வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி 7 | 5 |
உமர்தம்பிக்கு விளையாட்டுக்களில் ஆர்வமுண்டு; ஆனால் அவர் விளையாட்டு வீரர் அல்லர். விளையாட்டு நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தவர். அவ்வப்போது நடைமுறையில் உள்ள கிரிக்கட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆட்டங்களின் விதி முறைகளும் உமருக்குத் தெரியும். விளையாட்டுக்களைப் பார்த்து ரசிப்பதில் தனி மகிழ்ச்சி.
நான், உமர் சிறுவனாக இருக்கும்போது உலகக் குத்துச் சண்டைச் சாம்ப்பியனாக இருந்த முகம்மது அலியைப் பற்றி கதை போல நிறையச் சொல்வேன். பன்னிரண்டு வயதில் சைக்கிளைத் தொலைத்தது; ஒரு போலீஸ்காரரிடம் குத்துச்சண்டை பழகியது; அவர் சொல்லித் தராத வித்தைகளை எல்லாம் அவரிடமே காட்டியது; ஒலிம்பிக்கில் இரண்டு முறை வென்று தங்கப் பதக்கம் பெற்றது; குத்துச் சண்டையின் எல்லா ஜாம்பவான்களுக்கும் சவால் விட்டது என்று எல்லா செய்திகளையும் சொல்வேன். மிக ஆர்வமாகக் கேட்பார். பிறகு முகம்மது அலியின் சண்டையைப்பற்றி எந்தப் பத்திரிகையில் வந்தாலும் படிப்பார். இலங்கை வானொலியில் அலியின் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது நேரடி ஒலிபரப்பைப் பரபரப்பாகக் கேட்பார். இப்போது காற்று திசை மாறி அடிக்க ஆரம்பித்தது! முகம்மது அலி பற்றி உமர் எனக்குச் சொல்லத் துவங்கினார்! உமர் துபாய் வந்த பிறகு, அலி தனது குத்துச்சண்டை எதிரிகளான, ஜோபிரேஜியர், ஃபோர்மன், நார்டன் ஆகியோருடன் போட்ட பிரபலமான சண்டைகளின் வீடியோ கேசட்டுகளை வாங்கிப் போட்டுப் பார்த்தார்.
முகம்மது அலி ஓய்வு பெற்றார். அவர் பார்க்கின்சன் நோயால் துன்பப் பட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அமெரிக்காவில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தன. அதன் இறுதி நாளில் அவருக்கு புகழாரம் சூட்டி தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனுடைய பின்னணிக் காரணத்தை உமர்தான் எனக்கு விளக்கினார்.
அமெரிக்காவில் தங்க முட்டை இடும் வாத்துக்களான கறுப்பர்கள் எவ்வளவு தான் தங்கப் பதக்கங்களைக் கொண்டு வந்து குவித்தாலும் அமெரிக்காவின் நிறவெறி நீங்கவில்லையே என்ற விரக்தியில் முகம்மது அலி, தான் இரண்டாவது முறை வாங்கிய ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டார். அவர் இழந்துவிட்ட இந்தத் தங்கப் பதக்கத்தை மீண்டும் பெறவும், அமெரிக்கா இழந்த கண்ணியத்தை மீட்டவும் அமெரிக்க ஒலிம்பிக்கில் அமெரிக்க அதிபரால் அலிக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது! அதை முகம்மது அலி கண்ணீர் மல்கப் பெற்றுக் கொண்டார். இளவல் தந்த தகவல் இது!
முகம்மது அலிக்குப் பின் குத்துச்சண்டை மேடையை உலுக்கிக் கொண்டிருந்தவர் மைக் டைசன் ஆவார். டைசனின் வெற்றிக் குவியல்களைப் பார்த்த உமர், ‘இவர் அலியின் சாதனைகளை உடைத்துவிடுவார்’ என்று சொன்னார். டைசன் விதியை மீறியதால் விதி அவரோடு மோதி அவரை வெளியேற்றியது. ஆனால் இஸ்லாம் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. டைசனின் இந்த வெற்றியை உமர் அறிவார். டைசன் உம்ரா சென்று வந்ததை உமர் அறியார். இறைவனின் ஏற்பாடு அப்படி!
உமர்தம்பிக்கு மல்யுத்தப் போட்டிகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். மகன்களோடு அமர்ந்து பார்த்து ரசிப்பார். கால் பந்தாட்டங்களில் அதிக ஆர்வம் உண்டு. உலகக் கோப்பையைவிட, ஐரோப்பிய கால்பந்து ஆட்டங்களைத்தான் மிகவும் விரும்பிப் பார்ப்பார். கால்பந்து ஆட்டக்காரர்களில் பிரேசிலின் பீலேயைத்தான் உமருக்குப் பிடிக்கும். அடுத்துதான் மரடோனா. ஊர் வந்த பிறகும் கால்பந்து ஆட்டங்களைப் பார்க்கும் ரசனை குறையவில்லை. அஃபா, குல்முகம்மது கால்பந்து போட்டிகளுக்கு தொடர்ந்து போகும் வழக்கம் இருந்தது.
பள்ளிக்கூடங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் செலுத்தினார். பள்ளியை விட்டு வெளியே சென்ற பிறகும் கூட வெளியூர்களுக்குச் சென்று நம் பள்ளியின் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு களிப்பார். ஆர்வமூட்டுவார். கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் நம் பள்ளி புள்ளிகள் பல பெற்று முன்னிலையில் இருந்த நேரம் அது.
நம் பள்ளியில் முன்பு பணியாற்றிய காதர் ஷரீப் சார் மாணவர் எழுவர் (STUDENT SEVENS) என்ற கால்பந்துக் குழுவை நிர்வகித்துவந்தார். இந்தக் குழு மாவட்ட அளவிலான பள்ளிகளின் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடும். பெரிய போட்டிகளிலும் கலந்துகொண்டு கோப்பையைக் கைப்பற்றும். இந்தக் குழு ஆடும் போட்டிகளுக்கு உமர் தவறாமல் போய்வருவார். தாஜுதீன் சார் (மறக்க முடியுமா?) எங்கள் குடும்ப நண்பர். தடகள விளையாட்டுப் போட்டிகளுக்காக மாணவர்கள் வெளியூர் செல்லும்போது உமரையும் அழைத்து வருவார். அந்த வீரர்களில் ஜபருல்லா, தாஜுதீன், சிராஜுதீன், சேக்தம்பி, அல்அமீன், இன்னும் சில சிங்கங்கள், குறிப்பிடத் தகுந்தவர்கள்.
ஒரு முறை மாணவர் ஜபாருல்லாஹ் 400 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் மாநில அளவில் கலந்து கொள்ள உடற் பயிற்சி ஆசிரியருடன் சென்னை சென்றிருந்தார். ஜபருல்லாவை ஊக்கப்படுத்துவதற்காக சென்னைக்கு நாங்கள் சென்றபோது உமர்தம்பியும் எங்களுடன் வந்தார்! ஜபருல்லாஹ் இந்த இரண்டு போட்டிகளிலும் நிச்சயமாக வெல்லக்கூடியவர். ஆனால் அவர் எங்கள் கையை விட்டுப்போய், போட்டி ஆரம்பிக்க சற்று நேரத்திற்கு முன் மைதானத்துக்கு வந்தார்! “நானூறைக் கோட்டை விட்டேன்; நான் நூறின் கோட்டையாவது முதலில் தொடுவேனா?” என்ற ஐயப்பாட்டில் இருந்தார். போட்டி துவங்கியது. இரண்டு வீரர்களை மிகவும் திறமையாக விரட்டி வந்தார்! ஜபருல்லா ஒரு மாற்றத்தைத்தருவார் என்று எதிர் பார்த்து சென்னை சென்றோம் . ஆனால் அவர் எங்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தார்!
உமர் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனைகள் கேட்பார். கிரிக்கட் வீரர்களில் கபில்தேவை மிகவும் பிடிக்கும். சென்னையில் நடந்த இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் டெஸ்ட் ஆட்டத்திற்கு, கபில்தேவ் ஆடுகிறார் என்பதற்காக சென்னை போய் ஆட்டத்தைப் பார்த்து வந்தார். மேற்கு இந்தியத்தீவு அணியில் லாராவையும் சந்திரபாலையும் உமருக்குப் பிடிக்கும். துபாய் வந்த பிறகு இரண்டு மூன்று முறை ஷார்ஜா சென்று கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்த்தார்.
உமர் ஒரு மாணவரையோ, தொழில் நுட்பம் அறிந்தவரையோ, விளையாட்டு வீரரையோ முதன் முதலாகப் பார்த்தால் அவரது எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லிவிடுவார்! இது ஜோசியம் அல்ல; உமரின் நுண்ணறிவு! ஒருமுறை ஷார்ஜாவில் இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கட் விளையாட்டுப் போட்டி நடந்தது. அந்த ஆட்டத்தில்தான் பாக்கிஸ்தானின் அதிவேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் அறிமுகமாகிறார். இதற்குமுன் அவரை யாரும் பார்த்தில்லை. வக்கார் ஷார்ஜாவில் படித்தவர். வக்காரின் பந்துவீச்சைப் பார்த்த உமர் கொஞ்ச நேரத்திலேயே சொல்லிவிட்டார் ‘இவர் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக வருவார்’ என்று! உமரின் வாக்கு வக்கார் விசயத்தில் சரியாகப் பலித்தது. ஒரு கட்டத்தில் யூனுஸ் உலகின் முதல் தர அதிவேகப் பந்து வீச்சாளராகப் புகழ் பெற்றார்! பச்சை வானத்தின் உச்சியைத் தொட்டார்!
தொடரும்...
- உமர்தம்பி அண்ணன்
5 Responses So Far:
- Shameed said...
-
அறிஞர் உமர் பற்றிய செய்தி ஆச்சர்யப்படவைக்கின்றன !
- Reply Sunday, August 14, 2011 5:36:00 PM
- m.nainathambi.அபூஇப்ராஹீம் said...
-
அருமையான ஸ்போர்ட்ஸ் வர்னனையை வாசித்த உணர்வு...
- Reply Sunday, August 14, 2011 9:39:00 PM
- sabeer.abushahruk said...
-
வாவண்ணா சாரின் வர்ணனை அருமை. கதாநாயகனின் விளையாட்டின்மீதான ஆர்வமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
- Reply Sunday, August 14, 2011 11:57:00 PM
- M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...
-
அறிஞரின் விளையாட்டுச் செய்திகளும் அன்னாரின் அண்ணண் அவர்களின் நினைவாற்றலும் வியக்கச் செய்கின்றன.அல்ஹம்துலில்லாஹ்.
- Reply Monday, August 15, 2011 2:13:00 AM
- தாஜுதீன் (THAJUDEEN ) said...
-
தமிழ் இணைய அறிஞர் அவர்கள் விளையாட்டு வீரர்களின் technical aspectயை analyse பண்ணுவதில் வல்லவர் என்பதை நானும் சில சந்தர்ப்பங்களில் கண்டுள்ளேன்.
//தாஜுதீன் சார் (மறக்க முடியுமா?) எங்கள் குடும்ப நண்பர். //
நிச்சயம் மறக்க முடியாது. இன்னும் தாஜுதீன் சார் அவர்களின் கலகலப்பான பேச்சு நினைவில் உள்ளது. நம்மைவிட்டு பிரிந்துள்ள இவ்விருவரின் ஆகிரத்து நல்வாழ்வுக்காக அல்லாஹ்விடம் இந்த சந்தர்பத்தில் நாம் எல்லோரும் து ஆ செய்வோமாக. - Reply Monday, August 15, 2011 3:51:00 AM
உமர் தமிழ் தட்டசுப் பலகை
|
|
உமர் தமிழ் தட்டசுப் பலகை
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு