக சிறத்தை எடுத்து வந்தவர்களை கவனித்து அனுப்பியதை மற்ற தெருவாசிகள் சொல்லக் கேள்விப்பட்டேன்.
இடையில் தெருவில் சில வருடங்கள் ஒற்றுமையில்லாத சூழல் ஏற்பட்டது. ஆனால் பள்ளிவாசல் என்று வந்தவுடன் எல்லோரும் ஒற்றுமையுடன் நடந்து கொண்டனர்.
பள்ளிவாசலில் காற்று வாங்க நின்று பேசிக் கொண்டிருக்கும் போது பழைய பள்ளிவாசல் மட்டும் அடிக்கடி "மோர்ஃபிங்' கில் வந்து போகும்.
பள்ளிவாசல் என்பது வெறும் கட்டிடம் மட்டும் அல்ல. நம் வாழ்க்கையின் ஒரு அங்கம், தொழுகையை சுற்றி அன்றாட வேலைகளை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் உருப்படலாம்.
அதற்கு பள்ளிவாசல் மிகவும் உதவியாகவே இருக்கும்.
அதற்கு பள்ளிவாசல் மிகவும் உதவியாகவே இருக்கும்.
ZAKIR HUSSAIN
19 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஜாகிர்,
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தான் பிள்ளைப் பிராயத்தில் தொழுத பள்ளிவாசல் நினைவுகள் மறக்க முடியாதவை. அந்தக் காலகட்டத்தில் மார்க்க நடைமுறைகள் மட்டுமன்றி விளையாட்டு, கற்றல், பொழுதுபோக்கு என எல்லாமே பள்ளிவாசல் சார்ந்ததாகவே இருக்கும்.
பலருக்கு வயோதிகம் வரை அதே முஹல்லாவின் பள்ளியே தொடர சிலருக்கு முஹல்லா, ஊர், நாடு என இடம்பெயர்ந்து பள்ளிவாசல் மாறிப்போகும். எனினும் பிள்ளைப்பிராயத்து பள்ளிவாசல் நினைவுகள் ரம்மியமானவை, உங்கள் தெருவின் பள்ளிக்குள் வீசும் தென்றலைப் போல.
ஞாபகங்களைத் தூண்டும் பதிவு. வழக்கம்போலவே வருடும் வாக்கியங்லள்.
மனதை வருடும் புகைப்படங்கள்!
நமதூர் ஒர் இஸ்லாமிய பட்டணமாக என்றென்றும் திகழ வேண்டும் என்ற நன்னோக்கில் ஊரெங்கும் இறையில்லங்களை உருவாக்கிய நமது முன்னோர்களின் கனவுகளை நினைவாக்கிட நாமும் வாழ்வதோடு நமது வாரிசுகளையும் தூய இஸ்லாமிய நெறிகளோடு வார்த்தெடுப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடனாகும்.
அழகிய நினைவூட்டலை பதிந்த சகோ. ஜாகிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ் !
அழகிய படங்கள் அன்று பழகிய நேசங்கள் என்று அற்புதமான நினைவூட்டல்...
'கட்டு'கோப்புகள் 'நிறை'ந்த எனும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது...
மாறாக, இன்றையச் சூழலில் கட்டு(கள்) கையிலும் 'கோப்பு(கள்) கம்பட்டிலும் ஆளுக்கு ஒரு கூட்டமாக மாறிப் போனதும் நெருடலே !
//பள்ளிவாசல் என்பது வெறும் கட்டிடம் மட்டும் அல்ல. நம் வாழ்க்கையின் ஒரு அங்கம், தொழுகையை சுற்றி அன்றாட வேலைகளை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் உருப்படலாம்.
அதற்கு பள்ளிவாசல் மிகவும் உதவியாகவே இருக்கும்//
உண்மை !
//Taman tun Dr.Ismail Masjid Kula Lumpur பிளேனைஎடுத்துக்கொண்டுசென்னைபோனேன். அவர்சொன்னகொட்டேசேன்.நாலுகோடிரூவா // அங்கேதான்தவறுசெய்திருக்கிறீர்கள்.கோலாலம்பூர் பிளேன்கொண்டுபோனதால்தான்அதற்க்குநாலு கோடிரூவாய்வந்தது.லோக்கல்மாடல்என்று சொல்லிஇருந்தால்ஒன்னரைகோடிஎன்பதேமிகஅதிகம். என்னைபொருத்தவரையில்கிர்நியகுளத்தின்அருகே கட்டியஅந்தபள்ளிவாசலைஇரண்டாம்தாஜ்மஹாலாக அதைமாற்றிஇருக்கலாம்.கலாரசிகதன்மை கொண்டவர்களை ஆலோசித்திருந்தால் இதுஇரண்டாம்தாஜ்மஹால்!. வெளிப்படையாகசொல்லப்போனால் பழையபள்ளிவாசல்கண்ணுக்குபேரழகு!
//இடையில்எங்கள்தெருவில்ஒற்றுமை இல்லாதண்மைநிலவிவந்தது.ஆனால் பள்ளிவாசல்என்றதும்ஒற்றுமைவந்தது// எங்கள்தெருவில்பழையபள்ளிவாசல் இருக்கும்போதுஒற்றுமையுடன்கூடிபழகினோம். புதியபள்ளிஎன்றதும்கோர்ட்டு,கச்சேறி.போலிஸ்வேன். வீட்டையுடைத்தல்.ஸ்டேஆர்டர்,ரிமாண்டு, ஓரளவுநியாமானஐட்டங்கள்கஷ்ட்டங்கள்வந்தது. ஆனால்அல்லாகைவிடவில்லை.அவன் விரும்பியவர்களுக்கு நல்ல'பரகத்'செய்த்தான்.
//அவன்விரும்பியவர்களுக்குநல்லபரகத்'செய்த்தான்'//இதுஎழுத்துப்பிழை''நல்லபரகத்செய்தான்'' யென்றுவாசிக்கவும்.
தரகர் தெருவின் பழைய பள்ளியும் படித்துரையும் ஆழமான கரையும் நன்றாக நினைவிருக்கிறது.
'வெட்ட' திடலில் ஃபுட்பால் / வாலிபால் விளையாடிவிட்டு பள்ளிகுளத்தில் கைகால் கழுவுவதுண்டு.
கருப்பு வெள்ளைப் படத்தில் கனவு போல் அழகாயிருக்கிறது பள்ளியும் குளக்கரையும்.
//ஹௌதில்இங்கியதுக்காகநூறுரூவாஅவராதம்போட்டார்கள்//உன்தந்தைவழிஅப்பாவும்உன்தாய்வழிஅப்பாவும்தெருநாட்டாமை குழுவில்இடம்பெற்றவர்கள்.அவர்களின்பேரனுக்கேஅப்பராதம்என்றால் அங்கே இரண்டாம்மனுநீதிசோழர்கள்நிர்வாகத்தில்இருந்திருக்கிறார்கள். வேறுதெருக்களில்ஆள்பார்துமட்டுமேகுற்றமும்-தண்டனையும் தாராசில் போட்டுநிறுத்துபார்க்கப்படும்.அதாவதுவலுவான குடும்பத்துக்கு தண்டனை போட்டால்தராசேமரணதண்டனைகைதியாகும்.
நன்றி காக்கா...எனக்கும் தரகர் தெரு பழைய பள்ளியின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு....
//கடற்கரை பகுதியிலிருந்து வீசும் காற்று குளத்தி தண்ணீரில் பட்டு ஒரு தென்றலாகவே எப்போதும் பள்ளிவாசலை நிரப்பும். தொழுகை முடிந்ததும் உடனே யாரும் வீட்டுக்கு போக நினைக்காத அளவுக்கு அந்த காற்று எங்களை கட்டிப்போடும்.//
இதற்க்காகவே கடந்த விடுமுறையில் பெரும்பாலும் இங்கே தொழுக சென்றேன் அல்லாஹு அக்பர்....என்ன ஒரு சுகம் அந்த காற்று படும்பொழுது
ஒரு காலத்தில் கட்டுப்பாட்டுக்கும்/கண்ணியத்திற்க்கும் பெயர் பெற்ற தெரு தரகர் தெரு...மீண்டும் அது தொடர துவா
தரகர் தெருவுக்கான புதிய பள்ளி கட்டுவதற்காக ஜாகிரின் வாப்பா எடுத்த முயற்சிகளும் உழைப்பும் குறிப்பிடத்தக்கது.
நான் சவுதியில் இருந்தபோது அவர்கள் மலேசியாவிலிருந்து மெனக்கெட்டு சவுதிக்கு வந்தது, தரகர் தெரு முஹல்லாவாசிகளைச் சந்தித்து பல்ளிவாசல் கட்டுவதற்கான அவசியத்தைச் சொல்லி அவர்களையும் பங்கேற்க வைத்தது என்று அவர்களின் அர்ப்பணிப்பை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச்செய்வது ஒவ்வொரு தரகர் தெருவாசியின் கடமையாகும்.
அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்யத்தையும் தருவானாக, ஆமீன்.
மருமகன்ஜாஹிரின்தந்தைஅப்துல்ஹயர்காக்காமஅவர்கள்மலேசியாவிலும் தரகர்தெருவில்பள்ளிகட்டஇரவென்றும்பகல்என்றும்பாராமல்பெரும்முயற்சி மேற்கொண்டார்கள்.அம்முயற்சிதிருவினையாகியது.அவர்களுக்குபூரண சுகத்தையும்நீண்டஆயுளையும்கொடுக்கஎல்லாம்வல்லஅல்லாவைவேண்டுகிறேன்.
எப்படிஎப்படிதான்பிளேன்போட்டுகட்டினாலும்அதில்ஒருகுறைஏற்பட்டுவிடுகிறது.என்னமாத்தான்பாதுகாப்பாவச்சாலும்செருப்புகாணாபோவுதே?
அருமையான புகைப்படங்கள், அந்த பழைய பள்ளிவாசல்தான் இன்றும் நினைவில் நிற்கின்றது
நினைவுகள் ஒரு சங்கீதம்.
அரிய பொக்கிஷமான இந்த புகைப்படங்களை எடுத்து அதைப் பதிவு செய்திருப்பதை பாராட்டுகிறேன்.
தம்பி ஜாகிர் எதைச் செய்தாலும் அது மனதை தொடுவதாகவே இருக்கும். இந்தப் பதிவு எனக்கும் பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டது.
ஜாகிர் உடைய தாய்வழிப் பாட்டனாரும் தரகர் தெருவில் அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வாப்பாஸ் அப்பா என்று அழைக்கப்பட்ட அப்பாஸ் அப்பாவும் நினைவுக்கு வந்தார்கள்.
ஜாகிரின் தாய் வழிப் பாட்டனாரும் அப்பாஸ் அப்பாவும் ஒரு ஊராட்சித் தேர்தலில் போட்டி இட்டார்கள் என்பதும் என் நினைவில் உண்டு.
என் நினைவுகளில் இருப்பதை ரசித்து கருத்திட்ட ஃபாரூக் மாமா, அபு இப்ராஹிம், அப்துல் மாலிக், யாசிர் [ முக நூலில் படம் போட்டு கலக்குறீங்க ] இப்ராஹிம் அன்சாரி அண்ணன், அதிரை அமீன் , யாவருக்கும் நன்றி.
வேலைப்பழு காரணமாக இந்த ஆர்டிக்கிலை நிறைவாக எழுதி முடிக்க முடியவில்லை.
பள்ளிவாசல் கட்டும் விசயத்தில் என் வாப்பாவின் முயற்சிகளை நான் எழுதுவது தவறு. இந்த பள்ளி தரகர்தெருவில் பிறந்த / இன்னும் பிறக்கப்போகிரவர்களின் உரிமையானது. பள்ளியின் பயன்பாடு என்பது உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் சமமானது.
இப்போது இருக்கும் பள்ளிவாசலை என்னைப்பொருத்தவரை அனைவரும் கட்டி முடித்த ஒரு இறை இல்லம்.
இந்தபடங்கள் என்னுடன் இருந்ததற்கான காரணம் நான் 5ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து எனக்கு இருந்த Photography யின் மீதான ஆர்வம்தான்.
இதுபோல் அதிராம்பட்டினத்தின் பழமையை யாராவது படமாக வைத்திருந்தால் அதிரை நிருபருக்கு அனுப்பி பதிய செய்ய நான் பொறுப்பு.
படம் வைத்திருப்பவர்கள்தான் உதவி செய்ய வேண்டும்
//பழமையையாராவதுபடமாகவைத்திருந்தால்.....//மருமகன்ஜாஹிர்சொன்னது.''அடபோதம்பி!நீஒண்ணு. பினாங்குலே இருக்குற வாப்பா அஞ்சு வயசு மவனே பாக்கஆசைப்பட்டுகடுதாசிஎழுதுனாரு! திருவாரூருக்குரைலேறிபோயிபடம்புடிச்சு அனுப்புனோம்.அப்போவெல்லாம்படம்புடிக்கிற டப்பாவையேநாங்கபாக்கலையே! எங்கட்டைஏதுபலயபடம்?
Post a Comment