Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் 20

தாஜுதீன் (THAJUDEEN ) | September 27, 2010 | , ,

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை                           எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.



மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

20 Responses So Far:

Shameed said...

அணைத்து பெற்றோர்களும் பின்பற்றவேண்டிய ஒன்று

பாத்திமா ஜொஹ்ரா said...

அதிரை அஹமது காக்கா அவர்களுக்கு,நீங்கள் அதிரை சம்பந்தப்பட்ட செய்திகளில் நிபுணத்துவம் உள்ளவராக இருக்கிறீர்கள்.மேப்புடியான் என்றால் என்ன (நம்மூரில் பாம்பு,பன்றி,சைத்தான் போன்றவற்றை அழைப்பதை கேள்விப்பட்டு,என் ஒரு கட்டுரைக்கு பெயர் வைத்தேன்,)விளக்கமுடியுமா.சகோதரி லக்ஷ்மி கேள்வி கேட்டுள்ளார்.உதவமுடியுமா?உங்களுக்கு தனி பிளாக் உள்ளதா?

அதிரைநிருபர் said...

சகோதரரி ஃபாத்திமா நீங்கள் இந்த ஈமெயில் முகவரியில் adiraiahmad@gmail.com அதிரை அஹமது அவர்களை நேரடியாக தொடர்ப்பு கொள்ளலாம்.

அதிரைநிருபர் said...

மேப்புடியான் என்றால் என்ன?

இந்த கேள்விக்கு யாராச்சும் பதில் சொன்னால் நாமும் விபரமாக அறிந்துக்கொள்ளலாமே.

சூவாரஸ்யமாக பதில் சொல்லும் நம் சகோதரர்களின் பதில் எதிரிப்பார்க்கப்படுகிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதனையே நான் அன்று (ஊரில்) மூத்தவங்ககிட்டே கேட்கும் போது சொன்னது இப்படி "மேற் படி"யான அல்லது "மேல் சொன்ன படி" அல்லது "மேற் குறிப்பிட்ட" எனபதுதான் காலப்போக்கில், பெயர் சொல்ல விரும்பாத நபரை அழைக்கவும், அல்லது தாங்கள் மேலே சொல்லிருந்தவைகளை அழைக்கவும் வழக்காடிக் கொண்டிருக்கிறோம்.

மேப்புடியான தகவல் சரியாக இல்லாமல் இருக்கலாம் ஒருவேளை சரியான விபரம் கிடைக்குமேயானால் விளங்கிக் கொள்ளலாம் நாமும் சேர்ந்து !

Shameed said...

பெயரை கூற விரும்பாத விசயங்களுக்கு மேற்கோள் காட்டுவதே மேப்புடியான்!!!
உதாரணம் இருவர் நடந்து செல்லும்போது பாதையில் மலம் கிடந்தால் அதை சொல்வோம் மேப்புடியான் கிடக்குது மிதித்து விடாதே என்று. இந்த வார்த்தையை அதிகமாக நமது ஊரில் பெண்கள் தான் பயன்படுத்துவர்

Yasir said...

//பெயரை கூற விரும்பாத விசயங்களுக்கு மேற்கோள் காட்டுவதே மேப்புடியான்!!!//--//"மேற் படி"யான அல்லது "மேல் சொன்ன படி" அல்லது "மேற் குறிப்பிட்ட" எனபதுதா// இது சரியென்று நினைக்கிறேன்....ஒரு ஆளை அவர் நடந்து வரும்பொழுது கண்ணை காட்டி...மேப்புடியான்(மேற் சொன்ன ஆள் ) சரியான குடிகாரன்..பொம்புள கள்ளன் என்று பெரும்பாலும் பெண்களும் சில ஆண்கள் சொல்வார்கள்...பகல் நேரங்களில் பாம்பை பாம்பென்று அழைக்கு பெண்கள் இரவு நேரங்களில் அதை “ மேப்புடியான் “ என்று அழைப்பதுதான் புரியவில்லை

Shameed said...

பெண்கள் இரவு நேரங்களில் அதை “ மேப்புடியான் “ என்று அழைப்பதுதான் புரியவில்லை.


இரவு நேரத்தில் பாம்பு என்று சொன்னால் பாம்பு வந்து விடும் என்ற மூட பழக்க வழக்கமே காரணம்

Ahamed irshad said...

கட்டுரையின் கருப்பொருள் தடம் மாறுகிறது பின்னூட்டங்களில்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஹமது இர்ஷாத் on Tuesday, September 28, 2010 2:49:00 PM said...
கட்டுரையின் கருப்பொருள் தடம் மாறுகிறது பின்னூட்டங்களில்.. //

I do appreciate for ALERT !

Shameed said...

அஹமது இர்ஷாத்
சொல்வது சரியோ ,

இதுபோன்ற விசயங்களுக்கு என்று தனியாக ஒரு மேடை அமைப்பது பற்றி அதிரை நிருபர் யோசிகளாம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள்//

அடடா கோபமாக பார்க்கும் / இருக்கும் நம் குழந்தையிடம் "sorry"ன்னு (மன்னிச்சுடும்மான்னு சொன்னா வேற எதோ இன்னொரு தப்பு செய்றமாதிரி பார்வை) சொல்லிட்டு அவங்க முன்னாடி மவுனம் காட்டினாலே போதும் வின்னையே வீழ்த்திய மகிழ்ச்சியும் அவர்களின் முகத்தில் தெரியும் அவர்களின் ஆளுமையும் ரசிக்க வேண்டிய தருனம் நம் குழந்தைக்ளிடம்.

Shameed said...

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.


இது போன்ற விசயங்களில் இருந்து நாம் நம் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//கட்டுரையின் கருப்பொருள் தடம் மாறுகிறது பின்னூட்டங்களில்..//

தம்பி இர்ஷாத் நீங்கள் சொல்வது சரி தான், இனி கட்டுரையின் கருப்பொருளுடன் பின்னூட்டங்கள் இருக்கும் என்று நம்புவோம்.

சும்மா ALERT மட்டும் கொடுத்தா போடுமா.. ஏதாச்சும் உங்க ஸ்டைல நச்சுண்டு இந்த கட்டுரையின் கருப்பொருளுடன் கருத்துப்போடலாம்லே தம்பி..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். //

இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் படிக்கும் அதிரை ஸ்கூல்களில் இதுப் போன்று நடைப்பெறுவது இல்லை என்பது நான் அறிந்தது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்//

இளமையில் இஸ்லாமிய வரலாறுகளை தன் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் பெற்றோர்களைவிட தன் பிள்ளைகளிடம் டிவி சீரியல் கதைகளைப் பற்றி பேசும் பெற்றோர்களை அதிகம் இன்றைய காலகட்டத்தில் பார்க்க முடிகிறது என்பது வேதனையான உண்மை.

இஸ்லாமிய ஸ்கூல்களிலும், காலை மாலை மதர்ஸாக்களில் மார்க்க விசயங்கள் ஒரு பக்கம் நம் பிள்ளைகளுக்கு சொல்லப்பட்டாலும், மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பெற்றோர்கள் மார்க்க விசயங்களை பிள்ளைகளுக்கு தங்கள் வீடுகளில் சொல்லித்தருகிறார்?

அதிரைநிருபர் said...

//இதுபோன்ற விசயங்களுக்கு என்று தனியாக ஒரு மேடை அமைப்பது பற்றி அதிரை நிருபர் யோசிகளாம்//

விரைவில் அதிரை அழகுத் தமிழ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவர இருக்கிறது.

தனி பகுதியை பொதுவாக உருவாக்கும் எண்ணம் நம் அதிரை நிருபருக்கு தற்போதைக்கு இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

Yasir said...

//6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்// இதன் பயனை நான் இப்பொழுது அனுபவித்து கொண்டு இருக்கிறேன்...அடம் பிடிக்கும் சமயத்தில் அது விரும்பும் பொருளை நான் வாங்கி கொடுப்பதில்லை...ஒரு வாரம் கழித்து அதை வாங்கி கொடுப்பேன் (எல்லா தடவையும் அல்ல ) அது கேட்காமலே..அப்பொழுது அது அடையும் சந்தோசம் அளவிட முடியாதது

Shameed said...

தாஜுதீன்
இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் படிக்கும் அதிரை ஸ்கூல்களில் இதுப் போன்று நடைப்பெறுவது இல்லை என்பது நான் அறிந்தது.

மகிழ்ச்சியான செய்தி.

Anonymous said...

this s helpfull all parents

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு